Monday, June 30, 2014

அமானுஷ்யன் - 4



மூத்த பிக்குவும் இளைய பிக்குவும் வந்தவர்கள் இருவரும் கண்ணை விட்டு மறையும் வரை நின்று பார்த்து விட்டு பரபரப்புடன் புத்த விஹாரத்தினுள் நுழைந்தார்கள். அவன் எப்படி மாயமாயிருப்பான் என்று வியப்புடன் தியான மண்டபத்திற்குள் இருந்த பிக்குகளிடம் போய் மூத்த பிக்கு "அவன் எங்கே போனான் பார்த்தீர்களா?" என்று கேட்டார்.

"நான் எங்கேயும் போகவில்லை. இங்கேயே தான் இருக்கிறேன்" என்ற குரல் புத்த பிக்குகளின் மத்தியில் இருந்து கேட்டது. மூத்த பிக்குவும், இளைய பிக்குவும் குழப்பத்துடன் புத்த பிக்குகளின் மத்தியில் அவனைத் தேடினார்கள்.

புன்னகையுடன் ஒரு புத்த பிக்குவாக அவன் எழுந்தான். அவன் பேண்ட் ஷர்ட்டிற்குப் பதிலாக புத்த பிக்குகளின் சந்தன நிற உடையில் இருந்தான். ஒரு சந்தன நிறத் துணியைத் தலையில் கச்சிதமாகக் கட்டியிருந்தது பிக்குவைப் போல மொட்டைத் தலையுடன் இருப்பது போன்ற தோற்றத்தை அந்த மங்கலான விளக்கொளியில் ஏற்படுத்தியது. அவன் தலையில் இருந்த கட்டையும் மறைத்தது. மார்பில் குறுக்கு வாட்டாக புத்தபிக்குகளைப் போல அணிந்திருந்த ஆடை அவன் தோளில் இருந்த கட்டை மறைத்தது.

மூத்த பிக்கு அவனை பிரமிப்புடன் பார்த்தார். "அவர்கள் உன்னை இங்கே கண்டுபிடித்திருந்தால்...."

"அவர்கள் தேடி வந்த ஆள் பேண்ட், ஷர்ட் போட்டிருப்பான். குண்டடி பட்டிருப்பான். பிணமாக இருக்கலாம். படுத்தபடி இருக்கலாம். ஒளிந்தும் இருக்கலாம். ஆனால் கண்டிப்பாக புத்தபிக்குவாக தியான நிலையில் இருக்க மாட்டான். மனிதன் எதிர்பார்ப்பதைத் தவிர வேறு எதையும் காண்பதில்லை குருவே.... இங்கு தியான மண்டபத்தில் வந்த போது அவர்கள் புத்த பகவானின் பின் புறத்தில் இருட்டைப் பார்த்தார்கள். இருந்தால் அங்கேதான் இருக்க வேண்டும் என்று தீர்மானித்தார்கள். அதற்குப் பின் அவர்களுக்கு அரைகுறை வெளிச்சத்தில் இருப்பவர்களைப் பார்க்கும் அளவுக்குப் பொறுமையில்லை. வெளிச்சத்தில் இருந்தவர்களைக் கூட உன்னிப்பாகப் பார்க்க வேண்டும் என்பதை யாரும் அவர்களுக்குக் கற்றுத் தரவில்லை போலிருக்கிறது...."

இளைய பிக்கு மனதில் அவன் ஹீரோவாகி விட்டான். சந்தோஷமாக இளைய பிக்கு கைகளைத் தட்ட மூத்த பிக்கு புன்னகையை மறைத்துக் கொண்டு கடுமையாகப் பார்க்க முயற்சித்தார். ஆனால் அவர் கவனம் பிக்குவின் உடையில் இருக்கும் மற்றவனின் மீதே இருந்தது. தலைக் காயமும், தோள் காயமும் எந்த அளவு வலியை அவனுக்குத் தந்து கொண்டிருக்கும் என்பதை உடலியல் சாஸ்திரத்தில் தேர்ச்சி பெற்ற அவர் அறிவார். உடல் ரீதியான இந்தப் பிரச்சினையை விடத் தன் பெயர் உட்படப் பழைய நினைவுகள் மறந்து போன அவனுடைய மனநிலை எப்படி இருக்கும் என்பதையும் அவரால் அனுமானிக்க முடிந்தது. ஆனால் எல்லாவற்றையும் மறந்த அவன் எப்படி உயிருடன் இருப்பது என்ற கலையை மிகச் சிறப்பாக நினைவில் வைத்திருக்கிறான். ஒரு வேளை அது அவனுடய உயிரில் கலந்திருக்கிறதோ என்னவோ.

"உன்னுடைய பேண்ட் ஷர்ட் எங்கே?" என்று மூத்த பிக்கு அவனிடம் கேட்டார். வந்தவர்கள் அவற்றை எங்காவது ஒரு மூலையில் பார்த்திருந்தால் கூட நிலைமை விபரீதமாகப் போயிருக்கும்.

"அதையெல்லாம் மடித்து அதன் மேல் உட்கார்ந்து தான் தியானம் செய்தேன்...." அவன் குறும்பாகச் சொல்லிப் புன்னகைத்தான். புன்னகைக்கும் வரை சாதாரணமாகத் தெரிந்த அவன் புன்னகைத்த போது மிக அழகாகத் தெரிந்ததை அவர் மறுபடியும் கவனித்தார்.

அவன் குற்றவுணர்ச்சியோடு சொன்னான். "அவர்கள் உள்ளே வந்து தேடக் கூடும் என்ற சந்தேகம் வந்த போது அந்த அறையில் மடித்து வைத்திருந்த இந்த உடையை உங்கள் அனுமதியில்லாமல் எடுத்துப் போட்டுக் கொண்டேன். மன்னிக்கணும். நான் இதைத் துவைத்து உங்களுக்குத் தந்து விடுகிறேன்...."

இளம் பிக்கு உற்சாகமாகச் சொன்னார். "அது பரவாயில்லை. அது என்னுடைய உடைதான்...."

மூத்த பிக்கு அவனைக் கூர்மையாகக் கவனித்தார். அவன் அந்த உடைகளை அணிந்திருந்த விதம் கச்சிதமாக இருந்தது. முதல் முதலில் ஒரு பிக்குவின் ஆடையை அணிபவர்கள் போல் சிறு சிறு குறைபாடுகள் கூட இல்லை. அவன் நிமிடத்திற்கு நிமிடம் அவரை ஆச்சரியப்படுத்தினான். வந்தவர்கள் அவனைத் தீவிரவாதி என்றார்கள். ஆனால் அவனைப் பார்த்தால் அவருக்கு துளியும் அப்படித் தோன்றவில்லை. மாறாக வந்தவர்களைப் பார்த்தால்தான் அவருக்குத் தீவிரவாதிகளாகத் தோன்றுகிறது.

அவனைத் தேடி வந்தவன் சொன்னது நினைவுக்கு வந்தது. "அவனைப் பொறுத்த வரை எதுவும் நடக்கலாம் என்கிறார்கள்" . மூத்த பிக்கு புன்னகைத்தார். 'அவர்கள் சொன்னபடிதான் இவன் நடந்து கொள்கிறான்.'

அவர் புன்னகையைப் பார்த்த அவன் கேட்டான். "ஏன் சிரிக்கிறீர்கள்?"

"வந்தவர்கள் சொன்னார்கள். 'உன்னைப் பொறுத்த வரை எதுவும் நடக்கலாமாம்'"

அவன் முகம் ஒரு கணம் களையிழந்தது. "அவர்கள் என்னைப் பற்றி வேறு எதாவது சொன்னார்களா?"

"உன் பெயர் என்ன என்று கேட்டேன். 'உனக்குப் பல பெயர் இருப்பதாகச் சொன்னார்கள்"

அவன் ஆழ்ந்த யோசனையுடன் சொன்னான். "அதில் எனக்கு ஒரு பெயர் கூட ஞாபகம் வரவில்லை"

