Monday, June 30, 2014

அமானுஷ்யன் - 5
மஹாவீர் ஜெயின் தன் எதிரே அமர்ந்து ·பைலில் மூழ்கியிருந்த ஆனந்தையே பார்த்துக் கொண்டிருந்தார். எத்தனையோ சினிமா கதாநாயகர்களை விட ஆனந்த் அழகாயிருந்தான். வயது 29 என்று ரிகார்டில் இருந்தாலும் இன்னும் இளமையாகத் தெரிந்தான். ஆனால் முகத்தில் ஒரு வித சோகம் கூட இருந்ததாகத் தோன்றியது. ஆச்சார்யாவின் கொலை பற்றிய பைலைப் படித்துக் கொண்டிருப்பதால் ஆச்சார்யாவை நினைத்து சோகமா, இல்லை வேறு ஏதோ வருத்தத்தில் அவன் இருக்கிறானா என்பதை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அவன் படிப்பதை முடித்த பிறகு கொலை நடந்த இடத்தின் புகைப்படங்களை ஆராய்ந்தான். ஆச்சார்யாவின் பிணத்தின் புகைப்படத்தை விட அதிகமாக அவர் வீட்டுக்கு காவலில் இருந்த போலீஸ்காரர் பிணத்தின் புகைப்படத்தை ஆராய்ந்தான். பிறகு போலீஸ் ரிப்போர்ட்டைப் படித்து விட்டுச் சொன்னான். "போலீஸ் இது ஏதோ பழைய பகை என்று காண்பிக்கவே முயற்சி செய்திருக்கிறார்களே ஒழிய பல விஷயங்களை கண்டுகிட்ட மாதிரியே தெரியலை"

"உதாரணமா..."

"இந்த போலீஸ்காரர் முன்னந்தலையில் பெரிய தடியால் அடித்து அவரைக் கொன்றிருக்கிறார்கள்...."

"ஆமாம். அதற்கென்ன?"

"அப்படியானால் அவர் எதிரே வந்துதான் அடித்திருக்க முடியும்"

"ஆமாம்"

"துப்பாக்கியுடன் காவலுக்கு நிற்கிற ஒரு போலீஸ்காரர் எதிரே யாராவது தடியுடன் வந்தால் சும்மாவா இருப்பார். எவ்வளவு வேகமாக எதிராளி வந்தாலும் குறைந்த பட்சம் துப்பாக்கியையாவது எடுக்காமல் இருப்பாரா. இதில் துப்பாக்கியை எடுத்த மாதிரியே தெரியவில்லையே"

ஜெயினுக்கு அவன் அறிவுக் கூர்மை பிடித்திருந்தது. "அந்தப் போலீஸ்காரருடன் யாராவது பேசிக் கொண்டிருந்தே இருந்து விட்டு திடீர் என்று அவர் எதிர்பார்க்காத போது அடித்திருக்கலாம்...."

"அப்படியானால் அது அந்த போலீஸ்காரருக்கு நன்றாகத் தெரிந்த மனிதராக இருந்திருக்க வேண்டும். பிறகு ஆச்சார்யாவும் வந்தவருக்கு அந்த இரவு நேரத்தில் கதவைத் திறந்திருக்கிறார் என்றால் அவருக்கும் கொலையாளியை நன்றாகவே தெரிந்திருக்க வேண்டும். அப்படியானால் கொலையாளி இரண்டு பேருக்கும் நன்றாகவே தெரிந்த, அவர்கள் சந்தேகப்படாத ஆள். அதனால் கொலையாளி கண்டிப்பா போலீஸ் சந்தேகப்படற மாதிரி முந்தைய பகையாளியாய் இருக்க முடியாது..."

ஜெயின் தலையாட்டினார். அவன் சில நிமிடங்களிலேயே அந்த உண்மையை அடைந்தது அவரை மனதினுள் சபாஷ் போட வைத்தது. தன் தேர்வு சரிதான் என்ற பூரண நம்பிக்கை அவருக்கு வர "ஆனந்த் அந்த ·பைலில் இல்லாத சில விஷயங்களையும் நீ தெரிந்து கொள்ள வேண்டும்...." என்று அவனிடம் மறைக்காமல் ஆச்சார்யா சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களையும் சொன்னார்.

ஆச்சார்யாவின் பழைய வில்லங்கமான கண்டுபிடிப்புகளை வெளியே யாரையோ வைத்து அவர் செய்த விதம், அந்த நபர்கள் யாரென "பாதுகாப்பு" காரணங்களுக்காக வெளியே சொல்ல மறுத்தது, அந்த ஆபிசிலேயே புல்லுருவிகள் இருப்பதாக அவர் சொன்னது, கடைசி நாளில் சாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக அவர் ஃபோன் செய்தது என எல்லாவற்றையும் விளக்கமாகச் சொன்னார்.

கவனமாக எல்லாவற்றையும் கேட்ட ஆனந்த், "அவர் கண்டுபிடிக்கப் பயன்படுத்திய வெளியாள் யாராக இருக்கும் என்று ஏதாவது யூகம் இருக்கிறதா?" எனக் கேட்டான்

"இல்லை"

"ஆபிசில் வேறு யாருக்காவது தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கா?"

"இல்லை"

"அவர் கடைசியா போனில் சொன்னதை அப்படியே சொல்லுங்க சார்"

"சார், நாட்டையே அதிர வைக்கிற மாதிரியான சில தகவல்களை ஆதாரத்தோட வைத்திருக்கிறேன். நாளைக்குக் காலையில் உங்க டேபிள்ல வைக்கிறேன்னார்"

"அவர் இறந்தது இரவு ஒன்றரை மணிக்கு. உங்களுக்குப் ஃபோன் செய்தது எத்தனை மணிக்கு?"

"சுமார் பத்து இருக்கும்"

"அப்படின்னா அவர் வைத்திருக்கிறதா சொன்ன ஆதாரங்கள் அவர் கையிலேயோ வீட்டிலேயோதான் இருந்திருக்க வாய்ப்பு அதிகம்"

"ஆமாம். அந்த ஆதாரங்கள் அவர் வீட்டிலேயே இன்னமும் இருக்க வாய்ப்பு இருக்கா?"

"பெரும்பாலும் அந்த ஆதாரங்கள் அந்தக் கொலையாளிகள் கையில் கிடைத்து அவர்கள் எடுத்துக் கொண்டு போயிருப்பாங்கன்னு தோணுது."

*********

இரவு மணி பதினொன்று. டில்லி நகரின் புறப்பகுதியில் ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் ஒரு கார் தனியாக நின்றிருந்தது. CBI மனிதன் தன் காரை அரை கிலோ மீட்டர் தள்ளியே நிறுத்தி நடந்து வந்து அந்தக் காரை அடைந்தான். யாரும் அவனைப் பின் தொடரவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகு அந்தக் கார் ஜன்னலைத் தட்டினான். முன் கதவு திறக்கப்பட்டது. உள்ளே நுழைந்து அமர்ந்தான். உள்ளே விளக்கு இல்ல. தூரத்து தெரு விளக்கின் அரைகுறை வெளிச்சத்தில் சரியாகப் பார்க்க அவனுக்கு சில வினாடிகள் தேவைப்பட்டன.

டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்த நபரை நேரில் சந்திப்பது அதுவே முதல் முறை. வயது அதிகபட்சம் இருபத்தொன்று இருக்கலாம். குறுந்தாடியுடன் சிவப்பாக இருந்தான். அந்த மனிதன் CBI மனிதனை உணர்ச்சியே இல்லாமல் கூர்ந்து பார்த்தான். அவன் முகம் இறுகி இருந்தது. CBI மனிதன் அவனைப் பார்த்து "ஹலோ" என்றான். அந்த நபர் அவனுடைய ஹலோவை அங்கீகரிக்கவில்லை. பார்வையைத் திருப்பிக் கொள்ளவுமில்லை.

பின் சீட்டில் இருந்து குரல் கேட்டது. "உங்க ஆள்கள் அங்கே இருந்து ஃபோன் செய்தாங்களா?"

CBI மனிதன் பின்னால் திரும்பி வணக்கம் சொன்னான். பின்னால் இருந்த மனிதர் வெறுமனே தலையசைத்தார்.

"செய்தாங்க. ஆனா அவன் பிணம் இன்னும் கிடைக்கலை..."

குறுந்தாடியும், பின்னால் இருந்த மனிதரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அதைக் கவனிக்கத் தவறாத CBI மனிதன் பொறுமையாகச் சொன்னான். "பாருங்க... அவனைப் பற்றி நான் அவங்க கிட்ட தெளிவாய் சொல்லியிருக்கேன். நீங்க சொன்ன மாதிரி அவன் பயங்கரமானவன், அவனுக்குப் பல பேர் இருக்கு, பல வேஷம் போடுவான். அதனால சின்ன அலட்சியம் கூட இருக்கக்கூடாதுன்னு சொல்லி இருக்கேன். அவங்களும் அதை மனசுல வச்சுதான் தேடிகிட்டிருக்காங்க. ஆனா பர்சனலா எனக்குத் தோணறதை மறுபடியும் சொல்றேன். என்னதான் அசகாய சூரனே ஆனாலும் உயிர் இருந்தாத்தானே நாம் கவலைப்படணும். குண்டடி பட்ட அவன் கீழே தண்ணியிலேயோ, மணல்லயோ விழுந்தா பிழைக்க வாய்ப்பு இருக்கு. மலையில இருந்து விழுந்திருக்கான்கிறப்ப......"

பின்னால் இருந்த நபர் அவனுடைய சைகையாலேயே நிறுத்தினார். தன் கோபத்தை அடக்கிக் கொண்டு சொன்னார். "எங்களைப் பொறுத்த வரை அவன் உடம்பு கிடைக்கிற வரை நிம்மதியாய் இருக்க முடியாது. அவனைப் பத்தி முழுவதும் தெரிஞ்சாதான் உங்களுக்கு எங்க கவலை புரியும்.... முதல்ல இந்த பேப்பர்ஸைப் படிங்க"

சொன்னது அவரென்றாலும் அந்தக் காகிதங்களை குறுந்தாடிதான் நீட்டினான். வாங்கிக் கொண்ட காகிதங்கள் பல இருப்பதைப் பார்த்த CBI மனிதன் "நான் வீட்டுக்குப் போய்ப் படிக்கிறேனே" என்றான். இந்த அரையிருட்டில் படிப்பதுதான் எப்படி. மேலும் இவர்களையே இந்த அளவு பயமுறுத்துபவன் வித்தியாசமானவனாக இருப்பான் போல் இருக்கிறது. புரிந்து கொள்ள நிதானமாய்த்தான் படிக்க வேண்டும்.

பின்னால் இருந்தவர் சொன்னார். "இங்கேயே படிங்க"

தன் கையில் இருந்த டார்ச் லைட்டை அந்தக் காகிதங்களில் அடித்து அவன் படிக்க குறுந்தாடி வசதி செய்தான். அந்தக் காகிதங்களைத் தன்னிடம் தந்தனுப்ப விரும்பவில்லை என்பதைப் புரிந்து கொண்ட CBI மனிதன் அந்த டார்ச் லைட் வெளிச்சத்தில் படிக்க ஆரம்பித்தான்.

படிக்க ஆரம்பித்தவன் சிறிது நேரத்தில் மற்ற எல்லாவற்றையும் மறந்தான். சரியாக நாற்பது நிமிடங்கள் படித்து அவன் முடித்த போது அந்தக் குளிரிலும் அவனுக்கு முத்து முத்தாக வியர்த்தது. "என்னால நம்ப முடியலை....."

"காரணம் நீங்க அவனைப் பார்த்ததில்லை. நாங்க பார்த்திருக்கோம்...."

குறுந்தாடி கண்களில் ஏதோ ஒரு அழுத்தமான உணர்ச்சி வந்து போனது. பயமா? கோபமா?

CBI மனிதன் அதைக் கவனித்தபடியே கேட்டான். "இதுல இருக்கறதுல எல்லாமே உண்மையா?" அவன் அதில் பாதியாவது பொய்யாயிருக்கலாம் என்று எண்ணினான்.

"இதுல உண்மையை வடிகட்டி எழுதியிருக்கிறாங்க. வடிகட்டிப் பார்க்காத விஷயங்க நிறைய இருக்கு. அதையும் எழுதறதுன்னா ஒரு புஸ்தகம் பத்தாது..." பின் சீட்டிலிருந்தவர் சொன்னார்.

அமானுஷ்யன் என்ற பெயர் அந்த செத்துப் போன மனிதனுக்கு மிகவும் பொருத்தம்தான் என்று தோன்றியது. ஒரு வேளை தப்பித் தவறி அந்த அமானுஷ்யன் இறந்து போகாமல் இருந்தால்.... CBI மனிதன் கைக்குட்டையால் வியர்வையைத் துடைத்துக் கொண்டான். இவர்கள் பயத்தின் காரணம் மெள்ள புரிய ஆரம்பித்தது.

அவனையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த குறுந்தாடி முதல் முறையாக வாயைத் திறந்தான். "அவன் பிணத்தைக் கண்ணால் பார்த்து எரிச்சு சாம்பலாகிறதையும் கண்ணால் பார்த்தால் ஒழிய அவன் செத்துட்டான்னு பல பேர் நம்ப மாட்டாங்க. அதனால அவன் செத்துட்டான்கிறதை எப்படியாவது உறுதிப்படுத்துங்க"

(தொடரும்)

அமானுஷ்யன் - 4மூத்த பிக்குவும் இளைய பிக்குவும் வந்தவர்கள் இருவரும் கண்ணை விட்டு மறையும் வரை நின்று பார்த்து விட்டு பரபரப்புடன் புத்த விஹாரத்தினுள் நுழைந்தார்கள். அவன் எப்படி மாயமாயிருப்பான் என்று வியப்புடன் தியான மண்டபத்திற்குள் இருந்த பிக்குகளிடம் போய் மூத்த பிக்கு "அவன் எங்கே போனான் பார்த்தீர்களா?" என்று கேட்டார்.

"நான் எங்கேயும் போகவில்லை. இங்கேயே தான் இருக்கிறேன்" என்ற குரல் புத்த பிக்குகளின் மத்தியில் இருந்து கேட்டது. மூத்த பிக்குவும், இளைய பிக்குவும் குழப்பத்துடன் புத்த பிக்குகளின் மத்தியில் அவனைத் தேடினார்கள்.

புன்னகையுடன் ஒரு புத்த பிக்குவாக அவன் எழுந்தான். அவன் பேண்ட் ஷர்ட்டிற்குப் பதிலாக புத்த பிக்குகளின் சந்தன நிற உடையில் இருந்தான். ஒரு சந்தன நிறத் துணியைத் தலையில் கச்சிதமாகக் கட்டியிருந்தது பிக்குவைப் போல மொட்டைத் தலையுடன் இருப்பது போன்ற தோற்றத்தை அந்த மங்கலான விளக்கொளியில் ஏற்படுத்தியது. அவன் தலையில் இருந்த கட்டையும் மறைத்தது. மார்பில் குறுக்கு வாட்டாக புத்தபிக்குகளைப் போல அணிந்திருந்த ஆடை அவன் தோளில் இருந்த கட்டை மறைத்தது.

மூத்த பிக்கு அவனை பிரமிப்புடன் பார்த்தார். "அவர்கள் உன்னை இங்கே கண்டுபிடித்திருந்தால்...."

