Showing posts with label ஜாதி. Show all posts
Showing posts with label ஜாதி. Show all posts

Saturday, January 12, 2013

ஜாதிகளால் நன்மை ?


    மனித உடம்பு என்று வந்துவிட்டாலே அதில் நோய் இல்லாமல் வாழ முடியாது. மனிதனுக்கு வருகின்ற நோய்களை இரண்டுவகையாக பிரிக்கலாம். ஒன்று நல்லது செய்யும் நோய் மற்றொன்று கெடுதி செய்யும் நோய் நோய்கள் எதுவாக இருந்தாலும் அதன் பயன் வலியும் வேதனையும் தானே அதில் போய் நன்மையான வியாதி என்று ஒன்றை தனியாக பிரித்து பேசுகிறானே என்று நீங்கள் நினைக்கலாம். சளி, ஜுரம் என்று சாதாரணமாக வருகின்ற நோய்கள் நமது உடம்பிற்குள் புகுந்துவிட்ட விஷ கிருமிகளை வெளியேற்றுவதற்காக உடம்பே நடத்துகிற யுத்தம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் தான் நன்மையான நோய்களும் இருக்கிறது என்று சொன்னேன். 

இந்த உலகம் முழுவதுமே நன்மை தீமை என்ற இரண்டு நிறைந்திருக்கிறது. இவை இல்லாமல் எதுவும் இல்லை வெளிச்சம் நன்மை என்றால் இருட்டு தீமை இனிப்பு நல்லதென்றால் கசப்பு தீமை. வெற்றி நல்லதென்றால் தோல்வி தீமை. வாழ்க்கை நல்லதென்றால் மரணம் தீமை ஆக அனைத்துமே நல்லதும் கெட்டதும் நிறைந்ததாகவே இருக்கிறது. ஆனால் நாம் ஏனோ சிலவற்றை நன்மையாகவே பார்க்கிறோம் வேறு சிலவற்றை தீமையாகவே பார்க்கிறோம். நாம் தீமை என்று கருதுகின்ற வற்றில் துளி கூட நன்மை இருக்காது என்று பிடிவாதம் செய்கிறோம். இப்படி நம்மால் முழுக்க முழுக்க கெட்டது என்று ஒதுக்கப்பட்ட ஒரு விஷயம் ஜாதி. 

இந்திய சமூகத்தில் ஜாதி என்பது ஒரு சாபக்கேடாக இருக்கிறது ரத்தமும் சதையும் கொண்டு நடமாடுகின்ற சக மனிதர்களில் இவன் உயர் பிறப்பாளன் இவன் தாழ்ந்த குலத்தவன் என்று பிரித்து பார்க்கும் ஜாதி என்ற தத்துவமே மனித தன்மையற்றது எனவே அது ஒதுக்க பட வேண்டும் ஒழிக்கப்பட வேண்டும் அடிசுவடு இல்லாமல் கூட அழிக்கப்பட வேண்டும் என்று பல சீர்திருத்த வாதிகள் பலகாலமாக அதாவது சரித்திர பூர்வமாக சொல்வது என்றால் ஸ்ரீ ராமானுஜர் காலமுதற்கொண்டே பாடுபட்டு வருகிறார்கள். ஆனாலும் கூட ஜாதி விஷயத்தில் யாரும் முழுமையான வெற்றியை அடைந்து விட்டதாக சொல்ல முடியாது. 

ஜாதியை ஒழிக்க வேண்டும் என்ற முயற்சி ஒருபுறத்திலே நடந்துகொண்டிருந்தாலும் ஜாதியை வளர்ப்பதற்கான வாழவைப்பதற்கான முயற்சி இன்னொருபுரத்திலே தங்குதடை இல்லாமல் நடந்து கொண்டிருக்கிறது. இதில் வேதனையான அதிசயம் என்னவென்றால் ஜாதி வேண்டாமென்று கொடி பிடிக்கும் சில மனிதர்களே திரைக்கு மறைவில் ஜாதியை வளர்த்து விடுவதற்கு பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள். அதற்கு காரணம் அவர்களுக்கான முழுமையான சுயநலமே ஆகும். 

