Wednesday, May 28, 2014
பரம(ன்) ரகசியம் – 26
அந்த மனிதன் இரவு ஒன்பது ஆகும் வரை காத்திருக்க சிரமப்பட்டான். அவரைப் பார்த்துச் சொல்ல முக்கிய விஷயங்கள் அவனுக்கு இருந்தன.... குருஜியைப் பார்த்துப் பேச வரும் கூட்டம் ஒன்பது மணி வரைக்கும் கண்டிப்பாக இருக்கும். ஒரு நாளில் ஓரிரு ஆட்கள் முதல் ஐந்தாறு ஆட்கள் வரை மட்டும் தான் அவர் சந்திப்பார் என்றாலும் பதினைந்திலிருந்து நாற்பது ஆட்கள் வரை அவரை சந்திக்க எல்லா நாட்களும் காத்திருப்பது உண்டு. பல முறை வந்து சந்திக்க முடியாமல் போனது உண்டு என்றாலும் பலரும் நம்பிக்கை இழக்காமல் திரும்பத் திரும்ப வந்து காத்திருப்பது சகஜம்.
ஆனால் சந்திக்கின்ற மனிதர்களை குருஜி என்றுமே அலட்சியப் படுத்தியவர் அல்ல. ஒவ்வொருவரிடமும் எந்த வித்தியாசமும் பார்க்காமல் ஆத்ம நண்பர்கள் போல் அவர் பழகுவார். பொறுமையாக அவர்கள் சொல்வதைக் கேட்பார். அவர்களுக்குத் தகுந்த பதில் சொல்வார். அதனால்அவரை சந்தித்துப் பேசி விட்டு வெளியே வருபவர்கள் முகத்தில் பரம திருப்தியை அவன் கண்டிருக்கிறான். ஏதோ ஜென்ம சாபல்யம் அடைந்தது போல அவர்கள் சந்தோஷமாக வெளியே வருவார்கள். மறுபடி அவர்களை அவர் சந்திக்காமலே கூட இருந்து விடக் கூடும். ஆனால் அந்த ஒரு சந்திப்பே அவர்கள் மனதில் நீங்காத இடம் பெற்று விடும். அவர் எப்படி இதை சாதிக்கிறார் என்று அவனுக்கு எப்போதும் பிரமிப்பு உண்டு....
அவன் ஒன்பது மணிக்கு மேல் போன போது குருஜி கேட்டார். “என்ன விஷயம்”
“ஜான்சன் போன் செஞ்சார். அடுத்த வாரம் அமெரிக்கால இருந்து இந்தியா வர்றாராம். அதுக்கு முன்னாடி உங்க கிட்ட முக்கியமான விஷயங்கள் பத்தி பேசணுமாம்....”
தலையசைத்த குருஜி கேட்டார். “அந்த ஜோதிடர் தம்பி போன் வந்ததா?”
“இல்லை குருஜி”
“நீயே போன் செய். அந்த ஜோதிடர் எங்கே போனார்னு தெரிஞ்சுதான்னு கேள்”
“தெரிஞ்சிருந்தா அந்த ஆள் கண்டிப்பா போன் செய்திருப்பான்.” என்று சொன்னாலும் அவர் சொன்னதற்காக அவன் சரவணனுக்குப் போன் செய்து விட்டு ஸ்பீக்கரை ஆன் செய்தான்.
சரவணன் ஏமாற்றத்தோடு சொன்னான். “சார் அண்ணன் இன்னைக்கு சாயங்காலம் தான் வந்தார். ஆனா எத்தனை கேட்டும் எங்கே போனார்னு சரியா சொல்லலை. திடீர்னு கோயில் கோயிலா போகணும்னு தோணிச்சு அப்படியே போயிட்டேன்னு சொல்றார். நான் எந்த எந்தக் கோயிலுக்குன்னு கேட்டேன்... சிவன் கோயில் பெருமாள் கோயில்னு சொல்றாரே ஒழிய ஊரைச் சொல்ல மாட்டேன்கிறார். பொதுவா அவர் அப்படி எல்லாம் மறைக்கக் கூடிய ஆளில்லை. இந்த தடவை தான் இப்படி புதிரா நடந்துக்கறார்….”
