Thursday, May 29, 2014

பரம(ன்) ரகசியம் - 38

ஈஸ்வர் சிறிது நேரம் தெருவில் நின்று பார்த்தான். மறுபடியும் அந்த சித்தர் பார்க்கக் கிடைத்தாலும் கிடைக்கலாம் என்று சின்னதாய் ஒரு எதிர்பார்ப்பு அவனுக்கு இருந்தது. ஏதாவது தகவல் தெரிவிப்பதாக இருந்தால் நேரடியாக அவர் தெரிவித்து விட்டுப் போய் இருக்கலாமே என்று தோன்றியது. இந்தக் கண்ணாமூச்சு விளையாட்டுக்கு அது தேவலை அல்லவா? சின்னக் குழந்தைகள் விளையாட்டுப் போல தொட்டு விளையாட்டு எதற்கு? இதில் தேவை இல்லாமல் அந்தக் கணபதியையும் சித்தர் சேர்த்துக் கொணடதை ஈஸ்வர் ரசிக்கவில்லை. பாவம் கணபதி...

திடீர் என்று அவன் போகையில் ’அண்ணி கிட்டயும் சொல்லிடுங்க’ என்று சொன்னது இப்போது தான் ஈஸ்வர் மூளையில் உறைத்தது... ஏன் அப்படிச் சொன்னான்? எது அவனை அப்படிச் சொல்ல வைத்தது?  ஆனாலும் ஏனோ ஈஸ்வருக்கு கணபதி அப்படிச் சொன்னது பிடித்திருந்தது. குறும்பாகப் புன்னகைத்துக் கொண்டே அன்பாலயத்தினுள்ளே நுழைந்தான்.

அவன் தனியாக வருவதைப் பார்த்தவுடன் விஷாலி கேட்டாள். “கணபதி எங்கே போயிட்டார்”

“அவனோட கார் டிரைவர் அவசரப்படுத்தி அவனைக் கூட்டிகிட்டுப் போயிட்டான். என் கிட்டயே சரியா பேச விடலை... கணபதி போறப்ப உன் கிட்ட சொல்லச் சொன்னான்....” சொல்லும் போது அவன் ஒருமாதிரியாகப் புன்னகைக்க விஷாலி கேட்டாள். “என்ன ஒரு மாதிரியா சிரிக்கிறீங்க? என்ன விஷயம்?”

”ஒன்னுமில்லை”

அன்பாலயத்தில் இருந்து திரும்பி வருகையில் கணபதியைப் பற்றிய பேச்சு வந்தது. தனக்குப் பதிலாக பிள்ளையாருக்கு பட்டு வேட்டி வாங்க கணபதி ஆசைப்பட்டதை ஈஸ்வர் சொன்ன போது விஷாலி மனம் நெகிழ்ந்து சொன்னாள். “அந்தப் பிள்ளையார் ரொம்பக் கொடுத்து வச்சவரு. அவர் கிட்ட தங்களுக்கு அது வேணும் இது வேணும்னு வரம் கேட்க வர்ற ஆள்கள் தான் அதிகமா இருக்கும். கணபதி மாதிரி அவருக்கு ஏதாவது தர ஆசைப்படற வேற ஆள்கள் இருப்பாங்கன்னு தோணலை....”

ஈஸ்வருக்கும் அப்படியே தோன்றியது. அடுத்ததாக அன்பாலயத்தின் அனாதைக் குழந்தைகள் பற்றி பேச்சு வந்து அதுவும் முடிந்து போக அவர்கள் இருவரும் மௌனமானார்கள். நிறைய பேச இருந்தும் அவர்களால் ஒன்றும் பேச முடியவில்லை. ஈஸ்வர் எஃப் எம் ரேடியோவை ஆன் செய்ய சைந்தவியும், ஜி.வி.பிரகாஷும் பாடிய பாடல் ஒலிபரப்பாக ஆரம்பித்தது.

யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன்
அன்பானவன்

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை என்றாலும் ஒருவரை ஒருவர் அந்தப் பாடலின் போது மிக ஆழமாக உணர்ந்தார்கள். அவர்களே பாடுவது போல் தோன்ற ஆரம்பித்தது.

