Sunday, June 15, 2014

பரம(ன்) ரகசியம் – 81

ஜான்சனுக்கு ஈஸ்வர் இந்த அளவு முன்னேறி இருப்பதை நம்பக் கஷ்டமாக இருந்தது. எல்லாவற்றிற்கும் ஒரு பதிலை வைத்திருந்த குருஜியின் அறிவுக்கு இது எட்டிய விஷயமாக இருந்தாலும் ஓரிரு நாட்களில் ஈஸ்வர் அவர்களை வேவு பார்க்கும் அளவுக்கு அசுர வேகத்தில் நெருங்கியிருப்பது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.  இதில் அக்னி நேத்ர சித்தர் வேறு அவனை சந்தித்திருக்கக் கூடும் என்று குருஜி நினைக்கிறார்....!

ஜான்சன் மனத்தாங்கலுடன் சொன்னார். “உங்க நண்பர் உதயன் சுவாமி அக்னிநேத்ர சித்தர் இந்த இடத்தில் நடக்கும் ஆராய்ச்சிகளைக் கெடுக்க முடியாதபடி மந்திரக்காப்பு செய்தது மாதிரி ஈஸ்வரும் எதுவும் செய்ய முடியாதபடி செய்திருக்க நீங்கள் சொல்லி இருக்கலாம்....

குருஜி சிறிது நேரம் ஒன்றும் சொல்லாமல் யோசித்தார். ஈஸ்வரை அவர் குறைத்து எடை போட்டு விட்டாரோ?

ஜான்சன் பயத்தோடு கேட்டார். “அவன் இன்னேரம் இந்த இடம் எங்கே இருக்கிறது என்பதைக் கண்டு பிடித்திருப்பானா குருஜி

“அதை அவன் கண்டு பிடிப்பது கஷ்டம் தான்... அந்த சித்தர் அவனுக்கும் கணபதிக்கும் சரியான ஒரு முகூர்த்த நேரத்தில், எனர்ஜி லெவல்னு நீங்கள் சொல்வீங்களே அதில், ஒரு நுட்பமான இணைப்பை ஏற்படுத்திட்டார். அதனால சரியா முயற்சி செய்தால் கணபதியும்,  விசேஷ மானஸ லிங்கமும் இருக்கிற இடத்தை அவனால் பார்க்க முடியுமே ஒழிய அந்த இடம் எங்கே இருக்குன்னு கண்டுபிடிக்கற அளவுக்கு உதயனோட மந்திரக் காப்பு அனுமதிச்சுடாதுன்னு நினைக்கிறேன்

அவன் பார்ப்பதோடு நிறுத்திக் கொள்ளும் நபர் அல்லவே என்று நினைத்த ஜான்சன் கணபதி குருஜியை நோக்கி வருவதைப் பார்த்து அங்கிருந்து நகர்ந்தார்.

கணபதியைப் பார்த்து குருஜி புன்னகையுடன் கேட்டார், “என்ன கணபதி, சிவலிங்கத்துகிட்ட அடுத்தது உனக்காக ஏதாவது கேட்கலாமா?

உலகில் தன்னைக் காட்டிலும் எத்தனையோ பேர் பெரும் கஷ்டத்தில் இருக்கும் போது தனக்காக மட்டும் வேண்டிக் கொள்வது நியாயமல்ல என்று கணபதி நினைத்தான். கேட்காமலேயே இறைவன் இப்போது அவனுக்கு நன்றாகவே படியளந்து வருகிறார்.... “வேண்டாம் குருஜி…”

அப்படின்னா அடுத்தது என்ன கேட்கலாம் சொல்லுகுருஜி விளையாட்டாய் கேட்டார்.

“எல்லாரும் நல்லா சந்தோஷமாயிருக்கணும்னு கேட்டா என்ன குருஜி?கேட்டு விட்டு கணபதி குருஜியை குழந்தைத்தனமாய் பார்த்தான். தனித்தனியாய் ஒவ்வொருவரும் கேட்பதை விட இப்படி எல்லாரும் சந்தோஷமாய் இருக்க வேண்டும் என்று கேட்பது நல்லது என்று அவனுக்குத் தோன்றியது.

குருஜி மெல்லச் சொன்னார். “அந்த அளவு சக்தி இந்த சிவலிங்கத்துக்கே இருக்கிறது சந்தேகம் தான் கணபதி

கணபதி போன பிறகும் அவன் வார்த்தைகளும், மனதார அவன் சொன்ன விதமும் அவர் மனதில் நிறைய நேரம் நின்றது. பின் ஒரு பெருமூச்சு விட்டவராக பாபுஜியை அழைத்து குருஜி சொன்னார். “பாபுஜி. இந்த விசேஷ மானஸ லிங்கத்தோட சக்தி பத்தி இனி ஆராய்ச்சி செய்ய எதுவுமில்லை. ஈஸ்வர் குறுக்கில் வராமல் இருந்தால் நம்ம கற்பனையோட எல்லை தான் நம்ம சாதனையோட எல்லையாய் இருக்கும்...

“ஈஸ்வர் குறுக்கே வராமல் இருக்க என்ன செய்யறது குருஜி?

“எல்லாத்துக்குமே ஒரு வழி இருக்கு. நான் யோசிச்சு சொல்றேன்... நீ அதைப்பத்தி கவலைப்படாதே..  நம்ம லட்சியத்தை அடைய நாம் முதல்ல என்ன செய்யலாம்னு நீங்க எல்லாரும் சேர்ந்து யோசிக்க ஆரம்பியுங்க. நானும் சிலதெல்லாம் யோசிச்சு வச்சிருக்கேன். பிறகு சேர்ந்து பேசி முடிவு செய்யலாம். இதை முதல்லயே செய்திருக்கலாம். ஆனால் அப்ப விசேஷ மானஸ லிங்கத்தை நான் நம்பின அளவு நீங்க யாரும் நம்பினதா தெரியலை. அதனால் தான் உங்களுக்கெல்லாம் அந்த நம்பிக்கை வந்த பிறகு பேசலாம்னு விட்டுட்டேன்.....”.

பாபுஜி போன பிறகு குருஜி ஈஸ்வரை எப்படித் தடுத்து நிறுத்துவது என்று யோசிக்க ஆரம்பித்தார்.

ஸ்வர் இனி என்ன செய்யப் போகிறான் என்பதை அறிய பார்த்தசாரதி ஆவலாய் இருந்தார். சீக்கிரமாக அவன் எதாவது செய்தால் தேவலை என்று அவருக்குத் தோன்றியது. ஆனால் ஈஸ்வரோ அவசரப்பட்டு எதையும் செய்து சிக்கலில் மாட்டிக் கொள்ள விரும்பவில்லை.

விசேஷ மானஸ லிங்கத்தின் அருளாளோ, அக்னிநேத்ர சித்தர் மற்றும் பசுபதி ஆகியோரின் ஆசியாலோ இன்றைய தினத்தில் அவன் சாதித்தது அவன் எதிர்பார்த்திராத அளவு பெரிய வெற்றி தான். ஒரு இடத்தில் நடப்பதை ஓரளவாவது நேரில் பார்ப்பது போல் பார்க்க முடிந்தது சாதாரண விஷயம் அல்ல.  ஆழ்மனசக்திகளில் ஒன்றான Remote Viewing என்ற தொலைதூரத்தில் நடப்பதைக் காண முடிந்த சக்தி அவனுக்கு இன்று அருளப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த வெற்றியில் பெருமிதம் அடையும் நிலையில் அவன் இல்லை. காரணம் அவன் ஒருவனிடம் அந்த சக்தி உள்ளது என்றால் எதிரணியில் உள்ளவர்களில் எத்தனை பேரிடம் அந்த சக்தி உள்ளது என்று அவனுக்குத் தெரியவில்லை. அவனுக்குக் குருஜியைப் பார்க்க முடிந்தது போல குருஜிக்கும் அவனைப் பார்க்க முடிந்திருக்கிறது. அவருக்கு சற்று தொலைவில் வேறு மூன்று பேர் தியான நிலையில் அமர்ந்து கொண்டு இருந்தார்களே அவர்களுக்கும் அந்த சக்தி இருக்கலாம் என்று அவன் உள்மனம் சொன்னது. அது உண்மையானால் இங்கு இவன் ஒருவன் என்றால் அங்கு அவர்கள் நான்கு பேர் இருக்கிறார்கள். அது போதாதென்று அங்கு விசேஷ மானஸ லிங்கம் இருக்கிறது, ஜான்சன் இருக்கிறார், இன்னும் யாரெல்லாம் இருக்கிறார்களோ? இப்படி எண்ண ஓட்டம் போன போது அவன் சொல்லிக் கொண்டான். ‘ஆனால் அவர்களிடம் சத்தியம் இல்லை.... நியாயம் இல்லை. அதுவே ஒரு பெரிய பலவீனம் அல்லவா? என் பக்கம் அது இருப்பது மிகப்பெரிய பலம் அல்லவா?

மேலும் யோசித்த போது அவனை அந்த சித்தரின் வார்த்தைகளும் ஆசுவாசப்படுத்தின. “எனக்குத் தெரிஞ்சு சுமக்க முடியாத பாரத்தை இறைவன் தர்றதில்லை”.

சித்தர் சொன்னது போல் தைரியமும் தன்னம்பிக்கையும் இல்லாத நல்லவனாக இருக்க அவன் விரும்பவில்லை. முயலாமலேயே தோல்வியை ஒப்புக் கொள்ளும் முட்டாளாக இருக்கவும் அவன் விரும்பவில்லை. ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று உறுதியாக நினைத்தான். மனதில் உறுதி வந்தவுடனேயே கூடவே யானை பலம் அவனுக்கு வந்து சேர்ந்தது போல இருந்தது.

எதைச் செய்வதாக இருந்தாலும் கணபதியைத் தன் பக்கம் இழுத்துக் கொள்வது தான் அதற்கான முதல் படி என்று ஈஸ்வர் கணக்கிட்டான். முன்பு போலவே மறுபடி முயற்சிக்கலாம் என்றால் அது கண்டிப்பாக குருஜிக்குத் தெரியாமல் நடக்க வாய்ப்பே இல்லை. மனிதர் கண்கொத்திப் பாம்பாக அங்கே காவல் காத்துக் கொண்டு இருக்கலாம்.

“துஞ்சாமல்என்ற வார்த்தைக்கு தூங்காமல் என்று பார்த்தசாரதி அர்த்தம் எழுதினாலும் அதற்கு சோர்வில்லாமல், கால தாமதம் செய்யாமல் என்று அர்த்தம் என பார்த்தசாரதி சொன்னது சரியாக இருக்க வேண்டும் என்றே பட்டாலும் இன்றைய சூழ்நிலைக்கு ‘தூங்காமல்என்ற அர்த்தமே பொருந்தும் என்பது போலத் தோன்றியது. இரவு நேரத்தில் குருஜி தூங்கிய பிறகு ஏதாவது முயற்சி செய்யலாம். அப்படிச் செய்தால் அவர் அவன் செய்கைகளை அறிய வாய்ப்பில்லை....  முடிவெடுத்து விட்டு அவன் நிமிர்ந்து உட்கார்ந்தான்.

அவன் நிமிர்ந்து உட்கார்ந்த விதத்தையும், அவன் முகத்தில் தெரிந்த உறுதியையும் பார்த்த பார்த்தசாரதிக்கு அவன் ஏதாவது செய்வான் என்ற நம்பிக்கை பிறந்தது.

அவன் தன் எண்ண ஓட்டத்தை அவரிடம் வெளிப்படையாகச் சொன்னான். அதிகாலை இங்கு வந்த அவரை இரவாவது வீட்டுக்கு அனுப்புவது தான் முறை என்று தோன்றியதால் ஈஸ்வர் அவரை வீட்டுக்குப் போய் மறு நாள் காலை வரச்சொன்னான். முனுசாமியும் மதியமே போய் விட்டிருந்ததால் அவனைத் தனியாக விட்டுப் போக அவருக்குத் தயக்கமாய் இருந்தது. அவன் பூஜை அறையில் அமர்ந்து கொண்டு இருக்கையில் அவருக்கு வேலை எதுவும் இல்லை என்பதால் அவர் இரவில் தங்கியும் எந்தப் பயனும் இல்லை என்று சொல்லி ஈஸ்வர் வற்புறுத்தி அனுப்பி வைத்தான். ஆனாலும் இரவு ஒன்பது மணி வரை இருந்து அவனிடம் பேசிக் கொண்டிருந்து விட்டுத் தான் பார்த்தசாரதி போனார்.

