Thursday, May 29, 2014

பரம(ன்) ரகசியம் - 40




மெரிக்காவில் இருந்து டாக்டர் ஜான்சன் மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கிய போது அவருக்காக அவர் பெயர் எழுதிய அட்டையை வைத்துக் கொண்டு ஒருவன் நின்றிருந்தான். அவர் நெருங்கியவுடன் அவன் எதுவும் பேசாமல் நடக்க ஆரம்பித்தான். புருவங்களையும் தோள்களையும் உயர்த்திய ஜான்சன் அவன் பின்னாலேயே சென்றார். விமான நிலையத்திற்கு வெளியே சென்ற பின் தயாராக நின்று இருந்த ஒரு காரின் பின் கதவை அவன் திறந்து விட அவர் உள்ளே ஏறி அமர்ந்தார். அவன் காரில் ஏறவில்லை. கார் கிளம்பியது. அவர் பின்னால் திரும்பிப் பார்த்த போது அவன் தன் மொபைல் போனில் சுருக்கமாக ஏதோ சொல்லி மொபைல் போனை சட்டைப் பையில் வைத்துக் கொண்டு எதிர்ப்புறமாக நடக்க ஆரம்பித்தான். காரில் ஏற்றி விட்டேன் என்ற தகவலை அவன் சொல்லி இருக்க வேண்டும் என்று அவர் நினைத்தார்.

ஜான்சன் கார் டிரைவரைப் பார்த்தார். அவனும் எதுவும் பேசத் தயாராக இருந்தது போல் தெரியவில்லை. அது ஜான்சனை ஆச்சரியப்படுத்தவில்லை. அவனை அனுப்பியவர்கள் அதிகம் பேசுபவர்களை வேலைக்கு வைத்துக் கொள்வதில்லை என்பது அவருக்கு நன்றாகவே தெரிந்தது தான். கார் தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் வேகமாகச் செல்ல ஆரம்பித்தது.

கார் அவரை எங்கே அழைத்துச் செல்கிறது என்பது அவருக்குத் தெரியாது. அவர் வாய் விட்டுக் கேட்கவும் இல்லை. கேட்டாலும் பதில் வந்திருக்க வாய்ப்பில்லை. அரை மணி நேரம் கழித்து ஐந்து நட்சத்திர ஓட்டல் முன் கார் நின்றது. அங்கும் ஒருவன் தயாராக நின்று கொண்டிருந்தான். அவரைப் பார்த்தவுடன் பவ்யமாக சற்று குனிந்து விட்டு அவரை உள்ளே அழைத்துச் சென்றான்.

ஓட்டலின் ஆறாவது மாடியில் இருந்த ஒரு சிறிய கான்ஃப்ரன்ஸ் ஹால் கதவைத் திறந்து அவரை உள்ளே விட்டு கதவை சாத்திக் கொண்டான். உள்ளே மிக மங்கலான விளக்கு வெளிச்சத்தில் ஆறு பேர் அமர்ந்திருந்தார்கள். அந்த மங்கலான விளக்கும் அவர்கள் தலைகளுக்குப் பின்பக்க சுவரில் எரிந்து கொண்டு இருந்ததால் யார் முகமும் அவருக்குத் தெளிவாகத் தெரியவில்லை. வெளிச்சத்தில் நின்று கொண்டு இருந்த ஒருவர் அவர் அருகில் வந்து “வாருங்கள் ஜான்சன்என்று கைகுலுக்கி வரவேற்றார். மற்ற ஆறு ஜோடிக் கண்களும் அவரைக் கூர்ந்து கவனிப்பதை ஜான்சனால் உணர முடிந்தது.

வரவேற்றவரை ஜான்சன் மிக நன்றாக அறிவார். பாபுஜி என்று அனைவராலும் அழைக்கப்படும் அவரை நியூயார்க்கில் சந்தித்து அவர் பேசி இருக்கிறார். கடந்த சில வருடங்களாக இந்தியாவின் முதல் பணக்காரர்கள் லிஸ்டில் அவர் பெயர் நான்கு, ஐந்தாம் இடங்களில் மாறி மாறி இருந்து வந்தாலும்  கணக்கில் காட்டாத பல இடங்களில் உள்ள அவருடைய கோடிக் கணக்கான சொத்துக்களையும் சேர்த்து எடுத்துக் கொண்டால் அவர் தான் முதல் பணக்காரராக இருப்பார் என்பதில் ஜான்சனுக்குச் சந்தேகமில்லை.

உட்காருங்கள் டாக்டர் ஜான்சன்”  பாபுஜி காலியாக இருந்த ஒரு நாற்காலியைக் காட்டினார். ஜான்சன் அதில் அமர்ந்தார்.

பாபுஜி அங்கு அமர்ந்திருந்த மற்றவர்களை அறிமுகப்படுத்த வேண்டியது அவசியம் இல்லை என்பது போல் நேரடியாக விஷயத்திற்கு வந்தார்.

டாக்டர் ஜான்சன், என்  நண்பர்கள் நம் விசேஷ மானசலிங்கம் ப்ராஜெக்ட் பற்றி அறிந்து கொள்ள ஆசைப்படுகிறார்கள். அந்த சிவலிங்கம் பற்றியும் நாம் நடத்தப் போகும் ஆராய்ச்சிகள் பற்றியும் அவர்களுக்கு விளக்கமாகச் சொல்லுங்களேன்

முகம் கூடத் தெளிவாகத் தெரியாத நபர்களிடம் விளக்கம் தருவது ஜான்சனுக்கு என்னவோ போல் இருந்தது. அவர்களால் அவரை நன்றாகப் பார்க்க முடியும் ஆனால் அவரால் அப்படிப் பார்க்க முடியாது என்பது அவருக்கு சிறிதும் பிடிக்காத சூழ்நிலையாக இருந்தது என்றாலும் பேச ஆரம்பித்தார். அவர் அருகில் அமர்ந்திருந்த பாபுஜியிடம் அவர் மணிக்கணக்கில் இதை விவரித்திருக்கிறார். பாபுஜி டாக்டர் ஜான்சனிடம் மட்டும் அல்லாமல் குருஜியிடமும் இதைப் பற்றி நிறைய பேசி இருக்கிறார். என்றாலும் ஜான்சன் பேசுவதை முதல் முறை கேட்பது போல் கேட்டார்.

விசேஷ மானசலிங்கம் பற்றி சொல்ல ஆரம்பித்து தாங்கள் மேற்கொள்ளவிருக்கிற ஆராய்ச்சிகள் பற்றியும் ஜான்சன் சொல்லிக் கொண்டு போகையில் பரிபூரண கவனத்துடன் அவர்கள் அனைவரும் கேட்டார்கள். அந்த மங்கலான வெளிச்சமும் பழகிப் போன பின் எதிரில் அமர்ந்திருந்த ஆறு பேரில் ஒரு நபர் ஒரு பெண் என்பது மட்டும் அவருக்குத் தெரிய வந்தது. மற்றவர்கள் பற்றி அவரால் எதுவும் யூகிக்கவும் முடியவில்லை.

ஜான்சன் பேசி முடித்த பின் அங்கு அசாதாரண அமைதி நிலவியது. ஒரு நிமிடம் யாரும் எதுவும் பேசவில்லை.

பாபுஜி தான் மௌனத்தைக் கலைத்தார். “அந்த சிவலிங்க ஆராய்ச்சிகள் செய்து முடிக்க உங்களுக்கு எவ்வளவு காலம் தேவைப்படும்?

அதை இப்போது சொல்வது கஷ்டம்

“பின் எப்போது சொல்வது சுலபம்?அங்கிருந்த பெண்மணி கேட்டாள். அவள் ஆங்கிலத்தைக் கேட்கும் போது அவள் இந்தியாவைச் சேர்ந்தவள் அல்ல என்பது தெரிந்தது. அவள் எந்த நாட்டைச் சேர்ந்தவள் என்பதை ஊகிக்க முடியவில்லை.

ஜான்சன் சொன்னார். “விசேஷ மானச லிங்கம் பற்றின நமக்குக் கிடைத்திருக்கிற அத்தனை தகவல்களும் நேரடியாய் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து வந்ததல்ல. கடைசியாய் கிட்டத்தட்ட அறுபது வருடங்கள் பசுபதியிடம் இருந்த காலத்திலோ நமக்கு தகவல்கள் சொல்லக் கூடியவர்கள் யாரும் அதை நெருங்கியது கூட இல்லை.  அந்த சிவலிங்கத்தின் சக்தி எல்லை இல்லாதது என்பதில் மட்டும் இது வரை கேள்விப்பட்ட விஷயங்கள் ஒத்துப் போகின்றன. அந்த விசேஷ மானச லிங்கத்தை குருஜி நேரில் பார்த்து பரிசோதித்து அவரது அபிப்பிராயம் சொன்ன பிறகு தான் ஆராய்ச்சிகள் முடிய எவ்வளவு காலம் தேவைப்படும் என்பதைச் சரியாகச் சொல்ல முடியும்

அந்தப் பெண்மணி கேட்டாள். “டாக்டர் ஜான்சன் நீங்கள் மெத்தப் படித்த  அனுபவம் மிக்க வெற்றிகரமான சைக்காலஜிஸ்ட். அப்படி இருக்கையில் இந்த விஷயத்தில் உங்களை விட நீங்கள் அதிகமாக குருஜியை அதிகம் நம்புவது ஏன்?

ஜான்சன் சொன்னார். நான் ஆராய்ச்சியாளன் மட்டுமே. ஆனால் குருஜி அந்த விசேஷ மானச லிங்கத்தை பூஜித்து வந்தவர்களுக்கு இணையான சக்தி படைத்தவர். எனக்குத் தெரிந்து இந்த சப்ஜெக்டில் குருஜி அளவுக்கு அறிந்தவர்கள் இல்லை. அவர் எத்தனையோ வருடங்கள் சித்தர்களிடமும், யோகிகளிடமும் சேர்ந்து இருந்து நிறையக் கற்றிருக்கிறார். அந்த விசேஷ மானச லிங்கத்தை நேரில் பார்க்காமலேயே அதைத் தொட்டு எடுக்கக் கூட எப்படிப்பட்டவர்களால் முடியும், எப்படி எடுத்துக் கொண்டு வர வேண்டும் என்பதை எல்லாம் விளக்கமாகச் சொன்னவர் அவர். அந்தக் கொலைகாரன் அது இருக்கும் பூஜை அறைக்குள் எந்தக் காரணம் வைத்தும் போகக் கூடாது என்று எச்சரித்தவர் அவர். அவன் அவர் பேச்சைக் கேட்டிருந்தால் அனாவசியமாகச் செத்திருக்க மாட்டான். அவன் பிணத்தைப் பார்க்காமல் இருந்திருந்தால் சிவலிங்கத்தைத் தூக்கின பையனும் அந்த அளவுக்குப் பயந்திருக்க மாட்டான்.... அந்த சிவலிங்கத்தைத் தொடவும், பூஜை செய்யவும் தகுந்த ஆளாய் கணபதியைத் தேர்ந்தெடுத்ததும் குருஜி தான். இதுவரை அவர் கணக்கு எந்த விதத்திலும்  பொய்யாகவில்லை.....

அதற்குப் பின் அந்தப் பெண்மணி எதுவும் சந்தேகம் கேட்கவில்லை. ஆனால் அவள் அருகில் இருந்து ஒரு வயதான குரல் கேட்டது.  “குருஜி எப்போது சிவலிங்கத்தை நேரில் பார்ப்பார்?

இன்னேரம் அவர் அந்த சிவலிங்கத்தை தரிசித்திருக்க வேண்டும்... நான் அங்கே போய் சேர்வதற்குள் அவர் தெரிந்து கொள்ள வேண்டியதைத் தெரிந்து கொண்டிருப்பார். நானும் ஆராய்ச்சியில் என்னோடு இறங்கப் போகிறவர்களும் அதை எப்படி அணுக வேண்டும் என்று அவர் சொல்வார். மீதியை நான் தீர்மானித்துக் கொள்ள முடியும்

பாபுஜி கேட்டார். “ஆராய்ச்சியில் ஈடுபடுத்தப் போகிறவர்களைத் தேர்ந்தெடுத்து விட்டீர்களா?

இது வரை விசேஷ மானச லிங்கம் பற்றிக் கேள்விப்பட்டதை வைத்து சுமார் 13 பேரைத் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறேன். குருஜி சிவலிங்கத்தை நேரில் பார்த்து விட்டு வந்த பிறகு நானும் அவரும் சேர்ந்து அந்த 13 பேரில் மூன்று அல்லது நான்கு பேரை வடிகட்டித் தேர்ந்தெடுப்போம்....

அதன் பின் அவர்களிடம் இருந்து எந்தக் கேள்வியும் எழாமல் போகவே பாபுஜி எழுந்து நின்று “நன்றி டாக்டர் ஜான்சன்என்று கைகுலுக்கி அனுப்பி வைத்தார். ஜான்சனும் நன்றி தெரிவித்து விட்டு முகம் தெரியாத அந்த நபர்களைப் பார்த்து கை அசைத்து விட்டு வெளியேறினார்.

அவரை உள்ளே அனுப்பி விட்ட அதே ஆள் அவரை வெளியே அழைத்துச் சென்று விட்டான். வேறொரு கார் அவரை விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லக் காத்திருந்தது. ஜான்சன் தமிழகத்திற்குப் பயணமானார். அவர் மனம் மட்டும் கான்ஃப்ரன்ஸ் ஹாலில் இருந்த அந்த மர்ம நபர்களிடமே தங்கியிருந்தது. அந்த ஆறு பேரையும் நாளை தெருவில் நேராக சந்தித்தாலும் அவருக்கு அவர்களில் ஒருவரைக் கூட அடையாளம் தெரியாது....

ஜான்சன் சென்றவுடன் கான்ஃப்ரன்ஸ் ஹாலில் எல்லா விளக்குகளும் எரிய ஆரம்பித்தன. அந்த அறுவருமே இந்தியாவைச் சேர்ந்தவர்கள் அல்ல. ஒரு அமெரிக்கர், ஒரு ஜப்பானியர், ஒரு தென்னாப்பிரிக்கர், ஒரு இஸ்ரேல்காரர், ஒரு ஜெர்மானியர் (பெண்மணி) மற்றும் ஒரு எகிப்தியர்.

இஸ்ரேல்காரர் பாபுஜியைக் கேட்டார். “இந்த டாக்டர் ஜான்சனை எந்த அளவுக்கு நம்பலாம்...

பாபுஜி அமைதியாகச் சொன்னார். “அவருக்கு உயிர் மேல் ஆசை இருக்கிறது. அதிகமாய் பணத் தேவையும் இருக்கிறது. அவருக்கு விவாகரத்து கிடைக்கப் போகிறது. மனைவிக்கு செட்டில் செய்ய அவருக்கு நிறைய பணம் தேவைப்படுகிறது... அதனால் நம்மை அனுசரித்து தான் இருப்பார்

ஜெர்மானியப் பெண்மணி கேட்டாள். இந்த ஆராய்ச்சியில் ஈடுபடுத்தப்படுபவர்களுக்குக் கூட நம்மைப் பற்றித் தெரியாது தானே?


ஜான்சனுக்கு  என்னை மட்டும் தான் தெரியும். உங்களைத் தெரியாது. ஜான்சன் பயத்தாலும் பேராசையாலும் என்னைப் பற்றி வெளியே சொல்ல மாட்டார். குருஜிக்கு நம் எல்லாரையும் தெரியும் என்றாலும் நம் ப்ராஜெக்ட்டுக்கு வித்திட்டவரே அவர் தான் என்பதால் எந்த நிலையிலும் நம்மைப் பற்றி வெளியே சொல்ல மாட்டார். அதனால் நம்மைப் பற்றி எந்த தகவலும் வெளியே கசியாது. அதனால் கவலை வேண்டாம்...

இந்த ஆராய்ச்சி முடிவுகள் எப்போது தெரியும்?– ஒருவர் கேட்டார்.

“மூன்று வாரங்கள் ஆகலாம்...

மேலும் பதினைந்து நிமிடங்கள் சில்லரை சந்தேகங்கள் கேட்டு திருப்தி அடைந்த அறுவரும் கிளம்பிச் சென்றனர். அறுவரில் இருவர் விமான நிலையத்திற்கும், இருவர் அந்த ஓட்டலிலேயே வேறு அறைகளுக்கும், இருவர் தாங்கள் தங்கி இருந்த வேறு வேறு ஓட்டல்களுக்கும் போனார்கள். அவர்கள் அறையை விட்டுச் சென்று மூன்று நிமிடங்கள் பொறுத்திருந்து விட்டு பாபுஜி அந்த கான்ஃப்ரன்ஸ் ஹாலில் பூட்டப்பட்டிருந்த ஒரு சிறிய அறைக் கதவைத் திறந்தார். சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த முதியவர் ஒருவர் நாற்காலியை நகர்த்திக் கொண்டு ஹாலிற்கு வந்தார்.

“அப்பா நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

அந்த சிறிய அறைக்குள் இருந்தபடியே ஹாலில் நடந்த அத்தனையையும் ரகசிய காமிரா வழியாக டிவியில் பார்த்துக் கொண்டிருந்த பாபுஜியின் தந்தை சொன்னார். “ஒரு விஷயம் மட்டும் தான் எனக்கு இடிக்கிறது

“என்ன அது?

அந்த சிவலிங்கத்தைப் பராமரிப்பதாய் சொல்லப்படும் மூன்று பேரில்  இரண்டு பேராய் பசுபதியையும், அந்த ஜோதிடரின் குருநாதரையும் எடுத்துக் கொண்டால் கூட மீதம் ஒரு ஆள் இருக்கிறார் இல்லையா? சிவலிங்கத்தை பசுபதியிடம் கொண்டு வந்து கொடுத்த சித்தர் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்பதால் அந்த மூன்றாம் ஆள் அந்த சித்தராகத் தான் இருக்க வேண்டும். அந்த சித்தர் இருக்கிற வரை உங்கள் ப்ராஜெக்ட் ஒழுங்காய் முடிவது எனக்கு சந்தேகமாகத் தான் இருக்கிறது...

பாபுஜி தந்தையை யோசனையுடன் பார்த்தார். எதிலும் ஆழமாய் சென்று பார்க்க முடிந்த அவர் தந்தையின் அறிவு கூர்மையையும், தோன்றியதை தயவு தாட்சணியம் இல்லாமல் சொல்ல முடிந்த தன்மையையும் அவர் என்றுமே மதித்தார். அதனாலேயே என்றும் முக்கியமான பிரச்சினைகள் குறித்து அவர் தன் தந்தையைக் கலந்தாலோசிப்பதுண்டு. தந்தை எழுப்பிய சந்தேகத்தை அவரால் அலட்சியப்படுத்தி விட முடியவில்லை. ஆனால் அதே சமயத்தில் ஒரு உண்மையை தந்தைக்கு சுட்டிக் காட்டத் தோன்றியது.

“அப்பா அந்த சித்தர் இருக்கிற காலத்திலேயே தான் பசுபதி கொல்லப்பட்டார். அந்த சித்தர் இருக்கிற காலத்திலேயே தான் சிவலிங்கம் இடம் பெயர்ந்தது. அதை எல்லாம் அந்த சித்தரால் தடுக்க முடியவில்லை....

பாபுஜியின் தந்தைக்கு அதை மறுக்க முடியவில்லை. என்றாலும் இதில் இவர்களுக்குத் தெரியாத ஏதோ ஒன்று இருப்பதாக உள்ளுணர்வு அவருக்குச் சொன்னது....
  
குருஜி இரண்டு நாட்களாக எதுவும் சாப்பிடவில்லை. பட்டினி விரதம் அவருக்குப் புதிதானதல்ல. இமயமலைச்சாரலில் அவர் அபூர்வ சக்திகளைத் தேடி அலைந்த காலத்தில் எத்தனையோ நாட்கள் தொடர்ந்து தண்ணீர் கூடக் குடிக்காமல் சில பயிற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார். அந்த நாட்களில் உணவை மனம் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. அடைந்து கண்ட சக்திகள் முன் உணவெல்லாம் ஒரு பொருட்டாகவே அவருக்குத் தோன்றியதில்லை.

அவரைப் போலவே தேடல்கள் உள்ளவர்கள் ஆண்டாண்டு காலம் மிகவும் கஷ்டப்பட்டு அடைந்த்தை எல்லாம் அவர் ஒருசில வாரங்களிலேயே அடைந்து விட்டார். திபெத்திய குகைகளில் தொடர்ந்தாற்போல் ஆறு மாதங்களில் ஒரு சிறிய குகையில் பத்து நாட்களுக்கு ஒரு முறை ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு தியானத்தில் இருந்தவர் அவர். சில சமயங்களில் கொடிய விலங்குகள் எல்லாம் அந்தக் குகைக்கு வந்து போகும். அந்த விலங்குகள் வருவதும் தெரியாமல் போவதும் தெரியாமல் அவர் தியானத்தில் இருந்திருக்கிறார். உணர்வுகளின் உன்னத உயரங்களில் இருக்கும் மனிதனை கொடிய விலங்குகள் கூட தாக்குவதில்லை. ஒரு நெருப்பு வளையத்திற்குள் இருப்பது போல புற உலகின் எந்தக் குறுக்கீட்டையும் பற்றிக் கவலைப்படாமல் இருந்த காலங்கள் அவை.

ராமகிருஷ்ணன் என்ற பெயர் உடைய அவர் குருஜியாக உலகிற்கு அறிமுகமான பிறகு நினைத்த போதெல்லாம் தியானத்திற்குள் போகவோ, மற்ற அபூர்வப் பயிற்சிகள் செய்யவோ அவருக்கு முடியாமல் போயிற்று என்றாலும் சில குறிப்பிட்ட காலங்களில் அந்தப் பயிற்சிகளையும் தியானத்தையும் தொடர்ந்து செய்வதை ஒரு கட்டாயமாக அவர் பாவித்து வந்தார். சமகாலத்திய சில கார்ப்பரேட் சாமியார்களைப் போல சொற்பொழிவுகளில் மட்டும் அவற்றைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்து விட்டு அவர் தன் சொந்த வாழ்வில் அவற்றைப் புறக்கணித்து விடவில்லை.

சிவலிங்கத்தைத் தரிசிக்கும் முன் வேதபாடசாலையில் தங்கிய முதல் இரண்டு நாட்களிலும் ஒருசில அபூர்வப் பயிற்சிகளை செய்து கொண்டும், உயர் தியான நிலையில் இருந்து கொண்டும் இருந்த அவர் மூன்றாவது நாள் காலை கணபதி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலுக்குப் போன பிறகு தான் தங்கியிருந்த வீட்டை விட்டு வெளியே வந்தார்.

அந்த வீட்டை வேறு யாரும் நெருங்கி விடாமல் காவல் காத்து வந்த ஒரு மாணவன் அவர் தேஜசில் கண்கள் கூசினாற் போல உணர்ந்தான். இரண்டு நாட்களுக்கு முன் அவன் அவரைப் பார்த்திருக்கிறான். ஆனால் அப்போது அவர் இப்படி ஒரு தேஜசில் இருக்கவில்லை..... அவன் கைகளைக் கூப்பி வணங்கினான். அவர் அவனைப் பார்க்கக்கூட இல்லை. கம்பீரமாக சிவலிங்கம் இருந்த வீட்டை நோக்கி நடந்தார். அவர் பார்வை நேராக இருந்தது.  தேவையற்ற விஷயங்களில் கவனத்தை சிதறடித்து அவர் தன் உணர்வு நிலையின் உச்சத்தை சிறிதும் இழந்து விட விரும்பவில்லை.

கணபதி சென்றவுடன் காமிராவை ஆஃப் செய்து விட்டிருந்தனர். குருஜி தான் சிவலிங்கத்தை சந்திக்கும் நிகழ்ச்சியைப் பதிவு செய்யவோ, பின் அதை மற்றவர்கள் காணவோ விரும்பவில்லை. எனவே முன்பே காமிரா கண்காணிப்பை நீக்கச் சொல்லி இருந்தார். அவர் வெளியே வந்தபின் மறுபடி அதைத் தொடரவும்  உத்தரவிட்டிருந்தார்.

உள்ளே நுழைந்தவுடன் கதவைத் தாளிட்ட குருஜி சிவலிங்கம் இருந்த பூஜை அறையை நோக்கி நடந்தார்.

(தொடரும்)

பரம(ன்) ரகசியம் - 39




கேஷ் விஷாலி வீட்டுக்குப் போய் சேர்ந்த போது மணி எட்டு. இத்தனை சீக்கிரமாய் மகேஷ் வருவது அபூர்வம் என்பதால் விஷாலி ஆச்சரியப்பட்டாள்.

ஏய் மகேஷ், என்ன இந்த நேரத்துல?

மகேஷ் உடனடியாக பதில் சொல்லவில்லை. “அப்பா இல்லையா?என்று கேட்டான்.

“அவர் வெளியே போயிருக்கார். ஏன், அவர் கிட்ட அவசரமா பேச வேண்டி இருக்கா?

“இல்லை.... என்றவன் சோபாவில் அமர்ந்து இரண்டு கைகளாலும் தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டான்.

அவள் பயந்து விட்டாள். அவன் அருகில் அமர்ந்தபடி கேட்டாள்.“ஏய் மகேஷ் என்ன ஆச்சு? ஏன் என்னவோ மாதிரி இருக்கே?

“ராத்திரி எல்லாம் தூங்கல விஷாலி... தூங்க முடியல

“ஏன்?


அவன் பதில் சொல்லவில்லை.

“வீட்டுல யாருக்காவது உடம்பு சரியில்லையா?அவள் கவலையுடன் கேட்டாள்.

“எல்லாரும் நல்லா தான் இருக்காங்கஎன்றான்.

“அப்படின்னா வேறென்ன?

அவன் எதுவும் சொல்லாமல் அவளை சோகமாகப் பார்த்தான். பின் சொன்னான். “எனக்கு இதை உன் கிட்ட சொல்லலாமா கூடாதான்னு தெரியல விஷாலி. சொன்னா அவனுக்கு செய்யற துரோகம்னு தோணுது. சொல்லாட்டி உனக்கு செய்யற துரோகம்னு தோணுது. நான் என்ன செய்வேன் விஷாலிஅவன் குரல் கரகரக்க சொன்னான்.

விஷாலிக்கு அவன் பேசுவது ஒன்றும் புரியவில்லை. “ஏய் நீ என்ன துரோகம்னு பெரிய வார்த்தை எல்லாம் சொல்றே? ..எதைச் சொல்லலாமா கூடாதான்னு சொல்றே? அவன்னு நீ யாரைப் பத்தி சொல்றே?” 

எச்சிலை விழுங்கிக் கொண்டு மகேஷ் சொன்னான். “ஈஸ்வர்... அவன் என் கிட்ட சொன்னதைத் தான்.....

“ஈஸ்வர் என்ன சொன்னார்?

மகேஷ் இருதலைக் கொள்ளி எறும்பின் நிலையில் இருப்பது போல நடித்தான். அவன் நடிப்பு வினாடிக்கு வினாடி அவளுடைய டென்ஷனை அதிகப்படுத்தியது. ஈஸ்வர் சொன்னதாகச் சொல்லி இருந்ததால் அது என்ன என்பதைத் தெரிந்து கொள்ளா விட்டால் தலை வெடித்து விடும் போல அவளுக்கு இருந்தது.

“சொல்லு மகேஷ்?அவள் பொறுமை போய் குரலில் எரிச்சல் தொனித்தது.

தயக்கத்தை மீண்டும் காட்டி விட்டு அவன் மெல்ல சொன்னான். நான் சொன்னேன்கிறதை அவன் கிட்ட நீ எந்தக் காரணத்துக்காகவும் சொல்லிடக் கூடாது.... சரியா

“சரி சொல்லு

“ப்ராமிஸ்?

“ப்ராமிஸ்

“அவன் பேசறப்ப முழுசா சுயநினைவோட இருந்தான்னு சொல்லிட முடியாது. குடி போதைல தான் பேசினான். ஆனாலும் போதைல கூட அவன் அப்படி பேசி இருக்கக் கூடாது தான்....

அவள் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது. “குடி போதைலயா?... என்ன சொன்னார்?

மகேஷ் திடீர் என்று மனம் மாறியவனைப் போல் நடித்தான். காலங்கார்த்தால உன் கிட்ட சொல்ற விஷயமில்லை விஷாலி. நான் இந்தப் பேச்சையே எடுத்திருக்கக் கூடாது... நான் ஒரு லூசு.. விடு விஷாலி. நான் இப்ப இங்கே வரலை.... எதுவும் சொல்லலை.... அப்படியே எடுத்துக்கோ.. சரியா... நான் கிளம்பறேன்

எழுந்து நின்றவனைக் கோபத்துடன் விஷாலி இழுத்து உட்கார வைத்தாள். நீ முதல்ல இருந்து சொல்லு.... என்ன நடந்தது?

வேறு வழில்லாமல் சொல்வது போல தயக்கத்துடன் சொல்ல ஆரம்பித்தான். “நேத்து ராத்திரி எல்லாரும் தூங்கின பிறகு ஈஸ்வர் என்னை அவன் ரூமுக்கு கூப்பிட்டான்... போனேன்... குடிக்க கம்பெனி தர்றியான்னு கேட்டான்.... நான் எனக்கு குடிக்கற பழக்கம் இல்லைன்னு சொன்னேன். (மகேஷ் நண்பர்களுடன் போட்டி போட்டுக் குடிப்பதில் முதலிடம் பெற்றவன் என்பது விஷாலிக்குத் தெரியாது). அவன் என்னை பட்டிக்காடுன்னு தமாஷ் செஞ்சான்... பிறகு பழக்கத்தை இன்னைக்கே ஆரம்பிச்சுகிட்டா போச்சுன்னு சொன்னான்... நான் சாரி வேண்டாம்னு சொன்னேன்.... பிறகு என் கிட்ட பேசிகிட்டே அவன் மட்டும் குடிக்க ஆரம்பிச்சான்... அது வரைக்கும் டீசண்டா பேசிகிட்டு இருந்தவன் பிறகு ஒருமாதிரியா பேச ஆரம்பிச்சான். அமெரிக்கால அவன் செஞ்ச சாதனைகளை எல்லாம் சொல்ல ஆரம்பிச்சவன் எத்தனை புது தியரிகளை எல்லாம் பப்ளிஷ் இருக்கான்கிறதை எல்லாம் சொல்லிகிட்டே வந்து கடைசில பப்ளிஷ் செய்யாத ஒரு விஷயத்துலயும் அவன் கில்லாடின்னு சொன்னான்.... அது பொண்ணுங்க சைக்காலஜிலயும் அவன் எக்ஸ்பர்ட்டாம்....அவன் கிட்ட மயங்காத பொண்ணுங்களே இல்லையாம்....

விஷாலிக்கு அவன் சொல்வதை நம்ப முடியவில்லை. அவள் அதிர்ச்சியில் உறைந்தவளாய் அவனைப் பார்த்தாள்.

மகேஷ் பெரும் வேதனையுடன் சொல்வது போல கஷ்டப்பட்டு சொன்னான். “சில பொண்ணுங்க அழகுக்கு மயங்குவாங்களாம்... சில பொண்ணுங்க அறிவுக்கு மயங்குவாங்களாம்... சிலர் பணவசதிக்கும், சிலர் புகழுக்கும் மயங்குவாங்களாம்.. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு பலவீனம் இருக்குமாம்... அதைப் புரிஞ்சுக்கிட்டா யாரையும் வலையில் வீழ்த்திடலாமாம். இவன் கிட்ட பொண்ணுங்க எதிர்பார்க்கறது எல்லாமே இருக்கறதால இவன் கிட்ட மயங்காதவங்களே கிடையாதாம். அதை ஒரு பெரிய சாதனையாய் சொல்றான்... அப்ப தான் உன் பேச்சு வந்துச்சு.....

பெரிய மலையுச்சியில் தள்ளப்படக் காத்திருக்கும் துர்ப்பாக்கியவதி போல விஷாலி அடுத்து வருவதற்குக் காத்திருந்தாள்.... அவளுக்கு இப்போதும் அவன் சொல்வதை நம்ப முடியவில்லை.... அதே நேரம் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை....

ஆனால் மகேஷ் சொல்ல வந்ததை உடனடியாகச் சொல்லி விடவில்லை....
“விஷாலி இதுக்கு மேல அவன் சொன்னதை உன் கிட்ட சொல்ற தெம்பு எனக்கில்லை விஷாலி...

விஷாலி முகம் வெளிறிப் போய் இருந்தது. ஆனால் உறுதியான குரலில் சொன்னாள். “என்னவா இருந்தாலும் பரவாயில்லை மகேஷ். சொல்லு...

சிறிது தயங்குவதாக நடித்து விட்டு மகேஷ் தொடர்ந்தான். உன்னை எல்லாம் சாதாரண பொண்ணுங்க லிஸ்டுல சேர்க்க முடியாதாம்... நீ எல்லாம் ரசனைக்கும், பண்பாட்டுக்கும் மதிப்பு தர்றவளாம்... அதனால உன்னை அந்த மாதிரி தான் மடக்கணுமாம்.... அவனுக்கு பெயிண்டிங்க்ஸ்ல கொஞ்சம் கூட இண்ட்ரஸ்ட் இல்லையாம். உனக்காக இண்ட்ரஸ்ட் இருக்கற மாதிரி நடிச்சானாம்... நீ அதுலயும் அவன் அழகுலயும் ஃப்ளாட் ஆயிட்டியாம்.... அனாதை ஆசிரமத்துக்கு உன்னைக் கூட்டிகிட்டுப் போனதும் உன்னை இம்ப்ரஸ் செய்யத்தானாம்....

மலையுச்சியில் இருந்து அவள் விழ ஆரம்பித்தாள்.... அவன் வார்த்தைகள் அவள் இதயத்தை ஈட்டிகளாக துளைக்க விஷாலி திக்பிரமையுடன் மகேஷைப் பார்த்து மிகப் பலவீனமான குரலில் சொன்னாள். “எனக்கு நம்பவே முடியலையே மகேஷ்

எனக்கும் கூட நம்ப முடியலை விஷாலி.... அவன் மத்த நேரங்கள்ல பேசறப்ப அவனை விட டீசண்டான, தங்கமான ஆள் இருக்க முடியுமான்னு எனக்கே கூட தோணி இருக்கு. ஆனா குடிச்சுட்டு அவன் அப்படி பேசினப்ப எனக்கே என் காதுகளை நம்ப முடியலை.... பேசினது அவனல்ல அவனுக்குள்ளே போன விஸ்கி தான்னு சமாதானப் படுத்திக்கத் தான் பார்த்தேன்... ஆனா அப்படியும் அதுக்கு அடுத்ததா அவன் சொன்னதை மட்டும் என்னால சகிச்சுக்கவே முடியலை....

என்ன... சொன்னார்?அவள் வார்த்தைகள் சத்தமில்லாமல் காற்றாய் வந்தன.

”...அவன் கர்வத்தோட என்கிட்ட சிரிச்சுகிட்டே சொல்றான்... அவன் நினைச்சா உன்னை படுக்கை வரைக்கும் கூட கூட்டிகிட்டு வர முடியும்கிறான்... அதைத் தான் என்னால தாங்க முடியல....

சேற்றை வாரித் தன் மீது இறைத்தது போல் விஷாலி உணர்ந்தாள். மகேஷ் அவள் மீதிருந்த பார்வையை வேறிடத்திற்குத் திருப்பிக் கொண்டான். நான் தாங்க முடியாமல் அவன் கிட்ட சொன்னேன். ‘மத்தவங்க மாதிரி விஷாலிய நினைச்சுக்காதே ஈஸ்வர்னு. அவன் சிரிச்சுகிட்டே என் கிட்ட சொன்னான். நீ இப்பவே அவன் வலையில விழுந்தாச்சாம். அனேகமா அவனை காதலிக்கவும் ஆரம்பிச்சிருப்பியாம். அடுத்த லெவலுக்கு உன்னை இழுக்கிறது அவனுக்கு ரொம்பவே சுலபமாம்... அதுக்கு மேல என்னால அங்கே நிக்க முடியல. தலை வலிக்குதுன்னு சொல்லி என் ரூமுக்கு வந்துட்டேன். அங்கேயே இருந்திருந்தா கண்டிப்பா அவனை ஓங்கி அறைஞ்சிருப்பேன். எங்க தகராறுல வீட்டுல எல்லாரும் முழிச்சிருப்பாங்க...

அவள் அவமானத்தால் கூனிக் குறுகிப் போனாள். ஈஸ்வர் அவளை என்ன என்று நினைத்துக் கொண்டிருக்கிறான் என்று கோபத்துடன் எண்ணினாள். நேற்றைய அழகான நினைவுகள் இன்று அர்த்தம் மாறியதால் அவமான நினைவுகளாக மாறின. எல்லாம் நடிப்பா? எல்லாம் வேஷமா? இப்போதும் அவள் மனதில் ஒரு பகுதி மகேஷ் சொன்னதை நம்ப மறுத்தது. ஆனால் பெரும்பகுதி மகேஷ் ஏன் பொய் சொல்லப் போகிறான் என்று வாதிட்டது. மகேஷ் அவள் சினேகிதன். நல்ல சினேகிதன்... விளையாட்டுப் பருவத்திலே இருந்து அவளுடன் இருந்தவன்... அதுவும் இந்த மாதிரி விஷயத்தில் எல்லாம் யாராவது பொய் சொல்வார்களா?....

மகேஷ் தொடர்ந்தான். “அவன் என் தாத்தா கிட்ட திமிர்த்தனமா நடந்துகிட்டது எனக்கு சுத்தமா பிடிக்கலைன்னாலும் அவனுக்கு தாத்தா மேல் இருக்கிற கோபம் நியாயமானதுன்னு நீ சொன்னதால அவன் கிட்ட எனக்கு நிஜமாவே ஒரு சாஃப்ட் கார்னர் இருந்துச்சு. ஆனா உன்னை இந்த அளவுக்கு அவன் மட்டமா நினைக்கிறதுக்கு என்ன காரணம் இருக்க முடியும் சொல்லு விஷாலி? அதான் சின்ன வயசுல இருந்தே உன்னோட நல்ல நண்பனா இருந்த எனக்குத் தாங்க முடியல....

நேற்று தந்தையின் நினைவு நாள் என்று சோகமாகச் சொன்னவனுக்கு ஆறுதல் தரும் விதமாக ஈஸ்வரைத் தொட்ட்தாலும், காரில் வருகையில் அந்தப் பாடல் வரிகளிலும் இசையிலும் மனம் பறி கொடுத்தவன் போல் அவன் அவள் கை விரல்களைத் தொட்ட போது அவள் ஒன்றும் மறுப்பு தெரிவிக்கவில்லை என்பதாலும் அவளைப் பற்றி இந்த அளவு மட்டமாக அவன் நினைத்து விட்டானோ என்ற சந்தேகம் அவளுக்கு வந்தது. மகேஷ் கேட்டதற்கு அவளுக்குக் கிடைத்த காரணம் இது ஒன்று தான். அவளுக்கு உடம்பெல்லாம் கூசியது.. எரிந்தது...


அவன் எனக்கு கசினா இருக்கலாம்.. அவன் அந்தரங்கமா என் கிட்ட குடி போதைல சொன்னதை உன் கிட்ட சொல்றது அவனுக்கு செய்யற துரோகமா கூட இருக்கலாம். ஆனா உன்  கிட்ட சொல்லாமல் இருக்கிறது அதை விடப் பெரிய துரோகம்னு மனசுல தோண ஆரம்பிச்சுது... நான் ராத்திரி எல்லாம் தூங்கல விஷாலி....

அவன் முகத்தைப் பார்த்த போது அவன் இரவெல்லாம் தூங்கவில்லை என்பது உண்மையே என்று தெரிந்தது.

“அவனை சொல்லி தப்பில்ல விஷாலி. அவன் பிறந்து வளர்ந்த நாடு அந்த மாதிரி. அங்கே ஒழுக்கம் எல்லாம் பெரிய விஷயமில்லை. அவன் அழகும், அறிவும் பல பொண்ணுகளை அவன் பின்னால வர வச்சிருக்கும். அவங்களோட அவன் ஜாலியா கண்டிப்பா இருந்திருப்பான்கிறது அவன் பேச்சுல இருந்தே தெரியுது. ஆனா உன்னைப் போய் அவன்.... சே.....மகேஷின் குரல் உடைந்தது.

இந்த இரண்டு நாட்களில் அவளுக்கு இருந்த மிக அழகான உணர்வுகள் எல்லாம் அவன் வார்த்தைகளால் வேரோடு பிடுங்கப்பட்டதால் அவள் உயிர் இருக்கும் போதே செத்துப் போனாள்.

அவளைப் புரிந்து கொள்ள முடிந்த நண்பனாய் மகேஷ் கரகரத்த குரலில் சொன்னான். “வருத்தப்படாதே விஷாலி.. இந்தியால இருக்கற கொஞ்ச நாளுக்கு உன்னை பயன்படுத்திக்கலாம்னு அவன் நினைச்சிருக்கான்.. அவனுக்கு அறிவு இருக்கிற அளவு பண்பாடு இல்லை... மனசைப் படிக்க முடிஞ்ச அளவு மதிக்கத் தெரியலை... (இதெல்லாம் அவன் நேற்று இரவில் இருந்து பல முறை ரிகர்சல் செய்த வரிகள்)... அவன் மனசுல இருக்கறது என்னன்னு நமக்கு தெரிய வந்ததே உன்னோட நல்ல மனசுக்காக கடவுளா பார்த்து ஏற்படுத்திக் கொடுத்த சந்தர்ப்பம்னு எடுத்துக்கோ... அவன் வர்றப்ப மட்டும் ஜாக்கிரதையா இருந்துக்கோ.... அவன் ஹிப்னாடிசமும் தெரிஞ்சவன்... அழகாவும் இருக்கான்....

விஷாலி அவனை அனல் பார்வை பார்த்தாள்.

மகேஷ் கண்களைத் தாழ்த்திக் கொண்டு சொன்னான். “தப்பா நினைச்சுக்காதே விஷாலி. அவன் நேத்து ராத்திரி அவ்வளவு உறுதியா சொன்னதால் தான் நான் பயப்படறேன்... அவன் பொண்ணுங்க மனசைப் புரிஞ்சுகிட்டு அதுக்குத் தகுந்த மாதிரி திறமையா நடிக்கத் தெரிஞ்சவன்... நீ சூதுவாது தெரியாதவள்... அதான் எச்சரிக்கை செஞ்சேன்.... அவன் கண்டிப்பா தினம் வந்தாலும் வருவான்...

விஷாலியின் மனதின் உள்ளே எரிமலை குமுறிக் கொண்டிருந்தது. “அவனை இங்கே வர வேண்டாம்னு சொல்லு...

ஈஸ்வரை அவன் என்று அவள் அழைத்த்தையும், வர வேண்டாம் என்று சொல்லச் சொன்னதையும் கேட்கவே மகேஷிற்கு சுகமாக இருந்தது. தயக்கத்துடன் சொன்னான். நான் எப்படி சொல்றது விஷாலி. நான் சொன்னா, நேத்து அவன் சொன்னதையெல்லாம் நான் உன் கிட்ட சொல்லிட்டேன்கிறதை அவன் தெரிஞ்சுப்பான்...

விஷாலிக்கு மகேஷ் சொன்னது போல ஈஸ்வர் கண்டிப்பாக தினம் வந்தாலும் வருவான் என்பது இப்போது சகிக்க முடியதாததாக இருந்தது. எத்தனை அழகாக அவன் இருந்தாலும், எத்தனை அறிவுஜீவியாக இருந்தாலும், எத்தனை நல்லவனாக அவன் நடித்தாலும் படுக்கைக்கு செல்ல இசையும் அளவு  அவள் ஒன்றும் தரம் கெட்ட பெண் அல்ல. அப்படிப் பட்ட கீழ்த்தர நோக்கத்தோடு யாரும் அவள் வீட்டு வாசற்படியை மிதிக்க வேண்டியது இல்லை.... அவள் அவனைப் பார்க்கக் கூட விரும்பவில்லை.

“அவன் செல் நம்பரைக் குடு. நானே சொல்றேன்...”. இரண்டு நாட்கள் ஏமாந்தது போதும் என்று அவள் நினைத்தாள். இனி ஒரு வினாடி கூட ஏமாற அவள் தயாரில்லை. ஒரேயடியாக ஈஸ்வரின் தொடர்பைத் துண்டித்து தலைமுழுகும் வரை அசுத்தமாகவே இருப்பது போல ஒரு உணர்வு அவளிடம் இனி இருந்து கொண்டே இருக்கும்...

இன்று காலை வரை எரிந்து கொண்டிருந்த அவன் மனதில் இப்போது ஐஸ் மழை பெய்ய ஆரம்பித்தது. தயங்குவது போல நடித்துக் கொண்டே ஈஸ்வரின் செல் நம்பரைத் தந்தான்.

ஏதோ ஒரு ஜூரவேகத்தில் இருப்பது போல விஷாலி செல் போன் எண்களை அழுத்தினாள். ஈஸ்வர் குரல் கேட்டது. ஹலோ

அவன் குரல் கேட்டதும் இப்போதும் மனது அவளை அறியாமல் லேசாகியது... அவளுக்குத் தன் மேலேயே கோபம் வந்தது. மகேஷ் சொன்னது சரி தான். ஈஸ்வர் ஒரு வசியக்காரன் தான்... அவள் மனதைத் திடப்படுத்திக் கொண்டு சொன்னாள். “நான் விஷாலி பேசறேன்... உங்களைப் பார்க்கவோ, உங்க கிட்ட பேசவோ நான் விரும்பலை... அதனால தயவு செஞ்சு இனிமேல் என் வாழ்க்கைல இருந்து விலகியே இருங்க ப்ளீஸ்...

சொல்லச் சொல்ல அவள் அழுதே விட்டாள். செல் போனை வைத்தபின் அவள் அழுகை அதிகமாகியது.

அதை ஒரு கணம் தாக்குப்பிடித்துக் கொண்டு மகேஷிடம் சொன்னாள். “மகேஷ் எனக்கு மனசு சரியில்லை.... தனியா இருக்க விடறியா?

“சாரி விஷாலி... நான் இதை உன் கிட்ட சொல்லாமலேயே இருந்திருக்கலாம் போல இருக்கு

“இல்லை மகேஷ், நீ நல்லது தான் செஞ்சிருக்கே. கசப்பானாலும் உண்மை உண்மை தான்.....

அவளைப் பரிதாபப் பார்வை பார்த்து விட்டு மகேஷ் எழுந்தான். “நான் கிளம்பட்டுமா விஷாலி

அவள் தலையாட்டினாள். அவன் போன பின் கதவை சாத்திக் கொண்டு விஷாலி பேரழுகை அழ ஆரம்பித்தாள்.

ஸ்வருக்கு சிறிது நேரம் எதுவும் புரியவில்லை. அவளுடைய வார்த்தைகள் முழுவதும் பதிவாவதற்கு முன்னால் அவள் கடைசியில் அழுதது உணர்வில் பதிவாகியது. மனம் பதைத்தது. பின்பு தான் வார்த்தைகள் பதிவாகின. அவன் முகம் இறுகியது.

அவனிடம் இப்படி யாரும் சொன்னதில்லை. அவன் அடிக்கடி சீண்டும் பரமேஸ்வரன் கூட இது போல அவனைப் பார்க்கவோ பேசவோ பிடிக்கவில்லை என்றும் அவர் வாழ்க்கையில் இருந்து விலகி இருக்கும் படியோ சொன்னதில்லை. அவர் அப்படிச் சொல்லி இருந்தால் கூட அவனால் புரிந்து கொள்ள முடிந்திருக்கும். ஆனால் எந்தக் காரணமும் இல்லாமல் திடீரென்று விஷாலி அப்படிச் சொன்னது அவன் ஈகோவை பலமாகத் தாக்கியது.


மனதை ஒரு அமைதி நிலைக்குக் கொண்டு வருவது அவனுக்குப் பெரும்பாடாக இருந்தது. வெளிப்பார்வைக்காவது அப்படி கொண்டு வர சாத்தியமாகும் வரை அவன் அறையிலேயே அமர்ந்திருந்தான். பின் எழுந்தவன் அப்பாவின் புகைப்படம் அருகே வந்து நின்றான்.

எத்தனை பெரிய சைக்காலஜிஸ்டா இருந்தாலும் ஒரு பொண்ணோட மனசைப் புரிஞ்சுக்கறதுல நான் ஏமாந்துட்ட மாதிரி தான் தோணுதுப்பா. நேத்து சொன்னேன் இல்லையா ஒரு பொண்ணைக் காதலிக்க ஆரம்பிச்ச மாதிரி தோணுதுன்னு அது என் பக்க கற்பனை மாதிரி தான் தோணுது. ஆனைக்கும் அடி சறுக்கும்னு சொல்வாங்க இல்லையாப்பா. நானும் சறுக்கிட்டேன் போல இருக்கு...

அவன் சொல்லி விட்டு சிரிக்க முயன்று தோற்றுப் போனான்.....    

இந்த இரண்டு நாட்கள் அவன் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்தவள், மிக அழகான உணர்வுகளை அவனுக்குள் முதல் முதலாக  ஏற்படுத்தியவள் ஏதோ தூசியைப் போல அவனைத் தட்டி விட்டதை யோசிக்கையில் அவனுக்குள் கோபம் அதிகமாக ஆரம்பித்தது. குறைந்த பட்சம் காரணத்தையாவது அவள் சொல்லி இருக்கலாம்.... அதைக் கூட சொல்லத் தேவை இல்லை என்று அவள் நினைத்ததை அவனால் சகிக்க முடியவில்லை.

காரணம் இல்லாமல், காரணம் சொல்லாமல் இப்படி நடந்து கொள்ளக் கூடிய ஒரு பெண் கண்டிப்பாக மனநிலை பாதிக்கப்பட்டவளாகத் தான் இருக்க வேண்டும்... அவள் சிகிச்சை பெற வேண்டியவள் ...

ஆனால் அதைப் பற்றி அவன் கவலைப்படப் போவதில்லை. அவள் இனி அவனுக்கு சம்பந்தம் இல்லாதவள்.... ஈஸ்வர் மனதில் உறுதியாக முடிவெடுத்து விட்டான்.


(தொடரும்)

பரம(ன்) ரகசியம் - 38





ஈஸ்வர் சிறிது நேரம் தெருவில் நின்று பார்த்தான். மறுபடியும் அந்த சித்தர் பார்க்கக் கிடைத்தாலும் கிடைக்கலாம் என்று சின்னதாய் ஒரு எதிர்பார்ப்பு அவனுக்கு இருந்தது. ஏதாவது தகவல் தெரிவிப்பதாக இருந்தால் நேரடியாக அவர் தெரிவித்து விட்டுப் போய் இருக்கலாமே என்று தோன்றியது. இந்தக் கண்ணாமூச்சு விளையாட்டுக்கு அது தேவலை அல்லவா? சின்னக் குழந்தைகள் விளையாட்டுப் போல தொட்டு விளையாட்டு எதற்கு? இதில் தேவை இல்லாமல் அந்தக் கணபதியையும் சித்தர் சேர்த்துக் கொணடதை ஈஸ்வர் ரசிக்கவில்லை. பாவம் கணபதி...

திடீர் என்று அவன் போகையில் ’அண்ணி கிட்டயும் சொல்லிடுங்க’ என்று சொன்னது இப்போது தான் ஈஸ்வர் மூளையில் உறைத்தது... ஏன் அப்படிச் சொன்னான்? எது அவனை அப்படிச் சொல்ல வைத்தது?  ஆனாலும் ஏனோ ஈஸ்வருக்கு கணபதி அப்படிச் சொன்னது பிடித்திருந்தது. குறும்பாகப் புன்னகைத்துக் கொண்டே அன்பாலயத்தினுள்ளே நுழைந்தான்.

அவன் தனியாக வருவதைப் பார்த்தவுடன் விஷாலி கேட்டாள். “கணபதி எங்கே போயிட்டார்”

“அவனோட கார் டிரைவர் அவசரப்படுத்தி அவனைக் கூட்டிகிட்டுப் போயிட்டான். என் கிட்டயே சரியா பேச விடலை... கணபதி போறப்ப உன் கிட்ட சொல்லச் சொன்னான்....” சொல்லும் போது அவன் ஒருமாதிரியாகப் புன்னகைக்க விஷாலி கேட்டாள். “என்ன ஒரு மாதிரியா சிரிக்கிறீங்க? என்ன விஷயம்?”

”ஒன்னுமில்லை”

அன்பாலயத்தில் இருந்து திரும்பி வருகையில் கணபதியைப் பற்றிய பேச்சு வந்தது. தனக்குப் பதிலாக பிள்ளையாருக்கு பட்டு வேட்டி வாங்க கணபதி ஆசைப்பட்டதை ஈஸ்வர் சொன்ன போது விஷாலி மனம் நெகிழ்ந்து சொன்னாள். “அந்தப் பிள்ளையார் ரொம்பக் கொடுத்து வச்சவரு. அவர் கிட்ட தங்களுக்கு அது வேணும் இது வேணும்னு வரம் கேட்க வர்ற ஆள்கள் தான் அதிகமா இருக்கும். கணபதி மாதிரி அவருக்கு ஏதாவது தர ஆசைப்படற வேற ஆள்கள் இருப்பாங்கன்னு தோணலை....”

ஈஸ்வருக்கும் அப்படியே தோன்றியது. அடுத்ததாக அன்பாலயத்தின் அனாதைக் குழந்தைகள் பற்றி பேச்சு வந்து அதுவும் முடிந்து போக அவர்கள் இருவரும் மௌனமானார்கள். நிறைய பேச இருந்தும் அவர்களால் ஒன்றும் பேச முடியவில்லை. ஈஸ்வர் எஃப் எம் ரேடியோவை ஆன் செய்ய சைந்தவியும், ஜி.வி.பிரகாஷும் பாடிய பாடல் ஒலிபரப்பாக ஆரம்பித்தது.

யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன்
அன்பானவன்

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை என்றாலும் ஒருவரை ஒருவர் அந்தப் பாடலின் போது மிக ஆழமாக உணர்ந்தார்கள். அவர்களே பாடுவது போல் தோன்ற ஆரம்பித்தது.

உன் காதலில் கரைகின்றவன்
உன் பார்வையில் உறைகின்றவன்
உன் பாதையில் நிழலாகவே வருகின்றவன்

எங்கே உன்னை கூட்டிச்செல்ல
சொல்வாய் எந்தன் காதில் மெல்ல
என் பெண்மையும் இளைப்பாறவே
உன் மார்பிலே இடம் போதுமே
ஏன் இன்று இடைவெளி குறைகிறதே
மெதுவாக இதயங்கள் இணைகிறதே
உன் கைவிரல் என் கைவிரல் கேட்கின்றதே

திடீர் என்று அவன் அவளைத் திரும்பிப் பார்த்தான். அவளும் அவனைப் பார்த்தாள். வார்த்தைகள் சொல்ல முடியாத பலவற்றை அவர்கள் பார்வைகள் பரிமாறிக் கொண்டன. அவன் கைவிரல்கள் மென்மையாக அவள் கைவிரல்களைத் தொட்டன. தொட்டபடியே இருந்தன. கண்கள் பேசியதைப் போல கைவிரல்களும் பேசிக் கொண்டன.

நதியினில் ஒரு இலை விழுகிறதே
அலைகளில் மிதந்தது தவழ்கிறதே
கரைசேருமா உன் கைசேருமா
எதிர்காலமே !

சில தருணங்கள் சாசுவதமானவை. கல்லில் செதுக்கியதைப் போல மனதில் பசுமையாக என்றென்றுக்குமாய் தங்கி விடுபவை. முடிந்து போன பின்னும் நினைவுகளில் திரும்பத் திரும்ப வாழ்ந்து புதுப்பிக்கப் படுபவை. அவர்களைப் பொருத்த வரை அந்தத் தருணம் அப்படியாக மாறி இனிமையாகத் தங்கி விட்டது.

பாட்டு முடிந்த பின் விளம்பரம் வர அது அந்தத் தருணத்தின் இனிமையைக் குறைப்பதாகத் தோன்றவே ஈஸ்வர் ரேடியோவை ஆஃப் செய்து விட்டான். அந்த மௌனமும் இனிமையாக இருந்தது.

விரைவில் விஷாலியின் வீடு வந்து விட்டது. கார் நிற்கும் சத்தம் கேட்டு தென்னரசு வெளியே வந்தார்.

“உள்ளே வா ஈஸ்வர்”

“இல்லை அங்கிள் நேரமாயிடுச்சு. கிளம்பறேன். தேங்க்ஸ் விஷாலி...”

அவன் போய் விட்டான். விஷாலி அவன் கார் கண்ணில் இருந்து மறையும் வரை பார்த்திருந்து விட்டு உள்ளே வர தென்னரசு மகளை ஆச்சரியத்துடன் பார்த்தாள். அந்தப் பாடல் மனதில் ஒலித்துக் கொண்டு இருக்க அவன் பார்வையும் பசுமையாய் நினைவில் இருக்க வேறொரு உலகில்  அவள் இருந்ததால் அவள் தந்தையின் முகபாவத்தை கவனிக்கவில்லை....

ஈஸ்வர் ஃபோட்டோ ஸ்டுடியோவிற்குப் போன போது அவன் பெற்றோரின் புகைப்படம் பெரியதாக லேமினேட் செய்யப்பட்டு தயாராக இருந்தது. அவர்களை நேரில் பார்ப்பது போல் அவனுக்குத் தோன்றியது. அது அவன் பெற்றோர் கடைசியாக எடுத்துக் கொண்ட புகைப்படம். அதை எடுத்த ஒரு வாரத்தில் அவன் அப்பா இறந்து போனார்...

வீட்டுக்குப் போன போது வாசலிலேயே பெரும் தவிப்புடன் அவனுக்காக மகேஷ் காத்திருந்தான். ஈஸ்வரை அவன் கூர்ந்து பார்த்தான். ஈஸ்வர் ஏதோ பாடலை முணுமுணுத்தபடி காரை விட்டு இறங்கினான். “உன் காதலில் கரைகின்றவன், உன் பார்வையில் உறைகின்றவன், உன் பாதையில் நிழலாகவே வருகின்றவன் ”

மகேஷ் காதில் அந்தப் பாடல் நாராசமாக ஒலித்தது. நேற்றெல்லாம் ஏதோ ஆங்கிலப் பாடல் பாடிக் கொண்டிருந்தவன் இன்று தமிழுக்கு மாறி விட்டதற்கும் விஷாலிக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ என்று சந்தேகப் பட்டான்.

ஈஸ்வர் கையில் இருந்த லேமினேட் செய்யப்பட்ட புகைப்படத்தைப் பார்த்து மகேஷ் நினைத்துக் கொண்டான். ‘முதல்லயே இவங்கப்பா ரூம் ஒரு ம்யூசியம் மாதிரி இருக்கு. அதுல இதையும் சேர்த்து வைக்கணுமாக்கும்’

”என்ன மகேஷ் எனக்காக காத்துகிட்டிருக்கற மாதிரி இருக்கு” ஈஸ்வர் கேட்ட்து ஏதோ பொடி வைத்துக் கேட்டது போல இருந்தது.

மறுக்க முடியாமல் மகேஷ் சமாளித்தான். “ஆமா... என்னோட கார் கொஞ்சம் மக்கர் பண்ணுது. அதான் அம்மா காரை எடுத்துட்டுப் போலாம்னு நினைச்சுட்டு காருக்காக காத்துகிட்டிருந்தேன்....”

கார் சாவியை ஈஸ்வர் மகேஷ் கையில் தந்தான். தந்தவன் ‘இனி போவதானால் போகலாம்’ என்கிற விதமாய் பார்க்கவே மகேஷ் அசடு வழிந்தபடி சொன்னான். ”பரவாயில்லை, நாளைக்குப் போய்க்கறேன்”

மீனாட்சி அண்ணன், அண்ணி புகைப்படத்தைப் பார்த்து பரவசம் அடைந்தாள். “இது எப்ப எடுத்தது ஈஸ்வர்?”

இது தான் அவருடைய கடைசி ஃபோட்டோ என்று அவன் தெரிவித்த போது அவள் அதை அண்ணன் நினைவில் கண்கலங்க பார்த்தாள். இன்று அப்பாவின் நினைவு நாள் என்று சொல்ல வாயெடுத்த ஈஸ்வர் அவளை மேலும் கண்கலங்க வைக்க மனமில்லாமல் வாயை மூடிக் கொண்டான். 

ஆனந்தவல்லி “யார் ஃபோட்டோ அது?” என்று கேட்டுக் கொண்டே வந்தாள்.

“எங்கப்பா அம்மாவோட ஃபோட்டோ. நீங்க தானே இந்த ஹால்ல அவங்க ஃபோட்டோவை மாட்டிக்கலாம்னு சொன்னீங்க”

”தாராளமா மாட்டிக்கோ” என்று ஆனந்தவல்லி சொல்ல ஈஸ்வர் “வீட்டு உரிமையாளர் கிட்ட அனுமதி வாங்கியாச்சு” என்று சொன்னபடியே ஐந்து நிமிடங்களில் சுவரில் ஆணியடித்து மாட்டி விட்டான்.

அண்ணாவின் புகைப்படம் ஹாலில் மாட்டியது மீனாட்சிக்கு ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும் இன்னொரு புறம் அப்பாவை நினைக்கையில் பயமாக இருந்தது. அவள் அண்ணனின் அறையில் அவன் நினைவாக எதை வைத்துக் கொண்டாலும் எதுவும் சொல்லாத அவர் தன் மகனை நினைவுபடுத்தும் எதையும் மற்ற இடங்களில் அனுமதித்ததில்லை. ஹாலில் அவர், அவர் மனைவி புகைப்படத்தைத் தொட்ட மாதிரியே ஈஸ்வர் மாட்டி இருக்கும் படத்தைப் பார்த்தால் என்ன சொல்வார்?....

மகேஷ் அதிர்ச்சியுடன் அந்தப் புகைப்படத்தைப் பார்த்தான். ’இதை இங்கே மாட்டவா அவன் கொண்டு வந்தான்?’.  பரமேஸ்வரனுக்கு எதிராக சிறிதும் பயமில்லாமல் ஈஸ்வர் இப்படிச் செய்யக் காரணமே ஆனந்தவல்லி தான் என்று நினைத்து அவன் மனதிற்குள் அவளை சபித்தான்.  “இந்தப் பாழாய் போன கிழவி தாராளமா ஃபோட்டோவை மாட்டிங்கோங்கறா. வீட்டு உரிமையாளர் கிட்ட அனுமதி வாங்கியாச்சுன்னு  இவனும் சொல்றான். இப்படி ஒவ்வொரு அடியாய் எடுத்து வைக்கிற இவன் நாளைக்கு ’எங்கப்பாவோட பங்கைக் குடு’ன்னு சொல்ல மாட்டாங்கறது என்ன நிச்சயம்....”

பெற்றோரின் படத்தை சற்று தள்ளி நின்று ரசித்து விட்டு பாடலை முணுமுணுத்தபடியே ஈஸ்வர் தனதறைக்குப் போனான். ஆனந்தவல்லி ஈஸ்வரைப் புன்னகையோடு பார்த்துக் கொண்டே மீனாட்சியைக் கேட்டாள். “ஏண்டி, உன் மருமகன் ரெண்டு நாளா ரொம்பவே சந்தோஷமாய் இருக்கான் கவனிச்சியா?”

மீனாட்சி சொன்னாள். “இப்ப தான் இந்த வீடு அவன் வீடு மாதிரி தோண ஆரம்பிச்சிருக்கு போல இருக்கு. அதான்...”

’இதொரு வெகுளி.. இதுக்கு எதுவும் சட்டுன்னு தெரியாது’ என்று நினைத்த ஆனந்தவல்லி அதற்கு மேல் எதுவும் சொல்லவில்லை. ஆனால் அவள் கேட்டதன் முழு அர்த்தம் விளங்கிய மகேஷ் மனதிற்குள் எரிமலை வெடித்து சிதறிக் கொண்டிருந்தது.

அறைக்குள் நுழைந்த ஈஸ்வர் அவன் அப்பாவின் புகைப்படத்திற்கு ரோஜாப் பூமாலை போடப் பட்டிருந்ததைப் பார்த்தான். அப்போது தான் அவன் சொல்லாமலேயே அத்தை அந்த நாளை நினைவு வைத்திருந்து மாலை போட்டிருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்ட போது அத்தை மேல் அவனுக்கு இருந்த பாசம் கூடியது. 

அவன் அப்பாவின் புகைப்படம் முன் நின்று மெல்ல சொன்னான். “அப்பா. நான் ஒரு பொண்ணைக் காதலிக்க ஆரம்பிச்சிருக்கேன்னு நினைக்கிறேன்....”. அவர் உயிரோடு இருந்திருந்தால் கண்டிப்பாக அவன் தன் மனதில் உள்ளதை முதலில் அவரிடம் தான் தெரிவித்திருப்பான்....

பரமேஸ்வரன் அன்று தாமதமாகத் தான் வீட்டுக்கு வந்தார்.  வீட்டுக்குள் நுழைந்தவுடன் ஹாலில் முதலில் கவனித்தது தன் மகன், மருமகள் புகைப்படத்தைத் தான். சுவரில் கூட அவன் அவர் புகைப்படத்திற்கு அருகிலேயே இருந்தான்.... ஒரு சின்ன பலவீனத்திற்குப் பின் அவர் முகம் இறுகியது. அவர் முகபாவனை மறைவாக நின்று கொண்டிருந்த மகேஷிற்கு மகிழ்ச்சியைத் தந்தது. ஹாலில் என்றுமில்லாத அதிசயமாய் ஆனந்தவல்லி காலை நாளிதழை மிகவும் கவனமாகப் படிப்பது போல பாவனை செய்து கொண்டு மகனை ஓரக்கண்ணால் நோட்டமிட்டுக் கொண்டு இருந்தாள். ஆனால் அவள் தலை நிமிரவில்லை.

மீனாட்சி தந்தையின் கவனத்தைத் திருப்ப முயற்சி செய்தாள். “என்னப்பா இன்னிக்கு லேட்?”

மகள் கேள்விக்குப் பதில் சொல்லாமல் பரமேஸ்வரன் ‘இதெல்லாம் என்ன’ என்பதைப் போல அவளைக் கூர்மையாகப் பார்த்தார். புகைப்படத்தை மாட்டியது ஈஸ்வர் தான் என்பதால் அவர் அவனிடம் கோபமாக ஏதாவது பேசி தாத்தாவிற்கும், பேரனிற்கும் இடையே விரிசல் அதிகரித்து விடுமோ என்று பயந்த மீனாட்சி மெல்ல சொன்னாள். “அவன் பாட்டி கிட்ட கேட்டு தான் மாட்டி இருக்கான்... பாட்டி தாராளமா மாட்டிக்கோன்னு சொன்னதால தான் அவன்...” என்று இழுத்தாள்.

’அடிப்பாவி. அந்த ’தாராளமா’ங்கிற வார்த்தையை ஏண்டி அவன் கிட்ட சொல்லிக் காண்பிக்கறாய்’ என்று மனதிற்குள் திட்டிக் கொண்டாலும் காதில் எதுவும் விழாதவள் போலவே நாளிதழில் மூழ்கி இருப்பது போல் ஆனந்தவல்லி நடித்தாள்.

தாயை முறைத்துப் பார்த்து சிறிது நின்ற பரமேஸ்வரன் அவள் தலை நிமிராததைப் பார்த்து ”உன் பாட்டிக்கு நாளைக்கு என்ன பரிட்சையா நடக்குது இவ்வளவு சீரியசா படிக்கறதுக்கு?” என்று மீனாட்சியிடம் கேட்டார்.

மீனாட்சி சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டாள். ஆனந்தவல்லி அதுவும் காதில் விழாதது போல நடித்தாள்.

மீனாட்சி தந்தையிடம் ”சரி சாப்பிட வாங்க” என்றாள்.

“சாப்பாடு வேண்டாம்மா. பசியில்லை”

“வெறும் வயித்துல மாத்திரைகள் சாப்பிடக்கூடாது. அதனால கொஞ்சமாவது சாப்பிடுங்க.” கரிசனத்துடன் சொன்ன மகளைப் பார்த்த பரமேஸ்வரன் முக இறுக்கம் சற்று தளர்ந்தது. சாப்பிடப் போனார். ஆனந்தவல்லி நாளிதழைக் கீழே வைத்து விட்டு ஆசுவாசப் பெருமூச்சு விட்டாள். எழுந்தவள் மகன் வருவதற்கு முன் தன் அறைக்குள் சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டாள்.

பரமேஸ்வரன் சாப்பிடும் போது எதுவும் பேசவில்லை. பேசும் மனநிலையில் அவர் இல்லை. மகளுக்காக ஏதோ சிறிது சாப்பிட்டு விட்டு தனதறையை நோக்கி நடந்தார். அவர் நடையில் தெரிந்த தளர்ச்சியைப் பார்த்த மீனாட்சிக்கு மனம் வலித்தது...

பரமேஸ்வரன் ஈஸ்வர் அறையைக் கடக்கையில் அவன் தன் தாயிடம் போனில் பேசிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது. ”..இப்படி இன்னைக்கு அப்பாவோட நினைவு நாள் மறக்க முடியாத நாளாய் அமைஞ்சுடுச்சும்மா. இப்ப அவர் ரூம்ல அவர் சேர்ல உட்கார்ந்துகிட்டு தான் உன் கிட்ட பேசிகிட்டிருக்கேன். எனக்கென்னவோ அப்பா மடியிலேயே உட்கார்ந்து இருக்கற மாதிரி ஒரு ஃபீலிங்க்ம்மா....”

பரமேஸ்வரன் அன்று இரவு நீண்ட நேரம் உறங்கவில்லை. அவர் போலவே அன்று நீண்ட நேரம் உறக்கம் வராமல் தவித்த இன்னொரு ஜீவன் மகேஷ் தான். தாத்தா ஹாலில் இருந்த அந்தப் புகைப்படத்தைப் பார்த்து விட்டு பொங்கி எழுவார் என்று ஆவலுடன் எதிர்பார்த்து ஏமாந்த அவனுக்கு உறக்கம் வரவில்லை. அவன் தன் வாழ்க்கையில் மிக சக்தி வாய்ந்த நபராய் நினைத்த தாத்தாவே ஈஸ்வர் முன் வலுவிழந்து போய் நிற்பதை அவனால் சகிக்க முடியவில்லை. “அம்மாவும் அந்தக் கிழவியும் சேர்ந்து அவரை பலவீனப்படுத்தி விடறாங்க” என்று அவர்கள் இருவர் மீதும் கோபப்பட்டான்.

ஈஸ்வர் நினைத்ததை எல்லாம் ஒவ்வொன்றாக சாதித்துக் கொண்டே வருவது பெரிய ஆபத்து என்று மகேஷ் பயந்தான். அவன் சாதனை விசாலி வரைக்கும் நீண்டது அவன் இதயத்தை அமிலமாய் அரித்துக் கொண்டு இருந்தது. ஏதாவது செய்யாவிட்டால் அனைத்தையும் இழந்து போய் விட வேண்டி வரும் என்று நினைத்தான். வீட்டிற்குள் மீனாட்சியும், ஆனந்தவல்லியும் இருக்கும் வரை தன்னால் ஈஸ்வரை பெரிதாக எதுவும் செய்ய முடியாது என்பது அவனுக்குப் புரிந்தது.  ஆனால் விஷாலி விஷயத்தில் அவனால் முடியும் என்பதில் அவனுக்கு எந்த சந்தேகமும் இல்லை. குழந்தைப் பருவத்தில் இருந்து அவளைக் கவனித்தவன் அவன். அவளை ஈஸ்வரிடம் இருந்து பிரிப்பது பெரிய விஷயமில்லை...

அன்றிரவு முழுவதும் விழித்திருந்து ஈஸ்வரையும் விஷாலியையும் நிரந்தரமாகப் பிரித்து விட திட்டம் தீட்டி முடித்து விட்டு செயல்படுத்த காலையிலேயே மகேஷ் விஷாலி வீட்டுக்குக் கிளம்பி விட்டான்.

(தொடரும்)

பரம(ன்) ரகசியம் - 37




ந்த அனாதைக் குழந்தைகளுடன் நேரம் போவதே தெரியாமல் விளையாடிக் கொண்டிருந்த ஈஸ்வர் தற்செயலாகத் தான் ஜன்னல் வழியாக அந்த நபரைப் பார்த்தான். ஐந்தடிக்கும் குறைவான உயரம், குடுமி, வேட்டியைக் கச்சை கட்டி தோளில் ஒரு துண்டு போட்டுக்கொண்டு பிள்ளையார் சிலைக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு இருக்கும் அந்த நபர் ஏதோ மந்திரம் சொல்லிக் கொண்டிருப்பது போலத் தான் ஆரம்பத்தில் அவனுக்குத் தோன்றியது. ஆனால் அந்த நபரின் முகத்தில் தெரிந்த சிரிப்பும், கையை ஆட்டிய விதமும் அது மந்திரம் சொல்வதல்ல, எதையோ பேசிக் கொண்டு இருப்பது என்று பின்பு தான் அவனுக்குப் புரிய வைத்தது.

அன்பாலயம் நிர்வாகியை அழைத்து ஈஸ்வர் கேட்டான். “அது யார்? அந்த வினாயகருக்குப் பூஜை செய்பவரா?

அவர் ஜன்னல் வழியாகப் பார்த்து விட்டு சொன்னார். “யார்னு தெரியலையே. பிள்ளையாருக்கு பூஜை செய்ய இங்கே ஆள் எல்லாம் இல்லை. எங்கள்லயே யாராவது ஒருவர் பூஜை செய்வோம் அவ்வளவு தான்...

விஷாலியும் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள். அவளுக்கும் அந்தக் காட்சி வித்தியாசமாக இருந்தது. சிறிது கவனித்து விட்டுப் புன்னகையுடன் சொன்னாள். வினாயகருக்கு ஃப்ரண்ட் போல இருக்கு. ஏதோ ஆள் கிட்ட பேசற மாதிரியே பேசறார்”.

ஈஸ்வருக்கு ஏனோ அந்த நபரிடம் சென்று பேசத் தோன்றியது. அவன் வெளியே வர விஷாலியும், நிர்வாகியும் கூட வெளியே வந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து சில பிள்ளைகளும் வெளியே வந்தார்கள்.

தனித்து போரடித்துப் போய் உட்கார்ந்திருந்த பிள்ளையாருக்குப் பேச்சுத் துணை போல உட்கார்ந்திருந்த கணபதி திடீர் என்று ஆட்கள் வருவதைப் பார்க்கவே அவசர அவசரமாக எழுந்து நின்றான். கட்டிட உரிமையாளர்களிடம் அனுமதி வாங்கிக் கொள்ளாமல் உள்ளே வந்ததற்கு அவர்கள் கோபித்துக் கொள்வார்களோ என்ற பயம் அவனுக்குள் எழுந்தது.

கணபதி உடனே மன்னிப்பு கேட்டுக் கொண்டான். “மன்னிச்சுக்கோங்க. நான் இந்த வழியா கார்ல பிரயாணம் செய்துகிட்டு இருந்தேன். இங்கே வர்றப்ப கார் ரிப்பேர் ஆயிடுச்சு. மெக்கானிக்கை கூட்டிகிட்டு வர டிரைவர் போயிருக்கான். பிள்ளையாரைப் பார்த்தவுடனே சும்மா கார்ல தனியா உட்கார்றதுக்குப் பதிலா இவர் கூடயாவது பேசிகிட்டு இருக்கலாமேன்னு இங்கே வந்தேன். அவ்வளவு தான்...

கார்ல தனியா உட்கார்றதுக்குப் பதிலா இவர் கூடயாவது பேசிகிட்டு இருக்கலாமேன்னு இங்கே வந்தேன்என்ற வார்த்தைகள் ஈஸ்வரை மிகவும் கவர்ந்தன. இறைவனுடன் பேச முடிந்த ஆட்களை அவன் இது வரை பார்த்தது இல்லை. சொன்னவனின் முகத்தில் தெரிந்த வெகுளித் தனமும், பேச்சில் தெரிந்த கள்ளங்கபடமற்ற தன்மையும் நிஜமாகவே அவனால் இறைவனுடன் பேச முடியும் என்ற எண்ணத்தை ஈஸ்வர் மனதில் ஏற்படுத்தின.

ஈஸ்வர் கேட் வழியாகப் பார்த்த போது அவன் கார் அருகே இன்னொரு கார் இருப்பது தெரிந்தது. புன்னகையுடன் கணபதியிடம் அவன் கேட்டான். “இது தான் உங்க காரா?

கணபதி  கலகலவென சிரித்தான். “என் கிட்ட கார் எல்லாம் இல்ல. கடவுள் தந்த கால் மட்டும் தான் இருக்கு. இது ஒரு புண்ணியவான் தந்து ஒரு கோயிலுக்குப் போயிட்டு வர அனுப்பினது.... என்னவோ ரிப்பேராயிடுச்சு...

கடவுள் தந்த கால் மட்டும் தான் இருக்கு என்று தன் வறுமையை எந்தத் தயக்கமும் இல்லாமல் சிரித்தபடி சொன்ன கணபதியை ஈஸ்வருக்குப் பிடித்துப் போயிற்று. இல்லாமையை இப்படிச் சொல்ல எத்தனை பேரால் முடியும்?

கணபதிக்கு ஈஸ்வரையும், விஷாலியையும் பார்த்த போது சினிமா நடிகர்கள் போலத் தோன்றியது. “நீங்க சினிமாக்காரங்களா?என்று ஈஸ்வரிடம் கேட்டான்.

இல்லை என்று சிரித்துக் கொண்டே சொன்ன ஈஸ்வர் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டான். “நான் ஈஸ்வர். அமெரிக்கால இருக்கேன். மனோதத்துவ துறையில் உதவிப் பேராசிரியராய் இருக்கேன். இவங்க விஷாலி. ஃபேஷன் டிசைனராய் இருக்காங்க. சமூக சேவகியும் கூட... நீங்க?

நான் கணபதி. ஒரு கிராமத்துல சின்ன பிள்ளையார் கோயில்ல பூசாரியா இருக்கேன்... உங்களுக்கு இந்தியால யார் இருக்காங்க?

“அப்பாவோட அப்பா இருக்கார்....

“தாத்தான்னு சொல்லுங்க

ஈஸ்வர் சொல்லவில்லை. பேச்சுக்காகக் கூட பரமேஸ்வரனை தாத்தா என்று அவன் அழைக்காததை விஷாலி கவனித்தாள். இவனை விரோதித்துக் கொண்டால் அவ்வளவு சீக்கிரம் மன்னித்து விட மாட்டான் என்பது புரிந்தது.  

நீங்க எந்தக் கோயிலுக்குப் போய்ட்டு வரக் கிளம்பினீங்க?என்று ஈஸ்வர் பேச்சை மாற்றினான்.

“பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் ஒன்னு நூறு மைல் தொலைவுல இருக்கு. அங்கே போகத் தான் கிளம்பினோம். என்னை தற்காலிகமா வேறொரு இடத்துல பூஜை செய்யக் கூப்பிட்டாங்கன்னு அங்கே தான் இப்ப பூஜை செய்துகிட்டு இருக்கேன்.... என் பிள்ளையாரும் இப்படித் தான் லட்சணமா இருப்பார்... இவரைப் பார்த்தவுடனே அவர் ஞாபகம் எனக்கு வந்துடுச்சு...சொல்லும் போதே கணபதி குரலில் ஏக்கம் தெரிந்தது.

ஈஸ்வர் கணபதியின் பாசத்தை ரசித்தான். இந்தக்காலத்தில் கடவுள் கோரிக்கைகளை நிறைவேற்றும் சக்தியாகத் தான் பார்க்கப்படுகிறார் என்பதை அவன் அறிவான். அவர் இப்படி நேசிக்கப்படுவது அபூர்வம் தான். அந்தப் பிள்ளையார் மிகவும் கொடுத்து வைத்தவர் என்று புன்னகையுடன் நினைத்தவனாய் கேட்டான். “நீங்க இப்ப பூஜை செய்யப் போனதும் பிள்ளையாருக்குத் தானா?

“இல்லை.. அவரோட அப்பாவுக்கு... அவரும் நல்ல மாதிரி...

ஈஸ்வர் புன்னகை மேலும் விரிந்தது. கணபதிக்கு குருஜி ரகசியம் காக்கச் சொன்னது நினைவுக்கு வர மேற்கொண்டு தகவல்களை இத்தனை பேர் மத்தியில் சொல்ல வேண்டாம் என்று தோன்றியது. அவன் அன்பாலயம் பற்றி விசாரித்தான். அது அனாதை ஆசிரமம் என்பதையும் ஈஸ்வர் பின்னால் நின்று கொண்டிருந்தவர்கள் எல்லாம் அனாதைக் குழந்தைகள் என்பது தெரிந்த போது அவன் கண்களில் நீர் கோர்த்தது.

ஈஸ்வர் அந்த விழிகளின் ஈரத்தைக் கவனித்தான். அவனுக்கு கணபதியை மேலும் அதிகமாக பிடித்தது. இன்றைய உலகத்தின் சுயநலம், பேராசை, அலட்சியம் போன்றவைகளின் தாக்கம் சிறிதும் இல்லாமல் இத்தனை வெள்ளந்தியாக ஒரு மனிதன் இருக்க முடிவது சாத்தியம் இல்லை என்று அவனுக்குத் தோன்றியது.

அன்பாலயம் நிர்வாகியும் கணபதியால் கவரப்பட்டார். அவர் கணபதியை உள்ளே அழைக்க கணபதியும் அவர்களுடன் உள்ளே போனான். சிறிது நேரத்திலேயே ஈஸ்வரும், அவனும் மனதளவில் மிக நெருங்கி விட்டார்கள். கணபதி ஈஸ்வரை அண்ணா என்று பாசத்தோடு அழைக்க ஆரம்பித்து விட ஈஸ்வரும் ஏதோ பூர்வ ஜென்மத் தொடர்பு அவனுடன் இருக்க வேண்டும் என்று நினைக்க ஆரம்பித்தான். அவனும் கணபதியை ஒருமையில் அழைக்க ஆரம்பித்தான்.

பேச்சின் போது கணபதியின் குடும்ப சூழ்நிலைகளும் தெரியவர ஈஸ்வருக்கு அப்பாவின் நினைவு நாளில் அவனுக்கு ஏதாவது நல்லதாய் வாங்கித் தர வேண்டும் என்று தோன்றியது. அன்பாலயத்தின் எதிரிலேயே ஒரு ஜவுளிக் கடை இருந்ததைப் பார்த்தது ஈஸ்வருக்கு நினைவு வந்தது. ஆனால் அவன் தவறாக நினைத்துக் கொள்வானோ என்ற தயக்கமும் அவனுக்கு இருந்தது. அனாதைகளுக்கு இணையாக நினைப்பதாக அவன் மனம் சங்கடமடைந்து விடக் கூடாது என்று ஈஸ்வர் நினைத்தான்....

கணபதி அவனிடம் கேட்டான். நீங்க எத்தனை நாள் இந்தியால இருப்பீங்க அண்ணா?

“ஒரு மாச லீவுல வந்திருக்கேன் கணபதி. அதுக்குள்ளே போயாகணும்...

முடிஞ்சா எங்க கிராமத்துக்கு ஒரு தடவை வாங்க. எங்க பிள்ளையாரைப் பாத்துட்டுப் போங்க. எங்க கிராமம் ரொம்ப தூரம் இல்லை. பக்கம் தான். அதுவும் உங்க மாதிரி கார் இருக்கிறவங்களுக்கு வர்றது கஷ்டமே இல்லை.

ஈஸ்வர் புன்னகைத்தான். டைம் கிடைக்கிறது கஷ்டம் கணபதி. பார்க்கிறேன். ஒரு வேளை உன்னை மறுபடி சந்திக்க முடியாமயும் போகலாம். என் ஞாபகார்த்தமா உனக்கு ஏதாவது வாங்கிக் கொடுத்தா தப்பா நினைக்க மாட்டியே கணபதி...

உங்க அன்பே போதும்ணா. நான் ஞாபகார்த்தமா அதையே வச்சுக்குவேன். வேற ஒன்னும் வேண்டாம்...

ஒரு அண்ணா தம்பிக்கு எதாவது வாங்கிக் கொடுக்கணும்னு நினைக்கிறது தப்பா கணபதி. நீ வேண்டாம்னு சொல்லறதைப் பார்த்தா என்னை வேற மனுஷனா நினைக்கிற மாதிரியல்ல தோணுது...

கணபதிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவன் தர்மசங்கடத்துடன் ஈஸ்வரைப் பார்த்தான்.

ஈஸ்வர் தொடர்ந்து கேட்டான். “டிரஸ் வாங்கித் தரட்டா. எதிரிலேயே ஒரு ஜவுளிக்கடை இருக்கு.

டிரஸ் எல்லாம் எதுக்குண்ணா. என் கிட்ட தேவையான அளவு இருக்கு. நாலு வேஷ்டி நாலு துண்டு இருக்கு. அதுக்கும் மேல என்ன வேண்டும் சொல்லுங்க பார்க்கலாம்... சட்டை நான் போட்டுக்கறதே அபூர்வம்...

நாலு வேஷ்டி நாலு துண்டுஎன்பதே அதிகம் என்பது போலப் பேசிய கணபதியை அதிசயப் பிறவியைப் பார்ப்பது போல விஷாலி பார்த்தாள். ஈஸ்வர் விடாப்பிடியாக கணபதியை எதிரில் இருந்த ஜவுளிக்கடைக்கு அழைத்துச் சென்றான். விஷாலி அன்பாலயத்திலேயே இருக்க ஈஸ்வரும், கணபதியும் மட்டும் எதிரில் இருந்த ஜவுளிக்கடைக்குப் போனார்கள்.  கணபதி சற்று தயக்கத்துடன் தான் போனான்.

அந்த ஜவுளிக்கடை பெரிதாக இருந்தது. வாடிக்கையாளர்கள் யாரும் இருக்கவில்லை. ஈஸ்வர் பட்டுத் துணிகள் பகுதிக்கு கணபதியை அழைத்துச் சென்று நல்ல பட்டு வேட்டி ஒன்று கேட்க கணபதி “ஐயோ பட்டு வேஷ்டி எல்லாம் வேண்டாண்ணா.....என்று ஆட்சேபித்தான்.

நீ கொஞ்சம் சும்மா இரு கணபதிஎன்று ஈஸ்வர் சொல்ல கணபதி தர்மசங்கடத்துடன் கைகளைப் பிசைந்தான். ஆனால் எடுத்துப் போட்ட வெண் பட்டு வேட்டி ஒன்று அவன் மனதை மிகவும் கவர்ந்தது.  கோயிலில் பிள்ளையாருக்கு இருக்கும் ஒரே பட்டுத்துணி மிக நைந்த நிலையில் இருப்பது நினைவுக்கு வந்தது. இதை பிள்ளையாருக்கு உடுத்தினால் நன்றாக இருக்கும் என்று நினைத்தான். அவன் முகத்தில் புன்னகை அரும்பியது.

அதைக் கவனித்த ஈஸ்வர் கேட்டான். என்ன விஷயம்

இது எங்க பிள்ளையாருக்கு நல்லாயிருக்கும்என்று கணபதி புன்னகையுடனேயே சொன்னான்.

“அப்படின்னா இதுல ரெண்டு பேக் பண்ணிடுங்கஎன்று ஈஸ்வர் சொல்ல அந்தப் பட்டு வேட்டியின் விலையைப் பார்த்து மலைத்துப் போன கணபதி மறுத்தான். “அண்ணா ஒன்னு போதும். அந்தக் கணபதிக்கு வாங்கிக் கொடுத்தா இந்தக் கணபதிக்கு வாங்கிக் கொடுத்த மாதிரி தான்.

பரவாயில்லை. ரெண்டு கணபதிக்கும் இருக்கட்டும். எங்கப்பாவோட நினைவு நாள்ல நான் கடவுளை மறந்துட்டேன். நீ ஞாபகப் படுத்திட்டே....

கார் டிரைவருக்குப் போன் கால் வந்தது. உனக்கு அறிவு இருக்கா. எங்கே இருக்கே நீ...

“நம்ம கார் ரிப்பேர் ஆயிடுச்சுங்கய்யா. மெக்கானிக் வேற ஒரு வண்டிய ரிப்பேர் பண்ணிட்டு இருக்கான். அதை முடிச்சவுடனே அவனைக் கையோட கூட்டிகிட்டு போறதுக்காக நான் வெயிட் பண்ணிகிட்டிருக்கேன். ஏன் ஐயா?

கணபதியை அந்த ஈஸ்வர் கிட்டயே சேர்த்துட்டு ஏன்னா கேட்கறே?

நீங்க சொல்றது எனக்கு புரியலைங்களே ஐயா. கணபதி கார் ரிப்பேர் ஆன இடத்துக்குப் பக்கத்துல இருந்த பிள்ளையார் சிலை கிட்ட இருக்காரு

முட்டாள். நீ கார் ரிப்பேரே பண்ண வேண்டாம். வேற எதாவது காரை எடுத்துட்டாவது கிளம்பு.  முதல்ல அவனை அங்கே இருந்து கூட்டிகிட்டுப் போ.... கணபதியும், ஈஸ்வரும் கார் ரிப்பேர் ஆன இடத்துக்கு எதிர்ல இருக்கற ஜவுளிக்கடையில இருக்காங்க. ஓடு...

ணபதிக்கு பட்டு வேட்டி அல்லாமல் வேறு இரண்டு நல்ல காட்டன் வேட்டிகள், ஒரு சட்டை, இரண்டு துண்டுகள் எல்லாம் வாங்கிக் கொடுத்த ஈஸ்வரை கண்கள் கலங்க அவன் பார்த்தான். அவனுக்குப் பேச்சே வரவில்லை.  ’யாரிவன்? பார்த்த சிறிது நேரத்திலேயே இப்படி அன்பு மழை பொழிகிறானே? நிஜமாகவே எனக்கு ஒரு அண்ணன் இருந்தால் கூட இப்படி இருக்க முடிவது சந்தேகம் தானே? இந்தக் கடனை நான் எப்படித் தீர்ப்பேன்?

ஈஸ்வர் கேட்டான். “போகலாமா கணபதி?

கணபதி தலையை மட்டும் அசைத்தான். ஈஸ்வர் வாங்கிக் கொடுத்திருந்த உடைகள் இருந்த பை அவன் கையில் மனதைப் போலவே கனத்தது.  இருவரும் வாசலை நோக்கி நடக்க இருவருக்கு இடையில் யாரோ ஒருவர் நெருங்கினார். வழிக்கு வேண்டி இருவரையும் விலக்குவது போல அவர் இருவரையும் தொட்டார். இருவருமே மின்சாரம் உடம்பில் பாய்ந்தது போல் உணர்ந்தார்கள். சில வினாடிகள் மூவருக்கும் இடையே மின்சாரப் போக்குவரத்து நீடித்தது. ஈஸ்வரும் கணபதியும் உடல் நடுங்க நடுவே வந்த நபர் சாதாரணமாக நின்றார். அவர் தன் கைகளை அவர்கள் உடலில் இருந்து விலக்கிய போது அவர்கள் தங்களையும் அறியாமல் விலகி தள்ளிப் போனார்கள்.

அந்த நபர் கணபதி பக்கம் திரும்பவேயில்லை. ஆனால் ஈஸ்வர் பக்கம் திரும்பி லேசாகப் புன்னகைத்து விட்டுப் போனார். அவர் கண்களில் அக்னியைப் போன்றதொரு ஒளி தோன்றி மறைய ஈஸ்வர் தன் கண்களை நம்ப முடியாமல் பெரும் திகைப்புடன் அவரைப் பார்த்தான். போகும் அவரை ஓடிப் போய் பிடித்துக் கொள்ள ஈஸ்வரின் அறிவு அலறியது. ஆனால் சிலை போல அவனால் நிற்கத் தான் முடிந்ததே ஒழிய இம்மியும் நகர முடியவில்லை. அவன் நகர முடிந்த போது அந்த நபர் மறைந்து போயிருந்தார்.

கணபதி திகைப்புடன் ஈஸ்வரிடம் சொன்னான். ஏதோ கரண்ட் பாஸான மாதிரி இருந்துச்சு.

மின்சாரம் பாய்ந்த அனுபவம் தன்னுடையது மட்டுமல்ல என்பது உறுதியாகத் தெரிந்ததும் ஈஸ்வர் தெருவுக்கு ஓடிப் பார்த்தான். அந்த நபர் இரு பக்கமும் தென்படவில்லை.

மறுபடியும் கடைக்குள் ஓடி வந்தவன் கடைக்குள் இருந்த ஊழியர்களைக் கேட்டான். “இப்ப ஒருத்தர் போனாரே, யார் அவர்?

அவர்களில் ஒருவரைத் தவிர மற்றவர்கள் வேறொரு நபர் இருந்ததையே கவனிக்கவில்லை. பார்த்த நபரும் ஈஸ்வர் கணபதிக்கு நடுவில் அந்த நபர் சென்ற போது தான் பின்னால் இருந்து பார்த்திருந்தார். அந்த நபர் எப்போது உள்ளே வந்தார், எப்படி வந்தார், எப்படி அவர்கள் இருவருக்கும் பின்னால் போனார் என்பது அந்த ஊழியருக்கும் தெரியவில்லை.

கடை முதலாளி கேட்டார். “உங்க பர்ஸ் எதுவும் காணாமல் போகலையே

ஈஸ்வர் இல்லை என்றவுடன் அவர் ஆர்வம் குறைந்து போய் கல்லாவில் அமர்ந்தபடியே வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார். கணபதி என்ன நடந்தது என்பதை இன்னும் ஜீரணிக்க முடியாமல் அப்படியே சிலை போல நின்றான். ஈஸ்வர் தான் பார்த்ததை கணபதியிடம் கூட சொல்லவில்லை. அவனும் திகைப்பும் அதிர்ச்சியும் குறையாமல் அப்படியே நின்றான்.  அந்த மர்ம நபரைக் கடைசி நேரத்தில் கவனித்த அந்த ஊழியர் அந்த நபர் உள்ளே வந்ததை எப்படி அனைவரும் பார்க்கத் தவறி விட்டார்கள் என்று குழம்பிக் கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் கார் டிரைவர் ஓடி வந்தான். சாமி இங்கேயா இருக்கீங்க. வாங்க போகலாம் நேரமாச்சு

கார் சரியாயிடுச்சா?கணபதி கேட்டான்.

“இல்லை. அது மெக்கானிக் வந்து பார்த்துக்குவான். நான் வேற கார் கொண்டு வந்திருக்கேன். உங்களுக்கு சாயங்கால பூஜைக்குள்ளே வரணுமே... அதான்...

கணபதி ஈஸ்வரிடம் விடை பெற்றான். அண்ணா ரொம்ப நன்றி. இத்தனை வாங்கித் தந்திருக்கீங்க. திருப்பித் தர என் கிட்ட எதுவுமே இல்லை....

என்னை ஞாபகம் வச்சிரு கணபதி. அப்பப்ப உன் பிள்ளையார் கிட்ட என்னை கவனிச்சுக்கச் சொல்லு. அது போதும்.

அன்பு நிறைந்த கணபதி தலையாட்டினான். அவன் எதோ சொல்ல வந்தான். ஆனால் கார் டிரைவர் பேச விடாமல் அவனை இழுக்காத குறையாக “சாமி நேரமாச்சு.  அனுமார் கோயிலை மத்தியானம் சாத்திடுவாங்க...என்று சொல்ல ஈஸ்வர் கணபதியைக் கைகுலுக்கி அனுப்பி வைத்தான். அப்போது இருவருக்கும் இடையே முன்பளவு இல்லாவிட்டாலும் லேசான மின்சாரம் மறுபடியும் பாயந்தது. இருவரும் திகைத்தனர். ஆனால் கணபதி வாய் விட்டு எதுவும் சொல்வதற்கு முன் கார் டிரைவர் அவனை அழைத்துக் கொண்டு போய் விட்டான்.

கணபதி போகும் போது திரும்பிப் பார்த்துக் கொண்டே சொன்னான். சரி கிளம்பறேன்ணா. அண்ணி கிட்டயும் சொல்லிடுங்க

அவன் சொன்னது உடனடியாக ஈஸ்வரின் மூளைக்கு எட்டவில்லை. அவன் சிந்தனை எல்லாம் இப்போதைய மின் அதிர்வை சுற்றியே இருந்தது. அந்த மர்ம நபர் சித்தராகத் தான் இருக்க வேண்டும் என்பதில் அவனுக்கு சந்தேகம் இல்லை. அவர் இருவரையும் தொட்ட போது ஏதோ இனம் புரியாத ஒன்றை இருவருக்கும் ஒட்ட வைத்து விட்டுப் போனது போல் அவனுக்குத் தோன்றியது. அது தான் இப்போதும் அவர்களிடையே மின் அதிர்வுகளை ஏற்படுத்துகிறதோ?

நடந்தது எதுவும் கனவல்ல என்று ஈஸ்வர் ஓரிரு முறை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டி இருந்தது. திகைப்புடனேயே அவன் ஜவுளிக்கடையை விட்டு வெளியே வந்த போது கணபதி முதலில் வந்த காரும் காணவில்லை. கணபதியும் போய் விட்டிருந்தான்.
         
ஈஸ்வருக்கு இந்த சிவலிங்க விஷயத்தில் தான் அறியாமலேயே வேறு விதத்திலும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுக்க ஆரம்பித்தது.  இத்தனை நாட்கள் திரும்பத் திரும்ப சிவலிங்கம் தான் காட்சி அளித்தது என்றால் இப்போது அந்த சித்தரும் காட்சி அளித்து விட்டுப் போய் இருக்கிறார்.... அவர் தொட்டதன் பாதிப்பை நினைக்கையிலேயே உடல் மறுபடி சிலிர்த்தது. ஆனால் அவர் எதற்கு கணபதியையும் தொட்டார் என்ற கேள்விக்கு அவனால் விடை காண முடியவில்லை. அவனுடன் கணபதி இருந்ததாலா அல்லது வேறு காரணம் இருக்குமா?....


(தொடரும்)