அடுத்தடுத்து நான்கு அத்தியாயங்களில் வேதங்களின் சாரத்தை தெளிவாக பார்த்தோம். அதை படித்த அறிவு நுட்பமுடைய வாசகர்களுக்கு ஒரு கேள்வி எழும்பும். வேதத்தை அறிவின் பெட்டகமாக ஆராய்ச்சியின் உறைவிடமாக இதுவரை கருதி வந்திருக்கிறோம். ஆனால் சென்ற அத்தியாயங்களில் அவற்றை படிக்கும் போது நமது கருத்துக்கும், மதிப்பிற்கும் உரிய அளவிற்கு அதில் விஷயங்கள் எதுவும் விசேஷமாக இல்லையே என்று தோன்றும். இறைவனை துதிப்பதும் அவரிடம் பிரார்த்தனைகள் வைப்பதும் தான் வேதத்தில் மைய கருத்து என்றால் அறிவுக்கு அங்கே இடம் எது? என்றெல்லாம் தோன்றுவது இயற்கையாகும்.
மிக முக்கியமாக ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ளவேண்டும். துதிப்பாடல்களும், பிரார்த்தனைகளும் வேத சுலோகங்களில் அதிகம் தான் என்றாலும் அந்த சுலோகங்களின் மையக்கருத்தாக பல அரிய விஷயங்கள் மறைந்து கிடப்பதை வேத நூல்களை முழுமையாக படிக்கும் போது அறியலாம். அதே நேரம் வேதத்தின் நாத லையம் தான் ஜீவனே தவிர அதன் கருத்துக்கள் அவ்வளவாக முக்கியம் வாய்ந்ததாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
பிரபஞ்சத்தில நாலாதிசையிலும் பரவி உள்ள சப்த சமுத்திரத்தை வேதங்கள் தனக்குள் கொண்டுள்ளது. அதை சுருதி சுத்தமாக பாராயணம் செய்யும்போது தான் வேத ஒளியில் நம்மால் முழுமையாக நனைய இயலும். அதே நேரம் வேத பரிபாஷையை அறியாமல் மொழிமாற்றம் செய்யப்பட்ட சுலோகங்களை படித்துவிட்டு வேதக்கருத்தை முழுமையாக புரிந்துகொள்ள இயலாது. எனவே வேதத்தை முழுமையாக அறிந்து கொள்ள நினைப்பவர்கள் வடமொழி பயின்று நான்கு வேதங்களையும் கற்றுக்கொண்டால் அறிவின் சிகரத்தை நிச்சயமாக அடையலாம். மேலும் வேத அறிவை எல்லோரும் அறிந்து கொள்வதற்கு இன்னொரு வழியும் உண்டு. அதுதான் உபநிஷதங்கள் ஆகும்.
உபநிஷதங்களில் தான் இந்திய ஞானிகளின் அறிவு முழுவதும் கொட்டிக்கிடக்கிறது. இந்த நூல்களுக்கு இணையான அறிவு நூல்கள் இதுவரை உலகில் படைக்கப்படவில்லை. என்றே சொல்லலாம். காடுகளில் தூய்மையான காற்றையும், தெளிவான நீரையும், பருகிக் கொண்டு ஏகாந்தமாக வாழ்ந்த ரிஷிகள் தங்களது அனுபவ அறிவை உபநிஷதங்களில் அப்படியே உருக்கி வைத்திருக்கிறார்கள். அவைகளில் உள்ள வண்ணமயமான உண்மைகள் இன்றும் நமது வாழ்க்கைக்கு ஊன்று கோலாக மட்டுமல்ல, அஸ்திவாரமாகவும் அமைந்திருக்கிறது. அக்கருத்துக்களை ஓரளவு நாம் தெரிந்து கொண்டால் இந்து மதத்தினுடைய அறிவின் வரலாற்றின் மிக பெரும் பிண்ணனியை நன்கு உணரலாம்.
