Thursday, May 29, 2014

பரம(ன்) ரகசியம் – 34




கேஷிற்கு ஈஸ்வர் சீக்கிரமாக அமெரிக்கா திரும்பிப் போய் விட்டால் நல்லது என்றிருந்தது. ஈஸ்வர் இங்கு இருக்கும் கணங்களில் அவன் தனக்குப் பெரிய ஆபத்தை உணர்ந்தான். ஆனந்தவல்லி, மீனாட்சி இருவரும் ஈஸ்வரைத் தலையில் வைத்துக் கொண்டாடியதைக் கூட அவனால் தாங்கிக் கொள்ள முடிந்தது. ஆனால் பரமேஸ்வரன் ஈஸ்வரை வெறுக்காததை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. வாய்க்கு வந்தபடி போனில் ஈஸ்வர் பேசி இருந்தாலும், இங்கு வந்த பிறகும் அவருடன் இறுக்கமாகவே இருந்தாலும் கூட பரமேஸ்வரன் கொதித்து எழுவதற்குப் பதிலாக பொறுத்துப் போனது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. வேறு யாராவது அப்படி அவரிடம் நடந்து கொண்டிருந்தால் அவர் நடந்து கொண்டிருக்கும் விதமே வேறாக இருந்திருக்கும். ஈஸ்வரிடம் மட்டும் அவர் அப்படி சீறாமல் இருக்கக் காரணம் அவன் அவர் தந்தையின் தோற்றத்தில் இருப்பது தானோ என்ற சந்தேகம் அவனுக்கு வந்தது.

சிறு வயதில் இருந்தே அவன் தன் தாத்தாவைக் கவனித்த அளவிற்கு யாரையும் கவனித்தது இல்லை. காரணம் கோடிக்கணக்கான சொத்திற்கு அதிபதியாக அவர் இருந்தது தான். அவர் நினைத்தால் அந்தப் பணத்தை யாருக்கு வேண்டுமானாலும் தரலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதால் அவரை நன்றாகப் புரிந்து கொண்டு அவர் மனம் கோணாமல் நடந்து கொள்வது தான் புத்திசாலித்தனம் என்று கணித்து அப்படியே நடந்து வந்திருந்தான். அவரை அப்படி அறிந்திருந்ததால் அவர் ஒருவரைப் பார்க்கும் விதத்திலும், பேசும் விதத்திலும் இருந்தே அவர் அந்த மனிதரைப் பற்றி என்ன நினைக்கிறார், எந்த அளவில் மதிக்கிறார் என்பதை எல்லாம் அவனால் துல்லியமாகக் கணிக்க முடியும். அந்த வகையில் அவர் ஈஸ்வரை மதிக்கிறார் என்பதும், அவனை மிகவும் நேசிக்கா விட்டாலும் வெறுக்கவில்லை என்பதும் அவனுக்குப் புரிந்தது. மகனைப் பற்றி பேசுவதைக் கூட சகிக்க முடியாத அவர், மகனின் மகனிடம் மட்டும் இந்த அளவில் இருப்பது அவனுக்குப் பெரிய ஆபத்தை உணர்த்தியது. இது இப்படியே போனால் உறவைப் புதுப்பித்துக் கொள்வதில் முடிந்து விடுமோ என்று அவன் பயந்தான்.

இந்த நிலையில் ஈஸ்வரை தென்னரசு வீட்டுக்கு அழைத்துப் போகும் படி மீனாட்சி வேறு மகனிடம் சொல்லி இருந்தாள். ஆரம்பத்தில் மறுத்து டிரைவரை அழைத்துப் போகச் சொல்லுங்கள், எனக்கு முக்கியமான வேலை இருக்கிறது என்று சொல்ல நினைத்தவன் பின் மனதை மாற்றிக் கொண்டான். காரணம் விஷாலி.

