Wednesday, July 16, 2014

அமானுஷ்யன் - 13



சஹானா நிதானமாய் முதலுதவிப் பெட்டியைத் திறந்து டெட்டால், பஞ்சு எல்லாம் எடுக்க அவன் உள்ளுக்குள் பொறுமையிழந்து போனாலும் வெளிப்பார்வைக்கு அமைதியாக பதட்டமில்லாமல் பார்த்திருந்தான். அவனுக்குள் ஒரு குரல் கேட்டது.

"அவசரப்படாதே. அவசரப்படும் போது காலத்தை இழக்கிறாய்....". யாரோ எப்போதோ சொன்னதாய்த் தோன்றிய அந்த வார்த்தைகள் அவனுடைய கடந்த காலத்தின் முதல் நினைவாய்த் தோன்றியது. யார் இதைச் சொன்னார்கள்? எப்போது சொன்னார்கள்?....அவனுக்கு நினைவில்லை.

அவள் தந்த முதலுதவிப் பொருள்களால் வெளிப்பார்வைக்குத் தெரிந்த சிராய்ப்புக் காயங்களை சுத்தம் செய்து மருந்து தடவிக் கொண்டு அவளுக்குப் புன்னகையுடன் நன்றி தெரிவித்தான். அவனுடைய ஒவ்வொரு அசைவிலும் ஒருவித நிதானமான கச்சிதத்தை சஹானா கவனித்தாள். அவன் புன்னகை அவனை மிக அழகாகப் பிரகாசிக்க வைத்ததாக அவளுக்குத் தோன்றியது.

நல்ல வேளையாக அவள் காரை மீண்டும் கிளப்பும் வரை பின்னால் யாரும் தொடர்ந்து வரவில்லை. ஆனால் அவன் அருகில் அமர்ந்திருந்த அந்த வயதான பெண்மணி அவனையே உன்னிப்பாகப் பார்த்த விதம் அவனுக்கு என்னவோ மாதிரியாக இருந்தது. அவன் அவளைப் பார்த்தும் புன்னகைத்தான். ஆனால் அவள் முகத்தில் எந்த சலனமும் இல்லை.

"அங்கிள், உங்கள் பெயர் என்ன?" வருண் கேட்டான்.

"அங்கிள்" என்று அவன் புன்னகைக்க வருண் கலகலவென சிரித்தான். அந்த சிறுவன் அதை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டதால் சிறிது நேரத்திற்குத் தப்பித்தோம் என்று அவன் நினைத்தான்.

சஹானா கேட்டாள். "உங்களுக்கு எங்கே போக வேண்டும்?"

"டெல்லி.." அவனுக்கு அவள் டெல்லி போகிறவள் என்பதால் அதே பெயரைச் சொல்லத் தோன்றியது.

"டெல்லியில் எங்கே?" என்று கேட்க வாய் திறந்த சஹானா அதைக் கேட்காமல் விட்டாள். அவளுக்கு அவன் ஒரு புதிராகத் தோன்றினான். அவனிடம் சூட்கேஸோ, பையோ இல்லாதது அவளுக்கு விசித்திரமாகத் தோன்றியது. ஏதோ அதிகாலை நடை நடக்கக் கிளம்பியவன் போல கையில் ஏதும் இல்லாமல் இந்த மலைச்சாரலில் அவன் வந்த விதம் இயற்கையாக இல்லை. மகனைக் காப்பாற்றியவனிடம் அதைத் துருவித் துருவிக் கேட்பது நாகரிகமில்லை என்று அவளுக்குத் தோன்றியது.

ஆனால் வருண் அவனை விடுவதாய் இல்லை.

"அங்கிள், சொல்லுங்கள்... உங்கள் பெயர் என்ன?"

அப்போது சஹானாவும் கண்ணாடி வழியாக பின்னால் இருந்த அவனைப் பார்க்க மூவரும் அவன் பதிலை எதிர்ப்பார்க்கிறார்கள் என்பது அவர்கள் பார்வையிலேயே அவனுக்குப் புரிந்தது. ஒரு கணம் வாயிற்கு வந்த பெயரைச் சொல்லித் தொலைக்கலாமா என்று தோன்றியது. ஆனால் அவர்கள் நல்ல மனிதர்களாக அவனுக்குத் தோன்றினார்கள். அவர்களிடம் பொய் சொல்ல அவன் துணியவில்லை. அவன் சொல்வதைக் கேட்டு விட்டு அவர்கள் இதே சினேகத்தில் அவனுடன் பேசுவார்களா என்று தெரியவில்லை. ஆனாலும் அவன் உண்மையைச் சொல்லத் தீர்மானித்தான்.

"உண்மையைச் சொன்னால் எனக்கு என் பெயரே தெரியாது....."

அவர்கள் மூவரும் அவனை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள்.

