Wednesday, July 2, 2014

அமானுஷ்யன் - 9



ஆச்சார்யா பணிபுரிந்த CBI தலைமை அலுவலகத்தில் எல்லோரிடமும் ஆச்சார்யா பற்றி விசாரித்தான் ஆனந்த். மேல்மட்டத்திலிருந்து அடிமட்டம் வரை பேசிப் பார்த்தான். எல்லோரும் அவரைப் பற்றி உயர்வாகவே சொன்னார்கள். அவருடைய சகாக்களும் அவர் டிபார்ட்மென்டில் அவருக்குக் கீழே வேலை செய்தவர்களும் அவர் நாணயத்தைப் பற்றி உயர்வாகப் பேசினார்கள். அதோடு அவர் ரகசியமானவர், நினைப்பதை வெளியில் சொல்லாதவர் என்பதையும் சொன்னார்கள். அவர் கொலை அவர்களைப் பாதித்துள்ளது பேசும் போது தெரிந்தது. அவர்களில் பெரும்பாலானோர் கொலைக்குப் பழைய பகை காரணமாயிருக்கலாம் என்றுதான் நினைத்தார்கள்.

ராஜாராம் ரெட்டியிடம் பேசும் போது அவனிடம் ஒரு விஷயத்தைச் சொல்லலாமா வேண்டாமா என்று தயங்கியது போல் தெரிய ஆனந்த் அவர் நினைப்பதை வெளிப்படையாகச் சொல்லச் சொன்னான்.

ராஜாராம் ரெட்டி தயக்கத்துடன் சொன்னார், "இங்கே சைபர் க்ரைம்ஸைக் கண்டுபிடிக்கும் டிபார்ட்மென்டில் ஒருவன் இருக்கிறான். அவன் பெயர் மகேந்திரன். கம்ப்யூட்டரில் அவனுக்குத் தெரியாததே எதுவும் கிடையாது என்று சொல்லலாம். ஆனால் கேரக்டர் அவ்வளவாக சரியில்லை. மூளை அதிகம், அதனால் தலைக்கனமும் அதிகம். அடுத்தவர்கள் தங்கள் கம்ப்யூட்டரில் ரகசியமாய் வைத்திருக்கிற டேட்டாவை ஆராய்வது அவனுடைய ஹாபி. எல்லாருமே கம்ப்யூட்டரில் ஏதாவது ப்ரச்னை என்றால் அவனைத்தான் கூப்பிடுவோம். அதை அவன் சீக்கிரம் சரி செய்தும் விடுவான். ஆச்சார்யா அடிக்கடி அவனைக் கூப்பிட்டு சந்தேகம் கேட்பார். அவனும் மணிக்கணக்கில் அவர் கம்ப்யூட்டரில் உட்கார்ந்து அவருக்குச் சொல்லிக் கொடுப்பான். அவன் திறமைசாலி என்பதால் ஆச்சார்யாவிற்கு அவனைப் பிடித்திருந்தது. அவனிடம் நிறைய பேசுவார். அவர் அப்படிப் பேசும் போது ஏதாவது வாய் விட்டுச் சொல்லி இருக்கலாம்...."

அவர் நிறுத்தினார். ஆனந்த் மேலே சொல்லுங்கள் என்பது போல் அவரைப் பார்த்தான்.

"ஆச்சார்யாவின் ரகசியங்கள் ஏதாவது அந்தக் கம்ப்யூட்டரில் இருந்திருந்தால் அவர் அவனிடம் சொல்லா விட்டாலும் கூட அவன் அதைக் கண்டுபிடிக்க வாய்ப்பு இருந்திருக்கிறது...." அதற்கு மேல் சொல்வது சரியல்ல என்று அவர் நிறுத்தியது ஆனந்திற்குப் புரிந்தது.

"கேரக்டர் சரியில்லை என்றால் எந்த விதத்தில்?"

".....பல பெண்கள் கிட்ட சகவாசம் இருக்கிறது. இந்தக் காலத்துல அது பெரிய விஷயம் இல்லைதான். நான் அந்தக் கால மனுஷன். அதனாலேயே அதை ஜீரணிக்க கஷ்டமாக இருக்கிறது"

"வேலையில் எப்படி?"

