Wednesday, July 2, 2014

அமானுஷ்யன் - 10



"எதாவது தடயம் அல்லது தகவல் கிடைத்ததா?" மஹாவீர் ஜெயின் கேட்டார்.

ஆனந்த் ஒன்றும் சொல்லாமல் அந்தக் காகிதத்தை அவரிடம் நீட்டினான்.

அவர் அதனை ஆராய நிறைய நேரம் எடுத்துக் கொண்டார். அதில் இருந்தது தில்லியின் வரைபடம். அதில் ஏழு இடங்கள் சிவப்பு மையால் குறியிடப்பட்டிருந்தன. சாந்த்னி சௌக், இந்தியா கேட், ரயில்வே ஸ்டேஷன், கனாட் ப்ளேஸ், சன்சாத் மார்க், லோட்டஸ் டெம்பிள், பாரக்கம்பா ரோடு என்று குறிகளுக்கு அருகே எழுதப்பட்டிருந்தது. அந்தக் கையெழுத்து ஆச்சார்யாவினுடையது என்பதில் ஜெயினுக்கு சந்தேகம் இல்லை.

பின் நிமிர்ந்தவர் ஆனந்தைக் கேட்டார், "இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?"

"நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதையேதான் நினைக்கிறேன் சார்"

அவன் பதில் ஜெயின் முகத்தில் புன்னகையை வரவழைத்தது. நாட்டின் தற்போதைய நிலவரத்தில் நல்லதை நினைக்க முடிவதில்லை....

"இந்த மேப் பழையதாகக் கூட இருக்கலாம். எத்தனையோ வருடங்களுக்கு முன் கூட அவர் இந்தக் குறிகளை செய்திருக்க வாய்ப்பிருக்கல்லவா?"

"இல்லை சார். சாவதற்கு ஐந்து நாட்கள் முன்னால் அவர் வாங்கிய புத்தகத்திற்குள்தான் இந்த மேப் இருந்தது. அவர் கடைசி நாட்களில் படித்துக் கொண்டிருந்த புத்தகம் அது. ஜென் புத்தமதத்தின் முதல் குரு போதிதர்மா பற்றிய அந்தப் புத்தகத்தில் 32 பக்கங்கள் தான் படித்திருக்கிறார்....... புதிதாக வாங்கிப் படித்துக் கொண்டிருந்த புத்தகத்திற்குள் இருக்க வேண்டுமென்றால் இந்த மேப் கடைசி நாட்களில் குறியிட்டதாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்..."

மஹாவீர் ஜெயின் யோசித்தபடி சொன்னார். "..... நமக்கு சில சந்தேகங்கள் எழுகின்றன என்றாலும்
இந்த மேப் எதையும் தீர்மானமாய் சொல்லவில்லை...."

ஆனந்த் ஒன்றும் சொல்லவில்லை. அவரை யோசிக்க விட்டான்.

"....இந்தக் குறியீடுகளை வேறு காரணங்களுக்காகக் கூடச் செய்திருக்கலாம்...."

ஆனந்த் அமைதியாகப் பார்த்தான்.

மஹாவீர் ஜெயின் கேட்டார். "நீங்கள் ஏன் ஒன்றும் சொல்ல மாட்டேன்கிறீர்கள்?"

"எனக்கென்னவோ இது சீரியஸான விஷயமாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது. ஆச்சார்யா கொலையானதற்கும் இதற்கும் கண்டிப்பாக சம்பந்தமிருக்கும் என்று நினைக்கிறேன். அதைய தான் நீங்களும் நினைக்கிறீர்கள் என்பதும் புரிகிறது... அப்படி இல்லாமல் இருக்கலாம் என்று நம்ப நீங்கள் இப்போது ஏதாவது ஆறுதலான காரணங்களைத் தேடுகிறீர்கள்.... அப்படி ஏதாவது இருந்து விட்டால் சந்தோஷம்தான்"

ஜெயின் பெருமூச்சு விட்டார். "இதெல்லாம் முக்கியமான இடங்கள் ஆனந்த்.... நாம் சந்தேகப்படுவது போல் இந்த இடங்களில் ஏதாவது அசம்பாவிதம் நடக்கப் போகிறது என்றால் அது எப்போது, யாரால் என்ற கேள்வி வருகிறது...."