விஷாலியை அவன் காதலித்து வந்தான். அவளிடம் வாய்விட்டுச் சொல்ல அவனால் முடியவில்லை. பரமேஸ்வரன் இருக்கிற வரையில் வேற்று ஜாதியும், அந்தஸ்தில் தாழவும் உள்ள அவளைத் திருமணம் செய்து கொள்ள அவனுக்கு சம்மதம் தர மாட்டார் என்பது அவனுக்குத் தெரியும். உயிருக்கு உயிராய் நேசித்த மகனையே அவன் காதல் கல்யாணத்தால் வெறுத்து ஒதுக்கிய மனிதர் பேரன் விஷயத்தில் கண்டிப்பாக ஒத்துக் கொள்ள மாட்டார் என்பதை அவன் புரிந்து கொண்டிருந்தான். அதனால் அவளிடம் தன் காதலைச் சொன்னதில்லை. தாத்தா மரணத்திற்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தான். ஆனந்தவல்லி வயது அளவிற்கு அவரும் வாழ்ந்து விட்டால் என்ன செய்வது என்று அவன் பயந்தாலும் அவருக்கு உள்ள வியாதிகளின் எண்ணிக்கை அந்தப் பயத்தைப் போக்கி இருந்தது

விஷாலியும் அவனிடம் பிரியமாகப் பழகிய அளவுக்கு வேறெந்த ஆணிடமும் பிரியமாய் பழகியது இல்லை. எனவே அவன் காதலைச் சொல்லும் போது அவள் கண்டிப்பாக ஏற்றுக் கொள்வாள் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது. அவளுடைய தந்தை தென்னரசுவும் அவனிடம் நெருக்கமாகவும், அன்பாகவும் இருந்தார். எனவே அவர் பக்கத்தில் இருந்து எந்த எதிர்ப்பு வரவும் வாய்ப்பு இல்லை. அவன் தாயும் விஷாலியை மிகவும் நேசித்தாள். தந்தையும் அப்படித்தான். அதனால் பரமேஸ்வரன் என்ற ஒரு தடங்கல் தவிர வேறு எந்தப் பிரச்சினையும் அவனுக்குக் காதலில் இருக்கவில்லை.

இப்போது ஈஸ்வர் வரவு விஷாலி விஷயத்தில் ஏனோ ஒரு நெருடலை ஏற்படுத்தியது. வந்து இரண்டு நாட்களிலேயே வீட்டில் பெரிய மாற்றத்தை அம்மா, தாத்தா, கொள்ளுப்பாட்டியிடம் ஏற்படுத்த முடிந்த அவன் வெற்றி விஷாலி வரை நீண்டு விட்டால் என்ன செய்வது என்ற பயம் லேசாக எழுந்ததால் அவன் விஷாலியை சந்திக்கும் சந்தர்ப்பத்தில் தான் கூட இருப்பது நல்லது என்று மகேஷிற்குத் தோன்றியது. எனவே தான் அவன் அம்மா சொன்ன போது தென்னரசு வீட்டுக்கு ஈஸ்வரை அழைத்துப் போகச் சம்மதித்தான். விஷாலிக்குப் போன் செய்து ஈஸ்வரை மறுநாள் அழைத்து வருவதாகத் தெரிவித்தான்.

விஷாலி சந்தோஷப்பட்டாள். “உன் கசின் ரொம்ப பிரபலம்னு அப்பா அடிக்கடி சொல்வார். உன் கசின் எப்படி இருக்கான்?

“ம்... இருக்கான்

“உங்க தாத்தாவுக்கும் அவனுக்கும் இடையே பிரச்சினை எதுவும் இல்லையே

அவர்கள் வீட்டு விவகாரம் அனைத்தையும் விஷாலி அறிந்திருந்ததால் தான் அப்படிக் கேட்டாள். மகேஷ் சொன்னான். “பாவம் தாத்தா அவனோட திமிரை எல்லாம் பொறுத்துட்டு போறார்... அவங்கண்ணா சொன்னார்ங்கிற ஒரே காரணம் தான் அவரைப் பொறுமையா இருக்க வைக்குதுன்னு நினைக்கிறேன்.

