Wednesday, July 2, 2014

அமானுஷ்யன் - 7ஆனந்த் ஆச்சார்யாவின் கொலை வழக்கு சம்பந்தமாக சேகரித்திருந்த எல்லா பத்திரிகைக் குறிப்புகளையும் படித்து முடித்தான். படித்த எதிலும் பெரிய உபயோகமான தகவல்கள் இருக்கவில்லை. அவன் கடிகாரத்தைப் பார்த்தான். மணி ஒன்பதரை. அம்மாவுக்கு ஃபோன் செய்ய வேண்டிய நேரம்.... செல்லை அழுத்தினான்.

"ஹலோ" சாரதாவின் குரல் களைப்புடன் இருந்தது.

"நான் ஆனந்த் பேசறேன்ம்மா. ஏன் உன் குரல் களைப்பாய் கேட்கிறது?"

"அப்படியொண்ணும் இல்லைப்பா. உனக்கு ஓட்டல் ரூம் எல்லாம் சௌகரியமாய் இருக்கா?"

"இது ஸ்டார் ஓட்டல்ம்மா. நல்லாவே சௌகரியமாய் இருக்கும்மா"

"சாப்பிட்டாயா?"

"எட்டு மணிக்கே சாப்பிட்டாச்சு. நீ?"

சாரதா சில வினாடிகள் எடுத்துக் கொண்டு தாமதமாகப் பதிலளித்தாள். "ஆச்சு"

அம்மா பொய் சொல்கிறாள் என்பது ஆனந்திற்கு புரிந்தது. மனதில் ஏற ஆரம்பித்த சுமையை ஒரு கணம் பொருட்படுத்தாமல் கேட்டான். "நீ என்ன செய்துகிட்டிருந்தாய்?"

"லலிதா சஹஸ்ரநாமம் சொல்லிகிட்டு இருந்தேன். பாதியில் நிறுத்தியிருக்கேன். நான் வைக்கட்டா. நாளைக்கும் மறக்காம போன் பண்ணு...."

அவன் சரி என்று சொல்வதற்கு முன் ஃபோன் வைக்கப்பட்டது. இது ஒன்றும் புதிதில்லை என்ற போதும் இன்னமும் ஏனோ புதிதாக வலிக்கிறது. இது நாள் வரை அம்மாவிடம் அவன் ஐந்து நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து பேசியதாக அவனுக்கு நினைவில்லை. அவன் சௌக்கியமாய் இருக்கிறான் என்ற ஒரு செய்திக்கு மேல் அவளுக்கு வேறு எதையும் தெரிந்து கொள்ள ஆர்வமிருப்பதில்லை. அந்த ஒரு செய்தி தெரிந்து கொள்ள அதிக நேரம் ஆவதில்லை....

இன்று அவனும் இல்லை என்பதால் அம்மா சமைத்தே இருக்க மாட்டாள் என்று நினைத்தான். எதாவது ஒரு கடவுளை வேண்டி உபவாசம் இருந்திருப்பாள். வெறும் பாலோ, பழமோ தான் இன்றைய ஆகாரமாய் இருந்திருக்கும். இந்த லலிதா சஹஸ்ரநாமம் முடிந்த பின் இன்னும் எத்தனையோ ஸ்தோத்திரங்கள் படித்து அவள் என்னேரம் உறங்குவாளோ அந்தக் கடவுளுக்குத்தான் வெளிச்சம். சுமார் இருபத்தி நான்கு வருடங்களாகக் கும்பிட்டும், உபவாசங்கள் இருந்தும் அந்தக் கடவுள்கள் அவளிடம் கருணை காட்டியதாகத் தெரியவில்லை.

