ஜான்சன் குருஜியைப் பார்த்தவுடன் கேட்ட முதல் கேள்வி ஈஸ்வரைப் பற்றிய அபிப்பிராயத்தைப் பற்றியது தான். “குருஜி ஈஸ்வரைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”
”அழகாயிருக்கிறான். அறிவாளியாயிருக்கிறான். அடக்கமாயிருக்கிறான்....”. குருஜி புன்னகையுடன் சொன்னார்.
“அவனைச் சுற்றியும் ஏதாவது சக்தி வட்டம் பார்த்தீர்களா குருஜி”
”என்னால் பார்க்க முடியவில்லை. மூன்று நாள் தியானத்தில் சேர்த்திருந்த என்னுடைய சென்சிடிவிட்டி அவனை சந்திக்கும் போது போய் விட்டிருந்தது....”
ஈஸ்வர் வந்ததில் இருந்து போகிற வரை நடந்ததை எல்லாம் அறிந்து கொள்ள ஜான்சன் துடித்தார். குருஜி ஒன்று விடாமல் சொன்னார். சொல்லி விட்டுக் கேட்டார். ”நீ என்ன நினைக்கிறாய் ஜான்சன்”
ஜான்சன் ஒரு நிமிடம் யோசித்து விட்டுச் சொன்னார். “வேதபாடசாலை மண்ணைத் தொட்டுக் கும்பிடுகிற அளவுக்கு அவன் ஆன்மிகப் பேர்வழி அல்ல. வேறு எதாவது காரணம் இருக்கும் குருஜி. நானே உங்களைக் கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தேன், கண்கள் தீ மாதிரி ஜொலிக்கிற சித்தரை நீங்கள் இந்த சிவலிங்க சமாச்சாரத்திற்கு முன் கேள்விப்பட்டிருக்கிறீர்களா குருஜி”
குருஜி கண்ணிமைக்காமல் சொன்னார். “என் நண்பன் ஒருவன் அவரிடம் சில மாதம் சிஷ்யனாய் இருந்திருக்கிறான்”
“நீங்கள் அவரைப் பார்த்திருக்கிறீர்களா குருஜி?”
“இல்லை. அவன் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அவருடைய பெயர் என்ன என்று கூட யாருக்கும் தெரியாது என்று அவன் சொல்லி இருக்கிறான். அவர் கண்கள் ஜொலிப்பதை வைத்து இமயமலைப் பகுதியில் அவருக்கு அக்னி நேத்திர சித்தர் என்று வைத்திருக்கிறார்களாம்....” குருஜிக்கு தன் குருவாக அந்த சித்தர் இருந்திருக்கிறார் என்பதை ஜான்சனிடம் தெரிவிக்க அவசியம் இல்லை என்று தோன்றியது.
ஜான்சனுக்கு குருஜி மேல் சின்னதாய் கோபம் வந்தது. அந்த சித்தர் தன் நண்பனின் குருவாக இருந்தவர் என்பதைக் கூட இப்போது தான் குருஜி சொல்கிறார். அதுவும் கேள்விப்பட்டிருக்கிறீர்களா என்று கேட்ட பிறகு. ஈஸ்வர் அதுபற்றிக் கேட்டான், அதற்கு இன்ன மாதிரி பதில் சொன்னேன் என்று சொல்லும் போது கூட அவர் சொல்லவில்லை. தன் மனத்தாங்கலை மறைத்துக் கொண்டு ஜான்சன் பரபரப்புடன் சொன்னார். “அப்படியானால் உங்கள் நண்பரைக் கேட்டால் அவரைப் பற்றிய எல்லா விவரங்களும் தெரிந்து கொள்ளலாமே”
”பெயரைக் கூட யாரிடமும் சொல்லாதவர் அவரைப் பற்றிய விவரங்கள் தன் சீடர்களுக்குத் தெரிய விடுவாரா என்ன?”
ஜான்சன் பரபரப்பு அப்படியே அமுங்கியது. ”அந்த சிவலிங்கம் பற்றிய வேறு ஏதாவது விசேஷ விவரம் உங்கள் நண்பருக்குத் தெரிந்திருக்கலாம் இல்லையா?”
”கேட்டேன். அவனுக்கும் தெரியவில்லை....”
