Thursday, June 12, 2014

பரம(ன்) ரகசியம் – 73

கனை ஒரு கையில் அணைத்துக் கொண்டிருக்கையிலேயே ஆனந்தவல்லி விஷாலியை மறு கைப்பக்கம் நிறுத்தியதால் அதிகமாய் யோசிக்க முடியாத கனகதுர்கா விஷாலியைப் பார்த்துப் புன்னகைத்தபடி அவளையும் மறு கையால் அணைத்துக் கொண்டாள். ஈஸ்வருக்கு மிக அருகில் வந்ததால் விஷாலிக்கு முகம் சிவந்தது.

ஓ...இவள் தானா அந்தப் பெண்என்று நினைவு வந்தவளாக கனகதுர்கா விஷாலியைக் கூர்ந்து பார்த்தாள். அவளுக்கு விஷாலியை மிகவும் பிடித்துப் போனது. அவள் மகனைப் பார்த்தாள். ஈஸ்வர் விஷாலியின் அருகாமையால் பாதிக்கப்படாமல் இருக்க பாடுபட்டுக் கொண்டிருந்தான். மனதிற்குள் ‘யாரோ இவன்பாடல் தானாக ஒலிக்க அவன் கஷ்டப்பட்டு முகத்தை இயல்பாக வைத்திருந்தான். விஷாலி முகம் சிவக்கையில் கூடுதல் அழகாய் இருக்கிறாள் என்று மனம் சொல்ல அவன் பார்வையைத் திருப்பிக் கொண்டான்.

மகன் எப்போதும் தன் உணர்ச்சிகளை அதிகமாக வெளியில் காட்டிக் கொள்பவன் அல்ல என்றாலும் அவன் சாதாரணமாக இருக்கும் விதங்களிலேயே பல வித்தியாசங்களைப் படிக்க முடிந்த கனகதுர்காவுக்கு இந்தப் பெண் அவனை நன்றாக பாதிக்க முடிந்தவள் என்பது புரிந்தது.

ஆனந்தவல்லி அவர்களைப் பெருமிதத்தோடு பார்த்தாள். அம்மா-மகன்-மருமகள் என்று ஒரு அழகான குடும்பம் அவள் கண்முன் தெரிந்தது. தன் மகனைப் பார்த்தாள்.

பரமேஸ்வரனுக்குத் தாயின் நடவடிக்கைகள் சிறுபிள்ளைத்தனமாய் பட்டது. விட்டால் அம்மா ஈஸ்வர் மேலேயே அந்தப் பெண்ணைத் தள்ளி விடுவாள் போல இருக்கிறதே, என்ன ஆயிற்று இவளுக்கு? அம்மாவிடம் முணுமுணுத்தார். “அம்மா, உன் வயசுக்குத் தகுந்த மாதிரி நடந்துக்கோம்மா

ஆனந்தவல்லி மகனிடம் குறும்பு பொங்க முணுமுணுத்துச் சொன்னாள். “உன் பேரனைச் சீண்டறதுன்னா எனக்கு உங்கப்பாவைச் சீண்டற மாதிரி அவ்வளவு சந்தோஷமா இருக்குடா.  ஆனா அவர் கிட்ட என்ன பிரச்சினைன்னா அதிகமா கோபமே படமாட்டார். சில சமயம் மண்ணு மாதிரி இருப்பார். ஆனா இவன் அப்படி இல்லைடா... அதனால தான் இவனைச் சீண்டாமல் இருக்க முடியறதில்லை....

பரமேஸ்வரன் சின்னப் புன்முறுவலுடன் மௌனமானார். அவர் தாயின் எத்தனையோ பரிமாணங்களை அவர் இப்போது தான் பார்க்கிறார். ஈஸ்வரைக் கணவனின் மறு ஜென்மமாகவே நினைக்கிறதால் விஷாலியைத் தானாக நினைக்க ஆரம்பித்துத் தான் இப்படி அந்தப் பெண்ணுக்காக வரிந்து கட்டி இறங்குகிறாளோ என்று கூட அவருக்குத் தோன்ற ஆரம்பித்தது. மனித மனதின் விசித்திரங்கள் தான் எத்தனை?

கனகதுர்கா விஷாலியைக் கேட்டாள். “அப்பா எப்படிம்மா இருக்கார்?

“சௌக்கியமா இருக்கார் ஆண்ட்டிஎன்றாள் விஷாலி.