சாரதாவை இந்த நிலைக்குக் கொண்டு வந்த சம்பவம் ஒரு பிள்ளையார் சதுர்த்தி சமயத்தில் நடந்தது. வித விதமான பிள்ளையார்கள் ஊர்வலமாகப் போக வெளியே நின்று தன் இரண்டு பிள்ளைகளுடன் வேடிக்கை
பார்த்துக் கொண்டிருந்த அவள் ஊர்வலம் முடிந்து பார்க்கையில் அவளுடைய இளைய மகன் மூன்று வயது அக்ஷய் காணாமல் போயிருந்தான். ஆரம்பத்தில் அவன் ஊர்வலத்தோடு போயிருக்கலாம் என்று எல்லோரும் நினைத்தார்கள். எல்லா போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. நண்பர்களும், உறவினர்களும் எல்லா இடங்களிலும் தேடினார்கள். அவன் கிடைக்கவில்லை. காணாமல் போன அக்ஷயின் புகைப்படத்தைப் பிரசுரித்து அவன் முதுகின் மேற்பகுதியில் நாகம் படமெடுப்பது போல் இருக்கும் மச்சத்தைப் பற்றியும் குறிப்பிட்டு விளம்பரப்படுத்திப் பார்த்தார்கள். ஆனால் பயனில்லை. அவன் மாயமாய் மறைந்திருந்தான். கணவனை முன்பே இழந்திருந்த சாரதாவை இளைய மகனின் இழப்பு நடைப்பிணமாகவே ஆக்கி விட்டது. அப்போது ஆனந்திற்கு ஐந்து வயது.

அன்றிலிருந்து சாரதாவின் கவனத்தை அவளுடைய காணாமல் போன இளைய மகனே ஆக்கிரமிக்க ஆரம்பித்தான். சாப்பிட அமர்கையில் காணாமல் போன மகனுக்கு சாப்பிட உணவு கிடைக்கிறதோ இல்லையோ என்ற கவலை அவளுக்கு வர ஆரம்பித்தது. நல்ல உடை ஏதாவது உடுக்கையில் மகனுக்கு நல்ல உடை கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற கவலை தோன்ற ஆரம்பித்தது. யாராவது அவனை எடுத்துக் கொண்டு போய் பிச்சை எடுக்கக் கூடப் பயன்படுத்தலாம் என்று ஒரு நபர் சொல்லப் போய் அவள் பயம் பலமடங்காய் அதிகரித்தது. மழலை மாறாத தன் மகனைக் காப்பாற்ற அவளுக்கு கடவுளைத் தவிர வேறு வழி தெரியவில்லை. அப்போது ஆரம்பித்த வழிபாடுகள் இன்று வரை குறையவில்லை.

ஒரு அரசாங்க உத்தியோகத்தில் இருந்த அவள் நடைப்பிணமாக வேலைக்கு சென்று வந்தாள். ஆனந்தை மிகவும் கவனமாகப் பார்த்துக் கொண்டாள். அவன் பத்திரமாக வீடு வந்து சேரும் வரை நிம்மதியிழந்து தவிப்பாள். அவன் வந்து சேர்ந்த பின் அவனுக்கு சாப்பிடக் கொடுத்த பின் அவள் மனதில் மறுபடி இளைய மகனின் நினைவுகளே வந்து அலைக்கழிக்கும்.

ஆனந்த் தாயின் கவனத்தைத் தன் பக்கம் திருப்ப பல காலம் முயன்றிருக்கிறான். முதல் ரேங்க் வாங்கிக் கொண்டு வந்து தாயிடம் காண்பிக்கையில் அவளைக் கூர்ந்து கவனிப்பான். அவள் முகத்தில் மகிழ்ச்சி ஒரு கணம் வந்து போகும். அடுத்த கணம் தன் இளைய மகன் படிக்காமல் எங்கே என்ன செய்து கொண்டிருக்கிறானோ என்ற கவலையில் அவள் மூழ்குவது தெரியும். பத்தாம் வகுப்பில் அவன் தங்க மெடல் வாங்கி பத்திரிகைகளிலெல்லாம் பெயர் வந்தது. அதை வாங்கிப் பார்த்தும் அவள் அழத்தான் செய்தாள். 'அந்தக் குழந்தை என்ன செய்கிறதோ!'. பள்ளியில் ஒரு நாள் அவளையும் அழைத்து பாராட்டு விழா நடத்தினார்கள். அன்று எடுத்த புகைப்படம் இன்றும் அவனிடம் இருக்கிறது. அவன் தாயின் பார்வையில் மகிழ்ச்சிக்குப் பதிலாக வேதனைதான் தெரிந்தது.