“ஏன் மகேஷ், அவனுக்கு திமிர் ஜாஸ்தியா

“உச்சியில் இருந்து உள்ளங்கால் வரைக்கும் திமிர் நிறைஞ்சவன். அதான் நீ சொன்னியே பிரபலமானவன்னு. அதோட அடையாளம் தான் இந்த திமிர்

விஷாலி எப்போதுமே நல்ல பண்புகளுக்கு அதிக முக்கியத்துவம் தருபவள். அவளுக்கு அழகு, புத்திசாலித்தனம் எல்லாம் இரண்டாம் பட்சமே. எனவே முதலிலேயே அவன் பெயரை கொஞ்சம் ரிப்பேர் செய்து வைப்பது பாதுகாப்பு என்று மகேஷ் நினைத்தான்.

அப்புறம் ஏன் அவனை எங்க வீட்டுக்கு கூட்டிகிட்டு வர்றே. அவன் எங்க கிட்ட அவனோட திமிரைக் காட்டறதுக்கா?

“அவனுக்கு உங்கப்பா கிட்ட பேசணுமாம். அதான்....

சரி... ஆமா உங்க வீட்டு ஓல்டு லேடி எல்லாரையும் வைக்கிற இடத்துல வைப்பாங்களே. அவங்க அவனை ஒன்னும் சொல்லலையா

“அவங்களோட (கிழவி என்று பொதுவாகச் சொல்லும் மகேஷ் மரியாதையாகப் பேசியது பெரியவர்களை மரியாதைக் குறைவாகச் சொல்வது விஷாலிக்குப் பிடிக்காது என்பதற்காகத் தான்) வீட்டுக்காரர் மாதிரியே அவன் பார்க்க இருப்பான். அதனால அவங்களுக்கு அவன் மேல ஒரு சாஃப்ட் கார்னர்...

சரி எத்தனை மணிக்கு வர்றே. நாளைக்கு அப்பா காலைல இருந்து ஃப்ரீ தான்..

“காலைல பத்து மணிக்கு கூட்டிகிட்டு வர்றேன்...

“லஞ்சுக்கு இருப்பீங்களா?...

“இல்லை... சீக்கிரமே கிளம்பிடுவோம்”  மகேஷ் ஈஸ்வரிடம் கேட்காமலேயே சொல்லி விட்டான். ஈஸ்வரை விஷாலி வீட்டில் அதிக நேரம் தங்க வைக்கும் எண்ணம் அவனுக்கு இல்லை. எத்தனை சீக்கிரம் அங்கிருந்து ஈஸ்வரைக் கிளப்புகிறோமோ அந்த அளவுக்கு நல்லது என்று நினைத்தான்.

தோட்ட வீட்டில் இருந்து ஈஸ்வர் வர இரவு ஒன்பது மணியாகி விட்டது. ஆனந்தவல்லியும் மீனாட்சியும் அவனுக்காக சாப்பிடாமல் காத்திருந்தது மகேஷிற்கு எரிச்சலைத் தந்தது. நல்ல வேளையாக பரமேஸ்வரன் அப்படிக் காத்திருக்காமல் மகேஷுடன் சேர்ந்து முன்பே சாப்பிட்டு விட்டார். அவர் சாப்பிடும் போது தாயிடம் கேட்டார். “நீ ஏம்மா சாப்பிடலை?

“ஈஸ்வரும் வந்துடட்டும்ஆனந்தவல்லி சொன்னாள்.

பரமேஸ்வரன் ஒன்றும் சொல்லவில்லை. அவர் குழந்தைகளுக்காக அவள் இப்படி எப்போதுமே காத்திருந்ததில்லை. மீனாட்சியிடம் அவர் கேட்கவே போகவில்லை. மருமகன் வராமல் சாப்பிட மாட்டாள் அவள் என்பதை அவர் அறிவார்.

அவன் எங்கே போயிருக்கான்

ஆனந்தவல்லி சொன்னாள். “தோட்ட வீட்டுக்கு. அந்தப் போலீஸ்காரன் இவனை அங்கே வரச் சொல்லி இருக்கான். எத்தனை நேரம் தான் கேள்வி கேட்பானோ தெரியலை. அவன் ஆள் சரியில்லை.. கொலைகாரங்களைக் கண்டுபிடிக்கத் தெரியலை. யார் மேலயாவது பழியைப் போட்டு கேஸை முடிச்சுட நினைக்கிற ரகம் மாதிரி தெரியுது

பரமேஸ்வரன் சிரித்தார். “அந்த ஆள் நல்ல திறமைசாலி, நாணயமானவர்னு போலீஸ் டிபார்ட்மெண்டுல பேர் எடுத்தவர். அவரைப் போய் நீ ஏன் அப்படிச் சொல்றே?

உங்கண்ணன் இறந்து எத்தனை நாளாச்சு.  அந்த ஆள் என்னடா கண்டுபிடிச்சான். என் கிட்ட கேள்வி கேட்கறப்ப நானே உங்கண்ணனை கொன்னுருக்கலாம்கிற மாதிரி கேள்வி கேட்டான். இப்ப ஈஸ்வரை சாப்பிடக் கூட அனுப்பாம கேள்வி கேட்கறான்....

அதற்கு மேல் ஏதாவது சொல்லி அவளிடம் வாங்கிக் கட்டிக் கொள்ள பிரியப்படாமல் பரமேஸ்வரன் சாப்பிட்டு விட்டுப் போய் விட்டார். ஈஸ்வர் வந்த பிறகு ஆனந்தவல்லியும் மீனாட்சியும் செய்த உபசரிப்பைக் காண சகிக்காமல் மகேஷ் தனதறைக்குப் போய் விட்டான்.

றுநாள் தென்னரசு வீட்டுக்கு அழைத்துப் போன போது காரில் மகேஷ் ஈஸ்வரிடம் கேட்டான். “தோட்ட வீட்டுக்கு நேத்து போனியே, ஏதாவது கண்டுபிடிச்சியா?

கண்டுபிடிக்கறது போலீஸ்காரங்க வேலை. நான் அந்த சிவலிங்கம் இருந்த இடம் பார்க்க போனேன். அவ்வளவு தான்
சொல்லி விட்டு அவன் நிறுத்திக் கொண்டது மகேஷிற்கு ஏமாற்றம் அளித்தது. அழுத்தக்காரன் என்று நினைத்துக் கொண்டான்.

தென்னரசு வீடு ஒரு நடுத்தரவர்க்கத்தின் சாதாரண வீடாக இருந்தது. வெளியே நிறைய பூச்செடிகள் இருந்தன. ஒரு நிமிடம் வெளியே நின்று ஈஸ்வர் ரசிக்க மகேஷ் எரிச்சல் அடைந்தான். மகேஷ் விஷாலி பார்க்கிறாள் என்று தெரிந்தால் தான் பார்த்து ரசிப்பது போல் நடிப்பான். இல்லா விட்டால் அவன் செடிகளைக் கவனிக்கவே மாட்டான். ஈஸ்வர் ரசிப்பதை விஷாலி ஜன்னல் வழியாகப் பார்க்கிறாளா என்று கவனித்தான். இல்லை என்பது உறுதியானவுடன் நிம்மதியாயிற்று.

கதவைத் திறந்த தென்னரசு ஈஸ்வரை மகிழ்ச்சியுடன் கட்டியணைத்துக்  கொண்டு வரவேற்றார். “வா ஈஸ்வர்”.  உள்ளே வீடு சுத்தமாகவும் வசதியாகவும் இருந்தது. ஈஸ்வருக்கும் தந்தையின் மிக நெருங்கிய நண்பரை நேரில் பார்த்ததும் அவர் அன்பாக வரவேற்றதும் மகிழ்ச்சியாக இருந்தது.

‘எப்படி இருக்கீங்க அங்கிள்

நல்லா இருக்கேன் ஈஸ்வர். நீ எப்படி இருக்கே? அம்மா எப்படி இருக்காங்க?

“எல்லாரும் சௌக்கியம்

அவர்கள் பேசிக் கொண்டிருக்க விஷாலி என்ன செய்கிறாள் என்று பார்க்க மகேஷ் உள்ளே போனான். விஷாலி சமையலறையில் இருந்தாள். அவனைப் பார்த்தவுடன் கேட்டாள். “என்ன சொல்றான் உன் கசின்

“உங்கப்பா கிட்ட எதோ கதை அளந்துட்டு இருக்கான். சரி வா அறிமுகம் செய்யறேன்...

“கொஞ்சம் வேலை இருக்கு. முடிச்சுட்டு வர்றேன். இல்லாட்டியும் எனக்கு இந்த மாதிரி தலைக்கனம் இருக்கிற ஆசாமிகள் கிட்ட அதிக நேரம் இருக்கறது இஷ்டமில்லை. உனக்குத் தான் தெரியுமே...

மகேஷுக்குத் திருப்தியாக இருந்தது. முன்பே அவனைப் பற்றி அப்படி சொல்லி வைத்தது நல்லதாய் போயிற்று என்று நினைத்துக் கொண்டான். அவளுடன் பேச்சுக் கொடுத்தபடி அங்கேயே நின்று கொண்டான். அன்று வழக்கத்தை விட அதிக அழகுடன் அவள் தெரிந்தாள். அவள் அழகை அவன் ரசித்தாலும் தன் கண்களுக்குத் தெரிவது போலவே ஈஸ்வர் கண்களுக்கும் அவள் தெரிவாள் என்பது அவனுக்கு சங்கடமாக இருந்தது.

கால் மணி நேரம் கழித்து அவள் வெளியே வந்த போது அவனும் பின்னால் வந்தான். ஈஸ்வர் ஏதோ சுவாரசியமாக தென்னரசிடம் சொல்லிக் கொண்டு இருந்தான். அவன் விஷாலியைக் கவனிக்கவில்லை. அதனால் சாவகாசமாக  அவனைப் பார்த்து எடைபோடும் சந்தர்ப்பம் அவளுக்குக் கிடைத்தது.

“உன் கசின் ரொம்ப அழகாய் இருக்கான். அறிவோட அழகும் இருக்கறதால தான் அவனுக்குத் தலைக்கனம் போல் இருக்குஅவள் மகேஷுக்கு மட்டும் கேட்கும்படி முணுமுணுத்தாள்.


அவள் ஈஸ்வரை ரொம்ப அழகாய் இருப்பதாகச் சொன்னது அவனுக்குப் பிடிக்கவில்லை. இத்தனைக்கும் அவள் அழகுக்கு அதிகமான முக்கியத்துவம் தருபவள் அல்ல...

தென்னரசு தான் மகளை முதலில் பார்த்தார். அவன் பேச்சை இடைமறித்து சொன்னார். “ஈஸ்வர் இதான் விஷாலி. என் மகள்

ஈஸ்வர் திரும்பினான். சில வினாடிகள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே இருந்தனர். அவன் பார்வையில் காந்தம் இருந்ததாய் அவளுக்குத் தோன்றியது. பார்வையை விடுவித்துக் கொள்ள அவளால் முடியவில்லை. அவன் தான் முதலில் மீண்டவன். சினேகத்துடன் அவளைப் பார்த்துப் புன்னகைத்தான்.      ”ஹாய்என்றவன் நின்று கையை நீட்ட அவளும் அவளை அறியாமல் கை நீட்டினாள். ஒரு சாதாரண கைகுலுக்கலுக்குத் தேவையான நேரத்தை விட அதிகமாக ஈஸ்வர் எடுத்துக் கொண்டதாக மகேஷிற்குத் தோன்றியது. அவளுக்கும் அதில் எந்த சங்கடமும் இருந்ததாக அவனுக்குத் தோன்றவில்லை. அவனுடைய விஷாலி.... அவன் நம்ப முடியாமல் அவர்களைப் பார்த்தான். ஏதோ ஒன்று அவனுக்குள்ளே அலறியது.

ஈஸ்வர் அவள் கையை விட்டான். அவளையும் அறியாமல் அவள் லேசாக வெட்கத்தில் முகம் சிவந்தாள். இப்போது அவனுக்குப் பார்வையை அவள் முகத்திலிருந்து விலக்கக் கஷ்டமாக இருந்தது....

மகேஷிற்கு அவனிடம் அவள் எப்போதும் வெட்கப்பட்டதாக நினைவில்லை. அவர்கள் இருவரும் சம்பிரதாயமாய் ஏதோ பேசிக் கொண்டார்கள். அவர்கள் என்ன பேசினார்கள் என்பது மகேஷ் மனதை எட்டவில்லை.  ஒருவரை ஒருவர் அவர்கள் பார்த்துக் கொண்ட பார்வை மட்டும் அவன் மனதில் பற்றி எரிந்தது. சில நிமிடங்களுக்கு முன் திமிர் பிடித்தவன் என்று சொல்லி உடனடியாக ஈஸ்வரை சந்திக்க வர மறுத்த அவனுடைய விஷாலி இப்போது அவன் மீது வைத்த கண்களை விலக்க முடியாமல் இருக்கிறாள். ஈஸ்வர் அவளை வசியம் செய்து விட்டான் என்று தோன்றியது. அவன் சைக்காலஜியில் நிபுணன்... எந்த வசியமும் செய்வான்..... இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று மகேஷ் நினைத்தான். இல்லா விட்டால் அவன் விஷாலியை என்றென்றைக்குமாய் இழந்து விட வேண்டி இருக்கும். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று அவன் நினைத்தான்.....

தே நேரத்தில் குருஜியின் உதவியாளனுக்கு ஒரு போன் கால் வந்தது.

“ஹலோ. குருஜியோட பர்சனல் போனுக்கு நிறைய தடவை கூப்பிட்டுப் பார்த்துட்டேன். ஆனா ஸ்விட்ச்டு ஆஃப் மெசேஜ் வருது. என்ன ஆச்சு....

குரலை வைத்து அந்த உதவியாளனால் பேசுவது யார் என்று கண்டுபிடிக்க முடியாவிட்டாலும் அவர் பர்சனல் போன் நம்பர் வைத்துக் கொண்டிருப்பது வெகுசிலரே என்பதால் மிக மிக வேண்டப்பட்ட நபர் என்பதை அவன் புரிந்து கொண்டான். “குருஜி அவசர வேலையாய் வெளியூர் போயிருக்கிறார். இப்ப நானே நினைச்சாலும் அவரை காண்டேக்ட் செய்ய முடியாது சார். என்ன விஷயம் சொல்லுங்க சார்?

ஒரு கேஸ்ல புதுசா ஏதாவது தடயம் கிடைச்சா சொல்லச் சொல்லி இருந்தார் அவர். கிடைச்சிருக்கு. அதான் போன் செஞ்சேன்.

“சொல்லுங்க சார். குருஜி இல்லாதப்ப வேறொருத்தர் அந்தக் கேஸ் விஷயமா பார்த்துக்கறார். அவர் கிட்ட தகவலை சொல்லிடறேன்

“சிவலிங்கத்தை தூக்கிட்டு போனவன் ஒரு சிவன் கோயில்ல இருக்கிறதா போலீஸுக்கு தகவல் வந்திருக்கு. அந்த இடம் என்னன்னு போலீஸ் இன்னும் கண்டுபிடிக்கலை. ஆனால் சீக்கிரமாவே கண்டுபிடிச்சு அங்கே போயிடுவாங்க...

உதவியாளன் பரபரப்போடு கேட்டான். “என்ன தகவல்?

“பெரிய சிவன் கோயில். அம்மன் சன்னிதிக்கு முன்னாடி ஒரு பெரிய குளம். குளத்துக்கு முன்னாடி பெரிய வளைவுல எதோ எழுதி இருக்கு. குளத்தை சுத்தி நாலு பக்கமும் கருங்கல்லால் ஆன படிக்கட்டுகள்....

உதவியாளனுக்கு உடம்பெல்லாம் ஒரு கணம் ஜில்லிட்டது. அந்த அடையாளங்களை அவன் அறிவான். அவன் பிறந்து வளர்ந்த ஊரில் தான் அந்தக் கோயில் இருக்கிறது. “தேங்க்ஸ் சார். நீங்க சொன்னது பெரிய உபகாரமாச்சு. நான் பார்த்துக்கறேன். குருஜி வந்த பிறகு அவரே உங்க கிட்ட பேசுவார். அவர் வந்தா யார் பேசறதா சொல்லட்டும்?

பதில் வரவில்லை. இணைப்பு துண்டிக்கப்பட்டது. உதவியாளன் அவசர அவசரமாக வேறொரு எண்ணிற்குப் போன் செய்ய ஆரம்பித்தான்.

(தொடரும்)

No comments:

Post a Comment