Wednesday, July 16, 2014

அமானுஷ்யன் - 12.



குறுந்தாடி அவருக்காகப் பொறுமையிழந்து காத்துக் கொண்டிருந்தான். அவன் சீக்கியரைப் போலத் தலைப்பாகை இட்டு மாறுவேடத்தில் இருந்தான். அவரை எப்போதும் அவன் அலுவலகத்தில் வந்து சந்தித்ததில்லை. ஆனால் இப்போதைய செய்தி மிக முக்கியமென்பதால் இரவு வரை காத்திருக்க அவனுக்கு நேரமில்லை. ஒரு பொதுத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஒரே ஒரு வார்த்தைதான் அவரிடம் சொல்லியிருந்தான். "அவசரம்"

அவன் குரலைக் கேட்ட அவர் அலுவலகத்துக்கு பதினோரு மணிக்கு வரச் சொன்னார்.

அவன் கடிகாரத்தைப் பார்த்தான். மணி பதினொன்றரை. அரசியல்வாதிகளுக்கும் நேரம் தவறாமை என்ற நல்ல பழக்கத்திற்கும் ஏனோ சம்பந்தமே இருப்பதில்லை. கிட்டத்தட்ட பன்னிரண்டு பேர் கைகளில் மனுக்களுடன் காத்திருந்தார்கள். அடியாட்கள், அன்னக்கைகள் என்று நாலைந்து பேரும் அங்கிருந்தனர்.

அவர் வந்த போது மணி பதினொன்று ஐம்பத்தைந்து. செயலர், இரண்டு அரசு அதிகாரிகளுடன் உள்ளே நுழைந்தவர் அவனைக் கண்டது போலவே காட்டிக் கொள்ளவில்லை. மற்றவர்கள் சல்யூட் அடிக்க அவர் கைகள் கூப்பி அவர்களுக்கு பணிவாக வணக்கம் தெரிவித்து விட்டு தனதறைக்குள் நுழைந்தார். ஆனால் முதலில் கூப்பிட்டனுப்பியது அவனைத்தான்.

அவன் உள்ளே நுழைந்த போது தன் செயலருக்கு ஏதோ சில ஆணைகள் பிறப்பித்துக் கொண்டிருந்த அவர் அவனை உட்கார சைகை காட்டி விட்டு செயலரிடம் போகும் போது கதவை சாத்திக் கொண்டு போகச் சொன்னார்.

கதவை சாத்திக் கொண்டு செயலர் போன பிறகு கேட்டார், "அப்படி என்ன தலை போகிற அவசரம்?"

"அவன் உயிரோடு இருக்கிறான்"

அவர் முகத்தில் இருந்து இரத்தம் வடிந்தது. "என்னது?"

"அவன் உயிரோடு இருக்கிறான்" என்று மீண்டும் சொன்ன அவன் தொடர்ந்தான். "என் ஆள் ஒருவன் அவனை நேரில் பார்த்திருக்கிறான்."

அவருக்கு அதை நம்ப முடியவில்லை. அவன் அன்று காலை தனக்கு வந்த ஃபோன்காலை விவரித்தான். பேச்சில்லாமல் திகைத்துப் போய் அமர்ந்திருந்த அவர் பேச முடிந்த போது வார்த்தைகள் பலவீனமாய் வந்தன. "அவன் எப்படி பிழைத்திருக்க முடியும்?"

"தெரியவில்லை."

"அது சரி, பார்த்த இடத்திலேயே அவனை சுட்டுத் தள்ளாமல் இருந்தது எதனாலாம்...?" அவர் குரல் பலம் பெற ஆரம்பித்தது. கோபத்தில் பொரிந்து தள்ளினார். "ஃபோனில் தகவல் தெரிவிக்க டவர் கிடைக்கவில்லை, சரி. பஸ்ஸை அங்கேயே நிறுத்தி இறங்கி அவனை சுட்டுத் தள்ளியிருக்கலாமே அந்த ஆள்? நீங்கள் கேட்கவில்லையா? அவனைப் பார்த்தவுடனே பயந்து போய் விட்டானா? இந்த மாதிரி பேடிகளை எல்லாம் ஏன் கட்டிக் கொண்டு அழுகிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை"

"சார், அவன் பேடி அல்ல. பல பேரைக் கொன்றவன் அவன். போலீசில் ஒரு தடவை மாட்டி சித்திரவதை அனுபவித்த போது கூட வாய் திறந்து யாரையும் காட்டிக் கொடுக்காதவன். அவன் அந்த அமானுஷ்யன் விஷயத்தில்தான் பயப்படுகிறான். அந்த பயத்திற்குக் காரணம் இல்லாமல் இல்லை. அந்த மலையுச்சியில் ஆறு பேர் துப்பாக்கியால் சுட்டு கிட்டத்தட்ட 15 குண்டுகளில் ஒரே ஒரு குண்டுதான் அவன் மேல் பாய்ந்திருக்கிறது. இத்தனைக்கும் அவனுக்கு அந்த மலையுச்சியில் நகர முடிந்த இடம் குறைவு. அப்படிப்பட்டவனைத் தனியாக தாக்கப் போவது புத்திசாலித்தனம் இல்லை என்று கூட சொல்லலாம்.... "

அவர் அங்கலாய்த்தார். "இப்படிப்பட்டவன் நம் பக்கம் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்!"

அதை அவன் காதில் போட்டுக் கொண்டதாகவே தெரியவில்லை. அவன் கவலை வேறாக இருந்தது. "அவன் உயிரோடு இருந்தால் நமக்கும் நம் திட்டத்திற்கும் ஆபத்து. நான் எங்கள் ஆட்கள் ஏழெட்டு பேரை உடனடியாக அவனைப் பார்த்த இடத்திற்கு போகச் சொல்லியிருக்கிறேன்... அவன் அங்கே இருந்தால் அவனை உயிரோடு அவர்கள் விட மாட்டார்கள்"

"நான் இப்போதுதான் அந்த ஆச்சார்யா கொலைக் கேஸிற்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டு வந்தேன். அதற்குள் இந்தப் பிரச்சினை வந்து விட்டது.... இத்தனை பேர் அவனுக்காக வலை வீசி தேடிக் கொண்டிருக்கும் போது அவன் ஏதோ ஒரு டீக்கடையில் சாவகாசமாய் டீ குடித்துக் கொண்டிருக்கிறான் என்றால் அவன் மனிதனே இல்லை. அவன் உங்கள் ஆட்கள் போகிற வரை அங்கேயே இருப்பானா?" அவர் குரலில் அவன் இன்னமும் அங்கேயே இருப்பான் என்ற நம்பிக்கை இருக்கவில்லை.

*************

அந்தப் பெண் தன்னுடைய விசிட்டிங் கார்டை அவனுக்குத் தந்தாள். "எப்பவாவது டெல்லி பக்கம் வந்தால் கண்டிப்பாக என்னை வந்து பாருங்கள்."

அவன் அந்த விசிட்டிங் கார்டைப் பார்த்தான். சஹானா என்பது அவள் பெயர் என்றும் அவள் பிரபல டிவி ஒன்றில் ரிப்போர்ட்டராக வேலை பார்க்கிறாள் என்பதும் தெரிந்தது. புன்னகையுடன் தலையசைத்தான். அந்த பஸ்ஸ¤ம், வேனும், லாரியும் கிளம்பிச் செல்ல ஆரம்பித்தன. அப்போதுதான் அவள் அங்கு வேறு எதுவும் வண்டிகள் இல்லாததைக் கவனித்தாள். "நீங்கள் அந்த பஸ்ஸில் வந்திருப்பவர் என்று நினைத்தேன். நீங்கள் இங்கேயே இருப்பவர்தானா?"

"இல்லை....." அதற்கு மேல் அவன் விவரிக்க முனையவில்லை.

அவள் குழப்பத்துடன் அவனைப் பார்த்தாள். அவன் ஒன்றும் சொல்லாததைப் பார்த்து தானாகச் சொன்னாள். "நீங்கள் டெல்லி பக்கம் போகிறவராக இருந்தால் காரில் ஏறிக் கொள்ளுங்கள். நான் உங்களை டிராப் செய்கிறேன்..."

அங்கு இனியும் தங்குவது ஆபத்து என்பதை நன்குணர்ந்த அவன் "உங்களுக்கு ஒன்றும் சிரமமில்லையே" என்றான்.

"இதில் என்ன சிரமம் இருக்கிறது...உங்கள் லக்கேஜ் எங்கேயிருக்கிறது?"

"லக்கேஜ் எதுவும் இல்லை"

"அப்படியானால் ஏறிக் கொள்ளுங்கள்" என்று அவள் காரின் பின் பக்கக் கதவைத் திறக்க அவன் தயக்கத்துடன் ஏறிக் கொண்டான். கார் கிளம்பியது.

அவன் அருகில் அமர்ந்திருந்த வயதான பெண்மணி உணர்ச்சியே இல்லாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அந்தச் சிறுவனும் முன் சீட்டில் மண்டியிட்டபடி பின்னால் திரும்பி அவனையே பார்த்தான். அவன் பார்வையில் சினேகம் இருந்தது. அவன் தாய் சொன்னாள். "வருண், சரியாய் சீட்டில் உட்கார்"

"நான் பின்னால் அங்கிள் உடன் உட்காரப் போகிறேன்" என்றான் அந்த சிறுவன்.

"பாட்டியும் அங்கிளும் சௌகரியமாய் உட்காரட்டும்..."

"பரவாயில்லை. வருவதானால் வரட்டும்" என்று அவன் சொல்ல வருண் தாயைப் பார்த்தான். அவள் தலையசைக்க வருண் கைகளை நீட்ட அவன் சிறுவனைத் தூக்கி தன்னருகில் அமர வைத்துக் கொண்டான். வருண் அவனை ஓட்டினாற்போல் உட்கார்ந்து அவனைப் பார்த்து புன்னகைக்க அவனும் புன்னகைத்தான். அவனுக்கு அந்த சிறுவனை மிகவும் பிடித்து விட்டது.

அவன் பின்னால் திரும்பிப் பார்த்தான். எந்த வாகனமும் அவர்களைப் பின் தொடர்வதாகத் தெரியவில்லை.

வருண் அவன் கைகளில் இருந்த சிராய்ப்புகளைப் பார்த்து சொன்னான். "அங்கிள் உங்கள் கையில் ரத்தம்.."

அப்போதுதான் சஹானா பின்னால் திரும்பி அவனுடைய சிராய்ப்புக் காயங்களைக் கவனித்தாள். மகன் காப்பாற்றப்பட்டவுடன் அவனுக்கு ஏதாவது காயம் பட்டிருக்கிறதா என்று அவன் தலையில் இருந்து கால் வரை ஆராய்ந்து பார்த்தவளுக்கு அவனைக் காப்பாற்றிய மனிதனுக்கு ஏதாவது ஆகியிருக்கலாம் என்ற எண்ணம் கூடத் தோன்றாதது ஒரு மாதிரியாக இருந்தது. "சாரி, நான் கவனிக்கவில்லை. இங்கேயே முதலுதவிப் பெட்டி இருக்கிறது...." என்றவள் காரை ஓரமாக நிறுத்தினாள்.

அவனுக்கு அந்த இடத்திலிருந்து எவ்வளவு வேகமாகப் போக முடியுமோ அவ்வளவு வேகமாகப் போய் விட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. "இதெல்லாம் பெரிய காயமில்லை. நீங்கள் காரை நிறுத்த வேண்டாம்" என்று சொல்லிப் பார்த்தான். அவள் கேட்பதாக இல்லை. அவள் நிதானமாக முதலுதவிப் பெட்டியின் சாவியைத் தேட ஆரம்பித்தாள்.

அவன் என்னேரமும் எதிரிகளை எதிர்பார்த்திருப்பதை அவளிடம் சொல்ல முடியாமல் தவித்தான். அவன் பார்வை பின் பக்கமாகவே இருந்தது......

********
மஹாவீர் ஜெயினும் ஆனந்தும் பேசிக் கொண்டிருந்த போது ஜெயினின் ஃபோன் அடித்தது. அழைத்தவர் சிட்டி போலீஸ் கமிஷனர். "சார், உங்கள் அடிஷனல் டைரக்டர் ஆச்சார்யாவைக் கொன்றவனைக் கைது செய்து விட்டோம்...."

அதிர்ந்து போன ஜெயின் கேட்டார். "யார் கொலையாளி? நீங்கள் அவனை எப்படிப் பிடித்தீர்கள்?"

"அந்தக் கொலையாளியைக் கைது செய்த விஷயம் பிரஸ்ஸ¤க்கும், டிவிக்கும் யாரோ தெரியப்படுத்தி விட்டதால் இதே கேள்வியை போலீஸ் அதிகாரிகளிடம் கேட்க நிருபர்கள் கூட்டம் அங்கே மொய்த்துக் கொண்டிருக்கிறது....நீங்கள் டிவியை ஆன் செய்தால் முழு விவரமும் தெரியும். ·ப்ளாஷ் நியூசாக காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள்....."

நன்றி தெரிவித்து விட்டு ஃபோனை வைத்த ஜெயின் ஆனந்தை அழைத்துக் கொண்டு அலுவலகத்தில் டிவி வைத்திருக்கும் ஹாலுக்கு விரைந்தார்.

(தொடரும்)

அமானுஷ்யன் - 11



ஹலோ"

"ஊம்... சொல்லுங்கள்... அவன் பிணம் கிடைத்ததா?"

