Tuesday, May 27, 2014

பரம(ன்) ரகசியம்-11



 பரமேஸ்வரன் மகளிடம் கேட்டார். ”அவன் சார்னு சொன்னது என்னைத்தானே?”

“....இல்லை.... உங்க மருமகனைத் தான்... அப்படி சொன்னான்”

மீனாட்சிக்கு பொய் இயல்பாக வராது. மகளைக் கண்ணாடி போல படிக்க முடிந்த பரமேஸ்வரனுக்கு ஈஸ்வர் அவரைத் தான் சார் என்று சொல்லி இருக்கிறான் என்பதில் சந்தேகமே இல்லை. நேற்று பிறந்த சுண்டக்காய் என்ன திமிராய் பேசுகிறான் என்று நினைத்தவராக அடுத்ததாக கோபத்திற்கான காரணத்தை மகளிடம் கண்டுபிடித்தார்.

“இந்த வீடு அவனோட கொள்ளுத் தாத்தா கட்டினது, அவனுக்கு அதில உரிமை இருக்குன்னு சொல்ல வேண்டிய அவசியம் உனக்கு என்ன இருக்கு?”

மீனாட்சி தானும் பொய்யாய் கோபப்பட்டாள். “ஆமா சொன்னேன். அது உண்மை தானே. உங்க கிட்ட அவனும் என்னமோ கோபமா இருக்கான். அதனால இங்கே வந்து தங்க யோசிக்கிறான். நீங்க தானே அவனுக்கு போன் செஞ்சு பேசி பெரியப்பா சொன்னதைச் சொன்னீங்க. அதக் கேட்டுகிட்டு அவன் உங்களுக்காக இங்கே வந்து ஓட்டல்ல தங்கணுமா? நல்லா இருக்கே நியாயம்.”

“தாத்தாவை தாத்தான்னு கூப்பிடாம அவன் சார்னு கூப்பிடறான். நானே அவனுக்குத் தாத்தா இல்லைன்னா எங்கப்பா எப்படி அவனுக்குக் கொள்ளுத்தாத்தா ஆவார்?”

“அவனோட அப்பா   உங்களுக்கு மகன் இல்லைன்னு நீங்க சொன்னதை வசதியா மறந்துடுங்க”

பரமேஸ்வரன் மகளை முறைத்தார். இந்த நேரமாகப் பார்த்து ஆனந்தவல்லி அறைக்குள் நுழைந்தாள்.

“எப்பப் பாரு அப்பனும், மகளும் கொஞ்சிக்குவீங்க, இன்னைக்கென்ன அதிசயமா ரெண்டு பேருக்குள்ளே சண்டை?”. அவளுக்கு எப்போதுமே பரமேஸ்வரன் தன் குழந்தைகளைத் தலைக்கு மேல் வைத்துக் கொண்டாடுவது பிடித்ததில்லை. எதிலும் ஒரு அளவு வேண்டும் என்று நினைப்பவள் அவள்.

”இவளோட அண்ணன் மகன் இந்தியா வர்றானாம். அவனை இங்கேயே வந்து தங்கு, இது உன் கொள்ளுத் தாத்தா கட்டினது, உனக்கு உரிமை இருக்குன்னு சொல்லித் தர்றா இவ”

மீனாட்சி சொன்னாள். “அவன் இவர் சொல்லி வர்றான். அவன் இங்கே வந்து தங்கறதுல என்ன தப்பு”

“அவனாவே இங்கே வந்திருந்தா தப்பே இல்லை. அவன் லார்டு கவர்னராட்டம் ஓட்டல்ல தங்கறேன்னு சொல்லி, நீ வேண்டாம் உன் கொள்ளுத்தாத்தா வீடு இது, உங்க தாத்தாவுக்கும் இந்த வீட்டுக்கும் எந்த சம்பந்தமுமே இல்லைங்கற மாதிரி சொல்லி அவனை இங்க வர சம்மதிக்க வச்ச பாரு அது தான் தப்பு”

ஆனந்தவல்லி சொன்னாள். “அந்தப் பையன் திமிர் பிடிச்ச பையன்கிற மாதிரி தான் பேச்சுல தெரியுது.... அன்னைக்கும் அவன் உன் அப்பன் கிட்ட அப்படி தான் பேசினான்”

மீனாட்சி அடுத்த அஸ்திரத்தை விட்டாள். “அவன் இங்கே தங்காமல் ஓட்டல்ல தங்கினா நமக்குத் தான் அவமானம். அவன் பார்க்க வேற எங்க தாத்தா மாதிரியே இருக்கான்... இருங்க என்னோட லாப்டாப்புல அவனோட ஃபோட்டோ இருக்கு. கொண்டு வந்து காண்பிக்கிறேன்.”

