Wednesday, June 11, 2014

பரம(ன்) ரகசியம் – 70

கேஷ் மூச்சு வாங்க ஓடி வந்து குருஜி அறையில் வந்து நின்றவுடன் குருஜி கேட்டார். “என்ன மகேஷ்?                 

மகேஷிற்கு உடனடியாகப் பேச்சு வரவில்லை. குருஜியின் பக்கத்து அறைகளில் தங்கி இருந்த தென்னரசுவும், ஜான்சனும் கூட குருஜியின் அறைக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்களும் ஒரே குரலில் கேட்டார்கள். “என்ன மகேஷ்?

மகேஷ் மூவரையும் பேந்தப் பேந்தப் பார்த்தான். அவன் நிறையவே மிரண்டு போயிருந்தான். அவனுக்கு என்ன சொல்வது என்று கூட விளங்கவில்லை. கஷ்டப்பட்டு தியான மண்டபம் இருந்த திக்கைக் கைகாட்டி அலெக்ஸி... அலெக்ஸி.....என்று குழறினான்.

என்ன ஆகியிருந்திருக்கும் என்பதை யூகிக்க முடிந்த ஜான்சன் உடனே  தியான மண்டபத்தை நோக்கி ஓடினார். அவர் பின்னாலேயே மூவரும் ஓடினார்கள். குருஜியால் இந்த வயதில் தங்களுக்கு சரிசமமாக ஓடி வர முடிவது மகேஷிற்கும், தென்னரசுவிற்கு ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் போகும் போது பாபுஜியும் வந்து சேர்ந்து கொண்டார்.

ஜான்சன் தியான மண்டபத்தை அடைந்த போது அலெக்ஸி விட்டத்தைப் பார்த்தபடி விசேஷ மானஸ லிங்கத்திற்கு மூன்றடி தூரத்தில் நின்று கொண்டு இருந்தார். அவர் முகம் பேயறைந்தது போல மாறி இருந்தது.  நிலைமையைப் பார்த்த ஜான்சனுக்கு கால் வினாடிக்கும் குறைவான நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது புரிந்தது. அலெக்ஸிஎன்று ஜான்சன் தொண்டை கிழிய கத்தினார்.

தன்னை அழைத்த சத்தம் கேட்டு அலெக்ஸி நிஜ உலகத்திற்குத் திரும்பினார். ஆனால் பார்த்த காட்சியின் பாதிப்பில் இருந்து அவரால் திரும்ப முடியவில்லை. அவர் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. வியர்வை மழையில் நனைந்து போயிருந்த அவர் திரும்பிப் பார்த்தார். ஜான்சன் கத்தினார். “பின்னால் வா”.

அலெக்ஸி பிறகு தான் விசேஷ மானஸ லிங்கத்தை நெருங்கி இருப்பதைத் திகிலுடன் கவனித்தார். அவர்கள் எல்லோருமே தள்ளியே இப்போதும் நின்று கொண்டிருப்பதையும் கவனித்தார். உடனடியாகப் பின் வாங்கி விட வேண்டும் என்று புரிந்து கொண்டாலும் அலெக்ஸியின் கால் தரையில் பதிந்து விட்டது போலத் தோன்றியது. காலைத் தரையில் இருந்து எடுக்கவே முடியவில்லை.  அலெக்ஸி பீதியுடன் அவர்களைப் பார்த்தார்.

ஜான்சன் என்ன செய்யலாம் என்பது போல் குருஜியைப் பார்த்தார். குரு மெல்ல ‘ஓம்என்று ஓங்கார மந்திரத்தைச் சொல்ல ஆரம்பித்தார். ஜான்சனும் அதில் இணைந்து கொண்டார். தென்னரசுவும் அந்த ஓங்கார மந்திரத்தை அவர்களுடன் சேர்ந்து உச்சரிக்க ஆரம்பித்தார்.