"இல்லை, சார். அவன் பிழைத்திருந்தால் அந்த புத்த விஹாரத்தில்தான் இருந்திருக்க வேண்டும் என்று நினைத்து அங்கே பத்து பேரை அனுப்பினேன். அங்கே இரண்டாவது தடவை போனதால் அவங்களுக்கே பயம் வந்து அவர்களின் பாதாள அறையைக் கூடத் திறந்து காட்டியிருக்கிறார்கள்...அங்கேயும் உள்ளே போய் ஆட்கள் பார்த்திருக்கிறார்கள். அவன் இல்லை.... ஏதாவது விலங்கு அவன் உடம்பை எடுத்துக் கொண்டு போய் இருக்கும் என்று என் ஆட்கள் சந்தேகப்படுகிறார்கள்...."

மறுபுறத்தில் இருந்து ஏளனமாக குரல் வந்தது. "உங்கள் ஃபோன் கால் என்று தெரிந்தவுடன் நல்ல சேதிதான் வந்திருக்கும் என்று நினைத்தேன்....."

CBI மனிதன் தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு சொன்னான். "நல்ல செய்தியை நிதானமாகச் சொன்னாலும் பரவாயில்லை. கெட்ட செய்தியைத்தான் உடனடியாகத் தெரிந்து கொள்வது புத்திசாலித்தனம். ஆச்சார்யா வீட்டில் ஆனந்துக்கு ஏதோ ஒரு தடயம் கிடைத்தது போல் இருக்கிறது.."

"அப்படி இருக்க வாய்ப்பில்லையே... என்ன என்று தெரிந்ததா?"

"ஜெயினும் அவனும் வாயைத் திறக்க மாட்டேன்கிறார்கள். ஆனால் ஏதோ கிடைத்திருக்கிறது என்பது மட்டும் உறுதியாய்த் தெரிகிறது. நாம் ஏதாவது உடனடியாகச் செய்ய வேண்டும்... இல்லை என்றால் சிக்கலாக வாய்ப்பிருக்கிறது"

இந்த விஷயம் மறுபக்கத்தை யோசிக்க வைத்தது போல் தெரிந்தது. சில வினாடிகள் கழித்து "அதற்கு சீக்கிரம் ஒரு ஏற்பாடு செய்கிறேன்...."

"ஆனந்த் நாளைக்கு பெங்களூர் போகிறான்"

"ஏன்?"

"ஆச்சார்யா மனைவியைப் பார்த்துப் பேசப் போகிறான்"

"ஆச்சார்யா மனைவியிடம் எதாவது சொல்லி இருக்க வாய்ப்பிருக்கிறதா?"

"அவர் ஆஃபிஸ் விஷயத்தை மனைவியிடம் சொல்வதில்லை.... ஆனால் அந்த ஆனந்த் கையில் என்ன தடயம் கிடைத்திருக்கிறது என்றும் அது பற்றி ஆச்சார்யாவின் மனைவிக்கு என்ன தகவல் தெரியும் என்றும் தெரியவில்லை"

"ஆச்சார்யா கேஸை நான் சீக்கிரமே முடித்து வைக்கிறேன். நீங்கள் அந்த ஆள் பிணத்தை சீக்கிரம் கண்டுபிடியுங்கள். ஏதோ விலங்கு சாப்பிட்டிருக்கலாம் என்கிற அனுமானம் எல்லாம் வேண்டாம். விலங்கு கூட மனிதனை முழுவதும் சாப்பிடாது. மிச்சம் ஏதாவது வைக்கும். அந்த மிச்சத்தைக் கண்டுபிடியுங்கள்....."

********

அவன் மனதில் அந்த பஸ் பயணியின் முகத்தில் தெரிந்த உணர்ச்சியும் பீதியும் சிறிது நேரம் அப்படியே நின்றன. யாரவன்? அவனைத் தேடும் கூட்டத்தில் ஒரு நபரா? இல்லை வேறேதாவது விதத்தில் நன்றாகப் பரிச்சயமானவனா? நன்றாகப் பரிச்சயமானவனாகத்தான் இருக்க வேண்டும். ஏனென்றால் முக்காட்டில் முகம் மட்டும் தெரியும்படியாக இருக்கும் மனிதனை அடையாளம் கண்டு கொள்வது மிக நன்றாகத் தெரிந்தவர்களுக்கு மட்டும்தான் முடியும்... ஏனப்படி அவன் பயப்பட்டான்? உயிருடன் இருக்கிறானே என்ற அதிர்ச்சியை விட பயம் அதிகமாக இருப்பதாக அல்லவா தோன்றுகிறது? ஏதோ பேயைப் பார்த்தது போல் அவன் முகம் மாறியதே....

அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போது ஒரு கார் வந்து நின்றது. டிரைவர் சீட்டில் ஒரு அழகான இளம் பெண் இருந்தாள். அவளும் ஒரு ஆறு வயதுச் சிறுவனும் இறங்கினார்கள். பையன் துறுதுறுவென்று இருந்தான். அப்போதுதான் உறக்கத்திலிருந்து விழித்திருக்கிறான் என்பது பார்க்கையிலேயே தெரிந்தது. ஆனால் கையில் ஒரு பந்துடன் இறங்கியவன் தாயுடன் வீர நடை போட்டு டீக்கடைக்கு வந்தான். பையனுடன் டீக்கடைக்கு வந்த அந்த இளம் பெண் மிகவும் களைத்துப் போனது போல் தெரிந்தாள். காரின் பின் சீட்டில் இருந்து ஒரு வயதான பெண்மணி எட்டிப் பார்த்தாள்.

"உனக்கு டீ வேணுமாடா?" அந்தப் பெண் அவனிடம் தமிழில் கேட்டாள். அவனுக்கு நினைவு வந்த பின் கேட்கும் முதல் தமிழ் பேச்சு அதுதான். அப்போதுதான் அவனுக்கு இன்னொரு உண்மை உறைத்தது. அவன் சிந்திப்பதும் தமிழில்தான். அவன் தமிழ்நாட்டவனோ?

டீக்கு பதிலாக சாக்லேட் கேட்ட மகனை அவள் முறைத்து விட்டு இரண்டு டீ ஆர்டர் செய்தாள். அந்தச் சிறுவன் அந்தக் கடையில் தான் கேட்ட சாக்லேட் இருக்கிறதா என்று எட்டி எட்டி பார்த்து சலித்துப் போனான். அவள் இரண்டு டீ வாங்கிக் கொண்டு ஒன்றை அந்தக் காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்த வயதான பெண்மணிக்குக் கொடுக்கப் போக அதே வீர நடையுடன் தாயுடன் அந்தச் சிறுவன் விரைந்தான்.

அந்த நேரத்தில் அந்தச் சிறுவனின் கையிலிருந்த பந்து தவறி விழுந்து தெருவுக்குச் செல்ல, அவன் பந்தை எடுக்க ஓடினான். மேலிருந்து மிக வேகமாக வந்து கொண்டிருந்த ஒரு லாரியின் டிரைவர் திடீரென்று பையனை சாலை நடுவில் எதிர்பார்க்காததால் தடுமாறுவது தெரிந்தது. அந்த ஒரு கணத்தில் டீ குடித்துக் கொண்டிருந்த அவனுக்கு அந்த டிரைவர் அவசரமாக ப்ரேக் போட்டாலும் வண்டி சிறுவனின் மீது ஏறிப் போய்த்தான் நிற்கும் என்பது புலனாக டீ டம்ளரை வீசி விட்டு வேகமாக இயங்கினான். கண்ணிமைக்கும் நேரத்தில் அவன் குறுக்கே பாய்ந்து அந்தச் சிறுவனுடன் எதிர்பக்கம் உருள அந்த லாரி சிறிது தூரம் போய் பெருத்த சத்தத்துடன் நின்றது.

நடந்தது என்ன என்று அங்குள்ளவர்களுக்குப் புலனாக சிறிது நேரம் தேவைப்பட்டது. அந்தப் பையனின் தாயும், பின் சீட்டு மூதாட்டியும் அதிர்ச்சியில் உறைந்து போய் பார்த்துக் கொண்டிருக்க, அந்தச் சிறுவன் என்ன நடந்தது என்று உடனடியாக அறிய முடியாமல் திருதிருவென விழித்தான். சிறுவனைத் தூக்கிக் கொண்டு எழுந்த போது அவனுக்கு லேசாக சிராய்ப்புகள் இருந்தன. சிறுவனுக்கு ஒன்றும் ஆகவில்லை. அதிகாலை அரைத் தூக்கத்தில் இருந்தவர்கள் அனவரும் முழுவதுமாக விழித்துக் கொண்டு அது பற்றிப் பரபரப்புடன் பேசிக் கொள்ள ஆரம்பித்தார்கள். அங்கிருந்தவர்களுக்கு அவன் உடனே ஹீரோ ஆகி விட்டான். பலரும் அந்தச் சிறுவனைக் காப்பாற்றிய அவனுக்குக் கை கொடுத்துப் பாராட்டினார்கள். ஒரு சர்தார்ஜி ஓடி வந்து அவனைத் தழுவிக் கொண்டார். "என்ன டைமிங்...என்ன ஸ்பீட்....அசாத்தியம்". சிறுவன் அவனைப் பார்த்து சினேகமாகப் புன்னகைத்தான்.

அந்தச் சிறுவனின் தாயிற்கு அதிர்ச்சி விலக சில வினாடிகள் தேவைப்பட்டன. கண்ணீர் வழிய ஓடிச் சென்று மகனைக் கட்டிக் கொண்டாள். மகனுக்கு ஒன்றும் ஆகவில்லை என்று உறுதிப்படுத்திக் கொண்ட பின்பு அவன் பக்கம் திரும்பிய அந்தப் பெண் கண்களில் இன்னும் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. தன் கைகள் இரண்டையும் கூப்பி வணங்கினாள். "நீங்கள் கடவுள் மாதிரி...." என்று ஹிந்தியில் குரல் தழுதழுக்கச் சொன்னாள். அவளுக்கு அவன் தமிழன் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அந்தக் கைகூப்பலும், வார்த்தைகளும், மற்றவர்களின் பாராட்டுகளும் அவனை தர்மசங்கடப்படுத்தின. அவனுக்கு உண்மையில் தான் பெரிதாக சாதித்தது போல் தெரியவில்லை. மேலும் அவன் பலர் கவனத்தையும் ஈர்த்து விட்டதும் ஒரு அபாய நிலையை அங்கு உருவாக்கியதாக அவனுக்குத் தோன்றியது. பஸ்ஸில் அவனைப் பார்த்த பயணி யாரிடம் கூப்பிட்டு சொல்வான், இனி யார் எப்போது அவனைத் தேடி வரப் போகிறார்கள் என்பதெல்லாம் அவனுக்குத் தெரியவில்லை.

அவன் வந்த லாரியின் டிரைவரும் க்ளீனரும் கிளம்பினார்கள். அங்கிருந்த அத்தனை பேர் கவனமும் அவன் மீது இருந்ததால் மறைவாகச் சென்று அந்த லாரியில் ஏறிக் கொள்வது சாத்தியமில்லை. டூரிஸ்ட் பஸ்ஸ¤ம், வேனும் கூடக் கிளம்பத் தயாராயின. அந்தப் பெண்ணும் அவனிடம் நூறாவது தடவையாக நன்றி சொல்லி விட்டுக் கிளம்பத் தயாரானாள். அவனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. மறைவாக இருக்கவும், மறைவாகப் பயணம் செய்யவும் இரவு நேரம் உகந்தது. ஆனால் நன்றாக விடிந்து விட்ட இந்த நாள் இனி என்ன செய்யப் போகிறான்?

********

குறுந்தாடி மனிதன் அன்று காலை சற்று தாமதமாகத்தான் எழுந்தான். முந்தைய தினம் இரவு ரகசிய சந்திப்பு ஒன்றில் அவன் உட்பட ஏழு பேர் கலந்து பேசி முடிய நள்ளிரவைத் தாண்டி இருந்தது. அவர்கள் திட்டம் எல்லாம் கச்சிதமாக அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அந்த அமானுஷ்யன் பிணமும் பார்க்கக் கிடைத்து விட்டால் கவலையில்லாமல் முன்னேறலாம். அவன் தன் காலைக் கடன்களை எல்லாம் முடித்து விட்டுத்தான் காலை எட்டரைக்கு செல் ஃபோனைப் பார்த்தான். யாரோ 17 முறைகள் அழைத்திருந்தார்கள். ஸ்விட்ச் ஆ·ப் செய்து விட்டு உறங்கி இருந்தான். யாரெல்லாம் அழைத்திருக்கிறார்கள் என்று பார்த்தான். எல்லாம் ஒரே எண். அவர்கள் இயக்கத்தின் ஒரு உறுப்பினர்தான் அத்தனை முறை அழைத்திருந்தான். காலை ஆறு பத்திலிருந்து விடாமல் தொடர்ந்து அழைத்திருக்கிறான்.

குறுந்தாடி மனிதன் அந்த எண்ணைத் தொடர்பு கொண்டான்.

"அந்த சைத்தான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறான்." எந்த முன்னுரையும் இல்லாமல் படபடப்பாக தகவல் வந்தது.

தலையில் இடி விழுந்தது போல குறுந்தாடி உணர்ந்தான். "உனக்கு ஆள் மாறாட்டம் ஆகவில்லையே"

"அவன் போல இன்னொரு சைத்தான் இருக்க முடியுமா? காலையில் ஐந்தரை மணிக்கு அவனைப் பார்த்தேன். பார்த்தவுடனே ஃபோன் செய்யலாம் என்றால் டவர் கிடைக்கவில்லை. டவர் கிடைத்த போது நீங்கள் எடுக்கவில்லை. ....."