பார்க்க தன் கணவன் மாதிரி இருப்பதாகக் கேட்டவுடன் ஆனந்தவல்லிக்கு ஒரு புதிய ஆர்வம் பிறந்தது. அவள் பேத்தியிடம் சொன்னாள். “பார்க்க மட்டும் தான் அப்படி போல இருக்கு. உங்க தாத்தாவுக்கு எப்பவுமே திமிரு இருந்ததில்லை....”

“அது ஓவ்வொண்ணு ஒவ்வொருத்தர் கிட்ட இருந்து வரும்...” என்று சொல்லி விட்டு மீனாட்சி லாப்டாப் எடுத்து வர நகர்ந்தாள்.

அவள் போன பிறகு ஆனந்தவல்லி மகனிடம் கேட்டாள். “அப்படின்னா திமிரு யார் கிட்ட இருந்து அவனுக்கு வந்திருக்குன்னு உன் மகள் சொல்றா. என்னைச் சொல்றாளா, உன்னைச் சொல்றாளா?”

பரமேஸ்வரன் லேசாய் புன்னகைத்தார். அவருக்கு ஈஸ்வர் மேல் கோபம் இருந்த போதும் அதையும் மீறி அவன் இந்தியா வருவதில் ஒருவித திருப்தி இருந்தது. அவர் பேசினதுக்கு ஏதோ ஒரு மரியாதை இருக்கிறது. ஆனால் அவர் மீது இருக்கும் கோபத்தை ஒவ்வொரு முறையும் அவன் சுட்டிக்காண்பிக்காமல் இல்லை. இந்த வீடு கூட அவருடையதாய் இருந்திருந்தால் அவன் வந்து தங்கியிருக்க மாட்டான் என்பது உறுத்தலாக இருந்தது. அதை நினைக்கையில் அவர் புன்னகை வந்த வேகத்தில் மறைந்தது.

மீனாட்சி லாப்டாப்புடன் வந்தாள். ஈஸ்வரின் படம் ஒன்றை அதில் அவர்களுக்குக் காண்பித்தாள். பரமேஸ்வரன் பேச்சிழந்து போனார். அவருடைய தந்தையின் மறு அச்சாக அவர் பேரன் இருந்தான். பசுபதி சொன்னது நினைவுக்கு வந்தது. “இருக்கிற மண் எதுவானாலும் விதை நம் வம்சத்தோடதுடா.” தோற்றம் முதற்கொண்டு அவர் சொன்னதை நிரூபித்தது.

கண்களை சுருக்கிக் கொண்டு பார்த்த ஆனந்தவல்லியும் ஆச்சரியப்பட்டு தான் போனாள். “என் ரூம்ல டேபிள் மேல என்னோட கண்ணாடி இருக்கும் கொஞ்சம் கொண்டு வாடி”

மீனாட்சி பாட்டிக்கு மூக்குக் கண்ணாடி கொண்டு வந்து தந்தாள். ஆனந்தவல்லி கண்ணாடியைப் போட்டுக் கொண்டு தன் கொள்ளுப்பேரனை ஆராய்ந்தாள். எப்போதுமே கடுகடுவென்றோ, இறுக்கமாகவோ இருக்கும் அவள் முகத்தில் அபூர்வமாக ஒரு மென்மை படர்ந்ததை மீனாட்சி கவனித்தாள்.

“ஏண்டி இது ஒன்னு தான் இருக்கா, வேறயும் இருக்கா?”

“நிறைய இருக்கு பாட்டி. சிலதுல அண்ணாவும் அண்ணியும் கூட இருக்காங்க.. சிலது தனியா இருக்கு”

மீனாட்சி வேண்டுமென்றே அவளுடைய அண்ணன், அண்ணியுடன் ஈஸ்வர் இருந்த படங்களை ஆரம்பத்தில் அவர்களுக்குக் காண்பித்தாள். பரமேஸ்வரன் தன் மகனின் புகைப்படங்களைக் கூட அவன் இங்கிருந்து போன பிறகு பார்த்ததில்லை. அவர் மகன் அந்தப் படங்களில் அவரையே பார்த்தான். அவருடைய ஒரே மகன், அவருடைய உயிருக்கு உயிராய் இருந்தவன், புன்னகையைத் தவிர முகத்தில் எந்த கடுமையான உணர்ச்சிகளையும் காட்டாதவன் இப்போதும் அதே புன்னகையுடன் அவரைப் பார்த்தான்.... அவருக்கு இரண்டு புகைப்படங்களுக்கு மேல் மகனுடைய புகைப்படங்களைப் பார்க்க முடியவில்லை.

