Wednesday, July 2, 2014

அமானுஷ்யன் - 6அவன் நன்றாக ஓய்வு எடுத்துக் கொண்டான். நிறைய நேரம் தூங்கினான். ஆனால் அவன் விழித்திருக்கும் பொழுதுகளில் புத்தபிக்குகளுக்குப் பெரும் உதவியாக இருந்தான். புத்த விஹாரத்தை சுத்தம் செய்ய, உணவு சமைக்க, துவைக்க என்று இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தான். அவன் வேலை செய்வதில் கச்சிதத் தன்மை இருந்தது. அதிகமாக அலட்டிக் கொள்ளாமல் எதையும் லாவகமாக, வேகமாக செய்து முடித்தான்.

மூத்த பிக்கு மற்ற பிக்குகளிடம் சொன்னார். "பாருங்கள். அவன் வேலை செய்யும் போது கூட சக்தியை அனாவசியமாய் விரயம் செய்வதில்லை. செய்ய வேண்டியதை முழுக்கவனத்துடன் சிறப்பான முறையில் சோர்வு ஏற்படுத்திக் கொள்ளாமல் செய்வது எல்லோருக்கும் முடிந்ததல்ல"

அவனை அந்த புத்த விஹாரத்தில் அனைவருக்கும் மிகவும் பிடித்து விட்டது. ஒவ்வொருவரைப் பார்க்கும் போதும் அவன் முகத்தில் படரும் ஆத்மார்த்தமான புன்னகைதான் அவனுடைய மிகப்பெரிய மனம் கவரும் அம்சமாக இருந்தது. மற்ற சமயங்களில் சாதாரணமாகத் தெரியும் அவன் முகம் புன்னகைக்கும் சமயங்களில் ஒரு வசீகரனாக அவனை ஆக்கியது. எல்லோரும் அவனால் வசீகரிக்கப்பட்டார்கள். என்றாலும் இளைய பிக்கு அவனுடைய பரம ரசிகராகி விட்டார்.

ஒரு முறை அவன் தூங்கி எழுகையில் அருகில் அமர்ந்திருந்த இளைய பிக்கு சொன்னார்.

"நீ தூங்குவது ஒரு குழந்தை தூங்குவது போல இருக்கிறது. அவ்வளவு அமைதியாகத் தூங்குகிறாய். உன்னால் எப்படி முடிகிறது?"

அதில் என்ன இருக்கிறது என்பது போல அவன் இளைய பிக்குவைப் பார்த்தான்.

இளைய பிக்கு தயக்கத்துடன் விளக்கினார். "உன்னை யாரோ கொலை செய்ய முயற்சித்திருக்கிறார்கள். உன் பிணத்தைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். உனக்கோ நீ யார் என்று நினைவேயில்லை. அப்படி இருக்கையில் ஒரு மனிதனுக்குத் தூக்கம் இப்படி வருமா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது...."

அவன் ஒன்றும் சொல்லாமல் இளைய பிக்குவையே பார்த்தான். அவன் முகத்தில் லேசாக வாட்டம் வந்து வேகமாக மறைந்தது. பிறகு புன்னகையுடன் இளைய பிக்குவிடம் சொன்னான். "கடந்த காலம் எல்லாவற்றையும் என்னை மாதிரி மறக்க முடிவது ஒரு விதத்தில் பெரிய வரப்பிரசாதம் இல்லையா? எத்தனை பேர் எல்லாவற்றையும் மறந்து ஒரு புதிய வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஆனால் பழையதை மறக்க முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். எனக்கு கடவுள் கேட்காமலேயே அந்த வரப்பிரச்சாதத்தைக் கொடுத்திருக்கிறார்..."

இளைய பிக்கு அவனையே கூர்ந்து பார்த்தார். அவன் தன் கவலையை மறைத்து இப்படிப் பேசுகிறானா இல்லை நிஜமாகவே சொல்கிறானா? "சரி உன்னைக் கொல்ல ஆட்கள் முயற்சி செய்தது?"

"ஒருவன் எப்போது சாக வேண்டும் என்று தீர்மானிப்பது கடவுள்தான். இவர்கள் எல்லாம் முயற்சி செய்து என்ன ஆகப் போகிறது? அவர்கள் முயற்சி செய்து நான் பிழைத்துக் கொள்ளவில்லையா? அப்படி நான் நாளைக்கே சாக வேண்டும் என்று கடவுள் முடிவு செய்திருந்தால் நான் கவலைப்பட்டு மாற்றவா முடியும்? இல்லா விட்டாலும் மனிதன் என்றாவது ஒரு நாள் செத்துத்தானே ஆக வேண்டும். அது நாளையானால் என்ன இன்னும் நாற்பது வருஷம் கழித்து ஆனாலென்ன?"

இளைய பிக்கு அவனைத் திகைப்புடன் பார்த்தார். அவர் முகத்தில் இன்னும் அவனைப் பற்றிய கவலை இருப்பதைப் பார்த்த அவன் மனம் நெகிழ்ந்து சொன்னான். "ஒரு மனிதனுக்கு ஒரு விதிதான் இருக்க முடியும், பிக்குவே. கவலைப் படுவதால் அந்த விதியை யாரும் மாற்றி விட முடியாது"

இளைய பிக்குவிற்கு அவன் வார்த்தைகளில் இருந்த உண்மையை விட அந்த உண்மையை அவன் வாழும் விதம் மிகவும் பிடித்திருந்தது. அது போல் பேசும் பலரை அவர் பார்த்திருக்கிறார். ஆனால் நிஜவாழ்க்கை என்று வரும் போது அப்படிப் பேசுபவர்கள் படும் கவலை சாதாரணமானதல்ல. ஆனால் இவன் முகவாட்டமும் கவலையும் ஒருசில நிமிடங்களுக்கு மேல் இவனிடம் தங்குவதில்லை. வந்தவுடன் அதை விரட்டும் வித்தை அவன் கற்றிருக்கிறான்..

அவன் சாதாரணமானவன் அல்ல என்று மூத்த பிக்கு சொன்னது நினைவுக்கு வந்தது. நேற்றைய தினம் அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது அவன் முதுகில் கழுத்துக்கும் சற்று கீழே முதுகுத்தண்டின் மேற்பகுதியில் இருந்த ஒரு பெரிய மச்சத்தை மூத்த பிக்கு நீண்ட நேரம் ஆராய்ந்தார். ஒரு பாம்பு படமெடுப்பது போல் அந்த மச்சம் இருந்தது. மூத்த பிக்கு மனிதர்களின் சாமுத்திரிகா லட்சணத்தை நன்றாக அறிந்தவர். அவர் அந்த மச்சத்தின் அறிகுறி என்ன என்று ஆர்வமாகக் கேட்ட இளைய பிக்குவிடம் அவன் சாதாரணமானவன் அல்ல என்று மட்டும் சொன்னார் ....

இளைய பிக்கு அவனிடம் ஆர்வத்துடன் கேட்டார். "இந்த மச்சம் உனக்கு சிறு வயதிலிருந்தே இருக்கிறதா?"

"எந்த மச்சம்?"

"உன் முதுகின் மேல் புறத்தில் இருக்கும் மச்சம்"

அவன் விழித்தான். இளைய பிக்குவிற்குத் தன் தவறு புரிந்தது. பழையவை எதுவும் நினைவில்லாத அவனிடம் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்க வேண்டாம் என்று தோன்றியது. அவன் அவரிடம் அந்த நாக மச்சத்தைப் பற்றி விளக்கமாகக் கேட்டுக் கொண்டான். என்ன நிறம், என்ன நீள அகலம், பார்க்க எப்படி இருக்கிறது என்றெல்லாம் அவன் கேட்டுத் தெரிந்து கொண்ட போது பாவமாக இருந்தது. தன் உடல் பற்றியே அடுத்தவரிடம் கேட்டறிய வேண்டியது எப்படிப்பட்ட துர்ப்பாக்கியம்?

இளைய பிக்கு விரைவில் பேச்சை மாற்றினார். "உன் காயங்கள் சீக்கிரம் ஆறி வருகின்றன என்று குரு சொன்னார்"

அவன் முகத்தில் புன்னகை அரும்பியது. "வலி நிறையவே குறைந்து விட்டது.... மருந்து பாதி ஓய்வு பாதி"

"அப்படியென்றால்?"

"நன்றாக ஓய்வெடுத்துக் கொள்ளும் உடலில்தான் மருந்து நன்றாக வேலை செய்யும்."

'இப்படிப் பெரிய பெரிய உண்மைகள் எல்லாம் தெரிகிற இவனுக்கு தன்னைப் பற்றிய உண்மை நினைவில்லையே' என்று நினைத்து இளைய பிக்கு பெருமூச்சு விட்டார்.

*******

CBI மனிதன் மனதில் அமானுஷ்யனே நிறைந்திருந்தான். படித்த அந்தப் பக்கங்களில் இருப்பதெல்லாம் உண்மையானால் அவர்கள் பயப்படுவது நியாயமே என்பது அவனுக்குப் புரிந்தது. ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு அவன் தன்னுடைய ஆளிற்கு ஃபோன் செய்தான்.

"அவனைச் சுட்ட அந்த ராத்திரியில் என்ன நடந்ததுன்னு எனக்கு சின்ன விஷயம் கூட விடாம சொல்லு"

மறுபக்கத்தில் அந்த இரவின் நிகழ்ச்சிகள் மறுபடியும் விளக்கப்பட்டன. எல்லாவற்றையும் பொறுமையாகவும் கவனமாகவும் கேட்டு விட்டு ஒரு கேள்வியை மிக நிதானமாக CBI மனிதன் கேட்டான். "நீங்க அவனைச் சுட்ட பிறகு அவன் தவறி அந்த மலையுச்சியில் இருந்து விழுந்தானா? இல்லை மலையுச்சியிலிருந்து அவனாகவே குதித்தானா?"

மறுபக்கம் சிறிது நேரம் பதிலளிக்க எடுத்துக் கொண்டது. "சார்...அவனாகவே குதித்த மாதிரிதான் தோணுது"

சிறிது நேரம் மௌனம் சாதித்த CBI மனிதன் சொன்னான். "எனக்கு அந்த புத்த விஹாரத்தை சோதனை செய்த ரெண்டு பேர்ல எவனுக்கு அதிக மூளை இருக்கோ அவன் கிட்ட பேசணும். எவ்வளவு சீக்கிரம் பேச முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பேசணும். என்னோட நம்பருக்குப் ஃபோன் செய்யச் சொல்லு"

"சார். அவங்க அந்தப் பிணத்தைத் தேடிட்டு இருக்கிற இடங்கள்ல பெரும்பாலும் டவர் கிடைக்கிறதில்லை. அவனைப் பிடிக்கிறது கஷ்டம். ஆனா முடிஞ்ச அளவு சீக்கிரம் உங்க கிட்ட பேசச் சொல்றேன்......"

CBI மனிதன் தூங்கவில்லை. அவன் அந்த ஃபோன் காலுக்காகக் காத்திருந்தான். காத்திருந்த போது நிமிடங்கள் யுகங்களாக நகர்ந்தன. அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்தவன் எழுந்து சென்று தானே காபி தயார் செய்து குடித்தான். காபியின் லேசான கசப்பை கண்களை மூடிக் கொண்டு அனுபவித்தவன் ஆச்சார்யாவை சபித்தான். "எங்கிருந்து பிடித்தான் இந்த ஆள் அந்த அமானுஷ்யனை?"

மலையுச்சியில் இருந்து அவனாகவே விழுந்தது CBI மனிதனுக்கு நெருடலாக இருந்தது. ஒரு வேளை அவன் அந்தப் புத்தவிஹாரத்தின் அருகில் விழுந்து அவர்கள் அவனை எடுத்துக் காப்பாற்றி இருந்தால்....? என்ற கேள்வி பூதாகரமாக மனதில் எழுந்தது. சிந்திக்க ஆரம்பித்தான்.

சரியாக இரண்டு மணி முப்பத்திரண்டு நிமிடங்கள் கழிந்த பின் அவன் எதிர்பார்த்த ஃபோன் வந்தது.

CBI மனிதன் நேரடியாக விஷயத்திற்கு வந்தான். "பிணத்தைத் தேடிகிட்டு போன உங்களுக்கு புத்த விஹாரத்தின் உள்ளே போய்ப் பார்க்கணும்னு எப்படி தோணிச்சு?"

"கதவுல இரத்தக்கறை இருந்தது சார்"

"அப்புறம்"

"அங்கே கையில் கட்டு போட்டுகிட்டு ஒரு வயசான பிக்கு வந்தார். அவர் கையில் அடிபட்ட காயம்னு புரிஞ்சது. ஆனாலும் எதுக்கும் உள்ளே போய் பார்த்துடலாம்னு உள்ளே போய் ஒரு இடம் விடாமல் பார்த்தோம்....."

"அங்கே கரண்ட் இருக்கா?"

"இல்லை சார். உள்ளே இருட்டுதான். அங்கங்க விளக்கு வச்சிருந்தாங்க. மீதி இருட்டான இடத்தையும் நாங்க டார்ச் அடிச்சுப் பார்த்துட்டோம். ஒரு இடத்தையும் மிச்சம் வைக்கலை...அவன் பிணம் இல்லை"

"நீங்க ரெண்டு பேரும் உள்ளே நுழைஞ்சதுல இருந்து பார்த்த ஒவ்வொன்னையும் சொல்லு பார்க்கலாம்"

அவன் விவரித்தான். முழுவதையும் கேட்டுக் கொண்ட CBI மனிதன் கடைசியில் கேட்டான். "அந்த தியான மண்டபத்தில் நிறைய பிக்குகள் தியானம் செய்துட்டு இருந்தாங்களே அவங்கள்ல ஒருத்தனாய் அவன் இருந்திருந்தால்....? நீங்க ஒவ்வொருத்தர் முகத்தையும் சரியா கவனிச்சீங்களா?"

"அங்கே பிக்குகள் மட்டும்தான் இருந்தாங்க சார்"

"நான் கேட்டதுக்குப் பதில் சொல்லு. அவங்க ஒவ்வொருத்தரையும் டார்ச் அடிச்சுப் பார்த்தீங்களா?"

தயக்கத்துடன் பதில் வந்தது. "..... இல்லை சார்."

CBI மனிதனுக்குப் புரிந்தது. அமானுஷ்யன் பற்றியறிந்த விவரங்கள் படித்திரா விட்டால் அப்படிப் பார்க்க வேண்டிய அவசியம் தனக்கே புரிந்திருக்காது என்கிற போது அவனைக் குறை சொல்வதில் அர்த்தம் இல்லை. அவன் அந்த பிக்குவின் கைக்காயத்தைப் பார்த்த பின் கூட உள்ளே போய் பார்த்ததே பெரிய விஷயம்!

"சரி உடனடியா பத்து பேராவது அந்த புத்த விஹாரத்துக்குப் போங்க. வலுவான ஆள்களா பெரிய டார்ச் லைட்களோட போங்க. அங்கே இன்னொரு தடவை செக் பண்ணுங்க. ஒவ்வொரு ஆளையும் ஒவ்வொரு இடத்தையும் செக் பண்ணுங்க. ஒரு வேளை அவன் மாறு வேஷத்துல கூட இருக்கலாம். அவன் அங்கே இருந்தா துப்பாக்கி ரவையில மூளையைக் குறி பார்த்து சுடுங்க. இதயத்தைக் குறி பார்த்து சுடுங்க. அவன் செத்தாலும் அவனை எரிச்சு அவன் சாம்பலானவுடன் எனக்கு சொல்லுங்க....நான் உங்க பாஸ் கிட்டயும் இப்பவே ஃபோன் செய்து சொல்றேன். உடனே கிளம்புங்க."

(தொடரும்)

No comments:

Post a Comment