ஒரு புத்த விஹார வாசலில் மரணத்துடன் போராடிக் கொண்டு அவன் விழுந்திருந்ததைக் கண்ட புத்த பிக்குகள் அவனைக் காப்பாற்றிய அந்த நள்ளிரவிலிருந்து ஆரம்பித்தான். அவனுக்குத் தெரிந்த அவன் வாழ்க்கையின் ஆரம்பம் அதுவே. அவன் அவர்களிடம் எதையும் மறைக்கவில்லை. அவனைத் தேடி வந்தவர்கள் அவனைத் தீவிரவாதிகள் என்று சொன்னதைக் கூட அப்படியே அவர்களிடம் சொன்னான். அவன் சொல்லச் சொல்ல அவர்கள் ஏதோ மர்மக் கதை கேட்பதைப் போல் கேட்டார்கள். வருணும் அந்த பெண்மணியும் அவன் மேல் வைத்த கண்ணை எடுக்காமல் கேட்டார்கள் என்றால் சஹானா சாலையையும், கண்ணாடி வழியாக அவனையும் மாறி மாறி பார்த்தபடியே காரை ஓட்டினாள்.

அந்த புத்த பிக்குகளின் அன்பைச் சொன்ன இடங்களில், முக்கியமாக அவன் கிளம்பும் போது அவர்கள் செய்த பிரார்த்தனை, கொடுத்த பணம், சால்வை பற்றிச் சொல்லும் போது அவனுக்கு நா தழுதழுத்தது. கடைசியில் அங்கிருந்து கிளம்பி லாரி ஒன்றில் பதுங்கி வந்ததையும், தேனீர் குடிக்க இறங்கியதையும் சொல்லி நிறுத்திய போது அங்கு ஒரு கனத்த மௌனம் நிலவியது. அவர்கள் திகைப்பின் எல்லைக்கே போய் விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.

சிறிது நேரம் கழித்து சஹானா கேட்டாள், "இனி நீங்கள் என்ன செய்வதாக உத்தேசம்?"

"எனக்கு நான் யார், என்னை ஏன் சிலர் கொல்ல முயற்சிக்கிறார்கள் என்று தெரிய வேண்டும். அதைத் தெரிந்து கொள்கிற வரை உயிரோடு இருக்க வேண்டும்"

"சரி. டெல்லியில் எங்கே தங்குவீர்கள்?"

"இத்தனை பெரிய பிரபஞ்சத்தில் நான் ஒருவன் தங்குவதற்கு இடமில்லையா என்ன? என்னை டெல்லியில் ஆள் நடமாட்டம் அதிகமில்லாத ஒரு பொது இடத்தில் இறக்கி விடுங்கள். நான் பிறகு பார்த்துக் கொள்கிறேன்"

அவன் வாய் வார்த்தைக்காகச் சொல்லவில்லை என்பதும் எங்கே எப்படித் தங்குவோம் என்ற கவலை சிறிதும் அவனிடம் இல்லை என்பதும் அவன் முகத்தைப் பார்க்கும் போதே அவளுக்குப் புரிந்தது. அவன் சொல்வதைப் போன்றதொரு சூழ்நிலையில் அவனைப் போல் அமைதியாக வேறு ஒருவன் இருக்க முடியும் என்று அவளுக்குத் தோன்றவில்லை. ஆனால் அவன் நிலைமையைத் தெரிந்து கொண்ட பிறகு அவனை அப்படியே விட்டுப் போவது தர்மமல்ல என்று சஹானா நினைத்தாள். அவன் அவள் மகனின் உயிரைக் காப்பாற்றியவன்.. அவனுக்கு அவள் நிறையவே கடன்பட்டிருக்கிறாள்....

"நீங்கள் சில நாட்கள் எங்கள் வீட்டில் தங்குங்களேன்"

அவன் ஒரு கணம் திகைத்தான். பின் நெகிழ்ச்சியுடன் சொன்னான், "நீங்கள் சொன்னதற்கு மிகவும் நன்றி. ஆனால் என்னை டெல்லியில் இறக்கி விடுங்கள். அதுவே பெரிய உதவி"

"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?"

"என்னைக் கொல்ல ஒரு கூட்டமே அலைகிறது போலத் தோன்றுகிறது. ஒருவேளை நான் அவர்கள் சொல்வது போல தீவிரவாதியாகக் கூட இருக்கலாம். அதனால் எனக்கு அடைக்கலம் கொடுக்கிறவர்களுக்குக் கூட ஆபத்து வரலாம். ஒரு குடும்பத்திற்கு என்னால் ஆபத்து வருவதை என்னால் சகிக்க முடியாது. உங்கள் நல்ல மனதிற்கு நன்றி...." அவன் உறுதியாகச் சொன்னான்.

அவன் மறுத்தது அவள் மனதில் இருந்த தர்மசங்கடத்தைப் போக்கியது. ஒருவேளை அவன் சம்மதித்து வந்திருந்தால் அது பல பிரச்சினைகளை உண்டாக்கி இருக்கும் என்பதில் அவளுக்கு சந்தேகமில்லை....