“எனக்கு முக்கியமாய் ஒரு போன் கால் செய்ய வேண்டி இருக்கு. மறந்தே போய்ட்டேன்...” என்று அவர் எழுந்து சொன்ன போது அவர் குரல் கரகரத்தது. அவர் ஜன்னலோரத்திற்கு நகர்ந்து பெரிய அவசரமில்லாத ஒரு விஷயத்துக்கு யாரையோ கூப்பிட்டு பேச ஆரம்பித்தார்.

ஆனந்தவல்லிக்குத் தன் பேரனைப் பார்த்து அப்படி எந்த உணர்ச்சியும் பெரிதாக ஏற்பட்டு விடவில்லை. ஆனால் ஒவ்வொரு புகைப்படத்திலும் அவளுடைய கணவனின் மறு அச்சு போல் இருந்த கொள்ளுப்பேரன் ஈஸ்வரை மட்டும் உன்னிப்பாகப் பார்த்தாள். அவள் பார்த்து முடித்து மீனாட்சி லாப்டாப்பை மூடிய போது பரமேஸ்வரனும் தன் பேச்சை முடித்திருந்தார்.

”அந்தப் பையன் பேர் என்ன?” ஆனந்தவல்லி கேட்டாள். அவள் குரலிலும் என்றுமில்லாத மென்மையும் ஆர்வமும் தெரிந்தது.

“ஈஸ்வர்” மீனாட்சி சொன்னாள்.

மகனைப் பார்த்து ஆனந்தவல்லி சொன்னாள். ”ஓ.. உன் பேர் தான் அவனுக்கு உன் மகன் வச்சிருக்கானோ”.

பரமேஸ்வரன் ஒன்றுமே சொல்லவில்லை.

“எப்ப வர்றானாம்?” ஆனந்தவல்லி பேத்தியைக் கேட்டாள்.

“வர்ற புதன்கிழமை” மீனாட்சி சொன்னாள்.

“ஏன், அதுக்கு முன்னாடி எந்த ஃபிளைட்லயும் டிக்கெட் கிடைக்கலையோ?”


குருஜியின் வீட்டு ஹாலில் அவருடைய தரிசனத்திற்காகக் காத்திருந்தவர்கள் பதினெட்டு பேர். அவர்களில் இரண்டு தொழிலதிபர்கள், ஒரு சினிமா டைரக்டர், ஒரு விஞ்ஞானி, ஒரு பிரபல கதாகாலட்சேபக்காரர்,  ஒரு எம்.எல்.ஏயும் அடக்கம். அவர்களுடன் சேர்ந்து காத்துக் கொண்டு இருந்த கணபதிக்கு வயது 21 என்றாலும் உயரம் ஐந்தடி கூட இல்லை. குடுமி வைத்துக் கொண்டிருந்தான். பழைய வேட்டியைக் கச்சை கட்டிக் கொண்டிருந்த அவன் மேல் உடம்பில் ஒரு அழுக்குத் துண்டு மட்டும் இருந்தது. அவனை அவர் வரச் சொன்னதாக குருஜியின் வேலையாட்களில் ஒருவன் காலையில் தான் வந்து சொல்லி விட்டுப் போனான். பக்கத்து கிராமத்தில் ஒரு சிறிய வினாயகர் கோயிலில் பூஜை செய்யும் அர்ச்சகராக இருந்த அவனுக்கு குருஜி மேல் மிகுந்த பக்தியும், மரியாதையும் உண்டு. அத்தனை பெரிய மனிதர் அவனை ஒரு பொருட்டாக நினைத்தது மட்டுமல்லாமல் அன்பாகவும், மரியாதையாகவும் கூடப் பழகுவார்.