ஜான்சன் அலெக்ஸிக்கு “நீயும் சொல்என்று சைகை செய்தார். தலையசைத்து விட்டு அலெக்ஸியும் சொல்ல ஆரம்பித்தார். இரண்டு நிமிடங்களில் அலெக்ஸியால் காலைத் தூக்க முடிந்தது. முடிந்த மறு கணம் அவர் அவர்களருகே வந்திருந்தார். கண்ணிமைப்பதற்குள் அங்கிருந்து தப்பித்தால் போதும் என்று அலெக்ஸி வந்து சேர்ந்த வேகம் பாபுஜியை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. ‘பயம் எப்படியெல்லாம் வேகமாக மனிதனை இயங்க வைக்கிறது!

என்ன ஆயிற்று என்று அலெக்ஸியிடம் கேட்க பாபுஜிக்கு ஆவலாக இருந்தது. அவர் வாயைத் திறந்த போது ஜான்சன் தன் கண்டிப்பான பார்வையால் தடுத்தார். பாபுஜி வாயை மூடிக் கொண்டார். தென்னரசுவும், மகேஷும் கூட அலெக்ஸியிடம் கேட்க நினைத்திருந்தனர். ஜான்சன் பாபுஜியைப் பார்த்த பார்வையில் அவர்களும் மௌனத்தைக் கடைபிடித்தார்கள்.

அலெக்ஸியிடம் ஜான்சன் சிரித்துக் கொண்டே கேட்டார். எப்படி இருந்தது உன் அனுபவம்?

இன்னும் திகில் விலகாத அலெக்ஸி என்ன இவர் இப்படி தமாஷாகக் கேட்கிறார்என்று நினைத்தார். ஆனால் ஜான்சன் பாணியில் தானும் இயங்கிய குருஜியும் சிரித்துக் கொண்டு அலெக்ஸியின் தோளைத் தட்டிக் கொடுத்தார். குருஜி மற்றவர்களைப் பார்த்து லேசாகத் தலையசைக்க பாபுஜியும், தென்னரசுவும் அதைப் புரிந்து கொண்டு தாங்களும் சிரித்தனர். அலெக்ஸிக்குக் கூட உடனே அது சிரிக்கக் கூடிய விஷயமாகவே தோன்ற ஆரம்பித்தது. அவரும் வரட்டுச் சிரிப்பு சிரித்தார். ஆனால் அவர்களுக்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை.  

அவர்களில் சிரிக்காமல் இருந்தவன் மகேஷ் மட்டும் தான். அவனுக்கு நடிப்பிற்காகக் கூட சிரிப்பு வரவில்லை. அலெக்ஸி மட்டும் விசேஷ மானஸ லிங்கத்தை நெருங்கி இருந்தால் அவால் இன்னேரம் உயிரோடு இருந்திருக்க முடியாது என்று உறுதியாக நம்பிய அவனுக்கு சிரிப்பு வரவில்லை.

ஜான்சன் அலெக்ஸியிடம் புன்னகையுடன் சொன்னார். “நீ போய் சிறிது நேரம் இளைப்பாறிட்டு குளிச்சுட்டு குருஜியின் ரூமுக்கு வா அலெக்ஸி. பிறகு பேசலாம்

அலெக்ஸி தலையசைத்து விட்டு தனதறைக்குக் கிளம்பினார்.

லெக்ஸியின் அலறலுக்குச் சிறிது நேரத்திற்கு முன் வரை கணபதி நேரம் போகாமல் கஷ்டப்பட்டான். பேச்சுத் துணைக்கும் ஆளில்லாமல் எத்தனை நேரம் தான்  அறைக்கு உள்ளேயே முடங்கிக் கிடப்பது? பிள்ளையார் ஞாபகம் அதிகமாய் வந்தது. சிவலிங்கத்தின் அருகே கூட இருக்க விடாமல் ரெஸ்ட் எடுத்துக்கோ கணபதிஎன்று குருஜி சொல்லி விட்டதால் தன் ஏ.சி. அறையில் ஒரு குட்டித் தூக்கமும் போட்டு விட்டு பிறகு நேரம் போகாமல் வெளியே வந்தான்.

அவர்கள் தங்கி இருந்த கட்டிடத்தில் அறைகள் இரண்டு பிரிவுகளில் இருந்தன. கணபதி, ஹரிராம், கியோமி, அலெக்ஸி ஆகியோர் அறைகள் ஒரு பகுதியிலும் குருஜி, பாபுஜி, ஜான்சன், தென்னரசு, மகேஷ் அறைகள் இன்னொரு பகுதியிலும் இருந்தன. கணபதி தன் அறையில் இருந்து வெளியே வந்த போது பக்கத்து அறையிலிருந்து ஹரிராமும் வெளியே வந்து வெளியே இருந்த தோட்டத்து செடிகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

கணபதி அவரைப் பார்த்தவுடன் ஒரு கும்பிடு போட்டான். அவரும் அவனைப் பார்த்து கை கூப்பினார். அவருக்குப் புரியுமோ, புரியாதோ என்ற சந்தேகம் இருந்தாலும் கணபதி தமிழில் ஹரிராமிடம் சைகையுடன் சொன்னான். “எனக்கு தமிழ் தவிர வேற பாஷை தெரியாது. நீங்க ஹிந்திக்காரரா?

ஹரிராம் தமிழிலிலேயே சொன்னார். “நான் மராட்டி. ஆனால் தமிழ் நல்லாத் தெரியும்.... எழுதப் படிக்க மட்டும் தெரியாது....

கணபதிக்கு சந்தோஷம் தாங்கவில்லை. தமிழ் தெரியும் என்று சொல்லி விட்டாரே! சிவனின் சக்தியைப் பரிசோதனை செய்ய வந்தவர் அவனுக்கு ஆசிரியர் போலத் தோன்றினார். அவர் மற்ற இரண்டு பேருடன் சென்று சிறிது நேரம் சிவனுடன் இருந்தது அவனுக்குத் தெரிந்திருந்ததால் அவரிடம் ஆவலாகக் கேட்டான். “எங்க சிவன் எப்படிங்க? பரவாயில்லையா?

ஹரிராம் இதை எதிர்பார்க்கவில்லை. அவன் கேட்ட விதம் தன் குழந்தையின் பள்ளிக்கூட முதல் நாளில் ஆசிரியரிடம் ‘எப்படி என் குழந்தை? ‘ என்று கேட்கும் தாயின் அக்கறையாக இருந்தது. ‘யாரிடம், யார், யாரைப் பற்றிக் கேட்பது! என்று வியந்தார் ஹரிராம். உலகத்தைக் கட்டிக் காக்கும் இறைவனையே தன் குழந்தை போல் நினைக்கும் தகுதியும், மனமும் அந்த வெள்ளை உள்ளத்திற்கு இருப்பது அவருக்கு பிரமிப்பாய் இருந்தது. அவர் என்ன சொல்வது என்று யோசித்த போது தான் அலெக்ஸியின் அலறல் சத்தம் கேட்டது. தொடர்ந்து யாரோ ஓடும் சத்தம் கேட்டது.

கணபதி பயந்து போய் ஹரிராம் அருகே வந்து நின்று கொண்டான். “பாவம் யார் இப்படிக் கத்தறாங்க? யார் இப்படி தலை தெறிக்க ஓடறாங்க

சத்தம் வந்த திசையை நோக்கிப் பார்வையை செலுத்திய ஹரிராம் தியான மண்டபத்தில் நடப்பதை நேரில் பார்ப்பது போலப் பார்த்தார். பின் கணபதியிடம் சொன்னார். பாவம் யாரோ பயங்கரமான கனவு கண்டு பயந்துட்டாங்க போல இருக்கு. சத்தம் கேட்டுட்டு யாரோ பார்க்க ஓடறாங்க

அவர் சொன்னதற்கப்புறம் அப்படியே தான் இருக்க வேண்டும் என்று உறுதியாக நம்பி விட்ட கணபதியின் பயம் நொடியில் மறைந்தது. “இதுக்கு தான் சொல்றது, தூங்கப் போகிறதுக்கு முன்னால் சாமி கும்பிடணும்னு... சாமி கும்பிட்டுட்டுத் தூங்கினா மோசமான கனவெல்லாம் வராதுஎன்று கணபதி தீர்க்கமாகச் சொன்னான்.

ஹரிராம் அவனை சுவாரசியத்துடன் பார்த்தார். இப்போது வேறு சிலரும் ஓடும் சத்தம் கேட்டது.  ஹரிராம் தியான மண்டபத்தின் பக்கம் பார்த்த போது ஏதோ திரையில் அவர் படம் பார்ப்பது போல் இருந்தது கணபதியை வியக்க வைத்தது. அவர் உண்மையாகவே படம் பார்ப்பது போல பார்த்துக் கொண்டு இருக்கிறார் என்பதை அவன் அறியவில்லை.

சிறிது நேரம் கழித்து அலெக்ஸி தளர்ந்த நடையுடன் தனதறைப்பக்கம் வந்த போது கணபதியையும், ஹரிராமையும் பார்த்தார். அவர்களைப் பார்த்து அலெக்ஸி நமட்டுச் சிரிப்பு சிரித்தார். ஹரிராமும் அவரைப் பார்த்துப் புன்னகைக்க, கணபதி வெளிநாட்டுக்காரரான அவரை முறைப்படி வணங்குவதாக நினைத்து சல்யூட் அடித்தான். அலெக்ஸி முகத்தில் நிஜமாகவே ஒரு இளம் சிரிப்பு மலர்ந்தது. அவர் தன் அறைக்குள் போய் விட்டார்.

சிவலிங்கம் பற்றிக் கேட்ட தன் கேள்விக்கு ஹரிராம் இன்னமும் பதில் அளிக்கவில்லை என்று நினைவுக்கு வந்த கணபதி மறுபடி ஹரிராமிடம் கேட்க வாயைத் திறந்தான். அந்த நேரமாகப் பார்த்து மகேஷ் அங்கு வந்தான். ஹரிராமிடம் குருஜி அறைக்கு வருமாறு சொல்லி விட்டு கணபதியை முறைத்துப் பார்த்து விட்டு கியோமியின் அறையைத் தட்டினான்.

கணபதி நினைத்துக் கொண்டான். “இந்த அண்ணனுக்கு ஏனோ என்னைப் பிடிக்கலை”.

கதவைத் திறந்த கியோமியிடம் பத்து நிமிடம் கழித்து குருஜியின் அறைக்கு வரச் சொல்லி விட்டு மகேஷ் போய் விட்டான். ஹரிராம் கணபதியைப் பார்த்து தலையசைத்து விட்டு குருஜி அறைக்குப் போய் விட்டதால் கணபதிக்கு அவனுடைய சிவலிங்கம் பற்றி அவர்கள் அபிப்பிராயத்தை அறிந்து கொள்ள முடியாமல் போனது.
ஆனால் ஜான்சனும் குருஜியும் ஹரிராமிடமும், கியோமியிடமும் விசேஷ மானஸ லிங்கத்துடனான அவர்கள் அனுபவங்களை தனித்தனியாக அழைத்துப் பேசி பெற்றுக் கொண்டனர். ஹரிராமும், கியோமியும் போன பிறகு குருஜி ஜான்சனிடம் கேட்டார். “ நீ என்ன நினைக்கிறாய் ஜான்சன்?

அவரவர் எதைப் புனிதமாயும், சக்தியாயும் நினைத்தார்களோ அதையே அவர்களுக்குக் காட்சியாய் விசேஷ மானஸ லிங்கம் காட்டி இருக்குன்னு நினைக்கிறேன்

“அலெக்ஸி?

“அவனுக்குப் புனிதம்னு எதுவும் இருப்பதாய் தெரியலை. சக்தி மட்டும் தான் தெரியும். அதனால் விசேஷ மானஸ லிங்கம் சக்தியை மட்டும் காட்டி இருக்கணும்... என்ன பார்த்தான்னு அவன் சொன்னால் தான் தெரியும். ஆனால் அவன் பயம் நீடிச்சா அவன் நம்ம ஆராய்ச்சிக்குப் பயன்பட மாட்டான் குருஜி. உடனடியா அவன் பயத்தைப் போக்க நாம ஏதாவது செய்தாகணும்...

அவன் என்ன தப்பு செய்திருப்பான்னு நீ நினைக்கிறே ஜான்சன்....

அலட்சியமாய் இருந்திருப்பான்னு தோணுது. அது அவனை எச்சரிக்கையாய் இருக்க விட்டிருக்காது...