"குறை சொல்ல முடியாது...."

மகேந்திரன் ஆனந்தை விட இளமையானவனாக இருந்தான். கண்ணாடி அணிந்திருந்தான். ஆனந்தை அவன் தூரத்திலிருந்தே எடை போடுவது ஆனந்திற்குத் தெரிந்தது. ஆனந்த் அவனிடம் பேசிய போது அவனும் மற்றவர்கள் சொன்னதையே சொன்னான். நல்லவர், நேர்மையானவர், ரகசியமானவர்....

"எத்தனை ரகசியமானவராய் ஒருவர் இருந்தால் கூட அவர் ஒரு சிலரிடமாவது மனம் விட்டுப் பேசுபவராக இருப்பார்..." ஆனந்த் சொல்லி நிறுத்தினான். மகேந்திரன் ஒன்றும் சொல்லாமல் அவனையே பார்த்தான்.

ஆனந்த் சொன்னான், "அவர் உங்களிடம் அதிகம் பேசுவார் என்று சொன்னார்கள்?"

"யார் சொன்னார்கள்?" அவன் உடனடியாகக் கேட்டான்.

ஆனந்த் யோசனை செய்து விட்டுச் சொன்னான். "யாரோ சொன்னார்கள். நினைவில்லை"

அவன் நினைவில்லை என்றதை மகேந்திரன் நம்பியது போல் தெரியவில்லை. ஆனால் அதைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் ஆச்சார்யா பற்றி சொன்னான். "புதிதாக எதையும் தெரிந்து கொள்வதில் அவருக்கு ஆர்வம் அதிகம். கம்ப்யூட்டர் சம்பந்தமாக அடிக்கடி கேட்பார். அதைப் பற்றித்தான் பேசுவோம்"

"அவர் இங்கு கம்ப்யூட்டரில் ஏதாவது ரகசிய டேட்டா வைத்திருந்தாரா?"

"அவர் ஜாக்கிரதையானவர். ஆஃபிஸ் கம்ப்யூட்டரில் எதையும் வைத்துக் கொண்டது போல் தெரியவில்லை."

"உங்களிடம் கம்ப்யூட்டர் தவிர வேறெதைப் பற்றியும் அவர் பேசியதில்லையா?"

அவன் ஒரு கணம் மௌனம் சாதித்து விட்டு கவனமாகச் சொன்னான், "சொல்லிக் கொள்கிற மாதிரி எதுவும் பேசியதில்லை."

"அவரை யார் கொலை செய்திருக்கலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?"

"யாராயிருந்தாலும் அரசியல் பக்கபலம் இருக்கிற ஆள்தான் கொலை செய்திருக்கணும் என்பதில் சந்தேகம் இல்லை. இல்லை என்றால் CBI அடிஷனல் டைரக்டரையே கொலை செய்யத் துணிச்சல் வந்திருக்காது. எதற்கும் நீங்கள் ஜாக்கிரதையாய் இருப்பது நல்லதென்று நான் நினைக்கிறேன்....."

அவன் எச்சரிக்கை எந்த எண்ணத்தில் சொல்லப்பட்டது என்பதை ஆனந்தால் தீர்மானிக்க முடியவில்லை. அவனிடம் மேலும் பேசிக் கொண்டிருந்த போது உபயோகமான தகவல் எதுவும் கிடைக்கா விட்டாலும் அவன் வெளியே சொல்லாத எதையோ அறிந்திருக்கிறான் என்பதை மட்டும் ஆனந்த் ஊகித்தான்.

அடுத்ததாக ஆச்சார்யா கொலை வழக்கை விசாரிக்கும் போலீஸ் உயர் அதிகாரிகளை ஆனந்த் சந்தித்தான். அவர்களுடைய உபசாரம் பலமாக இருந்தது. என்ன சாப்பிடுகிறீர்கள், என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் என்றெல்லாம் சொல்லி அன்பு மழையில் நனைய வைத்தார்கள். ஆனந்த் உடனடியாக விஷயத்திற்கு வந்து வழக்கைப் பற்றி விசாரிக்க, அவர்கள் ஆச்சார்யா கண்டுபிடித்த பழைய கேஸ்களில் சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து வருவதாகவும் கூடிய சீக்கிரம் கொலையாளியைப் பிடித்து விடுவோம் என்றும் தெரிவித்தார்கள். தங்கள் ·பைலை அவனிடம் காட்டினார்கள்.

அவர்கள் வைத்திருந்த ·பைலில் பழைய கேஸ் விவரங்கள் நிறைய இருந்தன. அதை மேலோட்டமாகக் கூடப் பார்க்காமல் ஆனந்த் அவர்களிடமிருந்த ஆச்சார்யா கொலை செய்யப்பட்ட இடத்தின் புகைப்படங்களை ஆராய்ந்தான். பெரும்பாலான புகைப்படங்கள் மஹாவீர் ஜெயின் வைத்திருந்த ·பைலில் இருந்தவைதான் என்றாலும் அவன் பார்க்காதஒருசிலவும் இருந்தன. அதில் அவன் கவனத்தை ஈர்த்தது எரிந்த நிலையில் இருந்த கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்கின் புகைப்படம்.

அவன் அதை அதிகமாக ஆராய்வதைப் பார்த்த ஒரு அதிகாரி சொன்னார். "கொலையாளி தனியாக வந்தது போலத் தெரியவில்லை. ஒரு சில பேரோட வந்திருக்கலாம். அவர்களுக்கு ஆச்சார்யா மேல் இருந்த பகை அங்கே இருக்கிறதை எல்லாம் துவம்சம் செய்ய வைத்திருக்கிறது. கம்ப்யூட்டரையும் சில புத்தகங்களையும் எரித்திருக்கிறார்கள். மற்ற புத்தகங்களை எல்லாம் விசிறி எறிந்திருக்கிறார்கள். அவர் வீட்டு விலை உயர்ந்த பொருட்களை எல்லாம் உடைத்திருக்கிறார்கள். எதிலுமே கைரேகைகள் கிடைக்கவில்லை...."

"ஹார்ட் டிஸ்கை எரித்ததற்குக் காரணம் அதில் தங்கள் பற்றிய தகவல் ஏதாவது இருக்கலாம் என்பதாகக் கூட இருக்கலாம் இல்லையா?"

அந்தக் கேள்வி அவர்களை தர்மசங்கடப் படுத்தியது ஆனந்திற்கு நன்றாகவே தெரிந்தது.

"அந்தக் கோணமும் நாங்கள் யோசிக்காமல் இல்லை. புதுக் கேஸ் ஏதாவது சம்பந்தப்பட்டிருந்தால்தான் அந்தக் கோணம் அர்த்தமுள்ளதாகிறது. ஆனால் உங்கள் அலுவலகத்தை நாங்கள் விசாரித்த வரையில் அவர் எந்தப் புது கேஸையும் துப்பறிந்து கொண்டிருக்கவில்லை என்றார்கள்".

ஆனந்த் அதற்கு மேல் அதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. "நான் கொலை நடந்த இடத்தைப் பார்க்க வேண்டும்"

"ஜெயின் சார் பிரத்தியேகமாகச் சொன்னதால் அந்த இடத்தை நாங்கள் சுத்தம் செய்யப் போகாமல் அப்படியே வைத்திருக்கிறோம். எங்கள் ஆட்கள் யாராவது உதவிக்கு உடன் வர வேண்டுமா?"

"வேண்டாம். நன்றி"

ஆச்சார்யாவின் வீடு ஒரு நடுத்தர வர்க்கத்தினரின் இரண்டு பெட் ரூம் வீடாக இருந்தது. வீட்டினுள் எல்லாமே சின்னாபின்னமாகக் கிடந்தன. கொலைகாரர்கள் எந்தப் பொருளையும் விட்டு வைக்கவில்லை. ஆச்சார்யாவின் குடும்பப் புகைப்படங்கள் கண்ணாடி விரிசல்களுடன் ஆங்காங்கே விழுந்திருந்தன. ஆச்சார்யா, மனைவி, மகளுடன் சந்தோஷமாகச் சிரித்தபடி இருந்த புகைப்படத்தை ஆனந்த் எடுத்துப் பார்த்தான். எல்லோர் முகத்திலும் உண்மையான சந்தோஷம் தெரிந்தது. இன்னொரு உடைந்த புகைப்படத்தில் ஆச்சார்யாவின் மகளும், மருமகனும் இருந்தார்கள்.

ஆனந்த் கருகியிருந்த கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்கைப் பார்த்தான். அதனுடன் சில புத்தகங்களும் கருகி இருந்தன. முக்கால் வாசி கருகியிருந்த ஒரு புத்தகத்தை எடுத்துப் பார்த்தான். அது புத்தகமல்ல, ஆச்சார்யாவின் இந்த வருடத்தைய டைரி. பாதி எரிந்திருந்த இன்னொரு புத்தகத்தை எடுத்துப் பார்த்தான். ஏதோ ஆங்கில நாவல். கொலயாளிகளின் முக்கிய குறி கம்ப்யூட்டரும் டைரிகளும்தான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அது தெரிந்து விடாதிருக்க வேறுசில புத்தகங்களையும் சேர்த்து எரித்திருக்கிறார்கள் என்பது புரிந்தது.

நிதானமாக அந்த இடத்தை ஆனந்த் ஆராய்ந்தான். எல்லாம் உடைந்தும், நொறுங்கியும், கலைந்தும் எரிந்தும் இருந்தன. அத்தனை அலங்கோலங்களுக்கு மத்தியில் ஒரு அழகான புத்தர் சிலை கீழே தரையில் அமர்ந்த நிலையிலேயே இருந்தது. இந்த அலங்கோலங்களால் பாதிக்கப்படாமல் புத்தர் சாந்த மயமாக தியானத்திலிருந்தார். அந்தப் புத்தர் சிலையைப் பார்த்தவுடன் அம்மா நினைவும், காணாமல் போன தம்பி நினைவும் வந்தன....

மனதை மீண்டும் அந்த இடத்தை ஆராயத் திருப்பினான். எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. இது எதிர்பார்த்தது தான். கொன்றவர்கள் கச்சிதமாகத்தான் இயங்கியிருக்கிறார்கள்.

கிளம்பத் தயாரான போது ஒரு ரசீது மூலையில் கிடந்ததைப் பார்த்து அதை எடுத்தான். ஆச்சார்யா கொலை செய்யப்படுவதற்கு ஐந்து நாட்கள் முன்பு புத்தகம் வாங்கியதன் ரசீது. "Bodhidharma-Osho" என்று ரசீதில் எழுதியிருந்தது. அதுதான் ஆச்சார்யா கடைசியாக வாங்கிய புத்தகமாக இருக்கலாம் என்று தோன்ற ஆனந்தின் உள்ளுணர்வு அந்தப் புத்தகத்தை அந்த அலங்கோலங்களுக்கு மத்தியில் தேடச் சொன்னது.

ஆச்சார்யா பல புத்தகங்கள் வைத்திருந்ததால் அந்தப் புத்தகத்தை அங்கு கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. சுமார் இருபது நிமிடம் தேடி அந்தப் புத்தகத்தை ஆனந்த் கண்டுபிடித்தான். "Bodhidharma-The Greatest Zen Master" என்ற அந்தப் புத்தகத்தை எடுத்துப் பிரித்தான். அதில் ஆச்சார்யா 32 பக்கங்கள் படித்திருந்தார் என்பதற்கு அடையாளமாக அங்கு முனையை மடித்திருந்தார். ஆனந்த் அந்தப் புத்தகத்தை வெறுமனே புரட்ட உள்ளே இருந்து ஒரு தாள் கீழே விழுந்தது.

எடுத்துப் பார்த்த ஆனந்த் மெல்ல விசிலடித்தான்.....

(தொடரும்)

No comments:

Post a Comment