சரி ஜாதி வேண்டும் வேண்டாம் என்ற விவாதம் ஒருபுறம் இருக்கட்டும் எல்லா விஷயத்தையும் தீர்க்கமாக யோசித்து செயல்பட்ட நமது முன்னோர்கள் பாழாய்போன இந்த ஜாதியை எதற்கு கண்டுபிடித்தார்கள் இதனால் என்ன லாபம் இருக்கிறது என்று இளைஞர்களுக்கு தோன்றும். அதற்க்கான பதிலை சிறிய அளவில் கூட கொடுக்கவில்லை என்றால் முழுமையான விஷயத்தை யோசிக்க முடியாது. இந்தியாவில் மட்டும் தான் ஜாதிகள் இருப்பதாக பலரும் நினைக்கிறார்கள். இது முற்றிலுமான தவறு ஜாதிகள் இல்லாத மனித சமூகமே இல்லை என்பதே சரியான உண்மையாகும். வேண்டுமானால் அவர்கள் ஜாதி என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் இருக்கலாமே தவிர மற்றப்படி அனைவரிடத்திலும் ஜாதிகள் இருக்கிறது. 

உலகத்துனுடைய மக்கள் கூட்டத்தை அறிஞர்கள் கற்றறிந்த புத்திசாலிகள் என்றும் ஆளும் வர்க்கம் என்றும் தொழிலார்கள் என்றும் வியாபாரிகள் என்றும் பிரிக்கிறார்கள். சில அறிஞர்கள் தொழிலாளிகளையும் வியாபாரிகளையும் தனித்தனியாக பிரிக்காமல் இரண்டு பிரிவினரையும் ஆளப்படுபவர்கள் என்று ஒருவகைக்குள் அடக்கிவிடுகிறார்கள். அதாவது மனிதனுடைய அறிவின் அடிப்படையில் பொருளாதார அடிப்படையில் ஆட்சி அதிகார அடிப்படையில் தனித்தனி குழுக்களாகவே கருதபடுகிறான் . இந்த குழுக்களுக்கு இந்திய சமூகம் கொடுத்த பொதுவான பெயர் தான் ஜாதி. 

நீங்கள் மேலே சொன்ன குழுக்களின் அடிப்படையில் இந்திய சமூகம் கட்டமைக்க பட்டிருக்கிறது என்றால் பிறப்பின் அடிப்படையில் ஜாதிகளை ஏன் வகைபடுத்துகிறார்கள் என்று நியாயமாக தோன்றும் இதே போல பிறப்பின் அடிப்படையில் ஜாதிகளை எந்த நாட்டிலும் யாரும் வகைபடுத்த வில்லையே ஜாதியை பிறப்பை ஒட்டி அமைத்ததால் அன்றோ ஏற்ற தாழ்வுகள் வருகிறது எனவே மற்ற நாடுகளில் கூறப்படுகிற குழுவும் நம் நாட்டில் இருக்கும் ஜாதியும் நிச்சயம் வேறு வேறானது என்று கூட சிலருக்கு தோன்றும். பகுத்தறிவு பார்வையோ பக்தி பார்வையோ இல்லாமல் சமமான பார்வை கொண்டவர்கள் வேத இலக்கியங்களை படித்து விளக்கம் சொல்ல வந்தால் மனிதனது மனபக்குவத்தின் அடிப்படையிலேயே ஜாதி பிரிவுகள் இருக்கின்றன என்று தெளிவாக சொல்வார்கள். நாமும் புரிந்துகொள்ளலாம். ஆனால் துரதிஷ்டவசமாக நமது நாட்டில் அப்படி ஒரு வாய்ப்பு நம்மை போன்ற சாதாரண மனிதர்களுக்கு இல்லவே இல்லை. 