மூத்த பிக்கு அவன் அருகில் வந்து சொன்னார். "உன் பெயர் எதுவாக இருந்தாலும் நீ சாதாரணமானவன் அல்ல என்றே எனக்குத் தோன்றுகிறது. மலை உச்சியில் இருந்து விழுந்திருக்கிறாய். இங்கு கூரையிலிருந்து கீழே விழுந்த இடத்தில் இருந்த கல்லால் உன் தலையில் அடிபட்டிருக்கிறதே தவிர உன் எலும்புகள் எதுவும் முறியவில்லை. சில நுணுக்கமான மூச்சு வித்தைகள் தெரிந்தால் நம் உடலை மிகவும் லேசாக்கிக் கொள்ளலாம். அப்படி செய்து லகுவாக விழுந்திருந்தால் மட்டுமே எலும்புகள் உடையாது தப்பிக்க முடியும். அதுவும் தோளில் துப்பாக்கிக் குண்டு பட்ட காயம் இருக்கையில் அது போன்ற மூச்சுப் பயிற்சியை செய்ய முடிவது சாதாரணமானதல்ல. மேலும் உன் குண்டை எடுக்கையில் கூட நீ பொறுத்துக் கொண்ட விதம் ஒரு ஹத யோகியின் கட்டுப்பாடாக இருந்தது...."

".... நீ விழித்தவுடன் 'நான் யார்' என்று கேட்டாய். அது ஏதோ ஒரு தென்னிந்திய மொழி. அது உன் தாய் மொழியாக இருக்கலாம். நான் ஹிந்தியில் பேசியவுடன் சுலபமாக நீ ஹிந்திக்கு மாறினாய். நீ அரை மயக்கத்தில் இருந்த போது காஷ்மீரியிலும், உருதுவிலும் பேசினாய். உனக்குப் பல மொழிகள் தெரியும் என்று தோன்றுகிறது. உன்னைத் தேடி ஆட்கள் வந்திருக்கிறார்கள் என்று தெரிந்தவுடன் மின்னல் வேகத்தில் இந்த உடைகளுக்கு மாறியது, உன் பேண்ட் ஷர்ட்டை அப்படியே விட்டு விடாமல் அதைக் கொண்டு வந்து சமயோசிதமாய் தியானம் செய்து கொண்டிருந்த கூட்டத்தில் சேர்ந்து கொண்டது இதெல்லாம் நீ ஒரு அதிபுத்திசாலி என்பதை உணர்த்துகிறது...."

அவன் அவர் சொன்னதற்குப் பெருமைப்பட்ட மாதிரி தெரியவில்லை. அவன் குறுக்கிட்டுக் கேட்டான். "நான் அரை மயக்கத்தில் காஷ்மீரியிலும் உருதுவிலும் ஏதோ பேசினேன் என்றீர்களே. என்ன சொன்னேன்?"

அவர் சொன்னார். "எனக்கு சரியாகப் புரியவில்லை". ஆனால் உண்மையில் அவன் பேசியது அவருக்கு நன்றாகப் புரிந்தது. அவன் அரை மயக்கத்தில் சொன்னது இது தான். "என் வழியில் வராதீர்கள். வருவது எமன் வழியில் வருவது போலத்தான்"

*****

"ஹலோ"

"CBIயில் ஆச்சார்யா கொலைக் கேஸ் பற்றி துப்பு துலக்க சென்னையிலிருந்து 'ஆனந்த்'ங்கிற ஆபிசரை வரவழைக்கப் போகிறார்கள்" CBIயைச் சேர்ந்த அந்த மனிதன் தெரிவித்தான்.

"ஆள் எப்படி?"

"அவனோட ·பைலை இப்போதுதான் படிச்சு முடிச்சேன். இந்தக் கொலையில் நாம் ஏதாவது தடயம் விட்டு வைத்திருந்தால் கண்டிப்பாய் அவன் கண்டுபிடிக்காமல் விடமாட்டான். ரொம்பவே ஸ்மார்ட்...."

"நாம் ஏதாவது தடயம் விட்டு வைத்திருக்கிறோமா?"

"இல்லை... ஆனால் அப்படித்தான் ஒவ்வொரு கொலைகாரனும் நினைக்கிறான். ஆனந்தை CBI தேர்ந்தெடுத்தது நல்ல சகுனமாக எனக்குப் படலை, சார். அந்த ஆள் கடமைக்கு வேலை செய்யற டைப் அல்ல. ஒவ்வொரு கேஸையும் தனக்கு பர்சனல் சேலஞ்சாய் நினைக்கிற ஆள் அவன். எதற்கும் நாம் ஜாக்கிரதையாக இருக்கிறது நல்லது..."

"அவன் CBIக்கும் அரசாங்கத்துக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டியவன். அவனை எப்ப வேணும்னாலும் நாம் விலக்கிக்கலாம். அப்படி வர்றப்ப நான் பார்த்துக்கறேன். ஆனந்தை விடுங்கள். யார் கட்டுப்பாட்டிலும் இல்லாமல் உலாவும் ஒரு மனிதனை நினைத்து நான் கவலைப்படுகிறேன். எனக்கு அந்த அமானுஷ்யனைப் பற்றி சொல்லுங்கள். அவன் பிணம் கிடைத்ததா?"

"துரதிஷ்டவசமாக கிடைக்கலை, சார். ஆனால் அவன் அந்த உயரத்திலிருந்து குண்டடியும் பட்டு கீழே விழுந்ததால் பிழைக்க வாய்ப்பே இல்லை சார். என்னோட ஆட்கள் அங்கே வலை வீசித் தேடிகிட்டுருக்காங்க..."

மறுபக்கத்திலிருந்து சில வினாடிகள் பேச்சில்லை. யாரோ தாழ்ந்த குரலில் ஃபோன் பேசிக் கொண்டிருந்த நபரிடம் ஏதோ சொன்னது போல் இருந்தது. பின் அந்த மனிதர் கேட்டார். "மலையுச்சியில் இருந்து அவன் கீழே விழுந்தால் உத்தேசமாக எங்கே விழுவான் என்று உங்கள் ஆட்களால் கணக்குப் போட முடியவில்லையா?"

"அவனைச் சுட்டு அவன் விழுந்தது நள்ளிரவு நேரத்தில் சார். அவன் விழுந்தது எங்கே என்று அவர்களுக்குத் தெரியவில்லை. விடிந்தவுடன் அவர்கள் கணக்குப் போட்டுப் பார்த்ததில் ரெண்டு இடங்களில் அவன் விழுந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கு... அவன் நேராக விழுந்திருந்தால் பல்லாயிரக்கணக்கான அடிகளுக்கு கீழே இருக்கிற பாறைகளில் விழுந்து சிதறியிருக்கணும் சார். அப்படி ஆகியிருந்தால் அவன் உடலை அங்கிருக்கும் மிருகங்கள் சாப்பிட்டிருக்கும்.அவன் கொஞ்சம் டைவர்ட் ஆகி விழுந்திருந்தால் அதில் கால் வாசி தூரத்தில் இருக்கிற புத்தவிஹாரம் ஒன்றின் முன் விழுந்திருக்கலாம்."

"அந்த புத்த விஹாரத்தைச் சேர்ந்தவர்கள் என்ன சொல்கிறார்கள்? உங்கள் ஆட்கள் அங்கே சோதனை செய்தார்களா?"

"அந்த புத்த பிக்குகள் அப்படி ஒரு உடல் விழுந்ததாகத் தெரியவில்லை என்கிறார்கள். அந்த வட்டாரத்தில் அவன் உடலும் கிடைக்கவில்லை. என் ஆட்கள் அந்த புத்த விஹாரத்தின் உள்ளே கூடப் போய் நன்றாகப் பார்த்து விட்டார்கள். அவன் உடல் கிடைக்கவில்லை."

"அந்த அடிமட்டப் பாறைகளைப் போய்ப் பார்த்தார்களா?"

"கொஞ்ச நேரத்துக்கு முன்னால்தான் போன் செய்தார்கள். உடல் எதுவும் கிடைக்கலை. பாறைகளை ஐஸ் கவர் செய்திருப்பதால் ரத்தக்கறை இருக்கான்னு பார்க்க முடியலை...."

மறுபக்கத்தில் மறுபடி தாழ்ந்த குரலில் ரகசிய ஆலோசனை. அவன் உடல் கிடைக்கவில்லை என்பது அவர்களை நிறையவே கலவரப்படுத்தி உள்ளது என்பதை உணர்ந்த CBI மனிதன் சொன்னான். "சார்! நீங்க பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. அவன் உயிர் பிழைக்க வாய்ப்பே இல்லைங்கறதுதான் அந்த இடத்துல இருந்த ஆள்கள் எல்லாருடைய கருத்தும்...."

ஒரு நிமிட அசாதாரண மௌனத்திற்குப் பின் மறுபக்கத்திலிருந்து குரல் வந்தது.

"உங்களுக்கு நிலைமை புரியலை. அவனைப் பற்றியும் தெரியலை. நாம் நேரில் சந்திக்கறது அவசியம்னு தோணுது....."

(தொடரும்)

No comments:

Post a Comment