மகேஷ் வந்து சேரும் வரை விஸ்வநாதனுக்கு ஈஸ்வரை அருகில் இருந்து கொண்டு கூர்மையாகக் கவனிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படிக் கவனித்த போது அவரால் ஈஸ்வரை மெச்சாமல் இருக்க முடியவில்லை. குற்ற உணர்வால் அவன் பாதிக்கப்பட்டு இருந்தாலும் கூட அவன் முழுக் கட்டுப்பாட்டுடனும், ஆளுமைத் திறன் சிறிதும் குறையாமலும் இருந்தான்.
வீட்டுக்குக் கிளம்பிக் கொண்டிருந்த டாக்டரிடம் மீண்டும் சென்று ஈஸ்வர் பரமேஸ்வரனின் உடல்நிலையின் முழு விவரங்களைக் கேட்டு வந்தான். அவரிடம் அந்த விவரங்களைச் சொன்னான். ”அந்த ஸ்கேன் ரிப்போர்ட்டையும் மற்ற ரிப்போர்ட்களையும் நான் பார்க்கணும்னு சொன்னேன், அவர் அனுப்பி வைக்கிறேன்னு சொன்னார்”
அந்த ஸ்கேன் ரிப்போர்ட்டுகளை ஒரு இளம் நர்ஸ் சிறிது நேரத்தில் கொண்டு வந்து ஈஸ்வரிடம் தந்தாள். அந்த நர்ஸ் ஈஸ்வரால் நிறையவே ஈர்க்கப் பட்டதாக விஸ்வநாதனுக்குத் தோன்றியது. பார்க்க அழகாகவும் இருந்த அந்த நர்ஸ் அடிக்கடி அவன் பார்வையில் படுகிற மாதிரி நடமாடியதையும், அவன் பார்த்த போது கவர்ச்சியாகப் புன்னகை செய்ததையும் விஸ்வநாதன் கவனிக்கவே செய்தார்.
அவள் அவனிடம் அந்த ஸ்கேன் ரிப்போர்ட்டுகளைத் தந்து விட்டு மிக அருகில் நின்ற போது ஈஸ்வர் “தேங்க்ஸ் சிஸ்டர்” என்று மரியாதையாகச் சொன்னான். அவன் குரலில் அந்த சிஸ்டருக்கு ஒரு அழுத்தம் இருந்தது. அவள் ஒரு அடி பின்னுக்கு நகர்ந்தாள். ஒருவித ஏமாற்றம் அவள் முகத்தில் தெரிந்தாலும் அவள் தன்னை சுதாரித்துக் கொண்டு ”வெல்கம்” என்று இனிமையாகச் சொல்லி விட்டுப் போனாள்.
இதில் அவன் தன்னைப் பற்றி உயர்வாகவும் அவளைப் பற்றித் தாழ்வாகவும் நினைக்கவில்லை. அவன் இந்த ஈர்ப்பு இயல்பு என்பதாக எடுத்துக் கொண்டது போல விஸ்வநாதனுக்குத் தோன்றியது. அதே நேரத்தில் அவள் அழகாக இருக்கிறாளே என்பதற்காக நிலைமையைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு சிறிது நேர சீண்டல்களைக் கூடச் செய்யாமல், அவளைக் கையாண்ட விதத்தில் தன் கௌரவத்தை நிலை நிறுத்தி, அவளுடைய கௌரவத்தையும் காப்பாற்றி மரியாதையாக நடத்திய நுணுக்கமான விதத்தில் அவன் தனித்தன்மை தெரிந்தது. தாத்தாவின் உடல்நிலையால் ஏற்பட்டிருந்த இந்த கவலை சூழ்நிலையால் மட்டுமல்ல, மற்ற சாதாரண சூழ்நிலைகளிலும் அவன் இப்படியே தான் நடந்து கொண்டிருப்பான் என்று அவருக்குத் தோன்றியது.
