Wednesday, July 16, 2014

அமானுஷ்யன் - 14



அவனும் வருணும் குறுகிய நேரத்திலேயே நண்பர்களாகி விட்டதை சஹானா கவனித்தாள். வருண் அவனிடம் தன் நண்பர்களைப் பற்றியும், பள்ளிக்கூடத்தைப் பற்றியும் மிக உற்சாகமாக சொல்லிக் கொண்டிருந்தான். ஆரம்பத்தில் ஹிந்தியில் பேசிக் கொண்டிருந்த வருண் ஒரு கட்டத்தில் அவனுக்குத் தமிழும் தெரியும் என்று அறிந்த பின் தமிழுக்கு மாறினான். வருணின் பேச்சை மிகப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த அவன் அடிக்கடி பின்னால் திரும்பிப் பார்ப்பதைக் கவனித்தாள்.

"நீங்கள் அவர்கள் பின் தொடரலாம் என்று எதிர்பார்ப்பது போல் தெரிகிறது. நீங்கள் இங்கே இருப்பது அவர்களுக்கு எப்படித் தெரியும் என்று நினைக்கிறீர்கள்?"

"நான் அந்த டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த போது அந்த வழியாகப் போன பஸ்ஸில் இருந்த ஒருவன் என்னை அடையாளம் கண்டு கொண்ட மாதிரி தெரிகிறது. அவன் முகம் போன போக்கைப் பார்த்தால் அவர்கள் கூட்டத்தாளாகத்தான் இருப்பான் என்று தோன்றுகிறது. அவன் போய் சொல்லி யாராவது வரலாம் என்று நினைக்கிறேன். ஒரு வேளை அப்படி வருவது போல் இருந்தால் உங்களுக்குத் தொந்தரவு இல்லாமல் காரில் இருந்து இறங்கி விடலாம் என்றுதான் பார்க்கிறேன்...."

அவளுக்கு என்னவோ போல் இருந்தது. தன் காரின் வேகத்தைக் கூட்டினாள். மறுபடி வருண் அவன் நண்பன் ஒருவனின் விரதீரப் பராக்கிரமங்களைச் சொல்ல இடையிடையே ஆர்வத்துடன் "அப்புறம்" என்று அவன் கேட்டுக் கொண்டிருந்தான். மகன் உயிரைக் காப்பாற்றிய ஒருவனைத் தன் உயிருக்குப் பாதுகாப்பில்லாமல் டெல்லி வீதிகளில் உலாவ விட்டு விடுவது சரியா என்று மனசாட்சி உறுத்தியது. அதுவும் வாய் வார்த்தைக்கு அவனைக் கூப்பிட்டு அவன் மறுத்த பின் நிம்மதியடைந்த விதம் அவளுக்கே ஜீரணிக்க முடியாத செயலாகப் பட்டது. வாழ்வில் என்றுமே அவள் நியாயமானவளாகத்தான் வாழ்ந்திருக்கிறாள். ஆனால் இவன் விஷயத்தில் அவள் செய்வது தர்மமல்ல என்று தோன்றியது. மகனை அவன் காப்பாற்றிய போது பெருகி நின்ற நன்றியுணர்வு அந்தக் காலத்து மணல் கடிகாரத்தின் துகள்களாய் வடிந்து குறைந்து கொண்டே போவது போல் தோன்றியது.

ஆனால் வீட்டில் வேறு ஆண் துணையில்லாமல் மகன், மாமியாருடன் வாழும் அவள் அவனுக்கு எப்படி அடைக்கலம் தர முடியும் என்பதும் சஹானாவுக்கு விளங்கவில்லை. அவள் நிலைமை அந்த புத்த பிக்குகளைப் போல் எளிதானதல்ல. தன் மாமியார் மரகதம் என்ன நினைக்கிறாள் என்று அறிந்து கொள்ள சாய்ந்து கண்ணாடி வழியாகப் பார்த்தாள். மரகதம் அவனையே உணர்ச்சியில்லாமல் பார்த்துக் கொண்டு இருந்தாள். அவள் முகபாவனையிலிருந்து அவள் என்ன நினைக்கிறாள் என்பதை எந்நாளும் சஹானாவால் ஊகிக்க முடிந்ததில்லை.