ஜான்சன் யோசனையோடு சொன்னார். “சிவலிங்கம் சக்தியை நாம் பரிசோதித்து தெரிந்து கொள்ளத் தான் போகிறோம். ஆனால் அந்த சித்தர் எவ்வளவு சக்தி வாய்ந்தவர், நம் பரிசோதனைகளுக்கு அவர் இடைஞ்சல் செய்ய முடியுமா என்பதெல்லாம் தெரிந்தால் நன்றாக இருக்கும்.”
குருஜி சொன்னார். “நான் நேற்று இமயமலை போனதே அந்த நண்பனைப் பார்க்கத் தான். அந்த சித்தர் ரொம்பவே சக்தி வாய்ந்தவர் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் அவர் நம் பரிசோதனைகயைத் தடுக்கவோ, அதற்கு இடைஞ்சல் செய்யவோ வாய்ப்பில்லை. அதை என் நண்பன் பார்த்துக் கொள்வான். அந்த சிவலிங்கத்தை அங்கே வைப்பதற்கு முன் அந்தக் கட்டிடத்திற்கு வெளியே நாலா பக்கத்தில் இருந்தும் சிறிது சிறிது மண்ணை எடுத்து அனுப்பச் சொல்லி இருக்கிறான். 21 நாட்களுக்கு அந்த சித்தரோ அவர் சக்தியோ அந்த எல்லையைத் தாண்டி உள்ளே போய் விடாதபடி பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி இருக்கிறான்...”
ஜான்சன் சந்தேகத்தோடு கேட்டார். “உங்கள் நண்பருக்கு அந்த அளவு சக்தி இருக்கிறதா?”
”இன்றைக்கு இந்தியாவில் மாந்திரிகத்தில் அவனை மிஞ்சிய ஆள் இல்லை ஜான்சன்”
”உங்கள் நண்பர் பெயர் உதயன் சுவாமியா?” ஜான்சன் நம்பிக்கை துளிரக் கேட்டார். அந்தப் பெயரை அவர் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறார். மாந்திரிகத்தில் மிகச் சிறந்தவர் என்று பலரும் சொல்லி இருக்கிறார்கள். அவர் அந்த சுவாமி பற்றி வித விதமான கதைகள் சொல்லக் கேட்டிருக்கிறார்.
“ஆமாம். என் நண்பன் பெயர் உதயன் தான் ...” குருஜிக்குத் தன் நண்பனைப் பற்றிச் சொல்ல பெருமையாக இருந்தது.
ஜான்சன் பெரும் நிம்மதியை உணர்ந்தார். அந்த சித்தர் ஈஸ்வர் மூலமாகவோ, கணபதி மூலமாகவோ தன் சக்தியைப் புதிய இடத்தில் பிரயோகிக்க முடியாது. ஆராய்ச்சிக்கு 21 நாட்கள் தாராளமாகப் போதும்.
ஜான்சன் குருஜியைக் கேட்டார். “அப்படியானால் கணபதியையும் நாம் இந்த ஆராய்ச்சியில் சேர்த்துக் கொள்வதில் பிரச்சினை எதுவும் இல்லையே? எப்படியும் அந்த சிவலிங்கத்தைத் தூக்கிக் கொண்டு அங்கே போய் சேரும் வரை அவன் உதவி நமக்கு கண்டிப்பாக வேண்டும்...”
குருஜி சொன்னார். “அவனை நாம் தாராளமாய் இந்த ஆராய்ச்சியில் சேர்த்துக் கொள்ளலாம்...”
“நீங்கள் அவனிடம் என்ன சொல்லி இருக்கிறீர்கள்?”
“இனிமேல் தான் சொல்ல வேண்டும். உன் முன்னாலேயே சொல்ல வேண்டும் என்று காத்திருந்தேன். அவனை உனக்கு முதலிலேயே அறிமுகம் செய்து வைப்பதும் நல்லது என்று நினைக்கிறேன்...” என்ற குருஜி உடனடியாக ஒரு ஆளை அழைத்து கணபதியை அழைத்து வரச் சொன்னார்.
கணபதி அடுத்த ஐந்தாவது நிமிடம் அங்கிருந்தான்.
“வா கணபதி. எப்படி இருக்கிறாய்?” என்று குருஜி விசாரித்தார்.
“உங்கள் தயவில் எனக்கு ஒரு குறையும் இல்லை குருஜி”
“கணபதி. இவர் என் நண்பர் ஜான்சன். பெரிய ஆராய்ச்சியாளர். அமெரிக்காவில் இருந்து வந்திருக்கிறார். ஜான்சன், இது தான் நான் சொன்ன கணபதி...”
