Wednesday, July 16, 2014
அமானுஷ்யன் - 15
அவனுடன் பேசிக் கொண்டே வந்த வருண் ஒரு கட்டத்தில் அப்படியே அவன் மடியில் தலை வைத்துப் படுத்து விட்டான். அதைப் பார்த்த சஹானா "சாரி. அவனை எடுத்து முன் சீட்டில் வைத்துக் கொள்கிறேன்" என்றாள்.
"பரவாயில்லை" என்று சொல்லிப் புன்னகைத்தவன் தூங்கும் வருணையே சினேகத்துடன் பார்த்து விட்டுச் சொன்னான். "உங்கள் மகன் புத்திசாலி. ஒரு நாள் பெரிய ஆளாக வருவான் பாருங்கள்".
சஹானா புன்னகைத்தாள். தன் குழந்தை புகழப்படுவதைக் கேட்பதை விடத் தாயிற்கு இனிமையானது ஏதாவது இருக்க முடியுமா? ஆரம்பத்தில் மிக வேகமாகக் காரை ஓட்டிய சஹானா பிறகு யாரும் வராததைப் பார்த்து சாதாரண வேகத்திற்கு மாறியிருந்தாள். அவள் மனமும் ஒரு தெளிவை அடைந்திருந்தது. அவன் ஜன்னல் வழியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். டெல்லி இன்னும் 37 கிமீ என்று மைல் கல் தெரிவித்தது.
"என்னை டெல்லிக்கு நுழைவதற்கு முன்னாலேயே ஆள் நடமாட்டமில்லாத ஓரிடத்தில் இறக்கி விடுங்கள்" என்றான் அவன்.
"நீங்கள் முக்காடு போட்டுக் கொண்டிருந்தது யாரும் அடையாளம் தெரிந்து கொள்ளக் கூடாது, உங்களை யாரும் முழுவதுமாகப் பார்த்து நினைவு வைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காகத்தானே"
அவள் அதை ஏன் கேட்கிறாள் என்று தெரியாத அவன் ஆமாம் என்று தலையாட்டினான்.
"ஆனால் என் மகனைக் காப்பாற்றினால் எல்லார் கவனமும் உங்கள் பக்கம் திரும்பும், பலர் உங்களைப் பார்ப்பார்கள், ஞாபகம் வைத்துக் கொள்வார்கள் என்று தெரிந்தும் நீங்கள் ஏன் அவனைக் காப்பாற்றினீர்கள்?"
"அந்த நேரம் யோசிக்கிற நேரமில்லை. ஒரு குழந்தையின் உயிருக்கு ஆபத்து என்ற நிலை வரும் போது அதைக் காப்பாற்றுவதைத் தவிர வேறொரு வழி இருக்கிற மாதிரி எனக்குத் தோன்றவில்லை"
அவள் சிறிது நேரம் ஒன்றும் பேசவில்லை. பின் கேட்டாள், "இது போன்ற உயர்ந்த மனம் உங்களுக்கு மட்டும்தான் இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு இருக்கக் கூடாது என்று நீங்கள் நினைப்பது நியாயமா?"
"எனக்குப் புரியவில்லை"
"தங்க இடமில்லாமல், நீங்கள் யாரென்று உங்களுக்கே தெரியாமல் நீங்கள் இருக்கிறீர்கள். உங்களைக் கொல்ல யாரோ முயற்சி செய்கிறார்கள். அப்படி இருக்கையில் உங்களை நான் மட்டும் அனாதரவாய் எங்கேயோ இறக்கி விட்டு எப்படிப் போக முடியும்?"
"நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?"
"எங்களுடன் எங்கள் வீட்டுக்கு நீங்களும் வந்து சில நாளாவது தங்குங்கள். ஏதாவது நல்ல மறைவிடம் கிடைத்த பின் நீங்கள் போங்கள்....."
"மேடம், நீங்கள் உங்கள் கணவரைக் கேட்காமலேயே வேகமாய் முடிவு செய்கிறீர்கள்"
"வருணின் அப்பா போன வருடம் ஒரு விபத்தில் இறந்து விட்டார்"
"ஓ சாரி" என்று உண்மையாகவே வருத்தப்பட்டவன் பின் அமைதியாகச் சொன்னான், "மேடம், உங்கள் நல்ல மனதுக்கு நன்றி. ஆனால் ஆண் துணையில்லாத வீட்டில் நான் வந்து சில நாட்கள் இருப்பது சரியல்ல. நீங்களே யோசித்துப் பாருங்கள்"
"நான் யோசிப்பதெல்லாம் நீங்கள் என் மகனைக் காப்பாற்றிய போது எதையும் யோசிக்கவில்லை என்பதுதான்..."