சஹானாவின் மனம் அவன் சொன்னதையும், நடந்து கொண்டதையும் எல்லாம் மீண்டும் எண்ணிப் பார்த்தது. அவள் மகனை அவன் காப்பாற்றாமல் இருந்திருந்தால் அவன் யார் கவனத்தையும் ஈர்க்காமல் அந்த லாரி ஏறித் தன் வழியே போயிருப்பான்.... திடீரென்று அவன் பின்னால் திரும்பிப் பார்த்ததன் பொருள் விளங்கியது. காப்பாற்றியதால் பலரும் அவனைப் பார்த்து இருப்பார்கள். அவனைத் தேடி வருபவர்கள் விசாரித்தால் அங்கிருக்கும் மனிதர்கள் அவன் இப்படி ஒரு காரில் போனான் என்று சொல்லக் கூடும்... அவள் காரின் வேகம் மேலும் கூடியது
*******

"ஹலோ" CBI மனிதன் தூக்கக் கலக்கத்துடன் செல்லை எடுத்துப் பேசினான்.

"அவன் உயிரோடிருக்கிறான்"

CBI மனிதனின் தூக்கம் முழுவதுமாகக் கலைந்தது. கேட்ட தகவல் கனவில்லையே என்று உறுதிப்படுத்திக் கொள்ள அவனுக்கு சில வினாடிகள் தேவைப்பட்டன. ஆனாலும் அதிர்ச்சி மாறாமல் கேட்டான். "என்ன?"

"அவன் உயிரோடிருக்கிறான். அவனை நம் ஆள் ஒருவன் பார்த்திருக்கிறான்."

"விவரமாய் சொல்லுங்கள்"

மறுபக்கம் எல்லா நிகழ்ச்சிகளையும் விரிவாகச் சொன்னது.

"அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்கள். அவன் அங்கே முக்காடு போட்டுக் கொண்டு டீ குடித்துக் கொண்டு நின்றான் என்றால் நம்ப முடியவில்லை"

"எனக்கும் நம்பப் பிடிக்கவில்லைதான். ஆனால் அது உண்மை மாதிரிதான் தெரிகிறது"

"சார் முதலில் நன்றாக யோசியுங்கள். அவன் பார்த்த நேரம் அதிகாலை. நல்ல வெளிச்சமில்லாத நேரம். முக்காடு போட்ட மனிதனை அடையாளம் காண்பதும் அவ்வளவு சுலபமில்லை. அவன் டீக்குடித்து நின்றதாய் சொல்லும் இடம் நாம் அவன் இருக்கலாம் என்று தேடிய இடத்திலிருந்து மிக தூரத்தில் இருக்கிறது...."

"உயிரோடு இருக்கிற மனிதனுக்கு வாகனமும் கிடைத்தால் அவன் அந்த தூரத்திற்குப் போவது ஒன்றும் பெரிய விஷயமில்லை"

"அது உண்மைதான்...." என்று ஒப்புக் கொண்ட CBI மனிதன் கேட்டான். "அது சரி அந்த இடத்திற்கு ஆட்களை அனுப்பினீர்களா?"

"உம்... போனார்கள். இவர்கள் போன போது அந்த இடத்தில் டீக்கடைக் காரர்கள் இரண்டு பேர் தவிர வேறு யாரும் இருக்கவில்லை. அந்த இரண்டு பேரும் இவர்கள் காண்பித்த போட்டோவைப் பார்த்து கிட்டத்தட்ட அதே மாதிரி ஆள் அன்று காலை அங்கு வந்து டீக் குடித்ததாகச் சொன்னார்கள்..."

"கிட்டத்தட்ட என்பதற்கும் அதே ஆள் என்பதற்கும் இடையே நிறையவே வித்தியாசம் இருக்கிறது"

"ஆனால் அவர்கள் பார்த்த ஆள் செய்ததாகச் சொன்ன விஷயம் மட்டும் அந்த 'கிட்டத்தட்ட' என்ற வார்த்தையை விலக்கி விட்டது....."

ஒரு சிறுவன் லாரியில் அடிபட்டு சாகாமல் காப்பாற்றப்பட்ட கதையை மறுபக்கம் அப்படியே ஒப்பித்தது. "அவர்கள் அவனுடைய தீவிர ரசிகர்களாய் மாறி இருந்தார்கள்... அவர்கள் சொன்ன விதத்தைப் பார்த்தால் அவனைத் தவிர வேறு ஒருவனால் அப்படி அந்தப் பையனைக் காப்பாற்றியிருக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. அந்த விஷயம் தெரிகிற வரை எனக்கிருந்த கொஞ்ச நஞ்ச சந்தேகமும் அதைக் கேட்ட பிறகு போய் விட்டது."

CBI மனிதனின் முகத்தில் கவலையின் ரேகைகள் படர்ந்தன.

மறுபக்கம் தொடர்ந்து சொன்னது, "அவன் அந்தப் பையன் வந்த காரிலேயே போனான் என்று சொல்கிறார்கள். அந்தக் காரில் பெண்ணும் பையனும்தான் இருந்தார்கள் என்று டீக்கடைக்காரன் ஒருவன் சொல்கிறான். இன்னொருத்தன் இன்னொரு ஆளும் அந்தக் காரில் உட்கார்ந்திருந்த மாதிரி இருந்தது என்று சொல்கிறான். நம் ஆட்கள் அந்தக் காரின் அடையாளங்களை வாங்கிக் கொண்டு அந்த வழியாகப் போயிருக்கிறார்கள்...."

CBI குழப்பத்தில் ஆழ்ந்தான். "சார் அப்படி அங்கு வந்து டீ சாப்பிடும் அளவுக்கும், அந்தப் பையனை அனாயாசமாய் காப்பாற்றும் அளவுக்கும் அவன் ஆரோக்கியமாய் இருந்தால் அவன் செய்திருக்கக்கூடிய முதல் வேலையே போலீசுக்கோ, பத்திரிகைகளுக்கோ தனக்குத் தெரிந்ததை ஃபோன் செய்து சொல்லியிருப்பதுதான் என்று எனக்குத் தோன்றுகிறது"

"அவன் சொன்னால் யார் நம்புவார்கள்?"

"சார், உங்கள் எதிரிகள் கண்டிப்பாக நம்புவார்கள். உண்மையா பொய்யா என்பதைப் பற்றி எதிரிகள் எப்போதும் கவலைப்படுவதில்லை. அவர்களைப் பொறுத்த வரை எதிரியைப் பற்றிக் கேள்விப்படும் மோசமான விஷயங்கள் எல்லாம் உண்மையே."

"அரசியலில் இத்தனை வருஷங்கள் இருந்தாலும் எனக்குப் பெரிய எதிரிகள் இல்லையே"

அது உண்மை. வயதில் எவ்வளவு சிறியவரானாலும் மிகுந்த மரியாதையுடன் பன்மையிலேயே பேசும் அவர், அதிகமாக எப்போதும் நிதானமிழக்காத அவர் அதிக எதிரிகளை சம்பாதித்துக் கொண்டதில்லை.

"ஆனாலும் நீங்களிருக்கும் பதவியில் தான் வந்து உட்கார எதிர்பார்த்திருப்பவனுக்கு நீங்கள் எதிரிதானே"

மறுபக்கம் மௌனம் சாதித்தது. அரசியலில் அவன் சொன்னது மிகப்பெரிய சத்தியம்தானே. "ஆனாலும் அவன் கையில் ஆதாரம் இருந்தால்தானே அவன் சொல்வது எடுபடும். ஆதாரம் எதுவும் இல்லாததால் அவன் சும்மா இருந்திருக்கலாம்..."