"அவர்கள் தேடி வந்த ஆள் பேண்ட், ஷர்ட் போட்டிருப்பான். குண்டடி பட்டிருப்பான். பிணமாக இருக்கலாம். படுத்தபடி இருக்கலாம். ஒளிந்தும் இருக்கலாம். ஆனால் கண்டிப்பாக புத்தபிக்குவாக தியான நிலையில் இருக்க மாட்டான். மனிதன் எதிர்பார்ப்பதைத் தவிர வேறு எதையும் காண்பதில்லை குருவே.... இங்கு தியான மண்டபத்தில் வந்த போது அவர்கள் புத்த பகவானின் பின் புறத்தில் இருட்டைப் பார்த்தார்கள். இருந்தால் அங்கேதான் இருக்க வேண்டும் என்று தீர்மானித்தார்கள். அதற்குப் பின் அவர்களுக்கு அரைகுறை வெளிச்சத்தில் இருப்பவர்களைப் பார்க்கும் அளவுக்குப் பொறுமையில்லை. வெளிச்சத்தில் இருந்தவர்களைக் கூட உன்னிப்பாகப் பார்க்க வேண்டும் என்பதை யாரும் அவர்களுக்குக் கற்றுத் தரவில்லை போலிருக்கிறது...."

இளைய பிக்கு மனதில் அவன் ஹீரோவாகி விட்டான். சந்தோஷமாக இளைய பிக்கு கைகளைத் தட்ட மூத்த பிக்கு புன்னகையை மறைத்துக் கொண்டு கடுமையாகப் பார்க்க முயற்சித்தார். ஆனால் அவர் கவனம் பிக்குவின் உடையில் இருக்கும் மற்றவனின் மீதே இருந்தது. தலைக் காயமும், தோள் காயமும் எந்த அளவு வலியை அவனுக்குத் தந்து கொண்டிருக்கும் என்பதை உடலியல் சாஸ்திரத்தில் தேர்ச்சி பெற்ற அவர் அறிவார். உடல் ரீதியான இந்தப் பிரச்சினையை விடத் தன் பெயர் உட்படப் பழைய நினைவுகள் மறந்து போன அவனுடைய மனநிலை எப்படி இருக்கும் என்பதையும் அவரால் அனுமானிக்க முடிந்தது. ஆனால் எல்லாவற்றையும் மறந்த அவன் எப்படி உயிருடன் இருப்பது என்ற கலையை மிகச் சிறப்பாக நினைவில் வைத்திருக்கிறான். ஒரு வேளை அது அவனுடய உயிரில் கலந்திருக்கிறதோ என்னவோ.

"உன்னுடைய பேண்ட் ஷர்ட் எங்கே?" என்று மூத்த பிக்கு அவனிடம் கேட்டார். வந்தவர்கள் அவற்றை எங்காவது ஒரு மூலையில் பார்த்திருந்தால் கூட நிலைமை விபரீதமாகப் போயிருக்கும்.

"அதையெல்லாம் மடித்து அதன் மேல் உட்கார்ந்து தான் தியானம் செய்தேன்...." அவன் குறும்பாகச் சொல்லிப் புன்னகைத்தான். புன்னகைக்கும் வரை சாதாரணமாகத் தெரிந்த அவன் புன்னகைத்த போது மிக அழகாகத் தெரிந்ததை அவர் மறுபடியும் கவனித்தார்.

அவன் குற்றவுணர்ச்சியோடு சொன்னான். "அவர்கள் உள்ளே வந்து தேடக் கூடும் என்ற சந்தேகம் வந்த போது அந்த அறையில் மடித்து வைத்திருந்த இந்த உடையை உங்கள் அனுமதியில்லாமல் எடுத்துப் போட்டுக் கொண்டேன். மன்னிக்கணும். நான் இதைத் துவைத்து உங்களுக்குத் தந்து விடுகிறேன்...."

இளம் பிக்கு உற்சாகமாகச் சொன்னார். "அது பரவாயில்லை. அது என்னுடைய உடைதான்...."

மூத்த பிக்கு அவனைக் கூர்மையாகக் கவனித்தார். அவன் அந்த உடைகளை அணிந்திருந்த விதம் கச்சிதமாக இருந்தது. முதல் முதலில் ஒரு பிக்குவின் ஆடையை அணிபவர்கள் போல் சிறு சிறு குறைபாடுகள் கூட இல்லை. அவன் நிமிடத்திற்கு நிமிடம் அவரை ஆச்சரியப்படுத்தினான். வந்தவர்கள் அவனைத் தீவிரவாதி என்றார்கள். ஆனால் அவனைப் பார்த்தால் அவருக்கு துளியும் அப்படித் தோன்றவில்லை. மாறாக வந்தவர்களைப் பார்த்தால்தான் அவருக்குத் தீவிரவாதிகளாகத் தோன்றுகிறது.

அவனைத் தேடி வந்தவன் சொன்னது நினைவுக்கு வந்தது. "அவனைப் பொறுத்த வரை எதுவும் நடக்கலாம் என்கிறார்கள்" . மூத்த பிக்கு புன்னகைத்தார். 'அவர்கள் சொன்னபடிதான் இவன் நடந்து கொள்கிறான்.'

அவர் புன்னகையைப் பார்த்த அவன் கேட்டான். "ஏன் சிரிக்கிறீர்கள்?"

"வந்தவர்கள் சொன்னார்கள். 'உன்னைப் பொறுத்த வரை எதுவும் நடக்கலாமாம்'"

அவன் முகம் ஒரு கணம் களையிழந்தது. "அவர்கள் என்னைப் பற்றி வேறு எதாவது சொன்னார்களா?"

"உன் பெயர் என்ன என்று கேட்டேன். 'உனக்குப் பல பெயர் இருப்பதாகச் சொன்னார்கள்"

அவன் ஆழ்ந்த யோசனையுடன் சொன்னான். "அதில் எனக்கு ஒரு பெயர் கூட ஞாபகம் வரவில்லை"

மூத்த பிக்கு அவன் அருகில் வந்து சொன்னார். "உன் பெயர் எதுவாக இருந்தாலும் நீ சாதாரணமானவன் அல்ல என்றே எனக்குத் தோன்றுகிறது. மலை உச்சியில் இருந்து விழுந்திருக்கிறாய். இங்கு கூரையிலிருந்து கீழே விழுந்த இடத்தில் இருந்த கல்லால் உன் தலையில் அடிபட்டிருக்கிறதே தவிர உன் எலும்புகள் எதுவும் முறியவில்லை. சில நுணுக்கமான மூச்சு வித்தைகள் தெரிந்தால் நம் உடலை மிகவும் லேசாக்கிக் கொள்ளலாம். அப்படி செய்து லகுவாக விழுந்திருந்தால் மட்டுமே எலும்புகள் உடையாது தப்பிக்க முடியும். அதுவும் தோளில் துப்பாக்கிக் குண்டு பட்ட காயம் இருக்கையில் அது போன்ற மூச்சுப் பயிற்சியை செய்ய முடிவது சாதாரணமானதல்ல. மேலும் உன் குண்டை எடுக்கையில் கூட நீ பொறுத்துக் கொண்ட விதம் ஒரு ஹத யோகியின் கட்டுப்பாடாக இருந்தது...."

".... நீ விழித்தவுடன் 'நான் யார்' என்று கேட்டாய். அது ஏதோ ஒரு தென்னிந்திய மொழி. அது உன் தாய் மொழியாக இருக்கலாம். நான் ஹிந்தியில் பேசியவுடன் சுலபமாக நீ ஹிந்திக்கு மாறினாய். நீ அரை மயக்கத்தில் இருந்த போது காஷ்மீரியிலும், உருதுவிலும் பேசினாய். உனக்குப் பல மொழிகள் தெரியும் என்று தோன்றுகிறது. உன்னைத் தேடி ஆட்கள் வந்திருக்கிறார்கள் என்று தெரிந்தவுடன் மின்னல் வேகத்தில் இந்த உடைகளுக்கு மாறியது, உன் பேண்ட் ஷர்ட்டை அப்படியே விட்டு விடாமல் அதைக் கொண்டு வந்து சமயோசிதமாய் தியானம் செய்து கொண்டிருந்த கூட்டத்தில் சேர்ந்து கொண்டது இதெல்லாம் நீ ஒரு அதிபுத்திசாலி என்பதை உணர்த்துகிறது...."

அவன் அவர் சொன்னதற்குப் பெருமைப்பட்ட மாதிரி தெரியவில்லை. அவன் குறுக்கிட்டுக் கேட்டான். "நான் அரை மயக்கத்தில் காஷ்மீரியிலும் உருதுவிலும் ஏதோ பேசினேன் என்றீர்களே. என்ன சொன்னேன்?"

அவர் சொன்னார். "எனக்கு சரியாகப் புரியவில்லை". ஆனால் உண்மையில் அவன் பேசியது அவருக்கு நன்றாகப் புரிந்தது. அவன் அரை மயக்கத்தில் சொன்னது இது தான். "என் வழியில் வராதீர்கள். வருவது எமன் வழியில் வருவது போலத்தான்"

*****

"ஹலோ"

"CBIயில் ஆச்சார்யா கொலைக் கேஸ் பற்றி துப்பு துலக்க சென்னையிலிருந்து 'ஆனந்த்'ங்கிற ஆபிசரை வரவழைக்கப் போகிறார்கள்" CBIயைச் சேர்ந்த அந்த மனிதன் தெரிவித்தான்.

"ஆள் எப்படி?"

"அவனோட ·பைலை இப்போதுதான் படிச்சு முடிச்சேன். இந்தக் கொலையில் நாம் ஏதாவது தடயம் விட்டு வைத்திருந்தால் கண்டிப்பாய் அவன் கண்டுபிடிக்காமல் விடமாட்டான். ரொம்பவே ஸ்மார்ட்...."

"நாம் ஏதாவது தடயம் விட்டு வைத்திருக்கிறோமா?"

"இல்லை... ஆனால் அப்படித்தான் ஒவ்வொரு கொலைகாரனும் நினைக்கிறான். ஆனந்தை CBI தேர்ந்தெடுத்தது நல்ல சகுனமாக எனக்குப் படலை, சார். அந்த ஆள் கடமைக்கு வேலை செய்யற டைப் அல்ல. ஒவ்வொரு கேஸையும் தனக்கு பர்சனல் சேலஞ்சாய் நினைக்கிற ஆள் அவன். எதற்கும் நாம் ஜாக்கிரதையாக இருக்கிறது நல்லது..."

"அவன் CBIக்கும் அரசாங்கத்துக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டியவன். அவனை எப்ப வேணும்னாலும் நாம் விலக்கிக்கலாம். அப்படி வர்றப்ப நான் பார்த்துக்கறேன். ஆனந்தை விடுங்கள். யார் கட்டுப்பாட்டிலும் இல்லாமல் உலாவும் ஒரு மனிதனை நினைத்து நான் கவலைப்படுகிறேன். எனக்கு அந்த அமானுஷ்யனைப் பற்றி சொல்லுங்கள். அவன் பிணம் கிடைத்ததா?"

"துரதிஷ்டவசமாக கிடைக்கலை, சார். ஆனால் அவன் அந்த உயரத்திலிருந்து குண்டடியும் பட்டு கீழே விழுந்ததால் பிழைக்க வாய்ப்பே இல்லை சார். என்னோட ஆட்கள் அங்கே வலை வீசித் தேடிகிட்டுருக்காங்க..."

மறுபக்கத்திலிருந்து சில வினாடிகள் பேச்சில்லை. யாரோ தாழ்ந்த குரலில் ஃபோன் பேசிக் கொண்டிருந்த நபரிடம் ஏதோ சொன்னது போல் இருந்தது. பின் அந்த மனிதர் கேட்டார். "மலையுச்சியில் இருந்து அவன் கீழே விழுந்தால் உத்தேசமாக எங்கே விழுவான் என்று உங்கள் ஆட்களால் கணக்குப் போட முடியவில்லையா?"

"அவனைச் சுட்டு அவன் விழுந்தது நள்ளிரவு நேரத்தில் சார். அவன் விழுந்தது எங்கே என்று அவர்களுக்குத் தெரியவில்லை. விடிந்தவுடன் அவர்கள் கணக்குப் போட்டுப் பார்த்ததில் ரெண்டு இடங்களில் அவன் விழுந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கு... அவன் நேராக விழுந்திருந்தால் பல்லாயிரக்கணக்கான அடிகளுக்கு கீழே இருக்கிற பாறைகளில் விழுந்து சிதறியிருக்கணும் சார். அப்படி ஆகியிருந்தால் அவன் உடலை அங்கிருக்கும் மிருகங்கள் சாப்பிட்டிருக்கும்.அவன் கொஞ்சம் டைவர்ட் ஆகி விழுந்திருந்தால் அதில் கால் வாசி தூரத்தில் இருக்கிற புத்தவிஹாரம் ஒன்றின் முன் விழுந்திருக்கலாம்."

"அந்த புத்த விஹாரத்தைச் சேர்ந்தவர்கள் என்ன சொல்கிறார்கள்? உங்கள் ஆட்கள் அங்கே சோதனை செய்தார்களா?"

"அந்த புத்த பிக்குகள் அப்படி ஒரு உடல் விழுந்ததாகத் தெரியவில்லை என்கிறார்கள். அந்த வட்டாரத்தில் அவன் உடலும் கிடைக்கவில்லை. என் ஆட்கள் அந்த புத்த விஹாரத்தின் உள்ளே கூடப் போய் நன்றாகப் பார்த்து விட்டார்கள். அவன் உடல் கிடைக்கவில்லை."

"அந்த அடிமட்டப் பாறைகளைப் போய்ப் பார்த்தார்களா?"

"கொஞ்ச நேரத்துக்கு முன்னால்தான் போன் செய்தார்கள். உடல் எதுவும் கிடைக்கலை. பாறைகளை ஐஸ் கவர் செய்திருப்பதால் ரத்தக்கறை இருக்கான்னு பார்க்க முடியலை...."

மறுபக்கத்தில் மறுபடி தாழ்ந்த குரலில் ரகசிய ஆலோசனை. அவன் உடல் கிடைக்கவில்லை என்பது அவர்களை நிறையவே கலவரப்படுத்தி உள்ளது என்பதை உணர்ந்த CBI மனிதன் சொன்னான். "சார்! நீங்க பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. அவன் உயிர் பிழைக்க வாய்ப்பே இல்லைங்கறதுதான் அந்த இடத்துல இருந்த ஆள்கள் எல்லாருடைய கருத்தும்...."

ஒரு நிமிட அசாதாரண மௌனத்திற்குப் பின் மறுபக்கத்திலிருந்து குரல் வந்தது.

"உங்களுக்கு நிலைமை புரியலை. அவனைப் பற்றியும் தெரியலை. நாம் நேரில் சந்திக்கறது அவசியம்னு தோணுது....."

(தொடரும்)

அமானுஷ்யன் - 3இரத்தக் கறையை முதலில் கவனித்தவன் இளைய பிக்குவிடம் சொன்னான். "நாங்கள் உள்ளே போய் பார்க்க வேண்டும்"

இளைய பிக்கு தயங்கினார். அவரது தயக்கத்தைப் பார்த்தவன் தன் அடையாள அட்டையை நீட்டினான். "போலீஸ்"

"நீங்கள் பிணத்தைத் தேடுகிறீர்கள். நாங்கள் பிணத்தை உள்ளே வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறோம்?"

"இது என்ன ரத்தக் கறை?" கதவைக் காட்டி அவன் கேட்டான்.

மூத்த பிக்கு தன் கையில் பேண்டேஜுடன் வெளியே வந்தார். "என்ன விஷயம்?"

இளைய பிக்கு சொன்னார். "எதோ பிணத்தைத் தேடுகிறார்கள். இந்த ரத்தக் கறையைப் பார்த்து உள்ளே வந்து பார்க்கணும்னு சொல்கிறார்கள்"

"இது நேற்று என் கையில் அடிபட்ட காயத்தினால் ஆனது." மூத்த பிக்கு தன் கையில் கட்டியிருந்த பேண்டேஜைக் காட்டினார்.

அவனுக்கு சந்தேகம் நீங்கினாலும் ஏதோ ஒரு எண்ணத்தால் நகராமல் அங்கேயே நின்றான்.

மூத்த பிக்கு கேட்டார். "யாருடைய பிணத்தைத் தேடுகிறீர்கள்?"

"தீவிரவாதி ஒருவன் பிணத்தை"

"என்ன பெயர்?"

அவன் ஒன்றும் சொல்லாமல் தன்னுடன் வந்தவனை ஆலோசனையுடன் பார்த்தான். உடன் வந்தவன் அவனிடம் மெல்லிய குரலில் சொன்னான். "வேறு இடத்தில் போய் தேடலாம். இவர்கள் சொன்னது போல் பிணத்தை இவர்கள் ஏன் உள்ளே வைத்துக் கொள்ளப் போகிறார்கள்"

"அவன் பிணத்தைக் கண்ணால் பார்க்கிற வரை, அவன் உடலை எரிக்கிற வரை அவன் செத்து விட்டான் என்று நம்ப முடியாது என்கிறார்கள்."

"இத்தனை உயரத்திலிருந்து குண்டடி பட்டு விழுந்தவன் எப்படி உயிர் பிழைக்க முடியும்?"

"தெரியவில்லை. ஆனால் அவனைப் பொறுத்த வரை எதுவும் நடக்கலாம் என்கிறார்கள்"

குரலைத் தாழ்த்தி அவர்கள் பேசிக் கொண்ட போதிலும் மூத்த பிக்கு அருகில் இருந்ததால் முழுமையாகக் கூர்ந்து கேட்டார்.

"எதற்கும் நாங்கள் உள்ளே சென்று பார்த்து விடுகிறோம்" என்று தீர்மானமாகச் சொன்னான் அவர்களிடம் பேசியவன்.

வேறு வழியில்லாமல் மூத்த பிக்கு தலையசைத்தார். இளைய பிக்கு முகத்தில் வருத்தமும் பயமும் படர்ந்தது.
வந்தவர்கள் இருவரும் உள்ளே செல்ல பிக்குகள் இருவரும் பின் தொடர்ந்தார்கள்.

அது ஒரு பெரிய புத்த விஹாரம். அவர்கள் இருவரும் எந்த இடத்தையும் விட்டு வைக்காமல் பார்க்க ஆரம்பித்தார்கள். அவர்கள் தேடிய நபரைப் படுக்க வைத்திருந்த அறைக்குள் நுழைந்த போது மூத்த பிக்குவிற்கும், இளைய பிக்குவிற்கும் இதயங்கள் வேகமாகவும் சத்தமாகவும் துடிக்க ஆரம்பித்தன. உள்ளே சென்று தேடியவர்கள் இருட்டான மூலைகளைக் கூட கையில் கொண்டு வந்திருந்த டார்ச் லைட்டால் வெளிச்சமாக்கிப் பார்த்தார்கள். அவன் அங்கு இருந்ததற்கான அறிகுறியே இல்லை. அவன் படுத்திருந்த மரக் கட்டில் ஒரு ஓரத்தில் இருந்தது. அதில் சில புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்தன. அவர்கள் கீழே மட்டுமல்லாமல் அண்ணாந்து மேலேயும் பார்த்தார்கள். விட்டத்தில் கூட அவன் இருக்கலாம் என்பது போல் அவர்கள் தேடல் இருந்தது.

அதற்குள் அவன் எங்கு போயிருப்பான் என்று இரண்டு பிக்குகளும் அதிசயித்தனர்.

அடுத்ததாக அவர்கள் தியான மண்டபத்திற்குள் நுழைய முற்பட்ட போது மூத்த பிக்கு தாழ்ந்த குரலில் வேண்டிக் கொண்டார். "எல்லாரும் தியானத்தில் இருக்கிறார்கள். முடிந்த வரை தொந்தரவு செய்யாமல் பாருங்கள்"

இருவரும் தலையாட்டினார்கள். தியான மண்டபத்தின் மத்தியில் ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அந்த விளக்கின் மங்கலான ஒளியில் புத்த பிக்குகள் தியானத்தில் இருந்தார்கள். சிலர் கையில் ஜபமாலை உருண்டு கொண்டிருந்தாலும் அவர்கள் பார்வை வந்தவர்கள் மேல் இருந்தது. மற்றவர்கள் நிஜமான தியானத்தில் இருந்தார்கள். அவர்களுக்கு எதிரே ஒரு பெரிய புத்தர் சிலை இருந்தது. புத்தர் சிலைக்குப் பின்புறம் இருட்டு இருந்ததைப் பார்த்த இருவரும் வேகமாகச் சென்று அங்கே டார்ச் லைட்டை அடித்துப் பார்த்தார்கள். அங்கும் யாரும் இல்லை.

வந்தவர்கள் தியான மண்டபத்தை விட்டு வெளியே வந்து மற்ற அறைகளையும் பார்த்தார்கள். பின் திருப்தியுடன் வெளியே வந்தார்கள்.

உள்ளே அவனைக் காணாததால் இரண்டு பிக்குகளுக்கும் வியப்பு தாளவில்லை. போலீஸ் என்று சொல்லி வந்த அந்த இருவரையும் மூத்த பிக்கு மீண்டும் கேட்டார். "அந்த தீவிரவாதி பெயர் என்ன?"

ரத்தக் கறையைப் பார்த்து ஆரம்பத்தில் சந்தேகப்பட்டவன் சொன்னான். "ஒரு பெயர் இருந்தால் சொல்லலாம். அவனுக்கு ஆயிரம் பெயர். எதைச் சொல்வது? எது உண்மையான பெயர் என்று யாருக்குத் தெரியும்?"

இருவரும் கிளம்பினார்கள். போகும் போது சலிப்புடன் தன் கூட வந்தவனிடம் சொன்னான். "இனி எங்கே என்று தேடுவது? அவன் பிணத்தை ஏதாவது காட்டு விலங்கு கூட எடுத்துக் கொண்டு போயிருக்கலாம்...."

********
மஹாவீர் ஜெயின் நீட்டிய அந்த •பைலை வாங்கிய ராஜாராம் ரெட்டி அமைதியாக அதைப்படித்தார்.

ராஜாராம் ரெட்டி CBIல் மிகுந்த நன்மதிப்பைப் பெற்ற உயர் அதிகாரி. நாணயத்திற்குப் பெயர் போனவர். எத்தனையோ கேஸ்களை வெற்றிகரமாகக் கையாண்டவர். இரண்டாண்டுகளுக்கு முன் ஒரு மந்திரியின் கிரிமினல் நடவடிக்கைகள் பற்றி கண்டு பிடித்து வெளிக் கொண்டு வரக் காரணமானவர். ஆனால் அந்த வழக்கு நீதிமன்றத்தின் முன் வந்த போது வக்கீல்கள் அவர் கண்டு பிடித்த ஆதாரங்களில் இருந்த சில்லறை ஓட்டைகளைப் பெரிதாக்கி அதிசாமர்த்தியமாக வாதாடி 'போதிய ஆதாரங்கள் இல்லை' என்ற தீர்ப்பை வரவழைத்து அந்த மந்திரியை விடுதலை செய்ய வைத்து விட்டனர். அந்த மந்திரியின் ஆதரவாளர்கள் தன் முன் நீதிமன்ற வளாகத்தில் ஆடிய ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ரெட்டி நீண்ட நாட்கள் அலுவலகத்தின் பக்கமே வரவில்லை. ஜெயின் அவருடைய வீட்டுக்குப் போய் அவரை சமாதானப்படுத்தி தான் மீண்டும் அந்த சமயத்தில் அழைத்து வந்தார்.

ஆனாலும் வந்த பின் ராஜாராம் ரெட்டிக்கு வேலையில் இருந்த பழைய துடிப்பு இருக்கவில்லை. ரிடையர்மெண்டுக்கு மீதமுள்ள மூன்றாண்டுகளை பிரச்சினை இல்லாமல் கழிக்க வேண்டும் என்ற மனநிலையில் தான் வேலையை இயந்திரத்தனமாக செய்து வந்தார். ஆனாலும் அவரது கூர்மையான அறிவுக்காக அவ்வப்போது அவரிடம் ஜெயின் ஆலோசனைகள் கேட்பது வழக்கம். இப்போதும் தான் தேர்ந்தெடுத்த ஆள் பற்றி அவருடைய கருத்து என்ன என்று அறியத் தான் அந்த •பைலை அவரிடம் கொடுத்து படிக்கச் சொன்னார்.

படித்து முடித்த ரெட்டி முகத்தில் ஒருவித வருத்தம் தெரிந்தது.

"என்ன ரெட்டி?"

"இவ்வளவு புத்திசாலித்தனம், துடிப்பு இருக்கிற ஆளை எத்தனை நாளுக்கு இந்த உலகம் இப்படியே இருக்க விடும்னு தோணுது"

அவர் இன்னும் அந்தப் பழைய மந்திரி கேஸை மறக்க முடியாமல் கஷ்டப்படுகிறார் என்பது ஜெயினுக்குப் புரிந்தது. "சில பேர் கடைசி வரைக்கும் அப்படியே இருந்துடறாங்க ரெட்டி. நம் ஆச்சார்யா இருக்கவில்லையா"

"அவரைக் கொன்னுட்டாங்களே சார்"

ஜெயினுக்கு ஆச்சார்யாவை உதாரணம் காட்டியிருக்க வேண்டாம் என்று தோன்றியது. "ஆனந்தைத் தேர்ந்தெடுத்தது பற்றி என்ன நினைக்கிறீங்க?"

"அருமையான தேர்வு. அதில் சந்தேகமேயில்லை."

"ரெட்டி. ஆச்சார்யாவைக் கொலை செய்தவர்களைக் கண்டு பிடிப்பது CBIக்கு ஒரு கௌரவப் பிரச்சினை. அவர் வழிமுறைகள் நம்மால் ஏற்க முடியாதிருக்கலாம். ஆனால் அவர் நம் தேசத்தின் மீது வைத்திருந்த பக்தியும், அவருடைய நாணயமும் அப்பழுக்கில்லாதது. அவர் ஒரு தடவை CBIக்குள்ளேயே வெளியாட்களுக்குத் தகவல்கள் தரும் ஆட்கள் இருக்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறார். யார் என்று கேட்டதற்கு சரியாகத் தெரியவில்லை என்று சொன்னார். அதனால் தான் நான் நம் ஆபிஸ் ஆட்களை இதில் ஈடுபடுத்தாமல் ஆனந்தைத் தேர்ந்தெடுத்தேன்"

ரெட்டி ஜெயினையே ஓரிரு நிமிடங்கள் பார்த்தார். பின் வருத்தத்துடன் சொன்னார். "ஆச்சார்யா கேஸ்ல போலீசுக்கு எந்தத் துப்பும் கிடைக்கலை. அவர் உங்களுக்கு செய்த போன் காலை வச்சு நாம் தான் இப்ப அவர் கண்டுபிடிச்ச புது கேஸ் காரணமாயிருக்கும்னு சந்தேகப்படறோமே ஒழிய போலீஸ் ஏதோ அவர் கண்டுபிடிச்சு தண்டனை வாங்கிக் கொடுத்த பழைய கேஸ்கள் மேல் தான் சந்தேகப்படறாங்க. பழைய கேஸோ, புது கேஸோ அவர் வீட்டு சாமான்களை உடைச்சு அட்டூழியம் பண்ணியிருக்கறதைப் பார்த்தால் பழி வாங்கிற மாதிரி வர்ற சந்தேகம் ஆதாரமில்லாதது போல தோணலை சார். இந்தப் புது கேஸ் தான் காரணமா இருக்குன்னா அது எந்த மாதிரி கேஸா இருக்கும்னு நீங்க சந்தேகப்படறீங்க?"

"தெரியலை. ஆனா எனக்கு அப்படி சாமான்களை எல்லாம் அடிச்சு துவம்சம் செஞ்சிருக்கறது போலீசை திசை திருப்பறதுக்கா இருக்கும்னு தான் தோணுது. ஆச்சார்யா மறு நாள் ஏதோ ஆதாரங்களை என் டேபிள்ல வைக்கிறதா சொல்லியிருந்தார். அந்த ஆதாரங்களைத் தேடி அந்த சாமான்களை விசிறி எறிந்திருக்கலாம். கடைசியில் வேணும்னே அந்த சாமான்களை உடைச்சு ரௌடியிசம் மாதிரி காண்பிக்கிற முயற்சி தான் அதுன்னு நினைக்கிறேன்."

ரெட்டி யோசித்து விட்டு இருக்கலாம் என்று தலையசைத்தார். "சரி அந்த ஆதாரங்கள் அந்த கொலைகாரர்கள் கையில் கிடைச்சிருக்குமா? நீங்க என்ன நினைக்கிறீங்க"

"அது தான் தெரியலை" என்று சொன்ன ஜெயின் பெருமூச்சு விட்டார்.

(தொடரும்)

அமானுஷ்யன் - 2CBI டைரக்டர் மஹாவீர் ஜெயின் தன் அலுவலகத்தின் முன் காரில் இருந்து இறங்குகையில் பத்திரிகை நிருபர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டார்கள்.

"சார் அடிஷனல் டைரக்டர் ஆச்சார்யாவைக் கொலை செய்தது யார் என்று தெரிந்து விட்டதா?"

"உங்களுக்கு யார் மீதாவது சந்தேகம் இருக்கிறதா?"

"CBI அடிஷனல் டைரக்டர் கொலைக்கு அரசியல் காரணங்கள் இருக்கும் என்று நினைக்கிறீர்களா?"

மஹாவீர் ஜெயின் கைகளை உயர்த்தி மேலும் வரவிருக்கும் கேள்விகளை நிறுத்தினார். "அவரைக் கொன்றவர்கள் யார் என்பதை கூடிய சீக்கிரம் கண்டு பிடிப்போம். அவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது. அவரைக் கொன்றவர்களைக் கண்டு பிடிக்க போலீஸ் ஒரு சிறப்புக் குழு அமைத்துள்ளது. அவர்களுக்கு இதில் முழு ஒத்துழைப்பு தருவதுடன் எங்கள் தரப்பிலும் விசாரணை நடக்கும். இப்போதைக்கு வேறெதுவும் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன். நன்றி"

நிருபர் கூட்டத்திலிருந்து ஒரு குரல் வந்தது. "உங்களுக்கும் ஆச்சார்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தன என்று கூறுகிறார்களே அது பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?"

மஹாவீர் ஜெயின் புன்னகையுடன் சொன்னார். "எனக்கும் என் மனைவிக்கும் இடையே எக்கச்சக்கமான கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன.....எங்களுக்குத் திருமணமாகி இருபத்தி எட்டு வருடங்கள் ஆகின்றன. என் மனைவி இன்னும் இருக்கிறார்.....என்னை அதிகாரம் செய்து கொண்டு"

பலத்த சிரிப்பலைகள் எழ மஹாவீர் ஜெயின் தன் அலுவலகத்திற்குள் நுழைந்தார். தன் அறை நாற்காலியில் அமர்ந்த போது கடைசியாகக் கேட்கப்பட்ட கேள்வி அவர் மனதை நெருடியது. அவருக்கும் இறந்த ஆச்சார்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள்....

எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஆச்சார்யா மீது அவருக்கு பெரும் மரியாதை இருந்தது. மனிதர் மிக நேர்மையானவர். நல்லவர். ஆனால் அவர் சில விஷயங்களில் ரகசியமாக இயங்கி வந்தார். கடைசியில் எல்லாம் முடிந்த பிறகுதான் ஜெயினுக்கே தெரிவிப்பார். உதாரணமாக, சென்ற வருடம் ஒரு போதை மருந்து கடத்தல் கும்பலை சட்டத்தின் பிடியில் கொண்டு வந்த விதம். CBI ஆட்கள் அந்த கேஸில் ஈடுபடுத்தப்படவில்லை. யாரோ ரகசியமாகத் தெரிவித்தார்கள் என்று சொல்லி, தகவல் தெரிவித்தவருக்கு பெரும் தொகை ஒன்றையும் அவர் பெற்றுத் தந்தார். ஆனால் ஜெயினுக்குத் தெரியும் யாரோ வெளியாட்கள் சிலரை வைத்துக் கண்டுபிடித்திருக்கிறார் என்று. அது பல நாட்கள் செய்த வேலையின் பலன். ஆனால் தகவல் தெரிவித்ததாகச் சொன்ன நபர் அல்லது கண்டு பிடிக்க உதவிய நபர் அல்லது நபர்கள் யார் என்று இன்று வரை ஜெயினுக்குத் தெரியாது. ஆச்சார்யா தன் சொந்த அதிகாரத்தில் அதை வெளிப்படுத்த மறுத்து விட்டார்.

ஜெயினுக்கு அவருடைய ரகசியத்தன்மை பெரும் எரிச்சலைக் கிளப்பியது. பல முறை வெளிப்படையாகவே அதை அவரிடமும், மற்ற உயர் அதிகாரிகளிடமும் தெரிவித்தும் இருந்தார். CBI வெளி மனிதர்களைத் தங்கள் துப்பறியும் வேலைகளுக்குப் பயன்படுத்துவது புதிதல்ல என்றாலும் முழுக்க முழுக்க யாரோ ஒரு சில வெளியாட்களை அவர் பயன்படுத்துவது தவறு என்று ஜெயின் சொன்ன போது, இங்குள்ளவர்களுள் ஒரு சிலர் மூலம் வெளியாருக்கு தகவல்கள் சுலபமாகச் செல்கிறது என்பதுதான் காரணம் என்பது போல ஆச்சார்யா சொன்னார். யார் அந்தப் புல்லுருவிகள் என்று கேட்டதற்குச் சரியாகத் தெரியவில்லை என்பது அவரது பதிலாக இருந்தது.

வழக்கமான கேஸ்களை அவருடைய டிபார்ட்மெண்ட் ஆட்களே கவனித்து வந்தார்கள் என்றாலும் இப்போதும் ஏதோ ஒரு பெரிய கேஸை அவர் திரை மறைவில் துப்பறிந்து வந்தார் என்று ஜெயினுக்கு சந்தேகம் தோன்றியிருந்தது. அதை உறுதிப்படுத்தும் வகையில் இறப்பதற்கு சில மணி நேரங்கள் முன்பு இரவில் ஆச்சார்யா ஜெயினுக்குப் போன் செய்திருந்தார்.

"சார். நாட்டையே அதிர வைக்கிற மாதிரியான சில தகவல்களை ஆதாரத்தோட வைத்திருக்கிறேன். நாளைக்குக் காலையில் உங்க டேபிள்ல வைக்கிறேன்."

அப்போதைக்கு என்னவோ ஜெயினுக்கு எரிச்சலாகத்தான் இருந்தது. அவருக்குத் தெரியாமல் தானாகவே ஒரு கேஸை எடுத்துக் கொண்டு திரைமறைவில் இந்த முறையும் ஆச்சார்யா துப்பறிந்து சொல்ல வருவது அவருக்குப் பிடிக்கவில்லை. ஆனால் ஆச்சார்யா சொல்ல வருவதற்கு முன் கொலை செய்யப்பட்டு விட்டார்.

ஆச்சார்யாவின் மனைவி பெங்களூரில் ஒரு திருமணத்தில் கலந்து கொள்ள சென்றிருந்ததால் ஆச்சார்யா வீட்டினுள் தனியாகவே அன்று இருந்திருக்கிறார். நள்ளிரவில் அவர் வீட்டுக்குக் காவல் இருந்த போலீஸ் கான்ஸ்டபிள் முதலில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார். பின் அவருடைய வீட்டுக்குள் கொலையாளியோ, கொலையாளிகளோ நுழைந்திருக்கிறார்கள். கதவு உடைக்கப்படவில்லை என்பதால் உள்ளே நுழைந்த நபர் அல்லது நபர்கள் ஆச்சார்யாவுக்குத் தெரிந்தவர்களாகவே இருந்திருக்க வேண்டும். ஆள் யார் என்று பார்க்காமல் நள்ளிரவில் கதவைத் திறப்பவரல்ல அவர். உள்ளே நுழைந்த நபர்/கள் அவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு அவருடைய வீட்டுப் பொருள்களைக் கண்டபடி துவம்சம் செய்து விட்டுப் போயிருக்கிறார்கள்....

போலீஸ் விசாரணையின் போது அவரிடமும் கேள்வி கேட்டார்கள். அப்போது ஜெயின் கடைசியாக ஆச்சார்யா செய்த போன் கால் பற்றி சொல்லவில்லை. அந்த போன் காலை அவர் ஏதோ ஒரு காயின் பாக்ஸ் போனிலிருந்துதான் செய்திருந்தார் என்பதால் போலீசிடம் அந்தத் தகவல் இருக்கவில்லை. இவராகவும் அதை சொல்லவில்லை. போலீசில் இருந்து பத்திரிகைகளுக்கு இந்தத் தகவல் கசிவதை அவர் விரும்பவில்லை.

இதை தங்கள் தரப்பிலிருந்தே ரகசிய விசாரணை செய்வது நல்லது என்று ஜெயின் நினைத்தார். அதுவும் இப்போதைய தலைமை அலுவலகத்தில் இல்லாத, தங்கள் வட்டார அலுவலகத்தில் உள்ள ஏதாவது ஒரு திறமையான அதிகாரியைக் கொண்டு விசாரணை நடத்துவது உத்தமம் என்று தோன்றிய உடனேயே அவருக்கு ஒரு பெயர் நினைவுக்கு வந்தது. உடனே சென்னை அலுவலகத்திற்குப் போன் செய்தார்.

*******

அவன் இன்னும் தன் மூளையைக் கசக்கிக் கொண்டு யோசித்துக் கொண்டுதான் இருந்தான். எதுவுமே நினைவில்லை. அவனுக்கு நினைவிற்கு எதுவும் வரவில்லை என்பது தெரிந்த மூத்த பிக்கு அவனுடைய சட்டை, பேண்ட் ஆகியவற்றை பரிசோதித்துப் பார்த்தார். ஒரு சிறிய காகிதம் கூட இருக்கவில்லை. சட்டை, பேண்ட் இரண்டும் ரெடிமேடாக இருந்ததால் தையல்காரன் பற்றிய தகவல் கூட இருக்கவில்லை. பிறகு மூத்த பிக்கு சொன்னார். "இப்போது எதுவும் நினைவுக்கு வரா விட்டால் பரவாயில்லை. கவலைப்படாமல் தூங்கு. இன்னொரு முறை தூங்கி எழுந்தால் எல்லாம் நினைவுக்கு வரும்" அவர் ஏதோ விதைகளைக் கசக்கி முகர வைத்து அவனை மறுபடி உறங்க வைத்தார்.

அவன் மறுபடி எழுந்து இப்போதும் யோசிக்கிறான். உலகத்திலேயே ஒரு மனிதனுக்கு மிகவும் பரிச்சயமான பெயர் தன் சொந்தப் பெயராகத்தான் இருக்க வேண்டும். ஆனால் ஏனோ அதுவே அவனுக்கு நினைவுக்கு வரவில்லை. அவனுக்கு நினைவு இருப்பதெல்லாம் புத்த பிக்குகளும் இந்த புத்த விஹாரமும்தான். மற்றதெல்லாம் துடைத்தெடுத்தது போல் நினைவரங்கம் வெறுமையாக இருந்தது. தலையில் அடிபட்டது காரணமாக இருக்குமா? தோள்பட்டையில் குண்டு பாய்ந்திருந்ததை மூத்த பிக்கு சிகிச்சை செய்து எடுத்தாரே, யார் சுட்டார்கள்? ஏன் சுட்டார்கள்?

தலையும், தோளும் வலித்தது பெரிதாகத் தோன்றவில்லை. எதுவும் நினைவுக்கு வராதது பயங்கரமாக இருந்தது.

அப்போது புத்த விஹாரத்தின் வெளியே சலசலப்பு கேட்டது. அவன் காதைக் கூர்மையாக்கினான்.

வெளியே இரண்டு இளைஞர்கள் இளைய பிக்குவிடம் கேட்டுக் கொண்டிருந்தார்கள். "இங்கே ஏதாவது மனித உடல் விழுந்திருந்ததா?"

அவர்கள் கேட்ட விதத்திலேயே அவர்கள் உயிருள்ள உடலைத் தேடவில்லை, செத்த பிணத்தைத்தான் தேடுகிறார்கள் என்பது அந்த இளைய புத்த பிக்குவிற்குத் தெரிந்து விட்டது. அவர்களை இதுவரை அந்தப் பகுதியில் பார்த்ததில்லை. அவர்கள் நினைப்பது போல் அவன் சாகவில்லை உயிர் பிழைத்து விட்டான் என்று சொல்ல நினைத்த இளைய பிக்கு வந்திருந்த ஆட்களின் முகத்தைக் கூர்மையாகப் பார்த்தார். நல்ல மனிதர்களாகத் தெரியவில்லை. கண்களில் ஒருவித கொடூரம் தெரிந்ததை அவர் கவனித்தார். இவர்கள் கொலை செய்ய முயன்ற கூட்டத்தாராகக் கூட இருக்கலாம். இல்லையென்றால் இவர்களுக்கு எப்படி ஒரு பிணம் இந்தப் பகுதியில் விழுந்து கிடக்கும் என்று தெரியும்? அப்படி எதுவும் இந்தப் பகுதியில் விழவில்லை என்று சொல்வதே உள்ளே உள்ள வாலிபனுக்கு பாதுகாப்பு என்று தோன்றியது. ஆனால் இந்த புத்த விஹாரத்தில் சேரும் போது அவர் சத்தியம் செய்திருக்கிறார்- எந்தக் காரணத்தை வைத்தும் பொய் சொல்ல மாட்டேன் என்று!

செய்த சத்தியம் பெரிதா உயிர் பெரிதா என்று தனக்குள் கேட்டுக் கொண்ட இளைய பிக்கு சத்தியம் திரும்பவும் செய்து கொள்ளலாம், ஆனால் உயிர் போனால் திரும்பி வருமா? என்று யோசித்து முகத்தில் ஆச்சரியத்தைக் காட்டி "இல்லையே" என்றார்.

வந்தவர்களில் ஒருவன் திரும்பத் தயாரானான். அடுத்தவன் அவனைத் தடுத்து நிறுத்தி புத்தவிஹாரத்தின் கதவைக் காட்டினான். கதவில் இரத்தக் கறை இருந்தது......

இளைய பிக்குவிற்கு ஒரு கணம் இதயத்துடிப்பு நின்று போனது..

(தொடரும்)

அமானுஷ்யன் - 1அந்த புத்த விஹாரத்தின் கூரையில் தொப்பென்று ஏதோ விழுந்து உருண்டு வாசற்புறத்தில் கீழே விழுந்தது நடுநிசியின் நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு கேட்டது. உறக்கத்தில் இருந்த புத்த பிக்குகள் கண் விழித்தார்கள். இளம் பிக்கு ஒருவர் சொன்னார். "ஏதோ மரம் விழுந்து விட்டது போலிருக்கிறது"

இமயமலைச்சாரலில் உள்ள அந்த புத்த விகாரத்தின் மீது மரக் கிளைகளும், வேரறுந்த மரங்களும் விழுவது புதிதல்ல.

ஆனால் அவர்களின் குருவான, எழுபது வயதைக் கடந்த மூத்த பிக்கு அமைதியாகச் சொன்னார். "சத்தத்தை வைத்துப் பார்த்தால் விழுந்தது மரமாகத் தெரியவில்லை. மனிதனோ விலங்கோ தான் விழுந்திருக்க வேண்டும். போய்க் கதவைத் திறந்து பார்"

அவர் சொன்னவுடன் எழுந்த அந்த இளம் பிக்கு இரண்டடி வைத்த பின் தயங்கினார்.

என்ன என்று மூத்த பிக்குவின் கண்கள் கேட்டன.

"மனிதன் என்றால் பரவாயில்லை. ஏதாவது விலங்காய் இருந்தால்..." இளம் பிக்குவிற்கு விலங்கிடம் மாட்டிக் கொள்ள விருப்பமில்லை.

"மனிதனாயிருந்தாலும் சரி, விலங்காய் இருந்தாலும் சரி, பிரக்ஞை இருக்க வாய்ப்பில்லை. விழுந்த விதத்தைப் பார்த்தால் அப்படித் தான் தெரிகிறது. விழுந்த சத்தத்தைத் தவிர வேறு சத்தமில்லை. பிரக்ஞை இருந்திருந்தால் கண்டிப்பாக கத்தியிருக்க வேண்டும். எழுந்து ஓடின சத்தமும் இல்லை பார்த்தாயா. போய்ப் பார்"

இளம் பிக்கு தன் குருவை வியப்புடன் பார்த்தார். எதையும் புரிந்து கொள்ள கிழவருக்கு அதிக நொடிகள் தேவையில்லை. இது வரையில் அவர் எதையும் தவறாகப் புரிந்து கொண்டதுமில்லை. ஆனால் அவரும் மனிதர் தானே? எதற்கும் ஒரு ஆரம்பம் என்றும் இருக்கிறதே?....இளம் பிக்குவிற்கு இன்னும் தயக்கமாகவே இருந்தது.

மூத்த பிக்கு தன் பார்வையை மற்ற பிக்குக்களிடம் திருப்ப அவர்களில் இருவர் எழுந்து கையில் விளக்குகளை எடுத்துக் கொண்டு இளம் பிக்குவிற்குத் துணையாகக் கிளம்பினார்கள். இளம் பிக்கு அசட்டுச் சிரிப்புடன் போய் புத்த விஹாரத்தின் பெரிய மரக் கதவைத் திறந்தார். வெளியே இருந்து பனிக்காற்று பலமாக வீச ஒரு பிக்கு கையில் இருந்த விளக்கு அணைந்தது. மற்ற விளக்கின் வெளிச்சத்தில் விழுந்தது என்ன என்று பார்த்தார்கள்.

வெளியே ஒரு மனிதன் ரத்த வெள்ளத்தில் கிடந்தான்.