அவன் அவரிடம் அந்த ரிப்போர்ட்டுகளைக் காட்டி மேலும் ஏதேதோ விளக்கினான். பரமேஸ்வரன் மிகுந்த அபாயக் கட்டத்தில் தான் இருக்கிறார் என்பதைத் தவிர விஸ்வநாதனுக்கு வேறு எதுவும் விளங்கவில்லை. அவன் திரும்பவும் அந்த நர்ஸிடம் அந்த ரிப்போர்ட்டுகளைத் தந்து விட்டு மறுபடி நன்றி சொல்லி விட்டு வந்தான். அவள் புன்னகையுடன் அதை வாங்கிக் கொண்டாள். இப்போது அவள் புன்னகையில் கவர்ச்சி போய் கண்ணியம் தெரிந்தது.
பரமேஸ்வரன் பிழைத்துக் கொண்டால் இவனை அலட்சியம் செய்ய முடியாது என்பது விஸ்வநாதனுக்குப் புரிந்தது. அவர் சங்கரை ஒதுக்கினார். சங்கரும் ஒதுங்கிக் கொண்டான். ஆனால் சங்கரின் மகன் ஒதுக்க முடிந்தவனும் அல்ல, ஒதுங்கக் கூடியவனும் அல்ல. புத்திசாலித்தனம், பக்குவம், ஆளுமைத் திறன் இவைகளில் எந்தக் காலத்திலும் மகேஷ் இவனுக்கு இணையாக முடியாது என்பதும் அவருக்குப் புரிந்தது. அந்த நிஜம் அவருக்கு வலித்தது.... கடவுள் பாரபட்சமானவர், சிலருக்கு எல்லாவற்றையும் தந்து விடுகிறார், சிலருக்கோ எதுவும் தருவதில்லை என்று தோன்றியது...
மகேஷ் வந்தான்... அவன் முகத்தில் களைப்பு தெரிந்தது. “எங்கே போயிட்ட நீ?” விஸ்வநாதன் கேட்டார்.
“ப்ரண்ட்ஸ் கூட இருந்தேன்... தாத்தாவுக்கு என்ன ஆச்சு?” முன்பே விஸ்வநாதன் சொல்லி இருந்தாலும் புதிதாகக் கேட்பவன் போலக் கேட்டான்.
””ஹார்ட் அட்டேக்” என்றார் விஸ்வநாதன். மகேஷ் கண்களில் இருந்து தாரை தாரையாய் கண்ணீர் வழிய ஆரம்பித்தது. “தாத்தா.... தாத்தா” என்று அவன் கதறினான். ஐ.சி.யூவிற்கு வெளியே அமர்ந்திருந்த வேறு சிலர் அவனை இரக்கத்தோடு பார்த்தார்கள். விஸ்வநாதன் அவனைத் தோளில் தட்டி சமாதானப்படுத்தினார். விஸ்வநாதனுக்கு உள்ளூர ஒரு பெருமை எழுந்தது. ‘இதில் அவர் மகனுக்கு ஈஸ்வர் இணையாக முடியாது’. இந்த ஒன்றிலாவது அவர் மகன் ஈஸ்வரை மிஞ்சுகிறானே!
அவனை அப்படியே வராந்தாவின் எதிர்பக்க ஆளில்லாத மூலைக்கு விஸ்வநாதன் அழைத்துக் கொண்டு போனார். அங்கு போனவுடன் மகேஷ் தந்தையிடம் கேட்டான். “அம்மா எங்கே?”
”வீட்டுக்குப் போயிருக்கா! கிழவி அங்கே தனியா இருக்கறதால துணைக்கு அங்கே போய் இருக்கச் சொல்லி ஈஸ்வர் அனுப்பிச்சிட்டான்”
”இவனால தான் தாத்தாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்திருக்குங்கறதை அம்மாவும், கிழவியும் எப்படி எடுத்துகிட்டாங்க”
“உங்கம்மாவுக்கு இவன் மேல இரக்கம் தான் இருக்கு. கிழவி என்ன நினைக்கிறாங்கறதை எப்பவுமே வெளிப்படுத்திக்கிறதில்லையே”
“தாத்தா பிழைப்பாரா?”