உபநிஷதங்கள் என்றால் அருகாமையில் இருப்பது என்று பொருள் ஆகும். எதனருகாமையில்? சகலத்தையும் கற்று உணர்ந்த அனுபவித்து உணர்ந்த மகாஞானியின் அருகாமையில் இருப்பது என்று பொருள் ஆகும். பல நூறு உபநிஷதங்கள் உள்ளன. அதில் நூற்றி பதினெட்டு உபநிஷதங்கள் மிகவும் முக்கியம் வாய்ந்தவைகள் ஆகும். ஜெகத்குரு ஆதிசங்கர பகவத் பாதாள் 10 உபநிஷதங்களுக்கு வியாக்கியானம் எழுதி உள்ளதால் அந்த பத்தும் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அவைகளில் சில உபநிஷதங்ககளின் கருத்துக்களை இப்போது நாம் சிந்தனை செய்வோம்.
அறிஞர்கள் பலராலும் வியப்புடன் பேசப்படுவது கடோபநிஷமாகும். இது அப்படி பேசப்படுவதற்கு மிக முக்கிய காரணம் வாழும் போது மனிதன் கடைபிடிக்க வேண்டிய கடமைகளையும், வாழ்ந்த பிறகு அவன் அடையும் நிலைமைகளையும் இந்த உபநிஷதம் தெள்ளத் தெளிவாக காட்டுகிறது. அதே நேரம் வாழ்க்கையை பற்றியுள்ள அச்சத்தை விலக்கவும் வழிவகை செய்கிறது.
கடற் என்ற முனிவரால் இயற்றப்பட்டது கடோபநிஷதம் ஆகும். இது யஜூர் வேத்தில் தைத்திரிய பிரிவில் இடம் பெற்றிருக்கிறது. பழைய கால வடமொழி இலக்கியத்தில் காணப்படுகின்ற கதையமைப்பு இந்த உபநிதத்தில் மையமாக எடுத்தாளப்பட்டிருக்கிறது. வாஜசிரவஸ் என்ற ஏழை அந்தணன் மகன் நசிகேதன் இவன் குழந்தை பருவத்திலேயே ஆத்ம விழிப்பு பெற்றவன். ஒரு சமயம் இவனது தந்தை யாகம் நடத்தி மெலிந்து போன பசுக்களை தானம் கொடுக்கும் போது அப்படி கொடுப்பது தவறென தந்தைக்கு சுட்டிக்காட்டி அப்பசுக்களுக்கு பதிலாக தன்னைத்தானம் கொடுக்குமாறு வற்புறுத்துகிறான். பையன் பலமுறை ஒரே விஷயத்தை வற்புறுத்தியதால் எரிச்சலுற்ற தந்தை மகனை பார்த்து உன்னை எமனுக்கு தானம் கொடுத்துவிடேன் என்கிறான்.
இதைக்கேட்ட நசிகேதன் தான் யாருக்கு தாரை வார்க்க பட்டோமோ அவரிடத்தில் இருப்பது தான் தர்மம் என்று கருதி எமன் உலகம் செல்கிறான். எமனிடம் 3 வரங்களையும் பெறுகிறான். முதலாவது தன்னை உயிரோடு பெற்றவர்களிடம் திருப்பி அனுப்பவேண்டும், என்பது இரண்டாவது தன்னுடைய நற்செயல்கள் எதுவும பலம் இழக்காமல் இருக்கவேண்டும். 3-வதுதாக பெற்றதுதான் மிக முக்கியமான வரமாகும். மறு பிறப்பை வெல்லும். வழியை தனக்கு சொல்ல வேண்டும். என்பது ஆகும்.
கடோபனிஷதம் 2 பிரிவாக இருக்கிறது. ஒவ்வொரு பிரிவிலும் மூன்று உட்பிரிவுகள் இருக்கிறது. இதனுடைய பிரார்த்தனை மந்திரம் மிகவும் கவிதை நயத்துடன் அழகிய முறையில் அமைந்துள்ளது. இறைவன் நம் இருவரையும் காப்பாறாக. நமது இருவரிடமும் அவர் மனநிறைவு கொள்வாராக. நாம் சீறிய திட்டத்துடனும் சுறுசுறுப்புடனும் செயல்படுவோமாக. கல்வியின் மூலமும், அனுபவத்தின் மூலமும் ஆன்ம ஒளியில் பெறுவோமாக. நம்மிடையே எந்த பொழுதிலும் எந்த நிலையிலும் வெறுப்பும் பகையும் ஏற்படாது உழைப்போமாக என்று தொடங்கும் பிரார்த்தனை மந்திரம் இன்றைய நிலையிலும், எந்த அளவிற்கு தேவைப்படுகிறது என்பதை சிந்திக்க வேண்டும்.
ஒரு நீண்ட புல்லானது தளிராக இருந்து வளர்ந்து உலர்ந்து காய்ந்து போவது போல் ஒவ்வொரு மனிதனும், தனது வாழ்க்கை நிலையில் நிலையில்லாமல் அற்ப காலமே வாழ்ந்து மறைந்து போகிறான். பிறகு மீண்டும் பிறந்து அதன் பிறகும் இறந்து தொடர்ச்சியாக பிறவி தளைக்குள் சிக்கி தவிக்கிறான். இந்தக்கருத்தை எடுத்த உடனேயே கடோபனிஷதம் தூக்கிக் காட்டுகிறது. எப்படியென்றால் எல்லா உயிர்களும் தோன்றி வளர்ந்து முதிர்ச்சியடைந்து சிதைந்து மடிகின்றன. மனிதனின் நிலையும் அதுதான் சாஸ்வதமான வாழ்க்கையை பெறாவிட்டாலும் கூட தொடர்ந்து வாழ்வதை தவிர்க்க இயலாது. என்ற வாசகத்தால் மறுபிறவி சித்தாந்தம் வலியுறுத்தப்படுகிறது.
மேலும் வாழ்க்கையின் படித்தரத்தை அதாவது பரிணாம வளர்ச்சியை அழகிய முறையில் இந்த உபநிஷதம் வடிவமைத்து காட்டுகிறது. உங்கள் மூதாதையரை பொறுத்த வரை அவர்களது வாழ்க்கை எப்படி இருந்தது. என்பதை எண்ணிப்பாருங்கள் இப்போது இருக்கும் நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள் என்பதை அவர்கள் வாழ்க்கையோடு ஒப்பிட்டு பாருங்கள் மனிதன் தானியப்பயிர்களைபோல வளர்ந்து முதிர்ந்து உதிர்கிறான். தானியங்களை போலவே மீண்டும் முளைத்து எழுகிறான். இந்த வாசகம் மனிதனின் வாழ்க்கை மரணத்தால் கூட முடிவடையாமல் மீண்டும் மீண்டும் ஒரு சக்கரத்தை போல சுழன்று கொண்டிருப்பதை நமக்கு காட்டுகிறது.
இன்று விஞ்ஞானிகளும் சரி மெய்ஞானிகளும் சரி ஒரு விஷயத்தைப் பற்றி தொடர்ந்து வாதப்பிரதிவாதங்கள் செய்து வருகிறார்கள். அது என்னவென்றால் மரணத்துக்கு பிறகும் மனித வாழ்க்கை தொடர்கிறது என்றும் இல்லை இல்லை அத்தோடு முற்று பெற்று விடுகிறது என்றும் கருதுவதாகும். இதில் எது உண்மை என்பதை கடோபனிஷதம் மிக தெளிவாக நமக்கு சொல்கிறது. இந்த விஷயத்தில் தேவர்களுக்கு கூட இன்னும் சந்தேகம் இருந்து வருகிறது. மறுபிறப்பு கர்மாக்கள் என்பதை புரிந்து கொள்வது அத்தகைய கடுமையான விஷயமாகும். அந்த உண்மைகள் வெகு நுட்பமானது. அதை தொடர்ச்சியான மனப்பயிற்சியாலும் ஒருமைப்பாட்டாலும், உணர்ந்து கொள்ளலாமே தவிர வாதங்களால் அல்லது பௌதிக சாதனங்களால் நிறுபித்து விட இயலாது என்று மிக தெளிவாக அருதியிட்டு உபநிஷதம் கூறுகிறது.
நசிகேதன் எமதர்மனிடம் மிக முக்கியமான கேள்வியை வைக்கிறான். ஒரு மனிதன் நிலையான சுகத்தை அடைவது எப்படி? பெண் சுகத்தால் சாசுவதமான இன்பத்தை அடைந்து விடமுடியாது. அந்த சுகத்தை முதுமையானது தடுத்துவிடும்.
அதேபோல அதிகார பலமும் நிலையான இன்பத்தை தந்துவிட முடியாது. போட்டிகளும், யுத்தங்களும் பதவிகளை எப்போதுமே நிலையில்லாது செய்துவருகின்றன. பணத்தாலும் மனித மனம் நிறைவு கண்டுவிடுவது இல்லை. மரணத்தை ஒவ்வொரு நிமிடமும் எதிர்பார்த்து அச்சத்துடன் காத்துக்கொண்டிருக்கும், மனதை பதவியும், பெண்ணும் செல்வ வளமும் திருப்தி அளிக்க விட்டுவிடாது. ஆகவே நிலையான இன்பம் அழியாத வாழ்க்கை எது? அதை எனக்கு விளக்கமாக சொல் என்கிறான்.
இதற்கு தர்மத்தின் தலைவனான மரண தேவன் சரியான பதிலை தருகிறான். தகுதியானது என்பது வேறு சுகம் தருவது வேறு. இரண்டும் வெவ்வேறு கோணத்தில் பலன்களை தந்து மனிதனை பிணைத்து வைத்திருக்கிறது. இவ்விரண்டிற்கு உள்ளே உள்ள தகுதியானதை ஏற்றுக்கொள்பவனுக்கு நன்மையே விளைகிறது. ஆனால் சுகம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டவன் தன்னுடைய நோக்கில் தோல்வி அடைகிறான். அறிவாளிகளான சிலர் மட்டுமே சுகமானதை தவிர்த்து விட்டு தகுதியான பாதையை தேர்ந்தெடுத்து வெற்றி பெறுகிறார்கள். ஆனால் பலநூறு ஜனங்கள் தகுதியானது எது என்பதை அறியாமல் இருக்கிறார்கள். அதனால் அவர்களது வாழ்க்கை பாதை சிக்கல் மிகுந்ததாக இருக்கிறது. இதை மிக நுட்பமான முறையில் தான் தெரிந்து கொள்ள இயலும்.
அறிவும், அறியாமையும் வெவ்வேறு விதமாக விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. அவைகள் வெவ்வேறு எல்லைகளை கொண்டது. அறியாமையில் உள்ளபவர்கள் தங்களை உயர்ந்தவர்களாகவும், சகலத்தையும், கற்றுணர்ந்த அறிவாளிகளாகவும், எண்ணிக் கொள்கிறார்கள். குருடனால் வழி நடத்தப்படும் குருடனைப்போல் மூடர்கள் வளைவுகள் மிக்க பாதையில் நடந்து செல்கிறார்கள். கடைசியில் அவர்கள் ஒருவரையொருவர் மோதிக்கொள்வதை தவிர வேறு வழியை அறியாமல் இருக்கிறார்கள்.
குறுகிய மனம் படைத்த எதிலும் கவனம் இல்லாத தவறான வழியில் இழுத்து செல்லப்படுபவர்களுக்கு பூமியில் காணும் சுகங்கள் மட்டுமே நிரந்தரமானதாக தெரிகிறது. அவர்களுக்கு இன்னொரு உலகத்தை பற்றி எதுவும் தெரியாது. தாங்கள் மட்டுமே தங்களால் அறிந்தவைகள் மட்டுமே உண்மையானது, சத்தியமானது என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இப்படிபட்டவர்கள் மீண்டும் மீண்டும் என்னிடத்திலேயே வந்து பலமுறை பூமியில் ஜனனம் எடுத்து வாழ்ந்து மடிகிறார்கள்.
இறுதியான பேரின்பத்தை அடைய நினைப்பவர்கள் தற்காலிகமான சுகங்களில் கவனம் செலுத்தவது கிடையாது. எதை பலரால் கேட்க முடியவில்லையோ எதை கேட்டாலும் பலரால் அறிய முடியவில்லையோ அதை விரும்புவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். கேட்க முடியாத பொருள் என்றால் என்ன? என்பதை நாம் சற்று சிந்தித்தால் இந்த வாசகத்தின் பொருள் என்னவென்று நமக்கு நன்றாக தெரிந்துவிடும்.
இந்த உலகிலுள்ள உயிர்கள் எல்லாம் மனிதன் உட்பட எல்லா ஜீவனுமே உயிராற்றலால் தான் இயங்குகின்றன. அந்த உயிராற்றல் என்பது எது? அது நமது உடலில் எந்த பகுதியில் இருக்கிறது. தலையில் மூளை, மார்பில் இதயம், வயிற்றில் குடல் இருப்பது நமக்கு நன்றாக தெரியும். ஆனால் நம் உயிர் நமது உடம்பில் எதில் இருக்கிறது? எப்படி இருக்கிறது? உயிருக்கு நிறம் உண்டா பருமன் உண்டா அல்லது எதுவும் இல்லாத காற்றா? வெளிச்சமா? சப்தமா? என்று நாம் என்றேனும் சிந்தனை செய்து பார்த்து இருக்கின்றோமா?
விஞ்ஞானம் உயிரை துடிப்பு அதாவது சலனம் என்கிறது. மெய்ஞானம் உயிரை சப்தம் என்கிறது. அதாவது பிரபஞ்சத்தில் உள்ள ஒலி அலைகள் நமது சரீரத்திற்குள் உயிராக உறைந்து கிடக்கிறது என்று கூறுகிறது. அதனால் தான் உயிர்களின் தலைவனான இறைவனை நாத விந்து என்று அழைக்கிறார்கள். நாதம் தான் உயிர் அந்த நாத ஒலியை கேட்பது தான் அல்லது கேட்க முயற்சிப்பது தான் வாழ்க்கையின் அர்த்தம் என்று கடோபனிஷதம் தெளிவாக கூறுகிறது. கேட்காத ஒலியை கேட்டு புரிந்து கொள்வது தான் நிரந்தரமான இன்பத்தை அறிந்து கொள்வதற்கு அனுபவித்துக் கொள்வதற்கு வழி என்றும், இந்த உபநிஷதம் கூறுவது தான் இந்து மதத்தின் ஆதார கருத்தாகும்.
உயிரை அறிவது என்பது முதன்மையான கடவுளை காணூதக்கறிய பரம்பொருளை ஆத்மாவின் அடி ஆழத்தில் மறைந்து கிடப்பதை இதயக் குகையில் ஒளிவீசிக் கொண்டிருப்பதை மதி நுட்பத்துடன் கடின சிரத்தையுடன் தொடர்ச்சியாக முயற்சிப்பது ஒரே வழி. இந்த முயற்சிக்கான தகுதியை ஆன்ம ஒளி பெற்ற ஒரு குருவிடமிருந்து கேட்டறியப்பட வேண்டும். ஆனந்தம் நிறைந்ததும் நுட்பமானதுமாகிய ஆத்மாவை பிரித்து உணர்கிறவன் ஆனந்த ஊற்றை கண்டு அடைந்தவன் ஆகிறான்.
இத்தகைய ஆனந்த ஊற்றை கண்டு அடைவதற்கு என்ன வழி என்றால் பிரணவ மந்திரத்தை இடைவிடாது பற்றிக்கொள்வதே ஆகும். ஏனென்றால் ஓம் என்ற பிரணவ மந்திரமே இறைவனாகும். இதுவே பிரபஞ்சத்தின் கடைசி எல்லையாகும். இம்மந்திரத்தை அதன் நுட்பத்தை அதன் ரகசியத்தை அறிந்தவன் எல்லாவற்றையும், அறிந்தவனாகிறான். ஓம் என்ற பிரணவம் தான் மிக உயர்ந்த ஆதாரம் என்பதற்கு இதை விட வேறு ஆதாரங்களை தர இயலாது. மனிதனின் அல்லது ஜீவனின் நாபியில் உறைந்திருக்கும் ஓம் என்ற பிரணவமே அண்டவெளி எங்கும் பரந்து கிடக்கிறது.
நமது ஐம்புலன்களை விட பொருட்கள் வலிமை பெற்றது. பொருட்களை விட மனம் வலுவானது. மனதை விட புத்தி மதிப்புமிக்கது. புத்தியை விட ஆத்மா மகோன்னதமான உயர்வானது. எனவே ஆத்மாவை அறிவது தான் இறைவனை அறிதலாகும். இறைவனை அறிந்த பிறகு பிறப்பு என்பது இல்லை. ஆகவே பகுத்தறிவு படைத்த மனிதர்கள் புறப்பொருட்கள் மீது உள்ள பற்றுதலை விட்டு விட்டு அகப்பொருளான ஆண்டவனிடம் நாட்டம் கொள்வதே சிறந்ததாகும். கண்ணுக்கு தெரிகின்ற காட்சிகள் மட்டும் தான் நம்பக்கூடியது. என்று கருதுபவன் வாழ்க்கை பயணத்தை முழுமையாக முடிக்க முடியாமல் பாதியிலேயே நிறுத்தி மீண்டும் ஆரம்பத்திலிருந்து துவக்கக்கூடிய மதியற்றவனாக இருக்கிறான். எனவே உள்ளுக்குள் அதாவது நமக்குள் நமது ஆராய்சியை ஆளப்படுத்துவதே நம்மை மேம்படுத்திக் கொள்ளும் வழியாகும். அதை விடுத்து அற்ப காரியங்களில் மனதை செலுத்துவது மூடத்தனமாகும்.
இன்று பலர் மதவாதிகளால் சொல்லப்படுகின்ற கடவுள் என்ற கருத்து புலன் உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டதாக அதாவது கட்புலனாகாத விஷயமாக இருக்கிறது. அதனால் அது நம்பத்தகுந்தது அல்ல என்று வாதிடுவார்கள். அவர்களுக்கு சரியான பதிலை கடோபஷத்தம் தருகிறது.
இறைவனுடைய உருவம் கண்ணால் காணும் எல்லைகளுக்குள் அடங்குவது இல்லை. எல்லோராலும் அவரை சாதாரண கண்களால் காணமுடிவது கிடையாது. அவர் இதயத்தால் சிந்தனையால், மனதால் ஆத்மாவால் மட்டுமே அறியப்படுபவராக இருக்கிறார். அவரை அந்த நிலையில் அறிந்தவர்கள் பெருநிலையை அடைகிறார்கள்.
மன ஆற்றல்கள் எல்லாவற்றையும், ஒருமுகப்படுத்தி இறைவன் காண முயற்சிக்க வேண்டும். அதாவது நாலாதிசையிலும் சதா சர்வ காலமும் ஓடிக்கொண்டிருக்கின்ற நம் மனக்கதியை அடக்கி ஒரே வழியில் நேர்வழியில் ஓட்டப்பழக வேண்டும். அப்படி நாம் தொடர்ச்சியாக மனக்குதிரையை ஓட்டினால் கல்லும் முள்ளுமாக கரடுமுரடாக கிடக்கின்ற நமது இதயம் மென்மையானதாக தூயதாக மாறிவிடும்.
அப்படி மாறும் பொழுது கடவுள் காட்சி இயற்கையாக தோன்றும். இறைவனை நாம் நமது இதயத்தில் பரி பூரண அழகோடு கண்டுகளிக்கலாம். இப்படி கண்டுகளிக்கும் மனப்பயிற்சியின் உள்ளத்தை உள்ளுக்குள் இழுக்கும் முயற்சி என்று சொல்லலாம். இந்த முயற்சி தான் ஏகாந்த பெருவழியை நிரந்தரமாக தரிசனம் செய்ய வழி வகுக்கும். அதாவது கடவுள் என்ற கருத்தமைவு நம்முடைய மனம் சார்ந்த இயல்பினை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படுகிறது. அதனால் தான் இம்முயற்சிகள் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொருவிதமாக அமைகிறது.
பலரும் பலவழிகளை மேற்கொள்வதனால் தான் ஆத்ம பயணம் சிக்கலுடையதாகவும், குழப்பமுடையதாகவும், தெரிகிறது. இதில் எதை எடுத்துக் கொள்வது எதை விடுத்து செல்வது என்று பல சாதகர்கள் ஆரம்ப நிலையில் குழப்பமடைகிறார்கள். நன்கு ஆழ்ந்து சிந்தித்து பார்த்தால் அந்த வழிகள் எல்லாமே சரியானதாகவும், சத்தியமானதாகவும், தெரியும். அந்த வழியில் தான் நாம் செல்லவேண்டும் என்பதும் கிடையாது. நமக்கு நாமே ஒரு புதிய பாதையை ஏற்படுத்திக் கொள்ளலாம். அந்த பாதை நிச்சயமாக இறைதரிசனத்தை நமக்கு பெற்றுத்தருமே அல்லாது நம்மை நிர்கதியாக விட்டுவிடாது. எது பாதை என்பது முக்கியமல்ல. எப்படி நாம் உழைக்கிறோம் என்பது தான் முக்கியம்.
கடோபநிஷதம் முழுவதுமே இறப்பிற்கு பிறகு ஆத்மாவின் தகுதி பயணத்தை பற்றியும், மீண்டும் பிறவாத நிலை பற்றியும், விரிவாக பேசப்படுகிறது. அத்தோடு சாதாரண மனிதன் கூட இறைவனை அடைவதற்கு வழிவகை சொல்லப்படுகிறது. எனவே கடோபநிஷதம் ஒன்றை ஆழமாக பார்த்தாலே மற்றைய அனைத்து உபநிஷதங்களையும் தெளிவாக பார்த்தது போல் ஆகிவிடும்
அதனால் தான் இந்த ஒரு உபநிஷத்தைப் பற்றி சற்று விளக்கமாக சொன்னேன். முழுமையாக அதை அறிந்துகொள்ள விரும்புவர்கள் அந்த உபநிஷத்தை படிப்பது நல்லது. இந்த மதம் என்பது எத்தகைய அறிவு பூர்வனமானது என்பதை சுட்டிக்காட்டவே வேதங்களைப் பற்றியும் உபநிஷதங்களை பற்றியும் இங்கே ஓரளவு சொன்னேன். ஆனால் இத்தோடு இந்து மதத்தின் அறிவு ஆதாரங்கள் நின்றுவிடவில்லை.
இவைகளை அடிப்படையாக கொண்டு இன்னும் ஆழமாக பல்வேறு சமயப்பிரிவுகளாக நமது மதம் பரவிக்கிடக்கிறது. அவற்றையெல்லாம் நாம் இனி வரும் அத்யாயங்களில் தொடர்ச்சியாக சிந்தித்தாலே நமது சமய பண்பாடு எவ்வளவு அறிவு பூர்வமானது அனுபவ பூர்வமானது என்பதை தெரிந்து கொள்ளலாம்.