Thursday, June 12, 2014

பரம(ன்) ரகசியம் – 72

விமான நிலையத்தில் கனகதுர்காவிற்காக அவர்கள் காத்திருந்தார்கள். ஈஸ்வருக்கு பரமேஸ்வரனும் ஆனந்தவல்லியும் கூட அந்த அதிகாலையில் எழுந்து தயாராகி வந்தது மனநிறைவை ஏற்படுத்தி இருந்தது. அவன் அம்மாவிற்கு மறுபடியும் அந்த வீட்டிலும், வீட்டு மூத்தவர்களிடமும் அங்கீகாரம் கிடைத்தது மட்டுமல்ல நேசத்தோடு அவளை வரவேற்கவும் வந்திருப்பது இப்போதும் கனவு போல் நம்ப சிரமமாகத் தான் இருந்தது. பெருமிதத்தோடு பரமேஸ்வரனையும், ஆனந்தவல்லியையும் பார்த்தான்.

ஆனந்தவல்லியோ பின்னால் தள்ளி நின்றிருந்த விஷாலியை “நீ ஏன் அங்கே நிற்கறே. நீ எங்க வீட்டுப் பொண்ணு தான். என் பக்கத்துல வந்து நில்என்று அழைப்பதில் மும்முரமாக இருந்தாள்.

விஷாலி தயக்கத்துடன் ஈஸ்வரை ஓரப்பார்வை பார்த்தாள். அவனுக்கு அவள் வந்ததே பிடிக்கவில்லை என்று தெரியும். ஆனந்தவல்லி தான் அவளை வலுக்கட்டாயமாக அழைத்து வந்திருந்தாள். அதனால் தான் வேறு வழியில்லாமல் வந்த அவள் முடிந்த வரை விலகியே இருக்க நினைத்தாள். ஆனால் ஆனந்தவல்லி அதற்கும் அனுமதிக்கவில்லை.

ஈஸ்வர் முகத்தைக் கடுகடுவென்று வைத்திருந்தான். அதைக் கவனித்த பரமேஸ்வரன் தாயிடம் தாழ்ந்த குரலில் சொன்னார். “நீ ஏன் அவளைக் கட்டாயப்படுத்தறே. அவனுக்குப் பிடிக்கலை பார்

ஆனந்தவல்லி தாழ்ந்த குரலில் மகனிடம் சொன்னாள். உன் மருமகள் என்னைப் பார்க்க வர்றதை விட அதிகமாய் அவள் மருமகளைப் பார்க்க தான் வர்றா. அதனால் தான் அவளைப் பக்கத்துல கூப்பிடறேன். உன் பேரனைப் போகச் சொல்லு

நீ இத்தனை நாள் அவன் கட்சில இருந்தே. இப்ப விஷாலி பக்கம் சேர்ந்துட்டே. என்ன ஆச்சு?

“நான் எப்பவுமே அவன் பக்கம் தான். அவன் காதலியை அவன் கூட சேர்த்து வைக்கத் தாண்டா இந்தப்பாடு படறேன். மனசுல இருந்து அவளை எடுக்க முடியாமல் அவன் தவிக்கிறான். பிடிக்காத மாதிரி நடிக்கிறான். லூஸுடா உன் பேரன்...சொல்லிக் கொண்டே விஷாலியைக் கையைப் பிடித்து இழுத்து தன் பக்கத்தில் நிற்க வைத்துக் கொண்டாள்.

பேரனை லூஸு என்று அழைத்ததற்காகத் தாயைக் கோபத்துடன் பரமேஸ்வரன் பார்த்தார். ஆனந்தவல்லி வேறு பக்கம் வேடிக்கை பார்த்தாள். ‘இவன் நேசிக்கிறவர்களை யாரும் ஒரு வார்த்தை தாழ்த்திச் சொல்லிடக்கூடாது

ஈஸ்வருக்கு அன்று விஷாலி தனி அழகோடு இருப்பதாக மனம் சொன்னது. அவள் மட்டும் அன்று அவனை அநியாயமாக அவமானப்படுத்தி இருக்கவில்லையானால் கண்டிப்பாக அவளை ஆனந்தவல்லி பக்கம் நிற்க அனுமதித்திருக்க மாட்டான். தன் பக்கம் அவளை இருக்க வைத்திருப்பான். அவளை அம்மாவிடம் அறிமுகப்படுத்த துடித்திருப்பான். “எப்படி இருக்கிறது எங்கள் ஜோடிப்பொருத்தம் என்று ஆவலோடு கேட்டிருப்பான்.  ஒரு அழகான உணர்வை விஷாலி அவமானப்படுத்தி விட்டாள். ஒரு முறை உடைந்த கண்ணாடியை மீண்டும் ஒட்ட வைக்க முடியாது....

அவன் மனம் அந்த உவமானத்தை ஏற்க மறுத்தது. அது வேறு உவமானம் சொன்னது. நீரடித்து நீர் விலகாது என்றது. அந்த உவமானத்தைச் சொன்னதற்காகவும், அவள் அழகாக இருப்பதை ரசிப்பதற்காகவும் அவன் மனதையே அவனுக்குப் பிடிக்கவில்லை.

கனகதுர்காவின் விமானம் வந்தது. எல்லோரையும் விட அதிகமாக மீனாட்சி பரபரத்தாள். மனதிற்குள் அண்ணனிடம் சொன்னாள். “அண்ணா உன் மனைவியை வரவேற்க அப்பா, பாட்டி எல்லாம் வந்திருக்காங்க பார்த்தாயா? நீயும் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்...”  நினைக்க நினைக்க அவள் கண்கள் கலங்கின.

கனகதுர்கா விமான நிலையத்தில் தன் மகனையும் மீனாட்சியையும் மட்டுமே எதிர்பார்த்திருந்தாள். மாமனாரையும், ஆனந்தவல்லியையும் எதிர்பார்த்திருக்கவில்லை. இருவரும் வயதானவர்கள் உடல்நிலை சரியில்லாதவர்கள். அதையும் மீறி அவர்கள் அங்கு அவளை வரவேற்க வந்திருந்தது அவள் மனதை நெகிழ வைத்தது. அவளாலும் அந்தக் கணத்தில் கணவனை நினைக்காமல் இருக்க முடியவில்லை. “பார்த்தீங்களா யாரெல்லாம் வந்திருக்காங்கன்னு..!

வந்தவள் விமானநிலையம் என்றும் பார்க்காமல் மாமனார் காலைத் தொட்டு வணங்கினாள். பரமேஸ்வரன் கண்கலங்கினார். மருமகளின் இரு கைகளையும் பிடித்துக் கொண்டு தன் கண்களில் ஒற்றிக் கொண்டார். இப்படிப்பட்ட மருமகளைப் பூவும் பொட்டுமாகப் பார்க்கும் பாக்கியத்தை தன் வறட்டு கௌரவத்தால் இழந்து விட்டோமே என்ற பச்சாதாபம் அவருக்குப் பலமாக எழுந்தது. கனகதுர்காவிற்கும் கண்கள் ஈரமாகின.

ஆனந்தவல்லியையும் காலைத் தொட்டு வணங்கிய அவளுக்கு இந்தப் பாட்டி சாகப் போகிற நிலையில் இருப்பதாகத் தெரியவில்லையே என்ற எண்ணம் வந்தது. அதை உணர்ந்தது போல ஆனந்தவல்லி சொன்னாள். “நீ வர்றதா கேள்விப்பட்டதுமே என் உடம்பு நல்லாயிடுச்சு
மீனாட்சி அண்ணியைக் கட்டியணைத்துக் கொண்டு அழுதாள். ஈஸ்வர் தாயைப் பெருமிதத்தோடு பார்த்தான். கனகதுர்காவுக்கு மகனைப் பார்த்த போது சந்தோஷமாக இருந்தது. என்ன தான் தினமும் போனில் பேசினாலும் இந்த சில நாட்கள் பிரிவே அவளுக்கு கஷ்டமாகத் தான் இருந்திருந்தது. மகனை ஒரு கையால் இழுத்து அணைத்துக் கொண்டாள். அவளது மறு கைப்பக்கம் ஆனந்தவல்லி விஷாலியை லேசாகத் தள்ளினாள்.

“இது விஷாலி! தென்னரசு பொண்ணு

குருஜி வீடியோ கான்ஃப்ரன்ஸிங்கில் அந்த ஆறு பேருடன் பேசிக் கொண்டு இருந்தார். அந்த அறுவர் முகமும் தெளிவாகத் தெரியாதபடி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர்களிடம் அலெக்ஸி விவகாரத்தை பாபுஜி சொல்லி இருந்ததால் எல்லாம் கட்டுப்பாட்டிற்குள் தான் இருக்கிறதா என்ற சந்தேகம் அவர்களுக்கு வந்திருந்தது. அவர்கள் குருஜி வாயால் தற்போதைய நிலவரத்தை அறிந்து கொள்ள ஆசைப்பட்டார்கள். உதயன் தயவால் போலீசார் பார்வையில் இருந்து தப்பி விசேஷ மானஸ லிங்கத்தைப் பத்திரமாக அங்கு கொண்டு வந்து சேர்த்ததை பாபுஜி அவர்களிடம் முன்பே தெரிவித்திருந்தார். அந்த நிகழ்வு அவர்களுக்கு ஆச்சரியத்தையும் நம்பிக்கையையும் ஊட்டியது என்றால் அலெக்ஸியின் அனுபவம் அவர்களுக்கு கவலையையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தி இருந்தது.

அமெரிக்கர் குருஜியிடம் வெளிப்படையாகச் சொன்னார். “குருஜி. எங்களால் அந்த சிவலிங்கத்தைப் புரிந்து கொள்ல முடியவில்லை

குருஜி அமைதியாகச் சொன்னார். “உங்களால் புரிந்து கொள்ள முடிந்திருந்தால் அது விசேஷ மானஸ லிங்கமாக இருந்திருக்காது. அதன் விசேஷமே அறிவால் உணர முடியாமல் இருப்பது தான்

இஸ்ரேல்காரர் சொன்னார். “ஆரம்பத்தில் இருந்தே எங்களுக்கு சிவலிங்கம் பற்றி கிடைத்திருக்கும் தகவல்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக இருக்கிறது குருஜி. ஒரு பக்கம் பார்த்தால் அது சுயமான சக்தி படைத்ததாக இருக்கிறது. இன்னொரு பக்கம் பார்த்தால் அப்படி இல்லை என்று தோன்றுகிறது. அதனால் எங்களால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. உதாரணத்துக்கு சொல்ல வேண்டுமானால் பசுபதியைக் கொல்லும் போது சிவலிங்கம் எந்த விதத்திலும் தடுக்கவில்லை. ஏன் பசுபதியே தடுக்கவில்லை... அப்போது சாதுவாக இருந்த சிவலிங்கம் திடீரென்று அந்தக்  கொலைகாரனைக் கொன்றிருக்கிறது....   நீங்கள் அதை எடுத்துக் கொண்டு வந்த போது ஒன்றும் செய்யாத சிவலிங்கம் இப்போது அலெக்ஸியை இழுத்திருக்கிறது. சரியான நேரத்துக்கு நீங்களும், ஜான்சனும் போயிருக்கா விட்டால் அலெக்ஸி இன்னேரம் செத்தே போயிருக்கலாம். அந்த சிவலிங்கத்தை மிகப்பெரிய சக்தியாக நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் அது இத்தனை காலம் பூஜை செய்த பசுபதியைக் கூட காப்பாற்றவில்லை... சரி சக்தியே இல்லையா என்றால் இன்னும் நீங்கள் கூட அதை நெருங்க முடியவில்லை.... எங்களுக்கு எப்படி எடுத்துக் கொள்வது என்று ஒன்றும் விளங்கவில்லை

ஜெர்மானியப் பெண்மணி கேட்டாள். “அந்த சிவலிங்கம் கல்லா, கடவுளா, வெறும் சக்தியா, இல்லை சித்தர்கள் செய்து வைத்த ஒரு ப்ரோகிராமா?

குருஜி புன்னகைத்தார். கடைசியாக அந்த ஜெர்மானியப் பெண்மணி உபயோகித்த வாக்கியம் முன்பு ஈஸ்வர் அவரிடம் சொன்னது தான். கண்டங்களைக் கடந்தும் மனிதர்கள் மூளை ஒரே  அனுமானத்திற்கு எப்படி தான் எட்டுகிறதோ!

குருஜி அமைதியாகவும் தெளிவாகவும் சொன்னார். “விசேஷ மானஸ லிங்கம் கடவுள் அல்ல. அதாவது உலகங்களை உருவாக்கியும், பாதுகாத்தும் வருகிற சக்தியைத் தான் நீங்கள் கடவுள் என்று சொல்கிறீர்கள் என்று நான் எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் நான் இதை உறுதியாய் சொல்ல முடியும். இந்த விசேஷ மானஸ லிங்கம் உருவாவதற்கு முன்பும் இந்த உலகம் இயங்கிக் கொண்டு தான் இருந்தது. ஆதி அந்தம் இல்லாதவன் இறைவன் என்று எங்கள் வேதங்கள் சொல்கின்றன. அது உண்மை தான் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.... இந்த விசேஷ மானஸ லிங்கத்திற்கு ஆரம்பம் உண்டு. ஒரு நாள் ஒரு முடிவும் உண்டு. அதனால் கண்டிப்பாக அது கடவுள் இல்லை.

“அது கண்டிப்பாகக் கல் அல்ல. நீங்களே சுட்டிக் காட்டியபடி அதை நெருங்க எங்களாலும் முடியவில்லை. நெருங்கிய ஒருவன் இறந்து விட்டான். இன்னொருவன் பைத்தியம் பிடித்தது போல் இருக்கிறான். நெருங்கப் போகும் போதே மிரண்டு போனவன் பற்றியும் உங்களிடம் பாபுஜி சொல்லி இருப்பார். அது ஒரு மகாசக்தி. அப்படி இல்லா விட்டால் அதை இத்தனை கஷ்டப்பட்டு நாம் கடத்தி இருக்க மாட்டோம். கல் அல்லாத, கடவுளும் அல்லாத, அந்த மகாசக்தி சித்தர்களால் உருவாக்கப்பட்டது ஒரு ப்ரோகிராமா, அவர்கள் நினைத்தபடி தான் இயங்குமா என்றால் இதற்கு ஒரே வார்த்தையில் ஆமாம் அல்லது இல்லை என்று பதில் சொல்லி முடித்து விடுவது கஷ்டம்...

குருஜி நிறுத்தி விட்டு சிறிது தண்ணீர் குடித்தார். வேறு வேறு நாடுகளில் இருந்து அவர் சொல்வதைக் கூர்ந்து கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த அந்த அறுவரைப் போலவே ஜான்சனும், தென்னரசுவும், பாபுஜியும் அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதை ஆவலாகக் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.  மகேஷிடம் மட்டும் அந்த ஆவல் இருக்கவில்லை. அவனுக்கு லேசான பயமும், சலிப்பும் மட்டுமே இருந்தது. அவன் குருஜியையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்...

குருஜி தொடர்ந்தார். தொடர்ந்து சிந்தித்து, தியானத்தில் ஆழ்ந்து சில முடிவுகளை அவரால் எட்டியிருக்க முடிந்திருந்தது. எனவே முன்பிருந்த ஒருசிலக் குழப்பங்கள் இப்போது தெளியப்பட்டு இருந்தன. எனவே சொல்வதை ஆணித்தரமாகச் சொன்னார். “....விசேஷ மானஸ லிங்கத்தை உருவாக்கிய சித்தர்கள் தங்கள் சக்திகளை எல்லாம் திரட்டி அதில் ஆவாகனம் செய்திருக்கிறார்கள். ஒரு காலத்தில் மனித சமுதாயம் பெரிய மாற்றத்தைச் சந்திக்கும், அந்த சமயத்தில் அந்த சக்தி அந்த மனித சமுதாயத்தைக் காப்பாற்றி வழிகாட்டும் என்பது தான் அவர்கள் நோக்கம்... அவர்கள் கணக்கு, அப்படியொரு காலம் வரும் போது அது மனிதர்கள் வசம் போகும் என்பதாக இருந்தது. அப்படிக் கை மாறும் விதம் இயற்கையாக இருக்காது என்று அவர்கள் அன்றைக்கே சொல்லி வைத்து விட்டுப் போயிருக்கிறார்கள். அதை சிலர் எழுதி வைத்து விட்டும் போயிருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட ஓலைச்சுவடியும் விதி வசமாக நம் கையில் கிடைத்திருக்கிறது....

“விசேஷ மானஸ லிங்கத்தின் சக்தி தேவைப்படும் வரை, அல்லது அதன் சக்தி பூரணமாய் முழுமையாகும் வரை, அது புனிதமானவர்களால் பூஜிக்கப் பட வேண்டும் என்று நினைத்த அவர்கள் மூன்று பேரை நியமித்து அது வழி வழியாகக் கடைபிடிக்கப்பட்டும் வந்திருப்பது உங்களுக்கும் தெரியும்... கடைசியாக அக்னி நேத்ர சித்தர், பசுபதி, சிதம்பரநாத யோகி என்ற மூன்று பேரிடம் வரும் வரை இந்த நியமனப்படியே நடந்து வந்தது.  கிட்டத்தட்ட பசுபதியும் சித்தருக்கு சமமானவர் தான். சிதம்பரநாத யோகியையும் அப்படியே சொல்லலாம். அந்தக் காலம் வரை தான் சித்தர்கள் ஆரம்பத்தில் முடிவு செய்த நியமன முறை வேலை செய்தது. முழுவதுமாக மனிதர்கள் கையில் அந்த சிவலிங்கம் மாறும் இந்தக் காலம் வந்த போது, மாற்றத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இந்த உலகம் வந்திருக்கிற போது, யாரால் அந்த சக்தி முழுமையாக உபயோகப்படுத்த முடியுமோ அவர்கள் கைக்கு அந்த சிவலிங்கம் வந்து சேர்ந்திருக்கிறது. இது தான் விதி. இது தான் அந்த சித்தர்களின் நோக்கம். இது தான் உங்கள் நவீன வார்த்தையில் சொல்வதானால் சித்தர்களின் ப்ரோகிராம்...

உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டே வந்த எகிப்தியர் கேட்டார். “ஆனால் பசுபதி அவர் தம்பி பேரன் ஈஸ்வரை நியமித்திருக்கிறார்.... சிதம்பரநாத யோகி கணபதியை நியமித்திருக்கிறார். அவனையே தான் விதிவசமாக நீங்களும் சிவலிங்கத்திற்குப் பூஜை செய்ய தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். மூன்றாவது ஆள் என்று ஒரு ஆளை அவர்கள் நியமித்திருக்கிறார்களா இல்லையா என்று தெரியவில்லை. இங்கே தான் எங்களுக்குக் குழப்பம் வருகிறது.

தென்னாப்பிரிக்கரும் சொன்னார். “ஆமாம்

குருஜி லேசாக சிரித்துக் கொண்டே சொன்னார். “அர்த்தபூர்வமாகச் செய்யும் காரியங்கள் வெறும் சம்பிரதாயமாக மாறிவிடும் போது அர்த்தம் இழந்து போகிறது. அந்தத் தவறைத் தான், ஈஸ்வரைத் தேர்ந்தெடுத்து, பசுபதி செய்து இருக்கிறார். அக்னி நேத்ர சித்தருக்கு மூன்றாவது ஆளைக் கண்டு பிடிக்கவே முடியவில்லை. சிதம்பரநாத யோகி நியமித்திருக்கிற கணபதிக்கோ எந்தப் பெரிய விஷயத்தையும் கிரகித்துக் கொள்ளும் சக்தியே இல்லை. பின் எப்படி அவன் மாதிரி ஆளால் உலகத்தைக் காப்பாற்றவோ, வழி நடத்தவோ முடியும். இப்படி இருக்கிறது அவர்கள் நியமனக் குழப்பம்….. அந்த நியமன முறை காலாவதியான பிறகும் அவர்களால் விட முடியவில்லை....

“அப்படியானால் இன்னும் அந்த கணபதி மாத்திரம் தான் அதைத் தொட முடிகிறது என்பது பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?–இஸ்ரேல்காரர் மறுபடியும் கேட்டார்.

குருஜி பாபுஜியிடம் முன்பு விவரித்த தீ-பாத்திரம் உதாரணத்தையும், மின்சாரம்-மரக்கட்டை உதாரணத்தையும் மறுபடியும் அவர்களிடம் சொல்லி விளக்கினார். அவர் சொன்னதில் அதற்கு மேல் அவர்களால் தவறு காண முடியவில்லை.

குருஜி தொடர்ந்து சொன்னார். “நாளை காலை மறுபடியும் ஆராய்ச்சிகளைத் தொடரப் போகிறாம். நாளை தியானம் செய்யும் போது மன அலைகளை அளக்கப் போகிறோம்.... விசேஷ மானஸ லிங்கத்துடன் ட்யூன் ஆக முடிவது எந்த அலைகளில் சாத்தியமாகப் போகிறது என்று குறித்துக் கொள்ளப் போகிறோம். நாளை மறு நாள் பிரதானமான ஆராய்ச்சி ஆரம்பமாகப் போகிறது....

அமெரிக்கர் சொன்னார். “நாங்கள் பிரதான ஆராய்ச்சியை இங்கிருந்தே பார்க்க ஆசைப்படுகிறோம். அது உங்கள் ஆராய்ச்சிக்குத் தடங்கல் ஆகாதே

குருஜி பின்னால் திரும்பி ஜான்சனைப் பார்த்தார். ஜான்சன் சொன்னார். “எந்த வித சத்தமும் உங்கள் பக்கம் இருந்து வராத வரை பிரச்சினை இல்லை

குருஜி மகேஷிடம் கேட்டார். “சத்தமே செய்தாலும் அது நமக்குக் கேட்காதபடி செய்ய முடியாதா என்ன?

மகேஷ் சொன்னான். “அதை ம்யூட் செய்து விடலாம். பிரச்சினை இல்லை.

குருஜி சொன்னார். “அப்படியானால் நீங்கள் அங்கிருந்தே தாராளமாய் பிரதான ஆராய்ச்சிகளை நாளை மறு நாள் முதல் பார்க்கலாம்

ஜெர்மானியப் பெண்மணி ஆர்வத்துடன் கேட்டாள். “நாளை மறுநாள் ஆரம்பிக்கும் பிரதான ஆராய்ச்சி என்ன குருஜி?

“நாளை சாயங்காலம் சொல்கிறோம்என்றார் குருஜி. அந்த அறுவராலும் காத்திருக்க முடியவில்லை. அதை அமெரிக்கரும், ஜெர்மானியப் பெண்மணியும் வாய் விட்டே சொன்னார்கள்.

பிரதான ஆராய்ச்சியின் ஆரம்பம் என்ன என்பதை குருஜியும், ஜான்சனும் தான் விவாதித்துக் கொண்டிருந்தார்களே ஒழிய அதை அவர்கள் இன்னும் முடிவு செய்திருக்கவில்லை. எனவே பாபுஜி, தென்னரசு, மகேஷ் உட்பட மற்றவர்கள் யாருமே அறியவில்லை என்பதால் அவர்களும் அதை அறிய பரபரப்போடு காத்திருந்தார்கள்.

(தொடரும்)

No comments:

Post a Comment