“ஸ்கேன் ரிப்போர்ட்டுகளைப் பார்த்தா அவர் பிழைக்கிறது கஷ்டம் தான்னு தோணுது. ஒரு வேளை அவருக்கு ஏதாவது ஆயிட்டா அப்புறமா கிழவியும் ரொம்ப நாள் இருக்க மாட்டா. அவளுக்கு சின்ன மகன்னா தான் உயிரு”
கேட்கவே மகேஷுக்கு இனிமையாக இருந்தது. ’ஒரே கல்லில் இரண்டு மாங்காய்... இல்லையில்லை.... ஈஸ்வரையும் சேர்த்தால் மூன்று மாங்காய். உன்னால் தான் இத்தனையும்னு குற்றம் சாட்டி அமெரிக்காவிற்கே துரத்தி விட இது நல்ல வாய்ப்பு’ என்று மகேஷ் நினைத்தான்.
மகனின் எண்ண ஓட்டத்தை ஊகித்த விஸ்வநாதன் புன்னகைத்தார். ”நான் கிளம்பறேன் மகேஷ். நீ இங்கே இரு. ஏதாவது தகவல் இருந்தால் தெரிவி” என்று சொல்லி விட்டுக் கிளம்பினார். மகேஷ் ஈஸ்வரிடம் பேசும் போது அவர் கூட இருந்தால் அவனைக் கட்டுப்படுத்த வேண்டி வரும்... அவர் மகேஷைக் கட்டுப்படுத்த விரும்பவில்லை....
விஸ்வநாதன் ஈஸ்வரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினார். அவர் போன பின் மகேஷ் ஈஸ்வரிடம் சத்தமாகக் கேட்டான். “இப்ப உனக்குத் திருப்தியா?... இதுக்காக தானே நீ இத்தனை நாள் காத்துகிட்டிருந்தே.”
அங்கிருந்தவர்கள் அவர்கள் பக்கம் திரும்ப ஈஸ்வர் “மெள்ள பேசு” என்றான்.
“நான் எதுக்கு மெள்ள பேசணும்? அவருக்கு ஏதாவது ஆச்சுன்னா நான் சும்மா இருக்க மாட்டேன்... ஆமா. சொல்லிட்டேன்” மறுபடியும் சத்தமாய் மகேஷ் சொன்னான்.
“தாத்தாவுக்கு ஒன்னும் ஆகாது” என்று அமைதியாக ஈஸ்வர் சொன்னான்.
மகேஷிற்குத் தான் கேள்விப்பட்டது தவறோ என்ற சந்தேகம் எழுந்தது. “டாக்டர் வேற மாதிரி சொன்னதாயில்ல அப்பா சொன்னார்”
”தாத்தா பிழைக்கறதுக்கு முப்பது சதவீதம் சான்ஸ் இருக்கறதா டாக்டர் சொன்னார். நூறு சதவீதம் சான்ஸ் இல்லைன்னு சொன்னா தான் கவலைப்படணும். முப்பது சதவீதம் சான்ஸ் இருக்குன்னா நம்ம எல்லாரோட பிரார்த்தனையும் சேர்ந்து அவரை அந்த முப்பது சதவீதத்துக்கு அவரை இழுத்துகிட்டு வந்துடும்.” ஈஸ்வர் அமைதியாகச் சொன்னான்.
”ஓ பிள்ளையையும் கிள்ளிட்டு தொட்டிலையும் ஆட்டி விடுவியா நீ. அவரை இந்த நிலைமைக்குக் கொண்டு வந்துட்டு அவர் பிழைக்கணும்னு நீ பிரார்த்தனையும் செய்வியா” மகேஷ் சொல்லி விட்டுத் தலையை இரண்டு கைகளாலும் பிடித்துக் கொண்டான். அடுத்த கணம் அவன் குமுறி குமுறி அழுதான்.
அங்கிருந்தவர்கள் மகேஷை இரக்கத்துடன் பார்த்தார்கள். ஓரக்கண்ணால் அதைப் பார்த்த மகேஷிற்குத் திருப்தியாக இருந்தது.
“மகேஷ், அவர் எனக்கும் தாத்தா தான். ஞாபகம் வச்சுக்கோ” ஈஸ்வர் சொன்னான்.
ஈஸ்வர் சொன்ன வாசகமே மகேஷிற்குக் கசந்தது. அவன் பொறுக்க முடியாதவன் போலக் கத்தினான். “ஓ அப்படியா. இத்தனை நாள் நீ ஒரு தடவையாவது அவரை தாத்தான்னு கூப்பிட்டிருப்பியா? ஒரு நாள் அவர் கிட்ட நீ அன்பா பேசியிருப்பியா?....” மகேஷ் மறுபடி கத்தினான்.
அவனையே பார்த்துக் கொண்டிருந்த ஈஸ்வருக்கு அவன் எண்ணம் புரிந்தது. அமைதியாய் தாழ்ந்த குரலில் உறுதியாய் சொன்னான். ”இத்தனை நாள் வரைக்கும் ஒரு மாசத்துல அமெரிக்கா திரும்பிப் போயிடணும்னு தான் நினைச்சிருந்தேன். இன்னொரு தடவை நீ கத்திப் பேசினேன்னா நான் நிரந்தரமா இங்கேயே தங்கிடுவேன். தாத்தாவுக்கு என்ன ஆனாலும் சரி .... எனக்கு வர வேண்டிய சொத்தை வாங்காமல் இங்கிருந்து நகர மாட்டேன்... எப்படி வசதி?”
மகேஷ் ஈஸ்வரையே திகிலுடன் பார்த்தான். அவன் விளையாட்டுக்குச் சொல்லவில்லை என்பதை அவன் முகபாவனை சொன்னது. யோசித்துப் பார்த்த போது இனி வாயைத் திறக்காமல் இருப்பது புத்திசாலித்தனம் என்று மகேஷின் அறிவு எச்சரித்தது. “என்ன மாதிரி ஆளு நீ” என்று வெறுப்புடன் மெல்ல சொன்னவன் அதன் பிறகு மௌனமானான்.
பரமேஸ்வரன் மயக்க நிலைக்கும் விழிப்பு நிலைக்கும் மாறி மாறி சென்று கொண்டிருந்தார். விழிப்புணர்விற்கு வரும் போதெல்லாம் இதயத்தில் பெரிய பாரத்தை அவர் உணர்ந்தார். ஐசியுவின் உள்ளே நர்ஸ்களின் நடமாட்ட சத்தமும் பேச்சுச் சத்தமும் கேட்டது. மயக்க நிலைக்குச் செல்லும் போதோ திரும்பத் திரும்ப ஈஸ்வர் அவரைத் தாத்தா என்றழைப்பது போல் கேட்டது. அத்துடன் அவன் சொன்னதும் திரும்பத் திரும்ப காதில் விழுந்தது. “நான் இனிமே கண்டிப்பா எங்கப்பா பத்தி பேச மாட்டேன் தாத்தா. சாரி. உங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா எங்கப்பா என்னை மன்னிக்க மாட்டார் தாத்தா. ப்ளீஸ் எனக்காக குணமாயிடுங்க தாத்தா”.
அந்த வார்த்தைகள் அவர் இதயத்தை அறுப்பது போல அவர் உணர்ந்தார். அவனுடைய கோபமான வார்த்தைகளை விட அதிகமாக இந்த வார்த்தைகள் அவரைக் காயப்படுத்தின. சொல்ல முடியாததொரு சோகம் அவரை ஆட்கொண்டது. கோபத்திலும் சரி துக்கத்திலும் சரி பேரன் பயன்படுத்தும் வார்த்தைகள் சக்தி வாய்ந்தவையாக இருக்கின்றன. ஒருவனின் இதய ஆழம் வரைக்கும் பயணிக்க வல்லவையாக இருக்கின்றன....
திடீரென்று திருநீறின் மணம் அவரை சூழ்ந்தது. அந்த மணம் அவருக்கு மிகவும் பரிச்சயமானது. தோட்ட வீட்டில் அண்ணனைப் பார்க்கச் செல்கிற போதெல்லாம் அந்த மணத்தை அவர் சுவாசித்திருக்கின்றார். மெல்ல அவர் கண்களைத் திறந்து பார்த்தார்.
பசுபதி ஒளிவெள்ளத்தின் நடுவே நிற்பது தெரிந்தது. இறந்து விட்டோமா என்ன, அண்ணனிடம் வந்து சேர்ந்திருக்கிறோமே என்ற எண்ணம் அவருக்கு வந்தது. ”அண்ணா” என்றழைத்தார்.
பசுபதி தம்பியைப் பார்த்து புன்னகை செய்தார். காயப்பட்ட மனதில் அண்ணனைப் பார்த்ததும் அமைதிப்படுத்தும் ஆறுதலை பரமேஸ்வரன் உணர்ந்தார். அண்ணனிடம் தெரிவிக்க அவருக்கு நிறைய விஷயங்கள் இருந்தன. முக்கியமாய் முதலில் ஈஸ்வரைப் பற்றி அண்ணனிடம் சொல்லத் தோன்றியது. “அண்ணா என் பேரன் ஈஸ்வர் பார்க்க அப்படியே நம் அப்பா மாதிரியே இருக்கான்... பார்க்க மட்டும் தான் அவர் மாதிரி, குணத்தில் அப்பா மாதிரி சாதுவாக எல்லாம் இல்லை.... ரொம்பவே நல்லவன் தான்.... பிடிச்சவங்க கிட்ட நம்ம அப்பா மாதிரியே மென்மையா நடந்துக்குவான்.... ஆனா கோபம் யார் மேலயாவது வந்துட்டா பேச்சு எல்லாம் நம்ம அம்மா மாதிரி கூர்மையாய் தயவு தாட்சணியம் இல்லாமல் இருக்கும்....”
அம்மா பேச்சு பற்றி சொன்னதும் அண்ணன் புன்னகை மேலும் விரிந்ததாகப் பரமேஸ்வரனுக்குத் தோன்றியது. அவரும் புன்னகை செய்தார். திடீரென்று அண்ணனிடம் சிவலிங்கம் திருட்டுப் போன விவரம் பற்றிப் பேசவில்லை என்ற நினைவு வர அது பற்றிப் பேச அவர் வாயைத் திறந்தார். ஆனால் அதற்கு முன் பசுபதி தம்பியின் உடலைத் தொட்டார். அண்ணனின் கைகள் அவர் உடலைத் தொட்டவுடன் உடலில் மின்சாரம் பாய்ந்தது போல பரமேஸ்வரன் உணர்ந்தார். அவர் சொல்ல வந்த வார்த்தைகள் வாயிலேயே தங்கி விட்டன. பரமேஸ்வரன் நினைவிழந்தார்.
ஐசியுவில் இருந்து வெளியே நர்ஸ் ஓடி வந்த போது தாத்தாவின் நிலைமை மோசமாகப் போய் விட்டது என்பது மகேஷிற்குப் புரிந்தது.
எழுந்து நின்று “என்ன ஆச்சு?” என்று மகேஷ் நர்ஸைக் கேட்டான். ஆனால் அவனுக்குப் பதிலேதும் சொல்லாத அவள் ஓடிப்போய் டியூட்டி டாக்டரிடம் ஏதோ சொல்ல அவர் ஐசியூவிற்கு விரைந்து செல்ல நர்ஸ் பெரிய டாக்டருக்குப் போன் செய்து பேச ஆரம்பித்தாள். பேசி விட்டு அவளும் ஐசியூவிற்கு ஓட மகேஷ் அவளை வழி மறித்து கேட்டான். “என் தாத்தாவுக்கு என்ன ஆச்சு?”