வேதங்கள் கூட ஜாதிகளை பிறப்பின் அடிப்படையில் கூறாத போது பிறகு எப்படி அந்த வழக்கம் நமக்கு வந்தது என்று தோன்றும். அதற்கு மிக முக்கிய காரணம் இந்தியாவின் மீது அந்நியர்கள் பலர் பல நூற்றாண்டுகளாக படையெடுத்து வந்ததே ஆகும் . இதை பலரும் ஒத்துகொள்ள தயங்குகிறார்கள்.இந்த உண்மையை ஒற்றுகொண்டால் எங்கே தங்களை அடிப்படை வாதிகள் பிற்போக்கு வாதிகள் என்று மற்றவர்கள் அதாவது எண்ணிக்கையில் மிக குறுகியதாக இருக்கும் பகுத்தறிவு கூட்டம் ஏளனம் செய்துவிடுமோ என்ற பயம் அவர்களுக்கு. 

நமது வீட்டில் வரவேற்பறையில் வைக்க வேண்டிய பொருளை அங்கேயும் சமயலறையில் வைக்க வேண்டியதை அங்கேயும் கழிவறையில் வைக்க வேண்டியதை அங்கேயும் வைப்போம். ஒன்றை மாற்றி ஒன்றை வைக்க மாட்டோம். ஆனால் திடிரென்று ஊருக்குள் வெள்ளமோ நெருப்போ வந்துவிட்டால் என்ன செய்வோம்? அவைகள் எல்லாவற்றையும் ஒன்றாக திரட்டி காப்பாற்றுவதற்கு முயற்சி செய்வோம். அபாயம் வந்துவிட்டால் காப்பாற்றுவதும் காப்பாற்ற படுவதும் தான் மிக முக்கியமானதே தவிர மற்றவைகள் அல்ல நிம்மதியாக சுயேச்சையாக தன் காரியத்தை தானே பார்த்துகொண்டிருந்த போது இந்திய சமூகத்தில் ஜாதிகள் இல்லை அதாவது வேதம் படித்து பிராமணனாக வாழுகின்ற ஒருவனுக்கு வியாபாரம் செய்கின்ற ஒருவன் மகனாக பிறந்துவிட்டால் அவன் அப்போது பிராமணனாக கருதப்படவில்லை வைசீகனாகவே கருதபட்டான். ஆனால் அந்நியர்கள் காலடி எடுத்து வைத்தவுடன் நமது கலைகளையும் பண்பாட்டையும் தொழில்நுட்பத்தையும் அழிந்து போகாமல் பாதுகாக்க வேறு வழியே இல்லாமல் பிறப்பின் அடிப்படையில் ஜாதிகளை கொண்டு வந்தார்கள் நமது முன்னோர்கள். இது தான் உண்மையே தவிர மற்றவை அனைத்துமே திரித்து கூறபடுகிற ஏகாதிபத்திய கருத்துக்களே ஆகும். 

நாடு சுதந்திரம் அடையும் வரையில் அதாவது ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகள் நமது நாடு அந்நியர்களாலே ஆளப்பட்டது. அடிமையாக ஆயிரம் வருடம் இருந்து பழக்கப்பட்டு விட்ட இந்தியனுக்கு பிறப்பின் அடிப்படையில் ஜாதி என்ற சலுகையை சுகத்தை விட்டு விட மனது வரவில்லை. ஒருவேளை வருங்காலத்தில் இந்த சலுகைகள் தங்களைவிட்டு போய்விடுமோ? என்ற அச்சத்தில் சாஸ்திரங்களை தங்களுக்கு சாதகமாக திருத்தி அமைத்து கொண்டனர். சில சுயநல அறிஞர்கள் அவர்களின் சுயநல ஆசையினாலையே சமதர்மமாக இருந்த இந்திய சமூகம் ஏற்றத்தாழ்வு மிகுந்ததாக ஆகிபோனது. அந்த ஏற்றத்தாழ்வு இன்று அழுகிய புண்ணை போல புரையோடிவிட்டது. இதனால் என் ஜாதி உயர்ந்தது உன் ஜாதி தாழ்ந்தது என்ற போட்டா போட்டிகள் மலிந்து விட்டன. 