ஜான்சன் எழுந்து நின்று கைகளை நீட்ட கணபதி தன் கைகளைக் கொடுத்தான். ஜான்சன் கைகுலுக்கியது அவனுக்கு மிகவும் பெருமையாக இருந்தது. அமெரிக்காவில் இருந்து வந்த பெரிய ஆராய்ச்சியாளர் அவனையும் மதித்து எழுந்து நின்று கை குலுக்குகிறார் என்ற சந்தோஷத்தில் அவனுக்கு அவரிடம் முறையாக வாய்விட்டு வணக்கம் தெரிவிக்கத் தோன்றியது. அதை ஆங்கிலத்தில் எப்படித் தெரிவிப்பது என்று யோசித்து விட்டு அவன் “குட் மார்னிங்” என்றான்.
குருஜி சிரிப்பை புன்னகையாக கஷ்டப்பட்டு மாற்றிக் கொண்டார். ஜான்சனும் புன்னகைத்து விட்டு “குட்மார்னிங்” என்றார். மறுபடி அமர்ந்த ஜான்சன் எதிரில் காலியாக இருந்த நாற்காலியைக் காட்டி கணபதியை உட்கார சைகை செய்தார்.
”பரவாயில்லை சார்” என்ற கணபதி கைகட்டிக் கொண்டு நின்று குருஜியைப் பார்த்தான்.
”பரவாயில்லை கணபதி உட்கார்” என்று கனிவாக குருஜியும் கட்டாயப்படுத்தவே அந்த நாற்காலியில் கணபதி அமர்ந்தான்.
குருஜி ஆரம்பித்தார். ”கணபதி, இவர் நம் நாட்டு தெய்வச் சிலைகளில் சக்தி இருப்பது உண்மையா என்று ஆராய்ச்சி செய்ய இந்தியாவுக்கு வந்திருக்கிறார். வடநாட்டில் ஒரு சிலையை ஆராய்ச்சி செய்து விட்டு வந்திருக்கிறார். அமெரிக்காவுக்குப் போகப் போகிற நம்ம சிவலிங்கத்தையும் ஆராய்ச்சி செய்யணும்னு ஆசைப்படறார்...”
சொல்லி விட்டு குருஜி அவனையே பார்க்க கணபதி தலையசைத்தான்.
“நம் நாட்டு கடவுள் சிலைகளில் தெய்வீக சக்திகள் இருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை அல்லவா கணபதி. அதை நாம் உணர்கிறோமோ இல்லையோ இவரை மாதிரி வெளிநாட்டு அறிஞர்கள் புரிந்து கொண்டு இருக்கிறார்கள். அதைப் பற்றி ஆராய்ச்சி செய்து இந்த உலகத்திற்கு ஆதார பூர்வமாய் தெரிவிக்க நினைக்கிறார். அப்படி நடக்கிறது நமக்கும் பெருமை தானே கணபதி. அதனால் நான் அதற்கு உடனே சம்மதம் சொல்லி விட்டேன்... நீ என்ன சொல்கிறாய் கணபதி”
கணபதிக்குத் தான் பூஜை செய்யும் சிவலிங்கம் ஆராய்ச்சி செய்யப்பட்டு அதன் புகழ் உலகமெல்லாம் பரவப் போகிறது என்று நினைக்கையில் மிகவும் பெருமையாக இருந்தது. சிவலிங்கத்தை நினைத்துக் கொண்டு மனதில் அதனிடம் கேட்டான். ’உன் புகழ் உலகமெல்லாம் பரவினால் என்னை மறந்துட மாட்டியே?’
குருஜி அவனையே பார்க்க அப்போது தான் அவர் கேட்டது நினைவுக்கு வர அவன் திருப்தியுடன் சொன்னான். “நல்லது தான் குருஜி. கேட்கவே சந்தோஷமாக இருக்கு.”