எதிர்முனையில் தெரிந்த படபடப்பு அவனை நம்பச் சொன்னது. அவன் சொன்னது போல் அவன் போல் இன்னொரு சைத்தான் கண்டிப்பாக இருக்க முடியாது. "எங்கே அவனைப் பார்த்தாய்? எப்போது பார்த்தாய்? ஒரு சின்ன தகவல் கூட விடாமல் எனக்கு விவரமாய் சொல்"

(தொடரும்)

Wednesday, July 2, 2014

அமானுஷ்யன் - 10



"எதாவது தடயம் அல்லது தகவல் கிடைத்ததா?" மஹாவீர் ஜெயின் கேட்டார்.

ஆனந்த் ஒன்றும் சொல்லாமல் அந்தக் காகிதத்தை அவரிடம் நீட்டினான்.

அவர் அதனை ஆராய நிறைய நேரம் எடுத்துக் கொண்டார். அதில் இருந்தது தில்லியின் வரைபடம். அதில் ஏழு இடங்கள் சிவப்பு மையால் குறியிடப்பட்டிருந்தன. சாந்த்னி சௌக், இந்தியா கேட், ரயில்வே ஸ்டேஷன், கனாட் ப்ளேஸ், சன்சாத் மார்க், லோட்டஸ் டெம்பிள், பாரக்கம்பா ரோடு என்று குறிகளுக்கு அருகே எழுதப்பட்டிருந்தது. அந்தக் கையெழுத்து ஆச்சார்யாவினுடையது என்பதில் ஜெயினுக்கு சந்தேகம் இல்லை.

பின் நிமிர்ந்தவர் ஆனந்தைக் கேட்டார், "இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?"

"நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதையேதான் நினைக்கிறேன் சார்"

அவன் பதில் ஜெயின் முகத்தில் புன்னகையை வரவழைத்தது. நாட்டின் தற்போதைய நிலவரத்தில் நல்லதை நினைக்க முடிவதில்லை....

"இந்த மேப் பழையதாகக் கூட இருக்கலாம். எத்தனையோ வருடங்களுக்கு முன் கூட அவர் இந்தக் குறிகளை செய்திருக்க வாய்ப்பிருக்கல்லவா?"

"இல்லை சார். சாவதற்கு ஐந்து நாட்கள் முன்னால் அவர் வாங்கிய புத்தகத்திற்குள்தான் இந்த மேப் இருந்தது. அவர் கடைசி நாட்களில் படித்துக் கொண்டிருந்த புத்தகம் அது. ஜென் புத்தமதத்தின் முதல் குரு போதிதர்மா பற்றிய அந்தப் புத்தகத்தில் 32 பக்கங்கள் தான் படித்திருக்கிறார்....... புதிதாக வாங்கிப் படித்துக் கொண்டிருந்த புத்தகத்திற்குள் இருக்க வேண்டுமென்றால் இந்த மேப் கடைசி நாட்களில் குறியிட்டதாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்..."

மஹாவீர் ஜெயின் யோசித்தபடி சொன்னார். "..... நமக்கு சில சந்தேகங்கள் எழுகின்றன என்றாலும்
இந்த மேப் எதையும் தீர்மானமாய் சொல்லவில்லை...."

ஆனந்த் ஒன்றும் சொல்லவில்லை. அவரை யோசிக்க விட்டான்.

"....இந்தக் குறியீடுகளை வேறு காரணங்களுக்காகக் கூடச் செய்திருக்கலாம்...."

ஆனந்த் அமைதியாகப் பார்த்தான்.

மஹாவீர் ஜெயின் கேட்டார். "நீங்கள் ஏன் ஒன்றும் சொல்ல மாட்டேன்கிறீர்கள்?"

"எனக்கென்னவோ இது சீரியஸான விஷயமாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது. ஆச்சார்யா கொலையானதற்கும் இதற்கும் கண்டிப்பாக சம்பந்தமிருக்கும் என்று நினைக்கிறேன். அதைய தான் நீங்களும் நினைக்கிறீர்கள் என்பதும் புரிகிறது... அப்படி இல்லாமல் இருக்கலாம் என்று நம்ப நீங்கள் இப்போது ஏதாவது ஆறுதலான காரணங்களைத் தேடுகிறீர்கள்.... அப்படி ஏதாவது இருந்து விட்டால் சந்தோஷம்தான்"

ஜெயின் பெருமூச்சு விட்டார். "இதெல்லாம் முக்கியமான இடங்கள் ஆனந்த்.... நாம் சந்தேகப்படுவது போல் இந்த இடங்களில் ஏதாவது அசம்பாவிதம் நடக்கப் போகிறது என்றால் அது எப்போது, யாரால் என்ற கேள்வி வருகிறது...."

"அதுதான் தெரியவில்லை சார். ஆச்சார்யா வீட்டில் ஆன அளவு தேடிப் பார்த்து விட்டேன். கிடைக்கவில்லை. ஆச்சார்யாவுக்குத்தான் அந்தத் தகவல்கள் தெரிந்திருக்கலாம். எங்கெல்லாம் அந்தத் தகவல்கள் இருக்கும் என்று சந்தேகம் இருந்திருக்கிறதோ அதை எல்லாம் அவரைக் கொன்றவர்கள் அழித்து விட்டார்கள். இந்த மேப் கூட அவருடைய ஜென் புத்தகத்தில் வைத்திருந்ததால்தான் தப்பித்து நம் கையில் கிடைத்திருக்கிறது..."

"அப்படியானால் அந்த விடை அவரைக் கொன்றவர்களைக் கண்டுபிடித்தால் ஒழியக் கிடைக்காது. இல்லையா?"

"இல்லை. ஆச்சார்யாவிற்கு அந்தத் தகவலைக் கொடுத்த நபர், அல்லது நபர்களைக் கண்டுபிடித்தால் கூட அந்தத் தகவல் நமக்கு கிடைக்கலாம் சார்..."

"ஒருவேளை அந்த நபர் அல்லது நபர்களையும் அவர்கள் கண்டுபிடித்துக் கொன்றிருந்தால்....?"

"அப்படிக் கொன்றிருந்தால் நீங்கள் சொன்னபடி கொலையாளிகளைக் கண்டுபிடித்தால்தான் பதில் கிடைக்கும். ஆனால் அந்தத் தகவல் தரும் நபர் அல்லது நபர்கள் இறந்து விட்டார்கள் என்பது உறுதியாகும் வரை நாம் அவர்களையும் கண்டுபிடிக்க முயல்வோம். ஆனால் அது வரை நம் இருவரைத் தவிர வேறு யாருக்கும் இந்த மேப் விஷயம் தெரியாமல் இருப்பது நல்லது என்று நான் நினைக்கிறேன், சார்..."

"ஆனால் வெளியே சொல்லாமல் இருந்து, நாம் கண்டுபிடிப்பதற்கு முன்பே ஏதாவது அசம்பாவிதம் இந்த இடங்களில் நடந்து விட்டால் தவறாகிப் போய் விடுமே, ஆனந்த்"

"ஆச்சார்யா வீட்டில் இருந்து கிடைத்தது என்று தெரிந்தால் கொலையாளிகள் உஷாராகி விடுவார்களே, சார்..."

இந்த இக்கட்டான நிலையில் என்ன செய்வது என்று ஜெயின் யோசித்த போது ஆனந்த் சொன்னான். "வேண்டுமானால் புதுதில்லியில் முக்கியமான இடங்களுக்கு ஆபத்து என்பது போல் மொட்டையாக ஃபோன் காலோ, கடிதமோ அனுப்பி வைக்கலாம். பாதுகாப்பு ஏற்பாடுகள் உஷார்ப்படுத்தப்பட அது உதவும்... நாம் உடனடியாக நம் துப்பு துலக்கும் வேலையை முடுக்கி விடலாம்..."

சிந்தித்த போது அவன் சொல்வதே சரியென்று அவருக்குத் தோன்றியது. கூடுதல் தகவல்கள் இல்லாத இந்த வெறும் வரைபடம் வெளியிடப்படுவதில் பெரிய நன்மை விளைந்து விடும் என்று தோன்றவில்லை. ஆனந்த் சொல்வது போல் கொலையாளிகளை உஷார்ப்படுத்தத்தான் உதவும் என்று தோன்றியது. "உங்களுக்கு உதவிக்கு யாராவது வேண்டுமா?..."

"வேண்டாம், சார். எனக்குத் தேவைப்படும் விவரங்களை நம்பிக்கையான ஆட்களிடமிருந்து நானே பெற்றுக் கொள்கிறேன்....சார். ஒரு கேள்வி. உங்கள் ஆபிசில் இருக்கும் மகேந்திரன் எப்படி?"

"கம்ப்யூட்டரில் புலி. புத்திசாலி. ஏன் கேட்கிறீர்கள்?"

"ஆச்சார்யா அவனிடம் நிறையப் பேசுவார். கம்ப்யூட்டரில் சந்தேகம் கேட்பார் என்றெல்லாம் சொன்னார்கள். அவனுக்கு மற்றவர்கள் கம்ப்யூட்டர்களில் புகுந்து வேவு பார்க்கும் பழக்கமும் இருக்கிறது என்றார்கள். அதனால்தான் கேட்டேன்...."

ஜெயின் சற்று யோசித்து விட்டுச் சொன்னார், "உண்மைதான். அவனுக்கு அரசியல் செல்வாக்கும் இருக்கிறது. அவனை வேலைக்குச் சேர்த்ததே அந்த செல்வாக்குதான். ஆனாலும் வேலையில் அவனிடம் குறை சொல்வதற்கில்லை....."

ஆனந்த் மேற்கொண்டு அவரிடம் மகேந்திரனைப் பற்றி எதுவும் கேட்கப் போகவில்லை. சற்று நேரத்திற்கு முன் ஜெயினின் அறைக்குள் நுழையும் போது கூட அவன் கழுகுப் பார்வை பார்த்தது மனதில் நெருடியது....

*************

வெளியே பனிக்காற்றின் தீவிரம் அதிகமாயிருந்தது. அவன் புத்த விஹாரத்தை விட்டு வந்து இரண்டு மணி நேரம் ஆகியிருந்தது. அவன் உறைபனி லேசாகப் போர்த்தியிருந்த பாறைகளில் ஏறிப் பயணம் செய்தான். முடிந்த வரை மனிதர்கள் செல்லக் கூடிய பாதைகளை அவன் தவிர்த்தான். இந்த நள்ளிரவில் வெளியே யாரும் அந்தப் பகுதியில் பயணிப்பது அபூர்வம் என்றாலும் அவன் அனாவசியமாக ஆபத்துகளை எதிர்கொள்வதைத் தவிர்க்க எண்ணினான். ஆங்காங்கே பனிக்கரடிகளைக் கண்டான். அவை அவனை வெறித்துப் பார்க்க அவன் புன்னகையுடன் அவற்றைப் பார்த்து கையசைத்து விட்டுத் தன் பயணத்தைத் தொடர்ந்தான். ஒரு பனிக்கரடி அவனை சிறிது தூரம் பின் தொடர்ந்து வந்தது. ஆனால் அவனுக்கு சிறிதும் பயம் இருக்கவில்லை. மனிதர்களை விட இந்த விலங்குகள் எத்தனையோ மேல். அவசியமில்லாமல் அடுத்தவர்களை இம்சிப்பதில்லை.

நீண்ட பயணத்திற்குப் பின் ஒரு நெடுஞ்சாலையை அடைந்தான். மறைவாக நின்று ஒரு மணி நேரம் அமைதியாக அந்த நெடுஞ்சாலையைக் கவனித்தான். ஆள் நடமாட்டம் இல்லையென்றாலும் அந்த ஒரு மணி நேரத்தில் ஒரு லாரியும், ஒரு மிலிட்டரி ட்ரக்கும் அந்த சாலையில் சென்றன. பனியினூடே அந்த வண்டிகளின் விளக்குகள் மங்கலாகத் தெரிந்து மறைந்தன. அங்கு நின்ற அந்த வேளையில் அவன் மனம் அந்த புத்த பிக்குகளை நன்றியுடன் எண்ணிப் பார்த்தது. பேண்ட் பையில் இருந்த பணமும் அவன் உடலை சுற்றியிருந்த சால்வையும் அவர்களுடைய அன்பின் அடையாளமாய் அவனை நெருங்கி இருப்பதை உணர்ந்தான். 'எப்படி இவர்களுக்கு கைம்மாறு செய்யப் போகிறேன்?' என்று கேட்டுக் கொண்டான். அப்படியொரு சந்தர்ப்பம் கிடைக்கும் வரையாவது உயிருடன் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

நெடுஞ்சாலை ஓரமாக இருந்த பனி படர்ந்த மரங்களை ஆராய்ந்து ஒரு மரத்தைத் தேர்ந்தெடுத்தான். பதுங்கியபடியே சென்று அந்த மரத்தில் ஏறிக் கொண்டு அமைதியாகக் காத்திருந்தான். அந்தக் காத்திருத்தலில் பதட்டம் இருக்கவில்லை. அவசரமோ, அலுப்போ இருக்கவில்லை. சுமார் அரை மணி நேரம் கழித்து ஒரு சரக்கு லாரி வருவது பனியை லேசாக ஊடுருவி வந்த விளக்குகள் மூலம் தெரிந்தது. அந்த லாரி அந்த மரத்தைக் கடந்த போது சத்தமில்லாமல் அந்த லாரியில் குதித்தான். அந்த லாரி தார்ப்பாயில் இருந்த பனியை கைகளால் அப்புறப்படுத்தி மல்லாந்து படுத்துக் கொண்டான்.

பனிக்கால இரவின் ஆகாயம் மங்கலாகத் தெரியும் நட்சத்திரங்களுடன் பேரழகாய்த் தெரிந்தது. சிறிது நேரம் ரசித்தவன் களைப்பில் அப்படியே உறங்கிப் போனான். அந்த உறக்கத்தில் கூட அவன் உடல் அந்த லாரியின் வேகத்தை மிகச்சரியாக உணர்ந்திருந்தது. வேகம் குறைய ஆரம்பித்த போது தானாக விழித்துக் கொண்டான். தலையை லேசாக உயர்த்திப் பார்த்தான். அதிகாலை ஆகியிருந்தது. தூரத்தில் ஒரு டீக்கடை தெரிந்தது.

அந்த டீக்கடை முன் ஒரு டூரிஸ்ட் பஸ்ஸூம், ஒரு வேனும் நின்றிருந்தன. லாரியை அங்கு நிறுத்தி டீ குடிக்க டிரைவரும் க்ளீனரும் போக சரியாக இரண்டு நிமிடங்கள் கழித்து மறைவாய் லாரியில் இருந்து இறங்கிய அவன் அந்த டூரிஸ்ட் பஸ்ஸை சுற்றிக் கடந்து சென்று டீக்கடையை அணுகினான். லாரி டிரைவரும், க்ளீனரும் அவன் அந்தப் பஸ் பயணி என்று நினைத்தார்கள். அங்கு டீ வாங்கிக் குடித்தபடியே அங்குள்ளவர்களை ஆராய்ந்தான். அங்கிருந்தவர்களில் யாரும் முக்காடு போட்டிருந்த அவன் மீது ஆர்வம் காட்டவில்லை. அவனும் ஆர்வத்தைத் தூண்டும்படியாக வித்தியாசமாக நடந்து கொள்ளவில்லை.

அப்போது இன்னொரு பஸ் எதிர்ப்புறத்தில் இருந்து வந்தது. அந்த நெடுஞ்சாலையில் ஒரு மைல் தூரத்தில் இருந்த வேறொரு டீக்கடையில் முன்பே பயணிகளுக்காக நிறுத்தி இருந்ததால் அந்த பஸ் அந்த டீக்கடை முன் நிற்காமல் விரைந்தது. அந்தப் பஸ்ஸில் இருந்த ஒரு பயணி ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்து வந்தவன் டீக்கடையில் இருந்த முக்காட்டு மனிதனை உற்றுப் பார்த்தான். அவனும் தன்னை உற்றுப் பார்க்கும் மனிதனைக் கூர்ந்து பார்க்க அந்த மனிதன் அவனை அடையாளம் கண்டு கொண்டது போல் தெரிந்தது. பார்த்தது சில வினாடிகள் என்றாலும் அந்தப் பயணியின் முகத்தில் தெரிந்த பீதி அவனுக்கு அபாயச் சங்கு ஊதியது.

(தொடரும்)

அமானுஷ்யன் - 9



ஆச்சார்யா பணிபுரிந்த CBI தலைமை அலுவலகத்தில் எல்லோரிடமும் ஆச்சார்யா பற்றி விசாரித்தான் ஆனந்த். மேல்மட்டத்திலிருந்து அடிமட்டம் வரை பேசிப் பார்த்தான். எல்லோரும் அவரைப் பற்றி உயர்வாகவே சொன்னார்கள். அவருடைய சகாக்களும் அவர் டிபார்ட்மென்டில் அவருக்குக் கீழே வேலை செய்தவர்களும் அவர் நாணயத்தைப் பற்றி உயர்வாகப் பேசினார்கள். அதோடு அவர் ரகசியமானவர், நினைப்பதை வெளியில் சொல்லாதவர் என்பதையும் சொன்னார்கள். அவர் கொலை அவர்களைப் பாதித்துள்ளது பேசும் போது தெரிந்தது. அவர்களில் பெரும்பாலானோர் கொலைக்குப் பழைய பகை காரணமாயிருக்கலாம் என்றுதான் நினைத்தார்கள்.

ராஜாராம் ரெட்டியிடம் பேசும் போது அவனிடம் ஒரு விஷயத்தைச் சொல்லலாமா வேண்டாமா என்று தயங்கியது போல் தெரிய ஆனந்த் அவர் நினைப்பதை வெளிப்படையாகச் சொல்லச் சொன்னான்.

ராஜாராம் ரெட்டி தயக்கத்துடன் சொன்னார், "இங்கே சைபர் க்ரைம்ஸைக் கண்டுபிடிக்கும் டிபார்ட்மென்டில் ஒருவன் இருக்கிறான். அவன் பெயர் மகேந்திரன். கம்ப்யூட்டரில் அவனுக்குத் தெரியாததே எதுவும் கிடையாது என்று சொல்லலாம். ஆனால் கேரக்டர் அவ்வளவாக சரியில்லை. மூளை அதிகம், அதனால் தலைக்கனமும் அதிகம். அடுத்தவர்கள் தங்கள் கம்ப்யூட்டரில் ரகசியமாய் வைத்திருக்கிற டேட்டாவை ஆராய்வது அவனுடைய ஹாபி. எல்லாருமே கம்ப்யூட்டரில் ஏதாவது ப்ரச்னை என்றால் அவனைத்தான் கூப்பிடுவோம். அதை அவன் சீக்கிரம் சரி செய்தும் விடுவான். ஆச்சார்யா அடிக்கடி அவனைக் கூப்பிட்டு சந்தேகம் கேட்பார். அவனும் மணிக்கணக்கில் அவர் கம்ப்யூட்டரில் உட்கார்ந்து அவருக்குச் சொல்லிக் கொடுப்பான். அவன் திறமைசாலி என்பதால் ஆச்சார்யாவிற்கு அவனைப் பிடித்திருந்தது. அவனிடம் நிறைய பேசுவார். அவர் அப்படிப் பேசும் போது ஏதாவது வாய் விட்டுச் சொல்லி இருக்கலாம்...."

அவர் நிறுத்தினார். ஆனந்த் மேலே சொல்லுங்கள் என்பது போல் அவரைப் பார்த்தான்.

"ஆச்சார்யாவின் ரகசியங்கள் ஏதாவது அந்தக் கம்ப்யூட்டரில் இருந்திருந்தால் அவர் அவனிடம் சொல்லா விட்டாலும் கூட அவன் அதைக் கண்டுபிடிக்க வாய்ப்பு இருந்திருக்கிறது...." அதற்கு மேல் சொல்வது சரியல்ல என்று அவர் நிறுத்தியது ஆனந்திற்குப் புரிந்தது.

"கேரக்டர் சரியில்லை என்றால் எந்த விதத்தில்?"

".....பல பெண்கள் கிட்ட சகவாசம் இருக்கிறது. இந்தக் காலத்துல அது பெரிய விஷயம் இல்லைதான். நான் அந்தக் கால மனுஷன். அதனாலேயே அதை ஜீரணிக்க கஷ்டமாக இருக்கிறது"

"வேலையில் எப்படி?"

"குறை சொல்ல முடியாது...."

மகேந்திரன் ஆனந்தை விட இளமையானவனாக இருந்தான். கண்ணாடி அணிந்திருந்தான். ஆனந்தை அவன் தூரத்திலிருந்தே எடை போடுவது ஆனந்திற்குத் தெரிந்தது. ஆனந்த் அவனிடம் பேசிய போது அவனும் மற்றவர்கள் சொன்னதையே சொன்னான். நல்லவர், நேர்மையானவர், ரகசியமானவர்....

"எத்தனை ரகசியமானவராய் ஒருவர் இருந்தால் கூட அவர் ஒரு சிலரிடமாவது மனம் விட்டுப் பேசுபவராக இருப்பார்..." ஆனந்த் சொல்லி நிறுத்தினான். மகேந்திரன் ஒன்றும் சொல்லாமல் அவனையே பார்த்தான்.

ஆனந்த் சொன்னான், "அவர் உங்களிடம் அதிகம் பேசுவார் என்று சொன்னார்கள்?"

"யார் சொன்னார்கள்?" அவன் உடனடியாகக் கேட்டான்.

ஆனந்த் யோசனை செய்து விட்டுச் சொன்னான். "யாரோ சொன்னார்கள். நினைவில்லை"

அவன் நினைவில்லை என்றதை மகேந்திரன் நம்பியது போல் தெரியவில்லை. ஆனால் அதைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் ஆச்சார்யா பற்றி சொன்னான். "புதிதாக எதையும் தெரிந்து கொள்வதில் அவருக்கு ஆர்வம் அதிகம். கம்ப்யூட்டர் சம்பந்தமாக அடிக்கடி கேட்பார். அதைப் பற்றித்தான் பேசுவோம்"

"அவர் இங்கு கம்ப்யூட்டரில் ஏதாவது ரகசிய டேட்டா வைத்திருந்தாரா?"

"அவர் ஜாக்கிரதையானவர். ஆஃபிஸ் கம்ப்யூட்டரில் எதையும் வைத்துக் கொண்டது போல் தெரியவில்லை."

"உங்களிடம் கம்ப்யூட்டர் தவிர வேறெதைப் பற்றியும் அவர் பேசியதில்லையா?"

அவன் ஒரு கணம் மௌனம் சாதித்து விட்டு கவனமாகச் சொன்னான், "சொல்லிக் கொள்கிற மாதிரி எதுவும் பேசியதில்லை."

"அவரை யார் கொலை செய்திருக்கலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?"

"யாராயிருந்தாலும் அரசியல் பக்கபலம் இருக்கிற ஆள்தான் கொலை செய்திருக்கணும் என்பதில் சந்தேகம் இல்லை. இல்லை என்றால் CBI அடிஷனல் டைரக்டரையே கொலை செய்யத் துணிச்சல் வந்திருக்காது. எதற்கும் நீங்கள் ஜாக்கிரதையாய் இருப்பது நல்லதென்று நான் நினைக்கிறேன்....."

அவன் எச்சரிக்கை எந்த எண்ணத்தில் சொல்லப்பட்டது என்பதை ஆனந்தால் தீர்மானிக்க முடியவில்லை. அவனிடம் மேலும் பேசிக் கொண்டிருந்த போது உபயோகமான தகவல் எதுவும் கிடைக்கா விட்டாலும் அவன் வெளியே சொல்லாத எதையோ அறிந்திருக்கிறான் என்பதை மட்டும் ஆனந்த் ஊகித்தான்.

அடுத்ததாக ஆச்சார்யா கொலை வழக்கை விசாரிக்கும் போலீஸ் உயர் அதிகாரிகளை ஆனந்த் சந்தித்தான். அவர்களுடைய உபசாரம் பலமாக இருந்தது. என்ன சாப்பிடுகிறீர்கள், என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் என்றெல்லாம் சொல்லி அன்பு மழையில் நனைய வைத்தார்கள். ஆனந்த் உடனடியாக விஷயத்திற்கு வந்து வழக்கைப் பற்றி விசாரிக்க, அவர்கள் ஆச்சார்யா கண்டுபிடித்த பழைய கேஸ்களில் சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து வருவதாகவும் கூடிய சீக்கிரம் கொலையாளியைப் பிடித்து விடுவோம் என்றும் தெரிவித்தார்கள். தங்கள் ·பைலை அவனிடம் காட்டினார்கள்.

அவர்கள் வைத்திருந்த ·பைலில் பழைய கேஸ் விவரங்கள் நிறைய இருந்தன. அதை மேலோட்டமாகக் கூடப் பார்க்காமல் ஆனந்த் அவர்களிடமிருந்த ஆச்சார்யா கொலை செய்யப்பட்ட இடத்தின் புகைப்படங்களை ஆராய்ந்தான். பெரும்பாலான புகைப்படங்கள் மஹாவீர் ஜெயின் வைத்திருந்த ·பைலில் இருந்தவைதான் என்றாலும் அவன் பார்க்காதஒருசிலவும் இருந்தன. அதில் அவன் கவனத்தை ஈர்த்தது எரிந்த நிலையில் இருந்த கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்கின் புகைப்படம்.

அவன் அதை அதிகமாக ஆராய்வதைப் பார்த்த ஒரு அதிகாரி சொன்னார். "கொலையாளி தனியாக வந்தது போலத் தெரியவில்லை. ஒரு சில பேரோட வந்திருக்கலாம். அவர்களுக்கு ஆச்சார்யா மேல் இருந்த பகை அங்கே இருக்கிறதை எல்லாம் துவம்சம் செய்ய வைத்திருக்கிறது. கம்ப்யூட்டரையும் சில புத்தகங்களையும் எரித்திருக்கிறார்கள். மற்ற புத்தகங்களை எல்லாம் விசிறி எறிந்திருக்கிறார்கள். அவர் வீட்டு விலை உயர்ந்த பொருட்களை எல்லாம் உடைத்திருக்கிறார்கள். எதிலுமே கைரேகைகள் கிடைக்கவில்லை...."

"ஹார்ட் டிஸ்கை எரித்ததற்குக் காரணம் அதில் தங்கள் பற்றிய தகவல் ஏதாவது இருக்கலாம் என்பதாகக் கூட இருக்கலாம் இல்லையா?"

அந்தக் கேள்வி அவர்களை தர்மசங்கடப் படுத்தியது ஆனந்திற்கு நன்றாகவே தெரிந்தது.

"அந்தக் கோணமும் நாங்கள் யோசிக்காமல் இல்லை. புதுக் கேஸ் ஏதாவது சம்பந்தப்பட்டிருந்தால்தான் அந்தக் கோணம் அர்த்தமுள்ளதாகிறது. ஆனால் உங்கள் அலுவலகத்தை நாங்கள் விசாரித்த வரையில் அவர் எந்தப் புது கேஸையும் துப்பறிந்து கொண்டிருக்கவில்லை என்றார்கள்".

ஆனந்த் அதற்கு மேல் அதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. "நான் கொலை நடந்த இடத்தைப் பார்க்க வேண்டும்"

"ஜெயின் சார் பிரத்தியேகமாகச் சொன்னதால் அந்த இடத்தை நாங்கள் சுத்தம் செய்யப் போகாமல் அப்படியே வைத்திருக்கிறோம். எங்கள் ஆட்கள் யாராவது உதவிக்கு உடன் வர வேண்டுமா?"

"வேண்டாம். நன்றி"

ஆச்சார்யாவின் வீடு ஒரு நடுத்தர வர்க்கத்தினரின் இரண்டு பெட் ரூம் வீடாக இருந்தது. வீட்டினுள் எல்லாமே சின்னாபின்னமாகக் கிடந்தன. கொலைகாரர்கள் எந்தப் பொருளையும் விட்டு வைக்கவில்லை. ஆச்சார்யாவின் குடும்பப் புகைப்படங்கள் கண்ணாடி விரிசல்களுடன் ஆங்காங்கே விழுந்திருந்தன. ஆச்சார்யா, மனைவி, மகளுடன் சந்தோஷமாகச் சிரித்தபடி இருந்த புகைப்படத்தை ஆனந்த் எடுத்துப் பார்த்தான். எல்லோர் முகத்திலும் உண்மையான சந்தோஷம் தெரிந்தது. இன்னொரு உடைந்த புகைப்படத்தில் ஆச்சார்யாவின் மகளும், மருமகனும் இருந்தார்கள்.

ஆனந்த் கருகியிருந்த கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்கைப் பார்த்தான். அதனுடன் சில புத்தகங்களும் கருகி இருந்தன. முக்கால் வாசி கருகியிருந்த ஒரு புத்தகத்தை எடுத்துப் பார்த்தான். அது புத்தகமல்ல, ஆச்சார்யாவின் இந்த வருடத்தைய டைரி. பாதி எரிந்திருந்த இன்னொரு புத்தகத்தை எடுத்துப் பார்த்தான். ஏதோ ஆங்கில நாவல். கொலயாளிகளின் முக்கிய குறி கம்ப்யூட்டரும் டைரிகளும்தான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அது தெரிந்து விடாதிருக்க வேறுசில புத்தகங்களையும் சேர்த்து எரித்திருக்கிறார்கள் என்பது புரிந்தது.

நிதானமாக அந்த இடத்தை ஆனந்த் ஆராய்ந்தான். எல்லாம் உடைந்தும், நொறுங்கியும், கலைந்தும் எரிந்தும் இருந்தன. அத்தனை அலங்கோலங்களுக்கு மத்தியில் ஒரு அழகான புத்தர் சிலை கீழே தரையில் அமர்ந்த நிலையிலேயே இருந்தது. இந்த அலங்கோலங்களால் பாதிக்கப்படாமல் புத்தர் சாந்த மயமாக தியானத்திலிருந்தார். அந்தப் புத்தர் சிலையைப் பார்த்தவுடன் அம்மா நினைவும், காணாமல் போன தம்பி நினைவும் வந்தன....

மனதை மீண்டும் அந்த இடத்தை ஆராயத் திருப்பினான். எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. இது எதிர்பார்த்தது தான். கொன்றவர்கள் கச்சிதமாகத்தான் இயங்கியிருக்கிறார்கள்.

கிளம்பத் தயாரான போது ஒரு ரசீது மூலையில் கிடந்ததைப் பார்த்து அதை எடுத்தான். ஆச்சார்யா கொலை செய்யப்படுவதற்கு ஐந்து நாட்கள் முன்பு புத்தகம் வாங்கியதன் ரசீது. "Bodhidharma-Osho" என்று ரசீதில் எழுதியிருந்தது. அதுதான் ஆச்சார்யா கடைசியாக வாங்கிய புத்தகமாக இருக்கலாம் என்று தோன்ற ஆனந்தின் உள்ளுணர்வு அந்தப் புத்தகத்தை அந்த அலங்கோலங்களுக்கு மத்தியில் தேடச் சொன்னது.

ஆச்சார்யா பல புத்தகங்கள் வைத்திருந்ததால் அந்தப் புத்தகத்தை அங்கு கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. சுமார் இருபது நிமிடம் தேடி அந்தப் புத்தகத்தை ஆனந்த் கண்டுபிடித்தான். "Bodhidharma-The Greatest Zen Master" என்ற அந்தப் புத்தகத்தை எடுத்துப் பிரித்தான். அதில் ஆச்சார்யா 32 பக்கங்கள் படித்திருந்தார் என்பதற்கு அடையாளமாக அங்கு முனையை மடித்திருந்தார். ஆனந்த் அந்தப் புத்தகத்தை வெறுமனே புரட்ட உள்ளே இருந்து ஒரு தாள் கீழே விழுந்தது.

எடுத்துப் பார்த்த ஆனந்த் மெல்ல விசிலடித்தான்.....

(தொடரும்)

அமானுஷ்யன் - 8



ஒரு வேளை அவன் இந்த புத்த விஹாரத்திற்குள் உயிருடன் இருக்கிறான் என்றால் அவன் மறைந்திருக்க கண்ணுக்குத் தெரியாத இந்த சுரங்கப் பாதை உள்ள பாதாள அறைதான் பொருத்தமான ரகசிய இருப்பிடம் என்பதில் வந்தவர்களுக்கு சந்தேகமிருக்கவில்லை.

மூத்த பிக்கு அமைதியாகச் சொன்னார், "அது ஒரு காலத்தில் பாதுகாப்புக்காக கட்டப்பட்ட அறை. அதில் சில புத்தகங்களும், சிலைகளும் மட்டுமே இருக்கின்றன. அதுவும் எங்களுக்கு மட்டுமே தெரிந்த இருப்பிடம். நீங்கள் தேடும் ஆள் அங்கு வந்து ஒளிய வாய்ப்பேயில்லை"

இளைய பிக்கு இப்போதும் தலையைக் குனிந்து கொண்டு நின்றாரே தவிர வாயைத் திறக்கவில்லை.

அங்கு இரண்டாவது முறையாகத் தேடிக் கொண்டு வந்தவன் அலட்சியமாகச் சொன்னான், "பயப்படாதீர்கள். உங்கள் புத்தகங்களும் சிலைகளும் எங்களுக்கு வேண்டாம். நாங்கள் அதையெல்லாம் ஒன்றும் செய்ய மாட்டோம். அவன் அங்கு இல்லையென்றால் எங்கள் பாட்டுக்குப் போய் விடுவோம். இனி வந்து தொந்தரவு செய்ய மாட்டோம். நீங்கள் எல்லோரும் ஒதுங்கி எங்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் நில்லுங்கள். அல்லது இந்த இடத்தை விட்டுப் போய் ஏதாவது ஒரு அறைக்குள் பத்திரமாக இருங்கள்"

ஒரு வேளை அவன் அங்கு இருந்தால் என்ன செய்வார்கள் என்பதற்கு பெரிய ஆராய்ச்சி தேவைப்படவில்லை. அவர்கள் கையில் இருந்த நவீனத் துப்பாக்கிகள் அதை சந்தேகத்திற்கு இடமில்லாமல் தெரிவித்தன. மூத்த பிக்கு சில அடிகள் பின் வாங்கி சுவற்றை ஒட்டினற் போல் நிற்க, இளைய பிக்கு உட்பட மற்ற பிக்குகளும் அப்படியே செய்தனர்.

அவரிடம் பேசியவன் தன் சகாக்களிடம் சொன்னான், "ரெண்டு பேர் புத்த விஹார வாசற்கதவு பக்கம் நில்லுங்கள். ரெண்டு பேர் இந்த சுரங்கப் பாதைக்கு வெளியே நில்லுங்கள். மற்றவர்களில் மூன்று பேர் முதலில் உள்ளே போகலாம். மீதியுள்ள மூன்று பேர் இரண்டு நிமிட இடைவெளி விட்டு உள்ளே தொடர்ந்து வரட்டும். எல்லாரும் தயாராய் இருங்கள்...."

டார்ச் லைட்டைப் பிடித்தபடி முதலில் ஒருவன் மெல்லச் செல்ல துப்பாக்கியை நீட்டியபடி இருவர் பின் தொடர்ந்தனர். அவர்கள் சென்று சரியாக இரண்டு நிமிடம் கழித்து அடுத்த மூன்று பேரிலும் ஒருவன் டார்ச் ச்லைட்டுடன் முன்னே செல்ல துப்பாக்கியுடன் இருவர் பின் தொடர்ந்தனர். இருவர் பாதாள அறையின் நுழைவு துவாரத்தை நோக்கி துப்பாக்கியை நீட்டியபடி தயாராக நிற்க மற்ற இருவர் புத்த விஹார கதவுப் பக்கம் துப்பாக்கியை நீட்டியபடி தயாராக நின்றனர்.

சுமார் இருபது நிமிடங்கள் கழித்து பாதாள அறையிலிருந்து உடல் உடையெல்லாம் தூசியும், ஒட்டடையுமாக பரிதாபமாக தும்மிக் கொண்டே வெளியே வந்தனர். சிலர் அங்குமிங்கும் சொறிந்து கொண்டு வந்தார்கள். அவன் அங்கு அவர்களுக்குக் கிடைக்கவில்லை. உள்ளே போகாத நான்கு பேரும் தங்கள் சகாக்களைப் பார்த்து லேசாகச் சிரித்தார்கள்.

மூத்த பிக்குகளிடம் முன்பு பேசியவன் இளைய பிக்குவை சந்தேகத்தோடு பார்த்தான். இளைய பிக்குவிற்கு முதலில் அவனை சரியாக அடையாளம் தெரியவில்லை. பின் கேட்டார், "அவன் அங்கேயும் இல்லை அல்லவா? நாங்கள் இனி அவனுக்குப் பயப்படாமல் இருக்கலாம் அல்லவா?"

சந்தேகம் தீராமல் அவன் தலையை மட்டும் அசைத்தான். தன் சகாக்களைப் பார்த்து தலையசைத்து விட்டு அவன் முன்னால் செல்ல அவர்கள் அனைவரும் அவனைத் தொடர்ந்து வெளியேறினார்கள்.

அவர்கள் போன பிறகு இளைய பிக்குவைப் பார்த்து மூத்த பிக்கு கேட்டார், "என்ன இதெல்லாம்?"

இளைய பிக்கு சொன்னார். "நாம் வருடக் கணக்கில் உபயோகிக்காத பாதாள அறையைச் சுத்தம் செய்ய வேண்டும் என்று நீங்கள் பல நாட்களாக சொல்லிக் கொண்டிருந்தீர்கள். நான் ஒரு நாள் எட்டிப்பார்த்த போது உள்ளே முழுவதும் சிலந்தி வலைகளும் தூசியுமாய் இருந்தது...... இவர்கள் இப்போது அதை எல்லாம் நிறையவே எடுத்துக் கொண்டு போய் விட்டார்கள். இனி நமக்கு சுத்தம் செய்வது சுலபம்"

மற்ற பிக்குகள் புன்னகைக்க மூத்த பிக்கு இளைய பிக்குவை ஊடுருவிப் பார்த்தார். இளைய பிக்கு தன் தலையைத் தாழ்த்திக் கொண்டார். இளைய பிக்குவிற்கு அந்தப் பெயர் அறியாத இளைஞன் மேல் இருந்த பாசமும் அதனால் அவனைக் கொல்லத் துடிக்கிற மனிதர்கள் மீதிருந்த கோபமும் முற்றும் துறந்தவர்களுக்கு சிறிதும் பொருத்தமானதல்ல என்பதை மூத்த பிக்குவின் பார்வை சொல்லியது. புத்த பிக்குவாக மாறி அந்த புத்த விஹாரத்திற்கு அவர் வந்து ஒரு வருட காலமே ஆகி இருந்தது. புத்த மத நூல்களைப் படிப்பதிலும், அனுஷ்டானங்களைப் பின் பற்றுவதிலும் அவர் குறுகிய காலத்திலேயே நல்ல தேர்ச்சி பெற்று விட்டிருந்தாலும் மனம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அவர் இன்னும் உண்மையான பிக்குவின் தன்மைகளைப் பெற்று விட்டிருக்கவில்லை என்பது மூத்த பிக்குவின் கணிப்பாக இருந்தது. அதை உறுதிப்படுத்தும் விதத்தில் இளைய பிக்கு நடந்து கொள்ளும் போதெல்லாம் வார்த்தைகளின்றி பார்வையாலேயே மூத்த பிக்கு சுட்டிக் காட்டுவது வழக்கம்.