மிழகத்தில் உட்கார்ந்து கொண்டு செங்கடலில் சோமாலியக் கடற்கொள்ளையர்களை அழிக்க முடிந்த சக்தி தங்கள் வசம் இருக்கிறது என்ற எண்ணமே தென்னரசுக்கு பெருமகிழ்ச்சியைத் தந்து கொண்டிருந்தது. அந்த சந்தோஷமான நேரத்தில் மகளிடம் பேச வேண்டும் போல இருந்தது.  மகளுக்குப் போன் செய்து பேசினார்.

விஷாலியின் குரலில் எல்லை இல்லாத சந்தோஷம் தெரிந்தது. மெல்ல ஈஸ்வரும், தானும் காதலிப்பதாக அவரிடம் சொன்னாள். ஈஸ்வர் அமெரிக்காவுக்குத் திரும்பிப் போவதற்கு முன்பே கல்யாணத்தை முடித்து விட வேண்டும் என்று பரமேஸ்வரன் முடிவு செய்திருப்பதாயும், அவர் தென்னரசுவிடம் போனில் பேச இரண்டு நாளாக முறை முயற்சி செய்து கொண்டிருப்பதாகவும் சொன்னாள். கனகதுர்கா வந்திருப்பதாகவும் சொன்னாள்.

விஷாலி தடை இல்லாமல் பேசும் பெண் அல்ல. மிகுந்த சந்தோஷம் மட்டுமே அவளை அப்படிப் பேச வைப்பதுண்டு. இன்று அவள் குரலில் கொப்பளித்த சந்தோஷமும், எல்லாவற்றையும் அப்பாவிடம் சொல்லி விடத் துடித்த துடிப்பும் தென்னரசுவை நிலை குலைய வைத்தது. கொந்தளித்த உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு கேட்டார். “ஈஸ்வர் எங்கேம்மா

“அவர் அந்த தோட்ட வீட்டுக்குப் போயிருக்கார்ப்பா. ஏதோ ஆராய்ச்சி செய்யணுமாம். முடிச்சுட்டு தான் வருவேன்னு சொல்லிட்டு போயிருக்கார்.

தென்னரசு பேச்சிழந்து போனார். தந்தையின் மனநிலையைப் புரிந்து கொள்ளும் மனநிலையில் விஷாலி இருக்கவில்லை. ஆனந்தவல்லி தன் நகைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு வந்து ‘உனக்கு எதெல்லாம் பிடிச்சுதோ அதெல்லாம் எடுத்துக்கோம்மாஎன்று சொன்னதையும், கனகதுர்கா மிக நல்ல மாதிரி என்பதையும் சொன்னாள். “எனக்கு அவங்க கிட்ட பேசறப்ப அம்மா கிட்ட பேசற மாதிரி இருக்குப்பா....

விஷாலி பேசிக் கொண்டே போனாள். மகள் இது நாள் வரை அவ்வளவு சந்தோஷமாக எப்போதுமே இருந்ததில்லை என்று தென்னரசுக்குத் தோன்றியது. கடைசியில் விஷாலி கேட்டாள். “ஈஸ்வரோட தாத்தா கிட்ட பேசறீங்களாப்பா?

“சிக்னல் அபப்ப்ப கிடைக்கறதில்லைம்மா. நான் அப்பறமா பேசறேன்ம்மா

மகளிடம் பேசி முடித்த பிறகு தென்னரசு நிறைய நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தார். விதி அவர் வாழ்க்கையில் ஒரு குரூர விளையாட்டு விளையாடி இருப்பதாக அவருக்குத் தோன்றியது. இப்படி ஒரு வாழ்க்கை மகளுக்கு அமையும் என்பது முதலிலேயே தெரிந்திருந்தால் தடம் மாறி வந்திருக்க வேண்டிய அவசியமே இல்லையே...

மகேஷ் வந்தான். “என்ன யோசிச்சுகிட்டிருக்கீங்க அங்கிள்

“இனி அடுத்ததா என்ன செய்யப் போறோம்னு யோசிக்கிறேன் மகேஷ்

“அதைப்பத்தி தான் ஜான்சனும், பாபுஜியும் அந்த வெளிநாட்டுக்காரங்க கிட்ட வீடியோ கான்ஃப்ரன்ஸிங்ல பேசிகிட்டிருக்காங்க. எகிப்து அரசியலைப் பத்தி பேச ஆரம்பிச்சாங்க. போரடிச்சுது. வந்துட்டேன்.

தென்னரசுக்கு அவனைப் பார்க்கப் பாவமாக இருந்தது. இந்த விசேஷ மானஸ லிங்கம் விவகாரத்தில் அவனுக்கு இயல்பாய் பெரிய ஆர்வம் எப்போதுமே இருந்ததில்லை. அவருக்காகத் தான் அவன் எல்லாமே செய்திருக்கிறான். தனிப்பட்ட  அவருக்காகக் கூட இல்லை. அவர் விஷாலியின் அப்பா என்பதற்காக. அவனிடம் உலகப் பணக்காரர்களில் ஒருவனாகக் கூட நீ ஆகலாம், உன் தாத்தாவைப் போல இருக்கும் சக்தி வாய்ந்த பல பேரை உன் அப்பாயின்மெண்டிற்காக நீ காக்க வைக்கலாம், நீ ஆசைப்படுவதை எல்லாம் நடத்திக் காட்டலாம்...’  என்றெல்லாம் அவர் எத்தனையோ ஆசை காட்டி அவனைத் தன்னுடன் வைத்திருந்தாலும் எல்லாவற்றிற்கும் மேலாக அவனை அவர் சொன்னபடி எல்லாம் ஆடவைத்தது அவனுக்கு விஷாலியின் மீதிருந்த காதல் தான். அவர் அவளை அவனுக்கே திருமணம் செய்து தருவார் என்ற எதிர்பார்ப்பில் தான்....

இப்போது வீட்டில் நடந்திருக்கும் நிகழ்வுகள் அவனுக்கு இன்னும் தெரியவில்லை. தெரிந்தால் அவன் அதை எப்படி எடுத்துக் கொள்வான்? தென்னரசுக்கு யோசிக்கவே கஷ்டமாக இருந்தது. அவர் ஏதோ யோசனையில் இருக்கிறார், பேசும் மனநிலையில் இல்லை என்பதைத் தெரிந்து கொண்ட மகேஷ் உறங்கப் போனான். தென்னரசு அவர்கள் என்ன முடிவெடுக்கிறார்கள் என்று அறிந்து கொள்ள பாபுஜியின் அறைக்குப் போனார்.

அவர் நுழைந்த போது மகேஷ் சொன்னது போல வீடியோ கான்ஃப்ரன்ஸிங்கில் எகிப்து அரசியல் பற்றி தான் பேசிக் கொண்டிருந்தார்கள். சோமாலியக் கொள்ளைக்காரர்கள் விஷயத்தில் நினைத்ததை சாதிக்க முடிந்த சிவலிங்கத்தின் சக்தி இயற்கை சக்திகளோடு நின்று விடுமா இல்லை அரசியல் வரைக்கும் வருமா என்ற கேள்வி அவர்களிடம் எழுந்திருந்தது. அந்தக் கேள்விக்குப் பதிலைத் தெரிந்து கொள்ள தற்போது நடக்க இருக்கும் எகிப்திய தேர்தலை உபயோகப்படுத்திக் கொள்ள அவர்கள் நினைத்தார்கள்.

பிப்ரவரி 2011ல் எகிப்திய ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக் பதவியில் இருந்து இறங்கிய பிறகு அந்த நாட்டில் அரசியல் நிலவரம் ஸ்திரமாக இருக்கவில்லை. பின் நடந்த தேர்தலில் முகமது மோர்சி என்பவர் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போதும் அவருக்கும் ராணுவத்தின் எதிர்ப்பு இருந்து வந்தது. 2013 ஜூனில் அவருக்கு எதிராக பெரிதாக கலவரம் ஒன்று வெடிக்க ராணுவம் அதைப் பயன்படுத்திக் கொண்டு அவரைப் பதவியில் இருந்து இறக்கியது. விரைவிலேயே தேர்தல் ஒன்றை நடத்துவோம் என்று உறுதிமொழி அளித்திருந்த ராணுவம் தங்களுக்குச் சாதகமான ஒரு நபரை தேர்தல் களத்தில் நிற்க வைக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தது. அந்த நபர் இந்த அறுவரில் ஒருவரான எகிப்தியரின் நெருங்கிய நண்பர். மக்களிடம் அந்த நபருக்கு செல்வாக்கை அதிகப்படுத்த விசேஷ மானஸ லிங்கத்தால் முடியுமா என்பது பற்றித் தான் பேசிக் கொண்டிருந்தார்கள்.

பாபுஜி ஜான்சனிடம் கேட்டார். “நீங்க என்னை நினைக்கிறீங்க. அரசியல் மாற்றத்தையும் அந்த சிவலிங்கத்தால் ஏற்படுத்த முடியுமா?”.  இந்த ஆராய்ச்சிகள் ஆரம்பித்த்தில் இருந்து இருவரும் நெருக்கமாகி விட்டிருந்தார்கள். ஜான்சனிடம் முகம் காண்பிக்கவே தயங்கிய அறுவரும் கூட இந்த ஆராய்ச்சிகளின் ஆரம்பத்தில் இருந்தே அந்தத் தயக்கத்தை விட்டொழித்திருந்தார்கள். அந்த அளவு ஜான்சன் மீது அவர்களுக்கும் நம்பிக்கை உருவாகி இருந்தது.

ஜான்சன் சொன்னார். “கண்டிப்பாய் முடியும்னு தான் நினைக்கிறேன்

“அப்படின்னா முயற்சி செய்து பார்க்கலாம் பாபுஜி சொன்னார்.

ஜான்சன் சொல்லலாமா வேண்டாமா என்று தயங்கி விட்டுச் சொன்னார். “ஆனால் முதல்ல ஈஸ்வரைக் கட்டுப்படுத்தி வைக்கணும். என்ன தான் குருஜி சொன்னாலும் அவர் அவனை கட்டுப்படுத்த முடியும்னு தோணலை

உடனடியாக இஸ்ரேல்காரர் சொன்னார். “பிரச்சினைக்குரிய ஆள்களைக் கட்டுப்படுத்தப் பார்க்கிறதை விட ஒரேயடியாய் அப்புறப்படுத்தறதே நல்லது.

பாபுஜிக்கும் அது சரியென்று பட்டது. எவனால் ஆபத்து என்று புரிந்து விட்டதோ அவனை உயிரோடு விட்டு வைப்பதே ஆபத்தை தக்க வைத்துக் கொள்வது போலத் தான். உடனே பாபுஜி ஈஸ்வரை உடனடியாகக் கொன்று விடும்படி செல்போனில் ஒருவரிடம் கட்டளை பிறப்பித்தார்.

தென்னரசு இதை எதிர்பார்த்திருக்கவில்லை. சில மணி நேரங்கள் முன்பு வரை அவன் விதி அவ்வளவு தான் என்று நினைத்து இரக்கப்பட்டு விட்டிருப்பார். இப்போதோ அவர் இதயத்தை இமயம் அழுத்தியது. அவன் விதியோடு அவர் மகள் விதியும் அல்லவா இணைந்திருக்கிறது. சற்று முன் மகளின் பேச்சில் இருந்த அளவுகடந்த ஆனந்தம் நினைவுக்கு வர அவருக்குத் தன் உயிரே போவது போல இருந்தது.  நெஞ்சைப் பிடித்துக் கொண்டார்.

ஜான்சன் தென்னரசைக் கேட்டார். “என்ன ஆச்சு தென்னரசு

“வாயுத் தொந்தரவு தான். வேறொன்னுமில்லை”.  தென்னரசு சமாளித்தார். “ஒரு மாத்திரை சாப்பிட்டால் சரியாயிடும்என்றவர் கஷ்டப்பட்டு முறுவலித்து விட்டுத் தன் அறைக்குப் போனார்.

போனவர் அதிகம் யோசிக்கவில்லை. உடனடியாக அவர் பார்த்தசாரதிக்குப் போன் செய்தார். பார்த்தசாரதியின் ‘ஹலோகேட்டவுடன் அவசரமாக சொன்னார். “ஈஸ்வரைக் கொலை செய்யப் போறாங்க. அவனைக் காப்பாத்துங்க. ப்ளீஸ்

அதற்கு மேல் பேசாமல் இணைப்பைத் துண்டித்து விட்டு அவர் திரும்பிய போது பாபுஜி வாசலில் நின்று அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்.

(தொடரும்)

பரம(ன்) ரகசியம் – 80

குருஜிக்கு அதற்கு மேல் தியான நிலையில் இருப்பது சாத்தியமாகவில்லை. விசேஷ மானஸ லிங்கத்தின் அலைகளோடு லயித்துக் கொண்டிருந்த நேரத்தில் தோன்றும் காட்சி வெறும் பிரமையாக இருக்க வாய்ப்பில்லை என்று அவர் உள்ளுணர்வு எச்சரித்தது. அவர் எழுந்து விட்டார்.

அவர் எழுந்தது தென்னரசுவையும், ஜான்சனையும், பாபுஜியையும் ஆச்சரியப்படுத்தியது. அந்த ஆராய்ச்சிகளை நேர் ஒளிபரப்பில் பார்த்துக் கொண்டிருந்த அறுவரையும் கூட ஆச்சரியப்படுத்தியது. ஜான்சன் பதற்றத்துடன் என்ன என்று கேட்க நெருங்கிய போது சைகையால் ஒன்றுமில்லை என்று தெரிவித்த குருஜி சிறிது நேரத்தில் வந்து விடுவதாக சைகை மூலமாகத் தெரிவித்து விட்டு தனதறைக்கு விரைந்தார்.

இயற்கை உபாதை போல் இருக்கிறது என்று நினைத்தவர்களாய் எல்லோரும் நிம்மதி அடைந்தார்கள்.

ஸ்வர் எழுதி முடித்தவுடன் வெள்ளைக் காகிதத்தில் தெரிந்த அச்சு எழுத்துக்கள் அவன் பார்வையில் இருந்து மறைந்து போய் விட்டன. எழுதி முடித்து விட்டான் என்று அறிந்ததும் அருகில் இருந்து ஒரு ஆள் அதைத் திருப்பி எடுத்துக் கொண்டு விட்டதைப் போல இருந்தது.  ஓலை எழுத்துக்கள் புரியாத போது அச்சு எழுத்துக்கள் தெரிந்ததும், எழுதி முடித்தபின் மறைந்ததும் ஈஸ்வரைப் புல்லரிக்க வைத்தன. செய்யுள் வரிகளைப் போல் தெரிந்த அந்த வரிகளின் அர்த்தம் அவனுக்குச் சரியாக விளங்கவில்லை. அது விளங்காமல் தியான நிலையைத் தொடர அவனால் முடியவில்லை. மனம் முரண்டு பிடித்தது.

ஈஸ்வர் விசேஷ மானஸ லிங்கத்தை வணங்கி விட்டு எழுந்து வந்தான். அந்த செய்யுள் வரிகளில் புரியாத வார்த்தைகளை அடிக்கோடிட்டு பார்த்தசாரதியிடம் அந்த நோட்டுப் புத்தகத்தை நீட்டினான். இந்த வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம்?

பார்த்தசாரதி அதைப் படித்தார்.

தூய உளமறிவு கூடித் துஞ்சாமல் நாடினால் சேர்ந்திடும் மெய்ஞானம் மூன்றும் காக்க மிஞ்சிடும் பூவுலகம் அன்றேல் நஞ்சாகும் சிவஞானம்

அதற்குக் கீழே அந்த வார்த்தைகளின் அர்த்தங்களை எழுதினார்.
தூய=தூய்மையான; உளமறிவு=உள்ளம்+அறிவு; துஞ்சாமல்=தூங்காமல்; அன்றேல்=இல்லாவிட்டால்; நஞ்சாகும்=விஷமாகும்.

அந்தக் கோடிட்ட சொற்களுக்குப் பதிலாக அந்த அர்த்தங்களை வைத்துப் படித்த போது ஈஸ்வர் முகத்தில் சிந்தனை ரேகைகள் படர்ந்தன. அக்னிநேத்ர சித்தர் தெரிவித்த அதே செய்தி தான்... அதே எச்சரிக்கை தான்....

குருஜி தனதறைக்குப் போய்  பீரோவைத் திறந்து ரகசியமாய் ஒளித்து வைத்திருந்த அந்த ஓலைச்சுவடிகளையும், தமிழாராய்ச்சி நிபுணர் எழுதித் தந்திருந்த விளக்கத் தாள்களையும் பிரித்துப் பார்த்தார். எல்லாமே இருந்தன. எதுவும் விடுபட்டது போலத் தெரியவில்லை. மறுபடி அவற்றை அப்படியே வைத்து விட்டு பீரோவைப் பூட்டியவர் வேகமாக தியான மண்டபத்திற்குத் திரும்பினார். தென்னரசுவை வெளியே சைகையால் வரவழைத்துக் கேட்டார்.

“அந்த தமிழாராய்ச்சிக்காரர் ஓலைச்சுவடிக்கு விளக்கம் எழுதித்தந்த பேப்பர்களை ஜெராக்ஸ் எடுத்து வச்சு வேற யாருக்காவது கொடுத்திருக்க வாய்ப்பிருக்கா?

தென்னரசு ஆணித்தரமாய் சொன்னார். “இல்லை குருஜி. ஏன் சொல்றேன்னா, அந்த ஆள் ரொம்பவே பயந்து போயிருந்தார்.  மூணு தடவை ட்யூப் லைட் ஃப்யூஸ் ஆயிடுச்சு, யாரோ கதவைத் தட்டற மாதிரி சத்தம் அடிக்கடி கேட்குதுங்கறதால அந்த ஆள் அந்த ஓலைச்சுவடிகளைப் பேய் பிசாசு சமாச்சாரம் மாதிரி நினைச்சுட்டு  அது கைய விட்டு போனா போதும்னு நினைச்ச மாதிரி தான் இருந்தது. அதனால் அதை ஜெராக்ஸ் எடுத்து வச்சிருக்கவோ, பிறகு யாருக்காவது தந்திருக்கவோ வாய்ப்பே இல்லை... ஏன் கேட்கறீங்க குருஜி   

ஒரு சந்தேகம் வந்துச்சு அதனால தான் கேட்டேன்”  என்ற குருஜி மேற்கொண்டு ஒன்றும் சொல்லாமல் மறுபடி சென்று விசேஷ மானஸ லிங்கத்தைப் பார்த்தபடி அமர்ந்தார். அமர்ந்தவர் தியானத்தின் மூலமாக ஆல்ஃபா சிபிஎஸ் அலைகள் 12லிருந்து 11, 10, 9, 8 அலைகளில் வேகமாக பயணித்துக் கொண்டு இருந்தார். விரைவில் தீட்டா அலைகள் சிபிஎஸ் 7ல் நுழைந்த போது, அவருக்கு மறுபடி அந்த அலைகளில் சிவலிங்க சக்தியுடன் லயிக்க முடிந்த போது, ஈஸ்வர் சம்பந்தப்பட்ட ஏதாவது காட்சி தெரிகிறதா என்று பார்த்தார். எதுவும் தெரியவில்லை. மனம் அமைதியடைந்தவராய் மனக்கண்ணில் சோமாலியக் கடற்கொள்ளைக்காரர்களின் அழிவைக் கொண்டு வந்து நிறுத்த ஆரம்பித்தார். அந்த நேரத்தில் மற்ற மூவரும் அந்த நிலைக்கு வந்திருந்தனர். கணபதியோ சிவன் ருத்ர தாண்டவம் ஆடி அந்த சோமாலியக் கொள்ளைக்காரர்களை அழிப்பது போல் மனதில் நினைத்துக் கொண்டிருந்தான். பாவப்பட்ட பல பேருக்கு தொந்தரவு கொடுத்துகிட்டா இருக்கீங்க. எங்க சிவன் யார் தெரியுமில்ல?

ஸ்வர் அந்தச் செய்யுள் வரிகளையும், சிவலிங்கத்தோடு சேர்ந்து பாதாளத்தில் வீழ்ந்து கொண்டிருப்பதாய் முன்பு கண்ட காட்சியையும், அக்னி நேத்திர சித்தர் சொன்னதையும் நினைத்துப் பார்த்தான். வாய்ச்சொல்லாகவும், எழுத்தாகவும், காட்சியாகவும் கூட நேரவிருக்கும் ஆபத்து நிலை அவனுக்குத் தெரிவிக்கப்பட்டு விட்டது.  அவன் இனி அதிகம் தாமதிக்க முடியாது.....

பார்த்தசாரதிக்கு அவன் எப்படி அந்த செய்யுள் வரிகளை எழுதினான் என்பதை அறிய ஆவலாக இருந்தாலும் அவன் அதிகமாய் பேசுகிற மனநிலையில் இல்லை என்பதை ஊகிக்க முடிந்ததால் அமைதியாக இருந்தார். முனுசாமி கொண்டு வந்த டிபனை இருவரும் அமைதியாகவே சாப்பிட்டார்கள்.

சாப்பிட்டு முடித்தவுடன் ஈஸ்வர் திரும்பவும் கைகால் அலம்பிக் கொண்டு பூஜையறைக்குள் நுழைந்து வணங்கி விட்டு அமர்ந்தான். மறுபடி அவன் மனம் பலவிதமான எண்ணங்களில் பயணித்து சலித்து முக்கால் மணி நேரக் கடைசியில் விசேஷ மானஸ லிங்கத்தின் புகைப்படத்தில் ஐக்கியமாகியது. ஓங்கார ஒலி பின்னொலிக்க விசேஷ மானஸ லிங்கம் மறுபடி பிரத்தியட்சமாகத் தெரிந்தது. மெய்சிலிர்த்தது. இன்னும் எத்தனை முறை பார்த்தாலும் கூட இதே சிலிர்ப்பு இருக்கும் என்று தோன்றியது.

அதன் கூடவே கணபதியும் தெரிந்தான். அதன் அருகே அமர்ந்திருந்த அவன் ஏதோ சினிமா பார்ப்பது போல் பாவனை தெரிந்தது. கற்பனையில் சிவனிடமும் பேசுகிறானோ? இந்த முறை காட்சி கணபதியையும் தாண்டி நீண்டது. குருஜி தியான நிலையில் பத்மாசனத்தில் அமர்ந்திருந்தார். அவர் முகத்திலும் ஏதோ காட்சி காண்பது போல் ஒரு பாவனை தெரிந்தது. கண்பதியையாவது அப்படிப் பார்க்க முடிந்ததில் ஈஸ்வருக்கு ஆச்சரியம் இல்லை. அவன் சுபாவமே அப்படித்தான். ஆனால் குருஜி?

ஈஸ்வர் அந்தக் காட்சியில் கவனத்தைக் குவித்தான். மேலும் என்ன எல்லாம் தெரிகிறது என்று பார்த்தான்.  சற்று தூரத்தில் மேலும் மூவர் தியான நிலையில் அமர்ந்திருந்தது போல் தெரிந்தது. ஆனால் அவர்கள் முகம் தெளிவாகத் தெரியவில்லை.

தன் கவனத்தைக் குருஜியிடம் கொண்டு வந்தான். என்ன பார்க்கிறார் என்று நினைக்க நினைக்க ஒரு பெரிய திரையில் ஒரு வரைபடம் தெரிந்தது. உலக வரைபடத்தில் ஏதோ ஒரு குறிப்பிட்ட பகுதி போல் தெரிந்தது. கண்களைக் கூராக்கி தெரிந்த பெயர்களைப் பார்த்தான். செங்கடல், ஏடன் வளைகுடா , இந்தியப்பெருங்கடல், சோமாலியா, எதியோப்பியா, யேமன் என்ற பெயர்கள் எல்லாம் தெரிய இது காட்சிப்பிழையாக இருக்க வேண்டும் என்று ஈஸ்வர் நினைத்தான். அதை உறுதிப்படுத்துவது போல ஆயுதம் தாங்கிய சில ஆப்பிரிக்கர்களும் தெரிந்தார்கள். ஒரு பெரிய படகில் இருந்த அவர்கள் கடற்கொள்ளையர்கள் போலத் தெரிந்தார்கள். ஈஸ்வர் மறுபடி விசேஷ மானஸ லிங்கத்தின் மீது தன் கவனத்தைக் கொண்டு வந்தான். ஓரிரு நிமிடங்களில் விசேஷ மானஸ லிங்கம் மறைந்து போய் அந்த வரைபடமும், கடற்கொள்ளையர்களுமே தெரிந்தார்கள்.

ஈஸ்வருக்குக் குழப்பமாக இருந்தது. கவனத்தை கணபதி மீது கொண்டு வந்தான். கணபதி மறைந்து சிவனின் ருத்ர தாண்டவம் தெரிய ஆரம்பித்தது. சிவனின் கை, கால் அசைவில் எல்லாம் அந்தக் கடற்கொள்ளையர்களின் தலைகள் உருள ஆரம்பித்தன. சிவன் அவர்களைப் பந்தாடுவது போலத் தெரிந்தது. தனக்குத் தான் பைத்தியம் பிடித்து விட்டதோ என்று ஈஸ்வர் சந்தேகப்பட்ட போது எல்லாம் மறைந்து சிலர் டெலிவிஷனில் சுவாரசியமாகப் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. ஈஸ்வர் குழப்பத்தின் உச்சத்திற்கே போனான். அந்த டெலிவிஷனைக் கூர்ந்து கவனித்தான். பிபிசி நியூஸ் சேனல் நிகழ்ச்சி அது.

அந்த நேரத்தில் குருஜி கண்களைத் திறந்தார். அவர் நேராகப் பார்த்தது ஈஸ்வரை. ஈஸ்வரும் அவரை நேராகப் பார்த்தான். விசேஷ மானச லிங்கத்தின் உபயத்தால் இடையே இருந்த பல மைல்கள் தூரம் இல்லாதது போலவே தோன்றியது. இருவர் கண்களும் சந்தித்துக் கொண்டதை இருவருமே விரும்பவில்லை. அந்த விருப்பக் குறைவாலேயே இருவரும் மளமளவென்று பீட்டா அலைகளுக்கு இறங்க காட்சிகள் தானாக மறைந்தன.

ஈஸ்வர் விசேஷ மானஸ லிங்கத்தின் புகைப்படத்தை வணங்கி விட்டு பூஜையறையை விட்டு வெளியே வந்தவன் பரபரப்புடன் தன் லாப்டாப்பை எடுத்து இணையத்தில் பிபிசி நியூஸ் சேனலைப் பார்க்க ஆரம்பித்தான். பார்த்தசாரதியும் அவன் பரபரப்பைப் பார்த்து அவனுடன் வந்து சேர்ந்து கொண்டார். அதே நேரத்தில் தியானமண்டபத்திலும் அலெக்ஸி, கியோமி, ஹரிராம் மூவரும் விசேஷ மானஸ லிங்கம் மூலம் ஐக்கியமாகி ஞான திருஷ்டியிலும், மற்றவர்கள் டிவி நிகழ்ச்சியிலுமாக அனைவரும் அதே நிகழ்ச்சியை பரபரப்போடு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

செங்கடல் பகுதியில் Sand storm  என்று சொல்லப்படும் மணல்/தூசு சூறாவளியை பிபிசி நியூஸ் சேனல் தொலைவில் இருந்து நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தது. இயற்கையின் சீற்றம் வார்த்தைகளுக்கு அடங்காதது. பேய்க்காற்றில் மணல், தூசியோடு சேர்ந்து கடலும் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. செய்தியாளர் அந்த சுழல் ஆர்ப்பரிப்பின் நடுவே ஒரு படகும் சிக்கிக் கொண்டிருப்பது போலத் தோன்றுகிறது என்று சொல்லிக் கொண்டிருந்தார். சற்று நேரத்திற்கு முன் ஒரு வினாடி நேரம் ஒரு பெரிய படகு மிக உயரத்திற்கு வீசப்பட்டு கீழிறங்கியதைப் பார்த்ததாக பார்வையாளர்கள் சிலர் சொன்னதை இடை இடையே ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். செங்கடலில் இது போன்ற மணல்/தூசு சூறாவளி புதிதல்ல என்று வானியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்ததும் ஒளிபரப்பாகியது. ஆனால் எந்த வருடத்திலும் இந்த மாத காலத்தில் இப்படி ஒரு சூறாவளி அந்தப் பகுதியில் ஏற்பட்டதில்லை என்றும் ஒரு வானியல் நிபுணர் வியப்பு தெரிவித்தார்.

ஒரு கட்டத்தில் கடலின் சுழியில் தோன்றிய ஒரு கண் போன்ற தோற்றத்தை தியான மண்டபத்தில் இருந்த அனைவருமே பார்த்தார்கள். அலெக்ஸியின் இதயத்துடிப்பு ஒரு கணம் நின்று போனது. இரண்டாவது முறையாக அல்லவா அவர் அந்தக் கண்ணைப் பார்க்கிறார். சிவனின் மூன்றாவது கண்ணோ அது? மற்றவர்களும் வாய் விட்டுச் சொல்லா விட்டாலும் அந்த எண்ணம் அவர்களுக்குத் தோன்றாமல் இல்லை.

மூன்று மணி நேரம் நீடித்த அந்த சூறாவளி அடங்கிய பின்னர் அருகே இருந்த ஆப்பிரிக்க நாடுகளின் சீரமைப்புப் பணிகள் ஆரம்பமாயின. ஒரு உடைந்த படகின் பாகங்களோடு சில சடலங்களும் வேறு வேறு இடங்களில் கரை சேர்ந்திருந்தன. அந்த சடலங்கள் கொடூரமான சோமாலியக் கடற்கொள்ளைக்காரர்களுடையது என்று அடையாளம் கண்டுபிடிக்கப்பட்ட போது ஒரு செய்தியாளர் சொன்னார். “சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி வந்த இந்தக் கொள்ளையர்களால் இறைவனின் பிடியில் இருந்து தப்ப முடியவில்லை போலும் 

அந்தப் பிணங்களைக் காட்டிய போது தியான மண்டபத்தில் பலத்த கைத்தட்டல் கேட்டது. அவர்கள் ஆராய்ச்சியின் மகத்தான வெற்றி என்று அவர்கள் மனம் மகிழ்ந்தார்கள். குருஜி தன்னை பிரம்மாவாக உணர்ந்தார். ஜான்சன், பாபுஜி, தென்னரசு, மகேஷ் நால்வர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இருக்கவில்லை. நேரடி ஒளிபரப்பைப் பார்த்துக் கொண்டிருந்த ஆறு வெளிநாட்டவர்களும் கைதட்டி தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அந்த இடமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

கணபதி கண்களில் மட்டும் கண்ணீரைக் கண்ட குருஜி கேட்டார். “என்ன கணபதி அழறே?

கணபதி உடைந்த குரலில் சொன்னான். “அந்த ஆள்களுக்கும் அம்மா எல்லாம் இருப்பாங்க இல்லையா? அவங்களுக்கு எவ்வளவு கஷ்டமாய் இருக்கும்னு நினைக்கறப்ப அழுகையா வருது குருஜி...

ஸ்வருக்கு அங்கு நடந்தது என்னவென்று புரிய அதிக நேரம் ஆகவில்லை. செங்கடல் பகுதியின் வரைபடம், சோமாலியக் கடற்கொள்ளையர்களின் புகைப்படம், சிவனின் ருத்ரதாண்டவம் தோன்றல் எல்லாம் தெரிந்து முடிந்த போது நிஜமாகவே செங்கடலில் அந்த சோமாலியக் கடற்கொள்ளையர்கள் மணல் சூறாவளியில் சிக்கி இறந்து போனது அவனுக்குத் திகைப்பாக இருந்தது. விசேஷ மானஸ லிங்கத்தின் சக்தி எந்த அளவு செல்ல முடியும் என்பதை அறிய ஒரு சோதனை நடத்தி இருக்கிறார்கள். அதில் வெற்றியும் பெற்று இருக்கிறார்கள். விசேஷ மானஸ லிங்கத்தை வைத்து எதையும் சாதிக்க முடியும் என்று அறிந்த இவர்கள் இனி என்ன தான் செய்ய மாட்டார்கள்?

தான் கண்டதையும், தன் கவலையையும் அவன் பார்த்தசாரதியிடம் சொன்ன போது அவருக்கு நம்பக் கஷ்டமாக இருந்தது.  ஆனால் பிபிசியில் அந்த நிகழ்ச்சியின் ஒளிபரப்பைப் பார்த்த பின் அவரால் எப்படி நம்பாமல் இருக்க முடியும்? எதிரிகள் கையில் அணுகுண்டே இருக்கிறது, சூழ்நிலையும் அவர்களுக்கே சாதகமாக இருக்கிறது.....

பார்த்தசாரதி கவலையுடன் சொன்னார். “ஈஸ்வர் நீங்கள் ஏதாவது செய்தாகணும்!

தியான மண்டபத்தில் வெற்றிக் களிப்பில் அனைவரும் இருந்த போது குருஜி மட்டும் ஆழ்ந்த யோசனையுடன் உட்கார்ந்து கொண்டிருந்ததைப் பார்த்து நெருங்கிய ஜான்சன் கேட்டார். “என்ன குருஜி

இங்கே நாம என்ன ஆராய்ச்சி செய்துகிட்டிருக்கோம்கிறதை ஈஸ்வர் அங்கே இருந்தே பார்த்துகிட்டு இருக்கான்என்று குருஜி சொன்னார்.

ஜான்சன் திகைப்புடன் கேட்டான். “எப்படி? அவன் என்னை மாதிரி ஆராய்ச்சிகள் நடத்தறவனே ஒழிய அந்த சக்தி படைச்சவன் அல்லவே

விசேஷ மானஸ லிங்கத்தின் உபயம்...

“விசேஷ மானஸ லிங்கம் தான் இங்கே இருக்கே?

அந்த சித்தர் அவனை சந்திச்சிருப்பார்னு நினைக்கிறேன். அவன் அந்த மூணு பேரில் ஒருத்தன்.... அதனால அது எங்கே இருந்தாலும் மனசு வச்சா அதுகூட ட்யூன் ஆகிறது கஷ்டமில்லைன்னு நினைக்கிறேன். அறுபது வருஷங்களுக்கு மேல் இந்த விசேஷ மானஸ லிங்கம் இருந்த இடத்தில் இதோட அலைகளும் நிறைந்திருக்கும்கிறதால அங்கே இருந்து முயற்சித்தால் சீக்கிரமே ட்யூன் ஆக முடியும்....

ஜான்சன் திடுக்கிட்டார். குருஜி சொன்னார். இன்னேரம் அவனுக்கு நாம் என்ன செய்யப் போறோம்கிறது புரிஞ்சிருக்கும். அவனைத் தடுத்து நிறுத்தலைன்னா நம்ம அடுத்த முயற்சி அவ்வளவு சுலபமாய் இருக்க ஈஸ்வர் விடுவான்னு தோணலை ஜான்சன்

(தொடரும்)

பரம(ன்) ரகசியம் – 79

ன்று நள்ளிரவு வரை ஈஸ்வரும் விஷாலியும் மொட்டை மாடியில் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் பேசிக் கொள்ள நிறைய இருந்தது. ஒருவரைப் பற்றி ஒருவர் தெரிந்து கொள்ள நிறைய இருந்தது. காதலிக்க ஆரம்பித்திருக்கிறோம் என்பதை எப்போது உணர்ந்து கொண்டோம் என்பதில் இருந்து ஊடலின் போது எப்படி எல்லாம் வேதனைப்பட்டோம் என்பது வரை ஒருவருக்கொருவர் ஒளிவு மறைவில்லாமல் பகிர்ந்து கொண்டார்கள். ஆனால் அப்போதும் கூட மகேஷ் சொல்லித் தான் ஈஸ்வரைத் தவறாக நினைத்தேன் என்பதை விஷாலி தெரிவிக்கவில்லை. நினைவு தெரிந்த நாளில் இருந்து அவளுக்கு நல்ல நண்பனாக இருந்தவனைக் காதலனிடம் கூடக் காட்டிக் கொடுக்க அவள் மனம் ஒப்பவில்லை. இன்னமும் மகேஷ் மீது அவளுக்கு அளவு கடந்த கோபம் இருக்கத் தான் செய்தது. ஆனாலும் அது தனியாக அவனைத் திட்டித் தீர்க்க வேண்டிய விஷயமாகத் தான் விஷாலி வைத்திருந்தாள்...

ஈஸ்வரும் விசேஷ மானஸ லிங்கம் பற்றிய நடப்பு விவரங்களை மட்டும் அவளிடம் தெரிவிக்கவில்லை. சொல்ல ஆரம்பித்தால் அதுவே நிறைய நேரத்தை எடுத்துக் கொள்ளும், மற்ற எதைப் பற்றியும் சொல்லவோ கேட்கவோ நேரம் இருக்காது என்று அவன் நினைத்தான். அவனுக்கு அவள் தங்களுக்குள் விரிசல் ஏற்படக் காரணமான மகேஷை காட்டிக் கொடுக்காதது பற்றிச் சின்ன மனத்தாங்கல் இருந்தது. ஆனால் அவள் தன் பிள்ளைப் பிராய நினைவுகளை அவனுடன் பகிர்ந்து கொண்ட போது மகேஷ் எப்படி எல்லாம் அவளுக்கு எத்தனையோ விட்டுக் கொடுத்திருக்கிறான் என்பதையும் சேர்த்து தெரிவித்தாள். ஈஸ்வருக்கு மகேஷை அவள் காட்டிக் கொடுக்காததன் காரணம் புரிந்தது.

மற்றபடி நிறைய பேசினார்கள். பேசி முடியாது என்று தோன்றிய போது பேச்சை நிறுத்தி கை கோர்த்துக் கொண்டு ஆகாயத்தின் நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டே அந்த மௌனத்தையும், வீசிக் கொண்டிருந்த சில்லென்ற காற்றையும் ரசித்தார்கள். அவர்களுடைய மனங்கள் நிறைந்திருந்த போதும்  லேசாக இருப்பதாக உணர்ந்தார்கள்....

உறங்கக் கிளம்பிய போது அவள் கேட்டாள். நாளைக்குப் போனால் எப்ப வருவீங்க?

“தெரியலை விஷாலி. ஆனா இது எனக்கு ஒரு முக்கியமான ஆராய்ச்சி. அதனால முடிக்காமல் வர மாட்டேன்... அந்த ஆராய்ச்சி பத்தி வந்ததுக்கப்புறம் உனக்கு விவரிச்சு சொல்றேன்...

மறு நாள் அதிகாலையில் அவன் கிளம்பிய போது அவனுக்குள் திடீரென்று ஒரு இனம் புரியாத பயம் ஏற்பட்டது. ஒரு பெரிய ஆபத்து அவனுக்காகக் காத்திருப்பது போலத் தோன்றியது. இது நாள் வரை அப்படி அவன் எப்போதும் உணர்ந்ததில்லை. இது வெறும் ஆராய்ச்சியாக மட்டும் இருக்கப் போவதில்லை என்று அவன் உள்ளுணர்வு எச்சரித்தது.

சிறிது யோசித்து விட்டு ஆனந்தவல்லி அறைக்குப் போனான். ஆனந்தவல்லி கேட்டாள். “என்னடா?

“பரண்ல தாத்தாவோட பழைய டிரங்குப் பெட்டில அந்த சிவலிங்கத்தோட ஃபோட்டோவை அன்னைக்குப் பார்த்தேன். அதை எடுத்துட்டுப் போறேன்

“என்ன வேணுமோ எடுத்துக்கோ

அவன் போய் சிவலிங்கத்தின் புகைப்படத்தை எடுத்துக் கொண்டு வந்தான்.  இந்தக் குடும்பத்துக்கே மூத்தவளை, பசுபதியைப் பெற்றவளை வணங்கி ஆசி வாங்கி விட்டுப் போக அவனுக்குத் தோன்றியது. ஆனந்தவல்லியின் காலைத் தொட்டுக் கும்பிட்டான்.

“என்னடா, நேத்து கழுத்தை நெறிச்சே. இன்னைக்குக் காலைப் பிடிக்கறே?என்று வாய் சொன்ன போதும் அவள் மனம் கொள்ளுப் பேரனுக்குப் பூரணமாக ஆசிர்வதித்தது. 


ஜான்சன் ஹரிராம், கியோமி, அலெக்ஸி மூவருக்கும் அன்றைய ஆராய்ச்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் விஷயத்தை விளக்கிக் கொண்டிருந்தார். அதே நேரத்தில் குருஜியும் கணபதியிடம் அதையே விளக்கிக் கொண்டிருந்தார். கணபதியை இந்த ஆராய்ச்சியில் சேர்த்துக் கொள்வது இரண்டு விதங்களில் நல்லது என்று குருஜி நினைத்தார். முதலாவதாக இந்த அளவு பெரிய ஆராய்ச்சியில் அவனும் பங்கு கொள்வது ஆராய்ச்சியின் வெற்றிக்குக் கண்டிப்பாக உதவியாக இருக்கும். இரண்டாவதாக கணபதி வேறு ஏதாவது விதங்களில் இடைஞ்சல் செய்யாமல் இருப்பான்.

சோமாலியக் கடற்கொள்ளைக்காரர்களை அழிப்பது தான் இந்த ஆராய்ச்சி என்று கேள்விப்பட்டவுடன் கணபதிக்கு வருத்தமாக இருந்தது. ஏன் குருஜி அவங்களைக் கூப்பிட்டுப் புத்திமதி சொன்னா திருந்த மாட்டாங்களா?

குருஜி அவனையே பார்த்தார். பின் சொன்னார். “புத்திமதி சொல்லியே மனுஷங்களை திருத்திட முடியும்னா இந்த உலகம் இப்படி இருக்கவே இருக்காதேப்பா”.  பின் அந்த கடற்கொள்ளையர்களை விட்டு வைத்தால் அவர்கள் இது போல பல கப்பல்களைக் கடத்துவார்கள், பலர் உயிரைப் பறிப்பார்கள் என்றெல்லாம் சொல்லிப் புரிய வைத்தார். குருஜி சொன்னால் சரியாகத் தான் இருக்கும் என்று கணபதி நினைத்தான். புராணங்களிலேயே அரக்கர்களை அப்படித் தான் பகவான் அழிச்சார்னு படிச்சிருக்கோமே

ஆராய்ச்சி நுணுக்கங்களை அவனுக்குச் சொல்லித் தர முடியாது என்று நினைத்த குருஜி அவனிடம் அந்தக் கெட்டவர்கள் அழிய வேண்டும் என்று நினைத்து அவர்கள் அழிவதை நேரில் பார்ப்பது போலக் கற்பனை மட்டும் செய்யச் சொன்னார். கணபதி தலையசைத்தான்.

ஜான்சன் அந்த மூவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். ”... நீங்கள் விளைவுகளை மட்டும் நினையுங்கள். அந்த விளைவுகள் எந்த முறையில் நடக்க வேண்டும் என்றெல்லாம் நினைக்க வேண்டாம். என்ன ஆக வேண்டும் என்று மட்டும் நீங்கள் சொன்னால் போதும், விசேஷ மானஸ லிங்கம் எப்படி என்பதை அதுவாகவே தீர்மானித்து செயல்படுத்தி விடும்...

ஜான்சன் கண்டிப்பாக வெற்றி அடையக்கூடிய ஆராய்ச்சி என்பது போல தன்னம்பிக்கையை வெளிப்படுத்திப் பேசினாரே ஒழிய அவருக்கு உள்ளே இன்னும் சந்தேகம் இருந்தது. சோமாலியக் கடற்கொள்ளையர்கள் பெரும்பாலும் செங்கடல் (Red Sea) ஏடன் வளைகுடா (Gulf of Aden) பகுதிகளில் தான் இருப்பார்கள் என்று சொல்லி அந்தப் பகுதிகளின் வரைபடத்தையும் கணபதிக்கும், அந்த மூவருக்கும் காட்டினார். அந்தக் கடற்கொள்ளையர்கள் சிலரின் புகைப்படங்களையும் காட்டினார். பிறகு அந்தக் கடற்கொள்ளையர்களின் புகைப்படங்களும், செங்கடல்-ஏடன் வளைகுடா பகுதி வரைபடமும் எல்லோரும் பார்க்க வசதியாக இருந்த சுவரில் பெரிய சைஸில் ஓட்டவைக்கப்பட்டன. 

அவர்கள் ஆராய்ச்சி ஆரம்பமானது.... குருஜி உட்பட நான்கு பேரும் முதல் நாள் போலவே அமர கணபதி சிவலிங்கம் அருகே உட்கார்ந்து கொண்டான். அவனுக்கு அந்த மெஷின்களை அவர்களைப் போல மாட்டிக் கொள்ளப் பிடிக்கவில்லை. குருஜி அவனை வற்புறுத்தவில்லை. நான் சொன்னது போல நீ நினைத்தால் போதும் என்று சொல்லி விட்டார்.


ஸ்வர் தோட்ட வீட்டுக்குச் சென்ற போது அவனுக்காக பார்த்தசாரதி தோட்டத்தில் காத்துக் கொண்டிருந்தார். அவருக்கு ஈஸ்வர் என்ன செய்வான் என்பதை அறிய ஆவலாக இருந்தது.  அந்த குறி சொல்லும் கிழவி வீட்டில் இருந்து வரும் போது அவன் சித்தர்களைப் பற்றியும், அமானுஷ்யமான விஷயங்களைப் பற்றியும் மேலும் அதிகமாக அறிவியல் ரீதியாக அவரிடம் பேசினான். தன் ஆராய்ச்சிகளைப் பற்றி விளக்கமாகச் சொன்னான். அவருக்குக் கேட்கவே பிரமிப்பாக இருந்தது.

பார்த்தசாரதிக்கு அவனிடமிருந்த நேர்மையும், எதையும் அதிகப்படுத்தியோ, குறைத்தோ சொல்லாமல், இருப்பதை இருப்பது போலச் சொல்ல முடிந்த தன்மையும் மிகவும் பிடித்திருந்தது. மற்றவர்களை வைத்து ஆராய்ச்சிகளை நடத்துபவனாக மட்டுமே தான் இருந்திருப்பதாகவும், பங்கெடுத்துக் கொண்டவனாக எப்போதும் இருந்ததில்லை என்றும் வெளிப்படையாகச் சொல்லவும், தன் முயற்சிகள் எந்த அளவு வெற்றி பெறும் என்று தெரியவில்லை என்று சொல்லவும் அவனுக்குத் தயக்கம் இருக்கவில்லை....

இன்று அவன் வந்த போது அவனிடம் ஒரு தெளிவும், அமைதியும் கூடுதலாக இருப்பதாக அவருக்குத் தோன்றியது. விஷாலியிடம் இருந்த பிணக்கு தீர்ந்ததே அவனுக்குப் பெரிய ஆசுவாசத்தை ஏற்படுத்தி இருந்ததால் அவருக்குத் தோன்றியபடியே தான் அவன் இருந்தான்.  ஏதோ ஆபத்து காத்திருக்கிறது என்று உள்ளுணர்வு எச்சரித்ததைக் கூட அங்கு போய் சேர்வதற்கு முன் அவன் அலட்சியப்படுத்தி இருந்தான்.

அந்த அதிகாலை நேரத்தில் அவனுக்கு முன் வந்து அவர் காத்திருந்தது நெகிழ்வாக இருந்தது. “குட் மார்னிங் சார். வந்து நேரமாச்சா?

இல்லை. அஞ்சு நிமிஷம் தான் ஆச்சுஎன்றார் பார்த்தசாரதி.  
சார், நீங்க நாள் முழுசும் என்னோடேயே இருக்கணும்னு இல்லை. போரடிச்சா தாராளமா போய்க்கலாம். ஆனா இடையில எப்பவாவது வந்து பார்த்துட்டு போங்க. போதும்...ஈஸ்வர் சொல்ல பார்த்தசாரதி சரியென்றார்.

தோட்டத்தில் இருந்து வீட்டுக்குள் நுழையும் முன் வாசலைத் தொட்டுக் கும்பிட்டு விட்டு ஈஸ்வர் உள்ளே நுழைந்தான். அந்தக் கணத்தில் இருந்தே ஒரு புதிய ஈஸ்வரை பார்த்தசாரதி பார்க்க ஆரம்பித்தார். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த ஒரு உலகப் புகழ் பெற்ற மனவியல் ஆராய்ச்சியாளனாக அவன் தெரியவில்லை. மிகுந்த பயபக்தியுடன் ஒரு புனிதமான இடத்தில் இறைவனை வரவேற்கத் தயாராக இருக்கும் பக்தன் போல இயங்கினான்.

முதல் வேலையாகக் குளித்து விட்டு வந்து சிவலிங்கம் இருந்த பூஜை அறையையும், அதற்கு வெளியே இருந்த ஹாலையும் தானே தரையைப் பெருக்கி சுத்தம் செய்தான். பூஜை அறையில் ஒரு நோட்டுப் புத்தகத்தையும் பேனாவையும் வைத்தான். மீண்டும் கைகால் கழுவிக் கொண்டு வந்து பயபக்தியுடன் விசேஷ மானஸ லிங்கத்தின் புகைப்படத்தை எடுத்து பூஜை அறையில் வைத்தான்.  சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி மானசீகமாகச் சொன்னான்.

“கடவுளே, எல்லாத்தையும் உதறித்தள்ளிட்டு நீயே கதின்னு இந்த இடத்துக்கு வந்து சாகற வரைக்கும் உன்னைப் பிரியாமல் இருந்த என் பெரிய தாத்தாவின் பக்திக்கோ, கடவுளை சிநேகிதன் மாதிரி நேசிக்க முடிஞ்ச கணபதியோட பக்திக்கோ நான் ஒரு நிமிஷ நேரத்துக்குக் கூட இணையாக முடியாதுன்னு எனக்குத் தெரியும். ஆனாலும் உன் நாடகத்துல எனக்கும் ஒரு பார்ட் இருக்குங்கறதால நான் அதைச் செய்ய வந்திருக்கேன்... என் குறைகளைப் பொறுத்துக்கோ. நான் என்ன செய்யணும்னு வழி காமி... ப்ளீஸ்.