“இந்தக் காலத்துக் குழந்தைகள் இந்தியால இருக்கற மாதிரியே பேசறதில்லை. ஆண்ட்டின்னு கூப்பிடறதுக்கு பதிலா அத்தைன்னு கூப்பிட்டா கேட்க எவ்வளவு நல்லா இருக்கும்என்று ஆனந்தவல்லி சொன்னாள்.

இத்தனை நாட்களாக மீனாட்சியை ஆண்ட்டி என்று தான் விஷாலி அழைத்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் ஒரு முறை கூட ஆனந்தவல்லி இந்தக் கருத்தைச் சொன்னதில்லை.  விஷாலிக்கு ஆனந்தவல்லியின் பேச்சுக்கான அர்த்தம் புரியாமல் இல்லை. சில நாட்களாகவே ஆனந்தவல்லி நடந்து கொள்வதன் அர்த்தம் இப்போது தெளிவாகவே புரிந்தது. விஷாலிக்கு ஆச்சரியமாக இருந்தது. கௌரவம் பார்ப்பதில் பரமேஸ்வரனை மிஞ்சுபவள் ஆனந்தவல்லி. அப்படிப்பட்டவள் தன் கொள்ளுப்பேரனுடன் அவளை இணைக்க முயற்சிகள் எடுப்பது எதனால் என்று புரியவில்லை. அந்தக் குடும்பத்துக்கு நிகராக எந்த விதத்திலும் தாங்கள் இல்லை என்பது விஷாலிக்குத் தெரியும்.

ஆனந்தவல்லியிடம் விஷாலி மனதிற்குள் சொன்னாள். “அவருக்கு என்னைப் பிடிக்கலை பாட்டி. நீங்க செய்யற முயற்சிகள் எல்லாம் வீண். அந்தஸ்துல மட்டுமல்ல, அழகிலும் அறிவிலும் கூட அவருக்கு நான் பொருத்தம் இல்லாதவள்.... நான் அவர் கிட்ட நடந்துகிட்ட விதத்துக்கு அவர் என்னைக் காறித் துப்பாததே பெரிய விஷயம்....

கண்களில் பெருகிய நீரைக் காண்பிக்க விரும்பாமல் வேறு பக்கம் விஷாலி திரும்பிக் கொண்டாள்.

ஆனந்தவல்லியை முறைத்த ஈஸ்வரின் அலைபேசி இசைத்தது. அழைத்தது பார்த்தசாரதி தான். ஈஸ்வர் நீங்க எங்கே இருக்கீங்க?

ஏர்போர்ட்டுல இருக்கேன் சார். அம்மா வந்திருக்காங்க

“நம்ம கேஸ்ல ஒரு முக்கியமான தகவல் கிடைச்சிருக்கு. உங்க கிட்டே பேச வேண்டி இருக்கு. நேர்ல வர முடியுமா?

“சாயங்காலம் வர்றேன் சார்


ரிராம் சிவலிங்கம் பற்றிய தன் கருத்தைச் சொல்லும் முன் போய் விட்டதால் கணபதி அவரிடம் மறுபடி கேட்டுத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தான். மகேஷ் வந்து குருஜி அவரை அழைப்பதாகச் சொல்லி விட்டுப் போனதும் கிளம்பிப் போன ஹரிராம் நிறைய நேரம் வரவில்லை. ஆனாலும் கணபதி அன்று அவருக்காக ஆவலாகக் காத்திருந்தான்.

அவர் வந்த போது ஆவலாக அவர் முகத்தைப் பார்த்தான். அவனைப் பார்த்த பிறகு தான் ஹரிராமிற்கு அவன் கேள்வி நினைவுக்கு வந்தது. அதற்கு என்ன பதில் சொல்வது என்று ஹரிராமிற்குப் புரியவில்லை. கணபதி அவருக்குத் தன் கேள்வியை மீண்டும் நினைவூட்டினான். எங்க சிவனோட சக்தி பரவாயில்லைங்களா?

சற்று முன் அலெக்ஸியின் நிலைமையைப் பார்த்திருந்தால் இவனுக்கு சிவனின் சக்தி முழுவதுமாய் புரிந்திருக்கும் என்று ஹரிராமிற்குத் தோன்றியது. ஆனால் விசேஷ மானஸ லிங்கம் இவனுக்கு அந்த மாதிரி சக்தியைக் காட்டி இருக்க வாய்ப்பில்லை... 