*******

அதே நேரத்தில் டில்லியில் ஒரு மனிதன் உறக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தான். சுவர்க் கடிகாரம் ஆமை வேகத்தில் நகர்வதாக அவனுக்குத் தோன்ற, டீப்பாயின் மீது வைத்திருந்த தன் கைக்கடிகாரத்தை எடுத்துப் பார்த்தான். மணி இரண்டிலும் இரவு ஒன்று பத்து தான். அவன் எதிர்பார்த்த போன்கால் வராமல் அவனால் இன்று உறங்க முடியாது. அந்த போன் கால் மணி ஒன்று நாற்பத்திரண்டிற்கு வந்தது. பதட்டத்துடன் அவன் அந்த செல் போனை எடுத்தான். "ஹலோ"

"ஆபரேஷன் சக்ஸஸ்"

அந்த மனிதன் நிம்மதிப் பெரு மூச்சு விட்டான். "எல்லாத்தையும் விவரமா சொல்லுங்க"

பதினேழு நிமிடங்கள் கழித்து அந்த மனிதன் அந்த செல் போனில் இன்னொரு நபருக்குப் போன் செய்தான். மறுபக்கம் போனை எடுத்தவுடன் சொன்னான். "முடிச்சுட்டோம்"

சில வினாடிகள் மறுபக்கம் மௌனம் சாதித்தது. பிறகு அங்கிருந்து கேள்வி எழுந்தது. "உடம்பை என்ன செஞ்சாங்க"

"மலயுச்சில அவனைத் துப்பாக்கில சுட்டுருக்காங்க. குண்டு பட்டவுடனே அவன் பேலன்ஸ் தவறி உச்சியில் இருந்து கீழே விழுந்துட்டான். அந்தப் பக்கம் பெரிய பள்ளத்தாக்கு. குண்டு படாம விழுந்தாலே எந்த மனுஷனும் பிழைக்க முடியாது......"

"ஃபீல்டுல பலரும் அவனை மனுஷனாய் நினைக்கிறதில்லை. அவனுக்கு அமானுஷ்யன்னு ஒரு பேர் இருக்கு தெரியுமா?"

அந்தக் குரலில் லேசாகப் பயம் இருந்ததாகத் தோன்றியது. உடல் கிடைக்கவில்லை என்ற செய்தி மறுபக்கத்தை சங்கடப்படுத்தியதாகத் தோன்றியது. இரண்டு நாட்களுக்கு முன் CBI அடிஷனல் டைரக்டரையே சுட்டுக் கொன்ற போது அவர் பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை. அந்த அளவு அதிகார வர்க்கத்தின் உயரத்தில் இருக்கும் இத்தனை பெரிய மனிதரையே பயமுறுத்தும் அந்தக் குண்டடிபட்டு செத்தவனை நினைக்கப் பொறாமையாக இருந்தது.

மறுபக்கம் மறுபடி சொன்னது. "அவன் பிணத்தை அந்தப் பள்ளத்தாக்குல தேடச் சொல்லுங்க. அவன் கிட்ட ஏதாவது பேப்பர்ஸோ, வேறெதாவதோ இருந்தா எடுத்து அனுப்பச் சொல்லுங்க. பிறகு புதைச்சுட்டோ, எரிச்சுட்டோ தகவல் தெரிவிக்கச் சொல்லுங்க...."

"இந்த டிசம்பர் குளிரில் இமயமலைப் பள்ளத்தாக்குல ஒரு பிணத்தைத் தேடறது சுலபமில்லை....."

"எத்தனை செலவானாலும் பரவாயில்லை. வேலையை முடிக்கச் சொல்லுங்க.... உங்க பணம் ஸ்விஸ் அக்கவுண்ட்ல ஐம்பது லட்சம் டெபாசிட் ஆயிருக்கு. அவங்களுக்குத் தர வேண்டிய பணத்தை வழக்கமான இடத்தில் இருந்து நீங்க எடுத்துக்கலாம்..."

"தேங்க்ஸ் சார்"

இணைப்பு துண்டிக்கப்பட்டது. அந்த மனிதன் செல் போனில் மீண்டும் ஒரு எண்ணிற்குப் பேசினான். தனக்குத் தெரிவிக்கப்பட்டதை தானும் அந்த எண்ணில் பேசிய மனிதனுக்குத் தெரிவித்தான். பின் செல்போனை சைலன்ஸ் மோடில் மாற்றி சமையலறைக்குப் போய் பெரிய எவர்சில்வர் டப்பாவை எடுத்து அதில் நிறைந்திருந்த துவரம்பருப்பின் அடியில் அந்த செல்போனைப் பதுக்கி வைத்தான். ஒரு போலி நபர் பெயரில் பதிவாகி இருந்த அந்த செல்போனை இந்த ஆபரேஷனுக்கு மட்டுமே அவன் பயன்படுத்தி வருகிறான்....

********

"உயிர் இருக்கிறது"

"தலையில் அடிபட்டிருக்கிறது. தோள்பட்டையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்திருக்கிறது..."

புத்த பிக்குகள் பரபரப்பாய் வந்து சொல்ல, மூத்த பிக்கு உடலை உள்ளே எடுத்து வரச் சொன்னார். "தூக்கி வரும் போது முடிந்த வரை உடலை அசைக்காமல் கொண்டு வரப்பாருங்கள்". இன்னொரு பிக்குவிடம் தண்ணீரைச் சூடாக்கச் சொன்னார். தனதறையில் வைத்திருந்த ஒரு மரப்பெட்டியை எடுத்து வந்து பிரித்தார். அதில் பல விதமான கத்திகள், ப்ளேடுகள், பஞ்சு, தூய்மையான துணிகள், கூரிய கம்பிகள் எல்லாம் இருந்தன.....

உள்ளே எடுத்து வரப்பட்டவனுக்கு வயது 25லிருந்து 30க்குள் இருக்கலாம் என்று மூத்த பிக்கு கணக்கு போட்டார். மாநிறமாக சுமாரான உயரத்துடன் இருந்தான். ஒல்லியாக இருந்தாலும் உறுதியான உடலமைப்பைக் கொண்டவனாக இருந்தான். உடலில் பல இடங்களில் இருந்த வடுக்கள் அவன் அடிபடுவது புதிதல்ல என்று சாட்சி சொல்லின.

மூத்த பிக்கு அமைதியாகத் தன் சிகிச்சையை ஆரம்பித்தார். காயங்களைச் சுத்தம் செய்யும் போது அவன் மயக்க நிலையிலேயே இருந்தான். ஆனால் அவர் அவன் தோள்பட்டையில் இருந்து குண்டை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது அதிகமாய் வலித்திருக்க வேண்டும். கண்களைத் திறந்து அவரைப் பார்த்தான். அவர் ஹிந்தியில் அவனிடம் சொன்னார். "கொஞ்சம் பொறுத்துக் கொள். அசையாதே. இரண்டே நிமிடம் தான்...."

அவன் அதன் பிறகு அசையவில்லை. மூத்த பிக்கு அவனுடைய மன உறுதியைக் கண்டு வியந்தார். மயக்க மருந்து இல்லாமல் செய்யப்படும் இந்த சிகிச்சையில் வலி எந்த அளவு இருக்கும் என்பதை அவர் அறிவார். அவன் பற்களைக் கடித்துக் கொண்டு வலியைப் பொறுத்துக் கொண்ட விதம் அவரைப் பாராட்ட வைத்தது. குண்டை எடுத்து விட்டு மூலிகை மருந்துகளால் உறுதியாகக் கட்டுப் போட்ட பிறகு வலி குறைந்திருக்க வேண்டும். மீண்டும் உறக்க நிலைக்குச் சென்றான்.

மீண்டும் அவன் விழித்த போது அதிகாலையாகி இருந்தது. மூத்த பிக்குவும் இளம் பிக்குவும் அருகில் இருந்தார்கள். அவர்களைக் கண்டவுடன் புன்னகைத்தான். புன்னகைத்த போது முகம் பிரகாசமாகி அழகாகத் தெரிந்தான்.

மூத்த பிக்குவும் புன்னகைத்தார். அவருக்கு ஏனோ அவனை மிகவும் பிடித்துப் போனது. கருணையுடன் ஹிந்தியில் கேட்டார். "எப்படி இருக்கிறது?"

அவன் பரவாயில்லை என்பது போல் தலையாட்டினான்.

"உன் பெயர் என்ன?" அவர் அன்புடன் கேட்டார்.

அவன் விழித்தான். கண்களை இரண்டு மூன்று முறை கசக்கிக் கொண்டு யோசித்தான். ஒன்றுமே தெரியவில்லை. மனத்திரையில் எல்லாமே வெறுமையாக இருந்தது. அவன் தமிழில் தாழ்ந்த குரலில் கேட்டான். "நான் யார்?"

பிக்குகள் இருவரும் விழித்தார்கள். ஹிந்தியில் மூத்த பிக்கு கேட்டார். "என்ன கேட்டாய்?"

அவன் சிறிதும் யோசிக்காமல் ஹிந்தியில் மறுபடியும் கேட்டான். "நான் யார்?". கேட்ட பின் தான் தன் கேள்வியின் விசித்திரம் அவனுக்கு உறைத்தது போலிருந்தது. அவன் மூளையைக் கசக்கிக் கொண்டு யோசித்தது தெரிந்தது. முகத்தில் படர்ந்த குழப்பம் நீங்காமல் நிறைய நேரம் தொடர்ந்தது. அவனுக்கு அவனைப் பற்றி எதுவுமே நினைவுக்கு வரவில்லை.

மூத்த பிக்குவும் இளம் பிக்குவும் அவனைத் திகைப்புடன் பார்த்தார்கள்.


(தொடரும்)

Sunday, June 15, 2014

பரம(ன்) ரகசியம் – 85

ணபதியைக் கொன்று விட்டால் எதிர்ப்பு சக்தியை அழித்து விடலாம் என்று கேள்விப்பட்டவுடன் மறுபடி வீடியோ கான்ஃப்ரன்சிங்கில் ஆலோசனை செய்தார்கள். அவர்கள் கேட்டுக் கொண்டபடி பாபுஜி ஜான்சனை அழைத்துப் பேசினார்.

“ஏன் ஜான்சன் அந்தப் பையன் கணபதி விசேஷ மானஸ லிங்கத்துக்கு அவசியம் தானா?

ஜான்சன் சொன்னார். “தெரியலை. தென்னரசும், குருஜியும் தான் அந்த சிவலிங்கத்திற்கு நித்ய பூஜை தடைபட்டு விடக் கூடாதுன்னு சொல்லிகிட்டு இருந்தாங்க. அப்படி பூஜை அவசியம்னா கணபதியை விட்டால் நமக்கு வேற வழி கிடையாது

அந்த விசேஷ மானஸ லிங்கத்துக்கு பூஜை செய்யாட்டி என்ன ஆகும்?ஜெர்மானியப் பெண்மணி கேட்டாள்.

“தெரியலை. குருஜியைத் தான் கேட்கணும்”  ஜான்சன் சொன்னார்.

உடனடியாக குருஜியிடம் ஜான்சனும், பாபுஜியும் போனார்கள். கணபதியைக் கொன்றால் என்ன என்கிற ரீதியில் பாபுஜி கேட்ட்தும் குருஜிக்கு வந்த கோபத்திற்கு அளவில்லை. ஆனால் கண்ணைக் கூட இமைக்காமல், பாதிப்பையே காட்டாமல் குருஜி பாபுஜியைப் பார்த்தார். இவனிடம் நல்லது கெட்டது பேசிப் புண்ணியம் இல்லை. வியாபாரியிடம் லாப நஷ்டக் கணக்கு தான் பேச வேண்டும். விசேஷ மானஸ லிங்கம் சக்தி வாய்ந்ததாய் இருக்கணும்னா அதுக்கு தொடர்ந்து நித்ய பூஜை நடந்து தானாகணும்.  இவனுக்கு முன்னாடி ரெண்டு நாள் அதுக்குப் பூஜை செய்தவன் பயந்து ஓடினதுக்கப்புறம் இவனைக் கூட்டிகிட்டு வர ஒரு நாளுக்கு மேல ஆச்சு. அந்த நாள்ல வேதபாடசாலையில் சித்தரே ரகசியமாய் வந்து பூஜை செய்துட்டுப் போயிருக்கார். அப்படின்னா நித்ய பூஜை எவ்வளவு முக்கியம்னு உங்களுக்கு புரிஞ்சிருக்கணும். அவனைக் கொன்னுட்டா அந்த சிவலிங்கத்தோட மதிப்பு வெறும் ரெண்டாயிரம் ரூபாய் ஆயிடும். உனக்கு கேட்டதெல்லாம் கொடுக்கிற கல்பவிருக்‌ஷம்  வேணுமா இல்லை ரெண்டாயிரம் ரூபாய் அவசரமாய் தேவைப்படுதா?

பாபுஜிக்கு அந்த நாளில் அந்த சிவலிஙகத்தின் மீது  திபெத் பகுதியில் பூக்கும் காட்டுப் பூக்கள் இருந்ததாய் கேள்விப்பட்டதும் ஞாபகம் வந்தது.  மன உளைச்சலுடன் பாபுஜி அழாத குறையாகக் கேட்டார். அப்படின்னா என்ன தான் செய்யறது குருஜி

“எல்லாருமா சேர்ந்து வேறெதாவது வழியை யோசிங்க பாபுஜி. எனக்கு உடம்பு சரியாயிருந்தா நானே ஏதாவது வழி கண்டுபிடிச்சுச் சொல்லி இருப்பேன்...என்று சொல்லி குருஜி கண்களை மூடிக் கொள்ள வேறு வழியில்லாமல் இருவரும் வெளியே வந்தார்கள்.

ஜான்சனையும் கூட்டிக் கொண்டு தனதறைக்குப் போன பாபுஜி மறுபடியும் அந்த அறுவருடனும் ஆலோசனை நடத்தினார். ஆறு பேரும் பரபரப்புடனும், டென்ஷனுடனும் பைத்தியம் பிடித்தது போல இருப்பதாக ஜான்சனுக்குத் தோன்றியது. அவருக்கு அதைத் தப்பு சொல்லத் தோன்றவில்லை. இப்படியொரு மகாசக்தி நிரூபணமாகி அவர்கள் வசம் இருக்கையில் அதை உபயோகிக்க வழியில்லாமல் போனால் பின் எப்படித் தான் இருக்கும்? அவருக்கே இப்போது பணம் நிறைய வேண்டி இருக்கிறது. விவாகரத்து செய்த மனைவிக்குத் தரவேண்டிய பணம் அற்ப சொற்பம் அல்ல. இந்த ஆராய்ச்சிகள் வெற்றி பெற்று விட்டால் அவரும் பின் எப்போதும் பணத்திற்குக் கவலைப்பட வேண்டியதில்லை... விசேஷ மானஸ லிங்கம் தயவு செய்யுமா?

குருஜி அவன் அறைக்குள் வந்த போது கணபதிக்கு பரபரப்பு தாங்கவில்லை. “கூப்பிட்டிருந்தால் நானே வந்திருப்பேனே குருஜி என்று ஆதங்கப்பட்டுக் கொண்டே வரவேற்றான்.

குருஜி அவனைக் கனிவுடன் பார்த்துச் சொன்னார். “நான் கிளம்பறேன் கணபதி உன் கிட்ட சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்

அவருக்கு வேறுபல வேலைகள் இருப்பதால் அதையெல்லாம் கவனிக்கப் போகிறார் என்று நினைத்த கணபதி தலையாட்டினான். குருஜி அவனிடம் ஒரு உறையை நீட்டினார். “இது உனக்கு நான் தர வேண்டிய பணம். இன்னும் ரெண்டு அல்லது மூணு நாளைக்கு மேல் நீ இங்கே இருக்க வேண்டி வராதுன்னு நினைக்கிறேன். அதனால அது வரைக்கும் கணக்கு போட்டு தந்திருக்கேன்

அந்தப் பணத்தை வாங்க அவனுக்கு கூச்சமாய் இருந்தது. பணத்திற்காகத் தானே எனக்கு பூஜை செய்தாய் என்று சிவன் கேட்பது போல இருந்தது. ஆனால் அம்மாவிடம் அவன் நல்ல தொகை கிடைக்கும் என்று சொல்லி விட்டுத் தான் கிளம்பி வந்திருக்கிறான். சுப்புணிக்கும் அவன் பிள்ளையாருக்குப் பூஜை செய்ததுக்குப் பணம் தர வேண்டும். என்ன தான் செய்வது என்ற தர்மசங்கடம் அவன் முகத்தில் தெரிந்தது.

குருஜிக்கு அவன் தர்மசங்கடம் புரிந்தது. புன்னகையோடு சொன்னார். “நான் கிளம்பறேன்னு நினைச்சவுடனே என் கனவுல உன்னோட சிவன் கணபதி கணக்கை செட்டில் பண்ணாம போயிடாதேன்னு உத்தரவு போட்டுட்டார். அதனால தான் உடனே கொண்டு வந்துட்டேன்...

கணபதிக்கு கண்கள் நிறைந்தன. ‘இந்த சிவனுக்குத் தான் எத்தனை பாசம் என் மேல. என் நிலைமையைப் புரிஞ்சு வச்சுட்டு குருஜி கிட்ட இப்படி சொல்லி இருக்காரே”. சிவனே சொன்ன பிறகு பணம் வாங்க அவனுக்குத் தயக்கம் இருக்கவில்லை. சந்தோஷமாக வாங்கிக் கொண்டான்.

அவனையே பார்த்துக் கொண்டிருக்கையில் குருஜி மனம் லேசாகியது. கிளம்பினார். கணபதி அவர் காலில் விழுந்து நமஸ்கரித்தான். குருஜிக்கு கால்களும் மனதும் கூசின. உன்னை ஆசிர்வதிக்கிற அளவுக்கு எனக்கு வயசு ஒன்னைத் தவிர வேற எந்த தகுதியும் இல்லையே கணபதி!என்று மனதில் அழுதார்.

வாசல் வரை போனவர் திரும்பி அவனைப் பார்த்துக் கேட்டார். “எனக்கு ஒரு உபகாரம் செய்வியா கணபதி?

“என்ன இப்படிக் கேட்கறீங்க குருஜி. உத்தரவு போடுங்க. நான் செய்யறேன்

“நீ உன் சிவனையும் பிள்ளையாரையும் கும்பிடறப்ப எனக்காகவும் வேண்டிப்பியா? சொல்லும் போதே அவர் குரல் உடைந்தது.

அவர் தமாஷ் செய்கிறாரோ என்ற சந்தேகம் கணபதிக்கு வந்தது. ஆனால் அவர் உணமையாகவே கேட்கிறார் என்பது புரிந்த போது அவன் நெகிழ்ந்து போனான். என்னையும் ஒரு பொருட்டாய் மதித்து இப்படிக் கேட்கிறாரே இத்தனை பெரிய மனிதர்என்று நினைத்தவனாய் கைகூப்பியபடி சொன்னான். “கண்டிப்பா வேண்டிக்கறேன் குருஜி”.
கடைசியாக ஒரு முறை கண்கள் நிறைய அவனைப் பார்த்து விட்டு குருஜி அங்கிருந்து கிளம்பினார்.

பாபுஜி மறுபடியும் மற்றவர்களைக் கலந்தாலோசித்தார். எகிப்தியர் திட்டவட்டமாகச் சொன்னார். “பாபுஜி. நீங்கள் இனி எதற்கும் குருஜியை நம்பிப் பயனில்லை.... நமக்கு உதவ வேறு யாரையாவது கண்டுபிடிப்பது நல்லது

தென்னாப்பிரிக்கர் சொன்னார். “யாரோ தடுப்பு மந்திரமோ, சூனியமோ செய்திருக்கிறார்கள். அதை உடைக்க ஒரு திறமையான ஆளைப் பிடிப்பது நல்லது பாபுஜி. எங்கள் நாட்டில் இருந்து கூட என்னால் ஆளை அனுப்ப முடியும். ஆனால் உடனடியாக  அனுப்புவதில் விசா, போலீஸ் கண்காணிப்பு என்று நிறைய சிக்கல் இருக்கிறது. உங்கள் நாட்டிலேயே ஒரு ஆளைப் பிடித்து உடனடியாக அந்த தடுப்பு சக்தியை உடைக்கப் பாருங்கள்... உதயன் சுவாமியை வரவழைக்க முடியுமா என்று இன்னொரு தடவை குருஜியிடம் கேட்டுப் பாருங்களேன்.

இதற்கு முன்னால் அதைக் கேட்டதற்கு என்னை ஏதோ அபசாரம் செய்தது மாதிரி குருஜி பார்த்தார். பணத்தினால் வாங்க முடியாத விஷயங்கள் உலகத்துல இருக்குன்னு கடுமையாய் சொன்னார். அதனால இன்னொரு தடவை கேட்கறதில் அர்த்தமே இல்லை

அப்படியானால் வேறு யாராவது ஆளைச் சீக்கிரமாய் பார்த்துச் செய்ய வேண்டியதை உடனடியாகச் செய்யுங்கள்என்றார் எகிப்தியர்.


பரபரப்புடன் யோசித்து விட்டு பாபுஜி உடனடியாகத் தன் நெருங்கிய நண்பர்களுக்குப் போன் செய்தார். விசேஷ மானஸ லிங்கத்தைப் பற்றிச் சொல்லாமல் மந்திரம் சூனியம் ஆகியவற்றை உடைக்க முடிந்த நம்பகமான ஆள்கள் இருக்கிறார்களா என்று விசாரித்தார். இரண்டு நண்பர்கள் கேரளாவில் இருக்கும் நம்பீசன் என்ற ஒரு மந்திரவாதியைச் சொன்னார்கள். செய்யும் வேலைக்கு அவர் வாங்கும் கூலி அதிகம் என்றாலும் அவர் சக்தி வாய்ந்தவர், ரகசியம் காக்கும் நம்பிக்கையான மனிதர், அவரை சில வேலைகளுக்குப் பயன்படுத்தி இருக்கிறோம், அவர் சக்தியை நேரடியாக உணர்ந்திருக்கிறோம் என்று சொன்னார்கள். அதற்கு மேல் யோசிக்காமல் உடனடியாக பாபுஜி அந்த மந்திரவாதியைத் தொடர்பு கொண்டார். என்ன பணம் வேண்டுமானாலும் தருகிறேன். உடனே விமானத்தில் கிளம்பி வாருங்கள்”.  ஒப்புக் கொண்டு நாளை அதிகாலை வந்து சேர்வதாக அந்த மந்திரவாதி உறுதியளித்தார்.

பாபுஜி தயக்கத்துடன் தான் நாளை காலை ஒரு மந்திரவாதி வரப் போவதாக குருஜியிடம் தெரிவித்தார். தன்னைக் கேட்காமல் அந்த ஏற்பாட்டைச் செய்ததற்காக அவர் கோபிப்பாரோ என்று நினைத்தார். ஆனால் குருஜி “நல்லதுஎன்று சொன்னார். எப்போதோ மனதளவில் விலகி விட்ட பிறகு யார் வந்தால் எனக்கென்ன என்ற எண்ணம் தான் குருஜியிடம் மேலோங்கி இருந்தது.  

குருஜியும் பாபுஜியிடம் இன்னொரு தகவலைத் தெரிவித்தார். “எனக்கு உடம்பு எதனாலேயோ சுகமில்லை. குணமாகிற மாதிரியும் தெரியலை. அதனால நான் இப்பவே கிளம்பிப் போயிடலாம்னு நினைக்கிறேன் பாபுஜி

உபகாரமில்லாத ஆள் இருந்தென்ன போயென்ன என்ற எண்ணத்தில் இருந்த பாபுஜி முகத்தில் மட்டும் கவலையையும், அக்கறையையும் காட்டி கடைசியில் சம்மதித்தார். ”..... என்னால ஏதாவது ஆக வேண்டி இருந்தால் சொல்லுங்கள் குருஜி

குருஜி தலையசைத்தார். குருஜி கிளம்பிப் போகிறார் என்பதை பாபுஜி மூலம் அறிந்து ஜான்சனும், மகேஷும் உடனடியாக வந்தார்கள். இருவர் முகத்திலும் அதிர்ச்சி தெரிந்தது. எல்லாவற்றையும் ஆரம்பித்து வைத்தவரே இப்படி பாதியில் விலகிப் போகிறாரே  என்று ஜான்சன் உண்மையிலேயே வருத்தப்பட்டார். குருஜி இருக்கும் போது அவருக்கு தைரியமாய் இருந்தது. அவர் விஞ்ஞானமும், குருஜியின் அனுபவ ஞானமும் நல்ல கூட்டு சக்தியாக இருந்தது. குருஜி அளவுக்கு வரப் போகிற மந்திரவாதிக்கு இந்த விஷயத்தில் ஆழமான ஞானம் இருக்க வாய்ப்பில்லை என்று அவர் நிச்சயமாக நம்பினார். “ஆராய்ச்சியில் பங்கெடுக்கா விட்டாலும் பரவாயில்லை குருஜி  ஆலோசனை தரவாவது நீங்கள் இருந்தால் நல்லாயிருக்கும்என்று சொல்லிப் பார்த்தார். உடல்நலத்தைக் காரணம் காட்டி குருஜி மறுத்து விட்டார்.

மகேஷிற்கும் குருஜி போவது வருத்தமாய் இருந்தது.  முதலில் தென்னரசு... இப்போது குருஜி... குருஜி சொல்லிக் கொண்டாவது போகிறார். தென்னரசு அதைக் கூடச் செய்யவில்லை. திடீர் என்று மாயமானவர் பின் அவனைத் தொடர்பு கொள்ளவே இல்லை. அவர் செல் போனிற்கு போன் செய்த போதெல்லாம் “ஸ்விட்ச்டு ஆஃப்என்ற தகவலே வந்து கொண்டிருந்தது. குருஜியிடம் மகேஷ் கேட்டான். “தென்னரசு அங்கிள் உங்க கிட்டயாவது  போறதுக்கு முன்னாடி சொல்லிட்டு போனாரா குருஜி?

“இல்லை...குருஜிக்கு தென்னரசு நினைவும் மனதை அழுத்தியது. எல்லாம் ஏதோ ஒரு உத்தேசத்தில் ஆரம்பித்து எப்படி எல்லாமோ முடிந்து விட்டதே!

மகேஷிற்கு சந்தேகம் வலுத்தது. அவனிடம் சொல்லா விட்டாலும் கூட தென்னரசு குருஜியிடம் சொல்லாமல் போகிறவர் அல்ல.....

குருஜி கிளம்பி விட்டார். அவரை வழியனுப்ப பாபுஜி, ஜான்சன், மகேஷ் மூவருமே வந்தார்கள். குருஜி யாரிடமும் எதுவும் பேசவில்லை. தியான மண்டபத்தைத் தாண்டித் தான் கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்திற்குப் போக வேண்டி இருந்தது. அவருக்கு கடைசியாக ஒரு முறை விசேஷ மானஸ லிங்கத்தைப் பார்க்கத் தோன்றியது. வாசலில் இருந்தே எட்டிப் பார்த்தார். விசேஷ மானஸ லிங்கம் ஒருவித வித்தியாச ஜொலிப்பில் இருப்பது போல் அவருக்குத் தோன்றியது. ஹரிராம் அவரது வழக்கமான இடத்தில் தியானத்தில் அமர்ந்திருந்தார்.  அவரிடமும் அந்த ஜொலிப்பு பிரதிபலிப்பது போலத் தோன்றவே குருஜிக்கு உள்ளே ஒரு பொறி தட்டியது. ஹரிராம் தான் அந்த மூன்றாவது ஆள்...!

பாபுஜி ஜான்சனைக் கேட்டார். “இவர் மட்டும் ஏன் இன்னும் தனியா உட்கார்ந்து தியானம் செய்யறார்

ஜான்சன் சொன்னார். தினமும் மணிக்கணக்கில் தியானம் செய்கிறவர் அவர். இந்த ஆராய்ச்சியில் சிவலிங்க சக்தியில லயிக்க முடியாட்டியும் தன்னோட வழக்கமான தனிப்பட்ட தியானத்தையாவது செய்யலாம்னு உட்கார்ந்த இடத்திலேயே அதைச் செய்ய ஆரம்பிச்சிருப்பார்....

‘இந்த மாதிரி ஆளெல்லாம் நம் பக்கம் இருந்து கூட எல்லாம் இப்படி திடீர் என்று தடைப்பட்டு நிற்கிறதேஎன்று பாபுஜி ஆதங்கப்பட்டார்.

இப்படி அவர்களால் பேசப்பட்டும் எண்ணப்பட்டும் இருந்த ஹரிராம் EEG மெஷினை மட்டும் போட்டுக் கொண்டிருந்தால் அவர் ஐந்து சிபிஎஸ் தீட்டா அலைகளில் மிக ஆழ்ந்த தியானத்தில் இருப்பதைக் காட்டி அவர்கள் கவனத்தை மேலும் கவர்ந்திருக்கும்.

இது வரை அவர் விசேஷ மானஸ லிங்கத்தின் முன் அமர்ந்து செய்த தியானங்களில் மிகவும் கவனமாக ஒரு எல்லைக்குள் இருந்திருந்தார். விசேஷ மானஸ லிங்கம் இழுப்பது போல் தோன்ற ஆரம்பித்த முதல் கணத்திலேயே பின்வாங்கி வந்திருந்தார். அன்று காலை ஆராய்ச்சியின் போது மந்திரக் காப்புச் சுவரை விசேஷ மானஸ லிங்கத்தின் முன்பு எழுப்பும் போது கூட, முன்பு கற்றிருந்த வித்தை தான் வேலை செய்ததே ஒழிய விசேஷ மானஸ லிங்கத்தின் அலைகளோடு அவருக்கு முழுமையாக ஐக்கியமாக முயல முடியவில்லை.

ஆராய்ச்சிகள் தடைப்பட்டு மற்றவர்கள் எல்லோரும் போன பிறகு அவருக்கு தியானத்தில் அமரத் தோன்றியது. யார் தொந்திரவும் இல்லாமல் அமர்ந்த அவர் எந்தவிதக் கட்டுப்பாட்டையும் வைத்துக் கொள்ளாமல் தியானத்தை ஆரம்பித்து பின் விசேஷ மானஸ லிங்கத்தில் கவனத்தைக் குவித்து அதன் அலைகளுடன் ஐக்கியமாக ஆரம்பித்தார். வழக்கம் போலவே பிரம்மாண்ட உணர்வுகளுடன் கூடிய மிக அழகான அனுபவம்... விசேஷ மானஸ லிங்கம் ஜெகஜோதியாய் மின்ன ஆரம்பித்தது.... பின் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது.....  தீஜ்வாலையாய், அக்னிமலையாய் கண்ணுக்கும் கருத்துக்கும் அடங்காத விஸ்வரூபம் அது..  அதற்கடுத்ததாய் அது தன்னிடம் அவரை இழுப்பது போலத் தோன்றியது. முன்பு போல அதற்குச் சிக்காமல் மீண்டு வரும் முயற்சி எதிலும் அவர் ஈடுபடவில்லை. அந்த விசேஷ மானஸ லிங்கம் அவரை ஆட்கொள்ள விட்டார்.