சொல்லச் சொல்ல அவனுக்குத் தன் பிள்ளையார் நினைவு வந்தது. அவர் சக்தியையும் இந்த அமெரிக்காக்காரர் ஆராய்ச்சி செய்து வெளியிட்டால் அவன் பிள்ளையார் புகழும் உலகமெல்லாம் பரவும். இவரிடம் சொல்லலாமா? சொன்னால் அது அதிகப்பிரசங்கித் தனமாகி விடுமோ? அப்படி நினைத்த அடுத்த கணம் ஒரு பயமும் வந்தது. அப்படி ஆராய்ச்சி செய்து சிவலிங்கத்தை அமெரிக்காவிற்குக் கொண்டு போவது போல அவனுடைய பிள்ளையாரையும் இவர்கள் அமெரிக்கா கொண்டு போய் விட்டால் என்ன செய்வது? ஐயோ வேண்டாம். சிவலிங்கத்தையே பிரியும் போது அவனுக்குக் கஷ்டமாகத் தான் இருக்கும். அந்த அளவுக்கு அவன் சிவனையும் நேசிக்க ஆரம்பித்திருந்தான். அப்படி இருக்கையில் அவன் பிள்ளையாரையும் பிரிவது என்றால் அவன் உயிரையே எடுத்து விடுவது மாதிரி தான். இந்த ஆராய்ச்சி எல்லாம் அவனுடைய பிள்ளையாருக்கு வேண்டாம்....
குருஜி சொன்னார். “இவர் ஆராய்ச்சி செய்கிற இடம் வேறு இடம். அங்கே சிவலிங்கத்தைத் தற்காலிகமாய் பிரதிஷ்டை செய்து தான் ஆராய்ச்சி செய்ய வேண்டி இருக்கும். அப்படி அங்கே போகிறப்ப நீயும் கூட வரணும் கணபதி. சொல்லப் போனால் நீ தான் அந்த சிவலிங்கத்தை உன் கையால் எடுத்துகிட்டு அங்கே வரணும். உன்னைத் தவிர யாரும் அதைத் தொடறது கூட எனக்குப் பிடிக்கலை கணபதி. என்ன சொல்கிறாய்?”
குருஜி அவன் மேல் வைத்திருக்கிற அன்பு அவனை திக்குமுக்காட வைத்தது. “அங்கே எப்ப போகணும் குருஜி?”
”மூன்று நாள்ல போகணும் கணபதி. அங்கே போகிற நாள்ல இருந்து உனக்கு தினம் ஆயிரம் ரூபாய் தரணும்னு சொல்லி இருக்கேன். ஜான்சனும் ஒத்துகிட்டு இருக்கார்”
’ஒரு நாளுக்கு ஆயிரம் ரூபாயா?’ கணபதி திகைத்தான். சிவலிங்கத்திற்குப் பூஜை செய்ய தினம் ஐநூறு ரூபாய் வாங்குவதே தவறு என்று சில நாட்களாக அவனுக்கு அதிகம் தோன்ற ஆரம்பித்திருக்கிறது. ’பணம் வாங்கிக் கொண்டு தானே நீ எனக்கு பூஜை செய்கிறாய்?’ என்று சிவன் கேட்பது போல ஒரு பிரமை அவனுக்கு வந்திருக்கிறது. இப்படி இருக்கையில் அதிக பணம் வாங்குவது அதிகத் தவறாய் தோன்ற கணபதி சொன்னான். ”அதெல்லாம் எனக்கு வேண்டாம் குருஜி.”
குருஜி சொன்னார். “நீ இப்படி சொல்கிறாய். சிவன் நேத்து என் கனவில் வந்து ’கணபதி குடும்பத்தில் ஆக வேண்டியது நிறைய இருக்கிறது. பணம் அதிகமாய் வாங்கிக் கொடு’ன்னு சொல்லிட்டார். உனக்காக அவரே சொல்லிட்ட பிறகு நான் வாங்கித் தரா விட்டால் அவர் கோபத்திற்கு நான் ஆளாக வேண்டும் கணபதி”
கணபதி கண்களில் பெருகும் நீரை அடக்கக் கஷ்டப்பட்டான். ’சிவனே, நான் என் சொந்தக் கஷ்டங்களை உன்னிடம் சொன்னதை எல்லாம் கேட்டுகிட்டு இவ்வளவு பெரிய மனசு செய்து குருஜி கனவில் போய் சிபாரிசு செய்திருக்கிறாயே! நான் உன் முன்னால் உட்கார்ந்து வெட்டிப் பேச்சு பேசினதையும் சீடை சாப்பிட்டதையும் கூட நீ பெரிசா எடுத்துக்கலையே, உன் அருளுக்கு எல்லையே இல்லையா?’
ஈஸ்வரின் மனநிலை அன்று சரியில்லாமல் இருந்ததற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று விஷாலி அவனிடம் பேசியது, இரண்டாவது அன்று அவன் தந்தையின் பிறந்த நாள்.
விஷாலி பேசிய போது அலட்டிக் கொள்ளாதது போல் காட்டிக் கொண்டாலும் அவள் குரலைக் கேட்டதுமே அவன் ஈகோவைப் பற்றிக் கவலைப்படாமல் மனம் வெட்கமில்லாமல் சிலிர்த்து பரவசமானதை அவனால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. இந்த மனதிற்கு சூடு, சொரணை, வெட்கம், மானம் எதுவும் கிடையாதா என்று கோபித்துக் கொண்டு மனதை அடக்க வேண்டி வந்தது. அவளாகவே சாரி என்று விட்டாளே, இனி என்ன என்று மனம் சொன்ன போது, ‘அவள் வேண்டும் என்று நினைத்தால் வலிய வந்து பேசுவாள், வேண்டாம் என்று தோன்றினால் வெட்டி எறிந்து விடுவாள். அவள் இழுத்த இழுப்பிற்குப் போக வேண்டுமா’ என்று கேள்வி கேட்டு மறுக்க வேண்டி வந்தது. பதிலேதும் சொல்ல முடியா விட்டாலும் மனம் ஏனோ அவளை அலட்சியப்படுத்தியதில் வலித்தது.
அடுத்த காரணம் தந்தையின் பிறந்த நாள். தந்தை இருந்த வரை இந்த நாளில் அவன், அம்மா, அப்பா மூவரும் தனியாக எங்காவது போய் கொண்டாடுவார்கள். இன்று அவர் இல்லை. அவன் இங்கு தனியாக, அம்மா அமெரிக்காவில் தனியாக....! அப்பா நினைவு இன்று அதிகமாக வந்தது. அவருடைய சாந்தமான முகம், அவர் காட்டிய அபரிமிதமான பாசம்..... இதை எல்லாம் யோசித்துப் பார்க்கும் போது மனம் வலித்தது.
அம்மாவிற்குப் போன் செய்து பேசினான். அம்மா குரலில் இருந்து அவளும் அவர் நினைவின் துக்கத்தில் இருப்பது புரிந்தது.
“என்னம்மா செய்துகிட்டு இருக்கே?”
”அப்பா படிச்சிகிட்டிருந்த புஸ்தகம் எல்லாம் எடுத்து தூசி தட்டி வச்சுகிட்டிருக்கேன்”
அப்பா நிறைய புத்தகங்கள் படிப்பார்... அதிகமாய் படிப்பது அறிவியல் புத்தகங்களை... இறப்பதற்கு இரண்டு நாள் முன்பு கூட ஐன்ஸ்டீனின் க்வாண்டம் தியரி சம்பந்தமாக தற்கால விஞ்ஞானிகள் கூடுதலான ஆராய்ச்சிகள் பற்றிய புத்தகத்தை அவர் ஆர்வத்துடன் படித்துக் கொண்டிருந்தார்....
”ஈஸ்வர்...”
“சொல்லும்மா”
“அப்பா கடைசியா படிச்சுகிட்டிருந்த க்வாண்டம் தியரி புஸ்தகத்துக்குள்ளே...” அம்மா அந்த வாக்கியத்தை நிரப்ப முடியாமல் தடுமாறினாள்.
“சொல்லும்மா... அதுக்குள்ளே என்ன?”
”உன் தாத்தா ஃபோட்டோ இருந்ததுடா....” சொல்லச் சொல்ல அம்மா அழுது விட்டாள்.
“அதுக்கு ஏம்மா நீ அழறே?”
“அவர் அவ்வளவு நேசிச்ச அவரோட அப்பா கிட்ட இருந்து நான் அவரைப் பிரிச்சுட்டேனேங்கிறதை நினைக்கிறப்ப மனசு தாங்கலைடா....” அம்மா குமுறிக் குமுறி அழுதாள். தொடர்ந்து பேச முடியாமல் போனை அவள் வைத்து விட்டாள்.
ஈஸ்வருக்கு அம்மாவின் துக்கம் தாங்க முடியாததாக இருந்தது. பரமேஸ்வரன் மீது கோபம் கோபமாய் வந்தது. அத்தனை நேசித்த மகனை அந்த ஆளால் எப்படி வெறுக்கவும், அலட்சியப்படுத்தவும் முடிந்தது? அவன் மனம் எரிமலையாய் குமுறிக் கொண்டிருக்கையில் மீனாட்சி வந்து சாப்பிட அழைத்து விட்டுப் போனாள்.
ஈஸ்வர் போன போது டைனிங் ஹாலில் பரமேஸ்வரன், ஆனந்தவல்லி, விஸ்வநாதன் மூவரும் இருந்தார்கள். மகேஷை ஏனோ இரண்டு நாட்களாய் பார்க்க முடியவில்லை. மீனாட்சி அண்ணனின் பிறந்த நாளை நினைவு வைத்து அண்ணனிற்குப் பிடித்த சமையல் வகைகளை எல்லாம் செய்திருந்தாள்.
ஆனந்தவல்லி கொள்ளுப் பேரன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்ததைப் பார்த்து கேட்டாள். “ஏண்டா என்னவோ மாதிரி இருக்கே?”
ஈஸ்வர் சொன்னான். “இன்னைக்கு எங்கப்பா பிறந்த நாள்.... அவர் ஞாபகம் வந்தது...”
ஆனந்தவல்லி தன் மகனை ஓரக்கண்ணால் பார்த்தாள். இந்தக் கேள்வியைக் கேட்டிருக்க வேண்டாம் என்று அவளுக்குத் தோன்றியது. பரமேஸ்வரன் இறுகிய முகத்துடன் சாப்பிட ஆரம்பித்தார்.
ஈஸ்வர் பரமேஸ்வரனைப் பார்த்தபடியே மீனாட்சியிடம் சொன்னான். “அம்மா போன் பண்ணி இருந்தாங்க அத்தை...”
மீனாட்சி கேட்டாள். “அண்ணி எப்படி இருக்காங்க?”
”அவங்களுக்கும் அப்பா ஞாபகம் தான்.... அவர் உயிரோட இருக்கறப்ப நாங்க மூணு பேரும் எங்கேயாவது ஒரு பிக்னிக் ஸ்பாட்டுக்குப் போவோம்”
மீனாட்சி தந்தையைப் பார்த்தாள். அண்ணன் சங்கரின் பிறந்த நாளுக்கு இங்கும் அவளும், அண்ணனும், அப்பாவுமாக எங்காவது போவார்கள்....
பரமேஸ்வரன் எழுந்து போய் விடலாமா என்று யோசித்தார்.
ஈஸ்வர் சொன்னான். “அப்பா கடைசியாய் படிச்சுகிட்டிருந்த புஸ்தகத்தை அம்மா எடுத்துப் பார்த்தாங்களாம்.... அதுக்குள்ளே அவரோட அப்பாவோட ஃபோட்டோ இருந்துச்சாம்.....”
பரமேஸ்வரன் சாப்பிடுவதை நிறுத்தி தட்டில் கை கழுவி விட்டார். மீனாட்சி தர்மசங்கடத்துடன் தந்தையையும் மருமகனையும் பார்த்தாள்.
ஈஸ்வர் விடுவதாக இல்லை. ”அவருக்கு அவங்கப்பான்னா உயிர்.... அவரை அவங்கப்பா நேசிச்ச மாதிரி உலகத்துல எந்த அப்பாவும் எந்த மகனையும் நேசிச்சு இருக்க முடியாதுன்னு அடிக்கடி சொல்வார்.....”
பரமேஸ்வரன் இதயத்தில் இமயம் ஏறியது. எழுந்து அங்கிருந்து போய் விட நினைத்து எழுந்தார். ஆனால் மூச்சு விட முடியவில்லை.... நெஞ்சுக்குள் ஏதோ இறுக்கிப் பிடித்தது. அப்படியே நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அவரை அறியாமல் சாய்ந்தார்.
ஈஸ்வர் இதைச் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை.... தன் வார்த்தைகள் மாரடைப்பை ஏற்படுத்தும் அளவுக்கு அவரைப் பாதிக்கும் என்று அவன் நினைக்கவேயில்லை. குற்ற உணர்ச்சியுடன் அவன் அதிர்ந்து போனான். ஓடி வந்து அவரைத் தாங்கிப் பிடித்துக் கொண்டான். “தாத்தா என்ன ஆச்சு....” அவனை அறியாமல் வார்த்தைகள் வெளி வந்தன.
பரமேஸ்வரன் நினைவை இழக்கும் முன் கேட்ட கடைசி வார்த்தைகள் அவை. அவரை அவர் பேரன் முதல் முறையாக தாத்தா என்று அழைத்திருக்கிறான். அவரை முதல் முறையாகத் தொட்டிருக்கிறான்.....
பரமேஸ்வரன் நினைவிழந்தார்.
(தொடரும்)
No comments:
Post a Comment