இல்லாத தன் தம்பியிடம் தாயைப் பறிகொடுத்து விட்டோம் என்பதை பின்னாட்களில் ஆனந்த் முழுவதுமாக உணர்ந்தான். அவன் தாயின் கவனத்தைக் கவர முயல்வதைப் பின் விட்டு விட்டான். தன்னால் முடிந்த வரை தாயிற்குக் கவலை ஏற்படுத்தாமல் பார்த்துக் கொண்டான். வீட்டுக்கு வர வேண்டிய நேரத்தில் அவன் வரா விட்டால் சாரதா பைத்தியம் பிடித்தது போல் ஆகி விடுவாள். ஆகவே ஐந்து நிமிடம் தாமதமாவது போல் இருந்தாலும் அவளுக்கு ஃபோன் செய்து சொல்லி விடுவான். அவன் பத்திரமாக இருக்கிறான் என்று உறுதியாகத் தெரிந்த பிறகு அவள் அவனைப் பற்றி நினைப்பது போல் தெரியவில்லை.

மூன்று வருடங்களுக்கு முன் ஞான திருஷ்டியில் பார்த்து எதையும் சொல்லக் கூடிய ஒரு சாதுவைப் பற்றி சாரதா தன் அலுவலக தோழி ஒருத்தி மூலம் கேள்விப்பட்டு ஆனந்திடம் சொன்னாள், "நீ போய் அவரைப் பார்த்து அக்ஷயைப் பத்திக் கேளேன்"

CBI ல் சேர்ந்த பின் பல போலி சாமியார்களைப் பற்றி நிறையவே அறிந்திருந்த ஆனந்திற்கு அந்த சாதுவை சந்திப்பதில் உடன்பாடு இருக்கவில்லை. ஆனால் அந்த நபர் மீது எந்தப் புகாரும் இல்லை, ஏதோ சக்தி வாயந்த மனிதராகத்தான் தென்படுகிறார் என்றும் டிபார்ட்மென்டிலேயே சிலர் சொன்னார்கள். மேலும் சாரதா தனக்கென எதையும் அவனிடம் இது வரை கேட்டதில்லை. அதனால் சென்று அந்த சாதுவைச் சந்தித்தான். பார்க்க அந்த மனிதர் மிகச் சாதாரணமாகத்தான் தெரிந்தார்.

அவன் தன் தம்பியைப் பற்றி சொன்னவுடன் அவர் கண்களை மூடிக் கொண்டு சிறிது நேரம் அமர்ந்திருந்தார். பின் சொன்னார். "அவன் உடம்பில் பின் புறம் ஏதோ நாகம் மாதிரி மச்சம் தெரிகிறது...."

ஒரு கணம் அவனுக்கு மெய் சிலிர்த்தது. பின் அவன் தொழிலுக்கே உரிய சந்தேகம் வந்தது. 'அம்மா தன் மகனின் அங்க அடையாளத்தைச் சொல்லும் போது பிரத்தியேகமான அந்த நாக மச்சத்தைப் பற்றி எல்லோரிடமும் சொல்வது வழக்கம். இதைப் பற்றி அவள் அலுவலக தோழியிடம் கூட சொல்லி இருக்கலாம். அவள் மூலம் இவருக்கு தெரிந்திருக்கலாம்'.

அவர் கண்களை மூடியபடியே தொடர்ந்தார். "அவன் இந்த தேசத்தில் இல்லை. வேறேதோ தேசத்தில் இருக்கிறான். நிறைய புத்த துறவிகள் தெரிகிறார்கள்... அவன் ஏதோ அங்கு கற்றுக் கொண்டிருக்கிறான்...." பின் நிறைய நேரம் அவர் ஒன்றும் சொல்லவில்லை. அவர் தூங்கி விட்டாரோ என்று ஆனந்த் நினைக்கையில் கண்களைத் திறந்தார்.

"ஆனால் அவனை நிறைய அபாயம் சூழ்ந்திருக்கிறது. எதிர்காலத்தில் அவன் நிறைய அபாயங்களை சந்திக்க வேண்டியிருக்கும்...."

ஆனந்திற்கு அவர் சொல்வதை நம்புவதா வேண்டாமா என்று தெரியவில்லை. "என்ன ஆகும்?"

அவர் மேலே கைகாட்டினார். "அவன் தீர்மானிக்கிறபடி ஆகும். அவன் தீர்மானம் விளங்கவில்லை. ஆனால் ஒன்று....."

ஆனந்த் அவரைப் பார்த்தான். அவர் சொன்னார். "உன் தம்பி சாதாரணமானவனில்லை"

வீட்டுக்கு வந்து ஆனந்த் அவர் கண்களை மூடிக்கொண்டு சொன்னதை மட்டும் சொன்னான். அவனுடைய நாக மச்சத்தைப் பற்றி அவர் சொன்னார் என்றதுமே சாரதா அவரை பரிபூரணமாக நம்பி விட்டாள்.