ஹரிராம் அவனிடம் சொன்னார். “நான் இந்த மாதிரி அற்புதத்தை வேறெங்கேயும் பார்த்ததில்லை

கணபதிக்குப் பெருமை தாங்கவில்லை. அவன் மாதிரி அவர்கள் மந்த புத்திக்காரர்கள் இல்லை. அவர்கள் சரியாகத் தான் மதிப்பிட்டு இருப்பார்கள். பாவம் அப்படிப்பட்ட உயர்ந்த சிவலிங்கம் அவனைப் போன்று மந்திரமோ, பூஜா முறைகளோ சரியாகத் தெரியாத ஒரு தற்குறி பூஜை செய்கிற நிலைமைக்கு வந்திருக்கிறது என்றெல்லாம் தோன்றியது.

மானசீகமாக அவன் சிவனிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டான். “என்னை மன்னிச்சு கொஞ்ச நாள் பொறுத்துக்கோ. அப்புறம் நல்லபடியா பூஜை செய்யறவங்க உனக்குக் கிடைப்பாங்க. சரியா?

ஹரிராம் அவனைப் பிரமிப்புடன் பார்த்தார். ஒருவர் மனதில் ஓடும் சிந்தனைகள் அவருக்கு சத்தமாய் பேசுகிற மாதிரிஆனால் அவர் ஏன் அப்படி அவனைப் பார்க்கிறார் என்பது கணபதிக்குப் புரியவில்லை.

குழந்தையை அணைத்துத் தூக்கிக் கொண்டு வருவது போல அன்று காலை அவன் விசேஷ மானஸ லிங்கத்தைத் தூக்கிக் கொண்டு வர முடிந்தது அவருக்கு நினைவு வந்தது. அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. ஆராய்ச்சிக்கு உகந்தது சிவலிங்கம் மட்டுமல்ல, இந்த கணபதியும் தான். இவனும் விசேஷமானவன் தான்….

கண்பதி அவரிடம் ஆவலுடன் கேட்டான். “சார், நீங்க எல்லாம் சிவலிங்கத்தை மட்டும் தான் ஆராய்ச்சி செய்வீங்களா, இல்லை பிள்ளையார் சிலை மாதிரி மத்ததையும் செய்வீங்களா?

ஹரிராம் சொன்னார். “இந்த மாதிரி தெய்வ விக்கிரகங்களை ஆராய்ச்சி செய்யறது எங்களுக்கெல்லாம் இது தான் முதல் தடவை. ஏன் கேட்கறீங்க?

ஐயோ என்னைப் போய் நீங்க ஏன் பன்மையில பேசறீங்க. ஒருமையிலயே பேசுங்க. நீங்க எனக்கு அப்பா மாதிரிஎன்றவன் தன்னுடைய பிள்ளையாரைப் பற்றி அவரிடம் சொல்ல ஆரம்பித்தான். “நாகனூர் தான் எங்க கிராமம். அங்கே வரசித்தி விநாயகர்ங்கிற என்னோட பிள்ளையார் இருக்கார்.....

ஹரிராம் அவனையே சுவாரசியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். சிவனும் எங்க சிவன் தான், வினாயகரும் என்னோட பிள்ளையார் தான். இறைவனின் குடும்பமே இவன் குடும்பம் தான் போல் இருக்கிறது. கணபதி பேசும் போது அவருக்கு இன்னொரு உண்மை புரிந்தது. எண்ணும் எண்ணங்களுக்கும், பேசும் வார்த்தைகளுக்கும் இடையே கடுகளவும் வித்தியாசம் இல்லாத ஒருவனை முதல் முறையாக அவர் பார்க்கிறார். இந்த உலகத்தின் அழுக்கு இன்னமும் தொட்டு விடாத ஒரு ஸ்படிகத்தை அவர் பார்க்கிறார்.....

மகேஷ் குருஜியை பிறகு எச்சரித்தான். “அந்த கணபதியை ஹரிராம் கிட்ட பேச விடறது ஆபத்துன்னு நினைக்கிறேன். விடாம பேசிகிட்டே இருக்கான்....