ஜாதிகளை வேண்டாமென்று சொல்பவர்களாக இருக்கட்டும் அது தேவை என்று வாதிடுபவர்களாக இருக்கட்டும் இவர்கள் அனைவருக்குமே ஜாதிகளின் மேல் ஈர்ப்பு இல்லை என்று சொல்லிவிட முடியாது. வெளிப்படையாக இல்லை என்றாலும் உள்ளுக்குள் மனதிற்குள் தங்களது ஜாதியை பற்றிய கர்வமோ தாழ்வு மனப்பான்மையோ கண்டிப்பாக இருக்கிறது. இதை அவர்கள் கண்ணாடியின் முன்னால் நின்று கேட்டு பார்த்தார்கள் என்றால் நிச்சியம் அவர்களின் அறிவு ஆமாம் என்ற பதிலை சொல்லும் இதனால் தான் பல சீர்திருத்த வாதிகள் கடினமாக பாடுபட்டும் ஜாதிகளை ஒழிக்க முடியாமல் இன்றுவரை அது வாழ்ந்து வருகிறது. 

ஜாதிகளை ஒழித்தே ஆகவேண்டும் என்று நாம் சொல்வது ஒருபுறம் இருக்கட்டும் இந்த ஜாதிகளால் சிறிதளவு கூட நன்மையே இல்லையா? என்பதை நாம் சிந்தித்தே ஆகவேண்டும் ஒரு குறிப்பிட்ட ஜாதியாரை கீழானவர்கள் என்று ஒதுக்கி வைக்கும் கொடுமையான மனோன்நிலை இருப்பது அருவறுப்பானது என்றாலும் கூட ஜாதிகளால் சில நன்மைகள் இருப்பதையும் நாம் காண முடிகிறது. ஜாதிகளால் நன்மையா? இது என்ன புது கருத்து இந்த ஆள் ஜாதிகள் வேண்டுமென்று சொல்வதற்காக இப்படி பேசுகிறானா? என்று நீங்கள் நினைக்க வேண்டாம். பக்க சார்பற்ற முறை என்று வருகிற போது நல்லது கெட்டது இரண்டையுமே சீர்தூக்கி பார்க்க வேண்டும். அதை தான் நானும் செய்கிறேன். ஜாதிகளால் என்ன நன்மை என்று 

குடும்பத்தை கலைத்த வெள்ளைக்காரன் !


      ஒருவன் கீழே விழுந்துவிட்டால் அவனை தூக்கிவிட வேண்டியது மற்றவனின் கடமை அவன் தானே விழுந்தான் முடிந்தால் எழும்பட்டும் அல்லது விதிவிட்டபடி நடக்கட்டும் என்று போவது ஒரு தனிமனிதனுக்கே நல்லதல்ல எனும் போது சமூதாயத்திற்கு எப்படி நல்லதாக இருக்கும்? அதற்காக விழுகின்ற ஒவ்வொருவனையும் தூக்கி விட்டுக்கொண்டே இருந்தால் தூக்குபவனின் கதி என்னாவாவது? அதனால் உதவி செய்பவனும் உதவி தேவைபடுபவனும் தனித்தனி குழுக்களாக இருந்தால் பரஸ்பரம் ஒத்தாசை செய்துகொள்வது சுலபமாக இருக்கும். இத்தகைய சமூதாய ஒத்தாசையை ஓரளவாவது மனிதன் பெறுவதற்கு ஜாதி என்பது சிறிய அளவில் துணை செய்கிறது என்பதே எனது அபிப்ராயம். 

ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களை சார்ந்த மார்வாரி சமூகமக்களிடம் ஒரு பழக்கம் இருக்கிறது. அவர்களில் ஒருவன் தொழிலில் நஷ்டம் அடைந்து விட்டான் என்றால் அவனுக்கு பழையபடி தொழில் செய்து முன்னேறுவதற்கு அவர்களது சமூதாய சங்கம் மூன்றுமுறை முதல் கொடுத்து உதவி செய்கிறது. அந்த மூன்று உதவிகளிலும் அவன் முன்னேறவில்லை என்றால் அதன்பிறகே சமூகத்தால் கைவிடபடுகிறான். இந்த பழக்கம் அவர்களிடம் மட்டுமல்ல தமிழகத்தில் இருக்கும் தலைசிறந்த வணிகர் சமூகமான நகராத்தார் என்ற நாட்டுகோட்டை செட்டி மார்களிடமும் இருக்கிறது. இன்று தமிழகத்தில் உள்ள பல கோவில்களுக்கு இவர்கள் சமூகம் செய்திருக்கும் அறப்பணிகளை எந்த வரலாற்று சூழ்ச்சியும் மறைத்துவிட முடியாது. தமிழ்நாட்டு பண்பாடும் கலாச்சாரமும் கட்டிடக்கலையும் ஆசியா முழுவதும் அறியபட்டதாக இருக்கிறது என்றால் அது நகரத்தாரால் மட்டுமே. அதே போல மற்ற நாட்டு நல்ல பண்பாடுகள் இங்கு வந்து இருப்பதற்கும் அவர்களே மூலகாரணம் என்று சொல்லலாம். 

ஒரு தொழிலை வெளியில் சென்று கற்பதற்கும் பாட்டன் மற்றும் அப்பனிடம் கற்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு பல நுணுக்கங்களை வெளிமனிதர்கள் அவ்வளவு சீக்கிரம் கற்று தந்து விட மாட்டார்கள். தலைமுறை தலைமுறையாக சில கலைகளும் தொழில்களும் நிலைத்து வருகிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் வாரிசு வழி கற்பித்தாலே ஆகும். இப்படி கற்பிக்கப்படும் முறையை குலகல்வி முறை என்று பலர் கண்டித்தாலும் கூட இதிலுள்ள நன்மையை அவ்வளவு சீக்கிரம் மறுத்துவிட முடியாது. அது உன் அப்பன் தொழில் அதைநீ செய்தே தான் ஆகவேண்டும் என்று ஒருவனை கட்டாயபடுத்துவது தர்மத்திற்கு விரோதமான செயலாக இருக்கலாம். அதற்காக அப்பன் மூலகமாக கற்ற அனைத்துமே தவறு என்று சொல்லிவிட முடியாது. பாரம்பரியமான தொழில்கள் எப்போதுமே சுயசார்புடையதாக இருக்கும். சுயசார்பு மட்டுமே ஒரு சமூகத்தின் நிரந்தரமான பொருளாதார பலம் என்று சொல்லலாம். 

மனிதர்களுக்கு அமைதியான வாழ்க்கை பிடித்தமானது என்றாலும் அவன் எப்போது கோபப்படுவான் சண்டைபோடுவான் என்று சொல்லிவிட முடியாது. சில மனிதர்கள் ஒரு நாளில் பத்து முறை கூட கோபவச படுகிறார்கள். இதற்காக அவர்களை குடும்பத்தை விட்டோ சமூகத்தை விட்டோ ஒதுக்கி வைத்து விட முடியாது. நம் சொந்தகாரர் தானே தெரிந்தவர் தானே அவரது இயல்பு இப்படி இருக்கிறது இதற்காக அவரை தண்டனை கொடுத்து தள்ளிவைத்து விட முடியுமா என்று சகிப்பு தன்மையோடு பலரும் போய் விடுகிறார்கள். இதே போன்ற சகிப்பு தன்மை ஜாதி விஷயங்களிலும் பல நேரங்களில் பல மோதல்களை தடுக்கிறது. நம் ஜாதி பையன் தானே எதோ தெரியாமல் தப்பு செய்துவிட்டான் புத்திமதி சொல்லி கண்டித்து விட்டு விடுங்கள் அடுத்தமுறை செய்தால் பார்த்து கொள்ளலாம் என்ற ரீதியில் பல மோதல்கள் ஆரம்பத்திலேயே முனைமழுங்க செய்ய பட்டுவிடுகிறது. இப்படி பட்ட விவகாரங்கள் காவல் நிலையத்தின் மூலமோ நீதிமன்றங்களின் மூலமோ தீர்க்கப்பட வேண்டுமென்றால் தினசரி ஆயிரமாயிரம் வழக்குகளை பதிவு செய்ய வேண்டிய நிலை வரும். அப்படி வராமல் தடுப்பதற்கு ஜாதியும் உதவி செய்கிறது என்பது எதார்த்தமான உண்மை. 

நமது தமிழகத்தை மட்டும் எடுத்து கொண்டாலும் அனைவருக்கும் பொதுவான ஒரு பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் இருக்கிறது என்று சொல்ல முடியாது. தமிழர் பண்பாடு என்பதே பன்முகம் கொண்டது என்பது தான் அனைவரும் அறிந்தது. இந்த பன்முக தன்மை இன்றும் இருப்பதற்கு முக்கிய காரணம் ஜாதி எனலாம் திருமண சடங்கை எடுத்து கொண்டாலே பலவிதமான வழக்கங்கள் இருக்கின்றன. நாடார்களின் திருமணம் ஒருமுறையில் நடக்கும் நாயுடுகளின் திருமணம் வேறொரு முறையில் நடக்கும். தேவர், உடையார், கவுண்டர் இவர்களின் திருமணமும் பல்வேறு முறைகளில் நடக்கும் இவைகள் அனைத்துமே அர்த்தமற்ற சடங்குகள் அல்ல. அவைகளுக்குள் ஏராளமான உணர்வுகளும் உண்மைகளும் மறைந்து கிடக்கிறது. இவைகள் அனைத்துமே மறைந்து போகாமல் பாதுகாக்க பட்டால் தான் தமிழர் பண்பாடு என்பது நிறைவான ஒன்றாக எப்போதுமிருக்கும். அதை விட்டு விட்டு அனைவருக்கும் பொதுவான ஒரு பழக்கம் என்று வந்தால் பலவற்றை இழக்க வேண்டிய சூழ்நிலை வரும். 

ஆக ஜாதிகளால் பொருளாதார ஒத்துழைப்புகளும் சமூக அமைதிக்கான சூழலும் பண்பாட்டு தொடர்ச்சிக்கான ஏது நிலைகளும் ஓரளவு இருக்கிறது என்பதை நினைத்து பார்க்க வேண்டும். அதற்காக ஜாதிகளால் ஒட்டுமொத்தமான நன்மைகள் மட்டுமே இருக்கிறது என்று யாரவது சொன்னால் அதை நாம் ஒத்துகொள்ள முடியாது. சக மனிதர்களை தொடாதே தள்ளி போ என்பதும். இவன் கீழ்ஜாதிகாரன் தனியாக வாழ வேண்டும் மற்றவர்கள் வாழம் இடத்திற்குள் வரக்கூடாது வழிபடும் இடத்திற்குள் நுழைய கூடாது. அடிமை தொழில் மட்டுமே செய்து வாழ வேண்டும் என்று கட்டாய படுத்துவது மனித தன்மையற்ற செயல் என்பதை மறுக்க இயலாது. 

மனிதனாக பிறந்த எவனுமே மேலானவனும் அல்ல கீழானவனும் அல்ல சமமானவனே ஆவான். வானமும் தண்ணீரும் காற்றும் மண்ணும் எல்லோருக்கும் பொதுவானது என்பது போல கல்வியும் மருத்துவமும் கருத்து சுகந்திரமும் வழிபாட்டு உரிமையும் அனைவுர்க்கும் பொதுவானதே ஆகும். இதை ஜாதியின் பெயரை சொல்லியோ மதத்தின் பெயரை சொல்லியோ தடுப்பது முறையற்ற செயல். 

எந்த வகையில் பார்த்தாலும் ஜாதி என்பது இன்றைய சூழலில் இந்திய சமூகத்தின் எதிர்மறையான தன்மையாகவே இருந்து வருகிறது. தற்போது இருக்கும் ஜாதியின் ஆர்வம் என்பது ஆதிக்க வெறியிலிருந்து மாறுபட்டதாக பண்பாட்டு வயப்பட்டதாக இருக்கிறது என்று சொல்ல முடியாது. ஒருவனை ஒருவன் ஆட்சி படுத்துவதற்கு ஜாதி என்பதை தக்க கருவியாக பயன்படுத்தி கொள்வதாகவே இருக்கிறது. இதற்கு தூண்டுகோலாக மேல் ஜாதிக்காரர்களின் ஆளுமை தன்மையும் கீழ் ஜாதிக்காரர்களின் உரிமைக்கான குரலும் தேசத்தை நல்ல பாதையில் அழைத்து செல்லவில்லை என்பதே தெரிகிறது. ஜாதியை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுவது மட்டுமே இன்று பிரதானமாக இருக்கிறது. எனக்கு ஒட்டு போடு உன் ஜாதிக்கு இட ஒதுக்கிடு தருகிறேன் என்ற லஞ்சம் கொடுக்கும் தொனியிலேயே சாதிக்கான சலுகைகள் காட்டபடுகிறதே தவிர உண்மையாக கீழ்மைபட்டு கிடக்கும் மனிதர்களை மேன்மையடைய செய்ய யாரும் தயாராக இல்லை. 

எனவே நாம் நமது மூதாதையர் எப்படி ஜாதி என்பதை குணம், அறிவு, திறமை, தொழில் என்று மட்டும் பார்த்து வாழ்ந்தார்களோ அந்த நிலைமைக்கு செல்ல வேண்டும். இவன் படித்தவன் அதனால் உயர்ந்தவன் அவன் தொழிலாளி அதனால் தாழ்ந்தவன் என்ற ஏற்ற தாழ்வு நம்மிடமிருந்து மறைய வேண்டும். 

ரிக் வேதத்தில் வருகின்ற புருஷ சூத்திரத்தில் தான் முதல்முறையாக நான்கு வருணத்தை பற்றிய விவரம் வருகிறது. அதில் உலகத்தை படைத்த இறைவனின் உடம்பிலிருந்தே நான்கு வருணமும் உதயமானதாக சொல்லபடுகிறது. இன்று அந்த சூத்தகம் மிக தவறான முறையில் அர்த்தம் கொள்ளபட்டு பாதத்திலிருந்து சூத்திரன் தோன்றினான் அதனால் அவன் தாழ்ந்தவன் சிரசிலிருந்து பிராமணன் தோன்றினான் அதனால் அவன் உயர்ந்தவன் என்பது போன்ற கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகிறது. தலை, கால், இடுப்பு என்று உறுப்புகள் வேறுபடுத்தி காட்டபட்டாலும் உறுப்புகள் என்ற நிலையில் வரும் போது அவைகள் அனைத்துமே சமமானதே தவிர பாகுபாடுடையது அல்ல. ஒன்று இல்லாமல் ஒன்றால் இயங்க முடியாது. அதனால தான் எந்த குணம் கொண்டவராக இருந்தாலும் எத்தனை திறமை பெற்றவராக இருந்தாலும் அவர்கள் அனைவருமே இறைவன் என்ற விராட் புருஷனின் அங்கம் என்பதை ரிக் வேத புருஷ சூத்தகம் தெளிவாக காட்டுகிறது. அதை சரியாக புரியாமல் அனர்தன வியாக்கியானத்தை துவக்கி வைத்தவர்கள் நம்மை ஆண்ட வெள்ளைகாரர்களே ஆவார்கள். காரணம் இந்தியர்களை எதாவது ஒருவகையில் மோத விட்டால் மட்டுமே அவர்களை அடிமைபடுத்தி ஆழ முடியுமென்று நானூறு வருடங்களுக்கு முன்பிருந்தே திட்டமிட்டு சில கருத்துக்களையும் போலியான ஆதாரங்களையும் உருவாக்கி நம்மை நம்ப செய்தார்கள். அந்த குறிப்புகளை படித்து விட்டு இந்து மதத்தில் உள்ள வருணமுறைகளுக்கு விளக்கம் காண முற்படும் போது தான் பல குழப்பங்கள் வருகிறது. 

