Thursday, May 29, 2014

பரம(ன்) ரகசியம் - 36




ன்றெல்லாம் ஈஸ்வரின் நினைவில் விஷாலியே இருந்தாள். அவளுடன் இருந்த போது அவளைப் பார்த்த அளவு அவனுக்கு சலிக்கவில்லை. அவன் இப்படி ஒரு உணர்வை இது வரை உணர்ந்ததில்லை. விஷாலியிடம் விடை பெற்ற போது நீண்டகாலம் பழகிப் பின் பிரிவது போல அவனுக்குத் தோன்றியது.

அவள் மீதிருந்த நினைவுகளின் தாக்கத்தில் ஈஸ்வர் பக்கத்தில் இழவு வீட்டில் இருப்பது போல் இருந்த மகேஷின் முகபாவத்தைக் கவனிக்கவில்லை. அவன் என்றைக்குமே மகேஷை நல்ல சந்தோஷமான மனநிலையில் பார்க்காத காரணத்தால் அவனுடைய சவக்களைக்குப் பிரத்தியேக அர்த்தத்தை அவன் உணரவில்லை.

ஈஸ்வர் நிறைய அழகான பெண்களைச் சந்தித்திருக்கிறான். ஒருசிலர் அவன் மீது விருப்பமும் தெரிவித்திருக்கிறார்கள். ஆனாலும் அவன் மனதில் யாரும் இடம் பிடித்ததில்லை.  முதல் பார்வையிலேயே காரணம் புரியாமல் சிலிர்க்க வைத்ததில்லை.  விஷாலியுடன் பழகும் போது ஒரு அழகான இசை, சுகமான தென்றல், கவிதை போன்ற நளினம் – இது போல் எல்லாம் அவன் உணர்ந்தான். எல்லாவற்றிற்கும் மேலாக அவளுடைய நல்ல மனது அவனை மிகவும் கவர்ந்தது. மிக நல்ல பெற்றோருக்குப் பிறந்து அவர்களால் வளர்க்கப் பட்ட அவன் அழகு, அறிவு, சாதனை, செல்வம், புகழ் இவை எல்லாவற்றையும் விட மனிதனுக்கு முக்கியமானது அவன் நல்லவனாக இருப்பதே என்று நம்பினான்.  அதனால் அத்தை சொன்னது போல அவள் ஸ்பெஷல் தான் என்று நினைத்தான். அவனையும் அறியாமல் அடிக்கடி அவன் உதடுகள் ஒரு ஆங்கிலக் காதல் பாடலை முணுமுணுத்தன.

அவனிடம் ஏற்பட்டிருந்த மாற்றத்தை முதல் முதலில் கண்டுபிடித்தவள் ஆனந்தவல்லி தான். மற்றவர்களைக் கூர்ந்து கவனித்து எடை போடுவதில் வல்லவளான அவளுக்கு ஈஸ்வர் வந்ததில் இருந்து அவனைக் கவனிப்பதைத் தவிர வேறு எந்த வேலையும் இல்லாததால் விஷாலி வீட்டில் இருந்து அவன் வந்த சிறிது நேரத்திலேயே அது வரை இல்லாத ஒருவித சந்தோஷத்தை அவனிடம் பார்த்தாள். அவன் ஏதோ ஒரு பாடலை அடிக்கடி முணுமுணுக்க அவள் சந்தேகம் உறுதியாயிற்று.

“என்னடா ரொம்ப சந்தோஷமாய் இருக்கிற மாதிரி இருக்கு

கிழவியிடம் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் போல் இருக்கிறதே என்று நினைத்தவனாய் ஈஸ்வர் சொன்னான். “நான் எப்பவும் மாதிரி தானே இருக்கேன்

இங்கே வந்ததுல இருந்து நீ பாடி நான் கேட்டதே இல்லையேடா. காதலாடா?

“பாடினா காதல்னு அர்த்தமா?

“உன்னை மாதிரி கடுகடுன்னு இருக்கறவன் பாடினா அப்படித் தான் அர்த்தம். இந்தியாவில நீ எந்தப் பொண்ணைக் காதலிச்சாலும் பரவாயில்லை. ஒரு வெள்ளைக்காரியையோ, ஒரு சைனாக்காரியையோ, ஒரு ஆப்பிரிக்காக்காரியையோ காதலிச்சு கல்யாணம் செய்துக்கறதை விட தேவலை.

ஏன் அவங்களுக்கெல்லாம் என்ன குறைச்சல்...

“பொறக்கற குழந்தை சுண்ணாம்பு வெள்ளையிலயோ, சப்பை மூக்காவோ, கருகருன்னோ பிறந்துடப் போகுது....

இந்தப் பாட்டிக்கு என்ன ஆயிற்று என்பது போல அவன் கிண்டலாகப் பார்த்தான். குழந்தை பெற்றுக் கொள்ளும் வரை கற்பனை பாய்ந்து விட்டதே என்று நினைத்தான். “அப்புறம் எப்படி பிறக்கணும்.?..

எனக்கு உன்னை மாதிரியே ஒரு குழந்தையைப் பெத்துக் குடுடா. அது போதும்

உங்க புருஷன் மாதிரியே நானிருக்கேன். என்னை மாதிரியே என் குழந்தையும் இருந்துட்டா இந்த வீட்டுல கார்பன் காப்பி நிறைய ஆயிடும்என்று ஈஸ்வர் சிரித்தான்.

நான் என் குழந்தைகள்ல ஒன்னாவது பார்க்க அவர் மாதிரி வேணும்னு நினைச்சேன். பிறந்தது ஒன்னு கூட அவர் மாதிரி இல்லை. பேரனும் அப்படி அமையில. கொள்ளுப்பேரன் நீ அப்படி இருக்கிறே. ஆனா சின்னதுல இருந்து உன்னைப் பார்க்க குடுத்து வைக்கல. எனக்கு சின்னக் குழந்தையில இருந்து பார்க்கணும்னு ஆசையா இருக்குடாஆனந்தவல்லி ஆத்மார்த்தமாகச் சொன்னாள்.

என்னவோ நான் கல்யாணம் செய்துட்டு இங்கேயே செட்டில் ஆயிடுவேன்கிற மாதிரி பேசறீங்க

நீ அமெரிக்காவுக்கு போனா நானும் அங்கேயே வந்துடறேன். எனக்கு எங்கேயானா என்ன?

ஈஸ்வருக்கு ஒரு கணம் அவள் சொன்னதெல்லாம் மனம் நெகிழ வைத்தது.  ஆனால் வெளியே காட்டிக் கொள்ளாமல் “ஐயோ, இங்கேயே கண்ணைக் கட்டுது. அங்கேயுமா?என்று சொல்லியவன் இடத்தைக் காலி செய்தான். அங்கே மேலும் இருந்தால் அவன் காதலிப்பது யாரை என்று மெல்ல அவள் கேட்க ஆரம்பித்தாலும் ஆரம்பிக்கலாம் என்ற பயம் அவனை முக்கியமாகப் பிடித்துக் கொண்டது.  

அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டு இருந்த மகேஷ் மனதினுள் எரிமலையே வெடித்து விட்டது. அவன் காதலியை ஒரே நாளில் ஈஸ்வர் மாற்றியதுமில்லாமல் குழந்தை பெற்றுக் கொள்வது வரை நினைக்க ஆரம்பித்தால் அவனுக்கு எப்படி இருக்கும்?

மறுநாள் ஈஸ்வர் மீனாட்சியின் காரில் தனியாகவே விஷாலி வீட்டுக்குச் சென்றான். போகும் போது அவன் மகேஷை வருகிறாயா என்று கூடக் கேட்கவில்லை. விஷாலியும் மகேஷிடம் போனில் கூட எதுவும் கேட்கவில்லை. அவர்கள் தனியாகச் செல்வது அவனுக்கு வேறு சில கற்பனை பயங்களை வேறு ஏற்படுத்தியது. பேச்சு மட்டுமல்லாமல் வேறு ஏதாவது அவர்களுக்குள் நிகழ்ந்து விடுமோ என்று பயந்தான். விஷாலி அந்த மாதிரி பெண் அல்ல. ஆனால் ஈஸ்வரை அவனால் நம்ப முடியவில்லை. அவன் அவளை ஹிப்னாடிசம் மாதிரி ஏதாவது செய்து வரம்புகளை மீறி விடுவானோ? அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவனுக்கு இது பெரிய விஷயமாகத் தெரியாது. மேலும் அவன் அழகாய் வேறு இருக்கிறான், அவளும் அவனிடம் மயங்கிப் போயிருக்கிறாள்.... மகேஷிற்கு இருப்பு கொள்ளவில்லை....

ஈஸ்வர் விஷாலி வீட்டுக்குப் போவதற்கு முன் ஒரு ஃபோட்டோ ஸ்டூடியோவுக்குப் போய் தன் பெற்றோரின் புகைப்படத்தை பெரிதாய் லேமினேட் செய்து தரக் கொடுத்து விட்டுச் சென்றான். மாலையே வேண்டுமென்று சொல்லி, கண்டிப்பாகக் கிடைத்து விடும் என்ற உத்திரவாதம் வாங்கிக் கொண்டு தான் கிளம்பினான்.   

வீட்டில் தென்னரசு ஏதோ வேலையாக வெளியே போயிருந்தார். விஷாலி ஈஸ்வருக்காக இனம் புரியாத பரபரப்பான ஆவலுடன் காத்திருந்தாள். வழக்கமாக தோற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் தராதவள் இன்று கண்ணாடி முன் நிறைய நேரம் இருந்தாள். அவன் கார் ஹார்ன் சத்தம் கேட்ட போது அவள் இதயம் அநியாயத்திற்குப் படபடத்தது. “என்ன ஆச்சு எனக்கு.  டீன் ஏஜ் பொண்ணு மாதிரி நடந்துக்கறேன்”  என்று தன்னைத் தானே கோபித்துக் கொண்டு பரபரப்பு, படபடப்பு இரண்டையும் அடக்கிக் கொண்டு அவள் வெளியே வந்து ஈஸ்வரை வரவேற்றாள்.

அவளைப் பிரிந்து ஒரு நாள் கூட முழுமையாக முடியவில்லை என்றாலும் அவனுக்கும் அவளைப் பார்த்த போது நீண்ட காலம் பிரிந்து பின் சந்திப்பது போல மனம் குழந்தை போல குதூகலித்தது. இன்று அவள் அழகு மேலும் கூடி இருப்பது போல் பட்டது. பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றியது.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு சிறிது நேரம் நின்றார்கள். அந்த மௌனம் நிறைய பேசியது. மனங்கள் நேரடியாகப் பேசும் போது வார்த்தைகள் அனாவசியம் தானே?

எங்கே போகலாம் விஷாலி?

அன்பாலயம்கிற அனாதை ஆஸ்ரமத்திற்குப் போன் செஞ்சு நாம வர்றதா சொல்லி இருக்கேன்

“அங்கே எத்தனை குழந்தைகள் இருப்பாங்க விஷாலி?

“இருபத்தி ஒரு குழந்தைகள் இருக்காங்க

“அவங்களுக்குத் தர ஏதாவது கிஃப்ட் வாங்கிட்டு போகலாமா?

ஒரு கடையில் அந்த அனாதைக் குழந்தைகளுக்குப் பரிசுகள் தேர்ந்தெடுக்கும் போது தான் அன்றைய தினம் அவனுடைய அப்பாவின் இறந்த நாள் என்று அவளிடம் தெரிவித்தான். சொல்லும் போதே அவன் முகத்தில் லேசாக சோகம் பரவியது. அவனது அழகான முகத்தில் சோகம் பரவுவதை அவளால் பார்க்க முடியவில்லை. அந்த நினைவு நாளை நல்ல தர்ம காரியங்களில் செலவழிக்கும் அவன் நல்ல மனது அவளுக்குப் பிடித்திருந்தது. யோசித்துப் பார்த்தால் அவனிடம் பிடிக்காத விஷயமே அவளுக்கு இருக்கவில்லை...

தந்தையின் நினைவில் ஆழ்ந்த அவனை ஆறுதல் படுத்தும் விதமாக அவன் தோளை அவள் தொட்டாள். அவளுடைய புரிதலிலும், கரிசனத்திலும் மனம் நெகிழ்ந்தவனாய் அவள் கையை அழுத்தி மௌனமாக அவன் நன்றி சொன்னான்.

அன்பாலயம் என்ற அந்த அனாதை இல்லத்தின் மெயின் கேட்டைக் கடந்தவுடன் வலது புறம் ஒரு அரசமரத்தின் அடியில் ஒரு வினாயகர் சிலை இருந்தது. விஷாலி ஒரு நிமிடம் நின்று அந்த வினாயகரை வணங்கி விட்டு ஈஸ்வரை இல்லத்துக்குள் அழைத்துச் சென்றாள்.

மூன்று வயதிலிருந்து பதினான்கு வயது வரை 21 குழந்தைகள் இருந்தார்கள். விஷாலி அடிக்கடி அங்கே போகிறவளாக இருந்ததால் குழந்தைகள் முகமலர்ச்சியோடு அவளை சூழ்ந்து கொண்டார்கள். ஈஸ்வரை அந்தக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்திய போது ஒரு ஏழு வயது சிறுவன் கேட்டான். “ஆண்ட்டி, இது தான் நீங்க கல்யாணம் செய்துக்கப்போற அங்கிலா?

அவன் எதனால் அப்படிக் கேட்டான் என்று தெரியவில்லை. விஷாலியின் முகம் சிவந்தது. ஈஸ்வர் அவள் வெட்கத்தை மனதினுள் ரசித்தான். அதற்குப் பதில் எதுவும் சொல்லாமல் விஷாலி பேச்சை மாற்றினாள். அவள் இதற்கு முன் மகேஷோடு சில முறை வந்திருக்கிறாள். மகேஷிற்கு இது போன்ற இடங்களுக்கு வருவது பாவற்காயை பச்சையாகச் சாப்பிடச் சொல்வது போலத் தான் என்றாலும் அவளுக்காக ஆர்வத்துடன் வருவது போல் நடிப்பான். அங்கே இருக்கின்ற ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு யுகமாய் நகரும்...

ஆனால் ஈஸ்வர் அங்கிருந்த குழந்தைகளுடன் சேர்ந்து மிக சந்தோஷமாக இருந்தான். பரிசுப் பொருள்களை வாங்கும் போது அவர்கள் முகத்தில் தெரிந்த அளவற்ற மகிழ்ச்சி அவன் மனதை நெகிழ வைத்தது. அவர்களுடன் பேசினான், விளையாடினான், பாடினான்.... அவன் சிறிதும் கர்வம் இல்லாமல், அவர்களுடன் ஒன்றிப் போன விதம் விஷாலியை வியக்க வைத்தது.....

குருஜி காலையில் ஒன்பது மணிக்கு சிவலிங்கத்தை தரிசிக்க வருகிறார் என்பதால் கணபதியை அங்கிருந்து கிளப்பி மாலை வரை அப்புறப்படுத்தி வைப்பது என்பது முடிவெடுக்கப் பட்டது. முந்திய தினம் இரவே கணபதியிடம் வந்து ஒருவன் சொன்னான்.

“நாளைக்குக் காலைல பூஜை முடிந்த பிறகு ரெடியா இருங்க. நூறு மைல் தூரத்துல ஒரு சக்தி வாய்ந்த பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயில் இருக்கு. அங்கே உங்களைக்  கூட்டிகிட்டு போக குருஜி சொல்லி இருக்கார்

கணபதி ஆச்சரியத்துடன் கேட்டான். “ஏன்?

வந்ததுல இருந்து நீங்க ஒரே இடத்துல இருக்கறதால போரடிச்சுப் போய் இருக்கும்னு நினைச்சு சொல்றார்

“உங்களுக்கு எதுக்கு சிரமம். எனக்கு போரடிக்கலை. அதான் கூட சிவன் இருக்காரே

சிவனை நிஜமான ஒரு ஆள் போலப் பேசும் கணபதியைத் திகைப்புடன் பார்த்தவன் சொன்னான். குருஜி சொன்னதுக்கப்புறம் தட்ட முடியாது. நீங்க காலையில சீக்கிரம் பூஜையை முடிச்சுட்டு ரெடியா இருங்க

எத்தனை மணிக்கு பஸ்ஸு?

“பஸ்ஸா? குருஜி உங்களை ஏ.சி.கார்ல கூட்டிகிட்டு போகச் சொல்லி இருக்கார்

குருஜியின் அன்பு மழையில் கணபதி திக்குமுக்காடிப் போனான். இந்த ஏழைக்கு எதுக்கு ஏ.சி. கார்.....

ஏதோ ஒரு வேற்றுக் கிரகவாசி போல கணபதியைப் பார்த்து விட்டு மீதிப் பேச்சைக் கேட்க நிற்காமல் அவன் போய் விட்டான்.

மறு நாள் சிவனுக்குப் பூஜை செய்து விட்டு கணபதி சிவனிடம் விடை பெற்றுக் கொண்டான். “சரி, நான் பஞ்சமுக ஆஞ்சநேயரை தரிசனம் செஞ்சுட்டு வந்துடறேன். சாயங்கால பூஜைக்குள்ளே வந்துடறேன்... வரட்டுமா?

கார் டிரைவரிடம் ஒரே ஒரு விஷயத்தை திருப்பித் திருப்பி சொல்லி இருந்தார்கள். பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் மட்டுமல்லாமல் வழியில் இருக்கும் மற்ற கோயில்களுக்கும் கணபதியை அழைத்துப் போய் வரும்படியும், எந்தக் காரணத்தைக் கொண்டும் மாலை ஐந்து மணிக்கு முன் வேதபாடசாலைக்கு கணபதியை அழைத்து வந்து விடக்கூடாது என்றும் சொல்லி இருந்தார்கள்.

ஏ.சி காரில் போகும் போது கணபதி தன் தாயை நினைத்துக் கொண்டான். “பாவம் அம்மாவும் இப்ப கூட இருந்திருந்தா சந்தோஷப்பட்டிருப்பா. அவ இது வரைக்கும் கார்ல போனதே இல்லை. அதுவும் ஏ.சி கார்ல எல்லாம் போனதே இல்ல. எப்பவாவது ஒரு தடவை கைக்காசு போட்டாவது இப்படி எங்கேயாவது கூட்டிகிட்டுப் போகணும். பாவம் கஷ்டத்துலயே அவ காலம்  போயிடுச்சு.... என்னை மாதிரி இல்லாம நல்ல புத்திசாலியாய் ஒரு பிள்ளைய பெத்திருந்தா நல்லா இருந்திருப்பாளோ என்னவோ!

காரில் அவன் தூங்கிப் போனான். திடீரென்று கார் நிற்க விழித்துக் கொண்டான். அதுக்குள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் வந்துருச்சா?

இல்லை சாமி. கார் ரிப்பேர் ஆயிடுச்சுஎன்ற டிரைவர் கீழே இறங்கி காரை பரிசோதனை செய்தான்... பிறகு வழிப்போக்கர் சிலரிடம் பக்கத்தில் வர்க்‌ஷாப் எங்கே இருக்கிறது என்று விசாரித்து விட்டு வந்தான்.

சாமி, ரெண்டு மைல் தூரத்துல ஒரு வர்க்‌ஷாப் இருக்காம்... நான் ஆட்டோல போய் அந்த மெக்கானிக்க கூட்டிகிட்டு வர்றேன். வெய்ட் பண்றீங்களா?

கணபதி தலையசைத்தான். ஆஞ்சநேயரை நான் அதிகமா கும்பிட்டதில்லை. அதனால நான் அங்கே வர்றது அவருக்குப் பிடிக்கலையோ?என்ற சந்தேகம் அவனுக்கு வந்தது.

டிரைவர் ஆட்டோவுக்காக காத்திருக்கையில் கணபதி கார் ஜன்னல் வழியே பார்த்தான். அருகில் “அன்பாலயம்என்ற பெயர்ப்பலகையுடன் ஒரு கட்டிடம் இருந்தது. அந்தக் கட்டிடத்தின் முன் வேறொரு கார் நின்றிருந்தது. கேட் சிறிது திறந்திருந்தது. திறந்திருந்த கேட் வழியே ஒரு அரசமரத்தடி பிள்ளையாரும் தெரியவே கணபதி புன்னகைத்தான்.

அந்த டிரைவரைக் கூப்பிட்டு சொன்னான். நீங்க போய்ட்டு வாங்க. நான் அந்த பிள்ளையார் பக்கத்துல உட்கார்ந்திருக்கேன்...

டிரைவரும் அந்தப் பிள்ளையாரைக் கவனித்து விட்டு “சரி சாமிஎன்றான்.

அவன் ஆட்டோ கிடைத்து அதில் ஏறிப் போக கணபதி அந்த கேட்டைத் தாண்டி உள்ளே போய் பிள்ளையாரைப் புன்னகையுடன் நெருங்கினான். அசப்புல என்னோட பிள்ளையார் மாதிரியே இருக்கார். பாவம் இவரும் தனியா தான் உக்காந்திருக்கார்...

(தொடரும்)

No comments:

Post a Comment