பக்கத்தில் இருந்த வயதான பெண்மணி சஹானாவின் தாயாரா, மாமியாரா என்று அவனால் தீர்மானிக்க முடியவில்லலை. வருண் அவளைப் பாட்டி என்று உரிமையுடன் சிறிது நேரத்திற்கு முன் கூப்பிட்டது மட்டும் தெரியும். அவளாவது சஹானாவின் யோசனையை ஆட்சேபிப்பாள் என்று ஆவலுடன் அவளைப் பார்த்தான். அவள் சம்பந்தமே இல்லாதது போல உணர்ச்சியில்லாமல் இருந்தாளே ஒழிய ஒன்றும் சொல்லவில்லை.
"மேடம், அவர்கள் சொன்னது போல நான் நிஜமாகவே தீவிரவாதியாகக் கூட இருக்கலாம்...."
"தீவிரவாதியாக இருப்பவன் அடுத்தவர் உயிர்களைப் பற்றிக் கவலைப்படாதவன். தன் உயிரைப் பணயம் வைத்து அடுத்தவர் உயிரைக் காப்பாற்ற மாட்டான்"
இவளிடம் பேசி ஜெயிப்பது கஷ்டம் என்று தோன்ற பெருமூச்சு விட்டான்.
அவள் சொன்னாள், "அந்த புத்த விஹாரத்தில் நீங்கள் உயிருக்குப் போராடிக் கொண்டு இருக்கையில் அந்த புத்த பிக்குகள் உங்களைக் காப்பாற்றுவதைத் தவிர வேறெதையும் நினைத்துப் பார்க்கவில்லை. என் மகன் உயிருக்கு ஆபத்து என்று வந்த போது நீங்களும் லாப நஷ்டங்களைக் கணக்குப் போடவில்லை. உலகம் இப்போதும் இயங்கிக் கொண்டிருப்பது இது போன்ற நல்லெண்ணங்களினால்தான் என்று நான் திடமாக நம்புகிறேன்..."
"மேடம், நான் முன்பே சொன்னது போல் என்னை ஆபத்து சூழ்ந்து இருக்கிறது. அது எனக்கு அடைக்கலம் கொடுப்பவர்களுக்குக் கூட வந்து விடக்கூடாது என்று நான் நினைக்கிறேன்...."
"என்னைப் பார்த்தால் உங்கள் டீச்சராகவோ, உங்கள் முதலாளியாகவோ தெரிகிறதா?"
அவன் குழப்பத்துடன் சொன்னான். "இல்லை"
"அப்படியென்றால் என்னை மேடம் என்று கூப்பிடாதீர்கள். என் பெயர் சஹானா"
அவன் வாய் விட்டுச் சிரித்தான்.
******
விதி அந்த அமானுஷ்யனுக்கு சாதகமாக இருப்பதாகவே சிபிஐ மனிதனுக்குப் பட்டது. இல்லாவிட்டால் அவனைப் பார்த்த தகவல் தர கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஆகியிருக்குமா? அவன் உயிருடன் இருப்பான் என்று முழு நம்பிக்கை இப்போதும் அவனிடம் இல்லையென்றாலும் அந்த சிறுவனைக் காப்பாற்றிய ஒருவன் அவனைப் போன்ற ஒரு பராக்கிரமசாலியே என்பதில் அவனுக்கு சந்தேகமில்லை. ஒருவேளை அவன் அமானுஷ்யனே ஆனால் அந்த செய்தி மோசமானதுதான்.
அவனுடைய இடத்தில் தன்னை இருத்தி நிறைய யோசித்த சிபிஐ மனிதன் தனக்கு மிகவும் பழக்கமுள்ள வெடிகுண்டுகளைக் கண்டுபிடித்து அப்புறப்படுத்தும் ஒரு உயர் அதிகாரிக்குப் ஃபோன் செய்து சிறிது நேரம் குசலம் விசாரித்து விட்டு "இப்போது வெடிகுண்டுகளின் பின்னால் ஓடும் வேலையெல்லாம் குறைந்திருக்கிறதா? இல்லை இப்போதும் வேலைகள் நிறைய வருகின்றனவா?"
"பெரிதாக ஒன்றும் இல்லை. பின் இந்தத் துறையில் ஃபோன் கால்கள் வருவது சகஜம்தான். சிறிது நேரத்திற்கு முன்னால் கூட டெல்லியின் முக்கியமான இடங்களை வெடிகுண்டு வைத்து அழிக்கத் திட்டமிட்டு இருக்கிறார்கள் என்று மொட்டையாக ஃபோனில் யாரோ தெரிவித்தார்கள். தேதியோ மற்ற தகவல்களோ இல்லாமல் வரும் ஃபோன்கால்களை வைத்துக் கொண்டு என்ன செய்வது? இப்போதெல்லாம் சிலர் போரடிக்கும் போது கூட இப்படி ஃபோன் செய்து எங்களைக் கோமாளிகளைப் போல் ஓட விடுகிறார்கள்...."