*********

CBI அலுவலகத்தில் டிவி உள்ள ஹாலில் முன்பே ராஜாராம் ரெட்டி, மகேந்திரன் உட்பட பலரும் மிக ஆர்வமாக டிவியைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ஒரு உயர் அதிகாரி நிருபர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார், ".... உண்மையில் ஆச்சார்யாவைக் கொலை செய்தவனை இவ்வளவு சீக்கிரம் கண்டு பிடிக்க முடியும் என்ற நம்பிக்கை ஆரம்பத்தில் எங்களுக்கு இருக்கவில்லை. கைரேகையோ, வேறு தடயங்களோ கொலையாளி விட்டுப் போகவில்லை என்பதுதான் அதற்கு முக்கிய காரணம். அவருக்குத் தனிப்பட்ட பகைவர்கள் கிடையாது என்பது இன்னொரு காரணம். அதனால் கொலையாளி அவருடைய பழைய வழக்குகள் சம்பந்தப்பட்டவராய் இருக்கலாம் என்ற கோணத்தில் பார்க்க ஆரம்பித்தோம். எத்தனையோ வழக்குகளில் எத்தனையோ குற்றவாளிகளுக்கு அவர் தண்டனை வாங்கித் தந்தவர் என்பதால் அந்தக் குற்றவாளிகள், அல்லது அவர்களுக்கு வேண்டியவர்கள் பழி வாங்கும் நோக்கில் இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் என்று சந்தேகப்பட்டோம். சென்ற வருடம் போதை மருந்து கடத்தல் வழக்கில் அவர் பிடித்துக் கொடுத்தவர்கள் நிறைய நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருந்ததால் அவர்கள் அவரைப் பழி வாங்க துடித்துக் கொண்டிருந்தார்கள் என்ற தகவலும் எங்களுக்குக் கிடைத்தது. எனவே எங்கள் விசாரணை அந்தக் கும்பலைக் குறி வைத்தது. கடைசியில் நான்கு பேர்களை சந்தேகத்தின் பேரில் கண்காணிக்க ஆரம்பித்தோம்."

"அவர்களில் ஒருவன் மீது எங்கள் சந்தேகம் வலுக்க ஆரம்பித்தது. அவன் அந்த போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவனின் தம்பி. நேற்று அவன் வீட்டை சோதனை போட்ட போது அவன் ஆச்சார்யாவைக் கொலை செய்ய உபயோகப்படுத்திய துப்பாக்கியைக் கைப்பற்றினோம். பிறகு அவனைக் கைது செய்தோம். ஆரம்பத்தில் அவன் மறுத்தாலும் கடைசியில் ஒப்புக் கொண்டான்...."

அவர் மனப்பாடம் செய்து சொன்னது போல் சொல்லி முடித்த பிறகு கொலையாளியின் புகைப்படத்தைக் காண்பித்தார்கள். அவன் சுமார் 35 வயதானவனாகத் தெரிந்தான்.....

ஆனந்த் ஜெயினைப் பார்க்க ஜெயினும் ஆனந்தைப் பார்த்தார். இருவரும் ஒன்றும் சொல்லிக் கொள்ளவில்லை. ஆனந்த் அங்கு இருந்தவர்களைப் பார்த்தான். மகேந்திரன் வைத்த கண் வாங்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்ததை ஆனந்த் அப்போதுதான் கவனித்தான். ஆனந்த் என்ன நினைக்கிறான் என்றறியும் ஆர்வத்திலேயே அவன் கவனித்ததாகத் தோன்றியது.

அங்கு இருந்தவர்கள் சிலர் கைதட்டி தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள். மகேந்திரன் அந்தக் கைதட்டலில் கலந்து கொள்ளவில்லை. கைதட்டலில் கலந்து கொள்ளாத இன்னொரு நபர் ராஜாராம் ரெட்டி. அவர் முகத்தில் களைப்பு தெரிந்தது.

கடைசியில் ஜெயினும் கைதட்ட ஆரம்பித்தார். ஆனந்தும் கைதட்ட ஆரம்பித்தான். மகேந்திரனும் அவர்களுடன் சேர்ந்து கொண்டான். ராஜாராம் ரெட்டி அப்போதும் அந்தக் கைதட்டல் மகிழ்ச்சியில் இணைந்து கொள்ளவில்லை. மகேந்திரனின் பார்வை ஆனந்த் மேலிருந்து விலகி ரெட்டி மீது பதிந்தது. அவரையே கூர்மையாக ஊடுருவிப் பார்த்த மகேந்திரன் முகத்தில் மிக மெல்லிய புன்னகை வந்து போனதாக ஆனந்திற்குத் தோன்றியது.....

(தொடரும்)

No comments:

Post a Comment