சென்ற வருடம் ஒரு பொது நிகழ்ச்சியில் தான் அவரை அவன் முதல் முதலாக சந்தித்தான். கூட்டத்தோடு கூட்டமாக நின்றிருந்த அவனை மேடையில் உட்கார்ந்திருந்த அவர் சிறிது நேரம் கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு நிகழ்ச்சி முடிந்தவுடன் தன்னை வந்து பார்க்கும்படி ஒருவரிடம் சொல்லி அனுப்பினார். கணபதிக்கு ஒரு கணம் ஒன்றுமே புரியவில்லை. நடிகர்கள், அரசியல்வாதிகள், பெரும் பணக்காரர்கள் போன்றவர்கள் எல்லாம் அவர் தரிசனத்திற்காகக் காத்துக் கிடக்கிறார்கள் என்று பத்திரிக்கைகளில் பல முறை படித்திருக்கிறான். அப்படிப்பட்டவர் அவனைப் போன்றவனை அழைத்துப் பேச முன்வந்தது ஆச்சரியமாக இருந்தது. நிகழ்ச்சி முடிந்ததும் அந்த ஹாலில் ஒரு அறையில் அவரைச் சந்தித்தான். அவனைப் பற்றி அவர் விசாரித்தார். ஏன் அவனை மட்டும் தேர்ந்தெடுத்து விசாரித்தார் என்பது கணபதிக்கு இன்று வரை விளங்கவில்லை. ஆள் மாறி அழைத்து விட்டார் என்று தான் ஆரம்பத்தில் நினைத்தான்.

ஒரு ஏழை பிராமண அர்ச்சகர் குடும்பத்தவனான அவனுக்குத் தன்னைப் பற்றி சொல்ல பெரிதாக ஒன்றும் இருக்கவில்லை. திருமணமாகாத இரண்டு அக்காள்கள், ஒரு விதவைத் தாய், ஒரு கிராமத்து சிறிய பிள்ளையார் கோயிலில் மிக சொற்ப வருமானம் தரும் அர்ச்சகர் வேலை இது மட்டுமே தான் அவனுக்கு சொல்ல இருந்த தகவல்கள். இத்தனையும் சொல்லி விட்ட பிறகு நான் வேறொரு ஆள் என்று நினைத்து உன்னை அழைத்து விட்டேன் என்று சொல்லி அவர் அனுப்பி விடுவார் என்று தான் அவன் நினைத்தான். ஆனால் அவர் அப்படி அனுப்பி விடவில்லை. அவனைப் பற்றி ஒரு புத்தகமே எழுதப் போகிறவர் போல அவனைப் பற்றி சர்வமும் விசாரித்தார். அவன் படித்த வேதபாடங்கள் பற்றி, அவன் சொல்லும் மந்திரங்கள் பற்றி, அவன் பூஜிக்கும் வினாயகர் பற்றி, பல விஷயங்களைச் சொல்லி அதைப் பற்றி என்னவெல்லாம் அவன் நினைக்கிறான் என்பது பற்றி எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டார். அறிவிலும் அவன் அவருக்கு சமமானவன் அல்ல, அந்தஸ்திலும் அவன் அவருக்கு சமமானவன் அல்ல, பெயர் புகழிலும் அவனிற்கு எத்தனை ஏணி வைத்தாலும் எட்டாத உயரத்தில் இருப்பவர் அவர். அப்படிப்பட்டவர் மிக அன்போடு அவனை அழைத்துப் பேசியதும், அவனைப் பற்றிக் கேட்டதும் அவனுக்குக் கண்களில் நீரை வரவழைத்து விட்டது.

கடைசியில் அவன் கேட்டான். “ஐயா, என்னை மாதிரி ஒரு சாதாரணமானவனை எதுக்கு இவ்வளவு அன்பா விசாரிக்கறீங்கன்னு தெரியலையே?”

அவன் கேள்விக்கு அவர் உடனடியாகப் பதில் சொல்லவில்லை. பிறகு புன்னகையுடன் சொன்னார். “எனக்கு நீ சாதாரணமானவன்னு தோணலை. அது தான்....”

கணபதிக்கு ஒன்றும் புரியவில்லை. அதற்குப் பிறகு அவர் தரிசனத்திற்கு ஆறு மாதங்களுக்கு முன் ஒரு முறை வந்தான். ஆனால் அன்று அவரை சந்தித்துப் பேச முடியவில்லை. நிறைய கூட்டம் இருந்தது. நான்கு பேரை மட்டும் கூப்பிட்டு பேசிய அவர் அத்துடன் நிறுத்திக் கொள்ள மற்றவர்கள் எல்லாம் ஏமாற்றத்தோடு திரும்பிப் போக வேண்டி வந்தது.

இன்று அவராகவே கூப்பிட்டு அனுப்பியது அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. முதலில் எம்.எல்.ஏவை அழைத்து ஐந்தே நிமிடங்களில் பேசி அனுப்பி விட்ட குருஜி இரண்டாவதாக அவனைத் தான் அழைத்தார். அத்தனை பிரபலங்கள் காத்திருக்கையில் குருஜி தன்னைக் கூப்பிட்டனுப்பியது அவனுக்குப் பெருமையாக இருந்தது.

சென்று அவரைப் பயபக்தியுடன் தரையில் விழுந்து வணங்கினான். மிக நெருங்கிய நண்பனை விசாரிப்பது போல அவர் அவனைத் தட்டிக் கொடுத்து விசாரித்தார். “எப்படி இருக்கே கணபதி?”

”ஏதோ இருக்கேன் குருஜி.”

“உன்னோட பிள்ளையார் எப்படி இருக்கார்?.” குருஜி புன்னகையுடன் கேட்டார்.

”அவரும் போரடிச்சுப் போய் உட்கார்ந்திருக்கார்” என்று சொல்லி விட்டு களங்கமில்லாமல் கலகலவென்று சிரித்தான் கணபதி. “என்னை மாதிரியே அவரையும் அதிகமா யாரும் கண்டுக்கறதில்லை குருஜி. எங்கெங்கேயோ தூரமா எல்லாம் போய் பெரிய கோயில்கள்ல சாமி கும்பிடற மனுஷங்க பக்கத்துல இருக்கிற சின்னக் கோயிலுக்கு வர யோசிக்கிறாங்க. வழக்கமா வர்ற நாலஞ்சு பேர் தான் தினம் வர்றாங்க. அவரைப் பார்க்க கூட்டம் வரணும்னா பிள்ளையார் சதுர்த்தி வரணும்.”

குருஜி புன்னகையுடன் சொன்னார். “சாமியே கூட பெரிய கோயில்ல இருந்தால் தான் மரியாதை. இல்லையா?”

“அப்படித்தான் உலகம் இருக்குது குருஜி”

சிறிது நேரம் அவன் குடும்பத்தைப் பற்றி விசாரித்த அவர் பிறகு விஷயத்துக்கு வந்தார். “கணபதி. சில நாள் உன் பிள்ளையாருக்குப் பூஜை செய்ய வேற ஆளை ஏற்பாடு செய்து விட்டு வேற ஒரு இடத்துக்குப் பூஜை செய்யப் போக முடியுமா?”

கணபதி யோசனையுடன் சொன்னான். “என் ஒன்னு விட்ட தம்பி சுப்புணி வேலை இல்லாமல் சும்மா தான் இருக்கான். ஆனா அவனை பிள்ளையாருக்கு பூஜை செய்ய கூப்பிட்டா தினமும் எழுபது ரூபாய் கேட்கிறான்... போன வாரம் என் தாய் மாமன் மகன் கல்யாணத்துக்கு நான் போக வேண்டி இருந்தது. வேற வழியில்லாம தந்தேன்....”

“அது ஒரு பிரச்சினை இல்லை. அவனுக்கு தினமும் எழுபது தரவும், உனக்கு தினமும் பூஜை செய்ய ஐநூறு ரூபாய் தரவும் ஒரு கோயில் நிர்வாகம் தயாரா இருக்கு. போகிறாயா?”

அவனுக்கு தினமும் ஐநூறு, அதுவும் சுப்புணிக்கும் எழுபது அவர்களே தந்து விடுகிறார்கள் என்பது கேட்டு கணபதி ஒரு கணம் கண்களை ஆச்சரியத்துடன் விரித்தான். “எந்த சாமிக்கு பூஜை? எத்தனை நாளைக்கு?”

“உன் பிள்ளையாரோட அப்பாவுக்கு – சிவலிங்கத்துக்கு. பதினஞ்சு இருபது நாளுக்கு மட்டும் தான்”.

“எந்தக் கோயில்ல குருஜி?”

குருஜி ஒரு கதையைக் கச்சிதமாகச் சொல்லத் தயாரானார்...

(தொடரும்)

No comments:

Post a Comment