“வந்தவர் கிட்ட புதிதாய் ஏதாவது மாற்றம் தெரிஞ்சுச்சா...”
“ரொம்பவே யோசிக்கிற மாதிரி இருந்துச்சு”
“ஏதாவது கொண்டு வந்தாரா?”
“நிறைய விபூதி குங்குமம் கொண்டு வந்தார் சார்”
“ஏதாவது வித்தியாசமா பேசினாரா, சொன்னாரா?”
“விபூதி கொடுக்கிறப்ப ‘கடவுள் கிட்ட நல்ல புத்தி கொடுக்கணும்னு வேண்டிக்க’ன்னு மட்டும் சொன்னார் சார்”
“சரி ஏதாவது தகவல் கிடைச்சா உடனடியா தெரிவியுங்க சரவணன்” என்று பேச்சை முடித்துக் கொண்ட அந்த மனிதன் சிரித்தபடி குருஜியிடம் கேட்டான். “நீங்க என்ன நினைக்கிறீங்க குருஜி”
குருஜியும் புன்னகைத்தார். பின் சொன்னார். “அந்த ஜோதிடர் போனது இந்த சிவலிங்கம் தொடர்பாய் தான்கிறதுல எனக்கு சந்தேகமில்லை. இல்லாட்டி மறைக்க வேண்டிய அவசியமேயில்லை”
”அவர் கிட்ட இருந்து தகவலைக் கறக்க வேறெதாவது வழி பார்த்தால் என்ன?”
“பல பேர் கவனத்தைத் திருப்பாமல் அதை செய்ய முடியாது. அதனால கொஞ்சம் பொறுத்துப் பார்க்கலாம். சரி... ஜான்சனுக்குப் போன் செய்”
அந்த மனிதன் ஜான்சனுக்குப் போன் செய்தான். ஜான்சனிடம் குருஜி மிக அழகான ஆங்கிலத்தில் பேசினார். “ஏதோ முக்கியமாய் பேசணும்னு சொன்னாயாம். சொல்லு ஜான்சன்”
“குருஜி நீங்க போய் சிவலிங்கத்தைப் பார்த்தீங்களா?”
குருஜி புன்னகைத்தார். ஜான்சனிடம் சுற்றி வளைத்துப் பேசும் பழக்கம் என்றுமே இருந்ததில்லை. அதை ஜான்சன் கால விரயமாய் கருதுவார். உலகப் புகழ் பெற்ற மனோதத்துவ ஆராய்ச்சியாளரான அவர் நிறைய புத்தகங்கள் எழுதிக் குவித்திருக்கிறார். அத்தனை சாதிக்க அவருக்கு நேரம் இருந்ததற்குக் காரணம் அனாவசியமான விஷயங்களில் அவர் நேரம் செலவழித்ததில்லை என்பது தான் என்று குருஜி பல முறை நினைத்திருக்கிறார்.
குருஜி சொன்னார். “இன்னும் இல்லை ஜான்சன்”
”ஏன் குருஜி?”
“இன்னும் சில தகவல்கள் தெரிய வேண்டி இருக்கிறது. அதைத் தெரிந்து கொண்டே போகலாம் என்றிருக்கிறேன் ஜான்சன்”
“உங்களுக்கு பயம் எதுவும் இல்லையே குருஜி”
குருஜி வாய் விட்டுச் சிரித்தார். “என் வாழ்க்கையில் இது வரைக்கும் ஜாக்கிரதையாய் இருந்திருக்கிறேனே ஒழிய நான் எதற்கும் பயப்பட்டதில்லை ஜான்சன்”
“குருஜி நான் எல்லாருடைய அபிப்பிராயங்களையும் விட உங்கள் அபிப்பிராயத்தை உயர்வாய் நினைக்கிறேன். நீங்கள் போய் உங்கள் கருத்தைச் சொன்னால் நான் அங்கே வந்த பிறகு என்ன செய்வதுன்னு தீர்மானிக்கிறது சுலபமாயிருக்கும்...”
“புரியுது ஜான்சன். ரெண்டே நாள்ல போகிறேன்...”
“நன்றி குருஜி... நான் கேள்விப்பட்ட இன்னொரு தகவல் எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது குருஜி”
”என்ன தகவல்?”
“ஈஸ்வர் அந்த பசுபதியோட தம்பி பேரன்ங்கிறதும், அவன் இப்ப இந்தியா வந்திருக்கிறான்கிறதும் தான்”
”அதனால என்ன?”
“குருஜி உங்களுக்கு ஈஸ்வரைப் பற்றி தெரியுமா?”
”இல்லை” என்றார் குருஜி. ஈஸ்வரைப் பற்றி அவர் இண்டர்நெட்டில் அனைத்து தகவல்களும் தேடிப் படித்திருக்கிறார் என்பதை ஜான்சனிடம் தெரிவிக்க அவர் முற்படவில்லை. கூடுதலாக ஒருவனைப் பற்றித் தெரிந்து கொள்வதில் தப்பில்லை. “உனக்கு அவனைத் தெரியுமா ஜான்சன்?”
”தெரியும் குருஜி. அதனால தான் கவலைப்படறேன்”
”அவனைப்பத்தி சொல்லு ஜான்சன்”
”அவன் துறையில அவன் எமகாதகன் குருஜி. தனிப்பட்ட வாழ்க்கையில் நாணயமானவன்...ஒரு விஷயத்துல இறங்கிட்டா அதோட ஆழம் வரை போய் எல்லாத்தையும் தெரிஞ்சுக்காமல் விட மாட்டான்... நல்ல புத்திசாலி... பார்க்க அழகாய் இருப்பான்.... எல்லாத்துக்கும் மேல மகா அழுத்தமான ஆசாமி.. யாருமே அவனை சுலபமா மயக்கிடவோ, பாதை மாற்றி விடவோ முடியாது...”
கடைசியாக சொன்ன அபிப்பிராயம் ஏதாவது நிகழ்ச்சியை வைத்து தான் ஜான்சனால் அறியப்பட்டது என்று தோன்றவே குருஜி கேட்டார். “அப்படி சொல்லக் காரணம்?”
”போன வருஷம் வியன்னால ஃபராய்டு நினைவு கருத்தரங்கம் ஒன்று மூன்று நாள் நடந்தது. அங்கே நானும் என் செகரட்டரி லிசாவும் போய் இருந்தோம். ஈஸ்வரும் வந்திருந்தான். லிசாவுக்கு தன் அழகு மேல நிறையவே கர்வம். தன் அழகுக்கு மயங்காதவங்க உலகத்துல யாருமே கிடையாதுங்கற நினைப்பு.....”
ஜான்சன் சென்ற முறை இந்தியா வந்த போது அவளை அழைத்து வந்திருந்ததால் குருஜி அவளை நன்றாக அறிவார். அவள் பேரழகி என்பதில் சந்தேகமில்லை. அவள் அழகை வெளிப்படுத்துவதில் அவளுக்கு கூச்சமும் இருந்ததில்லை...
”அவள் வியன்னால தான் ஈஸ்வரை முதல் முதலாய் பார்க்கிறாள். அவளுக்கு அவன் மேல ஒரு ஈர்ப்பு வந்துடுச்சு. முடிஞ்ச வரைக்கும் அவனை மயக்க முயற்சி செய்தாள். அவன் அசைஞ்சே கொடுக்கலை.... அவள் எரிச்சலாய் போய் அவன் கிட்ட கேட்டே விட்டாள். “நீ என்ன ஹோமோசெக்சுவலா”ன்னு. அவன் பதில் சொல்லாம சிரிச்சுகிட்டே போயிட்டான். மூணு நாளும் பகல்ல கருத்தரங்கத்துல பேசின அத்தனை பேர் பேச்சையும் கவனமா கேட்டு குறிப்பு எடுத்துகிட்டவன் ராத்திரி எல்லாம் அங்கே இருக்கிற நூலகத்துல இருந்த அபூர்வமான ஃப்ராய்டு, ஆட்லர் ரெண்டு பேரோட கையெழுத்துல இருந்த சில கட்டுரைகளை படிச்சுகிட்டு இருந்தான்னு கடைசில தான் கேள்விப்பட்டேன். அந்த கருத்தரங்கை ஒட்டி மூன்று நாளும் தினமும் 24 மணி நேரமும் அந்த நூலகத்தைத் திறந்து வச்சிருந்தாங்க. அதை முழுசா உபயோகப்படுத்திகிட்டது அவன் ஒருத்தன் தான்...”
குருஜி கேட்டார். “சரி, நீ கவலைப்பட காரணம் என்ன அதைச் சொல்லு ஜான்சன்”
”இப்ப நான் ஆராய்ச்சி செய்துகிட்டிருக்கிற விஷயத்துல தான் அவனும் நிறைய ஆராய்ச்சி செய்யறான். அந்த சிவலிங்கத்துல அவனுக்கும் ஆர்வம் இருந்துச்சுன்னா அவன் சும்மா இருக்க மாட்டான். அவனை எதுவும் தடுக்க முடியாது..”
“ஆனா சிவலிங்கம் நம்ம கிட்ட தானே இருக்கு ஜான்சன்... அவன் என்ன செய்ய முடியும்?”
ஜான்சன் ஒருவித தயக்கத்துடன் சொன்னார். “எனக்கு என்னவோ அந்த பசுபதி ஈஸ்வர் கிட்ட சிவலிங்கம் பற்றி சொல்லச் சொன்னதும் அவனும் அதை வச்சு அங்கே வந்திருக்கறதும் ஒரு மாதிரியாவே இருக்கு குருஜி. இதெல்லாம் தற்செயலா நடக்கற விஷயங்களா எனக்கு படலை”
இதைக் கேள்விப்பட்ட போது முதலில் இதே மனநிலையில் தான் குருஜி இருந்தார் என்ற போதும் அதில் இருந்து தற்போது மீண்டிருந்த அவர் ஜான்சனுக்கு தைரியம் சொன்னார். “கவலைப்பட எதுவுமே இல்லை ஜான்சன்... சிவலிங்கம் இப்பவும் நம்ம கைல தான் இருக்குங்கறதை மறக்க வேண்டாம். நமக்குத் தெரிஞ்ச அளவு அவனுக்கு சிவலிங்கம் பத்தி தெரியவும் தெரியாது. அவன் விரும்பினால் கூட நம்மகிட்ட சிவலிங்கம் இருக்கிறதை கண்டுபிடிக்கவோ நெருங்கவோ முடியாது.”
ஜான்சன் குருஜி மீது ஆழமான நம்பிக்கை வைத்திருந்ததால் அவர் சொன்னதில் தைரியம் அடைந்தார். ”அந்தப் பையன் கணபதி கிட்ட எதுவும் பிரச்சினை இல்லையே...”
குருஜி சிரித்துக் கொண்டே சொன்னார். “கணபதி சிவலிங்கத்து கிட்ட தொடர்ச்சியாய் பேசிகிட்டே இருக்கிறதாக கேள்விப்பட்டேன். அந்த சிவலிங்கத்தோட சக்தி கூட கணபதி வாயை அடைக்க முடியலை”
”ஒருத்தன் செத்துப் போயிட்டான். இன்னொருத்தன் ஓடிப் போயிட்டான். ஆனால் கணபதி சிவலிங்கத்தால எந்தப் பாதிப்பும் இல்லாமல் இருக்கிறான்ங்கறதே பெரிய விஷயம் இல்லையா குருஜி”
”ம்ம்ம்”
”குருஜி அந்தக் கணபதியை பூஜை செய்யறதுக்கு மட்டுமில்லாமல் நம்ம ஆராய்ச்சிக்கும் உபயோகப்படுத்திகிட்டா என்ன?”
”அவனுக்குத் தெரியாமல் அவனை நாம் எப்படி வேணும்னாலும் உபயோகப்படுத்திக்கலாம். ஆனால் அவனுக்குத் தெரிஞ்ச பிறகு உபயோகப் படுத்திக்க முடியாது ஜான்சன். அது ஆபத்து...”
“சரி அப்படின்னா நம்ம ஆராய்ச்சி சமயங்கள்ல அவனை என்ன செய்யறது குருஜி..”
“அது ஒரு பெரிய விஷயம் இல்லை ஜான்சன். அதை நான் பார்த்துக்கறேன்..”
”சரி குருஜி. நீங்க எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் போய் சிவலிங்கத்தைப் பாருங்க. போயிட்டு வந்து உங்க கருத்தைச் சொல்லுங்க. நான் காத்துகிட்டு இருப்பேன்....”
குருஜி போனை வைத்து விட்டு அந்த மனிதனிடம் சொன்னார். “அந்த ஈஸ்வர் ஜான்சனுக்கு ஒரு பிரச்சினையா தான் தெரியறான். அவன் இங்கே எத்தனை நாள் லீவுல வந்திருக்கான்னு தெரியுமா?”
“ஒரு மாச லீவுன்னு கேள்விப்பட்டேன்”
“நீ அவனைப் பத்தி என்ன நினைக்கிறே?”
”எதுவும் தன்னால முடியும்னு நினைக்கிறவன் அவன். அது மத்தவங்க விஷயத்துல எப்படியோ இவன் விஷயத்துல நிஜம்னு தான் தோணறது... இப்ப அவனை விட அதிகமா கவலைப்பட வேண்டிய விஷயம் வேற ஒன்னு இருக்கு குருஜி. நீங்க ஜான்சன் கிட்ட பேசி முடியற வரைக்கும் சொல்ல வேண்டாம்னு இருந்தேன்”
குருஜி கேள்விக்குறியோடு அவனைப் பார்த்தார். “என்ன அது”
அந்த மனிதன் ஒன்றுமே சொல்லாமல் ஒரு சிடியை எடுத்து குருஜி அறையில் இருந்த கம்ப்யூட்டரில் போட்டான். அது சிவலிங்கத்தைக் கண்காணிக்க அவர்கள் வைத்திருந்த ரகசிய கேமராவில் இருந்து எடுக்கப்பட்ட பதிவின் சிடி. அவன் ஆரம்பத்துக் காட்சிகளை விரைவுபடுத்தி விட்டு கடைசி காட்சி வந்ததும் நிறுத்தி அந்தக் காட்சியை தொடர விட்டான்.
“மன்னிச்சுக்கோ கொஞ்சம் நேரமாயிடுச்சு” என்று கணபதி சிவலிங்கத்திடம் சொல்லிக் கொண்டு இருந்தான். அவன் வெளியே போய் விட்டு வந்தது போல் தோன்றியது. அவன் கையில் ஒரு பூக்கூடை இருந்தது.
கணபதி பூக்கூடையை சிவலிங்கத்தின் முன் வைத்து விட்டு ”இதோ வந்துடறேன். கோவிச்சுக்காதே” என்று சொல்லி விட்டுப் போனான்.
அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த குருஜியிடம் அந்த மனிதன் சொன்னான். ”அந்தப் பூக்கூடையைப் பாருங்க”
பார்த்த குருஜி கண்கள் திகைப்பில் விரிந்தன. இமயமலைச்சாரல்களில் மட்டுமே அதிலும் திபெத் பகுதியில் தான் காணப்படுவதாகச் சொன்ன அபூர்வக் காட்டுப்பூக்கள் கணபதி வைத்து விட்டுப் போன பூக்கூடையில் நிறைந்து இருந்தன.
(தொடரும்)
Labels:
பரம(ன்) ரகசியம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment