அதர்வண வேதம் கடைசி வேதமாக கருதப்படுகிறது ஏறக்குறைய யஜூர், சாம வேதங்கள் உருவான காலத்திலேயே அதர்வணம் உருவாகி விட்டது என்றாலும் அது அப்போது வேதமாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை பகவத் கீதையில் கூட முதல் மூன்று வேதங்களை பற்றி விபரங்கள் தெரிவிக்கப்படுகிறது தவிர அதர்வணத்தை பற்றி பெரியதாக எதுவும் கூறப்படவில்லை இதனால் மகாபாரத காலத்திற்கு பின்னரே அதர்வணம் வேதம் என்ற அந்தஸ்தை பெற்றிருக்க வேண்டும் என்று கருத முடிகிறது.
ரீக் வேதம் தெய்வங்களை அறிமுகப்படுத்தி அவர்களின் பாதுகாப்பை எப்படி பெறலாம் என்று கூறுகிறது. யஜூர் வேதம் தெய்வங்களுக்கான சடங்கு முறைகளை விரிவாகக் கூறுகிறது. சாம வேதம் சோமபானம் முதலிய பொருட்களை உருவாக்குதலை பற்றி கூறுகிறது தெய்வத்தால் மட்டுமே மனிதர்கள் கலப்பில்லாத நன்மைகளை பெறலாம் என்பது இந்த வேதங்களின் பொதுவான கொள்கை ஆகும். தெய்வங்களை அடைவதற்கு மனிதர்கள் மனம் என்னும் படகை கொண்டுதான் பயனிக்க வேண்டுமென்று இந்த வேதங்களின் கருத்துகளை ஒட்டி உபநிஷதங்களும் பறைசாற்றுகின்றன.
அதர்வண வேத பாடல்களும் யாக தேவதைகளை போற்றுகின்றன. உதவிகளை கேட்கின்றன அதே நேரம் தெய்வங்கள் தரும் உதவி என்பது மனித உடல்களின் அவஸ்தைகளை தவிர்ப்பதாக இருக்க வேண்டுமே தவிர கஷ்டங்களை ஏற்படுத்துவதாக இருக்க கூடாது என்று தெளிவாக வலியுறுத்துகிறது. ஆத்மாவானது செயல்பட வேண்டுமென்றால் சரீரம் என்பது அவசியம் தேவை ஆத்மாவை தாங்கி நிற்கும் உடல் உயிர் இல்லாவிட்டால் இயங்காது உடலின் இயக்கம் நின்று விட்டால் அதாவது உடலும் உயிரும் தனித்தனி ஆகிவிட்டால் ஆத்மாவால் எதையும் செய்ய முடியாமல் போய்விடும் எனவே உடம்பு என்பது அவசியமான பொருள் என ரிஷிகள் கருதினர். எனவே அவர்கள் உடம்பை நோய்களிடமிருந்தும் மற்ற அபாயங்களிலிருந்தும் பாதுகாத்து பத்திரப்படுத்த வேண்டும் என்கின்ற கருத்துகளை முதன்மையாக வைத்து பாடல்களை இயற்றினர். அத்தகைய பாடல்களின் தொகுப்பு தான் அதர்வண வேதமாகும். இந்த வேதத்தில் 5987 பாடல்கள் உள்ளன. இந்த பாடல்களில் நோய்களிலிருந்து மனிதனை பாதுகாக்கும் படி வேண்டுகின்ற பாடல்களே மிகுதியாக உள்ளது.
ஆரோக்கியத்தை விரும்பும் கோரிக்கைகள் அதிகமாக பல பாடல்களில் வெளிப்பட்டாலும் கூட வேறுசில பாடல்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைக்கிறது திருமணம் ஆகாத குமரி பெண்களுக்கு திருமணம் வேண்டியும் வயதான பிறகு கூட திருமணம் முடியாமல் தனிமையில் தள்ளாடும் ஆண்களுக்கு தக்க துணை வேண்டியும் குழந்தைகள் இல்லாதவர்கள் மழலைச் செல்வங்களை பெற்று மகிழ்வுற வேண்டியும் கடவுளிடம் முறையிடும் பாடல்கள் இருக்கின்றன.
ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் மலட்டுத் தன்மையை போக்கவும் கருச்சிதைவுகளை தடுத்து நிறுத்தவும் கோரிக்கை வைக்கும் பாடல்களும் உள்ளன. இது மட்டுமல்ல பொறாமைகளை பொசுக்கும் படி சச்சரவுகளை நீக்கும்படி பேதங்களை மேலெழும்பாமல் அமுக்கும் படியும் கோபத்தை குறைக்கும் படியும் வீடுகட்டிக் கொள்ள உதவி செய்யும் படியும் விதை விதைக்கும் போதும் பயிர்களில் பூச்சிக்கள் பரவும் போதும் விளைச்சல் வீட்டுக்கு வந்து சேரும்போதும் கடவுளை பக்கத் துணையாக இருந்து பாதுகாத்து தரும்படி கேட்கின்ற பாடல்களும் அதர்வண வேதத்தில் உள்ளன.
ஆயுதங்களைக் கொண்டும் ஆள் பலத்தைக் கொண்டும் வெற்றி பெற முடியாத எதிரிகளை மந்திரங்கள் கொண்டு செயலிழக்கம் செய்ய வைக்கும் வகைகளும் மேலும் பல மாந்திரீக ரகசிய வித்தைகளும் அதர்வண வேதத்தில் ஆழமாக விளக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த வேதத்தை மக்களின் வேதம் என்று பல ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். காரணம் மக்களுக்கு ஏற்படும் நோய் நொடியிலிருந்தும் அரசுகளுக்கு ஏற்படும் ஆபத்துக்களிடமிருந்தும் ஒவ்வொரு மனிதனும் தனது சொந்த பிரச்சனைகளிலிருந்தும் வெளிவருவதற்கான அனைத்து விதமான ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் அதர்வண வேதம் காட்டுவதனால் அப்படி அழைக்கப்படுகிறது.
உதாரணமாக ஜூரத்தினால் துன்பப்படும் மனிதனை காப்பாற்றும் படி அக்னி தேவனை துதிக்கும் ஒரு பாடல் அதர்வண வேதத்தில் இருக்கிறது. இந்த பாடலை முறையான சந்த லயத்துடன் நோயாளியின் முன்பு பாடினால் எத்தகைய ஜூரமாக இருந்தாலும் ஒரு மணி நேரத்தில் குறைந்து விடுகிறது மேலும் குழந்தை பேரு தருகின்ற மந்திரத்தால் புத்திரகாமேஷ்டி யாகம் செய்தால் தசரதனுக்கு மட்டுமல்ல சாதாரண தச்சுத் தொழிலாளிக்கும் கூட குழந்தை பிறக்கிறது. இதை நாம் வேதங்களை புகழ்ந்து பேச வேண்டும் என்பதற்காக கூறவில்லை. எனது சொந்த அனுபவத்தாலும் என் கண்முன்னே மற்றவர்கள் பெற்ற அனுபவத்தாலும் கூறுகிறேன். காய்ச்சலை விரட்டும் அதர்வண வேத பாடலை தமிழ் வடிவில் பார்ப்போம்.
அக்னி பகவானே ஜூரம் என்ற துர்தேவதையை இங்கே இருந்து விரட்டி அடி. சோமனையும் வருணனையும் உன்னுடன் சேர்த்துக்கொள். அவர்கள் ஆற்றல் மிகுந்தவர்கள் சக்தி தரும் சோமனும் குளிர்ச்சித் தரும் வருணனும் அக்னியாகிய நீயும் திரி சூலம் போல் இணைந்தால் இந்த நோய் தங்கி கொடுமைபடுத்தும் தேவதை புற்களின் மீதும் நெருப்பு குண்டங்கள் மீதும் அமர்ந்திருக்கும் தெய்வங்களே இந்த ஜூரம் என்ற தீயசக்தியை வெகுதூரம் துரத்துங்கள்.
இந்த தீய சக்தி மனிதனை பிடித்து விட்டால் அவனை அது எப்படியெல்லாம் ஆட்டிவைக்கிறது. நெருப்பு குண்டமாக அவனது உடலை மாற்றி சக்திகள் அனைத்தையும் உறிஞ்சி விடுகிறது. பழங்களின் சாரை உறிஞ்சி விட்டு சக்கைகளை தூர எறிவது போல் மனித உடல்களையும் ஜூரம் செயல்பட முடியாதவனாக மனிதன் மாறிவிடுகிறான். முப்பெரும் தெய்வங்களே இந்த தீயவனின் கொட்டத்தை ஒடுக்குங்கள். அவனை கீழே விழ்த்துங்கள். மீண்டும் அவன் எழுந்து வராத வண்ணம் குழிதோன்டி புதைத்து விடுங்கள்.
இதோ அந்த தீயவன் வந்துவிட்டான். உடம்பில் குடியேறிவிட்டான். அதற்கான அடையாளங்கள் உடல் முழுவதும் பூரான்கள் போல் நெளிகிறது. மண்ணில் புதைக்கப்பட்ட விதைகளிலிருந்து சிவப்பு நிற முளைகள் வெளிவருவது போல் உடல்முழுவதும் செம்புள்ளிகள் வரிசையாக பரவி மனிதனை வாட்டுகிறது. உடல்களை வாட்ட அந்த தீயவன் பிரயோகம் செய்யும் ஆயுதங்கள் தான் இந்த சிவப்பு புள்ளிகளோ தெய்வங்களே விரைந்து வாருங்கள் அவன் ஆயுதத்தின் முனைகளை ஒடித்து போடுங்கள் ஆயுதம் வலுவிழந்து விட்டால் ஒடி விடுவான் அல்லவா. அவனைதப்பி செல்ல விடாதீர்கள். மறைந்திருந்து மறுபடியும் தாக்குவான் எனவே அவனை புதைத்துவிடுங்கள்
இவன் எப்போதும் தனி ஆளாக வருவது இல்லை. இருமல் என்ற சகோதரனையும், எரிச்சல் என்ற தங்கையையும், நடுக்கம் என்ற மாமனையும் இன்னும் வித விதமான உறவு முறைகளையும் அழைத்து வந்து கும்பலாக தாக்குவான் அவர்கள் ஒவ்வொருவன் உருவங்களும் கண்டுபிடிக்க முடியாதவாறு மாயங்கள் நிரம்பியதாகவும் மர்மங்களின் வடிவங்களாகவும் இருக்கும் மரண தேவனே வந்து வைத்தியம் செய்தால் இவர்களின் கொட்டம் அடங்குமோ என்னவோ தெரியவில்லை. சக்தி மிகுந்த அக்னி தேவதையே கரம் கூப்பி மண்டியிட்டு வேண்டுகிறோம். இந்த தீயவர்களை விரட்டு இனிமேலும் தலைகாட்டாதவாறு அடக்கு.
மேலே சொன்ன பாடலை மீண்டும் ஒருமுறை படித்து பாருங்கள் ஜூரத்தை பற்றி மட்டுமல்ல அம்மை நோயின் அறிகுறியை பற்றியும் விளக்கப்பட்டிருப்பதை காண்பீர்கள். மேலும் அந்த தீயவனை புதைத்து விடுங்கள் என்று தேவதைகளை வேண்டுவதை வைத்து பார்க்கும் பொழுது நோயை புதைக்க தெய்வங்களை வேண்டிவிட்டு நோய்பாதித்து இறந்தவர்களை தகனம் செய்யாமல் புதைத்து விடும் பழக்கமும் அக்காலத்தில் இருந்திருப்பதை உணரலாம். நோயை விரட்ட பிரார்த்தனை செய்வது மட்டுமல்ல சிகிச்சை முறைகளையும் மேற்கொண்டு இருப்பதற்கான ஆதாரங்கள் தெரிகிறது.
பொதுவாக அதிகரித்துவிட்ட உடல் சூட்டை வெளியேற்றுவதற்கு ஜூரமும் வெளியேற்ற கால தாமதமாகியே அல்லது கிருமிகளின் தாக்குதலில் முடியாமல் போனதாலும் அம்மை நோய் வருவது உண்டு. இந்த நோய்களுக்கு இன்றைய நவீன உலகில் பல மருந்துகள் இருப்பது போலவே வேதகாலத்திலும் குஷ்த்தா என்ற மூலிகைமருந்து கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்திருக்கிறது மலை பகுதிகளில் மட்டுமே கிடைக்கும் அந்த மூலிகையை தெய்வமாகவும் அம்மக்கள் கருதி இருக்கிறார்கள். அதை விளக்கும் ஒரு பாடலில் சில பகுதிகளை பார்ப்போம்.
குஷ்த்தாவே நீ ஜீரத்தை அழிக்கும் தெய்வம் என்னிடமிருந்து அந்த தீயவனை விரட்டி அடித்தது நீ தான். உன்னை நான் வணங்குகிறேன். உலக தாவரவர்க்கங்களில் தலைவனான உன்னை மலைகளிள் மீதும் நான் கண்டேன். கழுகுகள் கூடுகட்டும் எட்டாத உயரத்தில் நீ இருக்கிறாய். நீ எங்களை தாக்கும் ஜூரம் என்ற துர்தேவதையின் வருகையை அறிந்தாலே எந்த உயரத்தில் இருந்தாலும் எங்களுக்காக இறங்கி வருகிறாள். இமவானின் மகளான கங்கையை விடவும் வேகமாக நீ எங்களை நோக்கி வருகிறாய். நீயே எங்களின் கருவூலம் உனது பெருமையை ஊரெல்லாம் எடுத்துறைப்போம்.
அரசமரம் என்பது தேவதைகள் குடியிருக்கும் புனிதபீடம் அதன் நிழலில் தான் தெய்வங்கள் வாழ்கிறார்கள். அந்த மரம் சொற்கத்திலிருந்து பூமிக்கு வந்ததாகும். தேவர்கள் அதன் நிழலிலிருந்தான் அமிர்தத்தை தயாரிக்கின்றார்கள். இந்த மரத்திற்கு குஷ்தா தனது சக்தியை வழங்கி இருக்கிறது. இதன் பட்டைகளும் வேர்களும் அமிர்தத்திற்கு ஒப்பானது சோமபானம் தயாரிப்பதை போல் இதை தயாரித்து குடித்து ஜூரம் என்னும் விரோதியை ஓட ஓட விரட்டுங்கள்.
குஷ்தா என்ற அமிர்தத்தை மலைகளின் மீதும் தேவர்கள் எப்படி அனுப்புகிறார்கள். தலை நகரத்திலிருந்து அரசனானவன் எத்தகைய ராஜ மரியாதையுடன் எல்லை புறத்திற்கு செல்வானோ அதே போலவே குஷ்தாவும் சொர்கத்திலிருந்து மலை முகடுகளுக்கு வருகிறாள். அமிர்தமான அவள் வரும்பாதை தங்கத்தால் ஆனது. அது எப்போதும் ஒளிமயமாகவே இருக்கும் தங்கரதத்தில் அவள் வருவாள். அவள் தேரை இழுக்கும் குதிரைகள் தங்க நிறமானது. அவைகளும் வெளிச்சத்தை உமிழ்ந்து கொண்டே இருக்கும் உயர்ந்தவர்களால் தயாரிக்கப்பட்டு உயர்ந்த வாகனத்தால் குஷ்தா என்ற அமிர்த தேவதை நம்மையும் உயர்த்துவாள் இவள் நமது அருகாமையில் வந்துவிட்டாலே போதும் நம்மை படுக்க வைக்கும் புரள வைக்கும் இம்சை செய்யும் ஜூர அசுரன் பயந்தே ஒடிவிடுவான். எனவே குஷ்கா தேவதையை துதிப்போம்.
ஜூரம் அம்மை நோய் போலவே தலைவலி இருமல், மஞ்சள் காமாலை போன்ற நோய்களையும் குணப்படுத்த கோரும் பாடல்களும் அதர்வண வேதத்தில் இருக்கிறது. இந்த நோய்கள் மின்னல்களால் ஏற்படுவதாக வேதகால மக்கள் நம்பினர். அதற்கு காரணம் மழையில் நனைந்து நோய் வந்தாலும் கூட அதற்கான குற்றத்தை தானியங்களை விளைவிக்க வரும் மழையின் மீது சுமத்த வேதகால மக்கள் விரும்ப வில்லை வானை கிழித்து கண்ணை பறிக்கும் மின்னல் மீது சுமத்தினால் நன்றி கொன்ற தன்மையிலிருந்து தப்பித்து விடலாம் என்று நம்பினார்கள். மின்னலால்தான் ஜூரம் நோய் வருகிறது என்ற நம்பிக்கையில் எழுந்த பாடலை பார்ப்போம்.
மேகங்களின் கருப்பையில் இருந்து சிவப்புவண்ண எறுது ஒன்று வெளிவருகிறது. காற்றும் மழையும் இடியும் அதன் பிரசவத்தை கவனித்துக் கொள்கின்றன. அப்படி பிறக்கும் மின்னல் என்னும் எறுது நம்மீது பாயாமல் நேராக போகட்டும் காரணம் அவன் அடிக்கடி வராவிட்டாலும் அத்திமரப்பூபோல் தாக்குதலுக்கு ஒரு முறை ஆளானாலே போதும் நாம் சின்னாபின்னமாகி விடுவோம்.
குளிர் நோய்களின் அன்னை மின்னலே ஆகும். இவனால் தொடப்பட்டவர்கள் நிம்மதியை இழந்து விடுவார்கள். நம்மை இவன் ஒடுக்குகிறான், வதைக்கிறான், நடுநடுங்கசெய்கிறான் இவன் இறங்குவதற்கான இடம் மலைகளும் வெட்ட வெளிகளும் தான் எங்கள் வீடுகள் அல்ல அதோ விண்ணை நோக்கி மரங்கள் வளர்ந்து நிற்கின்றன. பாம்புகளைப் போல் மலைகள் படுத்து கிடக்கின்றன. வெட்டவெளி பிரதேசமோ மடிவிரித்த அன்னை போல் மலர்ந்து கிடக்கிறது. நீ அவர்களை தாக்கு அவர்கள் பலவான்கள் பதிலுக்கு அவர்கள் உன்னை தாக்குவார்கள். அல்லது உனது தாக்குதலையாவது தாங்கி கொள்வார்கள்.
பலசாலிகளை விட்டுவிட்டு பலஹீனர்களை தாக்குவது வீரனுக்கு அழகல்ல சண்டை போட தகுந்த மல்லர்கள் இருக்கும் போது குழந்தைகளிடம் மல்லுக்கு நிற்பது பாராட்டக் கூடிய செயலாகாது அதனால் எங்களை விட்டு விடு நாங்கள் இன்னும் கொஞ்ச காலம் வாழ விரும்புகிறோம் அதற்குள் எங்களை விறகுகளின் மேடைகளில் படுக்க வைத்துவிடாதே.
நாங்கள் இந்த மண்ணில் நெடுங்காலம் வாழு ஆசைபடுகிறோம். நூறு கோடைகாலத்தையும் நூறு குளிர் காலத்தையும் பார்க்க விரும்புகிறோம். இந்திரனும், அக்னியும், பிரகஸ்பதியும் இதற்கான வரத்தை தரசித்தமாக இருக்கிறார்கள். மரண தேவன் கரம் நீட்டி அழைக்கும் பொழுதெல்லாம் எங்களை காப்பாற்ற தேவாதி தேவர்கள் தயாராக இருக்கிறார்கள். நல்ல பழங்கள் கனிந்து தொங்கும் போது அதை விட்டுவிட்டு பச்சை காய்களை கடித்து துப்பும் குருங்கை போன்று எங்களை குதறி விடாதே மற்ற தேவர்கள் எங்கள் மீது கருணையை பொழியும் பொழுது நீ மட்டும் நெருப்பை உமிழ்வது நீதியாகாது.
வாயு தேவனே நீ அண்ட சராசரங்களில் உணர்ந்து கொள்ள முடியாத எத்தனையோ இடங்களில் தங்கி இருக்கிறாய். இந்த பூமியும் நீ வாழுகின்ற இடமாகும் அது மட்டுமல்ல எங்களது உடலும் நீ வாசம் செய்யும் பகுதியே ஆகும். நீ உள்ளே போகிறாய். வெளியே வருகிறாய் நாங்கள் தூங்கும் போதும் மயங்கும் போதும் கூட நாங்கள் அறியாமையிலேயே நீ இந்த செயலை செய்துகொண்டிருக்கிறாய் தயவு செய்து இத்தகைய வேலையை நிறுத்தாமல் தொடர்ச்சியாக எங்களிடத்தில் செய் உனது பயணத்தை எங்களிடம் இருந்து நீ துண்டித்துக் கொண்டால் மரணத்தில் வலையில் நாங்கள் விழுந்து விடுவோம். யம ராஜனை வெல்லும் தகுதி உனக்குதான் இருக்கிறது. கரங்களை கூப்பி சிரங்களை தாழ்த்தி உன்னை வணங்குகிறோம். நமது உறவு வெகு நாள் நீடிக்க வேண்டும்.
மனிதனே நீ மயங்காதே உனது நினைவுகளை தவறவிடாதே ஆயிரம் கயிறுகள் விண்ணை நோக்கி உன்னை இழுத்தாலும் மண்ணில் இருக்க தைரியத்துடன் போராடு ஆத்மாவை உதறித்தள்ள விரும்பாதே யம தூதர்கள் உன்னை அழைக்கலாம் வண்ண மயமான சொர்க்கம் உன் கண்ணில் தெரியலாம் அதனால் தூதர்கள் பின்னால் செல்ல நினைக்காதே இந்த மண்தான் உனது வீடு இதை மறக்காதே மருந்துகளை ஏற்றுக் கொள்ள தயங்காதே இதை ஏற்றுக் கொள்ள உன்னை பயம் தடுக்கிறதா யமனை விரட்டும் போர்வீரர்கள் உன்தாயும் தகப்பனும் சகோதரியும், சகோதரனும் மருந்துகளே ஆகும்.
நோய்கள் உன்னை வதைக்கும் விதத்தை பார் எதற்கும் உதவாவதனாக அவைகள் உன்னை மாற்றுகிறது. பாறைபோல் உன்மேல் ஏறி அமாந்து கொண்டு அழுத்துகிறது. ஆற்றில் துவைத்த துணியை ஈரம்போக பிழிவதைபோல் உன் சரீரத்தையும் பிழிந்தெடுக்கின்றனர். நோய் என்னும் கொடிய மிருகத்தை கொன்று வீழ்த்தும் ஆயுதம்தான் மருந்துகள் இந்த மருந்து உனது உடலுடன் கலந்து விட்டால் நோய்கள் வந்தவழியே இந்திரனைக் கண்டு அசுரப்படைகள் போல் ஒடி ஒளிந்து விடும்.
இன்னும் பல நோய்களை பற்றியும் அவைகளை விளக்குவதை பற்றியும் ஏராளமான பாடல்களில் விவரித்து கூறப்பட்டுள்ளது. அவைகளெல்லாம் ஏறக்குறைய இப்போது கூறப்பட்ட பாடல்களின் சாயலிலே இருப்பதனாலும் அதை பயன்படுத்தும் முறைகளை பற்றி நாம் இப்போது பேசப் போவதில்லை என்பதாலும் வேறு வகையான பாடல்களை சிந்திப்போம் பெண்கள் தக்க பருவம் வந்துவிட்டால் அவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து விடுவது நமது மரபாகும். பெண்களின் திருமணம் என்பது சமுதாய அந்தஸ்டோடும் பொருளாதார நோக்கத்தோடும் இணைக்கப் பட்டிருப்பதால் மற்ற நாடுகளை விட நமது நாட்டின் திருமணத்திற்கு அதிகமுக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. குறித்த காலத்தில் குழந்தைகளுக்கு திருமணம் நடைபெறாவிட்டால் பெற்றோர்கள் அதை பெரும் பாரமாகவும் கவலையாகவும் கருதுகிறார்கள். அதனால் திருமணம் நடைபெற வேண்டி தெய்வீக சடங்குகள் பல செய்கிறார்கள் இந்த வழக்கம் இன்று புதிதாக தோன்றியது அல்ல வேதகாலத்திலும் இருந்திருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு சடங்கில் ஒதப்பட்ட பாடலை இப்போது பார்ப்போம்.
அக்னியே இந்த இளம்பெண்ணுக்கு எல்லா விதத்திலும் பொருத்தம் உள்ள கணவனை கண்டுபிடித்து கொடுப்பாயாக அவன் இவளது இதயத்தை மகிழ்ச்சியால் நிரப்பட்டும். அவன் இவளது வாழ்வில் அதிஷ்ட பொக்கிஷமாக அமையிட்டும் திருமணமான பிறகு அவனால் இவளுக்கு களிப்பு ஏற்படட்டும். திருவிழா காலங்களில் இருவரும் இனிமையை அனுபவிக்கட்டும். இந்த திருமணம் சோமனின் அங்கிகாரத்தை பெற்றதாகட்டும். பிரம்மனும் இதற்கு இணக்கம் தெரிவிக்கட்டும் ஆயமான் என்னும் தெய்வம் திருமணத்தை முடித்து வைக்கட்டும். தாதர் என்னும் கடவுளும் தயங்காமல் ஆசிர்வாதம் செய்யட்டும். எல்லாத் தெய்வங்களும் இணைந்து தேடி கொடுத்த சௌந்தர்யம் நிரம்பிய வல்லமை பொருந்திய கணவனால் மகிழ்ச்சியை இவள் முழுமையாக அனுபவிக்கட்டும். அந்த மகிழ்ச்சி நெடுநாள் தொடரட்டும்.
இந்த பெண்ணுக்கு விரைவிலேயே கணவன் வருவான் அது உறுதி ஏனென்றால் இவள் அழகும். அறிவும் அடக்கமும் நிறைந்தவள். இவளுக்கு அழகை கொடுத்த சோமன் கணவன் வராமலா தடுத்து விடுவான் பெண்ணே உனது கணவனுக்கு நீ ராணியாக இரு அவன் உன்னை நெருங்கும் போது இனிமையான ஒளி உன்னிடமிருந்து பிரகாசிக்கட்டும். அவன் குழந்தைகளை வம்சம் தழைக்க சுமந்து கொடு செல்வத்தின் அதிபதியான இந்திரனே இவள் எத்தனை நாளைக்கு தனிமையில் இருப்பாள். சிதறிகிடக்கும் மாமிசத்துண்டுகளை கழுகுகள் கொத்துவது போல் தனிமையில் இருக்கும் இவளை மற்றவர்கள் கண்கள் கொத்தாதா. அதனால் இவளுக்குரியவனை ஆணையிட்டு அழைத்து வா உனது ஆணைக்கு கீழ் படியாத யாரையும் பூமியில் உண்டா இவளை மணக்க இருக்கும் இளைஞனின் மனதை இவளோடு இணைத்துவிடு.
திருமணம் முடிவதற்கு எத்தகைய பிரயத்தனங்களை வேதகால மக்கள் செய்தார்களோ அதே அளவிற்கு கடுமையான முயற்சிகளை ஆண் குழந்தைகளை பெறுவதற்காகவும் செய்தனர். ஏனென்றால் ஆண்களின் பலம்தான் அவர்கள் சமூகத்தை பாதுகாத்து பகைவர்களிடமிருந்தும், கொடிய மிருகங்களிடமிருந்தும் ஆபத்து வராமல் தடுக்க முடியும் என்று நம்பினர். அந்த காலத்தில் பெண்களும் இந்த காரியத்தில் ஈடுபட்டிருந்தார்கள் என்றாலும் கூட ஆண்கள் தான் மிக முக்கியமாக இப்பணிகளை ஏற்றிருந்தனர். பகைவர்களோடும். மிருகங்களோடும் சண்டையிடுகின்றபோது ஆண் மக்கள் பல நேரங்களில் இறந்து விடுவதும் உண்டு அந்த காலி இடத்தை நிரப்புவதற்காக அடுத்தடுத்து ஆண்கள் பிறந்தால்தான் படைமாட்சி என்பது சிறப்புடன் இருக்கும் அதற்காக ஆண் குழந்தைகள் அதிகமாக வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். அதனடிப்படையில் தேவதைகளிடம் வேண்டுதலையும் வைத்தனர். அந்த வேண்டுதல் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.
இவளது கர்ப்பபையில் ஒரு ஆண் சிசு உருவாகட்டும். அதற்காண வித்து வில்லிலிருந்து பாயும் அம்பைபோல் இவள் கருவளைக்கு விரையட்டும் பத்து மாதங்கள் நிறைவடைந்த பிறகு வீரத்திருமகனாக இந்த பூமியில் ஜனனம் எடுக்கட்டும் பெண்ணே உனது குழந்தைக்கு பால் கொடுக்கின்ற பொழுது உன் முலைக்காம்புகள் பசுவின் மடிக்காம்புகளாக மாறட்டும். காளை போல் உனது மகன் வீரமுடன் வளரட்டும். சக்தி மிகுந்த தாவரங்களிலுள்ள மூலிகைகளை நீ அருந்து அந்த மூலிகைகளின் தகப்பன் மழை மேகங்கள் உலா வருகின்ற ஆகாயமாகும். தாயோ உள்ளதை எல்லாம் வாரிக் கொடுக்கும் பூமி ஆகும். பூமிக்கும் ஆகாயத்திற்கும் பிறந்த மூலிகையை நீ அருந்துவதினால் உனது ஆண் மகவு நோய்களை எதிர்த்தும் வல்லமையோடு கூடியும் பிறப்பான்.
கரு உருவாக மட்டுமல்ல உருவான கரு சிதையாமல் முழுமையான குழந்தையாக பிறப்பதற்கான மந்திரப்பாடலும் அதர்வண வேதத்தில் இருக்கிறது. இந்த மண் எத்தனை வகையான மரவிதைகளை தனக்குள் ஏற்றுக் கொண்டு செழுமையாக வளர விடுகிறது. அதே போல இவளது கருப்பையும் ஒரு குழந்தையை உறுதியாக ஏற்கட்டும். இந்த மண்ணில் எத்தனை வகையான பறவைகளும், விலங்களும் வளருகின்றன. அதே போன்று இவளது மணி வயிற்றிலும் மழலைச் செல்வம் கருகாமல் வளருட்டும் என்ற பாடல் வரிகள் கருச்சிதைவை தடுக்க கோரி நிற்கின்றது.
அடுத்ததாக அமானுஷ்யமான விஷயங்களை பற்றி கூறும் வேத பாடல்களை சிந்திப்போம் அதர்வண வேதத்தில் வசியம் முதலான அஷ்டகர்மங்கள் தெளிவாக கூறுப்பட்டுள்ளது இந்த அஷ்டகர்மங்களை தந்ர சாஸ்திரபடி பிரயோகம் செய்து மனிதன், விலங்குகள் இயற்கை சக்திகள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் வழி வகைகள் கூறப்பட்டிருக்கிறது. இந்த வழிமுறைகள் அனைத்தையும் கடும் முயற்சியுடனும் தூய பிரம்மச்சரிய விரதத்துடனும் பழக்கப் படுத்திக் கொண்டான் சாத்தியமே இல்லாதது என்று ஒதுக்க கூடிய அனைத்தையும் சாத்தியப்படுத்திக் காட்டலாம் என்பதை எனது சொந்த அனுபவத்தில் நான் நன்கு அறிந்திருக்கிறேன். இருந்தாலும் அந்த வழி முறைகளை பற்றிப் பேசுவது இந்த நூலின் நோக்கம் அல்ல என்பதனால் அதர்வண வேதத்திலுள்ள பேய்களை விரட்டும் மந்திரப் பாடல் ஒன்றை தமிழ்படுத்தி தருகிறேன். இதை படித்தாலே அதர்வண வேதத்திலுள்ள மந்திர சாஸ்த்திரத்தின் நுட்பத்தை ஒரளவு தெரிந்து கொள்ளலாம்.
ஏவலின் மூலமாக ஒரு பெண்ணிடத்தில் தீய சக்தி குடி புகுந்துவிட்டது அவள் மணமானவள் அதனால் அவளுக்கு ஏற்பட்ட துன்பத்தைக் கண்டு அந்த கவலையை போக்கி அந்த பெண்ணை சகஜ நிலைக்கு கொண்டு வர ஒரு ரிஷி முயற்சிக்கிறார். அப்போது அவர் பிரயோகம் செய்த மந்திரத்தின் தமிழ் வடிவம் இதோ உங்கள் முன்னால் தருகிறேன்.
இவளிடமிருந்து தீய சக்தியே நீ ஒடிவிடு உன்னால் இவள் படும் பாடுகள் போதும் இவள் கைகள் குணமாகட்டும். அங்கே அழகு திரும்பட்டும் இவளை விட்டு நீ ஒடிவிட்டால் பழைய நிலைக்கு இவள் வந்துவிடுவள் திருமணம் முடிந்து கணவனை சந்தித்த நானத்துடன் கால் எடுத்து வைக்கும் போது எப்படி இவள் அழகு பொருந்தியவளாக இருந்தாளோ இவள் மேனியில் அழகு தேவதை எத்தகைய வர்ணஜாலங்களை நிரப்பி இருந்தாளோ அதே வடிவத்தை இவள் மீண்டும் பெறுவாள்
குடி வெறியில் ஆட்டம் போடும் குரங்கை போன்று குதித்து கும்மாளம் அடிக்கும் தீய சக்தியே எனது கையிலுள்ள மந்திர தண்டத்தை நன்றாக பார் இதனால் உன்னை தண்டிக்கும் முன்னால் ஒடி விடு நீ போய் விட்டால் இவளது குடும்பம் அமைதி அடையும் உன்னை ஏவி விட்டது யார் அவன் சூத்திரனா அரசகுமாரனா, அந்தன புரோகிதனா, அழகுடைய வைசீக பெண்ணா அது யாராக இருந்தாலும் அவர்களிடமே நீ திரும்பி விடு மறுத்தால் கணவனால் கைவிடப்பட்ட பெண்ணை போல் நீ கதறப்போகிறாய் அடிப்பட்ட கழுதையை போல் துடிக்கப்போகிறாய் எனது மந்திரங்கள் சூரியனிலிருந்து புறப்பட்ட கதிர்கைள போல் உன்னை சுட்டுவிடப் போகிறது.
நீ நெருப்பில் விழுந்த பஞ்சு போல சாம்பலாகப் போகிறாய் இனி உன் வேலை நடக்காது உன்னை கால்களையும் கைகளையும் இணைத்து கட்டப்போகிறேன். உனது தலையை பின் புறமாக திருப்பப் போகிறேன். உன் விரல் நகங்களை தலைமுடியை இரும்பு கம்பியில் சுற்றி முறுக்கப்போகிறேன். எனது மந்திர வார்த்தைகள் உனது உடலெங்கும் துளைகளை போடட்டும். உனது இரண்டு செவிகளும் வவ்வால்களைப்போல் அருந்து தொங்கட்டும் இதோ உன்னை மந்திரச் சக்கரத்தில் உட்கார வைகிறேன். எனது மந்திரங்கள் கத்தியை போலவும், ஈட்டிகளை போலவும் உன் நெஞ்சை பிளக்கப்போகிறது.
அதிலிருந்து தெரிக்கும் பச்சை ரத்தத் துளிகள் உனது மேனி எங்கும் நெய்போல் பரவும் அக்னி தேவனின் செந்நிற நாக்குகள் உன்னை சாம்பலாக்கப் போகிறது விழிகள் பிதுங்க கோரை பற்கள் நீல நாக்கைத் தொங்கவிட்டு கருத்த மேனியுடன் பருந்த சதைகளோடு ஆட்டம் போடும் ஆலகால விஷமே நீ அழிந்து போ நீ வாசம் செய்யும் இந்த பெண்ணின் உடல் புனித அடையட்டும் புது பொலிவு பெறட்டும் என்பதாக அந்த பாடல் தொடர்ந்து செல்கிறது.
மனித தேவைகளை நிறைவேற்ற வழிகூறும் அதர்வணவேதம் பிரம்மத்தை பற்றியும் ஆத்மாவைப் பற்றியும் நிறைவே பேசுகிறது இருப்பினும் அந்தக் கருத்துக்கள் ரிக் வேத சிந்தனைகளோடும் உபநிஷத தத்துவங்களோடும் பெருவாரியாக ஒத்து போகிறது எனவே அதைப்பற்றி அதாவது உபநிஷத தத்துவங்களை பற்றி அடுத்த அத்யாயத்தில் ஆழமாக சிந்திக்க போவதினால் இங்கே அதைப்பற்றி சொல்லாமல் விடுகிறேன்.
அதர்வண வேதம் மற்ற மூன்று வேதங்களைக் காட்டிலும் மக்களோடு இணைந்து வருவதினால் தனிச்சிறப்பு உடையது என்றே சொல்லலாம். ஒரு தகப்பனும் ஆச்சாயனும் வருங்கால தலைமுறைகளுக்கு சிக்கல்களை தீர்த்துக் கொள்ள எவ்வாறு வழிமுறைகள் கற்றுதருவார்களோ அதே போலவே அதர்வண வேதமும் மனிதன் வாழ்வில் ஏற்படும் சிறு சிக்கல்களிலிருந்து பெரிய சிக்கல் வரை ஏற்படாமல் தடுக்கவும் ஏற்பட்டால் அதிலிருந்து விடுதலை பெறவும் வழியை சொல்கிறது. எனவே அதர்வண வேதத்தை மக்களின் வேதம் என்று அடித்துச் சொல்லலாம்.
No comments:
Post a Comment