குருஜி சொன்னார். “அவனுக்குப் பேச ஆள் வேணும் இல்லாட்டி அவன் விசேஷ மானஸ லிங்கத்து கிட்டயே போய் பேச ஆரம்பிச்சாலும் ஆச்சரியம் இல்லை. அவன் ஹரிராம் கிட்ட பேசறது ஆபத்து இல்லை. அவன் சொல்லாமயே அவருக்கு அதெல்லாம் தெரிஞ்சுடும். அவன் என்னத்தைப் பேசிடப் போறான். பேச்செல்லாம் அவனோட பிள்ளையார் புராணமா தான் இருக்கும்....

மகேஷ் ரகசியமாய் வந்து அவர்கள் பேசுவதைக் கேட்டான். கணபதி அவன் பிள்ளையார் புராணத்தைத் தான் சொல்லிக் கொண்டிருந்தான். குருஜி எவ்வளவு துல்லியமாய் இவனைத் தெரிந்து வைத்திருக்கிறார் என்று வியந்து விட்டு நகர்ந்தான்.


று நாள் அதிகாலையில் கணபதி பூஜை செய்கையில் சிவனிடம் ஹரிராம் சொன்னதை மனதிற்குள் தெரிவித்தான். அவர் உன்னை அற்புதம்னு சொன்னார். நீ பாஸாயிட்டே.  மத்தவங்க ரெண்டு பேர்கிட்டயும் கேட்கலாம்னா அவங்க பாஷை தெரிய மாட்டேங்குது.... அவர் கிட்ட உன் பையனைப் பத்தியும் சொல்லி இருக்கேன். பிள்ளையாரையும் ஆராய்ச்சி செய்வீங்களானு கேட்டேன். ஆனா அமெரிக்காவுக்கு எல்லாம் என் பிள்ளையாரை எடுத்துகிட்டு போக நான் விட மாட்டேன்னு தெளிவாய் சொல்லிட்டேன். அவரையும் எடுத்துட்டு போயிட்டா நான் என்ன பண்ணுவேன் சொல்லு.....

குருஜி வந்து தான் அவன் பூஜையை துரிதப்படுத்த வேண்டியதாயிற்று. அவன் பூஜையை முடித்த பிறகு சொன்னார். கணபதி உண்மையில இன்னைக்கு தான் ஆராய்ச்சியோட முதல் நாள். முக்கிய ஆராய்ச்சி நாளைல இருந்து தான் ஆரம்பிக்குதுன்னாலும் இன்னைக்கு தான் எங்களைத் தயார்ப்படுத்திக்கிறோம். உன் சிவன் தயாராய் இருக்காரா?

கடவுள் எப்பவுமே தயார் தானே குருஜி. மனுஷங்க தான் அவருக்குத் தயாரா இருக்கறதில்லை

குருஜி அவனையே பார்த்தார்.  கணபதிக்குத் திடீர் என்று வேறு நினைவு ஒன்று வந்தது. “இன்னைக்கு முதல் நாள்னு வேற சொல்றீங்க. சிவனுக்கு  கட்ட என் கிட்ட புது பட்டு வேஷ்டி இருக்கு. நான் கொண்டு வந்துட்டடுமா?”. கணபதி அவர் பதிலுக்குக் காத்திராமல் தனதறைக்கு ஓட குருஜி அருகே இருந்த ஜான்சனையும் பாபுஜியையும் பார்த்தார்.

பாபுஜி சொன்னார். “இவன் பார்க்க பாவமா இருந்தாலும் வில்லங்கமாயும் பேசறான். கடவுள் எப்பவுமே தயார், மனுஷங்க தான் தயாரில்லைன்னு சொல்றானே

குருஜி புன்னகை செய்தார். “சில சமயங்கள் குழந்தைகள் வாயில இருந்து பெரிய தத்துவார்த்தமான வார்த்தைகள் வந்துடறது இல்லையா? அப்படித் தான் இதுவும்...

அலெக்ஸி, கியோமி, ஹரிராம் மூவரும் தியான மண்டபத்திற்குள் நுழைந்தனர். ஜான்சன் அவர்களைப் பார்த்ததும் அவர்கள் அருகே விரைந்து சென்றார். “தயாராக இருக்கிறீர்கள் அல்லவா?என்று அவர்களைக் கேட்டார். அவர்கள் ஆம் என்றார்கள். இந்த ஆராய்ச்சிகளுக்காக அவர்கள் பல நாட்களாகத் தயார்ப்படுத்தப் பட்டிருந்தார்கள்.