என்னை கேட்டால் ஜாதி என்ற அமைப்பில் கீழ் மேல் என்று வேற்றுமை பாராட்டுவது முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் அதே நேரம் ஜாதிகளுக்குள் தனித்தனியாக இருக்கும் பண்பாட்டு கூறுகள் தொழில் நுணுக்க மேன்மைகள் பாதுகாக்க பட வேண்டும் என்றும் சொல்வேன். காரணம் இன்று நம்மையும் நமது பண்பாட்டையும் சிதைப்பதற்கு முன் எப்போதும் இல்லாத எத்தனிப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. அவைகளிலிருந்து நமது தலைமுறைகளை கட்டி காப்பாற்ற வேண்டுமென்றால் பிடிவாதம் பிடிக்காமல் வறட்டு வேதாந்தம் பேசாமல் சில உண்மைகளை ஒப்புகொள்ள வேண்டும். என்ன பெரிய பண்பாடு மனிதனை மனிதன் அடிமையாக்குவது பண்பாடா? என்று சிலர் கேட்கலாம். அவர்களுக்கு நான் பதில் சொல்வதை விட வரலாற்று நிகழ்வுகளை தொட்டு காட்டினால் நன்றாக இருக்குமென்று நினைக்கிறேன். 

ஒரு காலத்தில் அமெரிக்காவில் அடிமை முறையானது கறுப்பின மக்களை எத்தகைய கொடுமைகளை அனுபவிக்க செய்தது என்பதை நாம் அறிவோம். ஆனால் அந்த அடிமை முறையை நியாய படுத்த பைபிளில் சொல்லபடுகின்ற நோவா என்பவரின் இளைய மகன் ஹாம் என்பவன் தந்தையை பார்த்து பரிகாசம் செய்ததினால் நீயும் உன் வாரிசுகளும் அடிமையாக போவீர்கள் என்று இறைவனால் சபிக்க பட்டான் அந்த ஹாம் என்பவனின் மக்கள் தான் நீக்ரோக்கள் எனவே அவர்கள் அடிமைய்கவே இருக்க படைக்க பட்டவர்கள் என்ற ஒரு கதையை உருவாக்கி மற்றவர்களையும் நம்ப செய்து நீக்ரோக்களையும் நம்ப வைத்து ஒரு ஆதிக்க நாடகத்தை வெள்ளையர்கள் நடத்தினார்கள். 

அதே போன்ற ஒரு கதை தான் இந்தியாவில் ஜாதிகளுக்காக வேதங்களை பலிகடா ஆக்கியது. வெள்ளையர்கள் கட்டிவிட்ட கதையை நம்பியும் கொடுத்த பணத்தை நம்பியும் நம் பண்பாட்டின் மூல வேறான கூட்டு குடும்பத்தை சிதைத்து விட்டோம். இன்று பகுத்தறிவு மனித உரிமை என்றெல்லாம் பேசி நம் பண்பாட்டை கெடுக்கவும் துவங்கி விட்டோம். இதே நிலைமை நீடித்தால் நாளைய நமது சமூகம் முகவரியை மட்டுமல்ல வாழும் உரிமையையும் இழந்துவிடும். ஜாக்கிரதை