Tuesday, May 27, 2014

பரம(ன்) ரகசியம்-13







குருஜிக்கு பதில் சொல்ல முடியாத கேள்விகளை ரசிக்க முடிந்ததில்லை.  யோசித்ததில் இடையே புகுந்து யாரோ விளையாடுகிறார்கள் என்பது மட்டும் அவருக்குப் புரிந்தது. இதெல்லாம் கடவுளின் லீலை என்றெல்லாம் நம்பும் நிலையை அவர் என்றோ கடந்து விட்டிருந்தார். அவர் கடுமையான குரலில் அவனிடம் சொன்னார். “முதல்ல பயந்து சாகறத நிறுத்து. இது சாமியோட வேலை இல்லை. ஆசாமியோட வேலை. அது எந்த ஆசாமின்னு தான் தெரிஞ்சுக்கணும்.....”

அவர் வார்த்தைகளால் அவன் சிறிது தைரியமடைந்த அவன் கேட்டான். “அதை எப்படித் தெரிஞ்சுக்கிறது?”

சிறிது யோசித்து விட்டு குருஜி சொன்னார். ”அந்த சிவலிங்கம் இருக்கிற ரூம்ல என்ன நடக்கறதுன்னு கண்காணிக்க ரகசிய கேமிரா வைக்கறது நல்லது. காலைல கணபதி வர்றதுக்குள்ளே உன்னால செய்ய முடியுமா?”

காமிரா வைக்கும் ஏற்பாட்டைக் கேட்டவுடன் “இது நல்ல ஐடியாவா தோணுது.. நாம இல்லாத நேரத்துல அங்கே என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்க வசதியாயிருக்கும்...”  என்று பரபரப்போடு ஆரம்பித்தவன் பிறகு தயக்கத்தோடு சொன்னான். ”ஆனா ராத்திரி பதினோரு மணிக்கு மேல ஆயிடுச்சே?”

“அப்படின்னா நாளைக்கு காலைல கணபதி பூஜைய முடிச்சவுடனே அந்த வேதபாடசாலைய சுத்திப் பார்க்க அழைச்சுகிட்டு போக ஏற்பாடு செய். அப்படி அவன் போனவுடனே ரகசிய வீடியோ காமிராவை வைக்க ஏற்பாடு செய். அந்த வேலை முடிஞ்சதுக்கப்புறம் அந்தக் கணபதி திரும்ப அங்கே வந்தா போதும்... ”

அந்த ஆள் கணபதி போயிட்டு வந்த பிறகு வீடியோ காமிரா புதுசா வச்சிருக்கறதைக் கண்டுபிடிச்சுட மாட்டானா?”

”அந்த அளவுக்கு எல்லாம் கவனிக்கற ரகம் அல்ல அவன். அதுவும் நாம அந்தக் காமிராவை மறைவாய் தானே வைக்கப் போகிறோம். அதனால அவன் கவனத்துக்கு அது வரவே வராது”

“சரி....”

”நாளைக்கு காலைல கணபதியைக் கூட்டிகிட்டு வர ஆளனுப்பு. காலைல கணபதியை பூஜை செய்ய வை. எதுக்கும் சிவலிங்கம் மேல இருக்கிற, நீ இது வரைக்கும் இந்த ஏரியாவுல பார்த்தே இருக்காத அந்தப் பூக்களை, எடுத்து தனியாக வச்சு எனக்கு அனுப்பு. நான் என்னன்னு பார்க்கறேன்”.

”சரி குருஜி... அந்த ஆள் கணபதி கிட்ட நீங்க இந்த சிவலிங்கத்தைப் பத்தி என்னன்னு சொல்லி இருக்கீங்க.”

“அமெரிக்காவில் ஒரு கோயிலுக்குப் போக இருக்கிற சிவலிங்கம். வெளியே தெரிஞ்சா கூட்டம் கூடும், சிலை கடத்தவும் படலாம்கிறதால ரகசியமா வச்சிருக்கோம். இது வரைக்கும் பூஜை செய்துகிட்டிருந்தவனோட அப்பா காலமாயிட்டதால இவன் கிட்ட சொல்லியிருக்கேன். நம்ம ஆள்கள் எல்லார் கிட்டயும் அப்படியே சொல்லச் சொல்லு. புரிஞ்சுதா?”

“ம்....”

”எந்த காரணத்தை வச்சும் அந்த சிவலிங்கம் பயப்பட வேண்டிய ஒன்றுங்கற மாதிரி ஒரு அபிப்பிராயத்தை நீங்க யாரும் கணபதி கிட்ட ஏற்படுத்திடாதீங்க”

“நாங்களா ஏற்படுத்த மாட்டோம்.....” என்று அவன் ஒரு மாதிரி இழுத்த போது குருஜி எரிச்சலோடு சொன்னார். “அவனாவும் பயப்பட மாட்டான். கவலைப்படாதே.....”

”சரி குருஜி.”

“கூடுமான வரை நீங்க ரெண்டு பேரும் கணபதி கண்ணுல படாமல் இருக்கிறது நல்லதுன்னு நினைக்கிறேன். அதனால அவனைக் கூட்டிகிட்டு வரவும், வந்த பிறகும் அவன் கிட்ட பேசவும், கண்காணிக்கவும் வேற ஆள்களையே ஏற்பாடு செய். முடிஞ்ச வரைக்கும் யாரும் அவன் கிட்ட அதிகம் பேசாமல் இருங்கள். அது நல்லது”

மறுநாள் காலை நான்கு மணிக்கு கணபதி வீட்டு முன் கார் நின்ற போது அவன் தயாராய் காத்திருந்தான். தாயிடமும் சகோதரிகளிடமும் விடை பெற்று விட்டு காரில் கணபதி ஏறிய போது காரில் இரண்டு இளைஞர்கள் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் இருவரும் மேலதிகாரியின் கண்காணிப்பில் உள்ள இராணுவ வீரர்கள் போல நேராக பார்த்துக் கொண்டிருந்தார்களே ஒழிய அவனை ஏறெடுத்துப் பார்க்கவும் இல்லை. பின் சீட்டில் அவன் ஏறி அமர்ந்தவுடன் கார் புறப்பட்டது.

அவர்களாக ஏதாவது பேசுவார்கள் என்று எதிர்பார்த்த கணபதி ஏமாந்து போனான். கார் சிறிது நேரம் சென்றவுடன் அவன் காரை நிறுத்தச் சொன்னான். “ஒரே நிமிஷம் நான் போய் அவர் கிட்ட சொல்லிட்டு வந்துடறேன்”

காரை ஓட்டி வந்தவன் காரை நிறுத்தி வேறு வழியில்லாமல் அவனைப் பார்த்தான். ”யார் கிட்ட?”.

எதிரில் இருந்த சிறிய பிள்ளையார் கோயிலைக் காண்பித்து கணபதி புன்னகையுடன் சொன்னான். “இவர் கிட்ட தான்”

சுத்த கிறுக்கனாக இவன் இருக்க வேண்டும் என்று நினைத்தவனாக அவன் “சீக்கிரம் வாங்க” என்றான்.  கணபதி தலையசைத்து விட்டு இறங்கினான்.

கணபதி நேற்றே பிள்ளையாரிடம் எல்லாம் சொல்லி விடை பெற்றிருந்தான் என்றாலும் இன்றும் அதே வழியில் போகும் போது இறங்கி மறுபடி சொல்லாமல் போவதற்கு அவன் மனம் கேட்கவில்லை. அவனுக்கு பிள்ளையாரிடம் திரும்பத் திரும்ப சொல்ல நிறைய இருந்தது.  மனதிற்குள் சொன்னான்.

“மறுபடியும் சொல்லறேன், என்னைத் தப்பா நினைச்சுக்காதே. எவனோ ஐநூறு ரூபாய் தினம் தர்றான்னு சொன்னவுடனேயே உன்னை விட்டுட்டு அங்கே போறேன்னு நினைக்காதே. என் நிலைமை உனக்குத் தெரியும்....தலைக்கு மேல கடன் இருக்கு... ஆக வேண்டிய வேலையோ எத்தனையோ இருக்கு. ஏதோ நீ காட்டின வழின்னு தான் போறேன்.  சுப்புணி கிட்ட உனக்கு ஒழுங்கா பூஜை செய்யச் சொல்லி இருக்கேன். எழுபது ரூபாயையும் வாங்கிட்டு ஏனோ தானோன்னு பூஜை செய்தா ஏழேழு ஜென்மத்துக்கும் நரகம் தான் வாய்க்கும்னு சொல்லி பயமுறுத்தி இருக்கேன். ஆனா அவன் பயப்பட்ட மாதிரி தெரியலை... கேலியா சிரிக்கிறான்... என்ன தான் சிரிச்சாலும் ஓரளவு ஒழுங்கா செய்வான். வேற வழியில்லை... கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துக்கோ... அங்கே போனாலும் உன்னோட நினைப்பு இருக்கும்... வரட்டுமா?”

அவன் மௌனமாக அந்தக் கோயில் முன் கைகளைத் தலைக்கு மேல் கூப்பிக் கொண்டு நின்றதைக் கண்ட காரில் இருந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டார்கள். காரை ஓட்டி வந்தவன் பக்கத்தில் இருந்தவனிடம் கேட்டான். “இவன் தேறுவான்கிறே...?”

”பார்த்தா அப்படித் தெரியலை... ஆனா குருஜி இவன் நல்லாவே சமாளிப்பான்னு உறுதியா சொல்றாராம்....ரெண்டு நாள்ல தெரிஞ்சுடும்”

கணபதி திரும்பவும் காரில் ஏறிய போது அவர்கள் இரண்டு பேரும் பழையது போலவே இறுக்கமான முகத்துடன் நேராகத் தெருவையே பார்த்தபடி இருந்தார்கள். கணபதி மூன்று மணிக்கே எழுந்திருந்ததாலும், அவர்கள் அமைதி காத்ததாலும் சீக்கிரமே கண்ணயர்ந்தான். அவன் தர்மசங்கடமான கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்காமல் காரிலேயே தூங்கிப் போனது அவர்களுக்கு நிம்மதியாக இருந்தது. கார் விரைந்தது....

பார்த்தசாரதி தன் கையிலிருந்த நைந்து போன விசிட்டிங் கார்டை ஆராய்ந்து கொண்டிருந்தார். அந்த வீட்டைச் சுற்றி இருந்த தோட்டத்தில் ஏதாவது தடயம் கிடைக்குமா என்று சல்லடையிட்டுத் தேடிய போது கிடைத்த விசிட்டிங் கார்டு அது. துரதிர்ஷ்டவசமாக விசிட்டிங் கார்டின் முன் பக்கம் ஈரமண்ணில் இருந்ததன் விளைவு எழுத்துக்கள் எல்லாம் அழிந்து போய் அது யாருடைய கார்டு என்பது தெரியவில்லை. அதன் பின் புறம் கையால் எழுதப்பட்டிருந்த எழுத்துக்களும் கூட ஈரத்தால் பெருமளவு மங்கி அழிந்திருந்தாலும் தொழில் நுட்பக் கருவிகளால் போலீஸ் இலாகா அதில் எழுதப்பட்டிருந்த எழுத்துக்களைக் கச்சிதமாகக் கண்டுபிடித்திருந்தனர்.

“ஐயா, தங்களிடம் முக்கியமான விஷயம் ஒன்றைப் பேச விரும்புகிறேன். தயவு செய்து சந்திக்க அனுமதி தரவும்”

யார் எழுதியது, எப்போது எழுதியது, எதற்காக எழுதியது, அந்த சந்திப்பு எப்போது என்று எதுவும் தெரியவில்லை. மறுபடியும் முனுசாமியை விசாரணைக்கு அழைத்து விட்டு அவன் வருவதற்காகக் காத்திருந்த பார்த்தசாரதிக்கு இந்தப் புதிய தடயம் பற்றி முனுசாமி என்ன சொல்கிறான் என்றறிய ஆர்வம் இருந்தது. அவர் இன்னும் பரமேஸ்வரனையும், ஆனந்தவல்லியையும் விசாரிக்கவில்லை. அவர்களிடம் கேட்க நிறைய இருந்தது. நாளை செல்லலாம் என்றிருக்கிறார்...