மானசீகமாக பசுபதியையும், அக்னிநேத்ர சித்தரையும் வணங்கி விட்டு கண்களை மூடி ஈஸ்வர் அமர்ந்தான். மூச்சில் கவனம் வைக்க ஆரம்பித்தான். மூச்சு சீரானது. மூச்சு நீளமானது. மூச்சு ஆழமானது. மூச்சிலேயே ஐக்கியமானான். மெல்ல மூச்சில் இருந்து கவனத்தை எடுத்து விசேஷ மானஸ லிங்கத்தின் புகைப்படத்திற்குக் கொண்டு வந்தான். இடைப்பட்ட அரைக் கண நேரத்தில் மனக் கண்ணில் விஷாலி தெரிந்தாள். பின்னணியில் பாட்டும் ஒலித்தது.

உன் காதலில் கரைகின்றவன் 
உன் பார்வையில் உறைகின்றவன் 
உன் பாதையில் நிழலாகவே வருகின்றவன் 
ஈஸ்வர் புன்னகையுடன் மானசீகமாகச் சொன்னான். “கடவுளே எனக்கு மிகவும் பிடித்த, நான் காதலிக்கிற உன் படைப்பைக் காட்டி இருக்கிறாய். சந்தோஷம். இனி உன்னைப் பார்க்க விரும்புகிறேன். நீ எங்கிருக்கிறாய்?       

எதிர்பார்க்காத நேரத்தில் எல்லாம் வந்து அவனைத் திகைக்க வைத்த விசேஷ மானஸ லிங்கம் அவன் அழைக்கின்ற நேரத்தில் வர மறுத்தது. மாறாக அவன் மனதில் யாராரோ வந்து நின்றார்கள். குருஜியில் இருந்து, அவனிடம் ஐம்பது டாலர் கடன் வாங்கிய விர்ஜினியா பல்கலைக்கழக நூலக உதவியாளன் வரை அனாவசியமாக நினைவுக்கு வந்தார்கள். செய்ய வேண்டிய எத்தனையோ காரியங்கள் நினைவுக்கு வந்தன. விஷாலிக்கு விசா எப்போது கிடைக்கும் என்பதில் இருந்து, திருமணத்தைப் பற்றி தென்னரசுவிடம் எப்படிப் பேச வேண்டும் என்பது வரை இந்தக் கணமே தீர்மானிக்க வேண்டிய விஷயங்கள் போல முரண்டு பிடித்து மனதில் வந்து நின்றன.

மனதின் இயல்பை மற்றெவரைக் காட்டிலும் நன்றாக அறிந்திருந்த ஈஸ்வர் சலிக்காமல் அமைதியாக மனதைத் திரும்பத் திரும்ப விசேஷ மானஸ லிங்கத்திற்குக் கொண்டு வந்தான்.  மனதைப் பகைத்துக் கொண்டு எந்தக் காரியத்தையும் ஒருவன் சாதித்து விட முடியாது. அதே நேரத்தில் அது சொன்னதை எல்லாம் கேட்டு நடக்க வேண்டும் என்கிற அவசியமும் இல்லை. இப்போதைக்கு எது முக்கியம் என்று தீர்மானிப்பது மனிதனின் அறிவு தான் என்பதில் அவன் உறுதியாக இருந்தான்.

சிறிது சிறிதாக மனமே சலித்துப் போனது. எண்ணங்களின் ஓட்டம் குறைய ஆரம்பித்து பின் மனம் விசேஷ மானஸ லிங்கத்தின் படத்தில் லயிக்க ஆரம்பித்தது. சில நிமிடங்கள் கழித்து படம் திடீர் என்று அவன் பார்வையில் இருந்து மறைந்து வெற்றிடம் தான் தெரிந்தது. ஈஸ்வர் திகைத்தாலும் அது மனதின் லயிப்பைக் கலைக்காமல் பார்த்துக் கொண்டான். அதே இடத்தில் கவனத்தைக் குவித்து வைத்திருந்தான். மெல்ல ஓம் என்ற ஓங்கார நாதம் கேட்க ஆரம்பித்தது. அது மிக மென்மையாகவும், மிகத் தெளிவாகவும் அவன் காதில் விழுந்தது. அவன் உதடுகளும் ஓங்காரத்தை அதே தாள லயத்தோடு உச்சரிக்க ஆரம்பித்தன. அவன் அந்த ஓங்கார  த்வனியில் தன்னையே மறந்தான். மனதைக் குவிக்கும் முயற்சியும் கூட நின்று போனது. பேரமைதி அவனுள் குடி கொண்டது...

பார்த்தசாரதி அவன் திடீரென்று ஓம் மந்திரத்தைச் சொல்ல ஆரம்பித்ததையும் முகத்தில் தெரிந்த பேரமைதியையும் ஒருவித சிலிர்ப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார். அவன் இந்த உலகத்திலேயே இல்லை என்று அவருக்குத் தோன்றியது. ஏதோ ஒரு அழகிய உலகத்தில் தன்னை மறந்து சஞ்சரித்துக் கொண்டிருந்ததாகத் தோன்றியது.

ஈஸ்வர் உணர்ந்த பேரமைதியின் முடிவில் விசேஷ மானஸ லிங்கம் அவனுக்குக் காட்சி அளிக்க ஆரம்பித்தது.  புகைப்படமாக அல்ல நிஜமாகவே அவன் நேரில் பார்ப்பது போல் இருந்தது. வெண்பட்டுத் துணியை நடுவில் செருகிக் கொண்டு தனி தேஜசுடன் சிவலிங்கம் காட்சி அளிக்க அவனுக்கு மயிர்க் கூச்செறிந்தது. அவனை அறியாமல் அவன் கண்களில் இருந்து நீர் வழிய ஆரம்பித்தது. வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஒரு ஆனந்தத்தை அவன் உணர்ந்தான்.

இதற்கு முன்னும் பல முறை அவன் மனக்கண்ணில் அந்த சிவலிங்கம் தோன்றி இருக்கிறது என்றாலும் கூட அந்த நேரங்களில் பக்தியோ, ஆனந்தமோ அவனுக்கு வந்ததில்லை. திகைப்பும் அதிர்ச்சியும் மட்டுமே அவன் அனுபவித்திருக்கிறான். இன்று அவன் அதை மானசீகமாகத் தேடி இருக்கிறான். இன்று அவன் பக்தியுடன் வணங்கிக் காத்திருந்திருக்கிறான். மனமெல்லாம் சிவனாக வேறெந்த எண்ணமும் இல்லாமல் இருந்திருக்கிறான். அதனால் தான் இந்த மெய் சிலிர்க்கும் அனுபவமோ?    

மெய் மறந்து காணக் கண்ணிரண்டும் போதாது போல அவனுக்குத் தோன்றியது. அந்தக் கணத்தில் அந்த சிவலிங்கத்துடன் சேர்ந்து கணபதி தெரிந்தான். அப்போது தான் ஈஸ்வர் கண்டது எப்போதும் போல் தெரிந்த விசேஷ மானஸ லிங்கத்தின் மானசீக தரிசனம் அல்ல, கண்டது விசேஷ மானஸ லிங்கம் இருக்கும் இடத்தில், இருந்த விதத்தில் தான் என்பதை ஈஸ்வர் உணர்ந்தான். ஓம் மந்திர ஒலியும் அங்கிருந்து தான் கேட்கிறது. கணபதி சம்மணமிட்டு சிவலிங்கத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

அவன் பரபரப்புடன் பார்க்கப் பார்க்க அவன் பார்வையில் இருந்து அந்தக் காட்சி மறைந்து போனது. மறுபடி சிவலிங்கத்தின் புகைப்படம் எதிரே தெரிய ஆரம்பித்தது. ஈஸ்வருக்கு ஏமாற்றமாக இருந்தது என்றாலும் சில நொடிகளில் அந்த ஏமாற்றத்திலிருந்து மீண்டு மறுபடி அந்தப் புகைப்படத்தில் மனதைக் குவித்தான். பழைய பரவச உணர்வு விலகி விட்டிருந்தாலும் அமைதியை சீக்கிரமே அவன் மனம் உணர ஆரம்பித்தது. சில நிமிடங்கள் சென்ற பின் ஒரு ஓலைச்சுவடி சிவலிங்கப் புகைப்படத்தின் முன்னால் தெரிய ஆரம்பித்தது.

சம்பந்தமில்லாமல் திடீரென்று காண ஆரம்பித்திருக்கும் அந்த ஓலைச்சுவடியில் ஈஸ்வர் கவனத்தைக் குவித்தான். ஒன்றும் புரியவில்லை. அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த அவன் தந்தையின் உதவியால் தமிழை நன்றாகவே கற்றிருந்தாலும் கூட அச்சு எழுத்தைப் படிக்க முடிவது போல அவனால் ஓலைச்சுவடி எழுத்துக்களைப் படிக்க முடியவில்லை. ஏதோ ஒரு செய்தி அந்த ஓலைச்சுவடி மூலம் சொல்லப்படுகிறது... என்ன அது? முயற்சி செய்தும் முடியாத போது மெல்ல மனதிற்குள் சொன்னான். “நீ எதையோ சொல்ல விரும்புகிறாய் என்று தெரிகிறது விசேஷ மானஸ லிங்கமே. ஆனால் எனக்கு எதுவும் புரிய மாட்டேன்கிறது

அவன் சொல்லி முடித்தது தான் தாமதம். ஓலைச்சுவடி மறைந்து போய் அதற்குப் பதிலாக ஒரு வெள்ளைக் காகிதத்தில் அச்சு எழுத்துக்கள் தோன்ற ஆரம்பித்தன. வெள்ளைக் காகிதம் முழுவதும் அச்சு எழுத்துக்கள் இருந்தாலும் இரண்டே இரண்டு வரிகள் தவிர மற்றதெல்லாம் மங்கித் தெரிந்தன. அவன் பிரமித்துப் போனான். என்ன ஒரு ஆச்சரியம்!. தெளிவாகத் தெரிந்த அந்த அச்சு எழுத்துக்களைப் படித்தான். ஏதோ செய்யுள் போலத் தெரிந்தது. காலத்தை வீணாக்காமல் அதே நேரத்தில் அந்த லயிப்பு நிலையைக் கலைக்கும் பரபரப்பு மனநிலைக்குச் சென்று விடாமல் வேகமாக அருகில் இருந்த நோட்டுப்புத்தகத்தில் அந்த அச்சு எழுத்துக்களைப் பார்த்து எழுத ஆரம்பித்தான்.

தூய உளமறிவு கூடித் துஞ்சாமல் நாடினால் சேர்ந்திடும் மெய்ஞானம் மூன்றும் காக்க மிஞ்சிடும் பூவுலகம் அன்றேல் நஞ்சாகும் சிவஞானம்

அதே நேரத்தில் குருஜி விசேஷ மானஸ லிங்கத்தின் அலைகளோடு லயிக்க ஆரம்பித்திருந்தார். விசேஷ மானஸ லிங்கத்தைப் பற்றி எழுதப்பட்டிருந்த ஓலைச்சுவடிகளை ஆராய்ந்து தமிழாராய்ச்சி நிபுணர் அவரிடம் எழுதித் தந்ததை ஈஸ்வர் படித்துக் கொண்டு இருப்பது போன்ற பிரமை அவருக்கு ஏற்பட்டது. குருஜி திடுக்கிட்டார்.



(தொடரும்)

பரம(ன்) ரகசியம் – 78

ஸ்வர் மிக வேகமாக விஷாலியின் அறைக்குப் போவதைப் பார்த்த பரமேஸ்வரனுக்கு என்னவோ அசம்பாவிதம் நிகழ்ந்து விட்டதாகத் தோன்றியது. என்ன என்று விசாரிக்க கனகதுர்காவிடம் சென்றார். கனகதுர்கா கவலையுடன் இருக்க ஆனந்தவல்லி சாவதானமாக அமர்ந்திருந்தாள்.

என்ன ஆயிற்று என்று விசாரித்த மாமனாரிடம் கனகதுர்கா ஆனந்தவல்லி சொன்னதைச் சொன்னாள். கேட்டு அவரும் கவலைப்பட ஆனந்தவல்லி அவர்களிடம் கவலைப்பட வேண்டாம் என்று சொன்னாள்.

“நம்ம வீட்டுக்கு வந்த பொண்ணு ஏடாகூடமா ஏதாவது செய்துகிட்டா என்ன பண்றதும்மா. நீ சுலபமா கவலைப்பட வேண்டாம்னு சொல்றே.

“அந்தப் பொண்ணு அப்படி எதுவும்  செய்துக்காது. அது அப்படியெல்லாம் சொல்லவே இல்லை. நான் சும்மா தான் சொன்னேன்....ஆனந்தவல்லி அலட்டிக் கொள்ளாமல் சொன்னாள்.

கனகதுர்கா விழிபிதுங்க நின்றாள்.இப்படியும் கூட சும்மா சொல்வார்களா?பரமேஸ்வரன் தாயிடம் கோபத்துடன் கேட்டார். “அம்மா உன் வயசுக்கு இதெல்லாம் கௌரவமா? நீ என்ன காரியம் செய்திருக்கே. பைத்தியம் பிடிச்சுடுச்சா?