"அதுதான் தெரியவில்லை சார். ஆச்சார்யா வீட்டில் ஆன அளவு தேடிப் பார்த்து விட்டேன். கிடைக்கவில்லை. ஆச்சார்யாவுக்குத்தான் அந்தத் தகவல்கள் தெரிந்திருக்கலாம். எங்கெல்லாம் அந்தத் தகவல்கள் இருக்கும் என்று சந்தேகம் இருந்திருக்கிறதோ அதை எல்லாம் அவரைக் கொன்றவர்கள் அழித்து விட்டார்கள். இந்த மேப் கூட அவருடைய ஜென் புத்தகத்தில் வைத்திருந்ததால்தான் தப்பித்து நம் கையில் கிடைத்திருக்கிறது..."

"அப்படியானால் அந்த விடை அவரைக் கொன்றவர்களைக் கண்டுபிடித்தால் ஒழியக் கிடைக்காது. இல்லையா?"

"இல்லை. ஆச்சார்யாவிற்கு அந்தத் தகவலைக் கொடுத்த நபர், அல்லது நபர்களைக் கண்டுபிடித்தால் கூட அந்தத் தகவல் நமக்கு கிடைக்கலாம் சார்..."

"ஒருவேளை அந்த நபர் அல்லது நபர்களையும் அவர்கள் கண்டுபிடித்துக் கொன்றிருந்தால்....?"

"அப்படிக் கொன்றிருந்தால் நீங்கள் சொன்னபடி கொலையாளிகளைக் கண்டுபிடித்தால்தான் பதில் கிடைக்கும். ஆனால் அந்தத் தகவல் தரும் நபர் அல்லது நபர்கள் இறந்து விட்டார்கள் என்பது உறுதியாகும் வரை நாம் அவர்களையும் கண்டுபிடிக்க முயல்வோம். ஆனால் அது வரை நம் இருவரைத் தவிர வேறு யாருக்கும் இந்த மேப் விஷயம் தெரியாமல் இருப்பது நல்லது என்று நான் நினைக்கிறேன், சார்..."

"ஆனால் வெளியே சொல்லாமல் இருந்து, நாம் கண்டுபிடிப்பதற்கு முன்பே ஏதாவது அசம்பாவிதம் இந்த இடங்களில் நடந்து விட்டால் தவறாகிப் போய் விடுமே, ஆனந்த்"

"ஆச்சார்யா வீட்டில் இருந்து கிடைத்தது என்று தெரிந்தால் கொலையாளிகள் உஷாராகி விடுவார்களே, சார்..."

இந்த இக்கட்டான நிலையில் என்ன செய்வது என்று ஜெயின் யோசித்த போது ஆனந்த் சொன்னான். "வேண்டுமானால் புதுதில்லியில் முக்கியமான இடங்களுக்கு ஆபத்து என்பது போல் மொட்டையாக ஃபோன் காலோ, கடிதமோ அனுப்பி வைக்கலாம். பாதுகாப்பு ஏற்பாடுகள் உஷார்ப்படுத்தப்பட அது உதவும்... நாம் உடனடியாக நம் துப்பு துலக்கும் வேலையை முடுக்கி விடலாம்..."

சிந்தித்த போது அவன் சொல்வதே சரியென்று அவருக்குத் தோன்றியது. கூடுதல் தகவல்கள் இல்லாத இந்த வெறும் வரைபடம் வெளியிடப்படுவதில் பெரிய நன்மை விளைந்து விடும் என்று தோன்றவில்லை. ஆனந்த் சொல்வது போல் கொலையாளிகளை உஷார்ப்படுத்தத்தான் உதவும் என்று தோன்றியது. "உங்களுக்கு உதவிக்கு யாராவது வேண்டுமா?..."

"வேண்டாம், சார். எனக்குத் தேவைப்படும் விவரங்களை நம்பிக்கையான ஆட்களிடமிருந்து நானே பெற்றுக் கொள்கிறேன்....சார். ஒரு கேள்வி. உங்கள் ஆபிசில் இருக்கும் மகேந்திரன் எப்படி?"