அவன் மீது அவர் வைத்திருந்த அன்புதான் வந்தவர்கள் மீது கோபத்தை ஏற்படுத்தி விட்டிருக்கிறது என்பதை அவர் பார்வையால் சுட்டிக் காட்டியதற்கு இளைய பிக்கு வாய் திறந்து எதிர்க் கேள்வி கேட்டார். "நிராதரவாய் நிற்கும் மனிதர்கள் மீது அன்பு காட்டுவது தவறா குருவே?"

மூத்த பிக்கு சொன்னார், "அன்பு உயிர்கள் அனைத்தின் மீதும் பொதுவாக இருப்பது தெய்வீகத் தன்மை. ஆனால் அது தனிப்பட்ட மனிதர்களிடம் தேங்கும் போது துக்கத்தையே தரும்"

இளைய பிக்கு மௌனம் சாதித்தார். மூத்த பிக்கு சொன்னார், "இன்னொரு விஷயம்..."

என்ன என்பது போல் இளைய பிக்கு பார்க்க, மூத்த பிக்கு சொன்னார், "பேச்சில் சாமர்த்தியம் பல சந்தர்ப்பங்களில் நம்மை உண்மையை நழுவ விடச் செய்வதுண்டு...."

குனிந்த தலை நிமிராமல் இளைய பிக்கு நகர்ந்தார். ஆனால் சிறிது நேரத்தில் அவருடைய சிந்தனை அவனை நோக்கிச் சென்றது. அவன் வருவதை முன் கூட்டியே அறியும் சக்தி படைத்தவனாக இருந்ததாகத் தோன்றியது. அவன் நேற்று இரவு அங்கிருந்து கிளம்புவதாகச் சொன்ன போது மூத்த பிக்கு உட்பட அனைவருமே அது தேவையுமில்லை, உசிதமுமில்லை என்று சொன்னார்கள். மூத்த பிக்கு அவனிடம் கேட்டார், "நீ ஏன் போக வேண்டும் என்று நினைக்கிறாய்?"

"அவர்கள் என்னை மறுபடி தேடி வரலாம் என்று தோன்றுகிறது"

இளைய பிக்கு சொன்னார். "அவர்கள்தான் ஒரு முறை பார்த்து விட்டுப் போய் விட்டார்களே. இனி உனக்கு இதுதான் பாதுகாப்பான இடம். இனி இங்கே தேடி வர மாட்டார்கள்"

அவன் அமைதியாக விளக்கினான், "நீங்கள் உங்களுக்குத் தேவையான ஒரு முக்கியமான பொருளைத் தொலைத்து விட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதை வைத்திருக்கக் கூடிய எல்லா இடத்திலும் தேடுகிறீர்கள். அது கிடைக்கவில்லை. நீங்கள் முயற்சியைக் கைவிட்டு விடுவீர்களா? மாட்டீர்கள் அல்லவா? முதலில் மேற்போக்காகத் தேடிய இடத்தில் எல்லாம் மறுபடி நிதானமாகவும் மேலும் கவனத்துடனும் தேடுவீர்கள் அல்லவா? அதே போலத்தான் அவர்களும் என் உடல் எங்கும் கிடைக்கவில்லை என்றான பிறகு மறுபடி தேடிய இடத்திலேயே தேட வருவார்கள்...."

"நீ இன்னும் முழுதும் குணமடையவில்லை. இந்த நிலையில் நீ எங்கே போவாய்? என்ன செய்வாய்? உனக்கு என்ன பாதுகாப்பிருக்கிறது?"

அவன் புன்னகைத்தான். "இது வரை காப்பாற்றிய கடவுள் இனியும் காப்பாற்றுவார். ஏதாவது வழி காட்டுவார்"

இளைய பிக்கு மூத்த பிக்குவைப் பார்த்தார். மூத்த பிக்கு ஏதாவது அவனிடம் சொல்லி அவன் மனதை மாற்றுவார் என்று எதிர்பார்த்தார். ஆனால் மூத்த பிக்கு அவன் முகத்தைப் பார்த்தே அவன் எடுத்த முடிவில் இருந்த உறுதியை அறிந்ததால் பேசாமல் இருந்தார்.

துப்பாக்கிக் குண்டால் துளைக்கப்பட்ட சட்டையின் துளையை மறைக்க ஊசி நூலால் மிகக் கச்சிதமாக அவன் தைத்துக் கொண்டான். அவனுக்கு எடுத்துச் செல்ல எதுவும் இருக்கவில்லை. அந்த இரவு வேளையில் அவன் கிளம்பிய போது மூத்த பிக்கு அவனிடம் சிறிது பணத்தைத் தர முன் வந்தார். அவன் தயங்கினான். "இங்கு எங்களைப் போன்றவர்கள் பணம் தந்து உங்களை ஆதரிக்க வேண்டுமேயல்லாமல் உங்களிடம் இருந்து பணம் பெறுவது முறையல்ல, குருவே. நீங்கள் எனக்கு நிறையவே உதவி செய்து விட்டீர்கள். இனி நீங்கள் எனக்குத் தர வேண்டியதெல்லாம் ஆசிகள் மட்டுமே" என்றவன் அவர் காலில் விழுந்து வணங்கினான்.

அதைப் பார்த்த இளைய பிக்கு கண் கலங்கினார். மூத்த பிக்கு கண்களை மூடி அவனை ஆசீர்வதித்தார். பின் அவனிடம் அந்தப் பணத்தைத் திணித்தார். "இதில் அதிகமில்லை. சில நாட்கள் உணவுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். வைத்துக் கொள்". அவன் நன்றியுடனும் தயக்கத்துடனும் அதை வாங்கிக் கொண்டான்.

மற்ற பிக்குகளைக் கை கூப்பி வணங்கினான். அவர்களும் கண்களை மூடி ஒரு கணம் அவனுக்காகப் பிரார்த்தித்தனர்.

அவன் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக சொல்லிக் கொண்டு விடை பெற்றான். கடைசியில் இளைய பிக்குவின் அருகில் வந்த போது அவருடைய கலங்கிய கண்களைக் கண்டு அவன் நெகிழ்ந்து போனான். அவன் கண்களும் ஈரமாயின. அவர் ஒரு சால்வையை அவனுக்குத் தந்தார். இந்தக் கடுங்குளிரிலிருந்து காத்துக் கொள்ளவும் அவன் தலை, தோள் காயங்கள் வெளியே தெரியாமல் இருக்கவும் அது பயன்படும் என்று நினைத்தார். அவன் நெகிழ்ந்த மனதுடன் சொன்னான், "ஒருவேளை நான் பிழைத்து, எனக்கு நினைவு திரும்பி என் குடும்பத்தோடு இணைந்தால் அவர்களைக் கூட்டிக் கொண்டு நிச்சயம் ஒரு நாள் இங்கு வருவேன், பிக்குவே. என்னையே நான் அறியாமல் நிராதரவாய் இருந்த போது என்னைக் காப்பாற்றி என்னிடம் அன்பு காட்டியவர்கள் என்று உங்கள் அனைவரையும் நான் அறிமுகப்படுத்தி வைப்பேன்...." அதற்கு மேல் அவனால் பேச முடியவில்லை.

பனி பெய்யும் கடுங்குளிரான இரவு வேளையில் அவர் தந்த சால்வையைப் போர்த்திக் கொண்டு அந்தப் புத்த விஹாரத்திலிருந்து அவன் வெளியேறினான்.

நேற்றைய நிகழ்வில் இருந்து மீண்ட இளைய பிக்குவிற்கு இங்கிருந்து நேற்று இரவு போன அவன் எங்கு சென்றானோ, தற்போது என்ன செய்கிறானோ என்று யோசிக்காமல் இருக்க முடியவில்லை.

(தொடரும்)

அமானுஷ்யன் - 7



ஆனந்த் ஆச்சார்யாவின் கொலை வழக்கு சம்பந்தமாக சேகரித்திருந்த எல்லா பத்திரிகைக் குறிப்புகளையும் படித்து முடித்தான். படித்த எதிலும் பெரிய உபயோகமான தகவல்கள் இருக்கவில்லை. அவன் கடிகாரத்தைப் பார்த்தான். மணி ஒன்பதரை. அம்மாவுக்கு ஃபோன் செய்ய வேண்டிய நேரம்.... செல்லை அழுத்தினான்.

"ஹலோ" சாரதாவின் குரல் களைப்புடன் இருந்தது.

"நான் ஆனந்த் பேசறேன்ம்மா. ஏன் உன் குரல் களைப்பாய் கேட்கிறது?"

"அப்படியொண்ணும் இல்லைப்பா. உனக்கு ஓட்டல் ரூம் எல்லாம் சௌகரியமாய் இருக்கா?"

"இது ஸ்டார் ஓட்டல்ம்மா. நல்லாவே சௌகரியமாய் இருக்கும்மா"

"சாப்பிட்டாயா?"

"எட்டு மணிக்கே சாப்பிட்டாச்சு. நீ?"

சாரதா சில வினாடிகள் எடுத்துக் கொண்டு தாமதமாகப் பதிலளித்தாள். "ஆச்சு"

அம்மா பொய் சொல்கிறாள் என்பது ஆனந்திற்கு புரிந்தது. மனதில் ஏற ஆரம்பித்த சுமையை ஒரு கணம் பொருட்படுத்தாமல் கேட்டான். "நீ என்ன செய்துகிட்டிருந்தாய்?"

"லலிதா சஹஸ்ரநாமம் சொல்லிகிட்டு இருந்தேன். பாதியில் நிறுத்தியிருக்கேன். நான் வைக்கட்டா. நாளைக்கும் மறக்காம போன் பண்ணு...."

அவன் சரி என்று சொல்வதற்கு முன் ஃபோன் வைக்கப்பட்டது. இது ஒன்றும் புதிதில்லை என்ற போதும் இன்னமும் ஏனோ புதிதாக வலிக்கிறது. இது நாள் வரை அம்மாவிடம் அவன் ஐந்து நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து பேசியதாக அவனுக்கு நினைவில்லை. அவன் சௌக்கியமாய் இருக்கிறான் என்ற ஒரு செய்திக்கு மேல் அவளுக்கு வேறு எதையும் தெரிந்து கொள்ள ஆர்வமிருப்பதில்லை. அந்த ஒரு செய்தி தெரிந்து கொள்ள அதிக நேரம் ஆவதில்லை....

இன்று அவனும் இல்லை என்பதால் அம்மா சமைத்தே இருக்க மாட்டாள் என்று நினைத்தான். எதாவது ஒரு கடவுளை வேண்டி உபவாசம் இருந்திருப்பாள். வெறும் பாலோ, பழமோ தான் இன்றைய ஆகாரமாய் இருந்திருக்கும். இந்த லலிதா சஹஸ்ரநாமம் முடிந்த பின் இன்னும் எத்தனையோ ஸ்தோத்திரங்கள் படித்து அவள் என்னேரம் உறங்குவாளோ அந்தக் கடவுளுக்குத்தான் வெளிச்சம். சுமார் இருபத்தி நான்கு வருடங்களாகக் கும்பிட்டும், உபவாசங்கள் இருந்தும் அந்தக் கடவுள்கள் அவளிடம் கருணை காட்டியதாகத் தெரியவில்லை.

சாரதாவை இந்த நிலைக்குக் கொண்டு வந்த சம்பவம் ஒரு பிள்ளையார் சதுர்த்தி சமயத்தில் நடந்தது. வித விதமான பிள்ளையார்கள் ஊர்வலமாகப் போக வெளியே நின்று தன் இரண்டு பிள்ளைகளுடன் வேடிக்கை
பார்த்துக் கொண்டிருந்த அவள் ஊர்வலம் முடிந்து பார்க்கையில் அவளுடைய இளைய மகன் மூன்று வயது அக்ஷய் காணாமல் போயிருந்தான். ஆரம்பத்தில் அவன் ஊர்வலத்தோடு போயிருக்கலாம் என்று எல்லோரும் நினைத்தார்கள். எல்லா போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. நண்பர்களும், உறவினர்களும் எல்லா இடங்களிலும் தேடினார்கள். அவன் கிடைக்கவில்லை. காணாமல் போன அக்ஷயின் புகைப்படத்தைப் பிரசுரித்து அவன் முதுகின் மேற்பகுதியில் நாகம் படமெடுப்பது போல் இருக்கும் மச்சத்தைப் பற்றியும் குறிப்பிட்டு விளம்பரப்படுத்திப் பார்த்தார்கள். ஆனால் பயனில்லை. அவன் மாயமாய் மறைந்திருந்தான். கணவனை முன்பே இழந்திருந்த சாரதாவை இளைய மகனின் இழப்பு நடைப்பிணமாகவே ஆக்கி விட்டது. அப்போது ஆனந்திற்கு ஐந்து வயது.

அன்றிலிருந்து சாரதாவின் கவனத்தை அவளுடைய காணாமல் போன இளைய மகனே ஆக்கிரமிக்க ஆரம்பித்தான். சாப்பிட அமர்கையில் காணாமல் போன மகனுக்கு சாப்பிட உணவு கிடைக்கிறதோ இல்லையோ என்ற கவலை அவளுக்கு வர ஆரம்பித்தது. நல்ல உடை ஏதாவது உடுக்கையில் மகனுக்கு நல்ல உடை கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற கவலை தோன்ற ஆரம்பித்தது. யாராவது அவனை எடுத்துக் கொண்டு போய் பிச்சை எடுக்கக் கூடப் பயன்படுத்தலாம் என்று ஒரு நபர் சொல்லப் போய் அவள் பயம் பலமடங்காய் அதிகரித்தது. மழலை மாறாத தன் மகனைக் காப்பாற்ற அவளுக்கு கடவுளைத் தவிர வேறு வழி தெரியவில்லை. அப்போது ஆரம்பித்த வழிபாடுகள் இன்று வரை குறையவில்லை.

ஒரு அரசாங்க உத்தியோகத்தில் இருந்த அவள் நடைப்பிணமாக வேலைக்கு சென்று வந்தாள். ஆனந்தை மிகவும் கவனமாகப் பார்த்துக் கொண்டாள். அவன் பத்திரமாக வீடு வந்து சேரும் வரை நிம்மதியிழந்து தவிப்பாள். அவன் வந்து சேர்ந்த பின் அவனுக்கு சாப்பிடக் கொடுத்த பின் அவள் மனதில் மறுபடி இளைய மகனின் நினைவுகளே வந்து அலைக்கழிக்கும்.

ஆனந்த் தாயின் கவனத்தைத் தன் பக்கம் திருப்ப பல காலம் முயன்றிருக்கிறான். முதல் ரேங்க் வாங்கிக் கொண்டு வந்து தாயிடம் காண்பிக்கையில் அவளைக் கூர்ந்து கவனிப்பான். அவள் முகத்தில் மகிழ்ச்சி ஒரு கணம் வந்து போகும். அடுத்த கணம் தன் இளைய மகன் படிக்காமல் எங்கே என்ன செய்து கொண்டிருக்கிறானோ என்ற கவலையில் அவள் மூழ்குவது தெரியும். பத்தாம் வகுப்பில் அவன் தங்க மெடல் வாங்கி பத்திரிகைகளிலெல்லாம் பெயர் வந்தது. அதை வாங்கிப் பார்த்தும் அவள் அழத்தான் செய்தாள். 'அந்தக் குழந்தை என்ன செய்கிறதோ!'. பள்ளியில் ஒரு நாள் அவளையும் அழைத்து பாராட்டு விழா நடத்தினார்கள். அன்று எடுத்த புகைப்படம் இன்றும் அவனிடம் இருக்கிறது. அவன் தாயின் பார்வையில் மகிழ்ச்சிக்குப் பதிலாக வேதனைதான் தெரிந்தது.

இல்லாத தன் தம்பியிடம் தாயைப் பறிகொடுத்து விட்டோம் என்பதை பின்னாட்களில் ஆனந்த் முழுவதுமாக உணர்ந்தான். அவன் தாயின் கவனத்தைக் கவர முயல்வதைப் பின் விட்டு விட்டான். தன்னால் முடிந்த வரை தாயிற்குக் கவலை ஏற்படுத்தாமல் பார்த்துக் கொண்டான். வீட்டுக்கு வர வேண்டிய நேரத்தில் அவன் வரா விட்டால் சாரதா பைத்தியம் பிடித்தது போல் ஆகி விடுவாள். ஆகவே ஐந்து நிமிடம் தாமதமாவது போல் இருந்தாலும் அவளுக்கு ஃபோன் செய்து சொல்லி விடுவான். அவன் பத்திரமாக இருக்கிறான் என்று உறுதியாகத் தெரிந்த பிறகு அவள் அவனைப் பற்றி நினைப்பது போல் தெரியவில்லை.

மூன்று வருடங்களுக்கு முன் ஞான திருஷ்டியில் பார்த்து எதையும் சொல்லக் கூடிய ஒரு சாதுவைப் பற்றி சாரதா தன் அலுவலக தோழி ஒருத்தி மூலம் கேள்விப்பட்டு ஆனந்திடம் சொன்னாள், "நீ போய் அவரைப் பார்த்து அக்ஷயைப் பத்திக் கேளேன்"

CBI ல் சேர்ந்த பின் பல போலி சாமியார்களைப் பற்றி நிறையவே அறிந்திருந்த ஆனந்திற்கு அந்த சாதுவை சந்திப்பதில் உடன்பாடு இருக்கவில்லை. ஆனால் அந்த நபர் மீது எந்தப் புகாரும் இல்லை, ஏதோ சக்தி வாயந்த மனிதராகத்தான் தென்படுகிறார் என்றும் டிபார்ட்மென்டிலேயே சிலர் சொன்னார்கள். மேலும் சாரதா தனக்கென எதையும் அவனிடம் இது வரை கேட்டதில்லை. அதனால் சென்று அந்த சாதுவைச் சந்தித்தான். பார்க்க அந்த மனிதர் மிகச் சாதாரணமாகத்தான் தெரிந்தார்.

அவன் தன் தம்பியைப் பற்றி சொன்னவுடன் அவர் கண்களை மூடிக் கொண்டு சிறிது நேரம் அமர்ந்திருந்தார். பின் சொன்னார். "அவன் உடம்பில் பின் புறம் ஏதோ நாகம் மாதிரி மச்சம் தெரிகிறது...."

ஒரு கணம் அவனுக்கு மெய் சிலிர்த்தது. பின் அவன் தொழிலுக்கே உரிய சந்தேகம் வந்தது. 'அம்மா தன் மகனின் அங்க அடையாளத்தைச் சொல்லும் போது பிரத்தியேகமான அந்த நாக மச்சத்தைப் பற்றி எல்லோரிடமும் சொல்வது வழக்கம். இதைப் பற்றி அவள் அலுவலக தோழியிடம் கூட சொல்லி இருக்கலாம். அவள் மூலம் இவருக்கு தெரிந்திருக்கலாம்'.

அவர் கண்களை மூடியபடியே தொடர்ந்தார். "அவன் இந்த தேசத்தில் இல்லை. வேறேதோ தேசத்தில் இருக்கிறான். நிறைய புத்த துறவிகள் தெரிகிறார்கள்... அவன் ஏதோ அங்கு கற்றுக் கொண்டிருக்கிறான்...." பின் நிறைய நேரம் அவர் ஒன்றும் சொல்லவில்லை. அவர் தூங்கி விட்டாரோ என்று ஆனந்த் நினைக்கையில் கண்களைத் திறந்தார்.

"ஆனால் அவனை நிறைய அபாயம் சூழ்ந்திருக்கிறது. எதிர்காலத்தில் அவன் நிறைய அபாயங்களை சந்திக்க வேண்டியிருக்கும்...."

ஆனந்திற்கு அவர் சொல்வதை நம்புவதா வேண்டாமா என்று தெரியவில்லை. "என்ன ஆகும்?"

அவர் மேலே கைகாட்டினார். "அவன் தீர்மானிக்கிறபடி ஆகும். அவன் தீர்மானம் விளங்கவில்லை. ஆனால் ஒன்று....."

ஆனந்த் அவரைப் பார்த்தான். அவர் சொன்னார். "உன் தம்பி சாதாரணமானவனில்லை"

வீட்டுக்கு வந்து ஆனந்த் அவர் கண்களை மூடிக்கொண்டு சொன்னதை மட்டும் சொன்னான். அவனுடைய நாக மச்சத்தைப் பற்றி அவர் சொன்னார் என்றதுமே சாரதா அவரை பரிபூரணமாக நம்பி விட்டாள்.

புத்த துறவிகளிடம் ஏதோ கற்றுக் கொண்டிருக்கிறான் என்று முடித்த ஆனந்த் "அவர் ஞான திருஷ்டிக்கு வேறெதுவும் தெரியவில்லை" என்றான்.

மறுநாள் சாரதாவின் பூஜையறைக்கு ஒரு புத்தர் சிலையும் வந்து சேர்ந்தது. புத்த பூர்ணிமா அன்று அவள் ஒரு பிரத்தியேக விரதமும் இருக்க ஆரம்பித்தாள்...

**********

சூரியோதயத்திற்கு முன்பு பத்து நபர்கள் நவீன துப்பாக்கியுடன் அந்த புத்த விஹாரத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அந்த விஹாரத்தின் கதவைப் பலமாகத் தட்டி புத்த பிக்குகளை எழுப்பினார்கள். கதவைத் திறந்த இளைய பிக்கு திடகாத்திரமான அந்த நபர்களைப் பார்த்து திகைத்துப் போனார். மூன்று பேர் கைகளில் பெரிய டார்ச் லைட்டுகளும் இருந்தன. அவர்களில் ஒருவன் முன்பே 'அவனை'த் தேடி வந்தவன். மற்றவர்கள் அவர் இது வரை பார்த்திராதவர்கள். அவர் பின்னால் வந்து நின்ற மற்ற பிக்குகளும் துப்பாக்கிகளுடன் நின்ற அந்த தடியர்களைப் பார்த்து பேச்சிழந்து நிற்க பேச முடிந்தவர் மூத்த பிக்குவே.

"என்ன வேண்டும்?"

"நாங்கள் அந்தத் தீவிரவாதியைத் தேடி வந்திருக்கிறோம்" முன்பு வந்தவனே இப்போதும் பேசினான்.

"அதுதான் அன்றே வந்து பார்த்து விட்டுப் போனீர்களே"

"நாங்கள் பார்த்தது சரியில்லை என்று மேலிடத்தில் சொல்கிறார்கள். அதுதான் மீண்டும் சரியாகத் தேட வந்தோம்"

"இது ஒரு புத்த விஹாரம். இங்கு இது போல் துப்பாக்கிகளுடன் நுழைவது சரியல்ல"

"என்ன செய்வது? அரசாங்க உத்தரவு" சொல்லி விட்டு அவன் தலையசைக்க அந்தக் கும்பல் அவரைப் பொருட்படுத்தாமல் உள்ளே நுழைந்தது. வேறு வழியில்லாமல் புத்த பிக்குகள் விலகி வழி விட்டார்கள். முதலில் அவர்கள் ஒவ்வொருவர் மீதும் டார்ச் லைட் அடித்து அவர்களை நன்றாக ஆராய்ந்து அவர்களில் 'அவன்' இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு மிகக் கவனமாக புத்த விஹாரத்தில் தேடினார்கள். புத்த விஹாரத்தை தங்கள் டார்ச் லைட்களால் ஒளிமயமாக்கிப் பார்த்தார்கள். சுமார் ஒரு மணி நேரம் தொடர்ந்த சோதனையில் அவன் கிடைக்கவில்லை.

வேறு வழியில்லாமல் அவர்கள் திரும்பிச் செல்ல யத்தனித்த போது இளைய பிக்கு அவர்களை நிறுத்தினார்.

"நீங்கள் சொல்வது போல் அவன் உண்மையிலேயே தீவிரவாதிதானா?"

"ஆமாம்"

"அப்படியானால் நீங்கள் பாதாள அறையையும் பார்த்து விட்டால் எங்களுக்கு நிம்மதியாக இருக்கும்" என்ற இளைய பிக்கு ஒரு மூலையில் இருந்த ஒரு சிறிய புத்தர் சிலையை நகர்த்திக் காட்டினார். அங்கு சென்று அவர்கள் டார்ச் லைட் அடித்துப் பார்க்க கீழே மரப்படிகள் தெரிந்தன.

மூத்த பிக்கு இளைய பிக்குவை முறைக்க, மற்ற பிக்குகள் இளைய பிக்குவை திகைப்புடன் பார்க்க, அவரோ யாரையும் பார்க்காமல் தலை குனிந்து நின்றார்.

(தொடரும்)

அமானுஷ்யன் - 6



அவன் நன்றாக ஓய்வு எடுத்துக் கொண்டான். நிறைய நேரம் தூங்கினான். ஆனால் அவன் விழித்திருக்கும் பொழுதுகளில் புத்தபிக்குகளுக்குப் பெரும் உதவியாக இருந்தான். புத்த விஹாரத்தை சுத்தம் செய்ய, உணவு சமைக்க, துவைக்க என்று இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தான். அவன் வேலை செய்வதில் கச்சிதத் தன்மை இருந்தது. அதிகமாக அலட்டிக் கொள்ளாமல் எதையும் லாவகமாக, வேகமாக செய்து முடித்தான்.

மூத்த பிக்கு மற்ற பிக்குகளிடம் சொன்னார். "பாருங்கள். அவன் வேலை செய்யும் போது கூட சக்தியை அனாவசியமாய் விரயம் செய்வதில்லை. செய்ய வேண்டியதை முழுக்கவனத்துடன் சிறப்பான முறையில் சோர்வு ஏற்படுத்திக் கொள்ளாமல் செய்வது எல்லோருக்கும் முடிந்ததல்ல"

அவனை அந்த புத்த விஹாரத்தில் அனைவருக்கும் மிகவும் பிடித்து விட்டது. ஒவ்வொருவரைப் பார்க்கும் போதும் அவன் முகத்தில் படரும் ஆத்மார்த்தமான புன்னகைதான் அவனுடைய மிகப்பெரிய மனம் கவரும் அம்சமாக இருந்தது. மற்ற சமயங்களில் சாதாரணமாகத் தெரியும் அவன் முகம் புன்னகைக்கும் சமயங்களில் ஒரு வசீகரனாக அவனை ஆக்கியது. எல்லோரும் அவனால் வசீகரிக்கப்பட்டார்கள். என்றாலும் இளைய பிக்கு அவனுடைய பரம ரசிகராகி விட்டார்.

ஒரு முறை அவன் தூங்கி எழுகையில் அருகில் அமர்ந்திருந்த இளைய பிக்கு சொன்னார்.

"நீ தூங்குவது ஒரு குழந்தை தூங்குவது போல இருக்கிறது. அவ்வளவு அமைதியாகத் தூங்குகிறாய். உன்னால் எப்படி முடிகிறது?"

அதில் என்ன இருக்கிறது என்பது போல அவன் இளைய பிக்குவைப் பார்த்தான்.

இளைய பிக்கு தயக்கத்துடன் விளக்கினார். "உன்னை யாரோ கொலை செய்ய முயற்சித்திருக்கிறார்கள். உன் பிணத்தைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். உனக்கோ நீ யார் என்று நினைவேயில்லை. அப்படி இருக்கையில் ஒரு மனிதனுக்குத் தூக்கம் இப்படி வருமா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது...."

அவன் ஒன்றும் சொல்லாமல் இளைய பிக்குவையே பார்த்தான். அவன் முகத்தில் லேசாக வாட்டம் வந்து வேகமாக மறைந்தது. பிறகு புன்னகையுடன் இளைய பிக்குவிடம் சொன்னான். "கடந்த காலம் எல்லாவற்றையும் என்னை மாதிரி மறக்க முடிவது ஒரு விதத்தில் பெரிய வரப்பிரசாதம் இல்லையா? எத்தனை பேர் எல்லாவற்றையும் மறந்து ஒரு புதிய வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஆனால் பழையதை மறக்க முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். எனக்கு கடவுள் கேட்காமலேயே அந்த வரப்பிரச்சாதத்தைக் கொடுத்திருக்கிறார்..."

இளைய பிக்கு அவனையே கூர்ந்து பார்த்தார். அவன் தன் கவலையை மறைத்து இப்படிப் பேசுகிறானா இல்லை நிஜமாகவே சொல்கிறானா? "சரி உன்னைக் கொல்ல ஆட்கள் முயற்சி செய்தது?"

"ஒருவன் எப்போது சாக வேண்டும் என்று தீர்மானிப்பது கடவுள்தான். இவர்கள் எல்லாம் முயற்சி செய்து என்ன ஆகப் போகிறது? அவர்கள் முயற்சி செய்து நான் பிழைத்துக் கொள்ளவில்லையா? அப்படி நான் நாளைக்கே சாக வேண்டும் என்று கடவுள் முடிவு செய்திருந்தால் நான் கவலைப்பட்டு மாற்றவா முடியும்? இல்லா விட்டாலும் மனிதன் என்றாவது ஒரு நாள் செத்துத்தானே ஆக வேண்டும். அது நாளையானால் என்ன இன்னும் நாற்பது வருஷம் கழித்து ஆனாலென்ன?"

இளைய பிக்கு அவனைத் திகைப்புடன் பார்த்தார். அவர் முகத்தில் இன்னும் அவனைப் பற்றிய கவலை இருப்பதைப் பார்த்த அவன் மனம் நெகிழ்ந்து சொன்னான். "ஒரு மனிதனுக்கு ஒரு விதிதான் இருக்க முடியும், பிக்குவே. கவலைப் படுவதால் அந்த விதியை யாரும் மாற்றி விட முடியாது"

இளைய பிக்குவிற்கு அவன் வார்த்தைகளில் இருந்த உண்மையை விட அந்த உண்மையை அவன் வாழும் விதம் மிகவும் பிடித்திருந்தது. அது போல் பேசும் பலரை அவர் பார்த்திருக்கிறார். ஆனால் நிஜவாழ்க்கை என்று வரும் போது அப்படிப் பேசுபவர்கள் படும் கவலை சாதாரணமானதல்ல. ஆனால் இவன் முகவாட்டமும் கவலையும் ஒருசில நிமிடங்களுக்கு மேல் இவனிடம் தங்குவதில்லை. வந்தவுடன் அதை விரட்டும் வித்தை அவன் கற்றிருக்கிறான்..

அவன் சாதாரணமானவன் அல்ல என்று மூத்த பிக்கு சொன்னது நினைவுக்கு வந்தது. நேற்றைய தினம் அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது அவன் முதுகில் கழுத்துக்கும் சற்று கீழே முதுகுத்தண்டின் மேற்பகுதியில் இருந்த ஒரு பெரிய மச்சத்தை மூத்த பிக்கு நீண்ட நேரம் ஆராய்ந்தார். ஒரு பாம்பு படமெடுப்பது போல் அந்த மச்சம் இருந்தது. மூத்த பிக்கு மனிதர்களின் சாமுத்திரிகா லட்சணத்தை நன்றாக அறிந்தவர். அவர் அந்த மச்சத்தின் அறிகுறி என்ன என்று ஆர்வமாகக் கேட்ட இளைய பிக்குவிடம் அவன் சாதாரணமானவன் அல்ல என்று மட்டும் சொன்னார் ....

இளைய பிக்கு அவனிடம் ஆர்வத்துடன் கேட்டார். "இந்த மச்சம் உனக்கு சிறு வயதிலிருந்தே இருக்கிறதா?"

"எந்த மச்சம்?"

"உன் முதுகின் மேல் புறத்தில் இருக்கும் மச்சம்"

அவன் விழித்தான். இளைய பிக்குவிற்குத் தன் தவறு புரிந்தது. பழையவை எதுவும் நினைவில்லாத அவனிடம் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்க வேண்டாம் என்று தோன்றியது. அவன் அவரிடம் அந்த நாக மச்சத்தைப் பற்றி விளக்கமாகக் கேட்டுக் கொண்டான். என்ன நிறம், என்ன நீள அகலம், பார்க்க எப்படி இருக்கிறது என்றெல்லாம் அவன் கேட்டுத் தெரிந்து கொண்ட போது பாவமாக இருந்தது. தன் உடல் பற்றியே அடுத்தவரிடம் கேட்டறிய வேண்டியது எப்படிப்பட்ட துர்ப்பாக்கியம்?

இளைய பிக்கு விரைவில் பேச்சை மாற்றினார். "உன் காயங்கள் சீக்கிரம் ஆறி வருகின்றன என்று குரு சொன்னார்"

அவன் முகத்தில் புன்னகை அரும்பியது. "வலி நிறையவே குறைந்து விட்டது.... மருந்து பாதி ஓய்வு பாதி"

"அப்படியென்றால்?"

"நன்றாக ஓய்வெடுத்துக் கொள்ளும் உடலில்தான் மருந்து நன்றாக வேலை செய்யும்."

'இப்படிப் பெரிய பெரிய உண்மைகள் எல்லாம் தெரிகிற இவனுக்கு தன்னைப் பற்றிய உண்மை நினைவில்லையே' என்று நினைத்து இளைய பிக்கு பெருமூச்சு விட்டார்.

*******

CBI மனிதன் மனதில் அமானுஷ்யனே நிறைந்திருந்தான். படித்த அந்தப் பக்கங்களில் இருப்பதெல்லாம் உண்மையானால் அவர்கள் பயப்படுவது நியாயமே என்பது அவனுக்குப் புரிந்தது. ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு அவன் தன்னுடைய ஆளிற்கு ஃபோன் செய்தான்.

"அவனைச் சுட்ட அந்த ராத்திரியில் என்ன நடந்ததுன்னு எனக்கு சின்ன விஷயம் கூட விடாம சொல்லு"

மறுபக்கத்தில் அந்த இரவின் நிகழ்ச்சிகள் மறுபடியும் விளக்கப்பட்டன. எல்லாவற்றையும் பொறுமையாகவும் கவனமாகவும் கேட்டு விட்டு ஒரு கேள்வியை மிக நிதானமாக CBI மனிதன் கேட்டான். "நீங்க அவனைச் சுட்ட பிறகு அவன் தவறி அந்த மலையுச்சியில் இருந்து விழுந்தானா? இல்லை மலையுச்சியிலிருந்து அவனாகவே குதித்தானா?"

மறுபக்கம் சிறிது நேரம் பதிலளிக்க எடுத்துக் கொண்டது. "சார்...அவனாகவே குதித்த மாதிரிதான் தோணுது"

சிறிது நேரம் மௌனம் சாதித்த CBI மனிதன் சொன்னான். "எனக்கு அந்த புத்த விஹாரத்தை சோதனை செய்த ரெண்டு பேர்ல எவனுக்கு அதிக மூளை இருக்கோ அவன் கிட்ட பேசணும். எவ்வளவு சீக்கிரம் பேச முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பேசணும். என்னோட நம்பருக்குப் ஃபோன் செய்யச் சொல்லு"

"சார். அவங்க அந்தப் பிணத்தைத் தேடிட்டு இருக்கிற இடங்கள்ல பெரும்பாலும் டவர் கிடைக்கிறதில்லை. அவனைப் பிடிக்கிறது கஷ்டம். ஆனா முடிஞ்ச அளவு சீக்கிரம் உங்க கிட்ட பேசச் சொல்றேன்......"

CBI மனிதன் தூங்கவில்லை. அவன் அந்த ஃபோன் காலுக்காகக் காத்திருந்தான். காத்திருந்த போது நிமிடங்கள் யுகங்களாக நகர்ந்தன. அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்தவன் எழுந்து சென்று தானே காபி தயார் செய்து குடித்தான். காபியின் லேசான கசப்பை கண்களை மூடிக் கொண்டு அனுபவித்தவன் ஆச்சார்யாவை சபித்தான். "எங்கிருந்து பிடித்தான் இந்த ஆள் அந்த அமானுஷ்யனை?"

மலையுச்சியில் இருந்து அவனாகவே விழுந்தது CBI மனிதனுக்கு நெருடலாக இருந்தது. ஒரு வேளை அவன் அந்தப் புத்தவிஹாரத்தின் அருகில் விழுந்து அவர்கள் அவனை எடுத்துக் காப்பாற்றி இருந்தால்....? என்ற கேள்வி பூதாகரமாக மனதில் எழுந்தது. சிந்திக்க ஆரம்பித்தான்.

சரியாக இரண்டு மணி முப்பத்திரண்டு நிமிடங்கள் கழிந்த பின் அவன் எதிர்பார்த்த ஃபோன் வந்தது.

CBI மனிதன் நேரடியாக விஷயத்திற்கு வந்தான். "பிணத்தைத் தேடிகிட்டு போன உங்களுக்கு புத்த விஹாரத்தின் உள்ளே போய்ப் பார்க்கணும்னு எப்படி தோணிச்சு?"

"கதவுல இரத்தக்கறை இருந்தது சார்"

"அப்புறம்"

"அங்கே கையில் கட்டு போட்டுகிட்டு ஒரு வயசான பிக்கு வந்தார். அவர் கையில் அடிபட்ட காயம்னு புரிஞ்சது. ஆனாலும் எதுக்கும் உள்ளே போய் பார்த்துடலாம்னு உள்ளே போய் ஒரு இடம் விடாமல் பார்த்தோம்....."

"அங்கே கரண்ட் இருக்கா?"

"இல்லை சார். உள்ளே இருட்டுதான். அங்கங்க விளக்கு வச்சிருந்தாங்க. மீதி இருட்டான இடத்தையும் நாங்க டார்ச் அடிச்சுப் பார்த்துட்டோம். ஒரு இடத்தையும் மிச்சம் வைக்கலை...அவன் பிணம் இல்லை"

"நீங்க ரெண்டு பேரும் உள்ளே நுழைஞ்சதுல இருந்து பார்த்த ஒவ்வொன்னையும் சொல்லு பார்க்கலாம்"

அவன் விவரித்தான். முழுவதையும் கேட்டுக் கொண்ட CBI மனிதன் கடைசியில் கேட்டான். "அந்த தியான மண்டபத்தில் நிறைய பிக்குகள் தியானம் செய்துட்டு இருந்தாங்களே அவங்கள்ல ஒருத்தனாய் அவன் இருந்திருந்தால்....? நீங்க ஒவ்வொருத்தர் முகத்தையும் சரியா கவனிச்சீங்களா?"

"அங்கே பிக்குகள் மட்டும்தான் இருந்தாங்க சார்"

"நான் கேட்டதுக்குப் பதில் சொல்லு. அவங்க ஒவ்வொருத்தரையும் டார்ச் அடிச்சுப் பார்த்தீங்களா?"

தயக்கத்துடன் பதில் வந்தது. "..... இல்லை சார்."

CBI மனிதனுக்குப் புரிந்தது. அமானுஷ்யன் பற்றியறிந்த விவரங்கள் படித்திரா விட்டால் அப்படிப் பார்க்க வேண்டிய அவசியம் தனக்கே புரிந்திருக்காது என்கிற போது அவனைக் குறை சொல்வதில் அர்த்தம் இல்லை. அவன் அந்த பிக்குவின் கைக்காயத்தைப் பார்த்த பின் கூட உள்ளே போய் பார்த்ததே பெரிய விஷயம்!

"சரி உடனடியா பத்து பேராவது அந்த புத்த விஹாரத்துக்குப் போங்க. வலுவான ஆள்களா பெரிய டார்ச் லைட்களோட போங்க. அங்கே இன்னொரு தடவை செக் பண்ணுங்க. ஒவ்வொரு ஆளையும் ஒவ்வொரு இடத்தையும் செக் பண்ணுங்க. ஒரு வேளை அவன் மாறு வேஷத்துல கூட இருக்கலாம். அவன் அங்கே இருந்தா துப்பாக்கி ரவையில மூளையைக் குறி பார்த்து சுடுங்க. இதயத்தைக் குறி பார்த்து சுடுங்க. அவன் செத்தாலும் அவனை எரிச்சு அவன் சாம்பலானவுடன் எனக்கு சொல்லுங்க....நான் உங்க பாஸ் கிட்டயும் இப்பவே ஃபோன் செய்து சொல்றேன். உடனே கிளம்புங்க."

(தொடரும்)