ஆனந்தவல்லி மகன் கோபத்தைப் பொருட்படுத்தவில்லை. கனகதுர்காவிடம் சொன்னாள். இப்படித் தான் என் மூத்த மகனும் சில நாள்னு அந்த தோட்ட வீட்டுக்குப் போனான். சிவலிங்கம் அவனைத் தன் பக்கம் இழுத்துகிச்சு. போனவனைத் திரும்ப கூட்டிகிட்டு வர பெத்தவ பாசம் பத்தலை... இவன் போகிறவன் ஒரேயடியாய் சிவலிங்கம் பின்னால போயிடாமல் திரும்ப வரணும்னா அந்தப் பொண்ணால தான் முடியும். அதுக்கு அவங்க ரெண்டு பேரும் மனசு விட்டுப் பேசணும்.... சுமுகமாயிடணும்... அதுக்கு இது தான் ஒரே வழின்னு தோணுச்சு...

கனகதுர்காவிற்கு என்ன நினைப்பது என்று தெரியவில்லை. மகன் அதை எப்படி எடுத்துக் கொள்வான் என்று பயந்தாள்.

நேரம் போய்க் கொண்டிருந்தது. ஆனந்தவல்லி முகத்தில் லேசாய் புன்னகை அரும்ப ஆரம்பித்தது. நீண்ட நேரம் கழித்து ஈஸ்வர் கோபத்துடன் வந்த போது சங்கரின் பதக்கங்களை எல்லாம் முதல் தடவை பார்ப்பது போல் ஆனந்தவல்லி பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஈஸ்வர் பரமேஸ்வரனைக் கேட்டான். “உங்கம்மாவுக்கு அறிவே இல்லையா?

கனகதுர்கா மகனைக் கடிந்து கொண்டாள். “என்னடா பெரியவங்களை இப்படி எல்லாம் பேசிகிட்டு..

“நீ சும்மா இரும்மா. பெரியவங்க மாதிரியா இவங்க நடந்துக்கிறாங்க. எனக்கு அப்படியே கழுத்தை நெறிச்சுடலாம் போல இருக்கு

பரமேஸ்வரன் சொன்னார். “செய். பல பேர் பல தடவை நினைச்சது தான் அது.”  ஆனந்தவல்லி மகனை முறைத்தாள்.

ஈஸ்வருக்கு, குறும்பு செய்து விட்டு ஒன்றும் தெரியாத சாது போல் நடிக்கும் குறும்புக் குழந்தையை ஆனந்தவல்லி நினைவுபடுத்தினாள். அவள் இல்லா விட்டால் இன்னேரம் விஷாலியுடன் இருந்த பிணக்கு இன்னும் சரியாக வாய்ப்பு இல்லை என்றாலும் சில நிமிஷங்களுக்காவது அவனைக் கதிகலங்க வைத்த ஆனந்தவல்லியை சின்னக் கோபத்தோடு ஈஸ்வர் நெருங்கினான்.

“ஏண்டா சாக வேண்டாம்னு சொல்லிட்டு வர இவ்வளவு நேரமா?ஆனந்தவல்லி கேட்க ஈஸ்வர் அவள் கழுத்தை நெறிப்பது போல் நடித்துக் கை வைக்க ஆனந்தவல்லி சளைக்காமல் கேட்டாள். “விஷாலி போட்டுட்டிருக்கற செண்ட் மணம் உன் கிட்ட இருந்து எப்படி வருது?

ஈஸ்வர் முகம் வெட்கத்தில் சிவந்தது. அவள் கழுத்தை செல்லமாக நெறிக்க, ஆனந்தவல்லி கொள்ளுப் பேரனைக் குறும்புப் பார்வை பார்த்தாள். பரமேஸ்வரனுக்கு மீண்டும் தந்தை நினைவுக்கு வந்தார். மகன் வெட்கத்தை ரசித்த கனகதுர்காவிற்கு ஈஸ்வர் ஆனந்தவல்லியிடம் அவ்வளவு உரிமை எடுத்துக் கொள்வது ஆச்சரியமாக இருந்தது. சங்கர் தன் பாட்டியை யாரும் நெருங்க முடியாத கண்டிப்பான நபராக விவரித்திருந்தார். அவர் மகன் இந்த வீட்டில் எப்படிப்பட்ட மாற்றங்களை வரவழைத்திருக்கிறான்!...

மீனாட்சி சந்தோஷம் தாளாமல் கணவரிடம் ஓடி வந்தாள். “என்னங்க உங்களுக்கு விஷயம் தெரியுமா?

“என்ன மீனாட்சி?

“நம்ம ஈஸ்வரும் விஷாலியும் காதலிக்கிறாங்களாம்... பாட்டி அவங்க ரெண்டு பேர் கல்யாணத்தை சீக்கிரமாவே செஞ்சுடணும்னு அப்பா கிட்ட சொல்லிகிட்டு இருக்காங்க... தென்னரசு அண்ணன் டெல்லியில இருந்து திரும்பி வந்ததும் பேசலாம்னு அப்பா சொல்றார். எனக்கு ரொம்பவே சந்தோஷமாய் இருக்குங்க

விஸ்வநாதனுக்கு மகன் நினைவு வந்தது. அவனுக்காக மனம் கதறியது. எந்தப் பெண்ணை அவன் திருமணம் செய்வதற்கு அவன் தாத்தா சம்மதம் தெரிவிக்க மாட்டார் என்று நினைத்து இத்தனை காலம் அதைத் தெரிவிக்காமலேயே இருந்தானோ, அதே பெண்ணை இன்னொரு பேரனுக்குத் திருமணம் செய்து வைக்க அந்தத் தாத்தா முடிவெடுத்திருக்கிறார்.  அவன் எப்படித் தாங்குவான் என்று அவர் வேதனைப்பட்டார். அது தெரியாமல் மீனாட்சி சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறாள்.

மகேஷ் இப்போது இங்கு இல்லாமல் இருப்பது துரதிர்ஷ்டமே என்று தோன்றியது. மிக முக்கியமான நேரங்களில் எல்லாம் அவன் இங்கிருப்பதில்லை. பரமேஸ்வரனுக்கு மாரடைப்பு வந்த போதும் அவன் இங்கு இல்லை. அவன் காதலிக்கு அவன் வெறுக்கும் நபருடன் திருமணம் தீர்மானமாகிக் கொண்டிருக்கிறது. இப்போதும் அவன் இங்கு இல்லை.

வரலாறு திரும்பத் திரும்ப ஒரே மாதிரி வருகிறது என்று நினைத்துக் கொண்டார். கல்லூரி நாட்களில் அவர் சங்கரைப் பார்த்து நிறைய பொறாமைப்பட்டிருக்கிறார். நல்ல குணம், அசாத்திய அறிவு, தன்னடக்கம், அளவில்லாத செல்வம் அத்தனையும் இருந்த சங்கரை கல்லூரி ஆசிரியர்களும், சக மாணவர்களும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடாத குறை தான். சங்கர் முன்னால் மற்றவர்கள் எல்லாரும் களையிழந்து போனார்கள். அதனால் நண்பனாகப் பழகினாலும் உள்ளூர சங்கர் மீது தீராத வயிற்றெரிச்சல் அவருக்கு இருந்தது.

சங்கர் காதல் திருமணம் செய்து கொண்டு நிரந்தரமாய் சென்ற பின், சங்கரின் தங்கையைத் திருமணம் செய்து கொண்டு வந்த பிறகு, சங்கரை வென்று விட்டது போல் ஒரு எண்ணம் அவருக்கு ஏற்பட்டிருந்தது. அவருக்கு ஒரு மகன் பிறந்து அவன் மீது பரமேஸ்வரன் பாசமழை பொழிந்த போது ஒரு தைரியம் பிறந்திருந்தது. இனி பயப்படத் தேவையில்லை என்று நினைத்திருந்தார். ஆனால் ஈஸ்வரின் வரவில் எல்லாம் மாறி சரித்திரம் திரும்பி விட்டது. அவர் மகனும் அவரைப் போலவே உயர முடியாத அளவுக்கு ஒரு எதிரியை சம்பாதித்து விட்டிருக்கிறான். அறிவு, பாசம், சொத்து, காதல் என்று எல்லா விதங்களிலும் அவன் ஈஸ்வரால் தோற்கடிக்கப் பட்டிருக்கிறான்....

மகேஷிற்கு நிறைய சம்பாதிக்க வேண்டும், புகழ் பெற வேண்டும் என்கிற ஆசை நிறைய இருக்கின்றது. சமீப காலங்களில் பல முறை விஸ்வநாதனிடம் அவன் சொல்லி இருக்கிறான். “அப்பா! தாத்தா சொத்தெல்லாம் ஒன்னுமே இல்லைன்னு சொல்ற அளவுக்கு நான் சம்பாதிச்சுக் காட்டறேன் பாருங்க...

அப்படிச் சொன்னானே ஒழிய பெரியதாய் அவனுக்குத் தொழில் நுட்பங்கள் தெரிந்திருக்கவில்லை. கம்ப்யூட்டர், சாஃப்ட்வேர் ஆகியவற்றில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தானே ஒழிய மற்றபடி பெரிய சாமர்த்தியம் எதிலும் இருக்கவில்லை. அடிக்கடி நண்பர்களிடம் போவது, இரவு வேளைகளிலும், நாட்கணக்கிலும் எங்கேயோ கழிப்பது எல்லாம் அவருக்கு கவலையைத் தந்தது. ஆனால் அவனுக்கு பெரிய இடத்து நண்பர்கள் இருப்பதாகச் சொன்னான். இந்தியாவிலேயே மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான பாபுஜி கூடத் தனக்கு நண்பர் என்று சொன்னான். அவருக்கு நம்பக் கஷ்டமாக இருந்தபோது தன் செல் போனில் இருந்த பாபுஜியின் எண்ணைக் கூடக் காட்டினான். அவர் முன்னாலேயே போனில் பாபுஜியிடம் பேசினான்....

சில நாட்களாக ஆகாயக் கோட்டை கட்டி அதில் வாழ்ந்து கொண்டிருக்கும்  மகேஷின் அஸ்திவாரத்தையே ஈஸ்வர் கலைத்துக் கொண்டிருக்கிறான்.   மற்றவற்றையாவது அவன் தாங்கிக் கொள்ள முடியலாம். ஆனால் காதல் விஷயத்தில் அவனால் தாங்க முடியும் என்று தோன்றவில்லை. உடனடியாகப் போன் செய்து விஷயத்தைச் சொல்லலாமா என்று நினைத்த விஸ்வநாதன்  பிறகு எண்ணத்தை மாற்றிக் கொண்டார். அவனாகப் போன் செய்தால் சொன்னால் போதும் என்று தோன்றியது. கோவாவில் ஜாலியாக இருக்கும் இந்த சில நாட்களாவது அவனுக்கு மிஞ்சட்டும்.

குருஜி  தன்னை விதியின் நாயகனாக உணர்ந்தார். இது வரை அவர் அறிந்ததும் அனுமானித்ததும் விசேஷ மானஸ லிங்கத்தைப் பொறுத்த வரையில் மிகச்சரியாகவே இருக்கிறது. ஆர்க்கிமிடிஸ் சொன்னது அவருக்கு நினைவுக்கு வந்தது. நான் நிற்க ஒரு இடமும், ஒரு சரியான நெம்புகோலும் எனக்குக் கிடைத்தால் நான் இந்த பூமியையே அசைத்துக் காட்டுவேன்

குருஜிக்கு சரியான ஒரு இடமும் கிடைத்திருக்கிறது. விசேஷ மானஸ லிங்கம் என்ற நெம்புகோலும் கிடைத்திருக்கிறது. அவர் இந்த உலகத்தையே நகர்த்தி சரியான விதத்தில் நிறுத்தப் போகிறார். சரித்திரத்தில் நிரந்தரமான இடத்தைப் பிடித்து விடப் போகிறார்....

முதல் முதலில் விசேஷ மானஸ லிங்கம் பற்றி பாபுஜியிடமும், மற்ற அறுவரிடமும் அவர் சொன்ன போது அவர்கள் அதை இந்தியாவில் சொல்லப்படும் எத்தனையோ கற்பனைக் கதைகளில் ஒன்று என்று தான் அதை நினைத்தார்கள். இந்திய சித்தர்கள் விஞ்ஞானத்திற்கு யூகிக்கவும் முடியாத எத்தனையோ சித்திகளை விளையாட்டாகச் செய்து விடக் கூடியவர்கள் என்பதை விளக்கினார். சிறு வயதில் இருந்து அவர் அறிந்திருந்த ஒருசில சித்தர்களின் அபூர்வ சக்திகள் பற்றியும் சொன்னார். கேட்ட பின் அவர்கள் பிரமித்தார்கள். அப்படிப்பட்ட பல நூறு சித்தர்கள் தங்கள் சக்திகளை ஆவாகனம் செய்து உருவாக்கிய அந்த விசேஷ மானஸ லிங்கத்தின் சக்திகளின் அளவு, ஒரு மனிதன் காண முடிந்த கற்பனையின் அளவு தான் என்று அவர் சொன்னார்.

சித்தர்களின் சக்தியையாவது அவர்களில் சிலரால் ஒத்துக் கொள்ள முடிந்தது. ஆனால் சித்தர்கள் உருவாக்கிய விசேஷ மானஸ லிங்கத்தின் சக்தியை அவர்களால் நிஜம் என நம்ப முடியவில்லை. பின் தான் அவர்களிடம் சில ஆராய்ச்சிகள் மூலம் அதை நிரூபிப்பதாக அவர் சொன்னார். பின் அன்று அவர்களிடம் உணர்ச்சி பூர்வமாக குருஜி சொன்னார்.

“நண்பர்களே நீங்க அட்லாண்டிஸ் என்ற தீவைப் பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா? அது 11000 வருஷங்களுக்கு முன்னாடியே  சிறப்பாய் இருந்ததாய் ப்ளேடோங்கிற கிரேக்க ஞானி சொல்லி இருக்கார். உலகத்துல மத்த பகுதிகள்ல மனிதர்கள் காட்டு மிராண்டிகளாய் வாழ்ந்துட்டு இருந்த காலத்துல அந்தத் தீவில் வாழ்ந்த மனிதர்கள் மட்டும் அந்த காலத்துலயே அறிவாளிகளாவும், நாகரிகத்துல சிறந்தவங்களாவும் இருந்ததா சொல்லிக்கிறாங்க. அந்தத் தீவு பிற்காலத்துல கடல்ல மூழ்கி அழிஞ்சுடுச்சுன்னு சொல்றாங்க. அய்ன் ரேண்ட் எழுதின “அட்லாஸ் ஷ்ரக்டுல கூட அந்த அட்லாண்டிஸ் தீவு ஞாபகார்த்தமா எல்லா அறிவாளிகளும் சேர்ந்து அட்லாண்டிஸ் என்கிற இடத்தை உருவாக்கி அங்கே வாழற மாதிரி கற்பனையில் எழுந்தியிருந்ததை நீங்க படிச்சிருக்கலாம். அந்தக் கற்பனையை நிஜமாக்கணும்னு நான் ஆசைப்படறேன்....

அந்தக் காலத்து ஞானிகள் இந்த காலத்தை அழிவையோ, பெரிய மாற்றத்தையோ உலகம் காணப்போகிற காலமாய் குறிச்சுட்டுப் போயிருக்காங்க. எச்சரிக்கையாய் இருக்கிறதா நினைச்சு விசேஷ மானஸ லிங்கம்கிற ஒரு மஹா சக்தியை ரகசியமாய் மறைச்சு வச்சுட்டு இருக்கிற முட்டாள்தனத்தை அந்த சிவலிங்கத்தை வச்சுகிட்டு இருக்கிறவங்க செய்றாங்க. நிறைய செய்ய வேண்டிய காலத்துல அதை முடக்கி வச்சுகிட்டு இருக்கறது என்ன புத்திசாலித்தனம்னு எனக்குத் தெரியலை. உலகம் அழிவை நோக்கிப் போய்கிட்டு இருக்கிற இந்தக் காலத்துல கூட விசேஷ மானஸ லிங்கத்தை உபயோகப்படுத்தலைன்னா அது முட்டாள்தனம்னு நான் நினைக்கிறேன். அதுக்காகத் தான் அதை முதல்ல என் வசமாக்கிக்கப் போறேன். இந்த உலகத்தை வழிநடத்தப் போறேன்...

“உலகத்துல எப்பவுமே முட்டாள்கள் தான் அதிகம்.. ஆட்டு மந்தைக் கூட்டம்... அவங்களை வழி நடத்த எப்பவுமே புத்திசாலிகள் தேவை... ஒருசில பேர் புத்திசாலித்தனத்துல தான் எல்லா நல்லதும் உலகத்துல இது வரைக்கும் நடந்திருக்கு. சிந்திக்கத் தெரிஞ்ச அறிவாளிகள் இல்லைன்னா எந்த முன்னேற்றமும் இங்கே இல்லை. நீங்க எல்லாம் அறிவாளிங்க. உங்க நாடுகள்ல நல்ல செல்வாக்கோடவும் இருக்கீங்க. சக்தி வாய்ந்தவங்களா இருக்கீங்க. அதனால என்னோட முயற்சில உங்களையும் பங்கெடுக்க கூப்பிடறேன்....

அன்று குருஜி தொடர்ந்து நிறைய நேரம் பேசினார். விசேஷ மானஸ லிங்கத்தின் உதவியோடு உலக அளவில் எதிர்பார்க்கும் மாற்றங்களைச் செய்ய அவருக்குத் துணையாக இருக்க உலக நாடுகளில் பிரதிநிதிகள் தேவை என்று கருதினார். ஆரம்பமாய் ஆறு நாடுகளின் பிரதிநிதிகளாய் அவர்களை அவர் நினைத்தார். முதலிலேயே சக்தி வாய்ந்தவர்களாக இருக்கும் இவர்கள், விசேஷ மானஸ லிங்கத்தின் உதவியும் கிடைத்து விட்டால் பல அற்புதங்களை நிகழ்த்தலாம், வரலாற்றில் இடம் பெறலாம் என்பதை சக்தி வாய்ந்த வார்த்தைகளில் சொன்னார். அவர்களை விதியின் பிரதிநிதிகளாய் மாறத் தயாராக இருக்கச் சொன்னார். அவர் பேசும் போது அங்கிருந்த பாபுஜி தானும் அதில் பங்கு பெற ஆசைப்பட்டு தன்னை இணைத்துக் கொண்டார். ஆழ்மன ஆராய்ச்சிகளுக்கு ஆகும் செலவை, தான் ஏற்றுக் கொள்வதாகச் சொன்னார்.


அவர்கள் அறுவரும் மந்திரத்தால் கட்டுப்பட்டவர்கள் போல குருஜி சொன்னதைக் கேட்டார்கள். கேட்க நன்றாக இருந்தாலும் அது எந்த அளவு சாத்தியமாகும் என்பது அவர்களுக்கு கேள்விக்குறியாகவே இருந்தது என்பது அவர்கள் முகபாவத்தில் இருந்தே தெரிந்தது. அதில் அவர் தவறு காணவில்லை. அவர் அளவுக்கு அவர்களுக்கு பிரபஞ்ச ரகசியங்களில் ஞானம் இல்லை. அவருடைய அனுபவங்களும் அவர்களுக்கு இல்லை. ஒரு நாள் அவர்களுக்குப் புரியும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. 

அந்த நாள் தற்போது நெருங்கி விட்டதாக குருஜி நினைத்தார். அவர் கணக்கு சரியே என்று விசேஷ மானஸ லிங்கம் இப்போது நிரூபித்து விட்டது. நான் வந்து விட்டேன். என்னை வைத்து நீ என்ன செய்கிறாயோ செய்து கொள் என்று அது அனுமதியும் கொடுத்து விட்டது என்று அவருக்குத் தோன்றியது. இந்த நல்ல சந்தர்ப்பம் வர அவரும் சில தவறுகள் செய்ய வேண்டி வந்தது. ஆனால் அவருக்கு வேறு வழியை விசேஷ மானஸ லிங்கத்தின் பாதுகாவலர்கள் விட்டு வைக்கவில்லை. உலகத்தின் ஒட்டு மொத்த நன்மைக்காக ஒருசிலருக்குத் தீமைகள் செய்ய வேண்டி தான் வருகிறது, என்ன செய்வது?.....  

சிறிது நேரத்தில் குருஜியின் அறைக்கு ஜான்சன், பாபுஜி, தென்னரசு, மகேஷ் நால்வரும் வந்தார்கள். குருஜியும், ஜான்சனும் அடுத்த ஆராய்ச்சிக்கு எதைத் தேர்ந்தெடுக்கலாம் என்று விவாதிக்க ஆரம்பித்தார்கள். பாபுஜி, தென்னரசு, மகேஷ் மூவரும் பரபரப்புடன் அதைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். நடந்து முடிந்த ரோஜா மணம் ஆராய்ச்சிக்குப் பின் ஒரு பெரிய எதிர்பார்ப்பு அவர்களிடமும் ஏற்பட்டிருந்தது.

ஜான்சன் நடந்ததற்கு அடுத்த மேல் நிலையில் உள்ள சின்ன ஆராய்ச்சி செய்யலாம் என்று அபிப்பிராயப்பட்டார். ஆனால் குருஜியோ இந்த தடவை பெரியதாகச் செய்து எல்லாரையும் அசத்த வேண்டும் என்று ஆசைப்பட்டார். பல்லாயிரம் கோடி ரூபாய் அக்கவுண்டில் இருக்கையில் கஞ்சத்தனமாய் சில ஆயிரம் ரூபாய்க்கு செக் எழுதி அதைச் செலவழிப்பதில் திருப்தி இல்லை என்று சொன்னார். அவர் அளவுக்கு நம்பிக்கை ஜான்சனுக்கு இருக்கவில்லை. கடைசியில் ஜான்சன் குருஜி வழிக்கே வந்தார். முயன்று பார்ப்பதில் தவறில்லை. சரி குருஜி நீங்கள் சொல்ற மாதிரியே கொஞ்சம் பெரிய ஆராய்ச்சியே செய்யலாம்.  என்ன செய்யலாம்னு நீங்களே சொல்லுங்கள்

“என்ன செய்கிறோமோ அது உலக அளவுல எல்லோருக்கும் தெரிகிற சம்பவமாய் இருக்கணும்... என்று  சொல்லி விட்டு குருஜி யோசித்தார், அவர் பார்வை பக்கத்தில் இருந்த தினசரிப் பத்திரிக்கையின் தலைப்புச் செய்தியில் தங்கியது.

சோமாலியக் கடற்கொள்ளையர்கள் கேட்ட பணயத் தொகையைத் தந்து தங்கள் கப்பலையும், அதிலிருந்த 64 இந்தியர்களையும் மீட்க இந்தியா ஒப்புக் கொண்டது என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் மூலம் தெரிவதாகவும், அந்தப் பணயத் தொகை எவ்வளவு என்று தெரிவிக்க அதிகாரிகள் மறுத்து விட்டதாகவும் எழுதி இருந்தார்கள். ஒரு வாரத்திற்கு முன்பு தான் செங்கடல் அருகே சோமாலியக் கடற்கொள்ளையர்களால் இந்தியக் கப்பல் கைப்பற்றப்பட்டிருந்தது.

சில ஆண்டுகளுக்கு முன் உலகநாடுகள் பலவும் சேர்ந்து அந்தப் பகுதியில் ஒரு கூட்டு கடல் ரோந்துப்படையை உருவாக்கி இருந்ததன் காரணமாக, சோமாலியக் கடற்கொள்ளையர்கள் இரண்டு ஆண்டுகளாக பெரிய அளவில் இயங்காமல் மறைவாக இருந்தார்கள். அதனால் கூட்டு கடல் ரோந்துப்படையில் இருந்த ஆட்கள் கணிசமாகக் குறைக்கப்பட்டிருந்தனர். அதைப் பயன்படுத்திக் கொண்டு அந்தக் கடற்கொள்ளையர்கள் துணிகரமாக இப்போது செயல்பட்டிருக்கிறார்கள். அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, சீனா உட்பட பல நாடுகள் அதற்குக் கண்டனம் தெரிவித்திருந்தன.....

குருஜி புன்னகையுடன் கேட்டார். “அந்தக் கடற்கொள்ளையர்களைத் தண்டிக்க நாம் முயற்சி எடுக்கலாமா?

அவர்கள் புரியாமல் குருஜியைக் குழப்பத்துடன் பார்த்தார்கள். குருஜி சொன்னார். “நம் விசேஷ மானஸ லிங்கத்தின் சக்தி செங்கடல் வரை போய் சோமாலியக் கடற்கொள்ளையர்களைத் தண்டிக்கிறதா என்று ஆராய்ந்து பார்க்கலாமா?

ஜான்சனுக்கும் மற்றவர்களுக்கும் விசேஷ மானஸ லிங்கத்திடம் இருந்து அநியாயத்திற்கு அதிகமாய் குருஜி எதிர்பார்ப்பதாகத் தோன்றியது.

(தொடரும்)