ஜான்சன் சொன்னார். “இன்றைக்கு நீங்கள் உங்கள் முழுக்கட்டுப்பாட்டில் இருந்து சிவலிங்க சக்தியோடு ட்யூன் ஆகிறதை உணர்கிற போது செய்ய வேண்டியவை இரண்டு. ஒன்று உங்கள் வலது சுட்டு விரலை மட்டும் மேலே நீட்டுங்கள். இரண்டாவது ரோஜாப்பூவை நினையுங்கள். சரியா?

அவர்கள் தலையசைத்தார்கள். மூவருக்கும் தலையில் மாட்டிக் கொள்ள வயர்லெஸ் EEG மெஷின் செட்கள் தரப்பட்டன. அவர்கள் மாட்டிக் கொண்டார்கள்.

கணபதி புதிய பட்டு வேட்டியுடன் தியான மண்டபத்திற்குள் ஓட்டமும் நடையுமாய் வந்தான். அதை விசேஷ மானஸ லிங்கத்திற்கு அணிவித்து விட்டு இரண்டடி பின்னுக்கு வந்து அந்த சிவலிங்கத்தைப் பெருமிதத்துடன் பார்த்தான்.   நல்லா அம்சமா இருக்குஎன்று நினைத்துக் கொண்டான்.

ஹரிராம் புன்னகைத்தார். மகேஷ் ‘இவன் என்ன லூஸா?என்று தனக்குள் கேட்டுக் கொண்டான். குருஜி தானும் வயர்லெஸ் EEG மெஷின் செட்டை தலையில் பொருத்திக் கொண்டார். பின் கணபதியிடம் கேட்டார். “கணபதி நீயும் இதைப் போட்டுக்கறியா?

எதுக்கு?கணபதி வெகுளித்தனமாய் கேட்டான்.

ஆராய்ச்சியில் உன்னையும் சேர்த்துக்கத் தான்

அந்த வயர்லெஸ் EEG மெஷின் எதை அளக்கிறது என்பது கணபதிக்குத் தெரியவில்லை. “இதை என் தலையில் மாட்டிகிட்டா உள்ளே இருக்கிற களிமண் தான் தெரியும்என்று சொல்லி விட்டு கலகலவென்று கணபதி சிரித்தான். மேலும் அவனுக்கு அதை மாட்டிக் கொள்வது ஆஸ்பத்திரி சூழலை நினைவுபடுத்தியது.

அவனை வற்புறுத்த குருஜி விரும்பவில்லை.

ஜான்சன் மகேஷைப் பார்த்து சைகை செய்ய மகேஷ் ஒரு மெஷினைக் கொண்டு வந்தான். தூரத்திலேயே நின்றான். குருஜி கணபதியிடம் சொன்னார். “கணபதி அந்த மெஷினை வாங்கி சிவலிங்கத்துக்கு ரெண்டடி தள்ளி அந்தப் பக்கம் வையேன்”.

ஓ சிவன் பக்கத்திலேயும் ஒரு மெஷின் இருக்காஎன்று கேட்டபடியே மகேஷிடம் இருந்து அந்த மெஷினை வாங்கிய கணபதி குருஜி கைகாட்டிய இடத்தில் வைத்தான். அந்த மெஷின் விலை உயர்ந்த மெஷினாக கணபதிக்குத் தோன்றியது. சிவன் பக்கத்தில் அதை வைப்பது சிவனுக்குப் பெருமை சேர்ப்பது போல அவனுக்குத் தோன்றியது. “பார்த்தியா உனக்காக என்ன எல்லாம் வாங்கிட்டு வந்திருக்காங்க

அந்த மெஷின் ஜெர்மனியில் தயாரானது. ஃபவுண்டரிகளில் உலோகங்கள் உருக்கப்படும் போது ஏற்படும் வெப்பத்தை அளக்கும் ஒரு வகை ஆப்டிகல் பைரோமீட்டர் அது. அத்துடன் ஒளியின் தீட்சண்ணியத்தையும் அளக்கும் அமசத்தையும் சேர்த்து விசேஷ மானஸ லிங்கத்தை ஆராய்ச்சி செய்வதற்காகவே ஜெர்மனியில் பிரத்தியேகமாகத் தயாரித்திருந்தார்கள்.

மகேஷ் அந்த மெஷினை எப்படி வைக்க வேண்டும் என்று தூரத்தில் இருந்தே சொல்ல கணபதி அந்த மெஷினை வைத்த விதத்தை சரிப்படுத்தினான். அந்த மெஷினில் இருந்த லென்ஸ் பகுதி இப்போது சிவலிங்கத்தைப் பார்த்தபடி இருந்தது. கணபதி ஒதுக்குப் புறமாக நகர்ந்து ஒரு சுவரோரமாக நின்றான்.

மகேஷ் தியான மண்டபத்தின் சுவர்களில் பொருத்தப்பட்டிருந்த கம்ப்யூட்டர் திரைகளைப் பார்த்தான். நான்கு பேர்களுடைய வயர்லெஸ் EEG மெஷின்களின் அளவீடுகள் நான்கு திரைகளில் தெரிந்தன. ஐந்தாவது வயர்லெஸ் EEG மெஷின் அணியப்படாததால் ஐந்தாவது திரை மட்டும் காலியாக இருந்தது. ஆறாவது திரையில் சிவலிங்கத்தை அளக்கும் விசேஷ பைரோமீட்டர் அளவீடு தெரிந்தது. எல்லாம் வயர்லெஸ் மூலமாக முன்பே கம்ப்யூட்டர்களில் முன்பே இணைக்கப்பட்டிருந்தன. திரையில் தெரிவது மட்டுமல்லாமல் கம்ப்யூட்டர்களில் துல்லியமாகப் பதிவாகிக் கொண்டிருந்தன.

நான்கு பேருடைய மூளை மின்னலைகளும் பீட்டா அலைகளைக் காட்டின. (தெரியாதவர்களுக்கு சிறு குறிப்பு: மூளையின் மின்னலைகள் ஒரு வினாடிக்கு எத்தனை சிபிஎஸ் CPS (Cycle per second) ஏற்படுகின்றன என்பதை வைத்து தான் அளக்கப்படுகின்றன.  பெரும்பாலும் நாம் இருப்பது பீட்டா (14க்கும் மேற்பட்ட சிபிஎஸ்) அலைகளில் தான். தியான நிலை அல்லது அரைத்தூக்க அமைதி நிலையில் ஆல்ஃபா (8 முதல் 13 வரை சிபிஎஸ்) அலைகளிலும், ஆழ்ந்த தூக்கத்தில் தீட்டா (4 முதல் 7 வரை சிபிஎஸ்) அலைகளிலும் இருக்கிறோம். சமாதி நிலைக்குச் செல்லக் கூடிய யோகிகள், சித்தர்கள் அதற்கும் அடுத்த நிலையான டெல்டா (4க்கும் குறைவான சிபிஎஸ்) அலைகளில் சஞ்சரிக்க முடிந்தவர்கள்.)

விசேஷ பைரோமீட்டரில் அறையின் வெப்ப நிலையும், அருகில் எரிந்து கொண்டிருந்த விளக்குகள் ஒளியளவும் தெரிந்து கொண்டிருந்தன.  மகேஷ் திருப்தியுடன் ஜான்சனைப் பார்த்துத் தலையாட்டினான். எல்லாம் சரியாக இருக்கின்றன என்று சைகையால் தெரிவித்தான்.

நால்வரில் குருஜியும், கியோமியும் ஆல்ஃபா அலைகளுக்கு சீக்கிரமே வந்தார்கள். அடுத்ததாக ஹரிராமும், அதற்கும் அடுத்ததாக அலெக்ஸியும் ஆல்ஃபா அலைகளுக்கு வந்தார்கள். ஆனால் சிவலிங்கத்திடம் எந்த மாற்றமும் இல்லை. பைரோ மீட்டர் பழைய அளவுகளையே காண்பித்தது.

திடீரென்று சிவலிங்கம் ஒளிர்ந்தது. விசேஷ பைரோமீட்டர் அதிக பட்ச அளவுக்குப் போய் உடனே டுப் என்ற சத்தத்தோடு பழுதாகியது.

அதையே பார்த்துக் கொண்டிருந்த கணபதிக்கு வருத்தமாயிற்று. சிவனின் மெஷின் பாழாகி விட்டதே என்று வருத்தப்பட்டவன் சத்தமாக அங்கலாய்த்தான். நல்ல மெஷினாய் வாங்கியிருக்கலாமே

(தொடரும்)

No comments:

Post a Comment