Wednesday, January 2, 2013

மாதவம் செய்திட்ட மாநகரம்



சிருங்கேரி ஜகத்குரு சென்னை விஜயம்

சிருங்கேரி, ஒரு புண்ணிய பூமி. ஆதிசங்கரரே இந்தத் தலத்தின் கருணையை எண்ணி வியந்து பிரமித்து நின்ற இடம். கர்ப்பிணித் தவளையை கோடைத் துயரிலிருந்து காக்கப் படமெடுத்து குடை விரித்த நாகத்தை அவர் இங்குதான் முதன்முதலாகப் பார்த்தார். பகையை அழித்து, பசுமை செழிக்க வளர்ந்திருக்கும் பூமி இது. வேதனையால் வாடுவோருக்கு விடுதலை வாங்கித் தரும் இரக்கமும் பரிவும் பரவிப் படர்ந்த தலம். தான் கண்ட இந்தக் காட்சி, கலியுகத்தின் தத்துவத்தையே கேலி செய்வது போல இருந்தது கண்டு மனம் விம்மினார், ஆதிசங்கரர். கலியில் விவாதம், விரோதம், பகை, துரோகம், அலட்சியம், கொடுமை, தீமை விளைவித்தல் என்று எதிர்மறை எண்ணங்கொண்டோரே நிறைந்திருப்பர் என்ற விதிக்கு, தன் இரையான தவளைக்கு இறையாக நின்று உதவி புரிந்த நாகம், அந்த விதிக்கு மாற்று நெறி படைத்தது.

அன்பு, நட்பு, பாசம் எல்லாம் மக்கள் மனங்களில் மலர்ந்து மணம் வீசவேண்டும் என்பதற்காகவே இந்தத்தலத்தில் தன் மடத்தை நிறுவ உறுதி பூண்டார், ஆதிசங்கரர். ஸ்ரீசுரேஸ்வராசார்யாவை இங்கே முதல் பீடாதிபதியாக்கினார். அந்த கி.பி.820ம் ஆண்டு முதல் குரு பரம்பரை, இந்த சிருங்கேரி திருத்தலத்தைத் தொய்வின்றி பரிபாலித்து வருகிறது. இந்தத் திருத்தலத்தில், ஜெகத் குருவாய், சங்கராச்சாரியாராய், 36வது பீடாதிபதியாக ஸ்ரீஸ்ரீபாரதீ தீர்த்த மஹா ஸ்வாமிகள் இப்போது அருளாட்சி நடத்திக்கொண்டிருக்கிறார்கள். 1974ம் ஆண்டு ஸ்ரீசந்திரசேகர பாரதீ மஹா ஸ்வாமிகளின் அதிஷ்டானத்தின் முன்பு பிரணவ உபதேசமும் மகாவாக்ய உபதேசமும் பெற்றதோடு ஸ்ரீபாரதீ தீர்த்தர் என்ற யோகப் பட்டத்தைத் தன் குருநாதர் ஸ்ரீஅபிநவவித்யா தீர்த்த மஹா ஸ்வாமிகளிடமிருந்து இவர் பெற்றிருக்கிறார். சிருங்கேரியில் சாரதா திருக்கோயில் கம்பீரமாக காட்சியளிக்கிறது. வித்யா சங்கரர் ஆலயமும் பக்தர்கள் மனதைக் கட்டிப்போடும்.

இந்த ஆலயங்கள் துங்காநதியின் ஒரு கரையில் அமைந்துள்ளன; மறுகரையில் சிருங்கேரி ஜெகத்குரு சங்கராச்சாரியார் வாசம் செய்யும் நரஸிம்ம வனம்
உள்ளது. சிருங்கேரி ஜெகத்குரு ஸ்ரீபாரதீ தீர்த்த மஹா ஸ்வாமிகள் 1995ம் ஆண்டு சென்னைக்கு விஜயம் செய்தார்கள். சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் விஜயம். சென்னை, ‘சுதர்மா’ வளாகத்தில் சாதுர்மாஸ்ய விரதத்தை நிறைவு செய்துள்ளார்கள். நவராத்திரி வரை இங்கே தங்கியிருந்து பக்தர்களுக்கு தினசரி அருளாசி நல்கி வருகிறார்கள். இவ்வளவு நீண்ட நாட்கள் சிருங்கேரி ஸ்வாமிகள் இங்கே முகாமிட்டிருப்பது இந்த மாநகரம் செய்த மாதவம் என்றே சொல்ல வேண்டும். சிருங்கேரிக்குச் சென்று ஜகத்குருவை தரிசிக்க இயலாதவர்கள், தம்மிடத்துக்கே ஆசார்யார் வந்து தரிசனம் கொடுப்பது தாம் பெற்ற பெரும் பாக்கியமாகவே கருதுகிறார்கள்.

கோயில் உற்சவர், வீதிவுலா வந்து பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்கிறாரே, அதுபோல! நவராத்திரி ஒன்பது நாட்களும் தினமும் காலையில் யாகம், பூஜை, மாலையில் கச்சேரி, இரவில் ஜெகத்குருவே செய்யும் பூஜை என ஆன்மிக நடைமுறைகள் பக்தர்களை பரவசம் கொள்ளச் செய்கின்றன. சென்னையில் முகாமிட்டிருக்கும் காலத்தில், மகாஸ்வாமிகள், புதன்கிழமைகளில் மாலை 6:30 மணிக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6:30 மணிக்கும் அனைவருக்கும் உபதேசம் அருள்கிறார்கள். காலை 10 மணிக்கும், மாலை 4 மணிக்கும் ஜெகத்குருவை பக்தர்கள் தரிசித்து ஆசி பெறுகிறார்கள். பொது உபதேசத்தில், ‘‘இறைவன் மீது பக்தியும் குருவின் மீது மரியாதை கலந்த பக்தியும் இல்லை என்றால் வாழ்வில் நாம் வெற்றிபெற முடியாது. இன்று நமக்கு பல வேலைகள் இருக்கின்றன. அந்தக் காலம் போல வேதம் ஓதுதல், ஓதுவித்தல், யாகம் செய்தல், செய்வித்தல் ஆகியவற்றை நிறைவாகச் செய்ய இயலவில்லைதான்.

எப்படிபட்ட சூழல் இருந்தாலும் நம் முன்னோர்கள் மேற்கொண்டிருந்த நம்பிக்கையை சிதைக்காமல் வேதம், யாகம் இவற்றை ரட்சிக்க வேண்டிய பொறுப்பு எல்லோருக்கும் உண்டு’’ என்று அவர்கள் அருளியது பலருடைய நெஞ்சங்களில் நிலைத்திருக்கும் அறிவுரை. நம் தேசம் ஒற்றுமையுடன் பல காரியங்களை உலகமே வியக்கும் வண்ணம் செய்திட வேண்டும்; பொறாமை முதலான தீய எண்ணங்களுக்கு மனதில் இடம் கொடுக்காமல் ஈஸ்வர பக்தியோடு நல்ல சிந்தனையோடு ஒவ்வொரு குடிமகனும் வாழவேண்டும் என்ற கருத்தினையும் ஸ்வாமிகள் வலியுறுத்தி வருகிறார்கள். ஸ்வாமிகள் தங்கியிருக்கும் சுதர்மா வளாகத்தில் ஸ்வாமிகளை தரிசிக்க வரும் பக்தர்களுடைய வசதிகள் நுணுக்கமாகக் கருத்தில் கொள்ளப்பட்டு ஏற்பாடுகள் மிக மேன்மையாக நிறைவேற்றப்படுகின்றன.

தரிசன வரிசையில் நின்று கொண்டிருப்பவர்களுக்கு தன்னார்வ தொண்டர்கள் தூய்மையான குடிநீர் வழங்குவதும் எந்த கட்டத்திலும் யாரும் முகம் சுளிக்காத வண்ணம் அவர்களை அன்போடு நடத்துவதும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தவர்கள் ஸ்வாமி களுக்கும் அவருடைய சீடர்களான பக்தர்களுக்கும் எந்த அளவுக்கு மதிப்பு அளித்திருக்கிறார்கள் என்பதை உணர வைத்தது. வயதான பெரியவர்களுக்கு பேட்டரி கார் உள்-போக்குவரத்து வசதி, அவர்களுக்கு வரிசையில் முன்னுரிமை என்று மிகவும் நெகிழ்வாக கவனித்துக் கொள்கிறார்கள். ஸ்வாமிகளின் தரிசனம் பெற இருப்பவர்களும் தரிசனம் பெற்றவர்களும் சற்றே ஓய்வாக அமர்ந்துகொள்ள வசதியாக நூற்றுக்கணக்கில் நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. இரண்டு மருத்துவர்கள், அங்கே பக்தர்களின் நலம் காக்க முழுநேரப் பணி மேற்கொண்டிருக்கிறார்கள். உஷார் நிலையில் தீயணைப்பு இயந்திரம் ஒன்றும் இருக்கிறது.

ஆண்-பெண் ஓய்வறையில் உடைமாற்றிக்கொள்ள வசதியாக கயிறு கட்டி வைத்திருக்கும் சிறு வசதியைக்கூட மிக நேர்த்தியாக செயல்படுத்தியிருக்கும் பாங்கு பிரமிக்க வைக்கிறது. தினமும் மதியம், இரவு வேளைகளில் வந்திருக்கும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படுகிறது. வெறும் தொன்னை பிரசாதமல்ல; முழு சாப்பாடு! மஹாஸ்வாமிகளின் அருளுரை மனதை நிறைவிக்க, பிரசாதம் வயிற்றை நிறைவிக்க, அற்புத அனுபவம் பெற்ற பூரண திருப்தியில் சேவார்த்திகள், எதிர்வரப்போகும் நன்மை, நன்மையல்லாதவற்றை சந்திக்கும் உறுதியான மனப்பக்குவம் பெற்றுச் செல்வதைக் காணமுடிகிறது. திடீர், திடீரென பொழியும் மாலைநேர மழையால் பக்தர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பிரமாண்ட கூரையும் அதனடியில் அவர்கள் அனைவரும் ஸ்வாமிகளின் அருளுரை, நிகழ்ச்சிகளை நெருங்கிப் பார்க்கும் அனுபவம் பெறத்தக்க வகையில் மிக அகண்ட திரையில் அவற்றை ஒளிபரப்புவதும்
கூடுதல் வசதிகள்.

இம்மாதம் நவராத்திரி வைபவம் நிறைவு பெறும்வரை ஸ்வாமிகள் சென்னையில் முகாமிட்டு நல்லுரையும் ஆசியும் வழங்க சம்மதித்திருப்பது இறையரு ளாளர்களின் பெரும் பாக்கியம் என்றுதான் சொல்லவேண்டும். இப்படி ஒரு வாய்ப்பை வழங்கிய, இந்த ஏற்பாடுகளுக்கெல்லாம் தலைமையேற்று சிறப்பாக நடத்தி வரும் அமால்கமேஷன் தலைவர் ஏ.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கே இந்த முழுப் பெருமையும் சாரும். மஹா ஸ்வாமிகள் முகாமிட்டிருக்கும் ‘சுதர்மா’ வளாகம், சென்னை, மயிலாப்பூர் அருகே ராதா கிருஷ்ணன் சாலையில், நியு உட்லன்ட்ஸ் ஓட்டலுக்கு அடுத்து அமைந்துள்ளது.

ராமனுக்கும் கோபம் வருமா?



பக்தித் தமிழ் 9

அன்றைக்குச் சிவபெருமான் மீது பார்வதி தேவிக்கு ஏதோ செல்லக் கோபம். அவரோடு பேசாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டு அமர்ந்திருந்தாள். ஊடல் என்று வந்துவிட்டால், கடவுளாகவே இருந்தாலும் கொஞ்சம் இறங்கிச் செல்வதுதானே முறை? சிவபெருமான் பார்வதியை நெருங்கினார், ‘‘என் மீது என்ன கோபம் தேவி?’’ என்று புன்னகையுடன் கேட்டார். ம்ஹூம், பதில் வரவில்லை. கொஞ்சம் பெரிய கோபம்தான் போலிருக்கிறது. ஆனால், எதற்காகக் கோபம் என்று சொன்னால்தானே ஏதாவது செய்து கோபத்தைத் தணிக்கலாம்? அதற்கும் பார்வதி இடம் தரவில்லை. தொடர்ந்து மௌனமாகவே எங்கேயோ ஒரு திசையைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள். அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் சிவபெருமான் குழம்பிக்கொண்டிருந்த நேரம், எங்கிருந்தோ ஒரு பலமான ஓசை கேட்டது.

அந்தக் கயிலாய மலையே பலமாக நடுங்கியது. அவ்வளவுதான், பார்வதி தேவி தன்னுடைய செல்லக் கோபத்தை மறந்தாள். பயத்தில் வேகமாக ஓடிச் சென்று சிவனை அணைத்து நின்றாள். ஒருவழியாக, ஊடல் நாடகம் முடிவுக்கு வந்தது. ஆனால், இந்த ஊடலை முடித்து வைத்த அந்தச் சத்தம் எங்கிருந்து எழுந்தது? கயிலாயத்தையே குலுங்கச் செய்யுமளவு பலம் வாய்ந்த ஒலியை எழுப்பியவர் யார்? சிவனும் பார்வதியும் ஆவலுடன் கீழே நோக்கினார்கள். அங்கே ஒரு கடற்கரையில், கையில் வில்லுடன் கம்பீரமாக நின்றிருந்தார் ராமர். அவர் முகத்தில் கோபம். ராமர் தாமரை மலர் போன்ற முகம் கொண்டவராயிற்றே. ‘சாந்தமூர்த்தி’ என்று அவரைப் புகழ்வார்களே. அவருக்குக் கோபம்கூட வருமா? எப்போதும் கோபப்படுவதும் தவறு, கோபம் இல்லாமலே வாழ்வதும் தவறு, தேவையான நேரங்களில், தேவையான விஷயங்களுக்காகக் கோபப்பட்டுதான் தீரவேண்டும்.

சீதையைத் தேடி ராமர் பல திசைகளில் வானரப் படையினரை அனுப்பி வைத்தார். சில வாரங்கள் கழித்து, சீதை இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருக்கும் செய்தி அனுமன் மூலமாக அவருக்குத் தெரிந்துவிட்டது. ஆனால் உடனடியாக அங்கே சென்று தேவியை மீட்கமுடியாதபடி கடல் குறுக்கிட்டது. ஆகவே, அந்தக் கடற்கரையிலேயே தியானத்தில் அமர்ந்துவிட்டார் ராமர். அடுத்த ஏழு நாள் வருணனை நினைத்து மந்திரம் சொன்னார். ஆனால் இத்தனை மரியாதையாகக் கேட்டபிறகும், வருணன் வரவில்லை, பதில் சொல்லவில்லை, கடலும் வழிவிடவில்லை. அதனால்தான் ராமருக்குக் கடும் கோபம். ‘ஒரே அம்பில் இந்தக் கடலைத் தீய்த்துவிடுகிறேன் பார்!’ என்றபடி எழுந்து நின்றார். கையை நீட்டினார், அதில் லட்சுமணன் வில்லை வைத்தார்.

அந்தக் காலத்தில் போர் செய்வதற்கு முன்னால், வில்லின் நாணை இழுத்துப் பிடித்துப் பலமாக ஒலி எழுப்புவது ஒரு மரபு. அதைக் கேட்டு எதிரிப் படையைச் சேர்ந்தவர்கள் எல்லாரும் பயந்து நடுங்குவார்கள், சண்டை தொடங்குவதற்கு முன்பாகவே காலில் விழுந்துவிடுவார்கள் என்பது நம்பிக்கை. அதன்படி, ராமரும் எடுத்த எடுப்பில் வருணன் மீது அம்பு எய்யவில்லை, தன்னுடைய வீரத்துக்கு ‘ட்ரெய்லர்’ காட்டுவதுபோல், ஒருமுறை நாணை இழுத்துவிட்டார். அந்தச் சத்தம் வருணனுக்கு மட்டுமா கேட்டது? எல்லா உலகங்களையும் கடந்து கயிலாயத்துக்கே சென்று முழங்கியது, அங்கே சிவபெருமான், பார்வதியின் ஊடலையே தீர்த்துவைத்துவிட்டது.

ராமாயணக் கதையினூடே, இப்படி ஓர் அழகான நாடகத்தைப் பதிவு செய்கிறவர், கவிச்சக்கரவர்த்தி கம்பர். அந்தப் பாடல்:

வாங்கு வெம் சிலை, வாளி பெய் புட்டிலும் மலைபோல்
வீங்கு தோள்வலம் வீக்கினன், கோதையை விரலால்
தாங்கி, நாணினைத் தாக்கினன், தாக்கிய தமரம்
ஓங்கு முக்கணான் தேவியைத் தீர்த்து உளது ஊடல்

லட்சுமணன் கொடுத்த கொடிய வில்லை ராமன் தன்னுடைய கையால் வாங்கினான். அம்புகள் நிறைந்த புட்டிலையும் பெற்றுக்கொண்டான். மலை போன்ற தன்னுடைய தோள்களின் வலதுபக்கத்தில் அதைக் கட்டிக்கொண்டான். விரல்களுக்கு அணியும் கவசங்களை அணிந்துகொண்டான். போருக்குத் தயாரானான். தன்னுடைய மாபெரும் வில்லின் நாணை இழுத்துப் பிடித்துத் தாக்கினான். அவ்வளவுதான், அதனால் எழுந்த சத்தம் அனைத்து உலகங்களையும் தாண்டிச் சென்றது. பெருமையில் சிறந்த, மூன்று கண்களைக் கொண்ட சிவபெருமானின்மீது அவன் மனைவி பார்வதி கொண்ட ஊடலைக்கூடத் தீர்த்துவிட்டது! இறைவனை வழிபடுவதற்குப் பல வழிகள் இருக்கின்றன.

‘கடவுளை மனத்தில் நினைத்துக்கொண்டாலே போதும்’ என்பது ஒரு கட்சி, ‘வீட்டில் உள்ள சுவாமி படத்துக்கு வெறுமனே அறுகம்புல்லைத் தூவினால் நல்லது’ என்று ஒரு கட்சி. ‘தினமும் கோயிலுக்குப் போகவேண்டும்’ என்று ஒரு கட்சி, பிரமாண்டமான மேடை அமைத்துப் பூஜை செய்யவேண்டும்‘ என்பது இன்னொரு கட்சி, ‘ஏழை எளியவர்களுக்குத் தான தர்மங்கள் செய்யவேண்டும்’ என்று ஒரு கட்சி... இவை அனைத்தையும் பட்டியல் போடுவது சாத்தியமே இல்லை. இத்தனை கட்சிகளில் எது சரி? எது தவறு? இதைத் தீர்மானிப்பது மிகவும் சிரமமாக உள்ளது. நல்லவேளையாக, பல பெரியோர்களின் வழிபடும் முறைகள் அழகான பக்திப் பாடல்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றைக் கவனித்துக் காப்பி அடித்தாலே போதும், நம்முடைய வேலை எளிதாகிவிடும்.

உதாரணமாக, இரண்டு பாடல்களைப் பார்ப்போம், இவை இரண்டுமே மிகச் சிறந்த பக்தர்கள் அருளியவை. ஒன்று, திருஞானசம்பந்தர், இன்னொருவர், நம்மாழ்வார். சிவபெருமானைப் பற்றித் திருஞானசம்பந்தரே ஏராளமான அற்புதப் பதிகங்களைப் பாடியிருக்கிறார். ஆனால் நாம் இங்கே பார்க்கவிருப்பது, அவருடைய வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை. சேக்கிழார் பெருமான் விவரிக்கும் பாடல்கள். இவை ‘திருத்தொண்டர் புராணம்’ என்கிற ‘பெரிய புராண’த் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அப்போது திருஞானசம்பந்தர் ஊர் ஊராகப் பயணம் செய்து சிவாலயங்களைத் தரிசித்துக்கொண்டிருந்தார். ஆங்காங்கே பல சிறந்த பாடல்களைப் பாடி அருளினார். இந்தப் பயணத்தின்போது ஒருமுறை திருஞானசம்பந்தர் திருவாரூருக்கு வருகிறார். அங்கே உள்ள சிவன் கோயிலினுள் பக்திப் பரவசமாக நுழைகிறார். இந்தக் காட்சியைச் சேக்கிழார் இப்படி அழகுறப் பதிவு செய்கிறார்:

மாடு சூழ் திரு வலம் கொண்டு, வணங்கி,
கூடு காதலில் கோபுரம் பணிந்து, கை குவித்து,
தேடும் மால் அயர்க்கு அரியராய்ச் செழுமணிப்புற்றில்
நீடுவார் முன்பு நிலம் உறப் பலமுறை பணிந்தார்

பணிந்து வீழ்ந்தனர், பதைத்தனர், பரவிய புளகம்
அணிந்த மேனியோடு ஆடினர், பாடினர்,
அறிவில் துணிந்த மெய்ப்பொருள் ஆனவர் தமைக்
கண்டு துதிப்பார்,
தணிந்த சிந்தையின் விரைந்து எழு வேட்கையில்
தாழ்ந்தார்.

முதலில், கோயிலை வலம் வருகிறார் ஞானசம்பந்தர். முறைப்படி வணங்குகிறார். மனத்தில் எழுகின்ற அன்பினால், அங்குள்ள கோபுரத்தைப் பார்த்துப் பணிகிறார், கை குவிக்கிறார். அடுத்து, இறைவனைத் தரிசிக்கிறார். அவன் எப்பேர்ப்பட்டவன் என்பதை ‘தேடும் மால் அயர்க்கு அரியர்’ என்று சுருக்கமாகச் சொல்லிவிடுகிறார் சேக்கிழார். அந்தக் கதை எல்லாரும் கேள்விப்பட்டதுதான். ஒருமுறை சிவன் ஒளிப்பிழம்பாக விண்ணையும் மண்ணையும் தொட்டுக்கொண்டு நிற்க, அவருடைய முடியைத் தேடிப் பிரம்மதேவர் மேலே பயணம் செய்தார். அடியைத் தேடி மகாவிஷ்ணு தரையைத் துளைத்துக்கொண்டு சென்றார். ஆனால், அவர்கள் இருவருக்குமே சிவனின் எல்லைகள் அகப்படவில்லை. அதனால்தான், ‘தேடுகின்ற மால் (திருமால், விஷ்ணு), அயன் (பிரம்மன்) இருவருக்கும் அரிதானவன்’ என்று சிவன் புகழப்படுகிறார்.

அப்படிப் பிரம்மனுக்கும் விஷ்ணுவுக்கும் கிடைக்காத அரியனாக இருந்த சிவன், இங்கே பக்தர்களுக்கு எளியனாகக் காட்சி தருகிறான். அவனைக் கண் குளிரத் தரிசனம் செய்கிறார் திருஞானசம்பந்தர். சிவபெருமானைக் கண்டதும் ஞானசம்பந்தரின் உடல் முழுவதும் பரவசத்தில் நடுங்குகிறது, நிலத்தில் உடம்பு முழுவதும் படும்படி விழுந்து வணங்குகிறார். அதுவும் ஒருமுறை அல்ல, பலமுறை விழுந்து எழுந்தார். ஆனந்த பரவசத்தில் அவரது உள்ளம் பதைக்கிறது, உடல் முழுவதும் மயிர்க்கூச்செரிகிறது. அதனைப் ‘பரவிய புளகம் அணிந்த மேனி’ என்கிறார் சேக்கிழார். அதாவது, அவர் உடம்பில் வேறு அலங்காரங்களே இல்லையாம், இறைவனைக் கண்டு புல்லரித்த கேசம்தான் அவருக்கு ஆபரணமாம்! அந்த அற்புத நிலையில், திருஞானசம்பந்தர் மகிழ்ச்சியாகப் பாடுகிறார், ஆனந்தக் கூத்தாடுகிறார். தான் என்ன செய்கிறோம் என்றே அவருக்குப் புரியவில்லை.

அவர் ஏன் இவ்வளவு தூரம் உணர்ச்சிவயப்படவேண்டும்? எல்லாரும்தான் கோயிலுக்குப் போகிறோம், கடவுளைப் பார்க்கிறோம், அது ஒரு பெரிய விஷயமா? நீங்களும் நானும் பார்க்கிற கடவுளும் திருஞானசம்பந்தர் போன்ற ஞானிகள் பார்க்கும் கடவுளும் ஒருவர் அல்ல. சேக்கிழார் அதனை மிக நுட்பமாகக் காட்சிப்படுத்துகிற அழகைப் பாருங்கள்: ‘அறிவில் துணிந்த மெய்ப்பொருள், அதாவது இத்தனை நாளாக ஞானசம்பந்தர் தன்னுடைய மனத்துக்குள் உருவாக்கி வைத்திருந்த கடவுளின் உருவம். அது இப்போது இங்கே கண்ணெதிரில் தெரிகிறது. அதனால்தான் அவருக்கு இத்தனை பரவசம், மகிழ்ச்சி! அந்த ஆனந்தத்தில், அவர் இறைவனைத் துதிக்கிறார், உள்ளத்தில் மேலும், மேலும் பொங்கிக்கொண்டிருக்கிற விருப்பத்தோடு வணங்குகிறார். செம்மையான சொற்களைத் தேர்ந்தெடுத்துப் பாடத் தொடங்குகிறார்.

எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி. அது இப்போது நம் கண்ணெதிரே நிகழ்வதுபோல் வெறும் வார்த்தைகளாலேயே வீடியோ படம் பிடித்துக் காட்டிவிடுகின்றன இந்தப் பாடல்கள். பக்தி என்பது வெறுமனே கரம் குவிப்பது அல்ல, அவனுக்குள் ஒருவனாக நாமும் ஒன்றிவிடுவதுதான் என்று தெளிவாக்குகின்றன. அதெல்லாம் சரி, ஆண்டவனைப் பார்க்கும்போது எல்லாருக்கும் அப்படி ஒரு பரவசம் வந்தே தீருமா? ஒருவேளை வராவிட்டால் என்ன செய்வது? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வது, நம்மாழ்வாரின் அற்புதமான பிரபந்தப் பாடல் ஒன்று. அதைப் பார்ப்பதற்கு முன்னால் ஒரு சின்னக் கதை.
ஒரு வீட்டில் ஏதோ விசேஷம், அதை முன்னிட்டு ஒரு பஜனை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.

அக்கம்பக்கத்திலிருந்து பலர் அதில் கலந்து கொண்டார்கள். அங்கே ஓர் இளைஞன். கொஞ்சம் முற்போக்கான சிந்தனைகளைக் கொண்டவன். அவனுடைய அம்மாவை அழைத்துச் செல்வதற்காக வந்திருந்தான். ‘‘வாடா, உட்கார்ந்து நீயும் நாலு பாட்டுப் பாடு!’’ என்றார் அம்மா. ‘‘அதெல்லாம் முடியாது’’ என்றான் அவன். ‘‘இவங்க பாடறது என்ன பாஷைன்னே எனக்குப் புரியலை, அப்படியே புரிஞ்சாலும் இந்தப் பூஜைக்கெல்லாம் அர்த்தம் தெரியலை, இதெல்லாம் தெளிவாத் தெரிஞ்சுக்காம, காரணம் புரியாம ஆட்டுமந்தை மாதிரி நான் அவங்க பின்னாடி போகமாட்டேன்.’’ ‘‘எனக்கு மட்டும் இதுக்கெல்லாம் அர்த்தம் தெரியுமாடா?’’ என்கிறார் அம்மா. ‘‘எல்லாரும் செய்யறாங்க, நானும் செய்யறேன். அவ்ளோதான்.’’

‘‘அது தப்பும்மா, காரணம் புரியாம ஒரு வேலையைச் செஞ்சா பலன் எப்படிக் கிடைக்கும்?’’ ‘‘அட அசடே’’ என்று அவன் அம்மா சிரித்தார். ‘‘டாக்டர் ஒரு மருந்து கொடுக்கறார், அதோட கெமிக்கல் ஃபார்முலா, அது நம்ம உடம்புல எப்படி வேலை செய்யுதுன்னு எல்லாம் தெரிஞ்சாதான் உடம்பு குணமாகுமா என்ன? அவர் சொல்றார், அப்படியே செஞ்சா பலன் உண்டு, அதுமாதிரிதாண்டா இதுவும்!’’ விஷயம் புரிந்துவிட்டதல்லவா? இப்போது கிட்டத்தட்ட இதேமாதிரி ஒரு கருத்தை நம்மாழ்வார் எப்படிக் காட்சிப்படுத்துகிறார் என்று பார்ப்போம்:

மைப் படி மேனியும் செந் தாமரைக்
கண்ணும் வைதிகரே
மெய்ப்படியால் உன் திருவடி சூடும்
தலைமையினார்,
எப்படி ஊர் ஆம் இலைக்கக் குருட்டு ஆம்
இலைக்கும் என்னும்
அப்படி யானும் சொன்னேன், அடியேன்
மற்று யாது என்பனே!

ஒரு கிராமத்தில் பல பசுக்கள். இடையர்கள் மேய்ச்சலுக்காக அவற்றைப் பக்கத்தில் உள்ள ஒரு காட்டுக்கு அழைத்துச் செல்கிறார்கள். அவையும் வயிறாரச் சாப்பிட்டுவிட்டு ஊர் திரும்புகின்றன. அந்தக் கூட்டத்தில், ஒரு பசுவுக்கு மட்டும் கண் தெரியாது. அக்கம்பக்கத்தில் மற்ற பசுக்கள் நடப்பதை கவனித்து அதுவும் தட்டுத்தடுமாறி நடந்து வருகிறது. சிறிது நேரத்தில், அவர்களுடைய கிராமம் நெருங்கிவிட்டது. வீட்டை, வயலை, தோட்டத்தை, தொழுவத்தைப் பார்த்த உற்சாகத்தில் பசுக்கள் ‘‘ம்ம்மா’’ என்று சத்தமாகக் குரல் எழுப்புகின்றன. இதைக் கவனித்துக்கொண்டே இருந்த ஒருவன் கேட்கிறான், ‘‘என்னய்யா இது? மத்த பசுக்களெல்லாம் தங்கள் வீட்டைப் பார்த்துட்டுக் கத்துது, நியாயம். அந்தப் பசுவுக்குதான் கண்ணே தெரியாதே, அது எப்படிக் கத்துது?’’

‘‘அட முட்டாளே’’ என்று பக்கத்தில் இருந்தவர் அவன் முதுகில் தட்டுகிறார், ‘‘பசுவுக்குக் கண்தான் தெரியாது, காது கேட்குமில்லையா? மத்த பசுங்க கத்தினதும், நம்ம வீடு வந்துடுச்சுன்னு அது புரிஞ்சுகிச்சு, அதனால அதுவும் கத்துது.’’ ‘‘நீல நிற மேனியும் செந்தாமரைக் கண்ணும் கொண்ட இறைவனே, நானும் அந்தக் குருட்டுப் பசுவைப்போல்தான்’’ என்கிறார், நம்மாழ்வார். ‘‘உன்னுடைய திருவடியை வணங்கும் தகுதி எனக்கு இல்லை, ஆனால் அப்படிப்பட்ட தகுதியைக் கொண்ட பெரியவர்களை எனக்குத் தெரியும். அவர்கள் என்ன செய்கிறார்களோ, அதைப் பார்த்து நானும் அப்படியே செய்கிறேன், அவர்கள் சொல்வதைக் கேள்வி கேட்காமல் திருப்பிச் சொல்கிறேன், அவ்வளவுதான்!’’

கோணலை நீக்கிய கோவிந்தன்


ராமர் காலத்தில் மந்தரை என்ற ஒரு கூனி வாழ்ந்தாள். கிருஷ்ணர் காலத்திலும் ஒரு கூனி வாழ்ந்து வந்தாள். அவளுக்கு உடலில் மூன்று கோணல்கள் இருந்தன. அதனால் அவளை முக்கோணலி என்றே அழைத்தனர். முக்கோணலி, கம்சனுக்கு சந்தனம் முதலிய நறுமணக் கலவையைக் கொடுக்கும் பணியைச் செய்து வந்தாள். கண்ணன் ஒருநாள் அவளைக் கண்டான். அவள் கம்சனுக்காக எடுத்துச் சென்ற வாசனைக் கலவையின் நறுமணம் கண்ணனைக் கவர்ந்தது. அக்கலவையைத் தனக்குத் தரும்படி முக்கோணலியிடம் கேட்டான் கண்ணன். முதலில் தயங்கிய கூனி, பிறகு நறுமணக்கலவையைக் கண்ணனிடம் கொடுத்து விட்டாள். கண்ணன் அதனைத் தன் திருமேனியில் பூசி மகிழ்ந்தான்.

பிறகு, கண்ணன் முக்கோணலியின் கால்களைத் தன் காலால் அழுத்தியபடி, அவள் தலையைப் பிடித்துத் தூக்கினான். அவ்வளவு தான்! அவள் முதுகில் இருந்த மூன்று கோணல்களும் நீங்கி, நிமிர்ந்து நின்றாள்! கண்ணனின் திருவடிகளில் விழுந்து வணங்கினாள். பூசக் கொடுத்தேனோ கூனியைப் போலே?
முக்கோணலியைப் போல் கண்ணன் பூசுவதற்கு நறுமணக் கலவையைக் கொடுக்கும் பேறு தனக்குக் கிடைக்கவில்லையே என்று ஏங்குகிறாள் திருக்கோளூர்ப் பெண்பிள்ளை. இறைவன் திருவருள் மனிதர்களின் மனக்கோணல்களையும் தீர்க்கும் என்பது உட்கருத்து.

பூவைக் கொடுத்த புண்ணியர் கண்ணன் மலர் மாலைகளை அணிவதில் விருப்பம் உடையவன். வடமதுரையில் இருந்த ஒரு பூக்காரர் கம்சனுக்கு மாலைகள் கொடுத்து வந்தார். கண்ணன் வடமதுரைக்குச் சென்றபொழுது, அப்பூக்காரர் கண்ணனுக்கு உகந்த மாலைகளை அளித்தார். அதனால் பெரிதும் மகிழ்ந்த கண்ணன் அந்தப் பூக்காரருக்கு மோட்சம் அளித்தருளினான். பூவைக் கொடுத்தேனோ மாலாகாரரைப் போலே? அந்தப் பூக்காரரைப் போல் பெருமாளுக்கு மலர்மாலைத் தொண்டைத் தான் செய்யவில்லையே என்று ஏங்குகிறாள் திருக்கோளூர்ப் பெண்பிள்ளை. மாலை என்பதை வடமொழியில் ‘மாலா’ என்பர். இசைவாணரை சங்கீதக்காரர் என்பது போல், மாலை தொடுப்பவரை மாலாகாரர் என்றனர்.

இது வடமொழியும் தென்மொழியும் கலந்த கலப்புச் சொல். அந்த மாலாகாரரின் வரலாற்றைக் கேட்டே, பெரியாழ்வார் பெருமாளுக்கு மலர்மாலைத் தொண்டு செய்யலானார் என்பது குறிப்பிடத்தக்கது. உத்தமன் பரதன் தசரதனிடம் கைகேயி பெற்ற வரத்தின்படி, ராமன் காட்டிற்குச் சென்றார். ராமன் காட்டிற்குச் சென்ற செய்தியை அறிந்தவுடன் தசரதர் உயிர் நீத்தார். பாட்டனார் வீட்டிற்குச் சென்றிருந்த பரதனுக்குச் செய்தி அனுப்பப்பட்டது. அயோத்தி திரும்பிய பரதன் தன் பொருட்டாகக் கைகேயி வரம் பெற்றதை எண்ணிக் கலங்கினார். பெற்றவள் என்றும் பாராமல் திட்டித் தீர்த்தார். அரச பதவியைத் துச்சமென எண்ணினார். ராமனை அழைத்து வர காட்டிற்குச் சென்றார். ராமனைக் கண்டார். நாடு திரும்பி வந்து அரசாள வேண்டினார்.

மன்றாடினார். வற்புறுத்தினார். ராமன் அதற்கு உடன்படவில்லை. பதவியாசை இல்லாத பரதன் ராமனின் பாதுகைகளை வேண்டிப் பெற்றார். அவற்றைத் தலையில் சுமந்தபடி கோசலம் திரும்பினார். ராமன் இல்லாத அயோத்தியில் நுழையவும் விரும்பாத பரதன் நந்திக்கிராமம் என்னும் இடத்தில் ராமனின் பாதுகைகளுக்கு முடிசூட்டினார். பதினான்கு ஆண்டுகள் அந்த இடத்திலேயே வாழ்ந்தார்.

நந்தியம்பதியிடை நாதன் பாதுகம்
செந்தனிக் கோல்முறை செலுத்தச் சிந்தையான்
இந்தியங்களை அவித்து இருத்தல் மேனியான்
அந்தியும் பகலும் நீர் அறாத கண்ணினான்

-என்கிறார் கம்பர். நந்திக் கிராமத்தில் ராம பாதுகைகளே அரசு செலுத்தின. பரதன் ஐம்புலன்களையும் அடக்கித் தவவாழ்க்கை மேற்கொண்டார். பதினான்கு ஆண்டுகளும் அவர் கண்களில் கண்ணீர் வடிந்து கொண்டேயிருந்தது. வைத்த இடத்து இருந்தேனோ பரதனைப் போலே? என்று திருக்கோளூர்ப் பெண்பிள்ளை வினவுகிறாள். ராமனின் பாதுகைகளை வைத்திருந்த இடத்திலேயே பதினான்கு ஆண்டுகள் இருந்த பரதனைப் போல் தான் எதுவும் செய்ய இயலவில்லையே என ஏங்குகிறாள்.

சில விஷயங்கள் ஏன் ரகசியமாக வைக்கப்படுகின்றன?



ஓஷோ 9

மறைந்திருக்கும் உண்மைகள்

அணு ஆராய்ச்சிக்கூடத்தில் ‘அணு விஞ்ஞானிகளைத் தவிர வேறு யாரும் உள்ளே நுழையக்கூடாது’ என்ற அறிவிப்பை ஒப்புக் கொள்கிற நாம், கோயில் விஷயத்தில் ஒப்புக் கொள்வதில்லை! கோயிலுக்கு என்று ஒரு தனி விஞ்ஞானம் இருப்பது நமக்குத் தெரிவதில்லை! கோயில்களும் தீர்த்தாடன மையங்களும் குறிப்பிட்ட சில மக்களுக்கு மட்டுமே ஆனவை! ஒரு நோயாளியைச் சுற்றி, மருத்துவர்கள் நின்று கொண்டு, அவனுடைய நோயைப் பற்றி விவாதிக்கிறார்கள். அது நோயாளியின் காதில் விழுகிறது. ஆனால் விளங்குவதில்லை. கிரேக்க, லத்தீன் கலைச் சொற்கள் கொண்டு அவர்கள் பேசுவதால் புரிவதில்லை.
இதேபோல, ஒவ்வொரு மதமும் தமக்கேயான குறியீட்டு மொழியை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

அதனால், நாம் நினைத்திருக்கிற இடங்கள் மெய்யானவை அல்ல; தவறானவர்கள் கைகளுக்குப் போய் விடக்கூடாது என்றும், தவறாகப் பயன்பட்டு விடக்கூடாது என்றும் அவற்றைப் பாதுகாத்து வந்திருக்கிறது மாபெரும் மரபு. பொதுமக்களுக்கு அவற்றால் சிரமங்களே தவிர எந்தப் பயனும் இல்லை. ‘அல்குஃபா’ ஊருக்குள் நுழைந்தால் பைத்தியம் பிடித்துவிடும்! எதிர்பாராமல் நுழைகிறவரும் பைத்தியம் பிடித்தே வெளியே வருவார்! ‘அல்குஃபா’வில் உருவாகும் சக்தி அலை அதிர்வுகளைத் தாங்கிக் கொள்ளும் சக்தி, சாதாரண மனிதர்களுக்கு இல்லாமற்போவதுதான் அதற்குக் காரணம். ஆனால், சரியான முன் தயாரிப்பும், கட்டுப்பாடும் இல்லாமல், அதற்குள் நுழையாமல் இருப்பதே நல்லது.

‘அல்குஃபா’வின் சில அம்சங்களைப் புரிந்து கொண்டால், நமது தீர்த்த யாத்திரைத் தலங்களைப் புரிந்து கொள்வது எளிது. ‘அல்குஃபா’வில் உறங்க முடியாது என்று சொல்கிறார்கள்! அதனால், விழித்திருக்கும் அனுபவம் இல்லாதவர்கள் அங்கே பைத்தியமாகி விடுகிறார்கள்! இரவில் விழித்திருப்பதுதான் சூஃபி ஞானிகளின் மாபெரும் ஆற்றல். இரவு முழுவதும் விழித்திருக்க அவர்களால் முடியும். ஒருவர் தொண்ணூறு நாட்கள் உண்ணாமல் இருந்தால் மிக மிகப் பலவீனமாகிவிடுவார். ஆனால், செத்துவிட மாட்டார்; பைத்தியமும் பிடிக்காது. சாதாரண ஆரோக்கிய மனிதர்கள் தொண்ணூறு நாட்கள் உண்ணா நோன்பை எளிதில் மேற்கொள்ள முடியும். ஆனால், இருபத்தோரு நாட்கள் உறங்காமல் இருக்க முடியாது!

மூன்று மாதம் உண்ணாமல் இருக்க முடிந்தாலும் மூன்று வாரம் உறங்காமலிருக்க முடியாது. மூன்று வாரம் என்பது கூட அதிகம்தான். ஒரு வாரமே சிரமம். ஆனால், ‘அல்குஃபா’வில் உறக்கமே சாத்தியமில்லை! இலங்கையிலுள்ள யாரோ ஒருவர், ஒரு புத்த சன்னியாசியை என்னிடம் அனுப்பி வைத்தார். அவரால் மூன்று ஆண்டுகளாக சரியாகத் தூங்க முடியவில்லையாம். நாள் முழுவதும் அவரது கை கால்கள் நடுங்கிக் கொண்டே இருந்தன. தொடர்ந்து வியர்வையும் வழிய, மிகவும் சிரமப்பட்டார். காலடி எடுத்து வைக்கவே பயம்! எல்லா சுய நம்பிக்கைகளும் இழந்தவராகி விட்ட அவர், சற்று மனம் பேதலித்தவராகவும் காணப்பட்டார். வலிய எடுத்துக்கொண்ட தூக்க மருந்துகளாலும் உறக்கம் வரவில்லை. சும்மா நிம்மதியில்லாமல் படுத்துக் கிடப்பார். ஆனால், உள்ளூர விழிப்பு இருந்து கொண்டே இருந்தது.

புத்தரின் ‘அனபனாசதி யோகத்தை’ப் பயன்படுத்தினீர்களா என்று அவரைக் கேட்டேன். பௌத்த சன்னியாசிகளுக்கு அது தவிர்க்க முடியாத ஒன்று. அவர் ‘ஆமாம்’ என்றார். அப்படியானால் தூக்கத்தை மறந்து விட வேண்டியதுதான். அந்த யோகத்தின் விளைவு உறக்கமின்மைதான். ஆனால் அது ஆரம்ப கட்டம்தான். உறக்கமின்மைக்கு அடுத்த கட்டம் உண்டு. அதற்குள் செல்ல வேண்டும், உடனே. முதல் கட்டத்திலேயே நின்று கொண்டிருந்தால், பலவீனம்தான் விளையும். பைத்தியமும் பிடிக்கலாம். மரணமும் சம்பவிக்கலாம்! உள்ளிருக்கும் உறக்கம் அழிக்கப்பட்டவுடனே பிரக்ஞையின் தன்மை மிகவும் மாறிவிடும். அப்போது, அடுத்த வளர்ச்சி நிலைக்கு உடனே நகர்ந்துவிட வேண்டும்.

அந்த இரண்டாவது கட்டம் என்ன என்பது தெரியுமா என்று, அந்தத் துறவியைக் கேட்டேன். ‘அது பற்றி யாருமே சொல்லவில்லை’ என்றார் அவர்.
இரண்டாவது கட்டம் பற்றி புத்தகம் எதிலும் சொல்லப்படவில்லை, முதல் கட்டத்தை எழுதி வைப்பதும் ஆபத்துதான். காரணம் முதற்கட்ட இறுதியில் உறக்கமின்மை பற்றிக் கொள்கிறது. அதனால்தான், சில விஷயங்கள் ரகசியமாக வைக்கப்படுகின்றன. யாருக்கும் தீங்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் ஆன்மத் தேடலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு உதவுவதற்காகவே, வழிகாட்டுவதற்காகவே அவை அமைந்துள்ளன. அதனால்தான் தீர்த்த யாத்திரைத் தலங்கள் தேவைப்படுகின்றன. அதே சமயம் மெய்யான இடங்கள் மறைத்தும் வைக்கப்படுகின்றன. சரியான பக்குவநிலை வரும்வரை, விலகி இருக்கச் செய்யவே பொய்யான இடங்கள் உருவாக்கப்படுகின்றன.

தப்பான ஆள் சரியான இடத்தை நெருங்கவே முடியாது. சரியான ஆள் எப்படியும் கண்டுகொள்வார். ஒவ்வொரு தீர்த்த யாத்திரைத் தலத்தின் மர்மத்தைத் திறப்பதற்கும் அதற்கான பிரத்யேக சாவி இருக்கும். சூஃபி மகான்களின் புனித இடங்களை, சமணரின் சாவி கொண்டு திறக்க முடியாது. அதுபோல சூஃபிகளின் சாவி கொண்டு சமணப் புனித தீர்த்தத்தைத் திறக்கவும் முடியாது. ஒவ்வொரு சமயத்திற்கும் தனிப்பட்ட திறவுகோல் இருக்கவே செய்கிறது. அதைச் சொல்ல நான் விரும்பவில்லை. என்றாலும் ஒன்றைச் சான்றாகச் சொல்கிறேன். திபேத்தியர்களுக்கு தனிப்பட்ட ரகசிய வரைபடங்கள் அல்லது யந்திரங்கள் இருக்கின்றன. அவைதாம் திறவுகோல்கள். இந்துக்களுக்கும் அம்மாதிரியானவை ஆயிரக்கணக்கில் உண்டு. வீடுகளில் அவர்கள் ‘லாபா-சுபா’ என்பது போன்ற சில வாசகங்களை எழுதி வைத்துக் கொள்கிறார்கள்.

அதற்கு வளமும்-நலமும் என்று பொருள். அதற்கடியில் சில எண்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். அவை குறியீடுகள். அவை புனிதத் தலங்களின் திறவு கோல்கள். ஆனால் அவை எதற்கு என்று அவர்களுக்குத் தெரியாது. முன்னோர்கள் செய்தார்கள் என்று இவர்களும் செய்து வருகிறார்கள். வெளியில் குறிப்பிடப்படும் உருவம் ஒவ்வொன்றும் உமக்குள்ளே பிரக்ஞையில் ஒரு உருவத்தை உருவாக்கிவிடும். சான்றாக, சாளரத்தின் வழியாக சில நிமிடங்கள் வெளியே பார்த்துக் கொண்டிருந்துவிட்டுக் கண்களை மூடினால், சாளரச் சதுரத்தின் ‘நெகடிவ்’ வடிவம் மனக்கண்ணில் தோன்றும். அதே போல ஒரு யந்திரத்தைப் பார்த்தபடி தியானம் செய்தால் உங்கள் மனதில், அந்த வடிவம் அல்லது எண்ணின் எதிர்மறை வடிவத்தை உருவாக்கிக் காட்டும்.

சில சிறப்பு தியானப் பயிற்சிகளுக்குப் பிறகு இதை நம்மால் காணமுடியும். அந்த யந்திரம் மனதில் தோன்றிய பிறகு, சில வழிபாடுகள் செய்தால், ஆன்மிகப் புனித யாத்திரை உடனே ஆரம்பமாகி விடும், உள்ளே. முல்லாவின் வாழ்வில் நிகழ்ந்ததாக ஒரு கதை. அவர் தம் கழுதையைத் தொலைத்து விட்டார். அது ஒன்றுதான் அவர் சொத்து. ஊர் முழுக்க அதைத் தேடிப்பார்த்து விட்டார். கிடைக்கவில்லை. பரிதாபப்பட்ட கிராம மக்களும் தேடிப் பார்த்தார்கள். கிடைக்கவில்லை. அது ஒரு புனித மாதம். ‘யாத்ரீகர்கள்’ அந்த ஊர் வழியாகத் தலயாத்திரை சென்று கொண்டிருந்த காலம். கழுதை அந்தக் கூட்டத்தோடு போயிருக்கலாம் என்று ஊரார் சொன்னார்கள். அப்படித்தான் இருக்க வேண்டும் என்று முல்லா நஸ்ருதீனும் நினைத்து, கழுதை இனிக் கிடைக்காது என்ற முடிவுக்கு வந்தார்.

என்றாலும், கடைசியாக ஒரு முயற்சி செய்து பார்த்து விடுகிறேன் என்றார் அவர். அப்படிச் சொல்லிவிட்டு, அங்கேயே அப்படியே நின்று, கண்களை மூடிக்கொண்டார்! பிறகு, சட்டெனக் குனிந்து கை கால்களால் ஒரு விலங்கு போல நடக்க ஆரம்பித்தார்! வீட்டைச் சுற்றிப் போனார்! பிறகு, தோட்டத்தைச் சுற்றி வந்தார்! அப்புறம் அப்படியே நடந்து போய் ஒரு பெரிய பள்ளத்தில் பார்த்தார்! அந்தப் பள்ளத்தில்தான் அவரது கழுதை விழுந்து கிடந்தது!
நண்பர்கள் ஆச்சரியப்பட்டார்கள். ‘இது எப்படி? எப்படி இதைச் செய்யத் தோன்றியது? ஏன்?’ என்று கேட்டார்கள். முல்லா பதில் சொன்னார்: ‘ஒரு மனிதனால் தன் கழுதையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், திறவுகோல் அவனிடம் இல்லையென்று அர்த்தம்.

அதனால், கழுதையைக் கண்டுபிடிக்க நான் கழுதையாக வேண்டி வந்தது? நான் கழுதையானவுடனே, ஒரு கழுதையே எங்கே தேட வேண்டும் என்பது தெரிந்து விட்டது. கழுதை எங்கே இருக்கிறது என்பது எனக்குத் தெரியாதுதான். ஆனால், கழுதையாய்க் கண்களை மூடி நடந்தேன். கண்களைத் திறந்தபோது எதிரே பள்ளம்! அதில் என் கழுதை!’ என்றார் அவர். முல்லா நஸ்ருதீன் ஒரு சூஃபி ஞானி. இந்தக் கதையைப் படிப்பவர்கள் சும்மா சிரித்து விட்டுப் போய்விடுவார்கள். ஆனால் அதற்குள் ஒரு திறவுகோல் இருக்கிறது. தேடலுக்கான சாவி அது. ஆன்மத் தேடலுக்கு அது ஒன்றுதான் வழி. அதனால், ஒவ்வொரு புனித இடத்திற்கும் ஒரு சாவி இருக்கிறது. அது யந்திர வடிவிலும் இருக்கும். அப்படிப்பட்ட இடங்கள், உங்களை, சக்தி வாய்ந்த வெள்ளப் பெருக்கின் நடுவில்
தள்ளிவிட்டு விடுகின்றன. அப்புறம் நீங்கள் சிரமமின்றி வெள்ளத்தின் போக்கிற்கேற்ப மிதந்து செல்லலாம்.

இன்னொரு முக்கியமான அம்சம், மனித வாழ்வில் பிரக்ஞை ஒன்றைத் தவிர, மற்ற எல்லாமே பொருள்கள்; பொருளால் உருவாக்கப்பட்டவை, உருவானவை. ஆனால், உள் பிரக்ஞை என்ன என்பது நமக்குத் தெரியாது. நமது உடலை நமக்குத் தெரியும், இது எல்லா வகையிலும் பொருளோடு தொடர்புடையது. ரசவாதம் பற்றிய சில விஷயங்களை நாம் இப்போது புரிந்து கொள்வது நல்லது. அப்போதுதான் புனித தலங்களின் இரண்டாவது அம்சத்தை, அர்த்தத்தைப் புரிந்து கொள்ளமுடியும். ரசவாத வித்தையின் வழிமுறை மதத்தின் வழிமுறைதான். தண்ணீரை நீராவியாகவும் நீராவியை மறுபடியும் தண்ணீராகவும் இதையே மறுபடியும் நீராவியாகவும் இப்படியே ஆயிரக்கணக்கான முறை, ஒரே நீரைச் செய்து கொண்டே வந்தால், அந்தத் தண்ணீர் ஓர் அபூர்வமான சக்தியைப் பெற்றுவிடும்!

சாதாரணத் தண்ணீரும் அதுவும் ஒன்றல்ல. ஆரம்பத்தில் இது ஒரு வேடிக்கை போலதான் தோன்றும். இதனால், தண்ணீரின் தன்மை எப்படி மாறும்? தண்ணீரை மீண்டும் மீண்டும் வடிகட்டி சுத்தப்படுத்திக் கொண்டே இருப்பதால், அதன் குணம் எப்படி மாறும்? அது சுத்தமாக இருக்கும்; அவ்வளவுதான். ஆனால், இன்று அறிவியல், நீரின் பண்பு மாறுகிறது என்பதை ஒப்புக் கொள்கிறது. அது எப்படி என்று தெரியாவிட்டாலும், பண்பு மாற்றம் ஏற்படவே செய்கிறது. பல்லாயிரம் முறை அப்படியே செய்து கொண்டு வந்தால், மிகச் சிறந்த தூய நீர் கிடைக்கவே செய்யும். உங்கள் உடலின் 70 சதவீதம் பகுதி தண்ணீர்தான் என்பது உங்களுக்குத் தெரியுமா? கடல் நீரின் ரசாயனக் கலவையும் அப்படித்தான்.

சரியான அளவு உப்பைச் சாப்பிடவில்லையானால், உடலின் உப்பு அளவு குறைந்து போய்விடும். கடல் நீரில் உள்ள அளவை விடக் குறைந்துவிடும்.
உடலின் உப்பு அளவு குறையும்போது உங்கள் பிரக்ஞையிலும் மாற்றம் ஏற்படும். ஆயிரம் மடங்கு சுத்திகரிக்கப்பட்ட நீரை அருந்தினாலும் உங்கள் விருப்பங்கள் மனப்போக்குகளில் மாற்றம் ஏற்படும். ரசவாதிகள் இன்னொரு வகையான சோதனையை மேற்கொண்டு வருகிறார்கள். தண்ணீரை லட்சக்கணக்கான முறை தூய்மைப் படுத்த வேண்டுமானால் பல ஆண்டுகள் பிடிக்கும். அதனால், ஒவ்வொரு நாளும் அதைச் செய்ய ஆரம்பித்தார்கள். அதாவது, ஒரு நாள் கொதிக்க வைப்பது; மறுநாள் குளிர வைப்பது. இது இரு வகையான மாற்றங்களை ஏற்படுத்தும். ஒரே வகையாகச் செய்து கொண்டிருந்தால் சலித்துப் போய்விடும், சில நாட்களிலேயே.

அதனால் அவர் தம் சோதனையை நிறுத்தி விட்டுப் பழைய மனநிலைக்குத் திரும்பிவிடுவார். அந்த வேளையில் அவரது சலிப்பே ஒரு திருப்புமுனையாகி விடும். அந்தச் சலிப்பே புதிய பிரக்ஞையாகப் பிறப்பெடுத்து விடும். நாள்தோறும் இரவு பத்து மணிக்குப் படுக்கப் போய்க் கொண்டிருந்தால், பிறகு அந்த நேரம் வந்ததும் உறக்கம் கண்களைச் சுழற்றும். அப்போது தூங்கப்போகாமல் விழித்திருக்க முயன்றால், அரைமணி நேரம் கழித்து அதிகமாக உறக்கம் வரும் என்றுதான் நினைப்போம். ஆனால், அப்படி நிகழ்வதில்லை! உறக்கம் சுத்தமாகக் கலைந்து போய், காலையில் காணப்பட்டதை விட அதிக விழிப்புணர்வு ஏற்பட்டு விடுகிறது! அந்தப் பத்து மணி ஒரு திருப்பு முனையாக மாறி விடுகிறது. அந்த நேரம் வழக்கமாகத் தூங்கும் நேரம். அதைப் புறக்கணித்தால், உடலின் வழக்கமான இயக்கமுறை, ஒழுங்கு பாதிக்கப்பட்டு விடுகிறது. நாம் விழித்திருக்க வேண்டும் என்பதை உடல் புரிந்து கொண்டு விடுகிறது.

அதனால், அது, தான் சேமித்து வைத்திருக்கும் அணையிலிருந்து, உற்சாக வெள்ளத்தைத் திறந்து விட்டு விடுகிறது. அப்புறம் உறக்கம் எப்படி நிற்கும்?
உற்சாகம்தானே நிலைக்கும்! ஆயிரம் மடங்கு நீரைத் தூய்மைப் படுத்தியவர் சலித்துப் போவார். அவரது குரு தொடர்ந்து செய்யச் சொல்லலாம். இன்னும் பத்துப் பதினைந்து ஆண்டுகள் செய்யச் சொல்லலாம்! சகிக்க முடியாத ஒரு கட்டம் வரும். இனி ஒரு முறை செய்தால், செத்தே விடுவோம் என்ற நிலை! ஆனால், குரு தொடர வற்புறுத்துகிறார்! அதனால், ஒரு பக்கம் நீரின் தரம் கூடுகிறது. மறுபக்கம் அவரது மனோபாவம் மெதுவாக மாற்றம் அடைந்து விடுகிறது. அப்புறம் அந்தச் சிறப்பான தூயநீர், பயன்படுத்துகிறவர் பிரக்ஞையையும் மாற்றி விடுகிறது. அது கங்கை நீரைப்போல! மற்ற உலக ஆற்று நீர்களை விட வேறு சில தனிப்பட்ட அம்சங்கள் கங்கை ஆற்று நீருக்கு ஏன் இருக்கிறது என்பதை விஞ்ஞானிகளால் இதுவரை கண்டிபிடிக்க முடியவில்லை.

நன்றி: கண்ணதாசன் பதிப்பகம், சென்னை - 600 017  

ஆன்மிக அலமாரி



துர்க்கைக்கு பதில் சூலம்

கிழக்கு முகமாக அமைந்துள்ள துர்க்கையின் கோயில், புத்தியையும் ஜயத்தையும் கொடுக்கும். மேற்கு முகமாக அமைந்த கோயில் முக்தியை அருளக் கூடியது. சிவன் பிரதானமாக உள்ள கோயிலில் துர்க்கையின் சந்நதி தென்மேற்கு முகமாக இருக்க வேண்டும் என்று தீப்தி ஆகமமும் வீராகமமும் கூறுகின்றன. காரணாகமம் தெற்கு முகமாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது. வடக்கு முகமாக இருக்க வேண்டும் என்று ரௌரவ ஆகமத்தில் கூறியுள்ளது. விஷ்ணு கோயிலில் உள்ள துர்க்கை சந்நதி கிழக்கு வாயிலில் வடக்கு முகமாக இருக்க வேண்டும் என்று மரீசி சம்ஹிதையில் சொல்லியுள்ளது.
ப்ருஹு சம்ஹிதை, துர்க்கையை வைஷ்ணவி மாயா, யோக நித்ரா, பிக்ரிதி, த்ரயி மாயீ (மூன்று வேதங்களின் வடிவம்) என்று சொல்கிறது.

கர்நாடகா கொல்லூரில் மூகாம்பிகையாக, லட்சுமி, சரஸ்வதி, காளியின் கலப்புரவாக இருக்கிறாள். 3 அடி உயர வெண்கல வடிவில் லலிதாசனத்தில் அமர்ந்துள்ளாள். சிலர் துர்க்கைக்கு பதில் சூலம், திரிசூலத்தையே வைத்து வழிபடுபவர். கர்நாடகா, புத்தூர் அருகில் உள்ள பலப்பா என்ற ஊரிலுள்ள திரிசூலி கோயிலில் இவ்வாறு செய்கிறார்கள். கர்நாடகா, கேரளாவில் அநேக கோயில்களில் லிங்க வடிவில் துர்க்கையை வழிபடுகிறார்கள். (சாக்த சாகரம் (சக்தி மாகடல்). யோகிநி நிர்மலாம்பா சரஸ்வதி, பக்: 240, ரூ. 120/- ஸ்ரீ ஆரோமிரா பிரசுரம், 1, ஏரப்பக் கவுண்டர் சந்து, நடுவீதி, தம்மம்பட்டி - 636 113. சேலம். செல்: 99432 77955, 94864 98452.)

தவ வேடம் பூண்டவனின் தகாத செயல்

விளக்கம்: தவ வேடத்தால் தன்னை மறைத்துக் கொண்டு தவத்திற்கும் பொருந்தாத செயல்களைச் செய்தல் என்பது வேடன் புதரின் கண்ணே மறைந்து நின்று பறவைகளைப் பிடித்தாற் போன்றதாகும். திருக்குறள்: தவம் மறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து வேட்டுவன் புள் சிமிழ்த்தற்று. (குறள் எண். 274) பாடல் விளக்கம்: கம்ப ராமாயணத்தில் அகலிகை சாபம் பெற்ற இக்கதை இப்பாடலில் குறிக்கப்படுகிறது. அழகும் மௌனமும் பொருந்தியவள் அகலிகை. இவள் கௌதம முனிவரின் மனைவி. இப்பேரழகி மேல் நீண்ட நாட்களாக தேவர் கோனாகிய இந்திரன் மோகங்கொண்டிருந்தான். ஒருநாள் இரவு பதினைந்து நாழியாகும்போது இந்திரன் சேவல்போல் கூவினான். பொழுது விடிந்துவிட்டது எனக் கருதி கௌதம முனிவன் கங்கைக்கு நீராடச் சென்று விட்டான்.

அவன் சென்ற பிறகு சேவலாக இருந்த இந்திரன் அகலிகை பக்கத்தில் படுத்து விடுகிறான். சிறிது நேரம் கழித்து நீராடிவிட்டு கௌதம முனிவன் வந்து விடுகிறார். அதைக் கண்ட இந்திரன் எழுந்து சென்று விட்டான். பிறகு அகலிகை அச்சத்துடன் எழுந்து பதறுகிறாள். கௌதம முனிவன் ஆத்திரம் கொண்டு அவளை சபித்து கல்லாக்கினான். கூடா ஒழுக்கம் இதனால் பெறப்படுகிறது. தவ வேடம் பூண்டு தகாத செயல் செய்தது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
(குறளிசைக் காவியம் (அறத்துப்பால்) வள்ளுவர் கண்ட துறவறம்-மெல்லிசைப் பாடல்கள். கடம்பூர் புலவர் கோ.சுவாமிநாதன், பக்: 240, ரூ. 80/-,
முத்தமிழ்ப் பதிப்பகம், கடம்பூர் சித்தமல்லி அஞ்சல், நீடாமங்கலம் (வழி) - 614 404 திருவாரூர் மாவட்டம். தொலைபேசி: 04367-260749.)

அக்னியும் முருகனின் தந்தையே

மயில் வாகன முருகனிடம் பாம்பைக் காண்பது அதிசயம் அல்ல. காலில் மட்டும் அல்லாது, சில தலங்களில் மயிலின் வாயிலும் சிறிய பாம்பை காணலாம். பாம்பு மகுடி ஊத, படமெடுத்து ஆடும். அதாவது அது நாதத்தில் மயங்கும். நமது குண்டலினியும் நாத உபாஸனையில் வலியுறும், ஊடுருவிச் செல்லும். அக்னிக்கு வாகனம் ஆடு. முருகனுக்கும் வாகனம் ஆடு. சுப்ரமண்ய கோயில் ப்ரம்மோத்ஸவங்களில் ஒருநாள் ஆட்டு வாகனம் உண்டு. சிவஞான ஜ்யோதியை அக்னி ஏந்தி, (வாயுவுடன்) கங்கையில் சரவணத்தில் இட்டதால், முருகனின் தந்தை அக்னியும்தான். அவரது 16 முக்ய நாமங்களில் 3வது அக்னிபூ என்பது அக்னி! ஷண்மதத்தில் இல்லை என்றாலும் எந்த உருவ வழிபாட்டில் ஹோமம் உள்ளதோ, அதில் மந்திரங்கள் சொல்லி, பீஜாக்ஷரங்கள் சொல்லி அக்னியில்தான் விடுகிறோம். அக்னி ஹவிஸ்ஸாக உரிய தெய்வத்திடம் சேர்க்கிறது. ஆர்ய ஸமாஜத்தவருக்கு அக்னி வழிபாடே.

காஞ்சி காமாக்ஷி கோயிலில் ஒரு பணியாளன். அவன் ஒரு ஊமை அல்லது மூகன். கொடுத்த பணிகளை அன்புடன் செவ்வனே செய்பவன். கோயில் பிரசாதம்தான் அவனுக்கு உணவு. தங்கும் இடமும் கோயிலே. தேவி அவனுக்கு க்ருபை செய்ய எண்ணினாள் போலும். ஒருநாள் காலை அவன் எழுந்ததும் ஒரு தீர்க்கசுமங்கலி தோன்றினாள். வாயைத்திற என்று கூறினாள். அவனும் வாயைத் திறக்க, தனது தாம்பூல மிகுதி எச்சிலைத் துப்பி, சாப்பிடு என்றாள். ஒன்றும் புரியாமல் தேவி ஆணை என்று சாப்பிட்டான். உடனே ‘மூக பஞ்சதசி’ என்று காமாக்ஷி தேவி மேல் 500 துதிகள் பாடினான். காமாக்ஷி தேவி தரிசனம் ஈந்தாள். (அருணகிரிநாதர் அருளிய கந்தர் அந்தாதி. மும்பை ராமகிருஷ்ணன், பக்: 544, ரூ. 290/- எல்கேஎம் பப்ளிகேஷன், 33/4 (15/4), ராமநாதன் தெரு, தி.நகர், சென்னை-17 தொலைபேசி: 24361141, 24340599.)

சாதுர்மாஸ்ய விரதம்

மழைக்காலத்தில் சந்நியாசிகள் நான்கு மாத காலம் ஒரே இடத்தில் தங்கியிருக்க வேண்டும். அப்பொழுது யாத்திரை செய்யக் கூடாது. மற்ற காலங்களில் யாத்திரை செய்ய வேண்டும் எனத் தர்ம சாஸ்திரம் சொல்லுகிறது. சந்நியாசிகளுக்கு அகிம்சைதான் முக்கியமான தர்மம். மழைக்காலத்தில் ஏராளமான புழு, பூச்சி, நத்தை முதலியவை உண்டாகி நடக்கும் வழியில் இருக்கும். அச்சமயம் சந்நியாசிகள் நடந்து சென்றால் அச்சிறு உயிரினங்கள் இவர்களின் காலில் பட்டு இறந்துபோகும். தன்னையறியாமலேயே இவர்களுக்கு அவற்றைக் கொன்ற தோஷம் ஏற்பட்டுவிடும். இது நேராமலிருப்பதற்காகத்தான் மழைக்காலத்தில்
சந்நியாசிகள் யாத்திரை செய்யக்கூடாது என சாஸ்திரம் சொல்கிறது.

இந்த வியாச பூஜைக்கு சாதுர்மாஸ்ய விரதம் (Chaturmasya Vrata) என்றும் பெயர் உண்டு. ஆஷாட பூர்ணிமையன்று வியாச பூஜை செய்து சாதுர்மாஸ்ய விரதசங்கல்பம் செய்துகொண்டு ஏறக்குறைய இரண்டு மாதங்கள் மட்டுமே ஒரே இடத்தில் தங்கியிருந்து பாத்ரபத பூர்ணிமையன்று விரதம் பூர்த்தி செய்யப்படும். சாதுர்மாஸ்ய விரத வியாச பூஜையானது மூன்று பிரிவாக ஆச்சார்ய குரு பரம்பரையைப் பிரித்துச் செய்யப்படும். கிருஷ்ணப் பஞ்சகத்திற்கு, அதாவது பகவான் கிருஷ்ண பரமாத்மா, அவரைச் சுற்றியிருக்கும் நான்கு ஸனதகுமாரர்கள் உருவங்களுக்குப் பூஜை. இரண்டாவதாக வியாச பஞ்சகத்திற்கு அதாவது பகவான் வேதவியாசர் நடுவிலும் அவரைச்சுற்றி இருக்கும் அவருடைய சீடர்களான ஸுமந்த, ஜைமினி, வைசம்பாயனர், பைலர் ஆகிய மகரிஷிகளுக்கும் பூஜை.
மூன்றாவதாக சங்கர பஞ்சகத்திற்கு அதாவது ஆதிசங்கரர் நடுவிலும் அவரைச் சுற்றி இருக்கும் அவருடைய நான்கு முக்கிய சீடர்களான சுரேஸ்வரர், பத்மபாதர், தோடகர், ஹஸ்தாமலகர் ஆகியோருக்குப் பூஜை. அதன்பின்பு குருபரம்பரா ஸ்தோத்திரம் சொல்லி சிருங்கேரி பீடத்தில் இதுவரை இருந்த அனைத்து ஆச்சார்ய ஸ்வாமிகளுக்கும் சிறப்பு அர்ச்சனை செய்யப்படும். (சிருங்கேரி மடம் ஓர் ஆய்வு. முனைவர் இரா.இராஜேஸ்வரன், பக்: 188, ரூ.90/- அம்மன் தரிசனம் பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், 11, வெங்கட்நாராயணா ரோடு, தியாகராய நகர், சென்னை-600 017.)

தெற்கு திசையில் ஏன் பாரம் மிக வேண்டும்?



இதுவரை அவரவர் வீடு எந்த திசையில் இருக்கிறது, அதனால் சாதகம் என்ன, பாதகம் என்ன என்பதைப் பற்றியெல்லாம் பார்த்தோம். குறிப்பிட்ட திசை அல்லாமல் இரு திசைகளின் கூட்டாக பல மனைகள் அமைந்துள்ளன. அவை முறையே வடகிழக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு மற்றும் வடமேற்காகும். இவை உரிய திசையை நோக்காமல் அருகிலுள்ள திசையுடன் சேர்ந்து, திசையிலிருந்து நழுவி அமையும். இப்படியிருக்கும்போது சூரிய திசைக்கு ஏற்ப கட்டிடம் கட்ட இயலாது. எனவே, பலன்கள் சற்று மாறுபடும். எனினும் மனைக்கு ஏற்றவாறே மூல மட்டத்திற்கு சரியாக (90 டிகிரியில்) அமைத்தோமேயானால் பலன்கள் சிறப்பாகவே இருக்கும். இவற்றை சிறந்த வாஸ்து நிபுணர்களால் மட்டுமே அறிந்து, தன்மையை கூறமுடியும். வீணாக குழம்ப வேண்டாம்.

எனவே, கூட்டு திசைகளை ஆராய்வதை இத்துடன் விடுத்து, இனி கட்டிட அமைப்புகள் எந்தெந்த திசைக்கு எப்படி அமைய வேண்டும் என்பதை பார்ப்போம்.
வாஸ்துவை மிக ரத்தின சுருக்கமாக கூறிவிட முடியும். ‘வடக்கு/கிழக்கு திசைகள் பாரத்தை தாங்க முடியாது’ ‘தெற்கு/மேற்கு திசைகள் பாரத்தை தாங்கக் கூடியவை’ சுவர், கதவு, ஜன்னல், சமையலறை, லாப்ட், கிணறு, குழி, மேல்நிலைத் தொட்டி இப்படி எதுவாகினும் மேற்கண்ட இரண்டு வரிகளை ஞாபகத்தில் இருத்திக் கொண்டால், எளிமையாக வீட்டமைப்பை உருவாக்க முடியும். மரம், செடி, ஆண்டனா ஆகியவை எந்த திசையில் அமைய வேண்டும்? துணியை எங்கே உலர வைப்பது? மோட்டாரை எங்கே நிறுவுவது?

மின்சாதனங்களை எங்கே பொருத்துவது, வாகனத்தை எப்படி நிறுத்துவது, உணவை எப்படி பரிமாறுவது? போன்ற சின்ன சின்ன விவரங்களைகூட கவனத்தில் கொண்டு செயலாற்றும்போது கூடுதல் பலன்கள் பெற்று வெற்றிக்கொடி நாட்டிட முடியும். சில அடிப்படை வாஸ்து விவரங்களை தெரிந்து கொண்டுவிட்டால் அதற்குப் பிறகு, கட்டிட அமைப்பை உருவாக்கும்போது மிகவும் விறுவிறுப்பாகவும், ஆவல் மிகுத்தும் இருக்கும். பெரும்பாலான வீடுகளில்/ கட்டிடங்களில் கீழ்நிலை/மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டி இரண்டாக பிரிக்கப்படுவதில்லை. பிரிக்கப்படாமல் இருப்பது தவறு. கண்டிப்பாக 2 அல்லது 3 அறையாக தொட்டிகள் பிரிக்கப்பட வேண்டும். காரண காரியத்துடன் விளக்குவோம்.

நம் ஜீனில் ‘மைட்டோ காண்டியா’ என்பது, பல சுழல் தடுப்புகளால் (Spiral) ஆக்கப்பட்டுள்ளதால்தான் நிறைய குண, வேறுபாடு, ஒற்றுமைகளை ஜீன்கள் உள்ளடக்கி வைக்க முடிகிறது. எரிபொருள் ஏற்றிச் செல்லும் லாரிகளை பார்த்தால் இது புரியும். எரிபொருள் கொள்கலன் 2 அல்லது 3 தடுப்புகளால் தடுக்கப்பட்டிருக்கும். இல்லையெனில் விபரீதம் ஏற்படும். வாஸ்து தத்துவத்தை நீங்கள் நேரிடையாக பார்க்க வேண்டுமெனில் உங்கள் ஊரில் மற்றும் பகுதியில் தெற்கு-மேற்கு சாலைகள் இணையும் இடத்திலுள்ள தென்மேற்கு மனையை பார்த்தாலேயே இது புரியும். இம்மனைகள் உரிய பொலிவுடன் இல்லாமல் பாழடைந்தும், உபயோகமின்றியும், செயல்படாமலும் காட்சியளிக்கும். ஏன் இப்படி? தெற்கு-மேற்கில் காலியாக பாரமின்றி சாலைகளாக இருப்பதும் மனைக்கு கிழக்கு, வடக்கு அழுத்தப்பட்டு பாரமாக இருப்பதுவே காரணமாகும்.

வடகிழக்கு நீர்நிலை எதற்கு? இங்கே குழி தோண்டும் போது வடகிழக்கு பாரம் குறைகிறது. எனவே சிறப்பு பலன்கள் உண்டு என்பதால் அப்படி செய்கிறோம்.
புராதான கோயில்கள் சிறப்பாக இன்னும் அருள் வழங்கி வர காரணம் மேற்கண்டவாறு குளங்கள் இடம் பெற்றும், தெற்கு - மேற்கு போக்குவரத்து குறைந்து வடக்கு - கிழக்கு முழு போக்குவரத்துடன் இருப்பதே காரணமாகும். உதாரணங்களாக கயிலாயம், திருமலை, தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், சிதம்பரம் நடராஜர் கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில் என்று கூறிக்கொண்டே செல்லலாம். நீண்ட பாரம்பர்யம் உடைய இவை மக்களை ஈர்ப்பதுபோல, நாமும் பல்லோராலும் மதிக்கப் பெற்று புகழ் செல்வாக்குடன் விளங்க முடியும்.

சுற்றுச் சுவரின் முக்கியத்துவம் என்ன? ஏன் கோயில்களில் 1 முதல் 7 பிராகாரங்கள் வரை உள்ளன? அதன் பலன்கள்தான் என்ன? சற்றே சிந்திப்போம்.
ஈராக்கிற்கு தென்மேற்கே உள்ள பகுதியை சேர்த்து சொந்தம் கொண்டாடியதால் அதிபர் சதாம் ஹுசேன் பதவியிழந்து, வாழ்க்கையும் முடிந்து போனதை யோசித்தால் இந்த விவரம் இன்னும் தெளிவாகப் புரியும். தெற்கு - மேற்கில் கடல், வடக்கு - கிழக்கே மலை சார்ந்த பகுதிகள் கொண்ட ரஷ்யா உடைந்து சின்னாபின்னமாகி விட்டதே, இதுவும் இன்னொரு உதாரணம். இங்கே டார்வினிஸத்தை பயன்படுத்தலாமே! Survival of the fittest - வாழ தகுதி படைத்தவை மட்டுமே எஞ்சி வாழ முடியும். ஆக நாமும் வாழ வேண்டுமெனில் தகவமைப்புடன் இருக்கத்தான் வேண்டும்.

புவி என்ற ஸ்தானத்தையும் இதை ஒட்டியுள்ள கிரகங்கள், புவி மையம் ஏனையவற்றுடன் இணைந்து வாழ்ந்தால் நாம் ஜீவித்திருப்போம். இல்லையெனில் நாம் டைனோசர்கள் வழியை பின்பற்றி மறைந்து விடுவோம். எப்படி புவியை தகவமைப்பு செய்வது என்பதே வாஸ்து விஞ்ஞானம். அதன் உட்பொருளை இனி அங்குலம் அங்குலமாக ஆராய்வோம்.

இதிலுள்ள விஞ்ஞான உண்மைகள்:

1. சூரியனை ஆதாரமாக கொண்டு ஆகாயத்துடன், ஒளிப்பிழம்பான நெருப்பு, நீரால் சூழப்பட்டு, மண்ணால் ஆக்கப்பட்ட காற்று மண்டலத்தால் சூழப்பட்ட பூமியை தன் வயப்படுத்துவதுடன்,
2. மேற்கிலிருந்து கிழக்காக சுற்றுவது,
3. 23.5 வடகிழக்காய் சாய்ந்திருப்பது,
4. புவியீர்ப்பு/ காந்த சக்தியை
உள்ளடக்கியிருப்பது,
5. உயிர்களை தோற்றுவிக்கும் அளவிற்கு தன்னை பக்குவப்படுத்திக் கொள்வது என்ற அமைப்புகளைக் கொண்டதுதான் பூமி என்ற கோளம். இவ்வாறு பஞ்சபூதங்களையும் உள்ளடக்கிய உலக உருண்டையில் வாஸ்து விஞ்ஞானம் தனிச் சிறப்பு கொண்டு விளங்குகிறது. அதை இன்னும் விரிவாக, நம் வாழ்க்கையை ஒட்டிப் பார்ப்போம். 

வெள்ளத்தை எதிர்த்து வந்த பிரபந்தங்கள்


திருமழிசை ஆழ்வாரின் திருப்பாதம் பற்றி நடந்த கணிகண்ணன் என்பவனுடைய விஷயத்தில் நாம் தெரிந்து கொள்வது என்ன? ஒரு சிஷ்யனுக்காக, பகவானுக்கே ஆணையிடும் சமர்த்தர்கள்தான், நம் உத்தம குருமார்கள். பைந்நாகப் பாயை சுருட்டிக் கொள் என்றும், விரித்து விடு என்றும் திருமழிசை ஆழ்வார் போன்ற ஆழ்வார்களைத் தவிர வேறு யார் கூற முடியும்? அப்படித்தான் ஒரு சமயம் துர்வாச மகரிஷியிடம் பகவான், ‘‘நான் என் பக்தர்கள், பாகவதர்களுக்கு அடிமை’’ என்கிறான். ஒட்டுமொத்தமாக இதன்மூலம், நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவெனில் கோயிலில் உள்ள எம்பெருமானிடம் பக்தி சிரத்தையோடு அணுகினால், அவன் நம்முடன் கலந்துரையாடி நம்மை வாழ வைப்பான், நாம் ஆட்டுவிக்கும்படியெல்லாம் கூட ஆடுவான் என்பதேயாகும்.

மேலும் திருமழிசையாழ்வார், கச்சியிலிருந்து புறப்பட்டு திருக்குடந்தை எனும் கும்பகோணத்திற்கு செல்ல விழைந்தார். ஆதியில் கடகோணம் என்றும் அழைப்பர். கும்ப கடம் உடைந்த ஊரல்லவா அது! அப்படிச் செல்லும்போது வழியில் பெரும்புலியூர் என்ற கிராமத்தில் ஒரு அந்தணரின் வீட்டுத் திண்ணையில் ஓய்வெடுத்தார். அந்த வீட்டில் சிலர் வேதம் ஓதிக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்கள் திருமழிசையார் வந்து வாசல் திண்ணையில் உட்கார்ந்த உடனேயே வேதம் ஓதுவதை நிறுத்தி விட்டனர். இந்த மகாயோகீஸ்வரரின் பெருமையை அறியாமல், மற்ற சாதிக்காரர்களின் காதில் வேத சப்தங்கள் விழக் கூடாது என்று நினைத்து வேதத்தை ஓதாமல் நிறுத்தி விட்டனர்.

இவர்களின் மனப்போக்கை அறிந்த ஆழ்வார் வேறொருவர் வீட்டுத் திண்ணையில் சென்று அமர்ந்தார். மீண்டும் வேதம் ஓதுதலை தொடங்க முற்பட அந்த அந்தணர்களுக்கு வேதம் மறந்து போயிற்று. இதைக் கண்ட ஆழ்வார் அங்கிருந்தபடியே ஒரு கருப்பு நெல்லை நகத்தால் கிள்ளி குறிப்பால் உணர்த்தினார். அதாவது வேதத்தில் ‘கிருஷ்ணானாம் வ்ரீஹீனாம் நக நிர்பின்னம்’ என்ற வாக்கியத்தை சொல்ல மறந்த அந்தணர்களுக்கு நினைவூட்டினார். இதற்கு என்ன பொருள் எனில், கிருஷ்ணம் என்றால் கருப்பு நிறம், வ்ரீஹீ என்றால் நெல். நிர்பின்னம் என்றால் கிள்ளிப் போடுதல் என்பதாகும். இந்த வரியை அவ்வளவு அழகாக நெல்லை கிள்ளி காட்டினார். அதன் பிறகு வேதம் ஓதுதலைத் தொடங்கி சீக்கிரமே முடித்துக்கொண்டு திருமழிசையாரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டனர். அதோடு நில்லாமல் அவரை பலவாறு உபசரிக்கவும் செய்தனர்.

அச்சமயத்தில் அந்த ஊர் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் எந்த வீதியில் இந்த ஆழ்வார் சஞ்சரிக்கிறாரோ அந்த முகமாகத் திரும்பியருளினான். இந்த ஆச்சரியத்தை அர்ச்சகர் மூலமாக அறிந்த அவ்வூரார் அனைவரும் திகைத்துப் போயினர். அவ்வூரில் யாகம் செய்து கொண்டிருந்த பெரும்புலியூர் அடிகளிடம் சென்று ஆழ்வாருடைய பெருமையைக் கூற, அதுகேட்ட தீட்சி தரும் பேரானந்தம் கொண்டு ஆழ்வாரை எதிர்கொண்டழைத்தார். ஆழ்வாருக்கு அக்ர பூஜையையும் செய்தனர். அக்ர பூஜையென்றால் ஒரு நல்ல காரியத்தை ஆரம்பிக்குமுன் செய்யும் ஒரு பூஜை.

ராஜஸூய யாகத்தில் தர்ம புத்திரர் கிருஷ்ண பரமாத்மாவுக்கு செய்த அக்ர பூஜையும் அப்படியே ஆகும். அங்கு அக்ர பூஜையை சிசுபாலன் பழித்தது போல, இவருடைய அக்ர பூஜையையும் அத்வர்யு எனும் பிரிவினர், ஆழ்வாரின் குலத்தைப் பழித்துப் பேசினர். அதைக் கண்ட தீட்சிதர் மிகவும் வருந்தினார். இந்த தீட்சிதருக்காக நம் பெருமையைக் காட்டியே தீர வேண்டும் என்று அனந்த சயனனைக் குறித்து பாசுரம் சாதித்து விட்டுச் சென்றார். பிறகு, இத்தலத்திலிருந்து திருக்குடந்தை சென்று, தாம் செய்த நூற்றுக்கணக்கான பிரபந்தங்களை திருக்காவேரி வெள்ளத்திலே விட்டார். மற்ற பிரபந்தங்களெல்லாம் வெள்ளத்தோடு சென்ற போது, ‘நான்முகன் திருவந்தாதி’ மற்றும் ‘திருச்சந்தவிருத்தம்’ என்னும் இரு திவ்ய பிரபந்தங்கள் மட்டும் நீரின் பிரபாவாகத்தை எதிர்த்து வந்து ஆழ்வாரின் திருவடிகளை அடைந்தன.

உலகம் உயர்வதற்கு அவ்விரு திவ்யப் பிரபந்தங்களே போதும். மோட்சத்தில் ஆசை உள்ளவர்களுக்கு இவ்விரு பிரபந்தங்கள் நிச்சயம் உதவும் என்று அருளினார்.
திருக்குடந்தையில் அரவணை மேல் பள்ளி கொண்டிருக்கும் ஆராவமுதனுடைய ஏரார் கோலத்தையும் கண்டு, ‘காவிரிக்கரைக் குடந்தையுள் கிடந்தவாறு எழுந்திருந்து பேசு,’ என்று விண்ணப்பிக்க, எம்பெருமானும், ‘ஆழ்வீர் சௌக்யமா?’ என வினவினார். பகவானின் அந்த நீர்மைக்கு தோற்றுப்போய் ‘வாழி கேசனே’ என்று மங்களாசாசனம் செய்தார். எம்பெருமானும் கிடந்தவாறு எழுந்திருக்க முற்பட அங்கு உத்தான சாயியாக திருக்கோலச் சேவை சாதித்தருளினான். அந்த எம்பெருமானுடைய திருமேனியையே தியானம் செய்துகொண்டு பல வருஷங்கள் யோகத்தில் எழுந்தருளியிருந்து, அந்த திவ்ய தேசத்திலிருந்தே திருநாட்டிற்கு எழுந்தருளினார்.

திருக்குடந்தையில் ஆராவமுதன் அர்ச்சா ரூபியாக இருந்து கொண்டு, அமுது செய்த பிரசாதத்தை அமுது செய்வது எனும் நியமத்தை மேற்கொள்வதன் மூலம் தனது பக்தர்களுக்கு அடிமையென்பதை காட்டியருளினான். அதனாலேயே திருமழிசையாழ்வாருக்கு, திருமழிசைப் பிரான் என்றும், பகவானான ஆராவமுதனுக்கு ஆராவமுதாழ்வான் என்றும் திருநாமங்கள் ஏற்பட்டன. அதாவது ஆழ்வார் பெருமாளாக ஆனார். பெருமாள் ஆழ்வாராக மாறினார்! பக்தர்களுக்காக பகவான் என்ன தான் செய்ய மாட்டான்... நினைக்கும்தோறும் நெஞ்சு நீர்ப்பண்டமாக மாறும். இவருடைய பிரபந்தங்கள் இரண்டிலுமே பகவானின் பரதத்துவத்தை உணர்த்தும்படியே பாடியிருக்கிறார்.

யார் பரப் பிரம்மம் என்று வேதத்தில் சொன்னதை, தமிழ் மறையிலே அறுதியிட்டு கூறியிருக்கிறார். இதனாலேயே இந்த ஆழ்வாருக்கு உறையிலிடாதவர் என்ற திருநாமமும் உண்டு. இதை அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் என்பார். ‘ஆசார்ய ஹ்ருதயம்’ என்ற தம் நூலில் இவ்வாறு திருநாமம் சாற்றி புகழ்ந்தார்.
அடுத்து, குலசேகர ஆழ்வாரின் வைபவத்தை பார்ப்போம். இந்த ஆழ்வார், கேரள தேசத்தில் திருவஞ்சிக்களம் எனும் தலைநகரில், கலியுகம் பிறந்து 27 வருடங்கள் கழித்து பராபவ வருடம், மாசி மாதம், புனர்பூசம் நட்சத்திரத்தில், பகவானின் திருமார்பில் உள்ள கௌஸ்துபம் என்ற ஆபரணத்தின் அம்சமாக, சேர நாட்டு அரச பரம்பரையில் அவதரித்தார். இவரைப் பற்றிய ஸ்லோகம் ஒன்று உண்டு:

‘கும்பே புனர்வவெலி காதம் கேரளே
சோளபந்தனே
கௌஸ்துபாம்சாம் தராதீசம் குலசேகரமாச்ரயே!’

சேர நாட்டில், கொல்லி நகரில் த்ருடவ்ரதன் என்ற அரசனுக்கும் ராதநாயகியம்மாள் என்கிற ராணிக்கும் புத்திரராக, புத்ர காமேஷ்டி யாகத்தின் பலனாக, ராமபிரான் அவதரித்தது போலவே இவ்வாழ்வாரும் தோன்றினார். ராமனும் புனர்பூசத்தில் அவதரித்தார். இவருக்கும் புனர்பூச நட்சத்திரமே. அதனால் இவ்வாழ்வார் ராமனைப் போலவே உண்மையையே விரதமாகக் கொண்டு வாழ்ந்தார். எப்பேர்ப்பட்ட துக்கத்திலும் பொய் விளம்பாதவர். மறை ஓதுதல், குதிரையேற்றம், வில்வித்தை ஆகியவற்றை அனாயாசமாகக் கற்றுத் தேர்ந்தார். ஞான தத்துவ ஆராய்ச்சி செய்யும் மகானாகவும் விளங்கினார். சகல சாஸ்திர நூல்களையும் நன்கு கற்றுணர்ந்தார். ராமபிரானிடத்தில் அதிக பக்தியுடனே வாழ்ந்து வந்தார். இப்படி மைந்தனது சிறப்பைக் கண்ட த்ருட வ்ரதன் உடனேயே இவ்வாழ்வாருக்கு இளவரசராக முடி சூட்டினார்.

இதற்குப் பிறகு க்ஷத்ரிய தர்மத்தில் இருந்து கொண்டு நால்வகைப் படைகளான தேர்ப் படை, யானைப் படை, குதிரைப் படை, காலாட் படை என்று திரட்டிச் சென்று, சோழர், பாண்டியர் முதலிய அரசர்கள் அனைவரையும் வென்று வசப்படுத்தினார். மூன்றுக்கும் தலைவனானதால் கொல்லிக் காவலன், கூடல் நாயகன், கோழிக்கோன் குலசேகரன் என்ற விருதுகளைப் பெற்று மூன்றையும் ஆண்டான். அரச குமாரனுடைய தகுதியைக் கண்டு களிப்புற்ற தந்தை த்ருடவ்ரதன், குலசேகரருக்கு ராஜ்ய பட்டாபிஷேகம் செய்து, க்ஷத்ரிய முறைப்படி வனம் புகுந்து வானப்ரஸ்த்தம் ஏகினார். ரகு வம்சத்து ராஜாக்கள் அனைவருமே இப்படித்தான் இருப்பர் என காளிதாச மகாகவியும் தன் காவ்யமான ரகு வம்சத்தில் தெரிவிக்கிறார்.

இப்படி தந்தையின் பிரிவுக்கு ஆற்றாது வருந்தி, மந்திரிகள் தேற்றித் தேறினார். நடுநிலை தவறாமல் ராம ராஜ்யம் என அனைவரும் போற்றும்படி ஒப்பற்ற முறையில் அரசாண்டு, அரச குலக் குமாரியான கல்யாணியை மணந்தார். தன் தந்தையின் பெயரைக் கொண்ட த்ருடவ்ரதன் என்கிற ஒரு புத்திரனையும் நீளாதேவியின் அம்சமாய், இளை என்றும் ‘சேரகுலவல்லி’ என்றும் பெயர் பெற்ற ஒரு புத்திரியையும் ஈன்றெடுத்து சிறப்பாக ராஜ்யபாரம் செலுத்தி வந்தார். இம்மை, மறுமை, மோட்சம் என்னும் மும்மை இன்பங்களை தரவல்லவனாய், முதலும் முடிவுமற்ற முழுமுதற் கடவுள் யார் என்று விசாரம் செய்யத் தொடங்கினார். பல பண்டிதர்களோடு, ஸ்ருதி, ஸ்ம்ருதி, இதிகாச புராணங்கள் ஆகியவற்றிலுள்ள பிரமாணங்களை ஆராய்ந்து வருகையில், இதையே காரணமாகக் கொண்ட எம்பெருமான் கமலக் கண்ணனானவன், மயர்வர மதிநலம் அருளினான்.

தனது ஸ்வரூபம், ஏனைய ரூபங்கள், குணங்கள், விபூதிகள் ஆகியவற்றைக் காட்டிக் கொடுத்தான். பகவானுடைய அனந்த கல்யாண குணங்களாகிய பெருங் கடலில் ஆழ்ந்து நெஞ்சுருகி ஈடுபட்ட குல சேகராழ்வார், ராம, கிருஷ்ண அவதாரங்களில் பெரும் பக்தி கொண்டார். மேலும் அர்ச்சாவதாரங்களில், திருவரங்கம், திருமலை, திருக்கண்ணமங்கை, திருச்சித்திர கூடம், திருவித்துவக்கோடு முதலிய திவ்ய தேசத்து எம்பெருமான்களிடத்தில் ஆறாத காதல் கொண்டிருந்தார். ராமாயண காலக்ஷேபத்தையே எப்பொழுதும் பொழுதுபோக்காகப் பெற்றவராக விளங்கினார். வைஷ்ணவ பாகவதர்களை கண்டால் எதிர்கொண்டு அழைத்து உபசரிக்கும் பாகவத நிஷ்டையை உடையவராக, அரச போகங்களில் பற்றற்றவராய் வாழ்ந்து வரலானார்.

அப்படி ஒருநாள் உபந்யாசம் கேட்டு வருகையில், ‘ஆரண்ய காண்டத்தில் மூக்கறுந்த சூர்ப்பணகையால் தூண்டப்பட்ட பதினாலாயிரம் ராட்சசர்கள் ஒருபுறமும் ஒரு துணையுமில்லாத ராமபிரான் ஒரு புறமுமாய் நிற்க, கோரமான போர் நிகழ்ந்தது’ என ராமாயண உபந்யாசம் செய்தவர் சொன்னவுடன் அதிர்ந்து போனார். ராமாயணத்தில் தமக்குள்ள ஈடுபாட்டினால் வெகு காலத்துக்கு முன்பு நடந்த அந்தச் சரித்திரம், அன்றுதான் நடக்கிறதாக நினைத்துக் கொண்டார்.
‘‘இப்படி பெருமாள் பேராபத்திலே சிக்கியிருக்கும்போது, நம்மால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டுமே’’ என்று கருதி, துணிந்து, தனது சேனைகளையெல்லாம் போருக்கு சித்தமாயிருக்கும்படி பணித்தார்.

அதுகண்ட அனைவரும் என்ன செய்வது என்று அறியாமல் திகைத்து நிற்கையில், மிகவும் சமயோசிதத்துடன், ராமாயண காலக்ஷேப பண்டிதர், ‘ராமபிரான் தாம் தனி வீரராக நின்று பதினாலாயிரம் அரக்கர்களையும் அழித்து பர்ண சாலைக்கு மீண்டுவர, அவரை, சீதாப்பிராட்டி களிப்புடன் அணைத்துக் களைப்பாற்றினாள்’ என்று தெரிவித்தார். இதைக் கேட்ட பிறகு குலசேகர ஆழ்வார் தன்னிலை உணர்வார் என்று அவர் எதிர்பார்த்தார். ஆனாலும் நம்பாமல் ஆழ்வார் புறப்படவே, ராமபிரானே நேரில் காட்சி கொடுத்து, நடந்தவற்றைக் கூறி சமாதானப்படுத்த, சேர ராஜனான குலசேகராழ்வார், பேரானந்தம் கொண்டு, சேனையை தடுத்து நிறுத்தி, தம் பிரயாணத்தை கைவிட்டார்; தொடர்ந்து சந்தோஷமாக உபந்யாசத்தைக் கேட்டார். அவருடைய பக்தியை யாரால் வர்ணிக்க இயலும்!