ஃபோனை வைத்தவன் மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தான். "அந்தப் ஃபோன் அவன் செய்ததல்ல. அவனாக இருந்தால் இப்படிப் பொத்தாம் பொதுவாக சொல்லியிருக்க மாட்டான்...."
அந்தக் கார்க்காரியைக் கண்டுபிடிப்பதும் சுலபமாக இருக்கவில்லை. மலை மேல் ஏறும் போது பாதை ஒன்றுதான் ஆனாலும் மலை இறங்கி விட்டால் பல பாதைகள் இருக்கின்றன. அவள் கார் எந்தப் பக்கம் போனதோ அவனை அவள் எங்கு இறக்கி விட்டாளோ தெரியவில்லை. மலையின் மீது சுங்கச் சாவடி ஒன்று இருந்தது. அங்கும் விசாரித்துப் பார்த்தாகி விட்டது. டிக்கெட் கிழித்துக் கொடுத்து காசு வாங்குவதோடு சரி வாகனங்களின் எண்ணை எல்லாம் எழுதி வைக்கும் வழக்கம் இல்லையாம். இரண்டு மூன்று குழுக்களை அந்த மலைப்பாதைக்கு அனுப்பிப் பார்த்தாகி விட்டது. அவர்களுக்கும் அந்தக் கார் கிடைக்கவில்லை. நிறைய கால தாமதமாகப் போனதன் விளைவு. ஒரே ஒரு குழு மட்டும் சொன்னது, "அந்த மாதிரியான காரை ஒருத்தி மிக வேகமாக ஓட்டிச் சென்றதை சிலர் பார்த்திருக்கிறார்கள். ஏதோ ரேஸில் போவது போலப் போனாளாம்...ஆனால் அவள் அருகில் யாரும் இருக்கவில்லையாம். பின் சீட்டில் இருந்தால் தெரிந்திருக்க வாய்ப்பில்லை....."
ஆனால் அவள் டெல்லிக்காரியாகத்தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது. அவளது உடை, வேகமாகக் காரை ஓட்டிய முறை எல்லாம் பெருநகரத்துப் பெண்மணியாகவே அவளைக் காட்டியது. ஆனால் அவளைக் கண்டு பிடித்தாலும் எங்கே இறக்கி விட்டாய் என்று கேட்கலாமே ஒழிய அவன் வேறு தகவல்களைத் தந்திருக்க வாய்ப்பில்லை. அவன் டெல்லிக்கே அவளுடன் வந்து விட்டால் அது நல்ல அறிகுறியல்ல.... அவன் என்ன செய்வான் என்று ஊகிக்க முடியவில்லை.... அவனுடைய மும்பை பங்களாவின் முன் கண்காணித்துக் கொண்டிருந்த ஆட்கள் "வயதான வேலைக்காரன்தான் கடைக்குப் போய் வருகிறான். வேறு யாரும் அந்த வீட்டுக்கு வரவில்லை" என்றார்கள்.
சிபிஐ மனிதன் ஒரு எண்ணிற்கு ஃபோன் செய்து கேட்டான். "அந்த வீட்டுக்கு ஃபோன் ஏதாவது இந்த இரண்டு மூன்று நாட்களில் வந்ததா?"
"இரண்டு ஃபோன் கால்கள் வந்திருந்தன. ஒன்று உள்ளூர் கால். அந்த எண்ணை விசாரித்து விட்டோம். அது அந்த வேலைக்காரனின் மகள் செய்தது...."
"இன்னொன்று?"
"சீனாவிலிருந்து ஃபோன் வந்திருக்கிறது. அந்த எண்ணையும் விசாரித்து விட்டோம். அது அங்கே உள்ள ஒரு புத்த மடாலயத்திலிருந்து... அந்தக் கால் ஒரு நிமிடம்தான் பேசப்பட்டிருக்கிறது"
அவனைக் கேட்டு ஃபோன் வந்திருக்கலாம். அந்த வேலைக்காரன் சொன்ன பதிலோடு அந்த பேச்சு முடிந்திருக்கிறது. தன் முன் உள்ள தகவல்களை ஆராய்ந்த சிபிஐ மனிதன் பெருமூச்சு விட்டான். அந்த வீட்டையும் ஃபோனையும் கண்காணிப்பதிலும் பெரிய பயன் இல்லை என்று தோன்றியது. கடந்த ஒரு வருட காலத்தில் அவன் அந்த வீட்டில் ஓரிரண்டு நாட்கள் மட்டுமே தங்கியிருக்கிறான். தலைமறைவாக இருப்பது அவனுக்கு ஒன்றும் புதிதல்ல.....
(தொடரும்)
Labels:
அமானுஷ்யன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment