Tuesday, May 27, 2014

பரம(ன்) ரகசியம் 14







ந்த வேத பாடசாலை பதினெட்டு ஏக்கரில் அமைந்திருந்த்து. அதனுள்ளே ஒதுக்குப்புறமாக இருந்த ஒரு தனிக்கட்டிடத்தின் முன்பாகக் கார் கடைசியாக நின்ற போது தான் கணபதி கண்விழித்தான். கண்களைக் கசக்கிக் கொண்டு காரில் இருந்து கீழே இறங்கிய அவன் சுற்றும் முற்றும் பார்த்தான். வெகு தொலைவில் வகுப்பறைகளும், தங்கும் அறைகளும் இருந்தன. மற்ற இடங்களில் எல்லாம் பச்சைப் பசேலென்ற மரம், செடி கொடிகள், புல்வெளிகள் என்று அழகான இயற்கைக் காட்சிகள் தெரிய கணபதி ஒரு கணம் மெய் மறந்து நின்று அந்த அழகை ரசித்தான்.

உள்ளே வாங்கஎன்று பொறுமையிழந்த குரல் கேட்டது. கணபதி திரும்பினான். காரை ஓட்டி வந்தவன் கட்டிட முன் வாசற்கதவைத் திறந்து வைத்துக் கொண்டு அவனுக்காகக் காத்திருந்தான். இன்னொருவன் முன்பே உள்ளே போயிருந்தான். கணபதி தன் துணிப்பையை எடுத்துக் கொண்டு அவசரமாக உள்ளே நுழைந்தான்.  

உள்ளே ஒரு பெரிய ஹாலும் அதனைத் தாண்டி ஒரு பூஜை அறையும் இருந்தது. பக்கவாட்டில் ஒரு படுக்கை அறையும், குளியலறையும் இருந்தன.  பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்த சிவலிங்கத்தைத் தொலைவில் இருந்தே இருவரும் கை காட்டினார்கள். அபூர்வமான பூக்களால் அலங்கரிக்கப் பட்டிருந்த சிவலிங்கத்தை ஆர்வத்துடன் கணபதி பார்த்தான். அந்த சிவலிங்கம் குருஜி சொன்னது போல சக்தி வாய்ந்தது போலத்தான் அவனுக்கும் தோன்றியது. ஏதோ ஒரு சிலிர்ப்பை அவன் உணர்ந்தான்.

அந்த சிலிர்ப்பை அவர்கள் இருவரும் சற்று பீதியோடு பார்த்தார்கள். ஆனால் அவன் முகத்தில் எந்த வித பய உணர்ச்சி தென்படாதது அவர்களுக்கு ஆசுவாசத்தை அளித்தது.

சுற்றும் முற்றும் பார்த்த கணபதி அருகில் இருந்த குளியலறையைக் கவனித்து சென்று கை கால் கழுவிக் கொண்டு வந்தான். 

காரோட்டி அங்கு ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்த ஒரு கூடைப் பூக்களை எடுத்து கணபதியிடம் தந்து விட்டு சொன்னான். “பூஜைக்கு வேண்டிய மத்த சாமான் எல்லாம் உள்ளேயே இருக்கு. நீங்க போய் பூஜையை முடிச்சீங்கன்னா இந்த வேத பாடசாலையை உங்களுக்கு சுற்றிக் காட்ட குருஜி சொல்லி இருக்கார்....

குருஜிக்குத் தன் மீது இருந்த அன்பை நினைத்து ஒரு கணம் கணபதி நெகிழ்ந்தான். பூக்கூடையை வாங்கிக் கொண்டு பூஜை அறையை நோக்கி நடந்த கணபதியை அந்த சிவலிங்கம் காந்தமாக இழுப்பது போலத் தோன்றியது. மிகுந்த பக்தியுடன் அவன் அந்த சிவலிங்கத்தைப் பார்த்த அவன் பூக்கூடையை கீழே வைத்து விட்டு பூஜை அறைக்கு வெளியிலேயே சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினான்.

“அப்பனே சிவனே. உன் சக்திக்கேத்த மாதிரியோ, எனக்குத் தினமும் கிடைக்கப் போகிற ஐநூறு ரூபாய்க்கேத்த மாதிரியோ எனக்கு பெரிசா எல்லாம் பூஜை செய்யத் தெரியாது. தெரிஞ்சதை பக்தி சிரத்தையா செய்யறேன். குற்றம் குறை இருந்தா தயவு செஞ்சு பொறுத்துக்கோ...மானசீகமாக வேண்டிக் கொண்டு எழுந்தவன் பூக்கூடையை எடுத்துக் கொண்டு உள்ளே போனான்.

உள்ளே சிவலிங்கத்தை அலங்கரித்துக் கொண்டிருந்த அபூர்வப் பூக்களை எடுத்தபடியே கேட்டான். “இந்த மாதிரி பூக்கள நான் இது வரைக்கும் பார்த்ததே இல்லையே. இப்ப குடுத்த பூக்கூடைல கூட இந்த மாதிரி பூ இல்லையே. இந்தப் பூ எல்லாம் எங்கே வாங்கினது....?

நேத்து வேத பாடசாலைக்கு வந்த வடநாட்டுக்காரர் ஒருத்தர் குடுத்துட்டுப் போனார். அவருக்கு எங்கிருந்தோ கிடைச்சுதாம்....கூசாமல் ஒரு பொய்யைச் சொன்னான் காரோட்டி.

அந்தப் பதிலிலேயே திருப்தி அடைந்த கணபதி பூஜையை ஆரம்பிக்க, அவர்கள் இருவரும் அவனையே ஒருவித பரபரப்புடன் பார்த்தனர். அவன் என்னேரமும் ஓடிவந்து விடலாம் என்று அவர்கள் எதிர்பார்த்தனர்.
அவர்கள் அவனையே பார்ப்பது கணபதிக்கு கூச்சமாய் இருந்தது. அவனுக்கு சரியாகப் பூஜை செய்ய வருகிறதா என்று அவர்கள் கண்காணிப்பது போல அவனுக்குத் தோன்றியது. அவன் லேசாக நெளிய அவர்கள் ஒருமித்த குரலில் கேட்டார்கள். “என்ன ஆச்சு?”.  இதற்கு  முன் ஓடிப்போனவனின் அனுபவம் அறிந்திருந்த அவர்களுக்கு அவனது ஒவ்வொரு வித்தியாசமான அசைவும் சந்தேகத்தைக் கிளப்பியது...

“ஒண்ணுமில்லை... நான் உங்க மாதிரி அதிகமா எல்லாம் வேதம், பூஜை எல்லாம் படிக்கலை... அதனால் தெரிஞ்ச மாதிரி செய்யறேன்..என்று கணபதி வெளிப்படையாகச் சொல்ல அவர்கள் தலையாட்டினார்கள்.

“பிரச்சினை ஒன்னும் இல்லையே?காரோட்டி சந்தேகம் தீராமல் கேட்டான்.

எனக்கு ஒண்ணும் இல்லை... இவருக்கு எப்படின்னு தெரியலைஎன்று சிவலிங்கத்தைக் காட்டி விட்டு கணபதி கலகலவென்று சிரித்தான். அவர்கள் அவனை ஒரு மாதிரி பார்த்தார்கள்.

அப்போது தான் தன் தவறை உணர்ந்த கணபதி மானசீகமாய் சிவனிடம் மன்னிப்பு கேட்டான். “மன்னிச்சுக்கோ. உன் பிள்ளை கிட்ட இப்படித் தான் கொஞ்சம் கிண்டலாய் பேசிகிட்டிருப்பேன். பழக்க தோஷத்துல அப்படியே சொல்லிட்டேன்...

பின் பூஜையை முழு மனதோடு செய்ய ஆரம்பித்த கணபதி பூஜை முடிகிற வரை அவர்கள் இருவர் பக்கம் பார்வையைத் திருப்பவில்லை. குருஜி சொன்னது போல அவன் எந்தப் பாதிப்பும் இல்லாமல் இருந்தது அவர்கள் இருவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

கணபதி பூஜையை முடித்த பிறகு காரோட்டி அவனை வேத பாடசாலையைச் சுற்றிக் காட்ட அழைத்துச் செல்ல, அவர்கள் சென்ற அடுத்த நிமிடம் ரகசியக் காமிராவைப் பொருத்த அவசர அவசரமாக இருவர் உள்ளே நுழைந்தனர்.


பார்த்தசாரதி பரமேஸ்வரனின் வீட்டுக்கு வந்து தனித்தனியாக இது வரை மூன்று பேர்களை விசாரித்து நான்காவதாக பரமேஸ்வரனிடம் விசாரித்துக் கொண்டிருந்தார். விசாரித்து முடித்த மூவரான விஸ்வநாதன் – மீனாட்சி தம்பதியரும், அவர்கள் மகன் மகேஷும் பசுபதியிடம் பிரத்தியேகத் தொடர்பு வைத்திருந்தது போலத் தெரியவில்லை. மிக அபூர்வமாக அவர்கள் பரமேஸ்வரனுடன் சேர்ந்து போய் சம்பிரதாயமாக ஒருசில முறை பசுபதியைப் பார்த்து வந்திருக்கிறார்களே அல்லாமல் மற்றபடி எந்தத் தொடர்பும் வைத்திருக்கவில்லை.

நான்காவதாக விசாரித்த பரமேஸ்வரன் தான் மாதம் ஒரு முறையாவது போய் அண்ணனைச் சந்தித்தவர். அதனால் அவரிடம் விசாரிக்க அவர் அதிக நேரம் எடுத்துக் கொண்டார். அவரும் முன்பு விசாரித்த போலீஸ்காரர்களிடம் சொன்னதை மட்டுமே ஆரம்பத்தில் பார்த்தசாரதியிடம் சொன்னார். பின் கூடுதலாகத் துருவித் துருவிக் கேட்ட பிறகு தான் அவர் கடைசி சந்திப்பின் போது பசுபதி சொன்னதைச் சொன்னார். என்னேரமும் மரணம் வந்து விடலாம் என்றும், சிவலிங்கத்திற்கு ஏதாவது ஆகிவிடலாம் என்றும் முன் கூட்டியே தம்பியிடம் பசுபதி சொல்லி இருந்தது பார்த்தசாரதியை ஆச்சரியப்பட வைத்தது. அப்போது அண்ணன் சொன்னதைப் பெரிதாக பரமேஸ்வரன் எடுத்துக் கொள்ளவில்லை என்பது அவருக்கு இயல்பாகவே தோன்றியது.

“உங்க பேரன் கிட்ட சொல்லச் சொன்னது எதற்காகன்னு நினைக்கிறீங்க? உங்க பரம்பரையிலயே சிவலிங்கம் இருக்கணும்கிறதற்காகவா, இல்லை வேறெதாவது காரணமும் இருக்கலாம்னு நினைக்கிறீங்களா?

“தெரியலை

“இதற்கு முன்னால் உங்க பேரன் அந்த சிவலிங்கத்தைப் பார்த்திருக்காரா?
பரமேஸ்வரன் லேசான தயக்கத்திற்குப் பின் சொன்னார். “என் மகன் காதல் கல்யாணம் பண்ணினதுக்கு அப்புறம் என் குடும்பத்துக்கும் அவனுக்கும் எந்த்த் தொடர்பும் இருக்கலை. ஈஸ்வர் இந்தியாவுக்கு இது வரைக்கும் வந்தது கூட இல்லை...

“உங்க பேரன் கிட்ட விஷயம் சொன்னதுக்கு அவர் என்ன சொன்னார்?

நாளைக்கு வர்றான்?

“நீங்க சொன்னதை அவர் எப்படி எடுத்துகிட்டார்?

பதில் சொல்ல சில வினாடிகள் கூடுதலாக பரமேஸ்வரன் எடுத்துக் கொண்டார். அவனுக்கும்  அதிர்ச்சி தான்

நாளை வரப் போகிற ஈஸ்வரிடம் விசாரிக்க வேண்டும் என்று மனதில் குறித்துக் கொண்ட பார்த்தசாரதி கேட்டார். “அப்புறம் வேறெதாவது இந்த வழக்குக்கு சம்பந்தமாய் நீங்கள் சொல்ல மறந்தது ஏதாவது இருக்கா? பெரிய விஷயம் இல்லைன்னு உங்களுக்குத் தோணறது கூட உண்மைல முக்கிய தகவலாய் கூட இருக்கலாம்.....

பரமேஸ்வரன் யோசித்தார். பிறகு அண்ணன் பிணத்தைப் பார்க்க வந்த மனிதர்கள் மத்தியில் பார்த்த சித்தரைப் பற்றிச் சொன்னார்.

பார்த்தசாரதி சந்தேகத்துடன் கேட்டார். இத்தனை வருஷத்துக்குப் பிறகு அந்த ஆள் உயிரோட இருந்திருப்பாரா? நீங்கள் பார்த்த்து அந்த ஆளாய் தான் இருக்குமா?

அந்த சித்தர் கண்களை என்னால் மறக்க முடியாது சார். நெருப்பாய் ஜொலிக்கிற கண்கள்... பார்த்தவுடனே மனசுல பதியறது அந்தக் கண்கள் தான். அதனால நான் பார்த்த்து கண்டிப்பாய் அவராய் தான் இருக்கணும்
பார்த்தசாரதிக்கு முனுசாமி ஒரு இரவில் பார்த்ததாய் சொன்ன சம்பவம் நினைவுக்கு வந்தது. அப்படியானால் அவன் பார்த்தது போதையின் விளைவு அல்ல, நிஜமாகவே இருக்க வேண்டும்.

“அந்த சித்தர் அடிக்கடி உங்கண்ணாவைப் பார்க்க வருவாரோ?

“தெரியலை. இப்ப யோசிச்சுப் பார்க்கறப்ப அவர் வந்திருக்கலாம்னு தோணுது

பார்த்தசாரதி ஏழெட்டு மாதங்களுக்கு முன் பசுபதியைப் பார்க்க விரும்பிய  இரண்டு மர்ம நபர்களைப் பற்றி பரமேஸ்வரனிடம் சொன்னார்.

பரமேஸ்வரனுக்கு அந்தத் தகவல் அதிர்ச்சியாகவே இருந்தது. “அண்ணா அந்த சம்பவத்தைப் பற்றி என் கிட்ட சொல்லக் கூட இல்லை. அவசியம் இல்லைன்னு நினைச்சிருக்கலாம்.....

“ஒரு வெளிநாட்டு ஆசாமி உங்கண்ணாவைப் பார்க்க வர என்ன காரணம் இருக்கும்னு நினைக்கிறீங்க?

“தெரியலை

“அந்த சிவலிங்கம் தான் காரணமாய் இருக்கணும்னு நான் நினைக்கிறேன். நீங்க என்ன நினைக்கிறீங்க?

இருக்கலாம்

“அந்த சிவலிங்கம் பத்தின முழு உண்மைகளும் வெளி வரலை. அது வந்தால் தான் இந்த வழக்குல நாம் முன்னேற முடியும்....சொல்லி விட்டு பார்த்தசாரதி பரமேஸ்வரனை ஆழமாகப் பார்த்தார்.

பரமேஸ்வரன் வெளிப்படையாகச் சொன்னார். “அந்த சிவலிங்கம் பத்தி முழுசா தெரிஞ்சவங்க எங்கப்பாவும், எங்கண்ணாவும் மட்டும் தான். ஓரளவு சிவலிங்கம் வந்தப்ப நான் சின்னவன். எனக்கு எட்டு வயசு தான் இருக்கும். அந்த சிவலிங்கம் பத்தி தெரிஞ்சுக்கற ஆர்வம் எனக்கு சுத்தமா இருக்கல....

“உங்கம்மாவுக்குத் தெரிஞ்சிருக்குமா?

அம்மாவுக்கும் இந்த மாதிரி விஷயங்களைத் தெரிஞ்சுக்கறதுல ஆர்வம் இருக்கலை... எத்தனையோ தடவை அப்பா அது பத்தி அம்மா கிட்ட பேச ஆரம்பிச்சப்ப எல்லாம் அது அவங்களுக்குள்ளே சண்டைல தான் முடிஞ்சு இருக்கு. அண்ணா சாமியார் மாதிரி ஆனதுக்கு அந்த சிவலிங்கம் தான் காரணம்னு அம்மா நினைச்சதால அதைப் பத்தி கேட்கக் கூட அம்மாவுக்குப் புடிக்கலை....

“உங்கப்பா என்ன சொல்ல வந்தார்னு நினைவு இருக்கா?

“இல்லை... அவர் சொல்ல வந்தப்ப அம்மா போட்ட சண்டை தான் ஞாபகம் இருக்கு.. அப்படி சொன்னதைப் புரிஞ்சுக்கற வயசோ, ஆர்வமோ எனக்கு அப்ப இருக்கலை

“ஆனா உங்கப்பா என்ன சொல்ல வந்தாருங்கறதை உங்கம்மா நினைவு வச்சிருப்பாங்க இல்லையா?

“எங்கம்மாவுக்கு மறதிங்கறதே கிடையாது...

பரமேஸ்வரனை அனுப்பிய பார்த்தசாரதி அடுத்த்தாக ஆனந்தவல்லியை விசாரிக்கத் தயாரானார்.

ஆனந்தவல்லி வந்தாள். அவள் அணிந்திருந்த பட்டுப்புடவையும், ஏராளமான நகைகளும் ஏதோ கல்யாண வீட்டுக்கு அவள் போகத் தயாராக இருந்தது போன்ற அபிப்பிராயத்தை அவரிடம் ஏற்படுத்தியது. நடையில் தளர்ச்சி தெரிந்தாலும் முகத்தில் அது தெரியவில்லை. கண்களை லேசாகக் குறுக்கிக் கொண்டு அவரையே உற்றுப் பார்த்தபடி ஆனந்தவல்லி அவர் எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்தாள்.

பார்த்தசாரதிக்கு அவரது ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியையை ஆனந்தவல்லி நினைவுபடுத்தினாள். அவளும் இப்படித்தான் முகத்தில் சிறிதும் மலர்ச்சி இல்லாமல் மாணவர்களை உற்றுப் பார்ப்பாள். அமர்ந்தவுடன் அவரது அபிப்பிராயத்தை அவள் வலுவாக்கினாள். “ஏம்ப்பா... குற்றவாளியைக் கண்டுபிடிச்சுட்டீங்களா?

அவள் அவரை ஒருமையில் அழைத்து அப்படிக் கேள்வி கேட்டதை அவரால் ரசிக்க முடியவில்லை. “இன்னும் இல்லை....

‘என்ன வேலை பார்க்கிறீர்கள்என்பது போன்ற அதிருப்தியை ஆனந்தவல்லி படர விட்டாள். அது, கொடுத்த வேலையை சரிவரப் பார்க்கவில்லை என்று முதலாளி தொழிலாளி மீது காட்டும் அதிருப்தி போல பார்த்தசாரதிக்குத் தெரிந்தது. அவர் ஒரு உயர் போலீஸ் அதிகாரி என்ற மரியாதை சிறிதும் அவளிடம் இல்லாமல் இருந்தது அவருக்கு எரிச்சலைத் தந்தது. பரமேஸ்வரன் கூட அவரிடம் அப்படி இருக்கவில்லை. பணிவு காட்டா விட்டாலும் அவரை கௌரவமாகத் தான் நடத்தினார். ஒரு ஜமீந்தாரின் மகள், ஒரு தொழிலதிபரின் மனைவி, ஒரு மிகப்பெரிய தொழிலதிபரின் தாய் என்று ஆரம்பத்தில் இருந்தே மேலான அந்தஸ்தில் இருந்த திமிரோ இந்தம்மாளுக்கு?

ஆனந்தவல்லி அம்மா, உங்களுக்கும் இறந்து போன உங்கள் மகனுக்கும் இடையே மனஸ்தாபம் இருந்ததுன்னு கேள்விப்பட்டேனே? அது உண்மையா?பார்த்தசாரதி கேட்டார்.

ஆனந்தவல்லி கோபத்துடன் திரும்பக் கேட்டாள். “எவன் சொன்னது?

பார்த்தசாரதி திகைத்துப் போனாலும் சமாளித்தார். “விசாரணையில் கிடைக்கிற தகவல்கள் எங்கிருந்து கிடைச்சுதுன்னு நாங்க சொல்லக் கூடாது. அது உண்மையா இல்லையான்னு சொல்லுங்க.

ஆனந்தவல்லி இதற்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டுமா என்பது போல் பார்த்தாள். 

பார்த்தசாரதி சொன்னார். “உங்க மகனை நீங்க பல வருஷமாய் பார்க்கல, அவரு பிணத்தைப் பார்க்கக் கூட நீங்க போகல...

ஆனந்தவல்லி கண்களில் அக்னி தெரியக் கேட்டாள். “நீ கேட்கற கேள்விக்கும் இந்த வழக்குக்கும் என்ன சம்பந்தம்? என் மகனை நானே கொன்னிருக்கலாம்னு நினைக்கிறியா?

ஆனந்தவல்லிக்கு வயது எண்பத்தி எட்டானாலும் கோபப்பட்ட போது சுமார் பதினெட்டு வயது குறைந்து தெரிந்தாள். அதிகாரியிடம் பேசும் போது முதலில் மரியாதை கொடுத்து பேசப் பழகுங்கள் என்று சொல்லத் தோன்றினாலும் இத்தனை வயதானவளிடம் அப்படி மரியாதையைக் கேட்டு வாங்குவதே அசிங்கமாக பார்த்தசாரதிக்குப் பட்டது. யோசித்த போது தான் கேள்வி கேட்ட விதமும் சரியில்லை என்று அவருக்குத் தோன்றியது. எல்லாம் தோரணையாலேயே அவள் அவரை சண்டைக்கு இழுத்ததன் விளைவு....

பொறுமையை வரவழைத்துக் கொண்டு பார்த்தசாரதி சொன்னார். “ஆனந்தவல்லி அம்மா. நான் சொன்னதை நீங்க தப்பா புரிஞ்சுகிட்டீங்கன்னு நினைக்கிறேன். அசாதாரணமா தோணற எல்லா விஷயங்களுக்கும் காரணம் கேட்டுத் தெரிஞ்சுக்கறது எங்களுக்கு முக்கியம். ஏன்னா அதுல ஏதாவது துப்பு கிடைக்கலாம். அதனால தான் கேட்கறேன். ஒரு தாய் கிட்டத்தட்ட ஐம்பது வருஷங்களுக்கு மேல மகனைப் பார்க்காமல் இருக்கறதோ, மகன் செத்த பிறகு பிணத்தைப் பார்க்காமல் இருக்கறதோ இயல்பானதா இல்லைங்கறதால கேட்கறேன்....

ஆனந்தவல்லி ஓரளவு சமாதானமானவளாகச் சொன்னாள். “ஒரு தாய் தன்னை முதல் முதல்லா அம்மான்னு கூப்பிட்ட குழந்தையை எந்தக் காலத்துலயும் வெறுக்க முடியாதுப்பா. அதுலயும் பசுபதி மாதிரி பத்தரை மாத்துத் தங்கத்தை அவன் தாயாலயே வெறுக்க முடியுமா? அவன் சாமியார் மாதிரி மாறினது பிடிக்கலை. அந்த நிலைமைல பார்த்து அடிக்கடி மனசை ரணமாக்கிக்க பிடிக்காததால அவனைப் பார்க்காம இருந்தேன். கடைசியா அவனாவே என்னை வரச் சொல்லிக் கூப்பிட்டான். போனேன். அப்பவும் அவனை நல்லா திட்டினேன். அவன் அப்பவும் கோவிச்சுக்கல....

ஆனந்தவல்லி குரல் உடைந்து போனது. ஆனால் உடனடியாகத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்ட அவள் மென்மையான குரலில் சொன்னாள். பொறுமையா இருந்தான்... உடம்பை எப்படி எல்லாம் பார்த்துக்கணும்னு சொன்னான்.. அன்னிக்கு என் பிள்ளையா மட்டும் இருந்தான்.. அந்த நினைவோடவே மீதி வாழ்க்கைய முடிச்சுக்கணும்னு முடிவு செஞ்சுகிட்டேன். கடைசியா அந்த நினைவுக்கு மேல அவன் பிணத்தைப் பார்த்த நினைவை வச்சுக்க விரும்பலை... அதுவும் கொலை செய்யப்பட்ட கோலத்தைப் பார்க்கற சக்தி எனக்கு இருக்கலை... இல்லை..

முதல் முறையாக ஒரு தாயாக, மென்மையானவளாக அவளைப் பார்த்த அவருக்கு மனம் இளகியது. இவளிடம் எந்த முக்கியத் தகவலையும் கோபமூட்டி வாங்க முடியாது என்ற பாடம் கற்றவராய் பார்த்தசாரதி சிவலிங்கம் பற்றிய கேள்விகளை மென்மையாகக்  கேட்க ஆயத்தமானார். மறதி என்பதே கிடையாது என்று பெயரெடுத்த ஆனந்தவல்லிக்கு அது பற்றி நிறைய தெரிந்திருக்க வேண்டும் என்று அவரது உள்ளுணர்வு சொல்லியது.

(தொடரும்)

No comments:

Post a Comment