Thursday, May 29, 2014

பரம(ன்) ரகசியம் - 35




கேஷ் தனது மனதில் புகைந்து கொண்டிருந்த எரிமலையில் இருந்து கவனத்தைப் பலவந்தமாகத் திருப்பிய போது தென்னரசு தன் மகளைப் பற்றி ஈஸ்வரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். “விஷாலி ஃபேஷன் டிசைனரா இருக்கா. சம்பாத்தியத்துல பாதி தர்ம காரியங்களுக்குன்னு ஒரு கொள்கை வச்சிருக்கா. நல்லா வரைவா. நிறைய ப்ரைஸ் வாங்கி இருக்கா. அந்தப் பெயிண்டிங்க்ஸ் வித்து வர்ற காசு முழுசும் கூட தர்ம காரியங்களுக்குத் தான் போகுது....

விஷாலி தந்தையை ரகசியமாய் முறைத்தாள். இந்த அப்பாவுக்கு எதுல பெருமை அடிச்சுக்கறதுங்கறதுங்கற விவஸ்தையே இல்லை. ஏதோ கோடிக் கணக்கில் தர்மம் செய்துட்ட மாதிரி பெருமை என்ன வேண்டி இருக்கு?

தென்னரசு உடனடியாக நிறுத்திக் கொண்டார். அவள் அவரை முறைத்ததும் அவர் உடனடியாகத் தன் மகளைப் பற்றிப் பெருமை அடிப்பதை நிறுத்திக் கொண்டதும் ஈஸ்வருக்கு விஷாலி மேல் இருந்த மதிப்பை உடனடியாக உயர்த்தியது. அத்தை சொன்னது சரி தான் என்று தோன்றியது.

ஈஸ்வர் கேட்டான். “உங்க பெயிண்டிங்க்ஸ் பார்க்கலாமா?

தென்னரசு மகளை முந்திக் கொண்டு சொன்னார். “இங்கே ஹால்ல இருக்கற பெயிண்டிங்க்ஸ் எல்லாம் அவள் வரைஞ்சது தான். அவ ரூம்லயும் சிலது வச்சிருக்கா

ஈஸ்வர் எழுந்து ஹாலில் இருந்த அவளது ஓவியங்களை ஒவ்வொன்றாக பார்க்க ஆரம்பித்தான். நிஜமாகவே அவளுடைய ஓவியங்கள் பிரமாதமாகவும் உயிரோட்டத்துடனும் இருந்தன. ஒவ்வொரு ஓவியத்திலும் அவள் தெரிவிக்க நினைத்த விஷயங்கள் நளினமாகவும் அழகாகவும் சொல்லப்பட்டு இருந்தன. அவன் அதை நிதானமாக நின்று முழுமையாகப் பார்த்து தன் அபிப்பிராயங்களைச் சொல்லிப் பாராட்டிக் கொண்டே வந்தான்.

அவன் கருத்துக்கள் மேலோட்டமாய் இல்லாமல் ஆழமாய் ஓவியங்கள் பற்றிய நுணுக்கங்கள் அறிந்தவன் சொல்வது போலவே இருக்கவே அவள் ஆர்வத்துடன் கேட்டாள். “நீங்களும் வரைவீங்களா?

ஈஸ்வர் சொன்னான். “சேச்சே. நான் பார்த்து ரசிக்கறதோட சரி.  பாலாஜின்னு எனக்கு ஒரு நண்பன் இருக்கான். அவனுக்கு பெயிண்டிங்க்ஸ்னா உயிர். பெயிண்டிங்க்ஸ் வாங்க நிறைய செலவு செய்வான். நிறைய கலெக்‌ஷன் வச்சிருக்கான். அவன் ஒவ்வொரு பெயிண்டிங்கையும் காட்டி நிறைய சொல்வான். இத்தனை விஷயங்கள் இதுக்குள்ள இருக்கான்னு தோணும். அவன் கிட்ட இருந்து தெரிஞ்சுகிட்டது தான் எல்லாம். பிகாஸோ, லியார்னாடோ டாவின்சி, ரவிவர்மான்னு பெரிய பெரிய ஆளுங்களோட பெயிண்டிங்க்ஸ் பத்தி மணிக்கணக்கில் பேசுவான்....

விஷாலி ஈஸ்வர் சொல்வதை ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். அவள் ஈஸ்வருக்கு சற்று கூடுதல் நெருக்கத்துடன் நிற்பதாக மகேஷிற்குத் தோன்றியது. ஈஸ்வர் ஓவியங்களை இந்த அளவுக்கு ரசிப்பதும், இந்த அளவுக்குப் பேசுவதும் அவனுக்குப் பிடிக்கவில்லை. அவனுக்கு ஓவியங்களைப் பற்றி ஒன்றுமே தெரியா விட்டாலும் விஷாலிக்காக அதை ரசித்துப் பார்ப்பதாக அவன் நடிப்பதுண்டு. ஆனாலும் அதைப் பற்றிப் பேச அவனுக்கு எதுவும் எப்போதும் தெரிந்ததில்லை. ஈஸ்வர் நண்பன் சொன்னதாகச் சொல்லியே மகேஷ் தன் வாழ்நாளில் கேள்விப்படாத ஓவியர்கள் பற்றியெல்லாம் பேசினான்.

தென்னரசு மகளிடம் சொன்னார். “உன் ரூம்ல இருக்கற பெயிண்டிங்க்ஸையும் காட்டும்மா

விஷாலியும் ஈஸ்வரை அழைத்துப் போக மகேஷ் பொறாமைத் தீயில் பொசுங்கியே போனான்.  முதல் சந்திப்புலயே பெட்ரூம் வரைக்குமா!

அவள் அறையில் இருந்த ஒரு ஓவியம் ஈஸ்வரை மற்ற ஓவியங்கள் எல்லாவற்றையும் விட அதிகமாகக் கவர்ந்தது. தெருவோரப் பிச்சைக்காரியும் அவளுடைய சின்னக் குழந்தையும் மிகத் தத்ரூபமாக அந்த ஓவியத்தில் வரையப்பட்டு இருந்தார்கள்.  ஒடுங்கிப் போன அலுமினியத் தட்டை முன்னால் வைத்து கிழிந்த ஆடைகளுடன் அமர்ந்திருந்த அந்தப் பிச்சைக்காரியின் முகத்தில் சொல்லுக்கு அடங்காத சோகம் தெரிந்தது. பிச்சைக்காரியின் மூன்று வயதுக் குழந்தை ஏதோ ஒரு நைந்து போன பொம்மையுடன் ஆனந்தமாக விளையாடிக் கொண்டிருந்தது. அந்த ஓவியத்துக்கு விஷாலி இருவேறு உலகங்கள்என்று மிகப் பொருத்தமாகப் பெயர் வைத்திருந்தாள்.

ஈஸ்வர் நிறைய ரசித்து விட்டு மனதாரச் சொன்னான். “விஷாலி. மத்த எல்ல பெயிண்டிங்க்ஸைவ்யும் விட இது எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு. அற்புதமா வரைஞ்சிருக்கே. தலைப்பும் பிரமாதம். என் ஃப்ரண்ட் பாலாஜி பார்த்தா நீ என்ன ரேட் சொன்னாலும் தயங்காம வாங்கிட்டு போவான்

விஷாலி முகத்தில் தெரிந்த சந்தோஷம் பார்க்க மகேஷிற்கு சகிக்கவில்லை. ஈஸ்வர் முதல் சந்திப்பிலேயே அவளை ஒருமையில் அழைத்ததும் அவனுக்குப் பிடிக்கவில்லை. ரசிச்சது போதும் பெட்ரூமை விட்டு வெளியே வாடாஎன்று மனதினுள் கத்தினான். ஈஸ்வர் இருபது நிமிடங்கள் கழித்து தான் வெளியே வந்தான்.

வெளியே வந்ததும் மகேஷ் சொன்னான். “சரி ஈஸ்வர் போலாமா. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு

ஈஸ்வர் சொன்னான். “உனக்கு வேலை இருந்தால் போய்க்கோ மகேஷ். நான் டாக்ஸி பிடிச்சு வீட்டுக்குப் போயிக்கறேன். எனக்கு தென்னரசு அங்கிள் கிட்ட நிறைய பேச வேண்டி இருக்கு...

தென்னரசு சொன்னார். “அப்படின்னா சாப்பிட்டுட்டே போயேன், ஈஸ்வர்

மகேஷ் சொன்னான். “பாவம், விஷாலி சமையலை முடிச்சாச்சு போல இருக்கு

விஷாலி எச்சிலை விழுங்கினாள். மகேஷ் பேச்சைக் கேட்டு அவள் தங்கள் இருவருக்கு மட்டும் தான் சமைத்திருந்தாள்.

ஈஸ்வர் சொன்னான். “பரவாயில்லை. சாப்பாட்டுக்கு இன்னொரு நாள் வர்றேன். கொஞ்ச நேரம் பேசிட்டு போறேன். நீ போய்க்கோ மகேஷ்

‘இன்னொரு நாள் சாப்பாட்டுக்கு வர்றேன்என்று சொன்னது மகேஷ் வயிற்றில் புளியைக் கரைத்தது. போய்க்கோ என்று சொன்னதோ அடி வயிற்றில் ஓங்கிக் குத்தியது போல் இருந்தது. தயங்கி விட்டு ஈஸ்வருக்காக சம்மதிப்பது போல் சொன்னான்.  பரவாயில்லை ஈஸ்வர். நான் அப்புறமா போய் என் வேலையை செய்துக்கறேன்....

“அப்படின்னா ரெண்டு பேரும் சாப்பிட்டுட்டே போங்களேன். நான் ஒரு மணி நேரத்துல ரெடி பண்ணிடறேன்...விஷாலி சொன்னாள்.

இன்னொரு நாள் வரும் வேலை இல்லை என்ற திருப்தியில் மகேஷ் வேகமாக ஓகே சொன்னான். ஈஸ்வர் அப்படின்னா அத்தை கிட்ட சாப்பாட்டுக்கு வரலைன்னு சொல்லிடு மகேஷ். இல்லைன்னா நமக்காக காத்துகிட்டிருப்பாங்க பாவம்

மகேஷ் தலையசைத்தான். விஷாலி சமையலறைக்குப் போக  மகேஷ் பின் தொடர்ந்தான். ஈஸ்வர் தென்னரசுவிடம் அவருக்கும் அவன் தந்தைக்கும் இடையே இருந்த நட்பு பற்றி அவரிடம் கேட்க ஆரம்பித்தான்.

சமையலறையில் மகேஷ் விஷாலி சொன்னாள். ஏய் நீ சொன்ன அளவுக்கு தலைக்கனம் எல்லாம் உன் கசினுக்கு இல்லைம்மா. நல்லா தான் பழகறார்...

அவன் இவன் என்று சற்று முன்பு வரை சொன்னவள் இப்போது அவருக்கு மாறியதும், ஈஸ்வர் அவளை ஒருமையிலேயே அழைத்துப் பேசியதும், அவர்கள் பேசிக் கொண்டிருந்த போதெல்லாம் அவர்கள் மற்றவர்களை மறந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட விதமும் மகேஷை “ஏய் என்னங்கடி நடக்குது இங்கேஎன்று மனதினுள் பொரும வைத்தது. இப்போது தலைக்கனம் இல்லை என்று நற்சான்றுப் பத்திரம் வேறு தருகிறாளே என்று நினைத்தவனாய் சொன்னான். “நீ அவன் எங்க தாத்தா கிட்ட நடந்துக்கற விதத்தை பார்த்தால் இப்படி சொல்ல மாட்டே

ஓ... நீ அவர் கிட்ட இவர் நடந்துக்கற விதத்தை வெச்சு தான் சொன்னியா. அது அவர் இவரோட அப்பா கிட்ட நடந்துகிட்ட விதம் காரணமா இருக்கலாம். நீ என்னவோ சொல்லு மகேஷ். உன் தாத்தா இவரோட அப்பாவை அந்த அளவுக்கு வெறுத்தது நியாயம்னு எனக்கும் படலை

மகேஷ் இவர்கள் ஈர்ப்பை தகுந்த சமயத்தில் புத்திசாலித்தனமாய் தான் வெட்டி விட வேண்டும் என்று முடிவு செய்தான். இப்போது இவளோடு ஒத்துப் போய் பிற்பாடு சாமர்த்தியமாகத் தான் சாதிக்க வேண்டும் என்று நினைத்தவனாக சொன்னான். “நீ சொல்றதும் சரி தான் விஷாலி. என் அப்பா கிட்ட தாத்தா அப்படி நடந்துகிட்டா நானும் கூடத் தான் கோபமாய் நடந்துகிட்டு இருப்பேன்...

உண்மையில் அவன் அப்பாவிடம் அவன் தாத்தா அப்படி நடந்திருந்தால் அவருக்கு இரண்டு மடங்கு அப்பாவைத் தூற்றி தூரத்தில் வைத்திருப்பான் அவன். பணம் சொத்து இந்த இரண்டும் உள்ள தாத்தாவை அவன் எக்காலத்திலும் பகைத்துக் கொள்ள மாட்டான் என்றாலும் அதெல்லாம் விஷாலிக்குத் தெரிய வேண்டிய அவசியம் இல்லை என்று நினைத்தான்.

விஷாலி அவனிடம் எதோ பேசிக் கொண்டே சமைக்க அவளுக்கு சின்ன சின்ன உதவிகள் செய்து கொண்டு மகேஷ் அங்கேயே இருந்தான். அவள் அதிகம் ஈஸ்வர் பற்றியே கேள்விகள் கேட்டாள். ஈஸ்வர் பற்றி பேசிய போதெல்லாம் முகத்தில் தெரிந்த பிரகாசம் மகேஷை கண்டதுண்டமாக வெட்டிப் போட்டது. அவன் பிறகு பேசிய போது ஈஸ்வரைப் பற்றி எந்தக் குறையும் சொல்லவில்லை. அவன் அவர்களுக்குள் நிரந்தரமாக வெறுப்பு வர என்னவெல்லாம் செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தான்.

விஷாலி சமையலை முடித்து விட்டு வெளியே வந்த போது தென்னரசு ஈஸ்வரிடம் சொல்லிக் கொண்டு இருந்தார். “நான் உன் அப்பா மாதிரி ஈகோ இல்லாத ஒரு ஆளை இது வரைக்கும் பார்த்த்தில்லைன்னு சொல்லலாம் ஈஸ்வர். அவனுக்குப் பெருமையா சொல்லிக்க எத்தனையோ விஷயங்கள் இருந்துச்சு. வேண்டிய அளவு பணம் இருந்துச்சு. படிப்புல அவன் அளவுக்கு சாதிச்சவங்க எங்க ஃப்ரண்ட்ஸ் சர்க்கில்ல யாருமே இல்லை. ஏன் அவன் சாதிச்சதுல கால் வாசி சாதிச்சவன் கூட இல்லைன்னே சொல்லலாம். ஆனா அவன் ஒரு தடவை கூட பெருமையா சொல்லிகிட்டதில்லை. பிற்காலத்துல அவன் பெருமையா சொல்லிகிட்டதுன்னு சொன்னா ஒன்னே ஒன்னு சொல்லலாம்....

ஈஸ்வர் ஆச்சரியத்துடன் கேட்டார். “எதைச் சொன்னார்?

“உன்னைப் பத்தி பேசறப்ப மட்டும் தான் அவனையும் அறியாமல் அவன் பேச்சுல ஒரு பெருமிதம் தெரியும்.....

ஒரு கணத்தில் கண்கள் நிறைந்து தடுமாறிய ஈஸ்வர் மறு கணம் தன்னை சுதாரித்துக் கொண்டு மெல்ல பேச்சை மாற்றினான். அந்த ஒரு கணம் விஷாலியின் மனதில் சாசுவதமாகத் தங்கி விட்டது. அவன் தந்தைக்கும் அவனுக்கும் இடையே இருந்த அந்த பாசத்தின் ஆழம் அவள் மனதை இளக வைத்தது. அந்தக் கணம் அவன் தனித்தன்மையை கோடிட்டுக் காட்டியதாக அவள்  நினைத்தாள். எதையும் மிக ஆழமாய் உணர முடிந்த நுண்ணிய உணர்வுகள் மிக்க மனிதன் அவன் என்பதும் ஆனால் எப்போதும் எல்லா உணர்வுகளையும் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள முடிந்த மனிதன் என்பதும் தெளிவாக அவளுக்குத் தெரிந்தது. எத்தனை வேகமாக தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்கிறான் என்று மனதிற்குள் அவள் வியந்தாள். அவள் ஈஸ்வரைப் பார்த்த பார்வையைப் பார்க்க சகிக்காமல் மகேஷ் கண்களை மூடிக் கொண்டான்.

சாப்பிடும் போது ஈஸ்வர் விஷாலியை நிறைய கேள்விகள் கேட்டான். அவளுடைய பொழுது போக்குகள், ஃபேஷன் டிசைன் நுணுக்கங்கள், அவள் படிக்கும் புத்தகங்கள் என்று கேட்டுத் தெரிந்து கொண்டான். அவள் சொல்லாத ஒரு விஷயத்தை தென்னரசு சொன்னார். மாசம் ஒரு தடவையாவது இவ  முதியோர் இல்லம், அனாதை இல்லம், பைத்தியக்கார ஆஸ்பத்திரின்னு போயிடுவா. ஒரு நாள் முழுசும் அவங்களோட இருந்துட்டு வருவா. இவளால முடிஞ்ச சர்வீஸ் செய்துட்டு வருவா... ஒரு பெயிண்டிங் வித்த காசு கிடைச்சா கண்டிப்பா இந்த மூணு இடத்துல ஒரு இடத்துக்குப் போய் காசையும் தந்துட்டு வருவா....

ஈஸ்வர் அவளைப் பார்த்த பார்வையில் மதிப்பும், வியப்பும் இருந்தன. விஷாலி உனக்கு நாளைக்கு நேரம் கிடைச்சா என்னை இதுல ஏதாவது இடத்துக்குக் கூட்டிகிட்டுப் போறியா? நேரமில்லைன்னா பரவாயில்லை. அட்ரஸ் சொன்னா நானே போய்க்குவேன்...

“இல்லை நாளைக்கு நான் ஃப்ரீ தான்   

நரகம் என்ற நான்கெழுத்துக்கு அர்த்தம் அடுத்த இரண்டு மணி நேரங்களில் முழுவதுமாக மகேஷ் அனுபவித்து உணர்ந்தான். நாளை போகிற இடத்துக்கு இருவருமே அவனை அழைக்கவில்லை.... அவர்கள் சேர்ந்தே தனியாகப் போகப் போகிறார்கள்.... அவன் உள்ளுக்குள் மேலும் வெந்து பொசுங்கினான்.


ஈஸ்வரும் விஷாலியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பார்வையில் ஒருவித உஷ்ணம் தெரிந்ததாக அவனுக்குத் தோன்றியது. சிறிய வயதில் இருந்தே பழகியும் விஷாலியிடம் அவனால் ஏற்படுத்த முடியாத ஒரு ஈர்ப்பை சில மணி நேரங்களிலேயே ஈஸ்வர் ஏற்படுத்தியது மனதை ரணமாக்கியது. அவளது ஈர்ப்புக்குக் காரணம் ஈஸ்வரின் அழகு அல்ல என்பதை மகேஷ் அறிவான். ஏனென்றால் ஈஸ்வரை விட அழகான ஒரு இளைஞன் கல்லூரியில் விஷாலி பின்னாலேயே சில காலம் சுற்றியும் அவள் அவனைக் கண்டு கொள்ளவில்லை. அந்த இளைஞன் மாடலாகி பிரபலமாகி இப்போது சினிமாவில் கூட நடித்துக் கொண்டிருக்கிறான். அவளைக் கவர வேறு ஏதோ தேவைப்பட்டது. அது ஈஸ்வரிடம் இருந்தது போலிருக்கிறது. ஈர்ப்பிலிருந்தும் மேலே செல்ல நிறைய உயர்ந்த குணங்கள் தேவைப்பட்டன. துரதிர்ஷ்டவசமாய் ஈஸ்வரிடம் அதெல்லாம் இயல்பாகவே இருந்தன... இவர்களுக்குள் விரிசலை ஏற்படுத்த வேண்டுமானால் அந்த உயர்ந்த குணம் எல்லாம் நடிப்பு என்று அவளை நம்ப வைக்க வேண்டும். ஏனென்றால் அவள் எல்லாவற்றையும் விட அதிகமாக தனிமனித நாணயத்தையும், ஒழுக்கத்தையும் முக்கியமாக நினைப்பவள்..... மகேஷ் தீவிரமாக சிந்திக்க ஆரம்பித்தான்...

ந்தக் கோயில் என்று கண்டுபிடித்தது பார்த்தசாரதியின் கீழ் வேலை பார்க்கும் ஒரு போலீஸ்காரர் தான். அவர் ஆன்மிக ஈடுபாடு அதிகம் உடையவர். பக்தி சிரத்தையுடன் கோயில் கோயிலாகப் போபவர். “சீர்காழி சார். நான் அங்கே மூணு தடவை போயிருக்கேன். அந்தக் குளத்துக்குப் பேர் பிரம்மதீர்த்தம். அந்த பிரம்மதீர்த்தக்கரையில் தான் திருஞானசம்பந்தருக்கு பார்வதி ஞானப்பால் கொடுத்தது..... அந்தக் கோயில்ல தான் திருஞானசம்பந்தர் தோடுடைய செவியன்பாடினார்.....

அந்தக் கதையைக் கேட்கும் மனநிலையில் பார்த்தசாரதி இல்லை. அந்த நபர் பேசப் பேச சீர்காழி போலீஸ் ஸ்டேஷனுக்குப் போன் செய்தார். கிழவி சொன்ன அடையாளங்களுடன் ஏதாவது ஒரு இளைஞன் இருக்கிறானா என்று பார்த்து வரச் சொன்னார். இருந்தால் அவனைப் பிடித்து வைக்கும் படியும் அவர் உடனேயே கிளம்பி வருவதாகவும் சொன்னார். ஆனால் உண்மையில் ஈஸ்வர் நம்பினாலும் அந்தக் கிழவி சொன்னதில் அவருக்குப் பெரிதாய் நம்பிக்கை இருக்கவில்லை.

அவர் போன் செய்து அரை மணி நேரத்தில் போலீஸார் சீர்காழி கோயிலில் இருந்தனர். அங்கிருந்தவர்களை விசாரித்த போது சொன்னார்கள்.

“ஆமா சார்.... பத்து நாளா ஒரு இள வயசுப்பையன் இங்கே தான் இருந்தான். நாங்க ஆரம்பத்துல அவனைப் பைத்தியம்னு நினைச்சோம்... ஆனா அவன் பைத்தியம் இல்லை சார். சுலோகங்கள் எல்லாம் நல்லா சொல்றான்... பக்தியில முத்தின ஒரு டைப் போல தான் தெரிஞ்சுது. மந்திரங்கள் சொல்லிகிட்டே இருப்பான்.... குளத்துல திடீர்னு குளிப்பான்.... சிவனைப் போய் கும்பிடுவான்.... பழையபடி குளத்துப் படிக்கட்டுல வந்து உக்காந்துக்குவான்....

“ஆமாங்க... நீங்க சொன்ன மாதிரி பையன் இங்கே கொஞ்ச நாளா இருந்தான். எங்கேயோ பயந்து போன மாதிரி இருக்கு....அடிக்கடி நடுங்குவான்... கேட்டா எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல மாட்டான். நம்மளையே வெறிச்சுப் பார்ப்பான்... யார் பெத்த புள்ளையோ, எதைப் பார்த்து பயந்தானோ... யார் கிட்டயும் எதுவும் கேட்க மாட்டான். கொடுத்தா கொஞ்சம் சாப்பிடுவான்... கோயில் சாத்தறப்ப வெளியே வாசல்லயே தங்கி இருப்பான். கோயில் திறந்தவுடனே உள்ளே வந்துடுவான். கோயில் குளத்துப்படியிலே உக்காந்திருந்தான்....

ஐயா என்னடா இப்படி சொல்றாளேன்னு தப்பா நினைக்காதீங்க. நான் இங்கேயே பூ விக்கறவ தான். படிக்காதவ தான். ஆனா ஆளுக எப்படின்னு நான் கரிக்டா கண்டுபிடிச்சுடுவேன். அந்த பையன் வேற யாரும் இல்ல. திருஞானசம்பந்தரே தான்... இல்லாட்டி எதுக்கு வந்து அந்தப்படிக்கட்டுலயே உட்காந்திருக்கணும்... ஒரு நாள் ரெண்டு நாள் இல்ல. பத்து நாளா வந்து நல்லா பக்தியில உட்கார்ந்தப்பவே நான் புரிஞ்சுகிட்டேன்... தினம் சாமி கும்பிட்டுட்டு வர்றப்ப அவரையும் கும்பிட்டு தான் வருவேன்....

“இந்த பொம்பிள அந்தப் பையனைக் கும்பிட ஆரம்பிச்சவுடனே கோயிலுக்கு வர்ற பல பேரும் அவனைக் கும்பிட ஆரம்பிச்சுட்டாங்க.... அந்தப் பையன் என்னடான்னா ஆளுகளைப் பார்த்தாலே நடுங்கறான். இவங்க என்னடான்னா அதைப் பார்த்துட்டு அருள் வந்துட்டதா சொல்லி அக்கப்போர் பண்ணிட்டாங்க. நல்ல வேளையா ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி தான் அந்தப் பையனை கூட்டிகிட்டு போயிட்டாங்க. இல்லாட்டி இந்தப்படிக்கட்டுலயே அவனுக்கு தனியா பூஜையும் ஆரம்பிச்சிருப்பாங்க....

“அந்தப் பையனைக் கூட்டிகிட்டு போனது யாருன்னா கேட்கிறீங்க. மூணு பேர் வந்தாங்க. அதுல ஒருத்தன் அவன் அண்ணனாம்...இன்னொருத்தன் ப்ரண்டாம்... இன்னொருத்தன் மாமனாம்.. வைட் இண்டிகா கார்ல வந்தாங்க. கார் நம்பர கவனிக்கல.... அவசர அவசரமா அவனைக் கூட்டிகிட்டு போனாங்க... இந்த பூக்காரி தான் மெனக்கெட்டு போய் அட்ரஸ் கேட்டிருக்கா. அவங்களும் கொடுத்தாங்க போல இருக்கு. இன்னும் இவ அந்த விலாசத்துக்கு அடிக்கடி போய் அவன் தான் ஞான சம்பந்தம்னு சொல்லி ரவுசு பண்ணாம இருந்தா சரி...

போலீஸார் பூக்காரியிடம் போய் அந்த நபர்கள் தந்து விட்டுப் போன விலாசம் வாங்கினார்கள். அது கும்பகோணத்து விலாசமாக இருந்தது.  அது பொய்யான விலாசம் என்று சிறிது நேரத்தில் தெரிந்து விட்டது.

எல்லா விவரங்களும் பார்த்தசாரதிக்கு சில மணி நேரங்களில் விரிவாகத் தெரிவிக்கப் பட்டது. பார்த்தசாரதி திகைத்துப் போனார். கிழவி சொன்னது கற்பனை அல்ல என்பதையும், போலீஸார் போவதற்கு ஒரு மணி நேரம் முன்பு அந்த இளைஞனை சிலர் வந்து அவசர அவசரமாக அழைத்துப் போனதையும் உடனடியாக ஜீரணிக்க அவரால் முடியவில்லை.

இந்த வழக்கில் அறிவுக்கு எட்டாத பலதும் சர்வ சகஜமாக நடப்பது அவருக்கு தலைசுற்ற வைத்தது.

(தொடரும்)

No comments:

Post a Comment