புத்த துறவிகளிடம் ஏதோ கற்றுக் கொண்டிருக்கிறான் என்று முடித்த ஆனந்த் "அவர் ஞான திருஷ்டிக்கு வேறெதுவும் தெரியவில்லை" என்றான்.

மறுநாள் சாரதாவின் பூஜையறைக்கு ஒரு புத்தர் சிலையும் வந்து சேர்ந்தது. புத்த பூர்ணிமா அன்று அவள் ஒரு பிரத்தியேக விரதமும் இருக்க ஆரம்பித்தாள்...

**********

சூரியோதயத்திற்கு முன்பு பத்து நபர்கள் நவீன துப்பாக்கியுடன் அந்த புத்த விஹாரத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அந்த விஹாரத்தின் கதவைப் பலமாகத் தட்டி புத்த பிக்குகளை எழுப்பினார்கள். கதவைத் திறந்த இளைய பிக்கு திடகாத்திரமான அந்த நபர்களைப் பார்த்து திகைத்துப் போனார். மூன்று பேர் கைகளில் பெரிய டார்ச் லைட்டுகளும் இருந்தன. அவர்களில் ஒருவன் முன்பே 'அவனை'த் தேடி வந்தவன். மற்றவர்கள் அவர் இது வரை பார்த்திராதவர்கள். அவர் பின்னால் வந்து நின்ற மற்ற பிக்குகளும் துப்பாக்கிகளுடன் நின்ற அந்த தடியர்களைப் பார்த்து பேச்சிழந்து நிற்க பேச முடிந்தவர் மூத்த பிக்குவே.

"என்ன வேண்டும்?"

"நாங்கள் அந்தத் தீவிரவாதியைத் தேடி வந்திருக்கிறோம்" முன்பு வந்தவனே இப்போதும் பேசினான்.

"அதுதான் அன்றே வந்து பார்த்து விட்டுப் போனீர்களே"

"நாங்கள் பார்த்தது சரியில்லை என்று மேலிடத்தில் சொல்கிறார்கள். அதுதான் மீண்டும் சரியாகத் தேட வந்தோம்"

"இது ஒரு புத்த விஹாரம். இங்கு இது போல் துப்பாக்கிகளுடன் நுழைவது சரியல்ல"

"என்ன செய்வது? அரசாங்க உத்தரவு" சொல்லி விட்டு அவன் தலையசைக்க அந்தக் கும்பல் அவரைப் பொருட்படுத்தாமல் உள்ளே நுழைந்தது. வேறு வழியில்லாமல் புத்த பிக்குகள் விலகி வழி விட்டார்கள். முதலில் அவர்கள் ஒவ்வொருவர் மீதும் டார்ச் லைட் அடித்து அவர்களை நன்றாக ஆராய்ந்து அவர்களில் 'அவன்' இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு மிகக் கவனமாக புத்த விஹாரத்தில் தேடினார்கள். புத்த விஹாரத்தை தங்கள் டார்ச் லைட்களால் ஒளிமயமாக்கிப் பார்த்தார்கள். சுமார் ஒரு மணி நேரம் தொடர்ந்த சோதனையில் அவன் கிடைக்கவில்லை.

வேறு வழியில்லாமல் அவர்கள் திரும்பிச் செல்ல யத்தனித்த போது இளைய பிக்கு அவர்களை நிறுத்தினார்.

"நீங்கள் சொல்வது போல் அவன் உண்மையிலேயே தீவிரவாதிதானா?"

"ஆமாம்"

"அப்படியானால் நீங்கள் பாதாள அறையையும் பார்த்து விட்டால் எங்களுக்கு நிம்மதியாக இருக்கும்" என்ற இளைய பிக்கு ஒரு மூலையில் இருந்த ஒரு சிறிய புத்தர் சிலையை நகர்த்திக் காட்டினார். அங்கு சென்று அவர்கள் டார்ச் லைட் அடித்துப் பார்க்க கீழே மரப்படிகள் தெரிந்தன.

மூத்த பிக்கு இளைய பிக்குவை முறைக்க, மற்ற பிக்குகள் இளைய பிக்குவை திகைப்புடன் பார்க்க, அவரோ யாரையும் பார்க்காமல் தலை குனிந்து நின்றார்.

(தொடரும்)

No comments:

Post a Comment