முனுசாமி பெரும் சலிப்புடன் அவர் முன் வந்து நின்றான். அவனைத் தன் கூர்மையான பார்வையால் சிறிது நேரம் பயமுறுத்திய பார்த்தசாரதி அவன் சங்கடத்துடன் நெளியவே எதிரில் உட்காரச் சொன்னார். உட்காரவில்லை என்றால் மூலமா என்று கேட்பார் என்று அவன் அறிந்திருந்ததால் அவன் உடனடியாக உட்கார்ந்தான்.

”முனுசாமி. ஒரு விஷயத்தை உன் கிட்டே நான் வெளிப்படையாய் சொல்றேன். எங்க போலீஸ் இலாகாவே இந்தக் கொலையில உனக்கும் பங்கிருக்கும் என்று சந்தேகப்பட்டப்ப, இருக்காது என்று உன் பக்கம் நின்றவன் நான். என்னையே நீ ஏமாத்தினது புத்திசாலித்தனம் அல்ல”

முனுசாமிக்குத் தூக்கி வாரிப்போட்டது. ஒரு அநியாயமான சந்தேகத்தையும், அதற்கும் மேலான அவதூறையும் அவர் சொன்னதை அவனால் ஜீரணிக்க முடியவில்லை. கொலையில் எனக்கு பங்கா? நான் இவரை ஏமாற்றினேனா?

”ஐயா இந்த ஏழைக்கு எப்பவாவது குடிக்கிற பழக்கம் இருக்குங்கறதைத் தவிர வேறெந்த கெட்ட பழக்கமும் கிடையாது. கொஞ்சமானாலும் தவறாமல், நிரந்தரமாய் கிடைச்சுகிட்டிருக்கிற வருமானத்துல என் வாழ்க்கையை ஓட்டிகிட்டிருக்கிறேன். நீங்க சொல்றது என் தலையில இடி விழற மாதிரி இருக்கு. பசுபதி ஐயாவை நான் கொல்லவும் இல்லை... உங்களை ஏமாத்தவும் இல்லை... தயவு செய்து இந்த மாதிரி எல்லாம் சொல்லாதீங்க....”

படபடவென்று சொன்ன போது அவனுக்கு அழுகையே வந்து விடும் போல இருந்தது.

“வெளியாள் யாராவது பசுபதியைப் பார்க்க வந்ததுண்டா, உனக்குத் தெரியுமான்னு நாங்க உன்னைப் பல தடவை கேட்டோம்.  இல்லவே இல்லைன்னு நீ சத்தியம் செய்யாத குறையாக சொன்னாய். உண்டா இல்லையா?”

“ஆமா சார்”

”அப்படின்னா இது என்ன?”  என்று அந்த நைந்து போன விசிட்டிங் கார்டை அவனிடம் அவர் நீட்டினார்.

அவன் வாங்கிப் பார்த்தான். முன்பக்கம் எதுவுமே தெரியவில்லை. பின்பக்கம் ஏதோ எழுதி அரைகுறையாய் அழித்த மாதிரி இருந்தது. கூர்மையாகப் பார்த்தான். எதுவும் அவனுக்குப் புரியவில்லை.

அவர் கேட்ட கேள்விக்கு அவன் பதில் சொன்னான். “ஏதோ விசிட்டிங் கார்டு மாதிரி தெரியுது. ஆனா மண்ணுல அமுங்கி இருந்ததால எழுத்துகள் எல்லாம் முக்கால் வாசி அழிஞ்சு போயிருக்குங்களே”

”முன்பக்கம் முழுசா செல்லரிச்சுப்  போயிருந்தாலும் பின்பக்கத்துல எழுதுனது என்னன்னு எங்க டிபார்ட்மெண்ட் கண்டுபிடிச்சிருக்கு. இதுல என்ன எழுதியிருக்கு தெரியுமா?  “ஐயா, தங்களிடம் முக்கியமான விஷயம் ஒன்றைப் பேச விரும்புகிறேன். தயவு செய்து சந்திக்க அனுமதி தரவும்”. விசிட்டிங் கார்டுல எழுதி அனுப்பணும்னா உன் கிட்ட தான் அந்த ஆள் எழுதி அனுப்பி இருக்கணும்... வேற யார் மூலமாவும் பசுபதி கிட்ட இதை அனுப்பி இருக்க முடியாது. ஆனா நீயோ அவர் வெளியாள் யாரையும் சந்திச்சதில்லைன்னு சொல்லி இருக்கிறாய்....”

அவர் சொல்லி விட்டு அவனையே கூர்ந்து பார்த்தார்.

முனுசாமிக்கு ஏதோ பொறி தட்டியது போல பார்த்தசாரதிக்குத் தோன்றியது. அவன் சற்று நிம்மதி அடைந்தவனாகச் சொன்னான். “ஏழெட்டு மாசத்துக்கு முன்னால ஒரு தடவை இந்த விசிட்டிங் கார்டைக் குடுத்து பசுபதி ஐயாவைப் பார்க்கணும்னு சொல்லி ரெண்டு பேர் வந்தது உண்மை... ஆனால் அவங்க பசுபதி ஐயாவை சந்திக்கலைங்களே ஐயா”

“ஏன்?”

“தெரியலை.. பசுபதி ஐயா கிட்ட நான் இந்த விசிட்டிங் கார்டைக் கொடுத்து உங்களைப் பார்க்கணும்னு யாரோ வந்திருக்காங்கன்னு சொன்னேன். அவர் இந்தக் கார்டை வாங்கிக் கூட பார்க்கலை. கண்ணை மூடி கொஞ்சம் யோசிச்சவர் நான் பார்க்க விரும்பலைன்னு சொல்லிடுன்னார். அப்படியே போய் சொன்னேன். அவங்க போயிட்டாங்க”

”அவங்க ரெண்டு பேரும் பார்க்க எப்படி இருந்தாங்க?”

”நான் பார்க்கலைங்களே ஐயா”

பார்த்தசாரதி அவனை முறைத்தார்.

முனுசாமி அவரிடம் விவரமாகச் சொன்னான். “ஐயா அவங்க வந்தது ஒரு கால் டாக்சில. அவங்க கார்ல இருந்து இறங்கவே இல்லை. டிரைவர் தான் அந்த விசிட்டிங் கார்டைக் கொடுத்து பசுபதி ஐயாவைப் பார்க்க ரெண்டு பேர் வந்திருக்காங்கன்னு சொன்னான். நான் அதைக் கொண்டு போயிட்டு திரும்பி வந்து அவர் சொன்னதை அவன் கிட்ட தான் சொன்னேன். அவன் போய் அவங்க கிட்ட சொன்னான். பிறகு அவங்க போயிட்டாங்க. நான் அந்த ரெண்டு பேரையும் பார்க்கல....ஏ.சி கார்ல ஜன்னல் கண்ணாடிய முழுசுமா ஏத்தி மறைச்சிருந்ததால பார்க்க முடியல. ஆனா அவன் டாக்சிய ரிவர்ஸ்ல எடுக்கறப்ப முன்னாடி கண்ணாடி வழியா பின்னாடி இருந்தவங்கள ஏதோ கொஞ்சம் பார்க்க முடிஞ்சதுல ரெண்டு பேர்ல ஒருத்தன் வெள்ளைக்காரன்னு தெரிஞ்சுது. மத்தபடி ரெண்டு பேர் பத்தியும் வேற எதுவும் எனக்குத் தெரியாதுங்கய்யா.. நான் அதுக்கு முன்னாடி அவங்களை பார்த்தது கூட இல்லை...”

”அவங்க பார்க்க வந்ததை ஏன் எங்க கிட்ட நீ முதல்லயே சொல்லலை?”

”அவங்க அவரைப் பார்த்து பேசலையே ஐயா. அவர் கிட்ட யாராவது வந்து பேசினாங்களான்னு கேட்டீங்க. பேசலைங்கறதால தான் அதைச்  சொல்லணும்னு தோணல”

அவனை சந்தேகம் நீங்காதவராய் பார்த்த பார்த்தசாரதி கேட்டார். “அந்த விசிட்டிங் கார்டுல இருந்த பெயர், விலாசம் ஏதாவது நினைவிருக்கா?”

”அது இங்கிலீஷ்ல இருந்ததால எனக்கு எதுவும் புரியலைங்கய்யா”

“அவங்க திரும்பி எப்பவாவது அவரைப் பார்க்க வந்தாங்களா”

“இல்லைங்களே ஐயா”

”பசுபதி ஏன் அவங்களைப் பார்க்கலைன்னு சொன்னாரா?”

“இல்லை. நானும் கேட்கல”

“அவங்க ஏன் அவரைப் பார்க்க வந்தாங்கன்னு நினைக்கிறாய்?”

“தெரியல ஐயா” அவன் பரிதாபமாகச் சொன்னான்.
                       
அவன் உண்மை சொல்கிறான் என்று அவர் நம்பினாலும் சந்தேகப் பார்வையையே முகத்தில் காட்டிய அவர் அவனிடம் கேட்டார். ”அந்த வெள்ளைக்காரன் எப்படி இருந்தான். என்ன வயசிருக்கும்னு ஏதாவது சொல்ல முடியுமா?”

“உயரமா இருந்தான்ய்யா. சின்ன வயசில்ல ..கொஞ்சம் வயசானவனா தான் தெரிஞ்சுது. அதுக்கு அதிகமா பார்க்க முடியல”

”கூட இருந்தவன்?”

“அந்த ஆளை சுத்தமாவே பார்க்க முடியல ஐயா. அந்த ஆள் தலைய குனிஞ்சுகிட்டு இருந்தான்....”

இந்தக் கொலை மற்றும் கடத்தலுக்கு சம்பந்தப்பட்டவர்களாக அவர்கள் இருவரும் இருக்கக்கூடுமோ என்ற சந்தேகம் பார்த்தசாரதிக்கு வந்தது. அவர்கள் யார், எதற்காக பசுபதியை சந்திக்க வந்தார்கள், விசிட்டிங் கார்டை வாங்கிக் கூடப் பார்க்காமல் பசுபதி அவர்களை ஏன் சந்திக்க மறுத்தார் என்ற கேள்விகள் எழ அதற்கான பதில்கள் என்னவாக இருக்கக் கூடும் என்று பார்த்தசாரதி யோசிக்க ஆரம்பித்தார். வெள்ளைக்காரன் இதில் சம்பந்தப்பட்டிருந்தால் அது சிலையை வெளிநாட்டுக்குக் கடத்துவதற்காக இருக்கலாம். அப்படி வெளிநாட்டுக்குக் கடத்திச் செல்ல அது சிற்ப வேலைப்பாடுகள் அமைந்த சிலை ஒன்றுமல்ல என்பதால் வேறு எதாவது காரணம் அதற்கு இருக்க வேண்டும்... அந்த சிவலிங்கத்தைப் பற்றி சரியாகத் தெரிந்து கொண்டால் ஒழிய இந்த விசாரணையில் மற்றவைகளையும் கண்டு பிடிப்பது கஷ்டம் தான் என்று அவருக்குத் தோன்றியது....


(தொடரும்)

பரம(ன்) ரகசியம்-12







குருஜி ஒரு பரம ரகசியத்தை கணபதியிடம் மட்டும் பகிர்ந்து கொள்ள முன் வந்தவர் போன்ற ஒரு அபிப்பியாயத்தை அவனிடம் ஏற்படுத்தியவராக அவனுக்கு மட்டுமே கேட்கக் கூடிய தாழ்ந்த குரலில் சொன்னார்.

“அமெரிக்காவில் ஒரு சிவன் கோயிலைக் கட்ட அங்கே இருக்கிற சில பணக்கார இந்தியர்கள் ஏற்பாடு செய்திருக்காங்க கணபதி. அதற்காக இங்கே இருந்து ஒரு சக்தி வாய்ந்த சிவலிங்கத்தை அனுப்ப என் கிட்டே சொல்லி இருந்தாங்க. கிட்டத்தட்ட நூறு சிவலிங்கத்தைப் பார்த்து அதில் ஒன்னை தேர்ந்தெடுத்தேன், கணபதி. அதை இங்கிருந்து அனுப்பறதுக்கும், அங்கே பிரதிஷ்டை செய்யறதுக்கும் நல்ல நாள் குறிக்க பல வேத பண்டிதர்கள் கிட்ட கருத்து கேட்டிருக்கோம். அவங்க அதை முடிவு செய்யற வரைக்கும் அந்த சிவலிங்கத்திற்கு விசேஷ நித்ய பூஜைகள் செய்ய ஒரு ஆளையும் ஏற்பாடும் செய்து அவனும் தினம் நல்லபடியாய் பூஜை செய்துட்டு வந்தான். திடீர்னு இன்னைக்கு காலைல அவனோட அப்பா காலமாயிட்டார். அதனால அவனுக்கு பூஜை செய்ய முடியாமல் போயிடுச்சு. நித்ய பூஜை தடைப்படக் கூடாதில்லையா, அதனால வேற ஒரு ஆளை பூஜை செய்ய ஏற்பாடு செய்யச் சொன்னாங்க. அப்ப தான் எனக்கு உன் ஞாபகம் வந்துச்சு...”

கணபதி அப்பாவியாக அவர் சொன்னதைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தான். சக்தி வாய்ந்த சிவலிங்கம், விசேஷ நித்ய பூஜைகள் என்ற வார்த்தைகள் அவனைத் தயக்கம் கொள்ள வைத்தன. தினமும் ஐநூறு ரூபாய் என்பது அவனுடைய தற்போதைய நிலையில் பெரும் தொகையே என்றாலும் அவன் நேர்மையாகச் சொன்னான். “குருஜி. எனக்கு ஓரளவு மந்திரங்கள் தெரியுமே ஒழிய பெரிய அளவில் தெரியாதுங்களே. சக்தி வாய்ந்த சிவலிங்கம்னு வேற சொல்றீங்க, நான் பூஜை செய்தால் சரியாகுங்களா?”

குருஜி அமைதியாகச் சொன்னார். ”நான் படிக்காத புராணங்கள் இல்லை கணபதி. எல்லாத்துலயுமே மந்திரத்தை விட பக்திக்கு தான் அதிகமா முக்கியத்துவம் கொடுத்திருக்காங்க. பெரிய பெரிய ஹோமங்கள்ல எழுந்தருளாத கடவுள்கள் பக்தியை மெச்சி எழுந்தருளினதா சொல்ற கதைகள் தான் அதிகம். இப்ப அந்த சிவலிங்கம் இருக்கிறதே ஒரு பெரிய வேதபாடசாலை இருக்கிற இடத்தில் தான். வெறும் மந்திரங்கள் மட்டுமே அந்த சிவலிங்கத்துக்குப் போதுமானதா இருந்திருந்தா நான் அங்கே இருந்தே ஒருத்தரைத் தேர்ந்தெடுத்திருப்பேன். சொல்ற மந்திரங்களோட பக்தியும் சேரலைன்னா அதெல்லாம் வெறும் சத்தங்கள் தானே கணபதி? தெரிஞ்சது கொஞ்சமா இருந்தாலும் பக்தியோட சொல்லி சிரத்தையா செய்யக்கூடிய ஆள் வேணும்கிறதால தான் நான் உன்னைத் தேர்ந்தெடுத்தேன்....”

கணபதி இரண்டு கைகளையும் பயபக்தியுடன் கூப்பி தலையைத் தாழ்த்திக் கொண்டு சொன்னான். “தெரிஞ்சதைப் பக்தியோடு செய்வேன்கிறது மட்டும் உறுதி குருஜி. அது போதும்னு நீங்க நினைச்சா நான் செய்யறேன்”

குருஜி திருப்தியுடன் சொன்னார். “அது போதும் கணபதி. இன்னொரு விஷயம்...”

“என்ன குருஜி?”

மறுபடியும் தாழ்ந்த குரலில் ரகசியமாகவே குருஜி சொன்னார். ”அந்த சிலையைத் தேர்ந்தெடுத்ததும், அமெரிக்காவுக்கு அனுப்பப் போறதும் இன்னும் ரகசியமாகவே தான் வச்சிருக்கோம். அந்த சிவலிங்கம் இருக்கிற வேதபாட சாலையில் கூட நிறைய பேருக்கு அது தெரியாத மாதிரி ஒரு தனி ஒதுக்குப்புற இடத்தில் வச்சிருக்கோம். ஜனங்களுக்குத் தெரிஞ்சா அதைக் கும்பிட தனிக்கூட்டம் சேரும். இப்ப சிலைகளைக் கடத்தற ஆள்களும் அதிகமாயிட்டாங்கங்கறதால் அதை அமெரிக்காவில் கொண்டு போய் சேர்க்கிற வரைக்குமே ரகசியமாய் வச்சிருக்கச் சொல்லி உளவுத் துறை அதிகாரிகளும் எங்க கிட்டே சொல்லி இருக்காங்க. சமீபத்துல ஒரு பெரியவரைக் கொன்னுட்டு அவர் பூஜை செய்துகிட்டிருந்த சிவலிங்கத்தைக் கடத்திட்டாங்கன்னு பத்திரிக்கைல வந்ததே படிச்சியா கணபதி?”

”படிச்சேன் குருஜி”

“ஒரு சாதாரணமான சிவலிங்கத்தையே கடத்தறாங்கன்னு சொன்னா இதை எவ்வளவு பத்திரமாய் பாதுகாக்கணும் நீயே சொல்லு”

“உண்மை தான் குருஜி”

”அதனால உன் மூலமாவும் இது வெளியே யாருக்கும் தெரியக் கூடாது கணபதி. உன் வீட்டில கூட ஏதோ ஒரு கோயில்ல பூஜை செய்யப் போறதா சொல்லிடு. நீ பூஜை செய்யற இடத்துலயே தங்க வேண்டி இருக்கும். அதனால தினம் வீட்டுக்கு வந்து போக முடியாது. வீட்டுல வெளியூர் போறதாகவே சொல்லிடறது நல்லது. அந்த வேதபாட சாலையிலயே கூட அதிகமா அந்த சிவலிங்கத்தைப் பத்தி யார் கிட்டயும் பேசக்கூடாது. சரியா?”

”சரி குருஜி”

”நாளைக்கு அதிகாலை நாலு மணிக்கு வீட்டுல ரெடியாய் இரு. உன்னைக் கூட்டிகிட்டுப் போக காரை அனுப்பச்  சொல்றேன்”

”சரி குருஜி”

”இதெல்லாம் நல்லபடியாய் முடிஞ்சுதுன்னா கூடுதலா உனக்கு ஒரு பெரிய தொகையும் தரச் சொல்றேன் கணபதி.”

கணபதியின் கண்களில் நீர் கோர்த்தது. ”இதுக்கெல்லாம் இந்த ஏழை உங்களுக்கு என்ன கைமாறு செய்ய முடியும்னு தெரியலை குருஜி” என்று தழுதழுத்த குரலில் சொன்னான்.

குருஜி புன்னகையுடன் சொன்னார். “சந்தர்ப்பம் கிடைக்கிறப்ப நல்ல மனுஷங்களுக்கு ஏதாவது நல்லது செய்யணும்னு ஆசைப்படறவன் நான் கணபதி. அதை நிறைவேற்றிக் கொடுக்கிறது தெய்வ சித்தம் அவ்வளவு தான்”   

கண்களைத் துடைத்துக் கொண்ட கணபதி அவர் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட்டான்.

அவன் போன பின்பு அவருடைய உதவியாளன் வந்து கேட்டான். “அடுத்தது யாரை உங்க கிட்ட அனுப்பறது?”

“அரை மணி நேரத்துக்கு யாரையும் அனுப்பாதே” என்ற குருஜி போனில் யாரிடமோ பேசினார். “நித்ய பூஜைக்கு ஆள் ஏற்பாடு செய்துட்டேன். அட்ரஸ் குறிச்சுக்கோ”

அவர் சொன்னதை எழுதிக் கொண்ட அந்த ஆள் தயக்கத்துடன் கேட்டான். “இந்த ஆள் சமாளிப்பானா?”

”நல்லாவே சமாளிப்பான். கவலைப்படாதே. நாளைக்கு காலைல நாலு மணிக்கு ஆள் ரெடியாய் இருப்பான். கூட்டிகிட்டு போக ஆள் அனுப்பு. அவன் கிட்ட யாரும் அதிகம் பேசாமல் இருக்கிறது நல்லது.”

“சரி குருஜி. அந்த போலீஸ் ஆபிசர் பார்த்தசாரதி உங்களைப் பார்க்க வந்தாரா?”

“போன் செய்து பார்க்க வரட்டுமான்னு என் அஸிஸ்டெண்ட் கிட்ட
 கேட்டிருக்கார். நான் ரெண்டு நாள் கழிச்சு வந்து பார்க்க சொல்லி இருக்கேன். உடனடியா பார்க்கறது தேவையில்லைன்னு நினைக்கிறேன்...”

“இன்னொரு விஷயம்....”

“என்ன?”

“பரமேஸ்வரனோட பேரன் ஒருத்தன் அமெரிக்கால பாராசைக்காலஜில ஆராய்ச்சி செய்துகிட்டிருக்கான். அவன் இந்தியாவுக்கு வர்றானாம்”

”அதனால என்ன?”

”இறந்து போன பசுபதி அந்த சிவலிங்கத்தை அவன் கிட்ட ஒப்படைக்க பரமேஸ்வரன் கிட்ட முதல்லயே சொல்லி இருக்கார். அதுக்கு ஏதாவது ஆனாலும் அவன் கிட்ட சொல்லச் சொல்லி இருக்கார். பரமேஸ்வரன் தன்னோட மகன் அவரோட விருப்பத்திற்கு எதிரா கல்யாணம் செய்துகிட்டதால் இத்தனை நாள் தொடர்பே அவன் குடும்பத்தோட வச்சிருக்கலை. அண்ணா சொன்னதால இப்ப அவன் கிட்ட சொல்லி இருக்கார் போல இருக்கு. அவனும் வர்றான்”

மரணத்திற்கு முன்பே பசுபதி அவர் மரணம் பற்றியும், சிவலிங்கத்திற்கு ஏதாவது ஆனால் என்பது பற்றியும் சொல்லி இருந்தது குருஜியை யோசிக்க வைத்தது. மரணத்திலும் விலகாத பத்மாசனத்துடனும், இந்தத் தகவலும் சேர்ந்து யோசிக்கும் போது ஏதோ ஒரு நெருடல் ஆரம்பித்தது. ஆனாலும் அதை அவர் தெரிவிக்கவில்லை. அமைதியாகச் சொன்னார். “அவன் வர்றதால என்ன பிரச்சினை?”

”உங்களுக்கு அவனைப் பத்தி தெரியுமா?”

“அதான் சொன்னாயே பாராசைக்காலஜி ஆராய்ச்சியாளன்னு...”

“அவன் ஒரு சாதாரண ஆராய்ச்சியாளனில்லை. உலக அளவில் அவனுக்கு நல்ல பெயர் இருக்கு. அவன் சப்ஜெக்டுல அவன் அறிவு அசாதாரணமானதுன்னு எல்லாரும் சொல்றாங்க. அப்படி இருக்கறப்ப அந்தப் பெரியவரும் சாகறதுக்கு முன்னால் அவன் கிட்ட சொல்லச் சொல்லி இருக்கறது எனக்கென்னவோ சரியா தோணலை. எதுக்கும் அவனைப் பத்தி இண்டர்நெட்டுல கொஞ்சம் பாருங்க குருஜி. உங்களுக்குப் புரியும்...”

”அவன் பேர் என்ன?”

“ஈஸ்வர். விர்ஜினியா யூனிவர்சிட்டியில் இருக்கிறான்”

“சரி, நான் பார்க்கிறேன்.....”

அதன் பிறகு மூன்று பேரை மட்டும் வரச்சொல்லி அரை மணி நேரத்தில் அனுப்பி விட்டு தியானத்தில் ஆழ்ந்து விட்டதாக மற்றவர்களிடம் தெரிவிக்க உதவியாளனிடம் சொல்லி விட்டு இணையத்தில் ஈஸ்வர் பற்றி ஆராய ஆரம்பித்தார். அவன் மிகப் பிரபலம் என்பது ஆரம்பத்திலேயே தெரிந்தது. தொடர்ந்து சேகரித்த விபரங்களையும் அவன் எழுதிய சில கட்டுரைகளையும் படித்த போது,  போனில் பேசியவன் சொன்னது போல ஈஸ்வர் அசாதாரண அறிவுடையவன் போலத் தான் தெரிந்தது. அவன் புகைப்படங்களை ஆராய்ந்தார். அவன் அழகாகவும், கம்பீரமாகவும் தெரிந்தான். எதையும் சந்திப்பேன், எப்படியும் சாதிப்பேன் என்பது போல அவன் பார்வை இருந்தது.....

இரவு நீண்ட நேரமாகியும் அவன் பற்றிய ஆராய்ச்சிகளையே அவர். தொடர்ந்தார். பதினொரு மணிக்கு இரவின் அமைதியைக் குலைத்துக் கொண்டு செல்போன் அலறியது. இந்த அசாதாரண நேரத்தில் யார் என்று பார்த்தவர் உடனே பேசினார். “என்ன ஆச்சு?”

பேசியவன் ஓடி வந்து பேசியது போல மூச்சு வாங்கியது போல் தெரிந்தது. “சிவலிங்கம்.... சிவலிங்கம்.....”

“சிவலிங்கத்துக்கு என்ன ஆச்சு?”

“பூஜை.. பூஜை....”

“அதுக்குத் தானே ஆளை ஏற்பாடு செய்திருக்கேன். நாளைக்கு காலைல இருந்து பூஜையை ஆரம்பிச்சுடலாம். இடையில இந்த இரண்டு நாள் தடைப்பட்டது பெரிசா கவலைப்பட வேண்டிய விஷயம் இல்லை...”

”....இல்லை.... பூஜை யாரோ செய்திருக்காங்க...”

“என்ன உளறுகிறாய்? யார் பூஜை செய்தாங்க?”

“....தெரியலை....குருஜி”

குருஜி திகைத்தார். ஆனால் ஒரே நிமிஷத்தில் சுதாரித்துக் கொண்டவர் அமைதியாகச் சொன்னார். “முதல்ல அமைதியாய் இரு....மூணு தடவை நல்லா மூச்சை இழுத்து விடு...செய்தாச்சா.... உம்... இப்ப அமைதியா நடந்ததைச் சொல்லு....”

அவன் சிறிது அமைதியடைந்தது போலத் தெரிந்தாலும் ஒரு இனம் புரியாத பயம் அவன் குரலில் தெரிந்தது. “...சிவலிங்கம் இருந்த கட்டிடம் பக்கம் போனப்ப அதோட பூட்டு திறந்திருந்துச்சு.. என்னடா நாம தானே பூட்டினோம் எப்படி திறந்திருக்குன்னு நினைச்ச நான் உள்ளே போய் பார்த்தேன்.... போனா சிவலிங்கத்துக்கு மேல் ஃப்ரஷ்ஷான வில்வ இலைகளும், நிறைய பூக்களும் இருக்கு.. யாரோ பூஜை செய்துட்டு போனது மாதிரி இருக்கு....”

”அப்படின்னா நம்ம பசங்கள்ல யாராவது செய்திருக்காங்களோ என்னவோ?”

”நம்ம பசங்க தொடை நடுங்கிகளா நடந்துகிட்டதால தானே வேற ஆளை வெளியே தேடினோம். அவங்க எப்படி போய் செய்வாங்க.... ஆனாலும் விசாரிச்சு பார்த்துட்டேன்.... அவங்க யாரும் செய்யலையாம்....”

”அப்படின்னா வேதபாடசாலைல இருக்கிற யாராவது செய்திருக்கலாம்...”

”நம்ம பசங்களைத் தவிர மத்தவங்க கிட்ட இதைப் பத்தி நான் மூச்சு கூட விடலை.  அப்படி ஒரு சிவலிங்கம் அங்கே இருக்கிறது வேற யாருக்குமே
தெரியாது.... நான் அந்தக் கட்டிடத்தை பூட்டி வேற வச்சிருந்தேன்.... அதைத் திறந்தது யார், பூஜை செஞ்சது யாருன்னு தெரியலை....”

“நீ பூட்டினது நிஜம் தானா? நல்லா யோசிச்சு சொல்லு”

“நிஜம். அதை மூணு தடவை இழுத்து வேற பார்த்தேன்....”

”சாவியை எங்கே வச்சிருந்தாய்?”

“என் கிட்ட தான் வச்சிருந்தேன்....”

“பூட்டை யாராவது உடைச்ச மாதிரி இருக்கா?”

“இல்லை. தாளை எடுத்து விட்டுப் பூட்டியது மாதிரி தொங்கிகிட்டு இருக்கு குருஜி”

“அப்படின்னா நீ தாள் போடாமலேயே பூட்டியிருப்பாய்” குருஜி உறுதியாய் சொன்னார்.

பூட்டியதாய் முன்பு உறுதியாகச் சொன்னவன் இப்போது யோசிக்க ஆரம்பித்தான். இருக்கலாமோ. தாளைப் போடாமலேயே பூட்டி விட்டு இழுத்துப் பார்த்திருப்போமோ?

குருஜி சொன்னார். “...வேதபாடசாலைல படிக்கிற பையன் யாராவது அங்கே உள்ளே போயிருப்பான். வாடின பூக்கள் எல்லாம் இருக்கிறதை பார்த்துட்டு எடுத்துட்டு புதுசாய் பூக்கள், வில்வ இலை எல்லாம் வச்சுட்டு போயிருப்பான்..”

”அந்த அளவு நெருங்கி பூஜை செய்துட்டு ஒன்னும் ஆகாம ஒருத்தன் இருந்திருக்க வாய்ப்பு இருக்குன்னா நினைக்கிறீங்க”

குருஜி சொன்னார். “செய்யற ஆள் கள்ளங்கபடமில்லாமல் இருந்தா அவனுக்கு எந்தப் பாதிப்பும் வராது. அதனால தான் நான் கணபதியைத் தேர்ந்து எடுத்தேன்...”

”என்னவோ எனக்கு தலை சுத்துது.... ஒரு நிமிஷம் இருங்க. நீங்க சொன்ன மாதிரியே இருந்திருக்கும்னே வச்சுக்குவோம். அந்த சிவலிங்கம் மேல இருந்த பூக்கள்ல சில பூக்களை நான் இது வரைக்கும் என் வாழ்க்கைலயே பார்த்தது இல்லை. அதெல்லாம் கண்டிப்பா இந்த ஏரியால கிடைக்கிற பூக்களே இல்லைங்கறது மட்டும் உறுதியா சொல்வேன்.. இங்கே யாராவது செய்திருந்தா அந்தப் பூக்களை எங்கே இருந்து கொண்டாந்திருப்பாங்கன்னு சொல்றீங்க?”

குருஜி யோசிக்க ஆரம்பித்தார். அந்தக் கேள்விக்கு அவரிடத்திலும் விடையில்லை.....


(தொடரும்)

பரம(ன்) ரகசியம்-11



 பரமேஸ்வரன் மகளிடம் கேட்டார். ”அவன் சார்னு சொன்னது என்னைத்தானே?”

“....இல்லை.... உங்க மருமகனைத் தான்... அப்படி சொன்னான்”

மீனாட்சிக்கு பொய் இயல்பாக வராது. மகளைக் கண்ணாடி போல படிக்க முடிந்த பரமேஸ்வரனுக்கு ஈஸ்வர் அவரைத் தான் சார் என்று சொல்லி இருக்கிறான் என்பதில் சந்தேகமே இல்லை. நேற்று பிறந்த சுண்டக்காய் என்ன திமிராய் பேசுகிறான் என்று நினைத்தவராக அடுத்ததாக கோபத்திற்கான காரணத்தை மகளிடம் கண்டுபிடித்தார்.

“இந்த வீடு அவனோட கொள்ளுத் தாத்தா கட்டினது, அவனுக்கு அதில உரிமை இருக்குன்னு சொல்ல வேண்டிய அவசியம் உனக்கு என்ன இருக்கு?”

மீனாட்சி தானும் பொய்யாய் கோபப்பட்டாள். “ஆமா சொன்னேன். அது உண்மை தானே. உங்க கிட்ட அவனும் என்னமோ கோபமா இருக்கான். அதனால இங்கே வந்து தங்க யோசிக்கிறான். நீங்க தானே அவனுக்கு போன் செஞ்சு பேசி பெரியப்பா சொன்னதைச் சொன்னீங்க. அதக் கேட்டுகிட்டு அவன் உங்களுக்காக இங்கே வந்து ஓட்டல்ல தங்கணுமா? நல்லா இருக்கே நியாயம்.”

“தாத்தாவை தாத்தான்னு கூப்பிடாம அவன் சார்னு கூப்பிடறான். நானே அவனுக்குத் தாத்தா இல்லைன்னா எங்கப்பா எப்படி அவனுக்குக் கொள்ளுத்தாத்தா ஆவார்?”

“அவனோட அப்பா   உங்களுக்கு மகன் இல்லைன்னு நீங்க சொன்னதை வசதியா மறந்துடுங்க”

பரமேஸ்வரன் மகளை முறைத்தார். இந்த நேரமாகப் பார்த்து ஆனந்தவல்லி அறைக்குள் நுழைந்தாள்.

“எப்பப் பாரு அப்பனும், மகளும் கொஞ்சிக்குவீங்க, இன்னைக்கென்ன அதிசயமா ரெண்டு பேருக்குள்ளே சண்டை?”. அவளுக்கு எப்போதுமே பரமேஸ்வரன் தன் குழந்தைகளைத் தலைக்கு மேல் வைத்துக் கொண்டாடுவது பிடித்ததில்லை. எதிலும் ஒரு அளவு வேண்டும் என்று நினைப்பவள் அவள்.

”இவளோட அண்ணன் மகன் இந்தியா வர்றானாம். அவனை இங்கேயே வந்து தங்கு, இது உன் கொள்ளுத் தாத்தா கட்டினது, உனக்கு உரிமை இருக்குன்னு சொல்லித் தர்றா இவ”

மீனாட்சி சொன்னாள். “அவன் இவர் சொல்லி வர்றான். அவன் இங்கே வந்து தங்கறதுல என்ன தப்பு”

“அவனாவே இங்கே வந்திருந்தா தப்பே இல்லை. அவன் லார்டு கவர்னராட்டம் ஓட்டல்ல தங்கறேன்னு சொல்லி, நீ வேண்டாம் உன் கொள்ளுத்தாத்தா வீடு இது, உங்க தாத்தாவுக்கும் இந்த வீட்டுக்கும் எந்த சம்பந்தமுமே இல்லைங்கற மாதிரி சொல்லி அவனை இங்க வர சம்மதிக்க வச்ச பாரு அது தான் தப்பு”

ஆனந்தவல்லி சொன்னாள். “அந்தப் பையன் திமிர் பிடிச்ச பையன்கிற மாதிரி தான் பேச்சுல தெரியுது.... அன்னைக்கும் அவன் உன் அப்பன் கிட்ட அப்படி தான் பேசினான்”

மீனாட்சி அடுத்த அஸ்திரத்தை விட்டாள். “அவன் இங்கே தங்காமல் ஓட்டல்ல தங்கினா நமக்குத் தான் அவமானம். அவன் பார்க்க வேற எங்க தாத்தா மாதிரியே இருக்கான்... இருங்க என்னோட லாப்டாப்புல அவனோட ஃபோட்டோ இருக்கு. கொண்டு வந்து காண்பிக்கிறேன்.”

பார்க்க தன் கணவன் மாதிரி இருப்பதாகக் கேட்டவுடன் ஆனந்தவல்லிக்கு ஒரு புதிய ஆர்வம் பிறந்தது. அவள் பேத்தியிடம் சொன்னாள். “பார்க்க மட்டும் தான் அப்படி போல இருக்கு. உங்க தாத்தாவுக்கு எப்பவுமே திமிரு இருந்ததில்லை....”

“அது ஓவ்வொண்ணு ஒவ்வொருத்தர் கிட்ட இருந்து வரும்...” என்று சொல்லி விட்டு மீனாட்சி லாப்டாப் எடுத்து வர நகர்ந்தாள்.

அவள் போன பிறகு ஆனந்தவல்லி மகனிடம் கேட்டாள். “அப்படின்னா திமிரு யார் கிட்ட இருந்து அவனுக்கு வந்திருக்குன்னு உன் மகள் சொல்றா. என்னைச் சொல்றாளா, உன்னைச் சொல்றாளா?”

பரமேஸ்வரன் லேசாய் புன்னகைத்தார். அவருக்கு ஈஸ்வர் மேல் கோபம் இருந்த போதும் அதையும் மீறி அவன் இந்தியா வருவதில் ஒருவித திருப்தி இருந்தது. அவர் பேசினதுக்கு ஏதோ ஒரு மரியாதை இருக்கிறது. ஆனால் அவர் மீது இருக்கும் கோபத்தை ஒவ்வொரு முறையும் அவன் சுட்டிக்காண்பிக்காமல் இல்லை. இந்த வீடு கூட அவருடையதாய் இருந்திருந்தால் அவன் வந்து தங்கியிருக்க மாட்டான் என்பது உறுத்தலாக இருந்தது. அதை நினைக்கையில் அவர் புன்னகை வந்த வேகத்தில் மறைந்தது.

மீனாட்சி லாப்டாப்புடன் வந்தாள். ஈஸ்வரின் படம் ஒன்றை அதில் அவர்களுக்குக் காண்பித்தாள். பரமேஸ்வரன் பேச்சிழந்து போனார். அவருடைய தந்தையின் மறு அச்சாக அவர் பேரன் இருந்தான். பசுபதி சொன்னது நினைவுக்கு வந்தது. “இருக்கிற மண் எதுவானாலும் விதை நம் வம்சத்தோடதுடா.” தோற்றம் முதற்கொண்டு அவர் சொன்னதை நிரூபித்தது.

கண்களை சுருக்கிக் கொண்டு பார்த்த ஆனந்தவல்லியும் ஆச்சரியப்பட்டு தான் போனாள். “என் ரூம்ல டேபிள் மேல என்னோட கண்ணாடி இருக்கும் கொஞ்சம் கொண்டு வாடி”

மீனாட்சி பாட்டிக்கு மூக்குக் கண்ணாடி கொண்டு வந்து தந்தாள். ஆனந்தவல்லி கண்ணாடியைப் போட்டுக் கொண்டு தன் கொள்ளுப்பேரனை ஆராய்ந்தாள். எப்போதுமே கடுகடுவென்றோ, இறுக்கமாகவோ இருக்கும் அவள் முகத்தில் அபூர்வமாக ஒரு மென்மை படர்ந்ததை மீனாட்சி கவனித்தாள்.

“ஏண்டி இது ஒன்னு தான் இருக்கா, வேறயும் இருக்கா?”

“நிறைய இருக்கு பாட்டி. சிலதுல அண்ணாவும் அண்ணியும் கூட இருக்காங்க.. சிலது தனியா இருக்கு”

மீனாட்சி வேண்டுமென்றே அவளுடைய அண்ணன், அண்ணியுடன் ஈஸ்வர் இருந்த படங்களை ஆரம்பத்தில் அவர்களுக்குக் காண்பித்தாள். பரமேஸ்வரன் தன் மகனின் புகைப்படங்களைக் கூட அவன் இங்கிருந்து போன பிறகு பார்த்ததில்லை. அவர் மகன் அந்தப் படங்களில் அவரையே பார்த்தான். அவருடைய ஒரே மகன், அவருடைய உயிருக்கு உயிராய் இருந்தவன், புன்னகையைத் தவிர முகத்தில் எந்த கடுமையான உணர்ச்சிகளையும் காட்டாதவன் இப்போதும் அதே புன்னகையுடன் அவரைப் பார்த்தான்.... அவருக்கு இரண்டு புகைப்படங்களுக்கு மேல் மகனுடைய புகைப்படங்களைப் பார்க்க முடியவில்லை.

“எனக்கு முக்கியமாய் ஒரு போன் கால் செய்ய வேண்டி இருக்கு. மறந்தே போய்ட்டேன்...” என்று அவர் எழுந்து சொன்ன போது அவர் குரல் கரகரத்தது. அவர் ஜன்னலோரத்திற்கு நகர்ந்து பெரிய அவசரமில்லாத ஒரு விஷயத்துக்கு யாரையோ கூப்பிட்டு பேச ஆரம்பித்தார்.

ஆனந்தவல்லிக்குத் தன் பேரனைப் பார்த்து அப்படி எந்த உணர்ச்சியும் பெரிதாக ஏற்பட்டு விடவில்லை. ஆனால் ஒவ்வொரு புகைப்படத்திலும் அவளுடைய கணவனின் மறு அச்சு போல் இருந்த கொள்ளுப்பேரன் ஈஸ்வரை மட்டும் உன்னிப்பாகப் பார்த்தாள். அவள் பார்த்து முடித்து மீனாட்சி லாப்டாப்பை மூடிய போது பரமேஸ்வரனும் தன் பேச்சை முடித்திருந்தார்.

”அந்தப் பையன் பேர் என்ன?” ஆனந்தவல்லி கேட்டாள். அவள் குரலிலும் என்றுமில்லாத மென்மையும் ஆர்வமும் தெரிந்தது.

“ஈஸ்வர்” மீனாட்சி சொன்னாள்.

மகனைப் பார்த்து ஆனந்தவல்லி சொன்னாள். ”ஓ.. உன் பேர் தான் அவனுக்கு உன் மகன் வச்சிருக்கானோ”.

பரமேஸ்வரன் ஒன்றுமே சொல்லவில்லை.

“எப்ப வர்றானாம்?” ஆனந்தவல்லி பேத்தியைக் கேட்டாள்.

“வர்ற புதன்கிழமை” மீனாட்சி சொன்னாள்.

“ஏன், அதுக்கு முன்னாடி எந்த ஃபிளைட்லயும் டிக்கெட் கிடைக்கலையோ?”


குருஜியின் வீட்டு ஹாலில் அவருடைய தரிசனத்திற்காகக் காத்திருந்தவர்கள் பதினெட்டு பேர். அவர்களில் இரண்டு தொழிலதிபர்கள், ஒரு சினிமா டைரக்டர், ஒரு விஞ்ஞானி, ஒரு பிரபல கதாகாலட்சேபக்காரர்,  ஒரு எம்.எல்.ஏயும் அடக்கம். அவர்களுடன் சேர்ந்து காத்துக் கொண்டு இருந்த கணபதிக்கு வயது 21 என்றாலும் உயரம் ஐந்தடி கூட இல்லை. குடுமி வைத்துக் கொண்டிருந்தான். பழைய வேட்டியைக் கச்சை கட்டிக் கொண்டிருந்த அவன் மேல் உடம்பில் ஒரு அழுக்குத் துண்டு மட்டும் இருந்தது. அவனை அவர் வரச் சொன்னதாக குருஜியின் வேலையாட்களில் ஒருவன் காலையில் தான் வந்து சொல்லி விட்டுப் போனான். பக்கத்து கிராமத்தில் ஒரு சிறிய வினாயகர் கோயிலில் பூஜை செய்யும் அர்ச்சகராக இருந்த அவனுக்கு குருஜி மேல் மிகுந்த பக்தியும், மரியாதையும் உண்டு. அத்தனை பெரிய மனிதர் அவனை ஒரு பொருட்டாக நினைத்தது மட்டுமல்லாமல் அன்பாகவும், மரியாதையாகவும் கூடப் பழகுவார்.

சென்ற வருடம் ஒரு பொது நிகழ்ச்சியில் தான் அவரை அவன் முதல் முதலாக சந்தித்தான். கூட்டத்தோடு கூட்டமாக நின்றிருந்த அவனை மேடையில் உட்கார்ந்திருந்த அவர் சிறிது நேரம் கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு நிகழ்ச்சி முடிந்தவுடன் தன்னை வந்து பார்க்கும்படி ஒருவரிடம் சொல்லி அனுப்பினார். கணபதிக்கு ஒரு கணம் ஒன்றுமே புரியவில்லை. நடிகர்கள், அரசியல்வாதிகள், பெரும் பணக்காரர்கள் போன்றவர்கள் எல்லாம் அவர் தரிசனத்திற்காகக் காத்துக் கிடக்கிறார்கள் என்று பத்திரிக்கைகளில் பல முறை படித்திருக்கிறான். அப்படிப்பட்டவர் அவனைப் போன்றவனை அழைத்துப் பேச முன்வந்தது ஆச்சரியமாக இருந்தது. நிகழ்ச்சி முடிந்ததும் அந்த ஹாலில் ஒரு அறையில் அவரைச் சந்தித்தான். அவனைப் பற்றி அவர் விசாரித்தார். ஏன் அவனை மட்டும் தேர்ந்தெடுத்து விசாரித்தார் என்பது கணபதிக்கு இன்று வரை விளங்கவில்லை. ஆள் மாறி அழைத்து விட்டார் என்று தான் ஆரம்பத்தில் நினைத்தான்.

ஒரு ஏழை பிராமண அர்ச்சகர் குடும்பத்தவனான அவனுக்குத் தன்னைப் பற்றி சொல்ல பெரிதாக ஒன்றும் இருக்கவில்லை. திருமணமாகாத இரண்டு அக்காள்கள், ஒரு விதவைத் தாய், ஒரு கிராமத்து சிறிய பிள்ளையார் கோயிலில் மிக சொற்ப வருமானம் தரும் அர்ச்சகர் வேலை இது மட்டுமே தான் அவனுக்கு சொல்ல இருந்த தகவல்கள். இத்தனையும் சொல்லி விட்ட பிறகு நான் வேறொரு ஆள் என்று நினைத்து உன்னை அழைத்து விட்டேன் என்று சொல்லி அவர் அனுப்பி விடுவார் என்று தான் அவன் நினைத்தான். ஆனால் அவர் அப்படி அனுப்பி விடவில்லை. அவனைப் பற்றி ஒரு புத்தகமே எழுதப் போகிறவர் போல அவனைப் பற்றி சர்வமும் விசாரித்தார். அவன் படித்த வேதபாடங்கள் பற்றி, அவன் சொல்லும் மந்திரங்கள் பற்றி, அவன் பூஜிக்கும் வினாயகர் பற்றி, பல விஷயங்களைச் சொல்லி அதைப் பற்றி என்னவெல்லாம் அவன் நினைக்கிறான் என்பது பற்றி எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டார். அறிவிலும் அவன் அவருக்கு சமமானவன் அல்ல, அந்தஸ்திலும் அவன் அவருக்கு சமமானவன் அல்ல, பெயர் புகழிலும் அவனிற்கு எத்தனை ஏணி வைத்தாலும் எட்டாத உயரத்தில் இருப்பவர் அவர். அப்படிப்பட்டவர் மிக அன்போடு அவனை அழைத்துப் பேசியதும், அவனைப் பற்றிக் கேட்டதும் அவனுக்குக் கண்களில் நீரை வரவழைத்து விட்டது.

கடைசியில் அவன் கேட்டான். “ஐயா, என்னை மாதிரி ஒரு சாதாரணமானவனை எதுக்கு இவ்வளவு அன்பா விசாரிக்கறீங்கன்னு தெரியலையே?”

அவன் கேள்விக்கு அவர் உடனடியாகப் பதில் சொல்லவில்லை. பிறகு புன்னகையுடன் சொன்னார். “எனக்கு நீ சாதாரணமானவன்னு தோணலை. அது தான்....”

கணபதிக்கு ஒன்றும் புரியவில்லை. அதற்குப் பிறகு அவர் தரிசனத்திற்கு ஆறு மாதங்களுக்கு முன் ஒரு முறை வந்தான். ஆனால் அன்று அவரை சந்தித்துப் பேச முடியவில்லை. நிறைய கூட்டம் இருந்தது. நான்கு பேரை மட்டும் கூப்பிட்டு பேசிய அவர் அத்துடன் நிறுத்திக் கொள்ள மற்றவர்கள் எல்லாம் ஏமாற்றத்தோடு திரும்பிப் போக வேண்டி வந்தது.

இன்று அவராகவே கூப்பிட்டு அனுப்பியது அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. முதலில் எம்.எல்.ஏவை அழைத்து ஐந்தே நிமிடங்களில் பேசி அனுப்பி விட்ட குருஜி இரண்டாவதாக அவனைத் தான் அழைத்தார். அத்தனை பிரபலங்கள் காத்திருக்கையில் குருஜி தன்னைக் கூப்பிட்டனுப்பியது அவனுக்குப் பெருமையாக இருந்தது.

