தன்னை சுதாரித்துக் கொள்ள ஈஸ்வருக்கு சில நிமிடங்கள் தேவைப்பட்டன. இப்படி சிவலிங்கம் தெரிவது இது இரண்டாவது முறை. இரண்டு முறையும் அவன் சிறிதும் எதிர்பாராத நேரத்தில் தான் சிவலிங்கம் காட்சி தருகிறது... முதல் முறை அவன் ஆராய்ச்சியில் ஆழ்ந்திருக்கும் போது ஓவியமாகத் தெரிந்த சிவலிங்கம் இந்த முறை அவன் குடும்ப விஷயங்களில் ஆழ்ந்து இருக்கும் போது புகைப்படத்தில் தெரிந்து மறைகிறது... அறிவு பூர்வமாக அவனுக்குத் தகுந்த காரணம் எதுவும் புலப்படவில்லை....
அவன் இந்தியா வர முக்கியக் காரணம் சிவலிங்கம் முதல் முறை தெரிந்த விதம் தான் என்றாலும் கிளம்பிய பிறகு அவன் மனதில் அதிகம் ஆதிக்கம் செலுத்தியது தாத்தா பரமேஸ்வரனே! அவன் அப்பா கடைசி வரை வெறுக்காத பரமேஸ்வரன்... அவன் அப்பாவைக் கடைசி வரை மன்னிக்காத பரமேஸ்வரன்... வந்து சேர்ந்த பிறகும் அத்தை, கொள்ளுப்பாட்டி, தாத்தா, அப்பா வாழ்ந்த வீடு என்று மனம் போனதே தவிர சிவலிங்கத்தைக் கிட்டத்தட்ட மறந்தே போனான் என்றே சொல்ல வேண்டும். சிவலிங்கம் நினைவுபடுத்துகிறதோ?....
மீனாட்சி மகனையும், கணவரையும் அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள். ”ஈஸ்வர், இது தான் மகேஷ்... இது தான் மாமா”
”ஹாய் ஈஸ்வர்” என்று சொல்லி கஷ்டப்பட்டு புன்னகைத்து மகேஷ் கைகுலுக்கினான். விஸ்வநாதனும் ”எப்படிப்பா இருக்கே” என்று பொய்யான மலர்ச்சியை முகத்தில் காட்டி கைகுலுக்கினார். உதட்டு வரையே வந்த புன்னகையை ஈஸ்வர் கவனிக்கத் தவறவில்லை. மனிதர்களை ஆழமாகப் பார்க்க முடிந்த அவனுக்கு எடை போட சிரமம் தரும் அளவுக்கு அவர்களிடம் நடிப்புத் திறமை தெரியவில்லை. அவர்களையும் அவனையும் மாறி மாறிப் பெருமிதமாகப் பார்த்துக் கொண்டிருந்த மீனாட்சியைப் பார்த்த போது அவனுக்குப் பாவமாக இருந்தது. அவர்களைப் புரிந்து கொண்டதை வெளியே காட்டிக் கொள்ளாமல் அவனும் அவர்களிடம் சுமுகமாகவே பேசினான். பேச்சு அமெரிக்காவைப் பற்றியும், இந்தியாவைப் பற்றியும், அவனுடைய பயணத்தைப் பற்றியுமாக இருந்தது. ஆனந்தவல்லியுடன் ஏடாகூடமாகப் பேசி, பரமேஸ்வரனைப் பனிப்பார்வை பார்த்த ஈஸ்வர், மகேஷுடனும், விஸ்வநாதனுடனும் சுமுகமாகப் பழகியது மீனாட்சிக்கு பெரும் திருப்தியைத் தந்தது.
அவள் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தைப் பார்க்கையில் ஈஸ்வர் நினைத்தான். “இந்த சந்தோஷத்திற்காக எதையும் செய்யலாம்”
உண்மையில் அவனுக்கு பரமேஸ்வரன் மீதிருந்த கோபம் அவர்கள் மீது இருக்கவில்லை. விஸ்வநாதன் சங்கருடன் கல்லூரியில் படித்தவர் என்றாலும், மீனாட்சியைத் திருமணம் செய்து கொண்ட பிறகும் அவர் சங்கருடன் பேசியதை விரல் விட்டு எண்ணி விடலாம்... ஓருசில முறை ஒருசில வார்த்தைகள் மட்டுமே பேசியிருக்கிறார். மகேஷோ அதையும் விடக் குறைவு. நல்ல முறையில் அன்புடன் பேசி இந்தப் பந்தத்தை வலுப்படுத்தி விட அவர்கள் விரும்பவில்லை என்பது இங்கு வருவதற்கு முன்பே ஈஸ்வருக்குப் புரிந்திருந்தது. காரணம் சொத்து என்பதும் அவனுக்குத் தெரிந்திருந்தது. பரமேஸ்வரனின் சொத்தின் மீது துளியளவும் ஆசை இல்லாத ஈஸ்வருக்கு அதில் எந்த வருத்தமும் இருக்கவில்லை....
உடை மாற்றக் கூட விடாமல் ஆரம்பத்திலேயே அவனைப் பிடித்துக் கொண்டதற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டு மகேஷும் விஸ்வநாதனும் நகர காபி கொண்டு வருவதாகச் சொல்லி விட்டு மீனாட்சியும் நகர்ந்தாள்.
ஈஸ்வரின் செல் போன் இசைத்தது. யார் என்று பார்த்தான். அம்மா!
“ஹலோ சொல்லும்மா”
“சௌக்கியமா போய் சேர்ந்தியாடா?”
“சேர்ந்துட்டேன். அத்தை ஏர்போர்ட் வந்திருந்தாங்க... உங்களை விசாரிச்சாங்க”
“நேத்து போன் செஞ்சு பேசினாங்க. உனக்கு என்னெல்லாம் சாப்பிடப் பிடிக்கும்னு கேட்டுகிட்டாங்க... அப்புறம் மத்தவங்களை எல்லாம் பார்த்தியா. பேசினியா”
”பார்த்தேன். வந்து ஒரு மணி நேரம் தான் ஆயிருக்கு. நல்லா இன்னும் பேச நேரம் கிடைக்கலை....”
”ஈஸ்வர்...”
அம்மா குரலை வைத்தே ஈஸ்வர் இனி அறிவுரை ஆரம்பமாகிறது என்பதைப் புரிந்து கொண்டான். “சொல்லும்மா...”
”யார் மனசும் புண்படற மாதிரி நடந்துக்காதடா. அப்பாவ மனசுல வச்சு அவங்க மேல உனக்கு கோபம் இருக்கலாம். உங்கப்பாவே அவங்க மேல கோபமா இருக்கலைன்னு மட்டும் மறந்துடாதே.....”
”நீ எனக்கு அட்வைஸ் பண்ணின மாதிரி இங்க இருக்கற கிழவி தன் மகனுக்கு அட்வைஸ் செஞ்சிருந்தா அந்த ஆள் திருந்தி இருக்கலாம்னு தோணுதும்மா....”
கனகதுர்கா பெருமூச்சு விட்டாள்.
ஆனால் கொள்ளுப் பேரனின் அவச்சொல்லுக்கு ஆளான ஆனந்தவல்லி அதிசயமாக தன் மகனுக்கு அப்போது புத்தி சொல்லிக் கொண்டு தானிருந்தாள். காரணம் பேரன் சென்ற பிறகு பரமேஸ்வரன் கனத்த மௌனத்துடன் இருந்தது தான். ஏதேதோ பேசிப் பார்த்த ஆனந்தவல்லி மகனிடம் இருந்து ஒற்றைச் சொல் பதில்கள், தலையசைப்புகளில் சலித்து விட்டாள்.
தன் மகனைப் பற்றி அவனுடைய காதல் திருமணத்திற்குப் பின் என்றுமே யாரிடமுமே பரமேஸ்வரன் பேசியதில்லை. மற்றவர்கள் பேசினாலும் அவர் அதற்குப் பதில் சொன்னதோ பேச்சை வளர்த்ததோ இல்லை. அது என்றுமே அவருடைய தனிப்பட்ட விஷயமாகவே இருந்து வந்தது. அதில் தாயைக் கூட அவர் சேர்த்தது இல்லை. இன்று பேரனின் வார்த்தைகளிலும் தோரணையிலும் நிறையவே பாதிக்கப்பட்டாலும் பரமேஸ்வரன் அதைப் பற்றியும் தாயிடம் பேச விரும்பவில்லை. ஆனால் தன் பிரியமான மகன் முகத்தில் தெரிந்த வலி ஆனந்தவல்லிக்கு சங்கடமாக இருந்தது. இது நாள் வரை மகன் தனிப்பட்டதாய் நினைத்த விஷயங்களில் தலையிடாதவள், அதே போல் தன்னுடைய தனிப்பட்ட விஷயங்களிலும் அவரைத் தலையிட அனுமதிக்காதவள் மெல்ல மென்மையான குரலில் சொன்னாள்.
”எனக்கு நீ இப்படி உட்கார்றது எனக்கு கஷ்டமாய் இருக்கு பரமேஸ்வரா.”
ஆனந்தவல்லி மென்மையான குரலில் பேசுவது மிக அபூர்வம். பரமேஸ்வரன் தாயை ஆச்சரியத்தோடு பார்த்தார். ஈஸ்வர் அவர் மனதைக் கனக்க வைத்திருக்கிறான் என்றால் அவர் தாயின் மனதை லேசாக்கி இருக்கிறான் போல் தெரிந்தது. அவன் அவளுடைய கணவரின் தோற்றத்தில் இருக்கிறான் என்பதாலா?
ஆனந்தவல்லி அதே குரலில் தொடர்ந்தாள். “அவரை விதைச்சு துவரை முளைக்காது பரமேஸ்வரா. நம்ம குணம் தானே நம்ம குழந்தைகளுக்கும், பரம்பரைக்கும் வரும். உங்கண்ணன் பரம சாதுவா தெரிஞ்சா கூட அந்த சிவலிங்கத்தோட அவன் போகிறதை என்னால் தடுக்க முடியலை. என்னோட பிடிவாதத்தில் நாலு மடங்கா அவனோட பிடிவாதம் இருந்துச்சு. உன் பையனும் அப்படித்தான். ரொம்ப நல்லவன். பாசமானவன். ஆனா அந்தப் பொண்ணை அவன் கல்யாணம் செஞ்சுக்கறதை உன்னால தடுக்க முடியல. அந்த ஒரு விஷயத்துல அவனும் உறுதியாவே இருந்துட்டான். நாம நிறைய விஷயங்கள்ல பிடிவாதமா இருக்கோம். அவங்க ஒண்ணு ரெண்டுல அப்படி இருந்துடறாங்க. அவங்க மேல நாம கோவிச்சுக்கறதுல அர்த்தம் இல்லைன்னு நான் இப்ப உணர்றேன். முதல்லயே உணர்ந்திருந்தா உங்கண்ணனை அப்பப்ப போய் பார்த்திருப்பேன்... கடைசி தடவை அவனை அத்தனை திட்டி இருக்க மாட்டேன்.... அவன் கடைசி தடவை கூப்பிட்டு அனுப்பி இருக்காட்டி இப்ப எனக்கு நினைச்சுப் பார்க்க அந்த நல்ல நினைவு கூட இருந்திருக்காதுன்னு நினைக்கறப்ப வயிறு என்னவோ பண்ணுது....” சொல்லும் போது அவள் குரல் தழுதழுத்தது.
அண்ணனின் நினைவும், தாயின் நெகிழ்ச்சியும் அவர் மனதையும் லேசாக்கியது. ஆனால் அவர் ஒன்றும் சொல்லாமல் தாயையே பார்த்தார்.
ஆனந்தவல்லி தொடர்ந்தாள். “உன் பேரன் உன் மகள் சொன்ன மாதிரி கிட்டத்தட்ட நம்மள மாதிரியே கோபக்காரனா இருக்கான். என்ன பண்றது? இந்தக் கோபம் எல்லாம் எங்கே இருந்து வந்ததுன்னு கேட்டா நாம நம்மளையே தான் காரணம் சொல்லிக்க வேண்டியதாகுது...”
அம்மாவின் இந்த ஞானோதயத்திற்கு மிக முக்கிய காரணம் அவன் தோற்றம் தான் என்பதில் பரமேஸ்வரனுக்கு சந்தேகமில்லை. அவன் அவளிடம் கூட ஏடாகூடமாய் பேசியதை அவர் தனதறைக் கதவருகே நின்று கேட்டிருந்தார். அவன் பேசியதை வேறு யாராவது பேசியிருந்தால் ஆனந்தவல்லி அங்கிருந்து கண நேரத்தில் காத தூரத்திற்குத் துரத்தி இருப்பாள். அவள் கோபத்திற்கு முன் அவள் கணவரோ, அவரோ, பசுபதியோ கூட நின்று தாக்குப் பிடிக்க முடிந்ததில்லை. தேவைப்படும் போது அவள் நாக்கும் பார்வையும் படுகூர்மையாகி விடும். அந்த விஷயத்தில் ஈஸ்வர் அவளுடைய சரிநிகர் கொள்ளுப் பேரன் தான்...
மகன் ஏதாவது சொல்வான் என்று எதிர்பார்த்த ஆனந்தவல்லி ஏமாந்து போனாள். இத்தனை அழுத்தம் ஆகாது என்று மகன் மீது மனதிற்குள் கோபித்துக் கொண்டாள். இவனுக்கே இத்தனை அழுத்தம் இருக்கையில் இவன் பேரனுக்கு அத்தனை அழுத்தம் வந்திருப்பதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?....
குருஜிக்கு அந்த போன் கால் வந்த போது அவர் மறுநாள் சொற்பொழிவுக்கு விவேகானந்தரின் சிகாகோ பேச்சிலிருந்து குறிப்புகள் எடுத்துக் கொண்டிருந்தார். “ஹலோ”
“குருஜி நான் ஹரிபாபு பேசறேன். நீங்க சில பூக்களை ஆராய்ச்சிக்கு என் கிட்ட அனுப்பி இருந்தீங்களே...”
”சொல்லுங்க ஹரிபாபு”
“அந்தப் பூக்கள் எல்லாம் இமயமலைப் பகுதியில் இருக்கிற காட்டுப்பூக்கள் குருஜி. அதுலயும் திபெத் பகுதியில் தான் அதிகம் பார்க்க முடியற பூக்கள்..”
அதைக் கேட்டு அவர் அதிர்ச்சி அடையாதது அவருக்கே ஆச்சரியமாகத் தான் இருந்தது. அடுத்த கேள்விக்குப் பதில் தெரிந்திருந்தும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காகக் கேட்டார்.
”ஹரிபாபு... அந்தப் பூக்கள் இந்தப்பக்கத்துல எங்கேயாவது கிடைக்குமா?”
ஹரிபாபு நல்ல ஜோக் கேட்டது போல வாய் விட்டுச் சிரித்தார். ”அந்தக் காட்டுப் பூக்களை இங்கே யார் கொண்டு வருவாங்க குருஜி? கொண்டு வந்தாலும் யார் வாங்குவாங்க? இங்கத்து க்ளைமேட்ல நட்டாலும் அந்தப் பூக்கள் எல்லாம் இங்கே வளராது குருஜி. திபெத் பக்கத்துல இருந்து யாராவது இங்கே வந்தாங்களா குருஜி?”
குருஜி வார்த்தைகளை அளந்து கவனமாகச் சொன்னார். “யாரோ எங்கேயோ வச்சுட்டு போன பூக்கள் என் கவனத்துக்கு வந்தது. நான் பார்த்த மாதிரி இல்லாத பூக்களானதால ஒரு ஆர்வத்துல உங்க கிட்ட அனுப்பி தகவல் கேட்டேன். அவ்வளவு தான். நன்றி ஹரிபாபு....”
போனை வைத்த குருஜி நிறைய யோசித்தார்.
(தொடரும்)
No comments:
Post a Comment