உன் காதலில் கரைகின்றவன்
உன் பார்வையில் உறைகின்றவன்
உன் பாதையில் நிழலாகவே வருகின்றவன்

எங்கே உன்னை கூட்டிச்செல்ல
சொல்வாய் எந்தன் காதில் மெல்ல
என் பெண்மையும் இளைப்பாறவே
உன் மார்பிலே இடம் போதுமே
ஏன் இன்று இடைவெளி குறைகிறதே
மெதுவாக இதயங்கள் இணைகிறதே
உன் கைவிரல் என் கைவிரல் கேட்கின்றதே

திடீர் என்று அவன் அவளைத் திரும்பிப் பார்த்தான். அவளும் அவனைப் பார்த்தாள். வார்த்தைகள் சொல்ல முடியாத பலவற்றை அவர்கள் பார்வைகள் பரிமாறிக் கொண்டன. அவன் கைவிரல்கள் மென்மையாக அவள் கைவிரல்களைத் தொட்டன. தொட்டபடியே இருந்தன. கண்கள் பேசியதைப் போல கைவிரல்களும் பேசிக் கொண்டன.

நதியினில் ஒரு இலை விழுகிறதே
அலைகளில் மிதந்தது தவழ்கிறதே
கரைசேருமா உன் கைசேருமா
எதிர்காலமே !

சில தருணங்கள் சாசுவதமானவை. கல்லில் செதுக்கியதைப் போல மனதில் பசுமையாக என்றென்றுக்குமாய் தங்கி விடுபவை. முடிந்து போன பின்னும் நினைவுகளில் திரும்பத் திரும்ப வாழ்ந்து புதுப்பிக்கப் படுபவை. அவர்களைப் பொருத்த வரை அந்தத் தருணம் அப்படியாக மாறி இனிமையாகத் தங்கி விட்டது.

பாட்டு முடிந்த பின் விளம்பரம் வர அது அந்தத் தருணத்தின் இனிமையைக் குறைப்பதாகத் தோன்றவே ஈஸ்வர் ரேடியோவை ஆஃப் செய்து விட்டான். அந்த மௌனமும் இனிமையாக இருந்தது.

விரைவில் விஷாலியின் வீடு வந்து விட்டது. கார் நிற்கும் சத்தம் கேட்டு தென்னரசு வெளியே வந்தார்.

“உள்ளே வா ஈஸ்வர்”

“இல்லை அங்கிள் நேரமாயிடுச்சு. கிளம்பறேன். தேங்க்ஸ் விஷாலி...”

அவன் போய் விட்டான். விஷாலி அவன் கார் கண்ணில் இருந்து மறையும் வரை பார்த்திருந்து விட்டு உள்ளே வர தென்னரசு மகளை ஆச்சரியத்துடன் பார்த்தாள். அந்தப் பாடல் மனதில் ஒலித்துக் கொண்டு இருக்க அவன் பார்வையும் பசுமையாய் நினைவில் இருக்க வேறொரு உலகில்  அவள் இருந்ததால் அவள் தந்தையின் முகபாவத்தை கவனிக்கவில்லை....

ஈஸ்வர் ஃபோட்டோ ஸ்டுடியோவிற்குப் போன போது அவன் பெற்றோரின் புகைப்படம் பெரியதாக லேமினேட் செய்யப்பட்டு தயாராக இருந்தது. அவர்களை நேரில் பார்ப்பது போல் அவனுக்குத் தோன்றியது. அது அவன் பெற்றோர் கடைசியாக எடுத்துக் கொண்ட புகைப்படம். அதை எடுத்த ஒரு வாரத்தில் அவன் அப்பா இறந்து போனார்...

வீட்டுக்குப் போன போது வாசலிலேயே பெரும் தவிப்புடன் அவனுக்காக மகேஷ் காத்திருந்தான். ஈஸ்வரை அவன் கூர்ந்து பார்த்தான். ஈஸ்வர் ஏதோ பாடலை முணுமுணுத்தபடி காரை விட்டு இறங்கினான். “உன் காதலில் கரைகின்றவன், உன் பார்வையில் உறைகின்றவன், உன் பாதையில் நிழலாகவே வருகின்றவன் ”

மகேஷ் காதில் அந்தப் பாடல் நாராசமாக ஒலித்தது. நேற்றெல்லாம் ஏதோ ஆங்கிலப் பாடல் பாடிக் கொண்டிருந்தவன் இன்று தமிழுக்கு மாறி விட்டதற்கும் விஷாலிக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ என்று சந்தேகப் பட்டான்.

ஈஸ்வர் கையில் இருந்த லேமினேட் செய்யப்பட்ட புகைப்படத்தைப் பார்த்து மகேஷ் நினைத்துக் கொண்டான். ‘முதல்லயே இவங்கப்பா ரூம் ஒரு ம்யூசியம் மாதிரி இருக்கு. அதுல இதையும் சேர்த்து வைக்கணுமாக்கும்’

”என்ன மகேஷ் எனக்காக காத்துகிட்டிருக்கற மாதிரி இருக்கு” ஈஸ்வர் கேட்ட்து ஏதோ பொடி வைத்துக் கேட்டது போல இருந்தது.

மறுக்க முடியாமல் மகேஷ் சமாளித்தான். “ஆமா... என்னோட கார் கொஞ்சம் மக்கர் பண்ணுது. அதான் அம்மா காரை எடுத்துட்டுப் போலாம்னு நினைச்சுட்டு காருக்காக காத்துகிட்டிருந்தேன்....”

கார் சாவியை ஈஸ்வர் மகேஷ் கையில் தந்தான். தந்தவன் ‘இனி போவதானால் போகலாம்’ என்கிற விதமாய் பார்க்கவே மகேஷ் அசடு வழிந்தபடி சொன்னான். ”பரவாயில்லை, நாளைக்குப் போய்க்கறேன்”

மீனாட்சி அண்ணன், அண்ணி புகைப்படத்தைப் பார்த்து பரவசம் அடைந்தாள். “இது எப்ப எடுத்தது ஈஸ்வர்?”

இது தான் அவருடைய கடைசி ஃபோட்டோ என்று அவன் தெரிவித்த போது அவள் அதை அண்ணன் நினைவில் கண்கலங்க பார்த்தாள். இன்று அப்பாவின் நினைவு நாள் என்று சொல்ல வாயெடுத்த ஈஸ்வர் அவளை மேலும் கண்கலங்க வைக்க மனமில்லாமல் வாயை மூடிக் கொண்டான். 

ஆனந்தவல்லி “யார் ஃபோட்டோ அது?” என்று கேட்டுக் கொண்டே வந்தாள்.

“எங்கப்பா அம்மாவோட ஃபோட்டோ. நீங்க தானே இந்த ஹால்ல அவங்க ஃபோட்டோவை மாட்டிக்கலாம்னு சொன்னீங்க”

”தாராளமா மாட்டிக்கோ” என்று ஆனந்தவல்லி சொல்ல ஈஸ்வர் “வீட்டு உரிமையாளர் கிட்ட அனுமதி வாங்கியாச்சு” என்று சொன்னபடியே ஐந்து நிமிடங்களில் சுவரில் ஆணியடித்து மாட்டி விட்டான்.

அண்ணாவின் புகைப்படம் ஹாலில் மாட்டியது மீனாட்சிக்கு ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும் இன்னொரு புறம் அப்பாவை நினைக்கையில் பயமாக இருந்தது. அவள் அண்ணனின் அறையில் அவன் நினைவாக எதை வைத்துக் கொண்டாலும் எதுவும் சொல்லாத அவர் தன் மகனை நினைவுபடுத்தும் எதையும் மற்ற இடங்களில் அனுமதித்ததில்லை. ஹாலில் அவர், அவர் மனைவி புகைப்படத்தைத் தொட்ட மாதிரியே ஈஸ்வர் மாட்டி இருக்கும் படத்தைப் பார்த்தால் என்ன சொல்வார்?....

மகேஷ் அதிர்ச்சியுடன் அந்தப் புகைப்படத்தைப் பார்த்தான். ’இதை இங்கே மாட்டவா அவன் கொண்டு வந்தான்?’.  பரமேஸ்வரனுக்கு எதிராக சிறிதும் பயமில்லாமல் ஈஸ்வர் இப்படிச் செய்யக் காரணமே ஆனந்தவல்லி தான் என்று நினைத்து அவன் மனதிற்குள் அவளை சபித்தான்.  “இந்தப் பாழாய் போன கிழவி தாராளமா ஃபோட்டோவை மாட்டிங்கோங்கறா. வீட்டு உரிமையாளர் கிட்ட அனுமதி வாங்கியாச்சுன்னு  இவனும் சொல்றான். இப்படி ஒவ்வொரு அடியாய் எடுத்து வைக்கிற இவன் நாளைக்கு ’எங்கப்பாவோட பங்கைக் குடு’ன்னு சொல்ல மாட்டாங்கறது என்ன நிச்சயம்....”

பெற்றோரின் படத்தை சற்று தள்ளி நின்று ரசித்து விட்டு பாடலை முணுமுணுத்தபடியே ஈஸ்வர் தனதறைக்குப் போனான். ஆனந்தவல்லி ஈஸ்வரைப் புன்னகையோடு பார்த்துக் கொண்டே மீனாட்சியைக் கேட்டாள். “ஏண்டி, உன் மருமகன் ரெண்டு நாளா ரொம்பவே சந்தோஷமாய் இருக்கான் கவனிச்சியா?”

மீனாட்சி சொன்னாள். “இப்ப தான் இந்த வீடு அவன் வீடு மாதிரி தோண ஆரம்பிச்சிருக்கு போல இருக்கு. அதான்...”

’இதொரு வெகுளி.. இதுக்கு எதுவும் சட்டுன்னு தெரியாது’ என்று நினைத்த ஆனந்தவல்லி அதற்கு மேல் எதுவும் சொல்லவில்லை. ஆனால் அவள் கேட்டதன் முழு அர்த்தம் விளங்கிய மகேஷ் மனதிற்குள் எரிமலை வெடித்து சிதறிக் கொண்டிருந்தது.

அறைக்குள் நுழைந்த ஈஸ்வர் அவன் அப்பாவின் புகைப்படத்திற்கு ரோஜாப் பூமாலை போடப் பட்டிருந்ததைப் பார்த்தான். அப்போது தான் அவன் சொல்லாமலேயே அத்தை அந்த நாளை நினைவு வைத்திருந்து மாலை போட்டிருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்ட போது அத்தை மேல் அவனுக்கு இருந்த பாசம் கூடியது. 

அவன் அப்பாவின் புகைப்படம் முன் நின்று மெல்ல சொன்னான். “அப்பா. நான் ஒரு பொண்ணைக் காதலிக்க ஆரம்பிச்சிருக்கேன்னு நினைக்கிறேன்....”. அவர் உயிரோடு இருந்திருந்தால் கண்டிப்பாக அவன் தன் மனதில் உள்ளதை முதலில் அவரிடம் தான் தெரிவித்திருப்பான்....

பரமேஸ்வரன் அன்று தாமதமாகத் தான் வீட்டுக்கு வந்தார்.  வீட்டுக்குள் நுழைந்தவுடன் ஹாலில் முதலில் கவனித்தது தன் மகன், மருமகள் புகைப்படத்தைத் தான். சுவரில் கூட அவன் அவர் புகைப்படத்திற்கு அருகிலேயே இருந்தான்.... ஒரு சின்ன பலவீனத்திற்குப் பின் அவர் முகம் இறுகியது. அவர் முகபாவனை மறைவாக நின்று கொண்டிருந்த மகேஷிற்கு மகிழ்ச்சியைத் தந்தது. ஹாலில் என்றுமில்லாத அதிசயமாய் ஆனந்தவல்லி காலை நாளிதழை மிகவும் கவனமாகப் படிப்பது போல பாவனை செய்து கொண்டு மகனை ஓரக்கண்ணால் நோட்டமிட்டுக் கொண்டு இருந்தாள். ஆனால் அவள் தலை நிமிரவில்லை.

மீனாட்சி தந்தையின் கவனத்தைத் திருப்ப முயற்சி செய்தாள். “என்னப்பா இன்னிக்கு லேட்?”

மகள் கேள்விக்குப் பதில் சொல்லாமல் பரமேஸ்வரன் ‘இதெல்லாம் என்ன’ என்பதைப் போல அவளைக் கூர்மையாகப் பார்த்தார். புகைப்படத்தை மாட்டியது ஈஸ்வர் தான் என்பதால் அவர் அவனிடம் கோபமாக ஏதாவது பேசி தாத்தாவிற்கும், பேரனிற்கும் இடையே விரிசல் அதிகரித்து விடுமோ என்று பயந்த மீனாட்சி மெல்ல சொன்னாள். “அவன் பாட்டி கிட்ட கேட்டு தான் மாட்டி இருக்கான்... பாட்டி தாராளமா மாட்டிக்கோன்னு சொன்னதால தான் அவன்...” என்று இழுத்தாள்.

’அடிப்பாவி. அந்த ’தாராளமா’ங்கிற வார்த்தையை ஏண்டி அவன் கிட்ட சொல்லிக் காண்பிக்கறாய்’ என்று மனதிற்குள் திட்டிக் கொண்டாலும் காதில் எதுவும் விழாதவள் போலவே நாளிதழில் மூழ்கி இருப்பது போல் ஆனந்தவல்லி நடித்தாள்.

தாயை முறைத்துப் பார்த்து சிறிது நின்ற பரமேஸ்வரன் அவள் தலை நிமிராததைப் பார்த்து ”உன் பாட்டிக்கு நாளைக்கு என்ன பரிட்சையா நடக்குது இவ்வளவு சீரியசா படிக்கறதுக்கு?” என்று மீனாட்சியிடம் கேட்டார்.

மீனாட்சி சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டாள். ஆனந்தவல்லி அதுவும் காதில் விழாதது போல நடித்தாள்.

மீனாட்சி தந்தையிடம் ”சரி சாப்பிட வாங்க” என்றாள்.

“சாப்பாடு வேண்டாம்மா. பசியில்லை”

“வெறும் வயித்துல மாத்திரைகள் சாப்பிடக்கூடாது. அதனால கொஞ்சமாவது சாப்பிடுங்க.” கரிசனத்துடன் சொன்ன மகளைப் பார்த்த பரமேஸ்வரன் முக இறுக்கம் சற்று தளர்ந்தது. சாப்பிடப் போனார். ஆனந்தவல்லி நாளிதழைக் கீழே வைத்து விட்டு ஆசுவாசப் பெருமூச்சு விட்டாள். எழுந்தவள் மகன் வருவதற்கு முன் தன் அறைக்குள் சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டாள்.

பரமேஸ்வரன் சாப்பிடும் போது எதுவும் பேசவில்லை. பேசும் மனநிலையில் அவர் இல்லை. மகளுக்காக ஏதோ சிறிது சாப்பிட்டு விட்டு தனதறையை நோக்கி நடந்தார். அவர் நடையில் தெரிந்த தளர்ச்சியைப் பார்த்த மீனாட்சிக்கு மனம் வலித்தது...

பரமேஸ்வரன் ஈஸ்வர் அறையைக் கடக்கையில் அவன் தன் தாயிடம் போனில் பேசிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது. ”..இப்படி இன்னைக்கு அப்பாவோட நினைவு நாள் மறக்க முடியாத நாளாய் அமைஞ்சுடுச்சும்மா. இப்ப அவர் ரூம்ல அவர் சேர்ல உட்கார்ந்துகிட்டு தான் உன் கிட்ட பேசிகிட்டிருக்கேன். எனக்கென்னவோ அப்பா மடியிலேயே உட்கார்ந்து இருக்கற மாதிரி ஒரு ஃபீலிங்க்ம்மா....”

பரமேஸ்வரன் அன்று இரவு நீண்ட நேரம் உறங்கவில்லை. அவர் போலவே அன்று நீண்ட நேரம் உறக்கம் வராமல் தவித்த இன்னொரு ஜீவன் மகேஷ் தான். தாத்தா ஹாலில் இருந்த அந்தப் புகைப்படத்தைப் பார்த்து விட்டு பொங்கி எழுவார் என்று ஆவலுடன் எதிர்பார்த்து ஏமாந்த அவனுக்கு உறக்கம் வரவில்லை. அவன் தன் வாழ்க்கையில் மிக சக்தி வாய்ந்த நபராய் நினைத்த தாத்தாவே ஈஸ்வர் முன் வலுவிழந்து போய் நிற்பதை அவனால் சகிக்க முடியவில்லை. “அம்மாவும் அந்தக் கிழவியும் சேர்ந்து அவரை பலவீனப்படுத்தி விடறாங்க” என்று அவர்கள் இருவர் மீதும் கோபப்பட்டான்.

ஈஸ்வர் நினைத்ததை எல்லாம் ஒவ்வொன்றாக சாதித்துக் கொண்டே வருவது பெரிய ஆபத்து என்று மகேஷ் பயந்தான். அவன் சாதனை விசாலி வரைக்கும் நீண்டது அவன் இதயத்தை அமிலமாய் அரித்துக் கொண்டு இருந்தது. ஏதாவது செய்யாவிட்டால் அனைத்தையும் இழந்து போய் விட வேண்டி வரும் என்று நினைத்தான். வீட்டிற்குள் மீனாட்சியும், ஆனந்தவல்லியும் இருக்கும் வரை தன்னால் ஈஸ்வரை பெரிதாக எதுவும் செய்ய முடியாது என்பது அவனுக்குப் புரிந்தது.  ஆனால் விஷாலி விஷயத்தில் அவனால் முடியும் என்பதில் அவனுக்கு எந்த சந்தேகமும் இல்லை. குழந்தைப் பருவத்தில் இருந்து அவளைக் கவனித்தவன் அவன். அவளை ஈஸ்வரிடம் இருந்து பிரிப்பது பெரிய விஷயமில்லை...

அன்றிரவு முழுவதும் விழித்திருந்து ஈஸ்வரையும் விஷாலியையும் நிரந்தரமாகப் பிரித்து விட திட்டம் தீட்டி முடித்து விட்டு செயல்படுத்த காலையிலேயே மகேஷ் விஷாலி வீட்டுக்குக் கிளம்பி விட்டான்.

(தொடரும்)

No comments:

Post a Comment