ஒரு கணம் ஒரு பெருஞ்சுழியில் அவர் சிக்கிக் கொண்டது போல இருந்தது. மறு கணம் அவர் தலைக்குள் அக்னிப்பந்து ஒன்று புகுந்து கொண்டது போல் இருந்தது. எதுவும் அவர் கட்டுப்பாட்டில் இல்லை. அவர் எதையும் கட்டுப்படுத்தவும் விரும்பவில்லை. அந்த மகாசக்தியின் பிரவாகத்தில் பல நிலைகளுக்கு அடித்துச் செல்லப்படும் சிறு துரும்பாக அவர் உணர்ந்தார். என்னென்னவோ ஆகியது... வார்த்தைகளுக்கு சிக்காத எத்தனையோ நிலைகள்.... எத்தனையோ பயணம்... ‘ஹரிராம்என்ற அடையாளத்துடன் கூடிய நான் ஒரு கட்டத்தில் மறைந்தே போனது. சர்வமும் அமைதியாகியது. ஒரு மகத்தான மௌனம் மட்டுமே நிலவியது.....

எத்தனை காலம் அந்த மோன நிலையில் இருந்தார் என்று அவருக்கே தெரியவில்லை. சிறிது சிறிதாக அவர் நினைவு திரும்பிய போது அவர் புடம் போட்ட தங்கம் போல ஒளிர்ந்து கொண்டிருந்தார்.

இத்தனை கால அவர் வாழ்க்கையில் எத்தனையோ கோடிட்ட இடங்கள் இருந்தன. அர்த்தம் புரியாத, அர்த்தப்படுத்திக் கொள்ள முடியாத இடங்கள் இருந்தன. இப்போதோ அவர் வாழ்க்கையின் அத்தனை கோடிட்ட இடங்களும் அர்த்தத்தோடு நிரம்பி இருந்தன. மிகப் பெரிய புரிதல் நிகழ்ந்திருந்தது. யாருமே கற்றுத் தர முடியாத, கடைசியில் மட்டுமே அந்தராத்மாவில் உணரக் கூடிய ஞானம் கிடைத்திருந்தது. அது கேள்விகள் இல்லாத, பதில்கள் தேவைப்படாத ஒரு பரிபூரணமான நிலை. ஜன்ம ஜன்மாந்திரங்களாய் தேடியும், காத்தும் இருந்த உன்னதமான நிலை....!

குருஜியும் போன பிறகு மகேஷிற்கு அங்கிருக்கவே மனமில்லை. தனிமைப்படுத்தவன் போல அவன் உணர்ந்தான். போரடித்தது. அப்பாவிற்குப் போன் செய்தான். “அங்கே எல்லாம் எப்படிப்பா இருக்கு?

விஸ்வநாதன் சொன்ன தகவல்கள் இடியாய் அவன் தலையில் விழுந்தது. விஷாலி இப்போது அவன் வீட்டில் இருக்கிறாள். ஈஸ்வரும் அவளும் சீக்கிரமே திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள். ஈஸ்வரின் அம்மா அமெரிக்காவில் இருந்து வந்து விட்டாயிற்று....

மகேஷ் உள்ளே அணு அணுவாய் நொறுங்க ஆரம்பித்தான். இனி வாழ்வதில் அர்த்தமில்லை என்று தோன்றியது.

(தொடரும்)

பரம(ன்) ரகசியம் – 82

றக்கம் தழுவ ஆரம்பித்த வேளையில் தான் பார்த்தசாரதியின் செல்போன் இசைத்தது. பேசியவர் தன்னை  யாரென்று கூட அறிமுகப்படுத்தாமல் சொன்ன செய்தி அவரை அதிரச் செய்தது. “ஈஸ்வரைக் கொலை செய்யப் போறாங்க. அவனைக் காப்பாத்துங்க. ப்ளீஸ்

குரல் தென்னரசு குரல் போலத் தெரிந்தது பிரமையா, உண்மையா என்று அவருக்குத் தெரியவில்லை. பார்த்தசாரதி மின்னல் வேகத்தில் இயங்கினார். உடனடியாகச் சிலருக்குப் போன் செய்து பேசிய அவர் தானும் வேகமாகத் தோட்ட வீட்டுக்குக் கிளம்பினார். 

பாபுஜி சொன்னதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்து விட்டு குருஜி ஒன்றும் சொல்லாமல் கண்களை மூடிக் கொண்டார். பாபுஜி சொன்னார். “எனக்குப் புரியுது குருஜி. அந்த ஆளை நீங்கள் மட்டுமல்ல எல்லாருமே நம்பினோம். திடீர்னு இப்படி பல்டி அடிப்பான்னு யாருமே எதிர்பார்க்கலை......

சிறிது நேரம் மௌனம் சாதித்த குருஜி பின் வரண்ட குரலில் கேட்டார். “தென்னரசு பார்த்தசாரதியிடம் பேசினது இது தான் முதல் தடவையா? இல்லை, இதற்கு முன்னாடியும் செல்போன்ல பேசி இருக்கானா?

இது தான் முதல் தடவை மாதிரி தெரியுது குருஜி

குருஜி கண்களைத் திறந்தார். அவர் அதிர்ச்சியில் இருந்து இன்னமும் மீளவில்லை என்பது பாபுஜிக்குப் புரிந்தது. மெல்ல ஒரு புகைப்படத்தையும் ஒரு காகிதத்தையும் அவர் குருஜியிடம் நீட்டினார். எகிப்தின் மிலிட்டரி இந்த ஆளைத் தேர்தலில் நிறுத்தலாமான்னு நினைக்குது. இந்த ஆள் நம் ஆளுக்கும் நெருங்கிய நண்பராம். விசேஷ மானஸ லிங்கத்தோட சக்தி காத்து, புயல், வெள்ளம்னு இயற்கை சக்திகளை மட்டும் தான் கட்டுப்படுத்துமா இல்லை மக்களோட மனசையும் கட்டுப்படுத்துமான்னு இன்னும் அவங்களுக்கு சந்தேகம் இருக்கு. சொல்லப்போனா எனக்குக் கூட அந்த சந்தேகம் இருக்கு. அதைத் தெரிஞ்சுக்க நமக்கு இது நல்ல சந்தர்ப்பம் இல்லையா?

அந்தப் புகைப்படத்தையும், குறிப்புகள் எழுதிய தாளையும் குருஜி வாங்கிக் கொண்டார். ஆனால் அவர் மனம் மட்டும் இன்னும் தென்னரசு சமாச்சாரத்திலேயே இருந்தது. “மகேஷுக்கு...?

“மகேஷ் தூங்கப் போயிட்டான். நாங்களா எதுவும் சொல்லப் போகலை

“சொல்ல வேண்டாம்...

ஸ்வர் இரவு பதினோரு மணி வரை சின்னத் தூக்கம் போட்டு விட்டு பின்பு தான் குளித்து விட்டுப் பூஜை அறைக்குப் போனான். விசேஷ மானஸ லிங்கத்தின் புகைப்படத்தை வணங்கி விட்டு மூச்சில் ஆரம்பித்து அந்தப் புகைப்படத்தில் கவனத்தைக் குவிக்க ஆரம்பித்த போது தான் தன் அருகில் யாரோ வந்து நிற்பதை உணர்ந்தான். கூடவே திருநீறின் மணம் அந்த பூஜை அறையை நிறைத்தது. கண்களைத் திறந்து அவன் பார்த்தால் பசுபதி தான் நின்றிருந்தார்.  பெரிய தாத்தா இது வரை அவனுக்குத் தரிசனம் தந்தது இல்லை.... அவரை அவன் திகைப்புடனும் பிரமிப்புடனும் பார்த்தான். அவர் கருணை நிறைந்த விழிகளால் அவரைப் பார்த்தார்.   

மெய்சிலிர்த்தவனாய் அவன் அவரைக் குனிந்து வணங்கினான். ஒரு துப்பாக்கிக் குண்டு அவன் தலை இருந்த இடத்தைத் தாண்டிச் சென்று சுவரில் பதிந்தது.  அதிர்ச்சியுடன் நிமிர்ந்த ஈஸ்வருக்கு ஒரு கணம் ஒன்றும் புரியவில்லை. அப்போது தான் வீட்டு வாசலில் முகமூடி அணிந்திருந்த ஒருவன் துப்பாக்கியை நீட்டிக் கொண்டு நிற்பதை அவன் கவனித்தான். அருகே இருந்த பசுபதியைக் காணவில்லை.

அந்த முகமூடிக்காரனும் அவன் குனிவான் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. மறுபடி சுட அவன் யத்தனித்த போது ஈஸ்வர் சிவனை மனதில் தியானித்து  விட்டு அந்த அறையில் இருந்த தேவாரப் புத்தகத்தை அவன் மீது விட்டெறிந்தான். தேவாரப்புத்தகம் அந்த முகமூடி மனிதன் கையிலிருந்த துப்பாக்கியைத் தட்டிக் கொண்டு போய் விழுந்தது. அவன் மின்னலாய்ப் பாய்ந்து அந்தத் துப்பாக்கியை எடுத்த போது விசில் சத்தம் கேட்டது. அவனுடன் வந்த சகா வெளியில் இருந்து சிக்னல் தருகிறான். யாரோ வருகிறார்கள். திரும்பிப் பார்த்தான். ஈஸ்வர் காணவில்லை. ஒரு கணம் யோசித்தவன் பின் தலை தெறிக்க வெளியே ஓடினான். ஒரு போலீஸ்காரர் உள்ளே வந்து கொண்டிருந்தார். அவர் அவனைப் பிடிக்க யத்தனிப்பதற்குள் அவன் அவரைத் தாண்டி ஓடினான். அவனைப் பின் தொடர்வதா, இல்லை ஈஸ்வரைப் போய் பார்ப்பதா என்று குழம்பிய போலீஸ்காரர் ஈஸ்வருக்கு ஆபத்து உள்ளதா என்று பார்ப்பதே முக்கியம் என்று நினைத்தவராக வீட்டுக்குள் ஓடி வந்து பூஜையறையை எட்டிப் பார்த்த போது சுவரோடு ஓட்டி ஈஸ்வர் நின்றிருந்தான்.

அடுத்த கால் மணி நேரத்தில் வேறு இரண்டு போலீஸ்காரர்களும் பார்த்தசாரதியும் வந்து சேர்ந்தார்கள்.

ஸ்வரைக் கொல்ல முடியவில்லை என்ற செய்தி பாபுஜியை எரிச்சலூட்டியது. இத்தனைக்கும் அவர் அனுப்பிய ஆள் குறி தவறாமல் சுடுவதில் பேர் போனவன். “என்ன ஆச்சு?

“அவன் திடீர்னு குனிஞ்சு தரையக் கும்பிட்டான் சார். அப்ப மிஸ் ஆயிடுச்சு...என்று ஆரம்பித்து அந்த ஆள் நடந்ததை எல்லாம் சொன்னான்.

பாபுஜி குருஜியிடம் வந்து ஈஸ்வர் உயிர் தப்பியதைச் சொன்னான். “... அவன் திடீர்னு தரையைத் தொட்டுக் கும்பிட்டானாம். ஏன்னு தெரியலை

வேதபாடசாலையின் மண்ணை ஈஸ்வர் கும்பிட்டது நினைவுக்கு வர குருஜி சொன்னார். “அவனுக்கு அடிக்கடி தரையைத் தொட்டுக் கும்பிடற பழக்கம் உண்டு

பாபுஜி குழப்பத்துடனும், கோபத்துடனும் கேட்டார். “அவன் என்ன லூஸா குருஜி?

பார்த்தசாரதிக்கு ஈஸ்வர் நலமாய் இருப்பதைப் பார்த்த பிறகு தான் நிம்மதி ஏற்பட்டது. ஈஸ்வர் சொன்னதை எல்லாம் கேட்ட போது பசுபதி தன்னைக் காப்பாற்றிக் கொள்ளா விட்டாலும் கூடத் தன் குடும்பத்தாரைக் காப்பாற்றுவதில் இறந்த பின்னும் அக்கறை கொண்டவராகவே இருக்கிறார் என்று தோன்றியது. ஈஸ்வர் அந்த தேவாரப் புத்தகத்தை எறியாமல் இருந்திருந்தாலும் காப்பாற்றப்பட்டிருப்பானா என்று கேட்டுக் கொண்டார். விடை தெரியவில்லை.

ஈஸ்வர் மற்ற போலீஸ்காரர்களும், பார்த்தசாரதியும் அந்த நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தது எப்படி என்று கேட்டான். யாரோ ஒரு மர்மநபர் போன் செய்தார் என்று மட்டும் பார்த்தசாரதி தெரிவித்தார். கேட்ட குரல் தென்னரசுவின் குரல் போல் இருந்தது என்று அவனிடம் அவர் சொல்லவில்லை. தென்னரசு பற்றிய சந்தேகத்தை அவர் அவனிடம் சொல்லி இருக்காதது போலவே, குழம்ப வைத்த இந்தப் போன் கால் விஷயத்தையும் அவர் சொல்லவில்லை. தென்னரசு ஒரு புதிராகவே அவருக்கு இருந்தார்....

பரமேஸ்வரனின் பேரனுக்குப் பாதுகாப்பு அளிக்க மேலிடத்தில் சொல்வதில் அவருக்குப் பிரச்சினை இருக்கவில்லை.   ஒரு முறை கொலை முயற்சி நடந்திருக்கிறது என்று தெரிந்தவுடன் எத்தனை ஆட்கள் ஈஸ்வரின் பாதுகாப்புக்குத் தேவை என்று கேட்டு அனுமதி அளித்து விட்டார்கள். பார்த்தசாரதியும் ஈஸ்வர் அங்கிருக்கும் வரை தானும் அங்கிருப்பது என்ற முடிவுக்கு வந்தார்.  

ஈஸ்வர் இயல்பு நிலைக்குத் திரும்பியதும் முதல் வேலையாக கணபதியைத் தொடர்பு கொள்ள நினைத்தான். கொலை முயற்சி, பசுபதி தரிசனம் போன்ற எத்தனையோ விஷயங்களைப் பற்றி யோசிக்க மனம் முனைந்தாலும் அவன் அந்த விபரீத ஆராய்ச்சிகள் தொடர்ந்து விசேஷ மானஸ லிங்கம் தவறானவர்கள் வசம் போய் விடக் கூடாது என்பதற்கே முன்னுரிமை தந்தான். காலம் அவன் வசம் இல்லை.... அவன் நிதானித்தால் அவர்கள் முந்தி விடுவார்கள். பின் அவர்களை நிறுத்துவது கஷ்டம் என்பதை அவன் உணர்ந்திருந்தான்.

அதை பார்த்தசாரதியிடம் தெரிவித்து விட்டு பூஜையறைக்குப் போனவனுக்கு விசேஷ மானஸ லிங்கத்தின் அலைகளுடன் லயிக்க முன்பை விட அதிக நேரம் தேவைப்பட்டது. அது சாத்தியமான போது விசேஷ மானஸ லிங்கத்தின் தரிசனம் கிடைத்தது. ஓங்கார நாதம் கேட்டுக் கொண்டிருக்க விசேஷ மானஸ லிங்கம் தனியாக விளக்கொளியில் ஜொலித்துக் கொண்டிருந்தது. மனிதர்கள் யாரும் அருகில் தெரியவில்லை. ஈஸ்வர் மானசீகமாக கணபதியைத் தேடினான். மனக்கண்ணில் கணபதியைப் பார்த்து தன் கவனத்தைக் குவித்தான். சிறிது நேரத்தில் ஒரு அறையில் உறங்கிக் கொண்டிருந்த கணபதி அவன் மனக்கண்ணில் தெரிந்தான். ஈஸ்வர் அவனை அழைத்தான். கணபதி, கணபதி

கணபதியை எழுப்புவது சுலபமாக இருக்கவில்லை. ஈஸ்வர் பல முறை முயற்சி செய்ய வேண்டி வந்தது. கணபதிக்கு கனவில் ஈஸ்வர் தெரிந்தான். ஈஸ்வரைக் கனவில் பார்த்த சந்தோஷம் கணபதி முகத்தில் தெரிந்தது. ‘அண்ணன்என்று மனதில் சொல்லிக் கொண்டு கணபதி புரண்டு படுத்தான்.

“கணபதி... கணபதி... எழுந்திரு கணபதி.. உன் கிட்ட பேசணும்

இயல்பாகவே தூக்கம் அதிகமாக இருந்த கணபதி என்ன இந்த அண்ணன் என்னைத் தூங்கவே விட மாட்டேன்கிறார்என்று சொல்லிக் கொண்டே  மீண்டும் உறங்கப் பார்த்தான். ஆனால் ஈஸ்வர் கூப்பிட்டுக் கொண்டே இருப்பது போல் தோன்றவே கஷ்டப்பட்டு படுக்கையில் எழுந்து உட்கார்ந்தான். “என்ன இன்னைக்கு அண்ணன் கனவாவே வருது....

எழுந்து உட்கார்ந்த கணபதியிடம் என்ன சொல்வது, எப்படி சொல்வது என்பது ஈஸ்வருக்குத் தெளிவில்லாமல் இருந்தது. நேரில் சொல்வதே கஷ்டம் தான். அப்படி இருக்கையில் இப்படி டெலிபதியாக அனுப்பும் செய்திகள் அவனுக்கு எந்த அளவு புரியும் என்பதும் தெரியவில்லை. இந்த லட்சணத்தில் இவனோடு சேர்ந்து ஞானம் படைத்தவனைத் தேடுவது என்பது இமாலய சாதனையாகவே இருக்கும் போலத் தெரிந்தது.

ஈஸ்வர் சொன்னான். “கணபதி நீ தப்பான இடத்தில் இருக்கே. நீ நினைக்கிற மாதிரி அந்த குருஜி நல்லவர் இல்லை.... அந்த சிவலிங்கத்தை அவர்கள் கண்டிப்பாகத் தப்பான வழியில் தான் பயன்படுத்தப் போகிறாங்க

கணபதிக்கு ஆச்சரியமாய் இருந்தது. “என்ன இது கண்ணு முழிச்சா கனவு போயிடும்பாங்க. எனக்கு இன்னும் கனவு அப்படியே இருக்கு. அண்ணன் வேற ஏதோ சொல்றாரு

செய்தி அவனைப் போய் சேரவில்லை என்பது புரியவே ஈஸ்வர் சொன்னதில் சில வார்த்தைகளை மட்டும் அழுத்தமாய் சொன்னான். தப்பான இடம்... தப்பான இடம்.... குருஜி... குருஜி... நல்லவரில்லை..... தப்பு நடக்குது.... தப்பு நடக்குது...

கணபதிக்குத் தப்பு என்கிற சொல் மட்டும் தெளிவாக மனதில் பதிந்தது. அவனுக்குத் தெரிந்து அவன் சமீபத்தில் செய்த தப்பு சிவன் முன்னாலேயே உட்கார்ந்து கொண்டு சீடை சாப்பிட்டது தான். “ஆமா நான் சீடை சாப்பிட்டது தப்பு தான்.. அதை இவர் வேற சொல்லணுமா?... இது அண்ணனுக்கு எப்படித் தெரிஞ்சுது.... சிவன் வேலையா இது? ஏன் சிவனே, நான் தான் மன்னிப்பு கேட்டுட்டேனே, பின்ன ஏன் ஊர் பூரா அதைச் சொல்லி இருக்கே?

ஈஸ்வருக்கு அவன் ஏதோ சாப்பிடுவது பற்றி சொல்கிற மாதிரி இருந்தது. திடீர் என்று விசேஷ மானஸ லிங்கம் கணபதி அருகே தெரிந்தது. கணபதி அந்த சிவலிங்கத்தை நினைத்திருக்கிறான் போல இருக்கிறது! அவன் சொல்லி முடித்த வார்த்தைகளில் மறுபடி கவனம் வைப்பது சுலபமாக இருந்தது. கவனத்தைக் கூராக்கிய போது கணபதி சொன்னதைத் திரும்பக் கேட்க முடிந்தது.  ஈஸ்வருக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.

ஈஸ்வர் கணபதி அருகே தெரிந்த விசேஷ மானஸ லிங்கத்தை மானசீகமாக வணங்கினான். “கடவுளே, இப்படி ஒரு வெகுளியைப் படைச்சுட்டு அவனை இப்போது அவர்கள் பக்கம் நிறுத்தி இருக்கிறியே. இது நியாயமா? இவனுக்கு நான் என்ன சொல்லி எப்படி புரிய வைப்பேன்?

கணபதிக்கு ஈஸ்வர் விசேஷ மானஸ லிங்கத்தை வணங்குவது தெரிந்தது. சந்தோஷமாய் சொன்னான். “அண்ணா. இது தான் நான் சொன்ன சிவன்... இவருக்கு ரொம்பவே சக்தி இருக்கு. என்ன நினைச்சாலும் செய்து கொடுப்பார்.... ரொம்பவே நல்லவரு

ஈஸ்வர் பாதி சிரிப்புடனும் பாதி மனத்தாங்கலுடன் பரமனிடம் கேட்டான். “இவன் கிட்ட நல்லவருன்னு சர்டிபிகேட் வாங்கிற அளவு நீ நிஜமாகவே நல்லவன் தானா. அப்படியானால் அவனை ஏன் மோசமான ஆட்கள் பயன்படுத்த நீ அனுமதிக்கிறாய்?

விசேஷ மானஸ லிங்கம் மௌனம் சாதித்தது. பக்தர்களின் தர்மசங்கடமான கேள்விகளுக்கு இறைவன் பதில் அளிப்பதில்லை போலும்! ஈஸ்வர் மறுபடியும் கணபதிக்குப் புரிய வைக்க முயற்சித்தான். “கணபதி குருஜி கெட்டவர்நம்பாதே. சிவலிஙகத்தை வச்சு தப்பு பண்ணப் போறாங்க.என்று திரும்பத் திரும்ப அழுத்திச் சொன்னான்.
 
கணபதிக்கு அவன் சொல்வது புரிகிற மாதிரி இருந்தது. ஆனால் அதன் கூடவே ‘என்ன அண்ணன் குருஜியைப் போய் கெட்டவர்ன்னு சொல்றார்?என்று மனம் பதறியது. “அண்ணா உங்களுக்குக் குருஜியைத் தெரியாது. அதனால தான் அப்படிச் சொல்றீங்க. அவர் ரொம்ப நல்லவருஎன்றான்.

ஈஸ்வர் விசேஷ மானஸ லிங்கத்திடம் சொன்னான். “இவன் உன்னையும் நல்லவர்னு சொல்றான். குருஜியையும் நல்லவர்னு சொல்றான். இவன் அகராதியில கெட்டவங்கன்னு யாராவது இருக்காங்களா?

கணபதிக்கு ஈஸ்வர் சிவலிங்கத்தைப் பார்த்து ஏதோ கேட்பது போலத் தெரிந்தது. ‘ஓ குருஜி நல்லவரான்னு அண்ணன் சிவன் கிட்ட கேட்கறார் போலத் தெரியுது. சிவனே... நீயே அண்ணன் கிட்ட சொல்லு. குருஜி நல்லவர்ன்னு... அண்ணன் அமெரிக்காவுலயே இருந்தவருங்கறதால அண்ணனுக்கு குருஜி பத்தி தெரியாதுல்ல....

ஈஸ்வர் பேச்சும் செயலும் இழந்து போய் கணபதியைப் பார்த்தான். இவன் மனதில் இந்த அளவு உயர்ந்த இடம் பிடித்துள்ள குருஜியை அவன் எப்படி இறக்குவான்?

ஈஸ்வர் ஒன்றுமே சொல்லாமல் தன்னையே பார்ப்பது கணபதிக்கு மனதில் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது. அண்ணனும் நல்லவர் தான். அவர் ஏன் குருஜியை தப்பாய் சொல்றார்

அவனையும் கூட கணபதி நல்லவர் என்று சொன்னதற்கு விசேஷ மானஸ லிங்கம் சிரிப்பது போல் ஈஸ்வருக்கு பிரமை ஏற்பட்டது.  ஈஸ்வர் குருஜியைப் பற்றி இனி இவனிடம் எதுவும் சொல்லிப் பயனில்லை என்பதைப் புரிந்து கொண்டான். அடுத்ததாகச் சொன்னான். “கணபதி அங்கே தப்பு நடக்குது... தப்பு நடக்குது

ஈஸ்வர் சீடை விவகாரம் இல்லாத தப்பு ஒன்றைச் சொல்கிறான் என்று கணபதிக்குப் புரிந்தது. அநியாயமாய் சிவன் சீடை சமாச்சாரத்தை அண்ணனிடம் சொல்லிட்டார்னு நினைச்சுட்டமே. என்னை மன்னிச்சுடு சிவனே. எனக்கு அறிவு அவ்வளவு தான்.... கனவுல வந்து அண்ணன் நிஜமாவே பேசற மாதிரி இருக்கே. என்ன இது? அண்ணன் எதைத் தப்புன்னு சொல்றார்?”.  கணபதி எழுந்து விட்டான்.

ஈஸ்வர் திகைத்தான். ‘இவன் எங்கே கிளம்பிட்டான்?

கணபதி அறையை விட்டு வெளியே வந்தான். ஹரிராம் அறைக் கதவு திறந்திருந்தது. எட்டிப் பார்த்தான். ஹரிராம் பகவத் கீதை படித்துக் கொண்டிருந்தார். நீங்க இன்னும். தூங்கலையா. எனக்கு ஒரு உபகாரம் செய்யறீங்களா? என் கனவுல எங்க அண்ணன் வந்து தப்பு நடக்குது’ ’தப்பு நடக்குதுன்னு சொல்ற மாதிரி இருக்கு. இது தூக்கத்துல வர்ற கனவு இல்லை. முழிச்சுகிட்டே இருக்கறப்ப வர்ற கனவு. என்ன செய்யலாம். நீங்களே சொல்லுங்களேன்

ஹரிராமிற்கு கணபதி சொன்னது புரிய சிறிது நேரம் ஆனது. பகவத் கீதையை மூடி வைத்து விட்டு அவனைப் பார்த்துப் புன்னகை செய்தார். இவனுக்கு முழிச்சுகிட்டே இருக்கறப்ப வர்ற கனவுஎன்ன என்று பார்த்தார். அவன் மூலமாக அவருக்கு ஈஸ்வர் தெரிந்தான்.

ஈஸ்வருக்கு அதிர்ச்சியாக இருந்தது. கடைசியில் குருஜியின் கூட்டத்து ஆள் ஒருவரிடம் போய் இதைச் சொல்கிறானே இவன்?

ஹரிராம் கேட்டார். “இது தான் உங்கண்ணனா?

கணபதிக்கு ஆச்சரியமாய் இருந்தது. “ஓ... கனவுல வர்ற ஆளைக் கூட உங்களால பார்க்க முடியுமா? ஆமா அது தான் எங்கண்ணன். அண்ணன்னா சொந்த அண்ணன் இல்லை. அப்படி இருந்திருந்தா அவர் அழகுல பாதியாவது எனக்கு வந்திருக்காதா? அவர் எனக்கு அண்ணன் மாதிரி... இப்ப சிவலிங்கத்துக்கு ஒரு பட்டு வேஷ்டி கட்டியிருக்கேனே, அது அவர் வாங்கித் தந்தது தான்.....

கணபதி நிறுத்தாமல் அன்று நடந்ததை எல்லாம் சொன்னான்.  ஹரிராமிற்கு அவன் சொல்லித் தான் தெரிய வேண்டும் என்றில்லை, அவனைப் பார்க்கையிலேயே அவன் வாழ்க்கையில் இருந்து எந்த விஷயத்தையும் அவரால் தெரிந்து கொள்ள முடியும் என்றாலும் கூட அவன் சொன்னதை சுவாரசியத்துடன் கேட்டார்.

“...இன்னொரு வேஷ்டி என் பிள்ளையாருக்கு வாங்கித் தந்திருக்கார். அதையும் உங்களுக்குக் காட்டவா?...கேட்டு விட்டு பதிலுக்குக் கூடக் காத்திருக்காமல் கணபதி உற்சாகமாகத் தனதறைக்கு ஓடினான்.

ஈஸ்வருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. கணபதி அந்தப் பட்டுத் துணியுடன் வந்து ஆவலுடன் ஹரிராமைக் கேட்டான். “நல்லா இருக்கில்ல?

ஹரிராம் தலையசைத்தார். “இன்னும் இதை என் பிள்ளையார் பார்க்கல.என்று அவன் சொல்ல ஹரிராம் புன்னகைத்தார். அவ ர் இது வரை இப்படி ஒரு அன்பான நல்ல மனதைப் பார்க்கவில்லை. சொல்லப் போனால் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாத ஒரு நல்ல உள்ளத்தை முதல் முறையாகத் தன் வாழ்க்கையில் அவர் பார்க்கிறார்.

அவனிடம் கேட்டார். “சரி உங்க அண்ணன் தப்பு நடக்குதுன்னு எதைச் சொல்றார்?

அது தான் புரியலைஎன்று சொன்ன கணபதி விரித்த பட்டு வேஷ்டியைக் கவனமாக மடிக்க ஆரம்பித்தான். ஹரிராம் பார்வை அவனை ஊடுருவி ஈஸ்வரைப் பார்த்தது. ஈஸ்வருக்கு அவரை நம்பலாமா கூடாதா என்று தெரியவில்லை. ஆனால் இப்போதைக்கு அவரை விட்டால் அவனுக்கு வேறு வழியில்லை. அவர் கணபதியைப் பார்த்த பார்வையில் இருந்த கனிவு அவரை நம்பச் சொன்னது.

“தயவு செய்து அவனுக்குப் புரிய வையுங்கள்...என்று ஆரம்பித்த ஈஸ்வர் கணபதிக்குத் தெரிவிக்க நினைத்த விஷயத்தைச் சொன்னான். ஈஸ்வர் மன அலைகளில் அனுப்பியதை ஹரிராம் அப்படியே அவனுக்கு பேச்சு வடிவில் தெரிவித்தார்.

கணபதி தலையைப் பலமாக ஆட்டிச் சொன்னான். “அண்ணன் தப்பா புரிஞ்சுகிட்டிருக்கார். குருஜி தப்பு செய்ய மாட்டார்..... அவரை எனக்கு எத்தனையோ வருஷமாத் தெரியும்.... இந்த ஆராய்ச்சி தப்பானதுன்னா அவர் அதுக்கு அனுமதிக்கவே மாட்டார்

ஈஸ்வருக்கு இனி எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. பரிதாபமாக அவனைப் பார்க்க கணபதிக்கு அதைப் பார்க்கவும் கஷ்டமாய் இருந்தது. இருதலைக்கொள்ளி எறும்பாய் தவித்த கணபதி ஒரு முடிவுக்கு வந்தான். “குருஜியை நேராவே கேட்டுடறேன்.

அவன் உறுதியாகத் தீர்மானித்து விட்டு குருஜியின் அறையை நோக்கி நடந்தான். வேண்டாம்.. வேண்டாம்என்று ஈஸ்வர் பதற்றத்துடன் அனுப்பிய செய்தியை கணபதி பொருட்படுத்தவில்லை.

(தொடரும்)