"கம்ப்யூட்டரில் புலி. புத்திசாலி. ஏன் கேட்கிறீர்கள்?"

"ஆச்சார்யா அவனிடம் நிறையப் பேசுவார். கம்ப்யூட்டரில் சந்தேகம் கேட்பார் என்றெல்லாம் சொன்னார்கள். அவனுக்கு மற்றவர்கள் கம்ப்யூட்டர்களில் புகுந்து வேவு பார்க்கும் பழக்கமும் இருக்கிறது என்றார்கள். அதனால்தான் கேட்டேன்...."

ஜெயின் சற்று யோசித்து விட்டுச் சொன்னார், "உண்மைதான். அவனுக்கு அரசியல் செல்வாக்கும் இருக்கிறது. அவனை வேலைக்குச் சேர்த்ததே அந்த செல்வாக்குதான். ஆனாலும் வேலையில் அவனிடம் குறை சொல்வதற்கில்லை....."

ஆனந்த் மேற்கொண்டு அவரிடம் மகேந்திரனைப் பற்றி எதுவும் கேட்கப் போகவில்லை. சற்று நேரத்திற்கு முன் ஜெயினின் அறைக்குள் நுழையும் போது கூட அவன் கழுகுப் பார்வை பார்த்தது மனதில் நெருடியது....

*************

வெளியே பனிக்காற்றின் தீவிரம் அதிகமாயிருந்தது. அவன் புத்த விஹாரத்தை விட்டு வந்து இரண்டு மணி நேரம் ஆகியிருந்தது. அவன் உறைபனி லேசாகப் போர்த்தியிருந்த பாறைகளில் ஏறிப் பயணம் செய்தான். முடிந்த வரை மனிதர்கள் செல்லக் கூடிய பாதைகளை அவன் தவிர்த்தான். இந்த நள்ளிரவில் வெளியே யாரும் அந்தப் பகுதியில் பயணிப்பது அபூர்வம் என்றாலும் அவன் அனாவசியமாக ஆபத்துகளை எதிர்கொள்வதைத் தவிர்க்க எண்ணினான். ஆங்காங்கே பனிக்கரடிகளைக் கண்டான். அவை அவனை வெறித்துப் பார்க்க அவன் புன்னகையுடன் அவற்றைப் பார்த்து கையசைத்து விட்டுத் தன் பயணத்தைத் தொடர்ந்தான். ஒரு பனிக்கரடி அவனை சிறிது தூரம் பின் தொடர்ந்து வந்தது. ஆனால் அவனுக்கு சிறிதும் பயம் இருக்கவில்லை. மனிதர்களை விட இந்த விலங்குகள் எத்தனையோ மேல். அவசியமில்லாமல் அடுத்தவர்களை இம்சிப்பதில்லை.

நீண்ட பயணத்திற்குப் பின் ஒரு நெடுஞ்சாலையை அடைந்தான். மறைவாக நின்று ஒரு மணி நேரம் அமைதியாக அந்த நெடுஞ்சாலையைக் கவனித்தான். ஆள் நடமாட்டம் இல்லையென்றாலும் அந்த ஒரு மணி நேரத்தில் ஒரு லாரியும், ஒரு மிலிட்டரி ட்ரக்கும் அந்த சாலையில் சென்றன. பனியினூடே அந்த வண்டிகளின் விளக்குகள் மங்கலாகத் தெரிந்து மறைந்தன. அங்கு நின்ற அந்த வேளையில் அவன் மனம் அந்த புத்த பிக்குகளை நன்றியுடன் எண்ணிப் பார்த்தது. பேண்ட் பையில் இருந்த பணமும் அவன் உடலை சுற்றியிருந்த சால்வையும் அவர்களுடைய அன்பின் அடையாளமாய் அவனை நெருங்கி இருப்பதை உணர்ந்தான். 'எப்படி இவர்களுக்கு கைம்மாறு செய்யப் போகிறேன்?' என்று கேட்டுக் கொண்டான். அப்படியொரு சந்தர்ப்பம் கிடைக்கும் வரையாவது உயிருடன் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

