Sunday, June 8, 2014

பரம(ன்) ரகசியம் – 52

சாதாரண காலங்களில் சாமர்த்தியமாக இருக்கும் பலர் ஆபத்துக் காலங்களில் ஸ்தம்பித்துப் போய் விடுவதுண்டு. அப்படித்தான் விஸ்வநாதன், ஆனந்தவல்லி, மீனாட்சி மூவரும் பரமேஸ்வரனின் மாரடைப்பின் போது அதிர்ச்சியில் என்ன செய்வதென்று புரியாமல் சில நிமிடங்கள் செயலற்றுப் போய் இருந்தார்கள். ஆனால் ஈஸ்வர் மின்னல் வேகத்தில் இயங்கினான்.  அவனும் அதிர்ச்சியிலும், குற்ற உணர்விலும் பாதிக்கப்பட்டுத் தான் இருந்தான் என்றாலும் அது அவன் வேகமாக முடிவெடுக்கும் திறனையோ, அதனை செயல் படுத்தும் விதத்தையோ பாதித்து விடவில்லை. அடுத்த அரை மணி நேரத்தில் தாத்தாவை அவன் டாக்டர்களிடம் சேர்த்திருந்தான்.

ஐ.சி.யூ வின் வெளியே அமர்ந்திருந்த ஈஸ்வர், விஸ்வநாதன், மீனாட்சி  மூவரின் மனநிலைகளும் வேறு வேறு விதமாக இருந்தன.

ஈஸ்வர் பரமேஸ்வரனுக்கு உறைக்க வேண்டும், அவர் ஏதாவது பேசினால் நாக்கைப் பிடுங்குகிற படி கேள்வி கேட்க வேண்டும் என்று தான் நினைத்து இருந்தான். அவரை அவ்வளவு தூரம் நேசித்த அவன் தந்தையை என்றோ இறந்து விட்டதாக அவர் சொன்னதை அவனால் இன்னமும் ஜீரணிக்க முடியவில்லை. அதுவும் மகன் மரணத்தைத் தெரிவித்த மருமகளிடம் அவர் அப்படிச் சொல்ல முடிந்தது கல்நெஞ்சம் என்றே அவனுக்குத் தோன்றியது. ஆனாலும் சங்கர் கடைசி வரை தந்தையை கல் நெஞ்சனாக ஒப்புக் கொண்டதில்லை. அவனுடைய தந்தை சாந்தமானவரே ஒழிய இல்லாத ஒன்றை நம்பும் அளவு முட்டாள் அல்ல. அவன் தந்தை நினைத்ததும், அவர் தந்தை நடந்து கொண்டதும் ஒன்றுக்கொன்று முரண்பாடுகளாக இருந்தன. ஒரு மனோ தத்துவ நிபுணரான அவனுக்கு இந்த முரண்பாடுகளைப் புரிந்து கொண்டால் ஒழிய மண்டை வெடித்து விடும் போல இருந்தது. அதனால் தான் பரமேஸ்வரனின் உள் மனதில் உள்ளதை அறிய நினைத்து அவரிடம் அப்படி நடந்து கொண்டான். ஆனால் அவருக்கு மாரடைப்பு வந்தது அவனை குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்கியது. அவர் மேல் இருந்த அத்தனை பகைமையும் காணாமல் போனது.

ஒரு மனிதன் பெரிதாக நோய்வாய்ப் படும் தருணத்தில் ஆரம்பத்தில் உள்ள அவன் மன உறுதியோ, அல்லது தைரியக்குறைவோ அவன் சீக்கிரம் குணமடைவானா மாட்டானா என்பதை முக்கியமாய் நிர்ணயிப்பதாக இருக்கிறது என்று அவன் மிகவும் மதிக்கும் ஒரு வயதான மருத்துவர் அடிக்கடி சொல்வார். நோய் குணமாகி நலமடைய ஒருவனுடைய ஆழ்மனதில் ஒரு உறுதி இருக்குமானால் அவன் உடல் அந்தக் கட்டளைக்கு ஏற்ப குணமாக வேண்டிய அத்தனை வேலைகளையும் செய்யும் என்பார்.

எனவே பரமேஸ்வரனை ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போகையில் அவருக்கு நினைவு கொஞ்சமாவது இருக்கிறதோ இல்லையோ மீனாட்சியிடம் சத்தமாக அவன் சொல்லிக் கொண்டு வந்தான். “பயப்படாதீங்க அத்தை. தாத்தாவுக்கு ஒன்னும் ஆகாது. குணமாயிடுவார்.வழியில் அரைகுறையாய் அவர் கண்களைத் திறந்து பார்த்த போது “நீங்கள் குணமாயிடுவீங்க தாத்தா. நீங்கள் குணமாகணும்..... உங்களால தாக்குப் பிடிக்க முடியும்என்று சொன்னான்.

பின் குரல் உடைந்தவனாக ஈஸ்வர் அவரிடம் சொன்னான். “நான் இனிமே கண்டிப்பா எங்கப்பா பத்தி பேச மாட்டேன் தாத்தா. சாரி. உங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா எங்கப்பா என்னை மன்னிக்க மாட்டார் தாத்தா. ப்ளீஸ் எனக்காக குணமாயிடுங்க தாத்தா

கேட்டுக் கொண்டிருந்த மீனாட்சியால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஈஸ்வர் கண்களும் ஈரமாய் இருந்தாலும் அத்தையிடம், அவருக்குத் தெரிகிற மாதிரி அழ வேண்டாம் என்று சைகையால் தெரிவித்தான். பரமேஸ்வரன் காதில் அவன் சொன்னது விழுந்த்தா இல்லையா என்று தெரியவில்லை. அவர் கண்கள் மறுபடி மூடிக் கொண்டன. ஆஸ்பத்திரியில் தாத்தாவைச் சேர்த்த பின் அவர் கண்டிப்பாக நலமாக வீடு திரும்ப வேண்டும் என்று கடவுளிடம் மனமுருக பிரார்த்தனை செய்தான். அவருக்கு ஏதாவது ஆனால் மீனாட்சியையும், ஆனந்தவல்லியையும் நேருக்கு நேர் பார்க்க அவனால் முடியாது என்று தோன்றியது. இப்போதும் ஆனந்தவல்லியின் வெளிறிய முகம் அவனுக்கு நினைவுக்கு வந்தது. சில நாட்களுக்கு முன் தான் அவள் மூத்த மகனை இழந்திருக்கிறாள், இப்போது இளைய மகனுக்கு ஏதாவது ஆனால் அவள் அவனை மன்னிக்க மாட்டாள் என்று தோன்றியது. மீனாட்சியும் அவன் தந்தையைப் போலவே பரமேஸ்வரன் மீது பாசம் வைத்திருப்பவள். அவளும் அவனை வாய் விட்டு எதுவும் சொல்லா விட்டாலும் கூட அவள் துக்கமும் சாதாரணமாக இருக்காது....

மீனாட்சி சோகமே உருவாக அமர்ந்திருந்தாள். அவள் தாயைப் பார்த்ததில்லை. தாயாய், தந்தையாய், நண்பனாய், எல்லாமாய் ஆரம்பத்தில் இருந்து அவளுக்கு தந்தை தான் இருந்தார். அவள் வேண்டும் என்று  எதையாவது நினைத்து முடிக்கும் போது அவளிடம் அவர் கொண்டு வந்து சேர்த்திருந்தார். அவளுடைய அண்ணன் காதல் திருமணம் செய்து கொண்டு போன பின்னோ அவர் உலகம் முழுவதுமாக அவளாகத் தான் இருந்தது. அதனால் அவள் துக்கம் இயல்பாகவே அதிகமாக இருந்தது.

ஈஸ்வர் பேசிய பேச்சு அவரை அப்படி பாதித்தது அவளுக்கு அதிர்ச்சியையும் துக்கத்தையும் தந்தது என்றால், ஈஸ்வர் நான் இனிமே கண்டிப்பா எங்கப்பா பத்தி பேச மாட்டேன் தாத்தா. சாரி. உங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா எங்கப்பா என்னை மன்னிக்க மாட்டார் தாத்தாஎன்று சொன்னது அவள் இதயத்தை உருக்கியே விட்டது. ‘கடவுளே எனக்காக இல்லாட்டியும் ஈஸ்வருக்காகவாவது எங்கப்பாவைக் காப்பாற்றி விடு. பாவம் குழந்தை தன் மேல தான் தப்புன்னு வாழ்நாள் பூரா நினைக்கிற மாதிரி வச்சிடாதேஎன்று அவள் மனதில் பிரார்த்தித்துக் கொண்டாள்.
அவள் மகன் மகேஷ் இல்லாததும் அவளுக்கு வருத்தமாக இருந்தது. “மகேஷ் எங்கே தான் போயிட்டான்?என்று கணவனைக் கேட்டாள்.

தெரியலை. ரெண்டு தடவை ரிங் செய்தேன். ஸ்விட்ச்டு ஆஃப் மெசேஜ் தான் வருது. இரு.. இன்னொரு தடவை செஞ்சு பார்க்கிறேன்என்ற விஸ்வநாதன் அந்த வராந்தாவின் மறுகோடிக்குச் சென்று மறுபடி மகனைத் தொடர்பு கொள்ள முயற்சித்தார்.

மகேஷ் போய் இரண்டு நாளாகிறது. அவன் அவ்வப்போது ஓரிரு நாட்கள் தன் நண்பர்களுடன் தங்கிக் கொள்வது சகஜம். இந்த முக்கியமான தருணத்தில் அவன் இல்லாமல் இருப்பது அவருக்குப் பெரிய குறையாகத் தெரிந்தது. இந்த வீட்டில் ஈஸ்வர் கையோங்கிக் கொண்டிருக்கும் போது அடிக்கடி மகேஷ் காணாமல் போவது ஈஸ்வருக்கு அனுகூலமாகப் போகும் என்று அவர் நம்பினார். கிழவர் கண் முன்னால் மகேஷ் அனுசரணையாக இருப்பது முக்கியம் என்று அவர் நினைத்தார். ஈஸ்வர் தேளாக தாத்தாவைக் கொட்டுகையில் மகேஷ் அவர் மீது அன்பு மழை பொழிந்தால் சொத்தை தக்க வைத்துக் கொள்வது சுலபமாகி விடும் என்று விஸ்வநாதன் நினைத்தார்.

மகேஷ் சில சமயங்களில் இதெல்லாம் புரிவது போல நடந்து கொண்டாலும் சில சமயங்களில் பொறுப்பில்லாமல் அலட்சியமாக நடந்து கொள்கிறான் என்று அவருக்குத் தோன்றியது. இதை எல்லாம் அவரால் மனைவியிடம் கூடச் சொல்ல முடியவில்லை....

இந்த முறை போன் மணி அடித்தது.   மகேஷ் பேசினான். “ஹலோ

“எங்கேடா இருக்கே?

“ஏம்ப்பா? என்ன விஷயம்

நடந்ததைத் தெரிவித்த விஸ்வநாதன் “சீக்கிரம் வாடா. உன் தாத்தா பிழைச்சுட்டா ரொம்ப சுலபமாய் ஈஸ்வர் உன் இடத்தைப் பிடிச்சுக்குவான். இப்பவே அவன் அவரைத் தாத்தான்னு சொல்ல ஆரம்பிச்சாச்சு. உங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா எங்கப்பா என்னை மன்னிக்க மாட்டார்னு எல்லாம் சொல்லியாச்சு. இதெல்லாம் நடக்கறப்ப நீ எங்கேயோ இருக்கே. இப்படியே போச்சுன்னா நீ விலகியே இருக்க வேண்டியது தான்என்று பல்லைக் கடித்துக் கொண்டு சொன்னார்.

“நான் உடனே வர்றேன்ப்பாமகேஷ் பரபரப்போடு சொன்னான்.

திரும்ப மனைவி அருகே வந்தமர்ந்த விஸ்வநாதன் சொன்னார். “மகேஷ் கிடைச்சான். விஷயத்தை சொன்னேன். கேட்டு துடிச்சுப் போயிட்டான். உடனே வர்றதா சொன்னான்.

மீனாட்சி குரலடைக்கச் சொன்னாள். “அவனுக்கு தாத்தான்னா உயிரு

டாக்டர் அவர்களிடம் வந்தார். பரமேஸ்வரன் இதயத்தில் மூன்று அடைப்புகள் இருக்கின்றன என்றும், அவருடைய சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் இரண்டும் சரியான அளவிற்குக் கொண்டு வந்து உடனடியாக அறுவை சிகிச்சை செய்தால் பிழைக்க வாய்ப்பு உள்ளது என்றும் சொன்னார். ஆனால் அப்போதும் அவர் பரமேஸ்வரன் உயிருக்கு உத்திரவாதம் சொல்ல முடியாது என்பது போலச் சொன்னார். பரமேஸ்வரன் வயது, மற்ற விதங்களில் உடல்நிலையில் இருக்கும் கோளாறுகள் எல்லாம் சேர்ந்து உத்திரவாதம் தர முடியாத நிலையை உருவாக்கி இருப்பதாய் சொன்னார். ஈஸ்வர் என்ன செய்ய வேண்டுமோ அதை உடனடியாகச் செய்ய ஆரம்பியுங்கள்என்று அவரிடம் சொன்னான்.

எல்லாவற்றையும் அவனே தீர்மானித்துப் பேசுவது விஸ்வநாதனுக்குப் பிடிக்கவில்லை. மகேஷ் இருந்திருந்தால் இங்கே அவன் முக்கியத்துவம் பெற்றிருக்க முடியும் என்று தோன்றியது.

சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் இரண்டையும் சரியான அளவுக்குக் கொண்டு வந்து அறுவை சிகிச்சை செய்ய எப்படியும் நாளை ஆகிவிடும் என்பதால் ஈஸ்வர் மீனாட்சியை வீட்டுக்குப் போகச் சொன்னான். “பாட்டியும் வீட்டுல தனியாக இருக்காங்க அத்தை. நீங்க போயிட்டு நாளைக்கே வாங்க....

டாக்டர் சொன்னதைக் கேட்டு இடிந்து போய் அமர்ந்திருந்த மீனாட்சி அரை மனதோடு எழுந்தாள். பாட்டியின் தனிமை இப்படிப்பட்ட நேரத்தில் மிக வேதனையானது என்பதை அவளால் உணர முடிந்தது. ஈஸ்வர் சொன்னவுடன் மனைவி கிளம்பியதையும் விஸ்வநாதனால் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. இவனிடம் இயல்பாகவே தலைமைப்பண்பு உள்ளது. எல்லா சூழ்நிலைகளையும் தானே கையில் எடுத்துக் கொள்கிறான். இவனை சங்கர் போல அலட்சியமாக எடுத்துக் கொள்ள முடியாதுஎன்று அவருக்குத் தோன்றியது.

ஈஸ்வர் சொன்னான். “மாமா நீங்களும் போகிறதானால் போகலாம். எல்லாரும் இங்கே இருந்து எதுவும் செய்யப் போகிறதில்லை

“நான் மகேஷ் வருகிற வரைக்கும் இருக்கேன்என்று விஸ்வநாதன் உறுதியாகச் சொன்னார்.

மீனாட்சி வீட்டுக்கு வந்த போது ஆனந்தவல்லி ஹாலில் வாசலைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தாள். பேத்தியைப் பார்த்தவுடன் கேட்டாள். “உங்கப்பா எப்படிடி இருக்கான்? டாக்டர் என்ன சொல்றார்?

டாக்டர் சொன்னதை வருத்தத்தோடு பாட்டியிடம் மீனாட்சி தெரிவித்தாள். சொல்லச் சொல்ல மீனாட்சி அழுதாள். ஆனந்தவல்லி உள்ளே மிக தளர்ந்து போய் இருந்தாலும் வெளியே அதைக் காட்டிக் கொள்ளவில்லை. பேத்திக்கு தைரியம் சொன்னாள். “எல்லாம் சரியாயிடும்டி. கவலைப்படாதே

போகும் போது ஈஸ்வர் பரமேஸ்வரனிடம் குரலுடைந்து சொன்னதையும் மீனாட்சி பாட்டியிடம் சொன்னாள். கேட்ட ஆனந்தவல்லி முகம் மென்மையாகியது. அவள் மெல்ல தனதறைக்குக் கிளம்பினாள். அவள் நடை மிகவும் தளர்ந்திருந்ததைக் கவனித்த மீனாட்சி பாட்டியைக் கைத்தாங்கலாகப் பிடித்துக் கொண்டு வந்தாள்.

அறைக்குள் வந்தவுடன் ஆனந்தவல்லி பேத்தியிடம் சொன்னாள். “நீ போய் மத்த வேலையைக் கவனி மீனாட்சி

மீனாட்சி பாட்டியைத் தனியாக விட்டுப் போக தயக்கம் காட்டினாள்.

தன் நாற்காலியில் அமர்ந்து கொண்ட ஆனந்தவல்லி சொன்னாள். “எனக்கு தனியா இருக்கணும் போல இருக்கு...

அதற்கு மேல் அங்கே தங்கினால் பாட்டி எரிந்து விழுவாள் என்று புரிந்து கொண்ட மீனாட்சி கிளம்பினாள்.

ஆனந்தவல்லி பேத்தி போனவுடன் தன் மூத்த மகனின் புகைப்படத்தையே சிறிது நேரம் உற்று பார்த்தாள். அது பசுபதியின் கடைசிப் புகைப்படம். இரண்டு நாளைக்கு முன்பு தான் பிரேம் போட்டு பரமேஸ்வரன் கொண்டு வந்து தாயிடம் தந்திருந்தார்.

ஆனந்தவல்லி மூத்த மகனிடம் உணர்ச்சிப் பிரவாகத்துடன் பேச ஆரம்பித்தாள்.

“எங்கேடா இருக்கே? கைலாசத்துலயா? இல்லை வேற எதாவது உலகத்திலேயா? இங்கே என் நிலைமையை நீ பார்த்தியா? வெளியே பட்டுப் புடவை, நிறைய நகைகள்னு நல்லாத் தான் தெரியறேன். உள்ளே ரணகளமாய் இருக்கு. எல்லாம் தெரிஞ்ச ஞானின்னு உங்கப்பா பெருமையா உன்னைப் பத்திச் சொல்வாரு. உனக்கு என்னோட துக்கம் தெரியுதாடா?

“தெரிஞ்சா தான் உனக்கென்ன? நீ உயிரோடு இருக்கறப்பவே பெத்தவளைக் கண்டுகிட்டது இல்லை. உலகத்தை விட்டுப் போனதுக்கப்பறமா நீ கண்டுக்கப் போற? என்னை விட்டுத் தள்ளு. உன் தம்பி உயிரைக் காப்பத்தறது கஷ்டம் தான்னு டாக்டர் சொல்றாராம். அவன் உன் மேல் உயிரையே வச்சிருந்தாண்டா. அப்படிப்பட்ட அவனுக்கு நீ தான் எமனாய் வந்து வாய்ச்சிருக்கேன்னு நான் சொல்றேண்டா.

“உன்னோட பாழா போன சிவலிங்கத்தை நீ ஏண்டா அவன் பேரன் கிட்ட சேர்த்திடச் சொன்னே. அவனே மகனை மறந்துட்டு அப்படியொரு பேரன் இருக்கறதையும் மறந்துட்டு இருந்தான். நீ சொன்னாய்னு சொல்லி தாண்டா அந்தப் பேரன் அவன் முகத்தில் அடிக்கற மாதிரி பேசினாலும் திரும்பவும் பேசினான். அவன் தன் வாழ்க்கைல முதல் தடவையா கவுரவம் பார்க்காமல் இவ்வளவு தூரம் இறங்கிப் போனது உனக்காகத் தாண்டா! நான் கூட வேண்டாம்னு சொன்னேன். அண்ணன் என் கிட்ட இது வரைக்கும் எதுவுமே கேட்டதில்லைம்மா. முதல் தடவையாய் கேட்டிருக்கான். அதை எப்படிமா நான் செய்யாமல் விடறதுன்னு சொன்னான்டா. நீ சொன்ன அவனோட பேரன் இங்கே வந்ததுக்கப்பறம் நடந்துகிட்டதையும் பேசினதையும் தாங்காமல் தான் அவனுக்கு மாரடைப்பு வந்துருக்குடா. கூப்பிடாம அந்தப் பையனும் வந்திருக்க மாட்டான். வராமல் இருந்திருந்தால் இப்படி எல்லாம் நடந்தும் இருக்காது. இப்படி இத்தனைக்கும் மூல காரணம் நீ தானேடா

நீ அவனுக்காக இது வரைக்கும் என்னடா பெரிசா செய்திருக்கே. சொத்தைக் கொடுத்தேன்னு சொல்லாதேடா. என்னடா பெரிய சொத்து. உனக்கு வேண்டாத ஒன்னை, பெரிசுன்னு நீ நினைக்காத ஒன்னை, அவனுக்குத் தந்ததுல பெருமை என்னடா இருக்கு? அந்த சிவலிங்கத்தை தூக்கிக் கொடுத்திருப்பியாடா நீ?

“நீ அவனுக்காக இது வரைக்கும் என்னடா செஞ்சிருக்கே? அவனுக்கு கல்யாணம் ஆனப்ப அப்பா ஸ்தானத்துல நின்னு வாழ்த்தியாவது இருக்கியாடா? கல்யாணம் முடிஞ்ச கையோட அவனா மனைவியோட, நீ இருக்கிற இடத்துக்கு வந்து ஆசிர்வாதம் வாங்கினான். அவனுக்கு ரெண்டு குழந்தைகள் பிறந்துச்சு. ஒரு தடவை நீ வந்து பார்த்திருப்பியாடா? அவனாய் குழந்தைகளை உன் கிட்ட கொண்டு வந்து காண்பிச்சான். அவன் பொண்டாட்டி செத்துப் போனா. அதுக்கு நீ வரலை. அவன் பொண்ணுக்குக் கல்யாணம் செய்தான். அதுக்கு நீ வரலை. இப்படி அவன் சம்பந்தப்பட்ட எதுக்குமே நீ வரலை. ஆனால் கூட அண்ணனைப் பார்க்க மாசம் ஒரு தடவையாவது அவன் வராமல் இருந்ததில்லையேடா? உன்னைப் பத்து மாசம் சுமந்து பெத்த நான் கூட உன் அலட்சியத்தை சகிச்சுக்க முடியாம உன்னைப் பார்க்க வர மாட்டேன்னு வீம்பா இருந்தேன். என்னை மாதிரியே அவனுக்கும் தன்மானம் கவுரவம் நிறைய இருந்தாலும் அதை உன் ஒருத்தன் கிட்ட மட்டும் காட்டாமல் அண்ணா அண்ணான்னு உன்னைப் பார்க்க வந்துகிட்டிருந்தானேடா அவன்.

“உன்னைக் கொல்றப்ப கூட உன் பத்மாசனம் கலையலை. உடம்பில் அவ்வளவு வலு இருக்கிற நீ நினைச்சிருந்தா அந்தக் கொலைகாரனை சுலபமா சமாளிச்சிருக்கலான்னு அந்தப் போலீஸ்காரன் சொன்னாண்டா. அந்த ஆள் நீ செய்துகிட்டது கிட்டத்தட்ட தற்கொலை மாதிரின்னு சொல்லாமல் சொன்னான்டா. இதை எல்லாம் செய்யறப்ப பெத்தவ ஒருத்தி இன்னும் உசிரோட இருக்கா, அவளால இதெல்லாம் தாங்க முடியுமான்னு நீ யோசிச்சியாடா?  நீ போனதுக்கப்புறம் சிவலிங்கம் ஈஸ்வர் கிட்ட சேரணும் சொன்னியே, சிவலிங்கத்துக்கு மேல் இருந்த அக்கறை உனக்கு உன் பெத்தவ மேல இல்லையேடா? நான் உனக்கு என்னடா அப்படி துரோகம் செய்துட்டேன். சாகறதுக்கு முன்னாடி ஒரு தடவை கூப்பிட்டு பேசிட்டா பெத்த கடன் முடிஞ்சுடும்னு நினைச்சிட்டியாடா? முடியாதுடா

இத்தனையும் சகிச்சுகிட்டேன். எனக்கு கொள்ளி போட இன்னொரு மகன் இருக்கான்கிற ஒரு ஆறுதல் எனக்கு இருந்துச்சு. இப்ப அதுக்கும் ஆபத்து வந்திருக்குடா? நான் இனி பிழைச்சு என்ன பிரயோஜனம் சொல்லு.

ஆனந்தவல்லி வாய் விட்டு அழுதாள். தாங்க முடியாத துக்கத்தை சிறிது நேரம் அழுது ஓரளவு இறக்கிக் கொண்டவள் கண்களைத் துடைத்துக் கொண்டு மூத்த மகன் புகைப்படத்தைப் பார்த்துப் பேசின போது அவள் குரலில் கடுமையும், ஆணித்தரமான உறுதியும் இருந்தது.

“இதையெல்லாம் உன் கிட்ட இப்ப ஏன் சொல்றேன்னு பார்க்கிறியா? நீ எனக்கு இது வரைக்கும் எதுவும் செய்ததில்லை, உன் தம்பிக்கு சுத்தமாவே எதுவும் செய்ததில்லைன்னு சொல்றேன். மனுசன் முதல்ல மனுசனா இருக்கணும்டா. பக்தி, சக்தி, கடவுள், மண்ணாங்கட்டி அதெல்லாம் அப்புறம். நீ கும்பிட்ட சிவனே குடும்பஸ்தன் தானடா. அப்படி இருக்கறப்ப நீ உன் குடும்பத்தை அலட்சியப்படுத்தினது என்னடா நியாயம். எனக்கில்லாட்டியும் உன் தம்பிக்கு நீ நிறையவே கடன்பட்டிருக்கேடா. அவன் உயிரைக் காப்பாத்தற பொறுப்பு உனக்கு இருக்குடா. நான் மத்தவங்களைப் போல கடவுள் கிட்ட எதுவும் வேண்டிக்க மாட்டேன். கடவுளுக்கும் எனக்கும் எந்த கொடுக்கல் வாங்கலும் இல்லை. ஆனா உன் கிட்ட இருக்கு. பெத்தவ கேட்கறேன். உன் தம்பியை நீ பிழைக்க வைக்கணும். வாழ்நாள் பூரா நீ உன் சிவலிங்கம்னு சுயநலமாவே இருந்துட்டே. நீ இப்ப எந்த உலகத்துலே இருந்தாலும் சரி உன் குடும்பத்துக்காக இந்த ஒரு நல்ல காரியத்தையாவது செய்யுடா. நான் இது வரைக்கும் யார் கிட்டயும் எதுக்கும் கை ஏந்தினதில்லைடா. இப்ப உன் கிட்ட பிச்சை கேட்கறேண்டா. அவனைக் காப்பாத்துடா...!சொல்லச் சொல்ல அவள் குரல் உடைந்து போனது.

பசுபதி சாந்தம் மாறாமல் தாயைப் பார்த்துக் கொண்டிருக்க ஆனந்தவல்லி விடாமல் பேசிய களைப்பில் கண்களை மூடிக் கொண்டாள். இறந்து போன மகனிடம் பேசியதெல்லாம் பைத்தியக்காரத்தனமா என்று அவளுக்குத் தெரியவில்லை. ஆனால் கடவுளிடம் இல்லாத நம்பிக்கை அவளுக்கு ஏனோ அவள் மூத்த மகனிடம் இருந்தது. அவள் கணவர் அவளுடைய மூத்த மகனை சக்தி வாய்ந்த மகான் என்று சொல்லி இருந்தார். மகான்கள் சக்தி அவர்கள் மரணத்துடன் முடிந்து விடுவதில்லை...!

(தொடரும்)

No comments:

Post a Comment