“சீஃப் டாக்டர் இப்ப வந்துடுவார். அது வரை எதுவும் சொல்ல முடியாது” என்று சொல்லி விட்டு நர்ஸ் ஐசியூவினுள் நுழைந்தாள்.
மகேஷ் ஈஸ்வரிடம் கேட்டான். “இப்ப உனக்கு திருப்தியா?”. வெறுப்புடன் கேட்ட போதும் அவன் குரல் தாழ்ந்தே இருந்தது.
“பொறுமையா இரு” என்று ஈஸ்வர் சொன்னான்.
”அவர் தோள்ல வளர்ந்தவன் நான். என்னால் பொறுமையாய் இருக்க முடியாது” என்று குரலில் பெரும் துக்கத்தை வரவழைத்த மகேஷ் உடனடியாகத் தந்தைக்குப் போன் செய்தான்.
“அப்பா, தாத்தா நிலைமை சீரியஸ் போலத் தெரியுது. சீஃப் டாக்டர் வராமல் எதுவும் சொல்ல முடியாதுன்னு சொல்றாங்க. எதுக்கும் நீங்க அம்மாவையும், பாட்டியையும் இப்பவே கூட்டிகிட்டு வர்றது நல்லதுன்னு நினைக்கிறேன்”
விஸ்வநாதன் அப்போது தான் வீடு போய் சேர்ந்திருந்தார். உடனே அவர்களை அழைத்து வருவதாக மகனிடம் சொன்ன அவர் மனைவியிடம் மகேஷ் சொன்னதைச் சொன்னார்.
மீனாட்சி அதிர்ந்து போனாள். அவள் காலின் கீழுள்ள நிலம் திடீரெனப் பிளந்து விட்டது போல உணர்ந்தாள். கண்கள் கடலாக அப்படியே நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.
விஸ்வநாதன் மனைவியை சிறிது நேரம் தேற்றி விட்டுச் சொன்னார். “நீயே இப்படி தளர்ந்துட்டா உன் பாட்டியை நாம் எப்படி சமாதானப்படுத்தறது? முதல்ல அவங்களைக் கூட்டிகிட்டு கிளம்பு. பெரிய டாக்டர் இனிமேல் தான் வரணுமாம். அவங்களால முடிஞ்சதை அவங்க செய்யாமல் இருக்க மாட்டாங்க. தைரியப்படுத்திக்கோ”
மீனாட்சி தன்னை ஓரளவு சுதாரித்துக் கொண்டு மெல்ல பாட்டி அறைக்குப் போனாள். “மகேஷ் போன் செஞ்சான். நம்மளை எல்லாம் வரச் சொன்னான். ஒரு தடவை போயிட்டு வந்துடலாமா பாட்டி”
ஆனந்தவல்லி பேத்தியையே சிறிது நேரம் வெறித்துப் பார்த்தாள். பின் மூத்த மகனின் புகைப்படத்தை சிறிது முறைத்துப் பார்த்து விட்டு எழுந்தாள். பேத்தி கைத்தாங்கலாகப் பிடித்துக் கொள்ள ஆனந்தவல்லி இளைய மகனைப் பார்க்கக் கிளம்பினாள்.
காரில் போகும் போது மீனாட்சியால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால் ஆனந்தவல்லி கண்களில் இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் கிளம்பவில்லை.
அதைக் கவனித்த விஸ்வநாதன் ஆச்சரியப்பட்டார். மகனுக்கு ஏதாவது ஆகிவிட்டால் கிழவி தாங்க மாட்டாள், நிறைய நாள் இருக்க மாட்டாள் என்று மகேஷிடம் சொன்னதை மானசீகமாக விஸ்வநாதன் வாபஸ் வாங்கிக் கொண்டார்.
’கிழவி இன்னும் பல பேரை அனுப்பாமல் சாக மாட்டாள் போல இருக்கிறதே!’
(தொடரும்)
No comments:
Post a Comment