Tuesday, May 27, 2014

பரம(ன்) ரகசியம்! - 2



அந்தக் கொலைகாரனிடம் போனில் தெரிவித்தபடி ஆட்கள் மூன்று பேர் இரண்டு கார்களில் சொன்ன நேரத்திற்குள் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் வந்த போது அவன் தோட்டத்தின் முன் இரும்புக் கதவு பாதி திறந்து கிடந்தது. மறுபாதிக் கதவின் கீழ்க்கம்பிகளில் ஒன்றைப் பிடித்தபடி அவன் கீழே உட்கார்ந்திருந்தான். தெருவில் ஆள் நடமாட்டமே இல்லாமல் இருந்தால் கூட இப்படியா தெருவிளக்கின் ஒளியில் அலட்சியமாக உட்கார்ந்திருப்பது என்று நினைத்தவனாய் முதல் காரில் இருந்து இறங்கியவன் அவனை நெருங்கினான்.
 

கார்கள் வந்து நின்ற சத்தம் கூட அந்தக் கொலைகாரன் கவனத்தைத் திருப்பவில்லை.  அதனால் ஏதோ பிரச்சினை என்பதை உணர்ந்த முதல் கார் ஆசாமி குனிந்து அந்தக் கொலைகாரனை உற்றுப்பார்த்தான். பின் மூக்கருகே கையை வைத்துப் பார்த்தான். மூச்சில்லை. அப்போது தான் அந்தக் கொலைகாரன் இறந்து போயிருந்தது உறைத்தது. திகைப்புடன் அவனை முதல் கார் ஆசாமி கூர்ந்து பார்த்தான். உடலில் எந்தக் காயமும் இல்லை. முகத்தில் மட்டும் எதையோ பார்த்து பயந்த பீதி பிரதானமாகத் தெரிந்தது. ஏதோ அதிர்ச்சியில் இறந்து போயிருக்க வேண்டும்....
 

இரண்டாவது காரில் இருந்து ஒருவன் தான் இறங்கி வந்தான். “என்னாச்சு”
 

“செத்துட்டான்”
 

“எப்படி?”
 

“தெரியல. முகத்தப் பார்த்தா ஏதோ பயந்து போன மாதிரி தெரியுது”
 

“பயமா, இவனுக்கா....” என்று சொன்ன இரண்டாவது கார் ஆசாமி அருகில் வந்து இறந்தவனை உற்றுப்பார்த்தான். அவன் சொன்னது உண்மை என்று தெரிந்தது. தேர்ந்தெடுக்கும் போதே பயமோ, இரக்கமோ, தயக்கமோ இல்லாத ஆளாகப்பார்த்துத் தான் அவர்கள் அவனைத் தேர்ந்தெடுத்து இருந்தார்கள். அப்படிப்பட்ட அவனையே இந்தக் கோலத்தில் பார்த்த போது ஏற்பட்ட அதிர்ச்சியில் ஒருகணம் இரண்டாவது கார் ஆசாமி பேச்சிழந்து போனான்.
 

“என்ன செய்யலாம்?” முதல் கார் ஆசாமி கேட்டான்.
 

ஆயிரம் கேள்விகள் மனதில் எழுந்தாலும், இந்த சூழ்நிலையை சிறிதும் எதிர்பாராமலிருந்தாலும் கூட இரண்டாவது கார் ஆசாமி தன்னை உடனடியாக சுதாரித்துக் கொண்டான். ஒரு முறை ஆழமாக மூச்சை உள்ளிழுத்து வெளி விட்டவன் அமைதியாகச் சொன்னான். “முதலில் இவனுக்கு நாம் கொடுத்த செல்லை எடு”
 

முதல் கார் ஆசாமி இறந்தவன் சட்டைப்பையில் வைத்திருந்த இரண்டு செல் போன்களை வெளியே எடுத்தான். ஒன்று கொலைகாரனுடையது. இன்னொன்று அவர்கள் அவனுக்குக் கொடுத்தது.
 

“நம் செல்போனில் வேறு யாரிடமாவது எங்காவது பேசியிருக்கிறானான்னு பார்”
 

முதல் கார் ஆசாமி தாங்கள் கொடுத்திருந்த செல்போனில் ஆராய்ந்து விட்டுச் சொன்னான். “நம்மிடம் மட்டும் தான் பேசியிருக்கான். வேற எந்தக் காலும் இதுக்கும் வரல. இவனை என்ன பண்ணறது?”
 

”இவனை சுவரின் மறைவுக்கு இழுத்து விடு. வெளியே இருந்து பார்த்தால் தெரியாதபடி இருந்தால் போதும்”
 

கவனமாக பிணத்தை சுவர்ப்பக்கம் அவன் இழுத்துப் போட்ட பிறகு இரண்டாம் கார் ஆசாமி சொன்னான். “போய் உள்ளே என்ன நிலவரம்னு பார்க்கலாம் வா”
 

அவர்கள் இருவரும் வேகமாக வீட்டை நோக்கி நடந்தார்கள்.  நடக்கும் போது முதல் கார் ஆசாமி கேட்டான். “அவன் பயத்துலயே செத்திருப்பானோ? என்ன ஆகியிருந்திருக்கும்?”
 

”தெரியல. எனக்கு சந்தேகம், நாம சொன்னதையும் மீறி அந்த பூஜையறைக்குள்ளே நுழைஞ்சிருக்கலாம். ஏதாவது செய்திருக்கலாம்.....”
 

“அது அவ்வளவு அபாயமானதா?”
 

இரண்டாம் கார் ஆசாமி பதில் சொல்லவில்லை. அதற்குள் அவர்கள் வீட்டை எட்டி விட்டிருந்தார்கள். சர்வ ஜாக்கிரதையுடன் வாசலிலேயே நின்று கொண்டு உள்ளே எட்டிப்பார்த்தார்கள். பத்மாசனத்தோடே கவிழ்ந்திருந்த முதியவர் பிணம் அவர்களை வெறித்துப் பார்த்தது. முகத்தில் இரத்த வரிகள் இருந்தாலும் அவர் முகத்தில் இருந்த அமைதியையும் அவரைக் கொன்றவன் முகத்தில் இருந்த பீதியையும் ஒப்பிடாமல் அவர்களால் இருக்க முடியவில்லை....
 

“இதென்ன இந்த ஆள் பத்மாசனத்துலயே இருக்கார். இது இயல்பா தெரியலயே...” முதல் கார் ஆசாமிக்குத் தன் திகைப்பை வெளிக்காட்டாமல் இருக்க முடியவில்லை.
 

“உன்னால கொஞ்ச நேரம் பேசாமல் இருக்க முடியுமா?” என்று குரலை உயர்த்தாமல் பல்லைக் கடித்துக் கொண்டு சொன்ன இரண்டாம் கார் ஆசாமி ஹாலை ஆராய்ந்தான். கிழவரின் பிணத்தைத் தவிர வேறு எதுவும் வித்தியாசமாக இருப்பதாகத் தோன்றவில்லை.
 

உள்ளே அவன் நுழைந்தான். படபடக்கும் இதயத்துடன் பூஜையறையைப் பார்த்தான். சிவலிங்கம் இன்னும் அங்கேயே இருந்தது. ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டான் அவன். அவனைத் தொடர்ந்து முதல் கார் ஆசாமியும் உள்ளே நுழைந்தான்.
 

இரண்டாம் கார் ஆசாமி எச்சரித்தான். “எதையும் தொட்டுடாதே. கவனமா இரு”
 

முதல் கார் ஆசாமி தலையசைத்தான். இருவரும் மெல்ல பூஜையறைக்கு இரண்டடி தள்ளியே நின்று பூஜையறையை நோட்டமிட்டார்கள். பூஜையறையில் திருநீறு டப்பா கவிழ்ந்து திருநீறு தரையில் கொட்டிக் கிடந்தது. ஹாலின் விளக்கொளியில் அதற்கு மேல் பூஜையறையில் வேறு அசாதாரணமானதாக எதுவும் தெரியவில்லை.
 

இரண்டாம் கார் ஆசாமி தன் கைக்குட்டையை எடுத்து அதைப்பிடித்தபடி ஹாலில் இருந்த பூஜையறை ஸ்விட்ச்சைப் போட்டான். ஓரடி தூரத்தில் இருந்தே பூஜையறையை மேலும் ஆராய்ந்தான். அப்போது தான் பூஜையறையின் ஒரு ஓரத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த தேவார, திருவாசகப் புத்தகங்கள் சரிந்து கிடந்தது தெரிந்தது.
 