குருஜிக்கு மனிதர்களின் முட்டாள்தனம் சலிப்பைத் தந்தது. விசேஷ மானஸ லிங்கம் சாதாரணமானதல்ல என்பதை ஜான்சன் அவர்கள் மூவருக்கும் பல முறை சொல்லி இருக்கிறார். சௌகரியமான எல்லையிலேயே நின்று கொள்ளும்படி திரும்பத் திரும்ப சொல்லி இருக்கிறார். சர்வ ஜாக்கிரதையுடன் இருக்கச் சொல்லி எச்சரித்து இருக்கிறார். குருஜியும் தன் பங்குக்கு சமுத்திரத்தின் உதாரணம் சொல்லி விளக்கி இருக்கிறார். கடைசியில் எல்லாம் தெளிவாகப் புரிந்த மாதிரி காட்டிக் கொண்டு இப்படி முட்டாள்தனம் செய்தால் என்ன செய்வது! என்ன விசேஷ சக்திகள் இருந்து என்ன பயன்!

அலெக்ஸி சிறிது நேரத்தில் வந்து சேர்ந்த போது ஜான்சன், குருஜி இருவரும் மிக நெருங்கிய நண்பனை வரவேற்பதைப் போல அவரை வரவேற்றார்கள். அலெக்ஸி தோற்றத்தில் நிறைய முன்னேற்றம் தெரிந்தது என்றாலும் பழைய அதிர்ச்சியின் தடயம் இன்னும் லேசாகத் தெரிந்தது.

அலெக்ஸியை உட்கார வைத்து விட்டு ஜான்சன் விசேஷ மானச லிங்கத்துடனான சற்று முந்தைய அனுபவத்தைக் கேட்டார்.

அலெக்ஸி சற்று தயக்கத்துடன் தன் அனுபவத்தைச் சொன்னார். ஆனால் அந்த அனுபவத்திற்கு முன் ஜான்சனையும், குருஜியையும் பற்றி ஏளனமாக நினைத்ததை அவர் சொல்லவில்லை. திடீரென்று பார்வையில் இருந்து மறைந்த சிவலிங்கம், சமுத்திரத்தின் நடுவிலிருந்து பிரம்மாண்டமாய் எழுந்ததைச் சொன்ன போது அவர் குரலில் நடுக்கம் தெரிந்தது. அந்த நிகழ்ச்சிகளை முழுமையாய் விவரிக்கச் சொல்லிக் கேட்டு முடித்த பிறகும் ஜான்சனும், குருஜியும் எந்த அதிர்ச்சியும் கொள்ளாதது அலெக்ஸிக்கு ஆச்சரியமாய் இருந்தது.

ஜான்சன் அவரிடம் பொறுமையாய் சொன்னார். “அலெக்ஸி. விசேஷ மானஸ லிங்கம் உனக்கிருப்பதை விட ஆயிரம் மடங்கு விசேஷ சக்திகள் கொண்ட சித்தர்களால் உருவாக்கப்பட்டு, பூஜிக்கப்பட்டு வந்தது. ஆயிரம் வருஷங்களுக்கு மேல் அவர்களால் ஆவாகனம் செய்யப்பட்ட சக்திகளை சேமித்து வைக்கப்பட்டது. இதை விசேஷ மானஸ லிங்கத்தை நீ அணுகும் போது எப்போதும் நினைவு வைத்திருக்க வேண்டும். அதை நீ அலட்சியமாக அணுகி இருக்கலாம். அதில் அப்படி என்ன பெரிய சக்தி இருக்குன்னு நினைச்சிருக்கலாம். முதலில் அந்த சிவலிங்கம் காணாமல் போனது உன் எண்ணத்தின் பிரதிபலிப்பாய் இருக்கலாம்.... பெரிதாய் ஒன்றுமில்லைன்னு நினைச்சதால் அதற்கேற்ற மாதிரி இல்லாமல் போயிருக்கலாம்.... அடுத்ததாய் நீ பார்த்த பிரம்மாண்டம் தான் சிவலிங்கத்தின் உண்மையான சக்தியின் ஒரு வெளிப்பாடு.... உனக்குத் தெரிஞ்ச எதாலயும் நீ அதை அளக்க முடியாதுங்கற மாதிரி அளக்க முடியாத அளவுக்கு விஸ்வரூபம் எடுத்திருக்கு.... விசேஷ மானஸ லிங்கம்கிற பெயரிலேயே விசேஷமாய் மனசினால் உருவான அல்லது மனம் சம்பந்தப்பட்ட சிவலிங்கம் அர்த்தம் இருக்கிறது. அதனால் நம் எண்ணங்களுக்கும் பார்க்கும் விளைவுகளுக்கும் சம்பந்தம் கண்டிப்பாக சம்பந்தம் இருக்கவே செய்யும்.

அலெக்ஸிக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த ஆள் ஆராய்ச்சியாளர் மட்டும் தான். இவரிடம் என் எண்ணத்தைப் படிக்கும் சக்தி கண்டிப்பாகக் கிடையாது. ஆனாலும் எப்படி என் எண்ணத்தைச் சொல்ல முடிகிறது. இவர் சொன்னது போல் தான் இருக்க வேண்டும்.... ஆரம்பத்தில் காணாமல் போனது என் மனதின் பிரதிபலிப்பாய் இருக்கும். பின்னால் தெரிந்த பிரம்மாண்டம் ஆழ்மனதினால் உணரப்பட வேண்டிய அதன் பிரம்மாண்ட சக்தியாய் இருக்க வேண்டும்... ஒன்று மேல்மனதின் வெளிப்பாடு... இன்னொன்று ஆழ்மனதின் வெளிப்பாடு....எல்லாம் அலெக்ஸிக்குப் புரிகிற மாதிரி இருந்தது.

அலெக்ஸியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த குருஜிக்கு ஜான்சன் அலெக்ஸியின் மனதில் பதிகிற மாதிரி சொல்லி இருக்கிறார் என்பது புரிந்தது. ஜான்சன் சந்தேகப்பட்டது போல அலட்சியம் தான் அலெக்ஸியின் காட்சிக்குக் காரணமாய் இருந்திருக்கிறது.

ஜான்சன் தொடர்ந்தார். “அலெக்ஸி இன்று நடந்தது வெறும் ஒத்திகை தான். நாளை தான் நாம் எல்லாவற்றையும் பதிவு செய்யப் போகிறோம். அதற்கு முன் நீ தயாராய் விட வேண்டும்.... நீ மறுபடி இப்போதே இன்னொரு முயற்சி எடுத்து விட வேண்டும்....

அலெக்ஸிக்குக் கண நேரத்தில் மீண்டும் கிலி எழும்பியது. கற்பனையாகவே இருந்தாலும் கூட அதன் தாக்கம் கற்பனையாக இருக்கவில்லை...

ஜான்சன் சொன்னார். “இந்த தடவை நீ மட்டும் தனியாகப் போக வேண்டாம். குருஜியும் கூட வந்து அங்கே தியானம் செய்வார். சரியா?

அலெக்ஸி தயக்கத்துடன் தலையசைத்தார்.

குருஜி அலெக்ஸியிடம் ஒரு நெருங்கிய நண்பன் சொல்வது போல் சொன்னார். அலெக்ஸி. அலட்சியத்தினால் எந்தப் பெரிய காரியத்தையும் யாரும் சாதித்து விட முடியாது. குறைவாய் மதிப்பிட்டு எதிலிருந்தும் பெரிய பலனை ஒருவன் அடைந்து விடவும் முடியாது. விசேஷ மானஸ லிங்கம் நம் கற்பனைக்கும் அடங்காத பிரம்மாண்ட சக்தி. அதை முறையாக, மரியாதையாக அணுகணும்.... நான் உனக்கு ஒரு மந்திரம் உபதேசிக்கிறேன். அதை நீ புனிதமாய் பாவிக்கணும். அது முக்கியம். அது நீ அடிக்கடி கேட்கிற சாதாரண வார்த்தையாக இருந்தாலும் கூட உன்னைப் பொருத்த வரை புனிதம் தான்...சரியா.... அதை சிறிது நேரம் ஜபித்து ஞாபகம் வைத்துக் கொள். எப்போதெல்லாம் விஷயங்கள் உன் கட்டுப்பாட்டை மீறிப் போகிறதோ அப்போதெல்லாம் முதல் முதலாக ஞாபகம் வருவது அந்த மந்திரமாய் இருக்கணும். சொல்வது அந்த வார்த்தையாய் இருக்கணும்..... புரிகிறதா? அந்த மந்திர உபதேசம் வாங்க நீ தயாரா?

அலெக்ஸி தலையசைத்தார். சிவலிங்கம் இந்த நாட்டு தெய்வம். அதன் சக்தியை ஒரு தடவை லேசாகப் பார்த்தாகியும் விட்டது. மந்திரங்களும், உபதேசங்களும் கூட இந்த நாட்டு வழிகள். இந்த சிவலிங்கத்தை இவர்கள் வழியிலேயே அணுகுவது புத்திசாலித்தனம்

ஜான்சன் அங்கேயே தியானம் செய்து ஆல்ஃபா நிலைக்குப் போகச் சொல்ல அலெக்ஸி அப்படியே செய்தார். வழக்கத்தை விட அந்த நிலைக்குப் போக இப்போது அவருக்கு அதிக நேரம் தேவைப்பட்டது. ஆனால் போக முடிந்தது.

குருஜி அந்த நேரத்தில் அலெக்ஸியின் காதில் மந்திரோபதேசம் செய்தார். ஓம் நமசிவாய”.  அலெக்ஸியை அந்த மந்திரம் சாந்தப்படுத்தியது. தியான நிலையில் இருந்து மீண்டு வந்த பிறகு அந்த மந்திரத்தை சரியாக உச்சரிப்பது அந்த ரஷ்யருக்கு சிரமமாகத் தான் இருந்தது.

குருஜி சத்தமாக “ஓம் நமசிவாயஎன்று உச்சரிக்க ஆரம்பிக்க அலெக்ஸியும் சேர்ந்து அதை உச்சரிக்க ஆரம்பித்தார். பத்து நிமிடங்களில் அலெக்ஸியால் அதைத் தெளிவாக உச்சரிக்க முடிந்தது. பின் தனியாக சிறிது நேரம் அங்கேயே அமர்ந்து சத்தமாகவும், பின் மௌனமாகவும் அலெக்ஸி ஜபித்துப் பழகினார்.

அடுத்த அரை மணி நேரத்தில் தியான மண்டபத்தில் குருஜியும், அலெக்ஸியும் தியானம் செய்ய ஆரம்பித்திருந்தார்கள். சற்று தொலைவில் ஜான்சன் நின்றிருந்தார்.

அலெக்ஸி ஆல்ஃபா நிலைக்குச் சென்று விசேஷ மானஸ லிங்கத்தின் மீது கவனத்தைச் செலுத்தினார். இப்போது அலட்சியத்தோடு அணுகா விட்டாலும் கூட அந்த சிவலிங்கம் அவரை சோதிப்பது போல காணாமல் மறைய ஆரம்பித்தது. அந்த இடத்தில் மகா சமுத்திரம் அலைகளோடு தத்ரூபமாகத் தெரிந்தது. ஆனால் அலெக்ஸி அமைதியாகவே இருந்தார். அந்த அலைகள் அவர் காலை நனைப்பது போலவே உணர்ந்த போதும் அலெக்ஸி ஆல்ஃபா அலைகளிலேயே இருந்தார். அந்த அமைதி நிலையில் இருந்து நழுவ அவர் விரும்பவில்லை.   

அலைகள் பேரலைகளாக ஆரம்பித்தன. பேரலைகளுக்கு நடுவில் ஒரு கண் உருவாகி அலெக்ஸியை உற்றுப் பார்ப்பது போல இருந்தது. அது அமானுஷ்யமாய் தெரிந்தது. அது ஒரு சுழியாகி அவரை இழுக்க ஆரம்பித்தது. அதன் காந்த ஈர்ப்பில் அலெக்ஸி வலிமை இழக்க ஆரம்பித்தார்.....

(தொடரும்)

No comments:

Post a Comment