நெடுஞ்சாலை ஓரமாக இருந்த பனி படர்ந்த மரங்களை ஆராய்ந்து ஒரு மரத்தைத் தேர்ந்தெடுத்தான். பதுங்கியபடியே சென்று அந்த மரத்தில் ஏறிக் கொண்டு அமைதியாகக் காத்திருந்தான். அந்தக் காத்திருத்தலில் பதட்டம் இருக்கவில்லை. அவசரமோ, அலுப்போ இருக்கவில்லை. சுமார் அரை மணி நேரம் கழித்து ஒரு சரக்கு லாரி வருவது பனியை லேசாக ஊடுருவி வந்த விளக்குகள் மூலம் தெரிந்தது. அந்த லாரி அந்த மரத்தைக் கடந்த போது சத்தமில்லாமல் அந்த லாரியில் குதித்தான். அந்த லாரி தார்ப்பாயில் இருந்த பனியை கைகளால் அப்புறப்படுத்தி மல்லாந்து படுத்துக் கொண்டான்.

பனிக்கால இரவின் ஆகாயம் மங்கலாகத் தெரியும் நட்சத்திரங்களுடன் பேரழகாய்த் தெரிந்தது. சிறிது நேரம் ரசித்தவன் களைப்பில் அப்படியே உறங்கிப் போனான். அந்த உறக்கத்தில் கூட அவன் உடல் அந்த லாரியின் வேகத்தை மிகச்சரியாக உணர்ந்திருந்தது. வேகம் குறைய ஆரம்பித்த போது தானாக விழித்துக் கொண்டான். தலையை லேசாக உயர்த்திப் பார்த்தான். அதிகாலை ஆகியிருந்தது. தூரத்தில் ஒரு டீக்கடை தெரிந்தது.

அந்த டீக்கடை முன் ஒரு டூரிஸ்ட் பஸ்ஸூம், ஒரு வேனும் நின்றிருந்தன. லாரியை அங்கு நிறுத்தி டீ குடிக்க டிரைவரும் க்ளீனரும் போக சரியாக இரண்டு நிமிடங்கள் கழித்து மறைவாய் லாரியில் இருந்து இறங்கிய அவன் அந்த டூரிஸ்ட் பஸ்ஸை சுற்றிக் கடந்து சென்று டீக்கடையை அணுகினான். லாரி டிரைவரும், க்ளீனரும் அவன் அந்தப் பஸ் பயணி என்று நினைத்தார்கள். அங்கு டீ வாங்கிக் குடித்தபடியே அங்குள்ளவர்களை ஆராய்ந்தான். அங்கிருந்தவர்களில் யாரும் முக்காடு போட்டிருந்த அவன் மீது ஆர்வம் காட்டவில்லை. அவனும் ஆர்வத்தைத் தூண்டும்படியாக வித்தியாசமாக நடந்து கொள்ளவில்லை.

அப்போது இன்னொரு பஸ் எதிர்ப்புறத்தில் இருந்து வந்தது. அந்த நெடுஞ்சாலையில் ஒரு மைல் தூரத்தில் இருந்த வேறொரு டீக்கடையில் முன்பே பயணிகளுக்காக நிறுத்தி இருந்ததால் அந்த பஸ் அந்த டீக்கடை முன் நிற்காமல் விரைந்தது. அந்தப் பஸ்ஸில் இருந்த ஒரு பயணி ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்து வந்தவன் டீக்கடையில் இருந்த முக்காட்டு மனிதனை உற்றுப் பார்த்தான். அவனும் தன்னை உற்றுப் பார்க்கும் மனிதனைக் கூர்ந்து பார்க்க அந்த மனிதன் அவனை அடையாளம் கண்டு கொண்டது போல் தெரிந்தது. பார்த்தது சில வினாடிகள் என்றாலும் அந்தப் பயணியின் முகத்தில் தெரிந்த பீதி அவனுக்கு அபாயச் சங்கு ஊதியது.

(தொடரும்)

No comments:

Post a Comment