CBI மனிதனுக்கு எங்கோ இடித்தது. அந்த ·பைலில் படித்த மனிதன் நடந்து கொள்ளும் விதம் இப்படி இருக்காது என்று உள்ளுணர்வு சொன்னது. இந்தக் காலத்தில் பள்ளிக் கூடத்திற்கு வரப் பிடிக்காத மாணவன் 'பள்ளிக்கூடத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கிறது' என்று மர்மமாகப் ஃபோன் செய்து சொன்னால் கூட பள்ளிக்கூடத்திற்கு விடுமுறை விட்டு பட்டாளமாகப் போய் அங்கு வெடிகுண்டைத் தேடும் காலக் கட்டத்தில் இவர் சொல்வது போல் இருக்காது என்றே தோன்றியது. சிறிது நேர சிந்தனைக்குப் பின் சொன்னான். "இன்னொரு காரணம் கூட இருக்கலாம்"

"என்னது?"

"தனிப்பட்ட முறையில் வந்து பழி வாங்கும் நோக்கமாகக் கூட இருக்கலாம்"

மறுபக்கம் பீதியுடன் வேகமாகச் சொன்னது. "அவனை உடனடியாக தீர்த்துக் கட்டுவது நல்லது என்று எனக்குத் தோன்றுகிறது. அவன் உயிரோடு இருந்தால் எங்கே போவான் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?"

"கண்டிப்பாய் அவன் வீட்டுக்கோ, அவனுக்கு நெருங்கியவர்கள் வீட்டுக்கோ போக மாட்டான். அங்கு போனால் நாம் அங்கே காத்துக் கொண்டிருப்போம் என்று அவனுக்குத் தெரியும். எதற்கும் அவன் வீட்டு ஃபோனை டேப் செய்வது நல்லது என்று தோன்றுகிறது"

"அதை உடனடியாகச் செய்கிறேன். நீங்கள் அவன் வீட்டைக் கண்காணிக்க இன்னும் ஆட்களை அதிகப்படுத்துங்கள்...."

"ஓகே. அந்த மாதிரியான காரைப் பார்த்தால் நிறுத்தி அவன் இருந்தால் அவனைப் பிடிக்கவும், அவன் இல்லா விட்டால் அவனை எங்கே அந்தப் பெண் இறக்கி விட்டிருக்கிறாள் என்று கேட்டுக் கண்டு பிடிக்கவும் போலீஸ் மூலம் ஏற்பாடு செய்கிறேன்... உங்கள் ஆட்களை மட்டுமே இதில் நம்புவது போதாது என்று நினைக்கிறேன். நமக்கு விஷயம் தெரிந்ததே தாமதமானதால் அந்தக் கார் அவர்களுக்குக் கிடைப்பது கஷ்டம் என்று தோன்றுகிறது"

மறுபக்கம் நிம்மதிப் பெருமூச்சு விட்டது. "நல்லது. அப்படியே செய்யுங்கள்... அந்த ஆச்சார்யா கேஸை முடித்த மாதிரி இவனுக்கும் ஒரு முற்றுப் புள்ளி வைத்தால் நிம்மதியாயிருக்கும்"

"ஆச்சார்யாவின் கொலையாளியை ஆனந்தும் ஜெயினும் முழுவதும் நம்பின மாதிரி தெரியவில்லை.... தனிப்பட்ட முறையில் அவர்கள் துப்புத் துலக்கப் போகலாம் போல் தெரிகிறது"

மறுபக்கம் வாய் விட்டுச் சிரித்தது. "போகட்டும். அவர்கள் எதையும் கண்டுபிடிக்கப் போவதில்லை. கொலையாளி என்று ஒருவனைப் பிடித்து விட்டதால் இதில் போலீஸ் உதவி இனி கிடைக்கப் போவதில்லை. டிபார்ட்மெண்ட் மூலமாகவும் அவர்கள் ஒன்றும் செய்ய முடியாது....."

மறுபக்கம் ஃபோன் வைக்கப்பட்டது. அவர் அளவுக்கு சுலபமாக CBI மனிதனால் ஆனந்தையும் ஜெயினையும் ஒதுக்கி விட முடியவில்லை. சில வினாடிகள் யோசித்து விட்டு அந்தக் காரைக் கண்டு பிடிக்கும் ஏற்பாடுகளை ஆரம்பித்தான்.

(தொடரும்)

No comments:

Post a Comment