“முட்டாள்... முட்டாள்.... அவன் உள்ளே போயிருக்கிறான்” இரண்டாம் கார் ஆசாமி ஆத்திரத்துடன் பல்லைக் கடித்தான். சில வினாடிகளில் சுதாரித்துக் கொண்ட அவன் அடுத்தவனிடம் சொன்னான். “அவனை வரச் சொல்...”
 

முதல் கார் ஆசாமி அவசரமாகப் போனான். வெளியே இருந்த முதல் காரின் பின் கதவைத் திறந்து அங்கு அமர்ந்திருந்தவனை “வாங்க” என்றான்.

இடுப்பில் ஈரத்துண்டை கச்சை கட்டிக் கொண்டிருந்த ஒரு ஆஜானுபாகுவான இளைஞன் காரில் இருந்து இறங்கினான். அவன் செருப்பு இல்லாமல் வெறும் காலுடன் இருந்தான். அவன் நெற்றியிலும், கைகளிலும், புஜங்களிலும், நெஞ்சிலும் திருநீறு பூசி இருந்தான். அவன் வாய் ஏதோ மந்திரங்களை முணுமுணுத்துக் கொண்டிருந்தது.
 

இருவரும் உள்ளே போனார்கள். அந்த இளைஞன் அக்கம் பக்கம் பார்க்காமல் நேர் பார்வையுடன் சீரான வேகத்தில் சென்றான். வீட்டினுள்ளே நுழையும் போது முதியவரின் பிணத்தைப் பார்க்க நேர்ந்த போது மட்டும் அவன் ஒரு கணம் அப்படியே நின்றான். அவனையும் அந்த விலகாத பத்மாசனம் திகைப்பை அளித்திருக்க வேண்டும்.
 

தாமதமாவதை சகிக்க முடியாத இரண்டாம் கார் ஆசாமி அவனுக்கு பூஜையறையைக் கை நீட்டி காண்பித்தான். அந்த இளைஞன் திகைப்பில் இருந்து மீண்டு பூஜையறைக்குள் நுழைந்தான். உள்ளே நுழைந்தவுடன் சாஷ்டாங்கமாய் நமஸ்கரித்தான். மந்திரங்களை உச்சரித்தபடியே அந்த சிலையை அவன் பயபக்தியுடன் தொட்டு வணங்கினான். ஏதோ ஒரு லேசான மின் அதிர்ச்சியை உணர்ந்தது போல அவனுக்கு உடல் சிலிர்த்தது.
 

அதைக் கவனித்த முதல் கார் ஆசாமி “என்ன?” என்று சற்றே பயத்துடன் கேட்டான்.
 

அந்த இளைஞன் பதில் சொல்லவில்லை. அவன் பக்கம் திரும்பிப் பார்க்கவும் இல்லை. இரண்டாம் கார் ஆசாமி தன் சகாவிடம் அவசரமாய் தாழ்ந்த குரலில் எச்சரித்தான். “அவன் கவனம் இப்போது எதிலும் திரும்பக்கூடாது. நீ எதுவும் கேட்காதே....பேசாமலிரு”
 

முதல் கார் ஆசாமி அதற்குப் பிறகு வாயைத் திறக்கவில்லை.
 

அந்த இளைஞன் கை கூப்பி ஒரு முறை வணங்கி விட்டு அந்த சிவலிங்கத்தைத் தூக்கினான். அந்த சிவலிங்கம் மிக அதிக கனம் இல்லை. சுமார் பத்து அல்லது பன்னிரண்டு கிலோ தான் இருக்கும். அதைத் தூக்கிக் கொண்டு அந்த இளைஞன் வெளியே வந்தான். அவன் உதடுகள் ஏதோ மந்திரத்தை உச்சரித்தபடி இருந்தன.
 

அவன் வேகமாக சிவலிங்கத்துடன் வெளியே செல்ல மற்ற இருவரும் அவனைப் பின் தொடர்ந்தார்கள். அந்த இளைஞன் தன் கையில் இருக்கும் சிவலிங்கம் கனத்துக் கொண்டே போவது போல் உணர்ந்தான். அவன் ஆரம்பத்திலேயே எச்சரிக்கப்பட்டிருந்தான். ” அந்த சிவலிங்கம் இங்கு வந்து சேர்வதற்குள் நீ எதிர்பாராத எத்தனையோ நடக்கலாம். சிவலிங்கம் உன் கையில் இருக்கும் போது பிரளயமே ஆனாலும் சரி, இந்த மந்திரத்தை சொல்வதை மட்டும் நீ நிறுத்தி விடக்கூடாது. இது தான் உன் பாதுகாப்பு கவசம். அதே போல சிவலிங்கத்தைக் கீழே போட்டு விடவும் கூடாது....”
 

அந்த நள்ளிரவுக் குளிரிலும் அந்த இளைஞனுக்கு வியர்க்க ஆரம்பித்தது. சிவலிங்கம் அநியாயத்திற்கு எடை கூடிக்கொண்டு போனது. ஏதோ ஒரு அசௌகரியத்தை உடலெல்லாம் அவன் உணர்ந்தான். முன்பே அறிவுறுத்தப்பட்டபடி அவன் அந்த மந்திரத்தை மட்டும் விடாமல் சொல்லிக் கொண்டிருக்க, காரை வந்தடைந்தான்.
 

முதல் காரின் பின் சீட்டில் முன்பே புதிய பட்டுத்துணி ஒன்று விரிக்கப்பட்டு இருந்தது.  அதில் மிகக் கவனமாய் அந்த சிவலிங்கத்தை வைத்து விட்டு அதன் அருகில் அந்த இளைஞன் தானும் அமர்ந்தான். இறக்கி வைத்த பின் தான் அவனுக்கு நிம்மதியாக இருந்தது. கார் வேகமாகக் கிளம்பியது.
 

முதல் காரைத் தொடர்ந்தே இரண்டாவது காரும் வேகமாகத் தொடர்ந்தது. இரண்டாவது கார் ஆசாமி நிம்மதிப் பெருமூச்சு விட்டான். வந்த வேலை நன்றாகவே முடிந்து விட்டது. அந்தக் கொலைகாரன் தான் தேவை இல்லாமல் உயிரை விட்டு விட்டான்.... அவன் எப்படி இறந்தான்? பயமே அறிந்திராத அவன் எதைப்பார்த்து பயந்தான்? கிழவரைக் கொன்று விட்டு தெரிவித்த போது கூட அவன் சாதாரணமாகத் தானே இருந்தான்! பிறகு ஏதோ ஒரு உந்துதலில் அவன் பூஜையறைக்குள் நுழைந்திருக்க வேண்டும். பின் என்ன ஆகியிருந்திருக்கும்?... மனதின் நீண்ட கேள்விகள் செல் போன் சத்தத்தில் அறுபட்டன. செல் போனை எடுத்துப் பேசினான். “ஹலோ”
 

முதல் கார் ஆசாமி தான் பேசினான். “ஏ.சி போட்டுக்கூட இவனுக்கு அதிகமா வியர்க்குது. ஏதோ ஜுரத்தில் இருக்கிற மாதிரி தோணுது. இவ்வளவு நேரமா மந்திரத்தை மெல்ல உச்சரிச்சிட்டு இருந்தவன் சத்தமாய் சொல்ல ஆரம்பிச்சிருக்கான்.  ஏதோ பைத்தியம் பிடிச்சிட்ட மாதிரி தோணுது. என்ன செய்யறது?” அவன் குரலில் பயம் தொனித்தது.
 

இரண்டாம் கார் ஆசாமி காதில் அந்த இளைஞன் சத்தமாகச் சொல்லும் மந்திரம் நன்றாகவே கேட்டது. இரண்டாம் கார் ஆசாமி அமைதியாகச் சொன்னான். “இதுல நாம் செய்யறதுக்கு எதுவுமில்லை. சீக்கிரமா அந்த சிலையை அங்கே சேர்த்திட்டா போதும். மீதியை அவர் பார்த்துக்குவார். நீ கண்டுக்காதே”
 

ஆனால் முதல் கார் ஆசாமிக்கு அப்படி இருக்க முடியவில்லை. நடக்கிற எதுவுமே இயல்பானதாக இல்லை.... ஆழம் தெரியாமல் காலை விட்டு விட்டோமோ என்று தோன்ற ஆரம்பித்தது.

(தொடரும்)



No comments:

Post a Comment