சென்று அவரைப் பயபக்தியுடன் தரையில் விழுந்து வணங்கினான். மிக நெருங்கிய நண்பனை விசாரிப்பது போல அவர் அவனைத் தட்டிக் கொடுத்து விசாரித்தார். “எப்படி இருக்கே கணபதி?”

”ஏதோ இருக்கேன் குருஜி.”

“உன்னோட பிள்ளையார் எப்படி இருக்கார்?.” குருஜி புன்னகையுடன் கேட்டார்.

”அவரும் போரடிச்சுப் போய் உட்கார்ந்திருக்கார்” என்று சொல்லி விட்டு களங்கமில்லாமல் கலகலவென்று சிரித்தான் கணபதி. “என்னை மாதிரியே அவரையும் அதிகமா யாரும் கண்டுக்கறதில்லை குருஜி. எங்கெங்கேயோ தூரமா எல்லாம் போய் பெரிய கோயில்கள்ல சாமி கும்பிடற மனுஷங்க பக்கத்துல இருக்கிற சின்னக் கோயிலுக்கு வர யோசிக்கிறாங்க. வழக்கமா வர்ற நாலஞ்சு பேர் தான் தினம் வர்றாங்க. அவரைப் பார்க்க கூட்டம் வரணும்னா பிள்ளையார் சதுர்த்தி வரணும்.”

குருஜி புன்னகையுடன் சொன்னார். “சாமியே கூட பெரிய கோயில்ல இருந்தால் தான் மரியாதை. இல்லையா?”

“அப்படித்தான் உலகம் இருக்குது குருஜி”

சிறிது நேரம் அவன் குடும்பத்தைப் பற்றி விசாரித்த அவர் பிறகு விஷயத்துக்கு வந்தார். “கணபதி. சில நாள் உன் பிள்ளையாருக்குப் பூஜை செய்ய வேற ஆளை ஏற்பாடு செய்து விட்டு வேற ஒரு இடத்துக்குப் பூஜை செய்யப் போக முடியுமா?”

கணபதி யோசனையுடன் சொன்னான். “என் ஒன்னு விட்ட தம்பி சுப்புணி வேலை இல்லாமல் சும்மா தான் இருக்கான். ஆனா அவனை பிள்ளையாருக்கு பூஜை செய்ய கூப்பிட்டா தினமும் எழுபது ரூபாய் கேட்கிறான்... போன வாரம் என் தாய் மாமன் மகன் கல்யாணத்துக்கு நான் போக வேண்டி இருந்தது. வேற வழியில்லாம தந்தேன்....”

“அது ஒரு பிரச்சினை இல்லை. அவனுக்கு தினமும் எழுபது தரவும், உனக்கு தினமும் பூஜை செய்ய ஐநூறு ரூபாய் தரவும் ஒரு கோயில் நிர்வாகம் தயாரா இருக்கு. போகிறாயா?”

அவனுக்கு தினமும் ஐநூறு, அதுவும் சுப்புணிக்கும் எழுபது அவர்களே தந்து விடுகிறார்கள் என்பது கேட்டு கணபதி ஒரு கணம் கண்களை ஆச்சரியத்துடன் விரித்தான். “எந்த சாமிக்கு பூஜை? எத்தனை நாளைக்கு?”

“உன் பிள்ளையாரோட அப்பாவுக்கு – சிவலிங்கத்துக்கு. பதினஞ்சு இருபது நாளுக்கு மட்டும் தான்”.

“எந்தக் கோயில்ல குருஜி?”

குருஜி ஒரு கதையைக் கச்சிதமாகச் சொல்லத் தயாரானார்...

(தொடரும்)

பரம(ன்) ரகசியம்! - 5

பரமேஸ்வரன் தாயிற்கு விளக்க ஆரம்பித்தார்.
தோட்ட வீட்டிற்கு அவர்கள் ஒரு வேலையாள் வைத்திருந்தார்கள். அவன் காலை வந்து இருந்த வேலைகள் செய்து விட்டு மதியம் சென்று விடுவான். எப்போதாவது கூடுதல் வேலை இருந்தால் மட்டுமே அவன் மாலை வரை இருப்பான். அந்த வேலைக்காரன் சம்பளம் வாங்க மட்டும் ஒவ்வொரு மாதமும் முதல் தேதி பரமேஸ்வரனிடம் வருவான். அவனிடம் பரமேஸ்வரன் அதிகம் பேசியதோ, விசாரித்ததோ இல்லை. அதற்கான அவசியம் இருந்ததாக அவர் நினைத்ததில்லை. இன்று காலையில் முதலில் பிணத்தைப் பார்த்து விட்டு அழைத்தவன் அவன் தான். குடும்பத்தினரை விட அதிக நேரம் பசுபதியுடன் இருந்தவன் என்பதால் இன்று போலீசார் அவனிடம் இரண்டு மணி நேரமாவது விசாரணை நடத்தி இருப்பார்கள். அவன் அவர்களிடம் என்ன சொன்னான் என்பது தெரியாது. ஆனால் அவன் வேலையை முடித்து விட்டுப் போன பிறகு யாராவது வந்து போனால் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. 

யாரெல்லாம் வந்து போவார்கள் என்று போலீசார் கேட்டதற்கு யாரும் வந்து போக வாய்ப்பில்லை என்று அவர் பதில் சொல்லி இருந்தாலும் இப்போது அதில் அவருக்கும் சந்தேகம் வர ஆரம்பித்தது. அண்ணனாக எதையும் சொல்லவில்லை. அவராக எதையும் கேட்டதும் இல்லை......
”உன் கிட்ட எப்பவாவது பசுபதி அந்த சித்தரைப் பத்தி பேசி இருக்கானா?” ஆனந்தவல்லி கேட்டாள்.
“இல்லை. அவரைப்பத்தின்னு இல்லம்மா எதைப்பத்தியும் அதிகம் அவன் பேசினதில்ல. எப்ப போறப்பவும் பேசறது நான் தான். அமைதியா அண்ணா நான் சொல்றதை எல்லாம் கேட்டுகிட்டு மட்டும் இருப்பான். அதிசயமா அவன் அதிகம் பேசினது கடைசி ரெண்டு தடவை தான். உன்னைக் கூட்டிகிட்டு போனப்பவும், அதற்கு அடுத்ததா நான் கடைசியா அவனை சந்திச்சப்பவும்....”
ஆனந்தவல்லி ஆர்வத்துடன் கேட்டாள். “கடைசியா நீ சந்திச்சப்ப அவன் என்ன சொன்னான்.....”
பரமேஸ்வரன் உடனடியாக பதில் சொல்லவில்லை. அவர் பின் பேசிய போது அவர் குரல் கரகரத்தது. “அண்ணா சாவு வரும்னு அப்பவே எதிர்பார்த்திருந்த மாதிரி இருந்துச்சும்மா. அவன் தன்னோட சாவைப் பத்தியும், அந்த சிவலிங்கத்தைப் பத்தியும் பேசினான்....”
ஆனந்தவல்லி திகைப்புடன் இளைய மகனைப் பார்த்தாள். “அப்புறம் ஏண்டா என் கிட்ட அன்னைக்கே சொல்லல...”
”அப்ப நான் அதை சீரியஸா நினைக்கலம்மா” என்றார் பரமேஸ்வரன்.
எழுபது வயதானாலும் சர்க்கரை, இரத்த அழுத்தம், வேறு உடல் பிரச்சினைகள் எதுவும் இல்லாத பசுபதி அந்த கடைசி சந்திப்பில் அபூர்வமாக தன் மரணத்தைப் பற்றி தம்பியிடம் பேசினார். இனி அதிக காலம் வாழ்வது சந்தேகம் என்று சொன்னார். 
“எல்லா வியாதியும் இருக்கிற நானே இன்னும் சாவைப் பத்தி யோசிக்கல. நீ ஏன் அதைப் பத்தி பேசறே அண்ணா”
“மரணம் வியாதி மூலமாய் தான் வரணும்கிற கட்டாயம் இல்லடா”
அன்று அந்த வாக்கியத்திற்குப் பெரிய அர்த்தத்தைப் பார்க்க வேண்டும் என்று பரமேஸ்வரன் நினைக்கவில்லை.
பசுபதி பரமேஸ்வரனிடம் கேட்டார். “உன் பேரன் என்ன செய்யறான்?”
மகளின் மகனைத் தான் கேட்கிறார் என்று நினைத்த பரமேஸ்வரன் “மகேஷ் எம்பிஏ செய்யறாண்ணா” என்றார். அண்ணன் இது வரை அவருடைய குடும்ப நபர்களை விசாரித்ததில்லை. எனவே அவர் கேட்டது ஆச்சரியமாய் இருந்தது.
”நான் அவனைக் கேட்கல. உன் மகனோட மகனைக் கேட்டேன்....”
பரமேஸ்வரனுக்குத் திகைப்பு கூடியது. அவரே அந்த பேரனைப் பற்றி நினைத்ததில்லை. நினைக்க விரும்பியதுமில்லை. என்றைக்கு அவர் மகன் தன் சக விஞ்ஞானியான ஒரு தெலுங்குப் பெண்ணை அவருடைய விருப்பத்திற்கு மாறாகத் திருமணம் செய்து கொண்டானோ அன்றே அவரைப் பொருத்தவரை இறந்து விட்டான் என்றே நினைத்தார். மகன் அமெரிக்காவிற்கு சென்று அங்கேயே நிரந்தரமாகத் தங்கி விட்டதும், அவனுக்கு அங்கே ஒரு ஆண் குழந்தை பிறந்ததும் அவர் காதில் விழுந்தது. ஆனால் சம்பந்தமில்லாத நபர்களைப் பற்றிய தகவல்கள் போல அவர் அதை எடுத்துக் கொண்டார். அதனால் மகனுக்கு மகன் பிறந்த விஷயத்தைக் கூட அவர் அண்ணனுக்குத்  தெரிவிக்கவில்லை. சென்ற வருடம் அவர் மகன் இறந்து விட்டதாக அவர் மருமகள் போனில் தெரிவித்தாள். அப்போது அவர் சொன்னார். “என் மகன் செத்து இருபத்தி ஆறு வருஷம் ஆச்சு. நீங்க யாரைச் சொல்றீங்கன்னு எனக்குத் தெரியல”
அந்த அளவு மனதால் அறுத்து விட்ட உறவை அண்ணன் ஏன் கேட்கிறார் என்று நினைத்தவராய் “தெரியல அண்ணா. இப்ப அவங்களோட எனக்கு எந்த தொடர்புமே இல்லை” என்றார். கூடவே அப்படி ஒரு பேரன் அமெரிக்காவில் இருக்கிறான் என்பதை இவருக்கு யார் சொல்லியிருப்பார்கள் என்ற சந்தேகம் அவருக்கு வந்தது. ஆனால் அவர் அதை வாய் விட்டு அண்ணனிடம் கேட்கவில்லை.
”ஒரு வேளை எனக்கு ஏதாவது ஆச்சுன்னா இந்த சிவலிங்கத்தை அவன் கிட்ட சேர்த்துடு. இது இனி அவனுக்கு பாத்தியப்பட்டது... ஒரு வேளை இந்த சிவலிங்கத்துக்கு ஏதாவது ஆனாலும் கூட அவனுக்குத் தெரிவிச்சுடு”
பரமேஸ்வரனுக்கு அண்ணன் அன்று பேசுவதெல்லாம் விசித்திரமாக இருந்தது. ”அண்ணனுக்கு என்ன ஆயிற்று. என்னென்னவோ பேசுகிறானே?” என்று நினைத்தவராய் சொன்னார். “அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்து செட்டிலானதால ஒரு அமெரிக்கனாவே அவன் வாழ்ந்துட்டு இருப்பான் அண்ணா. அவன் இந்த சிவலிங்கத்தை வச்சு என்ன பண்ணப் போறான்”
“இருக்கிற மண் எதுவானாலும் விதை நம் வம்சத்தோடதுடா. எப்படியாவது இதை அவன் கையில சேர்த்துடு...”
மகன் இறந்ததைச் சொன்ன மருமகளிடம் “என் மகன் செத்து இருபத்தி ஆறு வருஷம் ஆச்சு. நீங்க யாரைச் சொல்றீங்கன்னு எனக்குத் தெரியல” என்று சொன்னதையும், மகனின் மகன் பெயர் என்ன என்று கூடத் தெரியாது என்பதையும் பரமேஸ்வரன் அன்று அண்ணனிடம் சொல்லப் போகவில்லை.
”உனக்குப் பிறகு பேசாமல் இதை ஏதாவது கோயிலுக்குக் கொடுத்துடறது நல்லது அண்ணா..” என்றார் பரமேஸ்வரன். சிலைக்கு ஏதாவது ஆனாலும் என்பதற்கு அவர் அன்று பெரிய முக்கியத்துவம் தரவில்லை. அந்தக் கல் சிலைக்கு என்ன ஆகப் போகிறது?
”இது அவன் கைக்குப் போகணும்கிறது விதி. அவன் கிட்ட போனதுக்கப்புறம் அவன் அதை என்ன வேணும்னாலும் செஞ்சுக்கட்டும்....” பசுபதி சொன்னார்.
மறுபடி மறுக்க பரமேஸ்வரன் முற்படவில்லை. முதலில் அண்ணாவிற்கு ஏதாவது ஆனால் தானே இத்தனையும் என்று நினைத்தவராய் அந்தப் பேச்சை அத்துடன் விட்டார்.
கிளம்பிய போது பசுபதி எப்போதுமில்லாத வாத்சல்யத்துடன் தம்பியின் முதுகைத் தடவிக்கொடுத்தார். அதுவே அண்ணனுடன் இருந்த கடைசி தருணம்... இப்போதும் அண்ணன் கை தன் முதுகில் இருப்பது போல பரமேஸ்வரன் உணர்ந்தார். அண்ணனுடனான கடைசி சந்திப்பைத் தாயிடம் தெரிவிக்கையில் பரமேஸ்வரன் கண்கள் லேசாகக் கலங்கின. 
எல்லாம் கேட்ட ஆனந்தவல்லிக்கு நிறைய நேரம் பேச முடியவில்லை. கேட்டதெல்லாம் அவளுக்கு மலைப்பையும் துக்கத்தையும் ஏற்படுத்தி இருந்தன.
பரமேஸ்வரன் தாயிடம் கேட்டார். “நான் என்ன செய்யணும்னு நினைக்கறம்மா நீ”
“என் குழந்தை சாக யாரெல்லாம் காரணமா இருந்தாங்களோ அவங்கள நீ சும்மா விட்டுடக்கூடாது. அவங்களுக்கு தண்டனை கிடைச்சா தான் இந்த பெத்த வயிறுல பத்தி எரியற நெருப்பு அணையும்டா”
“நான் போலீஸ் கமிஷனர் கிட்ட பேசிட்டேன்மா. ஒரு திறமையான ஆள் கிட்ட இந்தக் கேஸை ஒப்படைக்கறதா சொல்லியிருக்கார். கண்டிப்பா சீக்கிரமே குற்றவாளிகளைப் பிடிச்சுடலாம்னு சொல்லியிருக்கார். நான் உன் கிட்ட கேட்டது அந்த சிவலிங்கத்தைப் பத்தி...”
ஆனந்தவல்லி சிறிதும் யோசிக்காமல் சொன்னாள். “அந்த சிவலிங்கம் இத்தனை நாள் நம்ம குடும்பத்துக்கு செஞ்சதெல்லாம் போதும். தொலைஞ்சு போனது நல்லதே ஆச்சு. அது இன்னும் திரும்பக் கிடைச்சாலும் அதை வச்சு கொண்டாட வேண்டாம்டா...”
அம்மா சொல்வது பரமேஸ்வரனுக்கு சரி என்றே பட்டது. அந்த முடிவுக்கு வந்தால் அமெரிக்காவில் வசிக்கிற அந்தப் பையனிடம் அது பற்றி பேச வேண்டியதில்லை. புதியதாய் ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளத் தேவை இல்லை.... ஆனால் ....
பரமேஸ்வரன் ஆழமாய் யோசிப்பதைப் பார்த்த ஆனந்தவல்லி மெல்ல கேட்டாள். “நீ என்ன யோசிக்கிறே?”
“அண்ணன் இத்தனை காலம் என் கிட்ட எதையுமே கேட்டதில்லை அம்மா. கடைசியா கேட்ட இதைக் கூட நான் செய்யலேன்னா நான் என்னையே மன்னிக்க முடியும்னு தோணலைம்மா”
ஆனந்தவல்லிக்குப் புரிந்தது. அந்த சிவலிங்கம் அவ்வளவு சுலபமாய் அவள் குடும்பத்தை விட்டு நிரந்தரமாகப் போகப் போவதில்லை. அவள் கணவர் வாழ்ந்த வரை அடிக்கடி ஒன்று சொல்வார். “எல்லாம் சிவன் சித்தம்”. இப்போது நடப்பதும் அவன் சித்தமோ?
ஒன்றும் சொல்லாமல் தளர்ச்சியுடன் எழுந்தவள் சுவரைப் பிடித்தபடி தனதறைக்குச் சென்றாள்.
மறு நாள் காலை  பரமேஸ்வரன் தன் மகனின் நெருங்கிய நண்பர் தென்னரசுக்குப் போன் செய்து தன் அமெரிக்கப் பேரனுடைய போன் நம்பரை வாங்கினார். தென்னரசு கல்லூரிப் பேராசிரியராக இருக்கிறார். அவர் பரமேஸ்வரன் திடீரென்று கேட்டதற்கு மிகவும் ஆச்சரியப்பட்டது போல இருந்தது. ஒரு கணம் பேச்சிழந்த அவர் அதைக் காட்டிக் கொள்ளாமல் அவன் போன் நம்பரைத் தந்தார்.
பரமேஸ்வரன் தயக்கத்துடன் கேட்டார். “அவனுக்கு....தமிழ் தெரியுமா. நான் தமிழில் பேசினா அவனுக்குப் புரியுமா...”
“அவனுக்கு தமிழ் நல்லாவே தெரியும் சார். அவன் தமிழ்ல பேசறதைக் கேட்டா அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த பையன்னு யாரும் சொல்ல மாட்டாங்க”
பரமேஸ்வரன் மீண்டும் தயக்கத்துடன் கேட்டார். “அவன்...அவன்.. பெயர் என்ன?”
“ஈஸ்வர் சார்”
ஈஸ்வர்.... அவருடைய மகன் தன் மகனிற்கு அவருடைய பெயரைத் தான் வைத்திருக்கிறான்....மகனின் நினைவுகளும், பழைய கோபமும் மனதில் ஒன்றை ஒன்று மேலோங்க சிறிது நேரம் கனத்த மனத்துடன் உட்கார்ந்திருந்து விட்டு பேரனுக்குப் போன் செய்தார்.
“ஹலோ”- பேரனின் குரல் கம்பீரமாய் கேட்டது.
“ஹலோ... நான் உன் தாத்தா....பரமேஸ்வரன் இந்தியாவில் இருந்து பேசறேன்...”
ஒரு சில வினாடிகள் மௌனம் சாதித்த ஈஸ்வர் சொன்னான். “ஹலோ நீங்க தப்பான ஆளுக்கு போன் பண்ணியிருக்கீங்கன்னு நினைக்கிறேன். எனக்குத் தெரிஞ்சு உங்க மகன் 27 வருஷங்களுக்கு முன்னாடியே இறந்துட்டார்னு நினைக்கிறேன். அவர் இறந்து ஒரு வருஷம் கழிஞ்சு பிறந்தவன் நான். அதனால நான் உங்க பேரனாய் இருக்க வாய்ப்பில்லை”
ஈஸ்வர் போனை வைத்து விட்டான். பரமேஸ்வரன் ஓங்கி அறையப்பட்டது போல உணர்ந்தார்.


(தொடரும்)

பரம(ன்) ரகசியம்! - 2



அந்தக் கொலைகாரனிடம் போனில் தெரிவித்தபடி ஆட்கள் மூன்று பேர் இரண்டு கார்களில் சொன்ன நேரத்திற்குள் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் வந்த போது அவன் தோட்டத்தின் முன் இரும்புக் கதவு பாதி திறந்து கிடந்தது. மறுபாதிக் கதவின் கீழ்க்கம்பிகளில் ஒன்றைப் பிடித்தபடி அவன் கீழே உட்கார்ந்திருந்தான். தெருவில் ஆள் நடமாட்டமே இல்லாமல் இருந்தால் கூட இப்படியா தெருவிளக்கின் ஒளியில் அலட்சியமாக உட்கார்ந்திருப்பது என்று நினைத்தவனாய் முதல் காரில் இருந்து இறங்கியவன் அவனை நெருங்கினான்.
 

கார்கள் வந்து நின்ற சத்தம் கூட அந்தக் கொலைகாரன் கவனத்தைத் திருப்பவில்லை.  அதனால் ஏதோ பிரச்சினை என்பதை உணர்ந்த முதல் கார் ஆசாமி குனிந்து அந்தக் கொலைகாரனை உற்றுப்பார்த்தான். பின் மூக்கருகே கையை வைத்துப் பார்த்தான். மூச்சில்லை. அப்போது தான் அந்தக் கொலைகாரன் இறந்து போயிருந்தது உறைத்தது. திகைப்புடன் அவனை முதல் கார் ஆசாமி கூர்ந்து பார்த்தான். உடலில் எந்தக் காயமும் இல்லை. முகத்தில் மட்டும் எதையோ பார்த்து பயந்த பீதி பிரதானமாகத் தெரிந்தது. ஏதோ அதிர்ச்சியில் இறந்து போயிருக்க வேண்டும்....
 

இரண்டாவது காரில் இருந்து ஒருவன் தான் இறங்கி வந்தான். “என்னாச்சு”
 

“செத்துட்டான்”
 

“எப்படி?”
 

“தெரியல. முகத்தப் பார்த்தா ஏதோ பயந்து போன மாதிரி தெரியுது”
 

“பயமா, இவனுக்கா....” என்று சொன்ன இரண்டாவது கார் ஆசாமி அருகில் வந்து இறந்தவனை உற்றுப்பார்த்தான். அவன் சொன்னது உண்மை என்று தெரிந்தது. தேர்ந்தெடுக்கும் போதே பயமோ, இரக்கமோ, தயக்கமோ இல்லாத ஆளாகப்பார்த்துத் தான் அவர்கள் அவனைத் தேர்ந்தெடுத்து இருந்தார்கள். அப்படிப்பட்ட அவனையே இந்தக் கோலத்தில் பார்த்த போது ஏற்பட்ட அதிர்ச்சியில் ஒருகணம் இரண்டாவது கார் ஆசாமி பேச்சிழந்து போனான்.
 

“என்ன செய்யலாம்?” முதல் கார் ஆசாமி கேட்டான்.
 

ஆயிரம் கேள்விகள் மனதில் எழுந்தாலும், இந்த சூழ்நிலையை சிறிதும் எதிர்பாராமலிருந்தாலும் கூட இரண்டாவது கார் ஆசாமி தன்னை உடனடியாக சுதாரித்துக் கொண்டான். ஒரு முறை ஆழமாக மூச்சை உள்ளிழுத்து வெளி விட்டவன் அமைதியாகச் சொன்னான். “முதலில் இவனுக்கு நாம் கொடுத்த செல்லை எடு”
 

முதல் கார் ஆசாமி இறந்தவன் சட்டைப்பையில் வைத்திருந்த இரண்டு செல் போன்களை வெளியே எடுத்தான். ஒன்று கொலைகாரனுடையது. இன்னொன்று அவர்கள் அவனுக்குக் கொடுத்தது.
 

“நம் செல்போனில் வேறு யாரிடமாவது எங்காவது பேசியிருக்கிறானான்னு பார்”
 

முதல் கார் ஆசாமி தாங்கள் கொடுத்திருந்த செல்போனில் ஆராய்ந்து விட்டுச் சொன்னான். “நம்மிடம் மட்டும் தான் பேசியிருக்கான். வேற எந்தக் காலும் இதுக்கும் வரல. இவனை என்ன பண்ணறது?”
 

”இவனை சுவரின் மறைவுக்கு இழுத்து விடு. வெளியே இருந்து பார்த்தால் தெரியாதபடி இருந்தால் போதும்”
 

கவனமாக பிணத்தை சுவர்ப்பக்கம் அவன் இழுத்துப் போட்ட பிறகு இரண்டாம் கார் ஆசாமி சொன்னான். “போய் உள்ளே என்ன நிலவரம்னு பார்க்கலாம் வா”
 

அவர்கள் இருவரும் வேகமாக வீட்டை நோக்கி நடந்தார்கள்.  நடக்கும் போது முதல் கார் ஆசாமி கேட்டான். “அவன் பயத்துலயே செத்திருப்பானோ? என்ன ஆகியிருந்திருக்கும்?”
 

”தெரியல. எனக்கு சந்தேகம், நாம சொன்னதையும் மீறி அந்த பூஜையறைக்குள்ளே நுழைஞ்சிருக்கலாம். ஏதாவது செய்திருக்கலாம்.....”
 

“அது அவ்வளவு அபாயமானதா?”
 

இரண்டாம் கார் ஆசாமி பதில் சொல்லவில்லை. அதற்குள் அவர்கள் வீட்டை எட்டி விட்டிருந்தார்கள். சர்வ ஜாக்கிரதையுடன் வாசலிலேயே நின்று கொண்டு உள்ளே எட்டிப்பார்த்தார்கள். பத்மாசனத்தோடே கவிழ்ந்திருந்த முதியவர் பிணம் அவர்களை வெறித்துப் பார்த்தது. முகத்தில் இரத்த வரிகள் இருந்தாலும் அவர் முகத்தில் இருந்த அமைதியையும் அவரைக் கொன்றவன் முகத்தில் இருந்த பீதியையும் ஒப்பிடாமல் அவர்களால் இருக்க முடியவில்லை....
 

“இதென்ன இந்த ஆள் பத்மாசனத்துலயே இருக்கார். இது இயல்பா தெரியலயே...” முதல் கார் ஆசாமிக்குத் தன் திகைப்பை வெளிக்காட்டாமல் இருக்க முடியவில்லை.
 

“உன்னால கொஞ்ச நேரம் பேசாமல் இருக்க முடியுமா?” என்று குரலை உயர்த்தாமல் பல்லைக் கடித்துக் கொண்டு சொன்ன இரண்டாம் கார் ஆசாமி ஹாலை ஆராய்ந்தான். கிழவரின் பிணத்தைத் தவிர வேறு எதுவும் வித்தியாசமாக இருப்பதாகத் தோன்றவில்லை.
 

உள்ளே அவன் நுழைந்தான். படபடக்கும் இதயத்துடன் பூஜையறையைப் பார்த்தான். சிவலிங்கம் இன்னும் அங்கேயே இருந்தது. ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டான் அவன். அவனைத் தொடர்ந்து முதல் கார் ஆசாமியும் உள்ளே நுழைந்தான்.
 

இரண்டாம் கார் ஆசாமி எச்சரித்தான். “எதையும் தொட்டுடாதே. கவனமா இரு”
 

முதல் கார் ஆசாமி தலையசைத்தான். இருவரும் மெல்ல பூஜையறைக்கு இரண்டடி தள்ளியே நின்று பூஜையறையை நோட்டமிட்டார்கள். பூஜையறையில் திருநீறு டப்பா கவிழ்ந்து திருநீறு தரையில் கொட்டிக் கிடந்தது. ஹாலின் விளக்கொளியில் அதற்கு மேல் பூஜையறையில் வேறு அசாதாரணமானதாக எதுவும் தெரியவில்லை.
 

இரண்டாம் கார் ஆசாமி தன் கைக்குட்டையை எடுத்து அதைப்பிடித்தபடி ஹாலில் இருந்த பூஜையறை ஸ்விட்ச்சைப் போட்டான். ஓரடி தூரத்தில் இருந்தே பூஜையறையை மேலும் ஆராய்ந்தான். அப்போது தான் பூஜையறையின் ஒரு ஓரத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த தேவார, திருவாசகப் புத்தகங்கள் சரிந்து கிடந்தது தெரிந்தது.
 

“முட்டாள்... முட்டாள்.... அவன் உள்ளே போயிருக்கிறான்” இரண்டாம் கார் ஆசாமி ஆத்திரத்துடன் பல்லைக் கடித்தான். சில வினாடிகளில் சுதாரித்துக் கொண்ட அவன் அடுத்தவனிடம் சொன்னான். “அவனை வரச் சொல்...”
 

முதல் கார் ஆசாமி அவசரமாகப் போனான். வெளியே இருந்த முதல் காரின் பின் கதவைத் திறந்து அங்கு அமர்ந்திருந்தவனை “வாங்க” என்றான்.

இடுப்பில் ஈரத்துண்டை கச்சை கட்டிக் கொண்டிருந்த ஒரு ஆஜானுபாகுவான இளைஞன் காரில் இருந்து இறங்கினான். அவன் செருப்பு இல்லாமல் வெறும் காலுடன் இருந்தான். அவன் நெற்றியிலும், கைகளிலும், புஜங்களிலும், நெஞ்சிலும் திருநீறு பூசி இருந்தான். அவன் வாய் ஏதோ மந்திரங்களை முணுமுணுத்துக் கொண்டிருந்தது.
 

இருவரும் உள்ளே போனார்கள். அந்த இளைஞன் அக்கம் பக்கம் பார்க்காமல் நேர் பார்வையுடன் சீரான வேகத்தில் சென்றான். வீட்டினுள்ளே நுழையும் போது முதியவரின் பிணத்தைப் பார்க்க நேர்ந்த போது மட்டும் அவன் ஒரு கணம் அப்படியே நின்றான். அவனையும் அந்த விலகாத பத்மாசனம் திகைப்பை அளித்திருக்க வேண்டும்.
 

தாமதமாவதை சகிக்க முடியாத இரண்டாம் கார் ஆசாமி அவனுக்கு பூஜையறையைக் கை நீட்டி காண்பித்தான். அந்த இளைஞன் திகைப்பில் இருந்து மீண்டு பூஜையறைக்குள் நுழைந்தான். உள்ளே நுழைந்தவுடன் சாஷ்டாங்கமாய் நமஸ்கரித்தான். மந்திரங்களை உச்சரித்தபடியே அந்த சிலையை அவன் பயபக்தியுடன் தொட்டு வணங்கினான். ஏதோ ஒரு லேசான மின் அதிர்ச்சியை உணர்ந்தது போல அவனுக்கு உடல் சிலிர்த்தது.
 

அதைக் கவனித்த முதல் கார் ஆசாமி “என்ன?” என்று சற்றே பயத்துடன் கேட்டான்.
 

அந்த இளைஞன் பதில் சொல்லவில்லை. அவன் பக்கம் திரும்பிப் பார்க்கவும் இல்லை. இரண்டாம் கார் ஆசாமி தன் சகாவிடம் அவசரமாய் தாழ்ந்த குரலில் எச்சரித்தான். “அவன் கவனம் இப்போது எதிலும் திரும்பக்கூடாது. நீ எதுவும் கேட்காதே....பேசாமலிரு”
 

முதல் கார் ஆசாமி அதற்குப் பிறகு வாயைத் திறக்கவில்லை.
 

அந்த இளைஞன் கை கூப்பி ஒரு முறை வணங்கி விட்டு அந்த சிவலிங்கத்தைத் தூக்கினான். அந்த சிவலிங்கம் மிக அதிக கனம் இல்லை. சுமார் பத்து அல்லது பன்னிரண்டு கிலோ தான் இருக்கும். அதைத் தூக்கிக் கொண்டு அந்த இளைஞன் வெளியே வந்தான். அவன் உதடுகள் ஏதோ மந்திரத்தை உச்சரித்தபடி இருந்தன.
 

அவன் வேகமாக சிவலிங்கத்துடன் வெளியே செல்ல மற்ற இருவரும் அவனைப் பின் தொடர்ந்தார்கள். அந்த இளைஞன் தன் கையில் இருக்கும் சிவலிங்கம் கனத்துக் கொண்டே போவது போல் உணர்ந்தான். அவன் ஆரம்பத்திலேயே எச்சரிக்கப்பட்டிருந்தான். ” அந்த சிவலிங்கம் இங்கு வந்து சேர்வதற்குள் நீ எதிர்பாராத எத்தனையோ நடக்கலாம். சிவலிங்கம் உன் கையில் இருக்கும் போது பிரளயமே ஆனாலும் சரி, இந்த மந்திரத்தை சொல்வதை மட்டும் நீ நிறுத்தி விடக்கூடாது. இது தான் உன் பாதுகாப்பு கவசம். அதே போல சிவலிங்கத்தைக் கீழே போட்டு விடவும் கூடாது....”
 

அந்த நள்ளிரவுக் குளிரிலும் அந்த இளைஞனுக்கு வியர்க்க ஆரம்பித்தது. சிவலிங்கம் அநியாயத்திற்கு எடை கூடிக்கொண்டு போனது. ஏதோ ஒரு அசௌகரியத்தை உடலெல்லாம் அவன் உணர்ந்தான். முன்பே அறிவுறுத்தப்பட்டபடி அவன் அந்த மந்திரத்தை மட்டும் விடாமல் சொல்லிக் கொண்டிருக்க, காரை வந்தடைந்தான்.
 

முதல் காரின் பின் சீட்டில் முன்பே புதிய பட்டுத்துணி ஒன்று விரிக்கப்பட்டு இருந்தது.  அதில் மிகக் கவனமாய் அந்த சிவலிங்கத்தை வைத்து விட்டு அதன் அருகில் அந்த இளைஞன் தானும் அமர்ந்தான். இறக்கி வைத்த பின் தான் அவனுக்கு நிம்மதியாக இருந்தது. கார் வேகமாகக் கிளம்பியது.
 

முதல் காரைத் தொடர்ந்தே இரண்டாவது காரும் வேகமாகத் தொடர்ந்தது. இரண்டாவது கார் ஆசாமி நிம்மதிப் பெருமூச்சு விட்டான். வந்த வேலை நன்றாகவே முடிந்து விட்டது. அந்தக் கொலைகாரன் தான் தேவை இல்லாமல் உயிரை விட்டு விட்டான்.... அவன் எப்படி இறந்தான்? பயமே அறிந்திராத அவன் எதைப்பார்த்து பயந்தான்? கிழவரைக் கொன்று விட்டு தெரிவித்த போது கூட அவன் சாதாரணமாகத் தானே இருந்தான்! பிறகு ஏதோ ஒரு உந்துதலில் அவன் பூஜையறைக்குள் நுழைந்திருக்க வேண்டும். பின் என்ன ஆகியிருந்திருக்கும்?... மனதின் நீண்ட கேள்விகள் செல் போன் சத்தத்தில் அறுபட்டன. செல் போனை எடுத்துப் பேசினான். “ஹலோ”
 

முதல் கார் ஆசாமி தான் பேசினான். “ஏ.சி போட்டுக்கூட இவனுக்கு அதிகமா வியர்க்குது. ஏதோ ஜுரத்தில் இருக்கிற மாதிரி தோணுது. இவ்வளவு நேரமா மந்திரத்தை மெல்ல உச்சரிச்சிட்டு இருந்தவன் சத்தமாய் சொல்ல ஆரம்பிச்சிருக்கான்.  ஏதோ பைத்தியம் பிடிச்சிட்ட மாதிரி தோணுது. என்ன செய்யறது?” அவன் குரலில் பயம் தொனித்தது.
 

இரண்டாம் கார் ஆசாமி காதில் அந்த இளைஞன் சத்தமாகச் சொல்லும் மந்திரம் நன்றாகவே கேட்டது. இரண்டாம் கார் ஆசாமி அமைதியாகச் சொன்னான். “இதுல நாம் செய்யறதுக்கு எதுவுமில்லை. சீக்கிரமா அந்த சிலையை அங்கே சேர்த்திட்டா போதும். மீதியை அவர் பார்த்துக்குவார். நீ கண்டுக்காதே”
 

ஆனால் முதல் கார் ஆசாமிக்கு அப்படி இருக்க முடியவில்லை. நடக்கிற எதுவுமே இயல்பானதாக இல்லை.... ஆழம் தெரியாமல் காலை விட்டு விட்டோமோ என்று தோன்ற ஆரம்பித்தது.

(தொடரும்)