Monday, June 30, 2014

அமானுஷ்யன் - 3



இரத்தக் கறையை முதலில் கவனித்தவன் இளைய பிக்குவிடம் சொன்னான். "நாங்கள் உள்ளே போய் பார்க்க வேண்டும்"

இளைய பிக்கு தயங்கினார். அவரது தயக்கத்தைப் பார்த்தவன் தன் அடையாள அட்டையை நீட்டினான். "போலீஸ்"

"நீங்கள் பிணத்தைத் தேடுகிறீர்கள். நாங்கள் பிணத்தை உள்ளே வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறோம்?"

"இது என்ன ரத்தக் கறை?" கதவைக் காட்டி அவன் கேட்டான்.

மூத்த பிக்கு தன் கையில் பேண்டேஜுடன் வெளியே வந்தார். "என்ன விஷயம்?"

இளைய பிக்கு சொன்னார். "எதோ பிணத்தைத் தேடுகிறார்கள். இந்த ரத்தக் கறையைப் பார்த்து உள்ளே வந்து பார்க்கணும்னு சொல்கிறார்கள்"

"இது நேற்று என் கையில் அடிபட்ட காயத்தினால் ஆனது." மூத்த பிக்கு தன் கையில் கட்டியிருந்த பேண்டேஜைக் காட்டினார்.

அவனுக்கு சந்தேகம் நீங்கினாலும் ஏதோ ஒரு எண்ணத்தால் நகராமல் அங்கேயே நின்றான்.

மூத்த பிக்கு கேட்டார். "யாருடைய பிணத்தைத் தேடுகிறீர்கள்?"

"தீவிரவாதி ஒருவன் பிணத்தை"

"என்ன பெயர்?"

அவன் ஒன்றும் சொல்லாமல் தன்னுடன் வந்தவனை ஆலோசனையுடன் பார்த்தான். உடன் வந்தவன் அவனிடம் மெல்லிய குரலில் சொன்னான். "வேறு இடத்தில் போய் தேடலாம். இவர்கள் சொன்னது போல் பிணத்தை இவர்கள் ஏன் உள்ளே வைத்துக் கொள்ளப் போகிறார்கள்"

"அவன் பிணத்தைக் கண்ணால் பார்க்கிற வரை, அவன் உடலை எரிக்கிற வரை அவன் செத்து விட்டான் என்று நம்ப முடியாது என்கிறார்கள்."

"இத்தனை உயரத்திலிருந்து குண்டடி பட்டு விழுந்தவன் எப்படி உயிர் பிழைக்க முடியும்?"

"தெரியவில்லை. ஆனால் அவனைப் பொறுத்த வரை எதுவும் நடக்கலாம் என்கிறார்கள்"

குரலைத் தாழ்த்தி அவர்கள் பேசிக் கொண்ட போதிலும் மூத்த பிக்கு அருகில் இருந்ததால் முழுமையாகக் கூர்ந்து கேட்டார்.

"எதற்கும் நாங்கள் உள்ளே சென்று பார்த்து விடுகிறோம்" என்று தீர்மானமாகச் சொன்னான் அவர்களிடம் பேசியவன்.

வேறு வழியில்லாமல் மூத்த பிக்கு தலையசைத்தார். இளைய பிக்கு முகத்தில் வருத்தமும் பயமும் படர்ந்தது.
வந்தவர்கள் இருவரும் உள்ளே செல்ல பிக்குகள் இருவரும் பின் தொடர்ந்தார்கள்.

அது ஒரு பெரிய புத்த விஹாரம். அவர்கள் இருவரும் எந்த இடத்தையும் விட்டு வைக்காமல் பார்க்க ஆரம்பித்தார்கள். அவர்கள் தேடிய நபரைப் படுக்க வைத்திருந்த அறைக்குள் நுழைந்த போது மூத்த பிக்குவிற்கும், இளைய பிக்குவிற்கும் இதயங்கள் வேகமாகவும் சத்தமாகவும் துடிக்க ஆரம்பித்தன. உள்ளே சென்று தேடியவர்கள் இருட்டான மூலைகளைக் கூட கையில் கொண்டு வந்திருந்த டார்ச் லைட்டால் வெளிச்சமாக்கிப் பார்த்தார்கள். அவன் அங்கு இருந்ததற்கான அறிகுறியே இல்லை. அவன் படுத்திருந்த மரக் கட்டில் ஒரு ஓரத்தில் இருந்தது. அதில் சில புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்தன. அவர்கள் கீழே மட்டுமல்லாமல் அண்ணாந்து மேலேயும் பார்த்தார்கள். விட்டத்தில் கூட அவன் இருக்கலாம் என்பது போல் அவர்கள் தேடல் இருந்தது.

அதற்குள் அவன் எங்கு போயிருப்பான் என்று இரண்டு பிக்குகளும் அதிசயித்தனர்.

அடுத்ததாக அவர்கள் தியான மண்டபத்திற்குள் நுழைய முற்பட்ட போது மூத்த பிக்கு தாழ்ந்த குரலில் வேண்டிக் கொண்டார். "எல்லாரும் தியானத்தில் இருக்கிறார்கள். முடிந்த வரை தொந்தரவு செய்யாமல் பாருங்கள்"

இருவரும் தலையாட்டினார்கள். தியான மண்டபத்தின் மத்தியில் ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அந்த விளக்கின் மங்கலான ஒளியில் புத்த பிக்குகள் தியானத்தில் இருந்தார்கள். சிலர் கையில் ஜபமாலை உருண்டு கொண்டிருந்தாலும் அவர்கள் பார்வை வந்தவர்கள் மேல் இருந்தது. மற்றவர்கள் நிஜமான தியானத்தில் இருந்தார்கள். அவர்களுக்கு எதிரே ஒரு பெரிய புத்தர் சிலை இருந்தது. புத்தர் சிலைக்குப் பின்புறம் இருட்டு இருந்ததைப் பார்த்த இருவரும் வேகமாகச் சென்று அங்கே டார்ச் லைட்டை அடித்துப் பார்த்தார்கள். அங்கும் யாரும் இல்லை.

வந்தவர்கள் தியான மண்டபத்தை விட்டு வெளியே வந்து மற்ற அறைகளையும் பார்த்தார்கள். பின் திருப்தியுடன் வெளியே வந்தார்கள்.

உள்ளே அவனைக் காணாததால் இரண்டு பிக்குகளுக்கும் வியப்பு தாளவில்லை. போலீஸ் என்று சொல்லி வந்த அந்த இருவரையும் மூத்த பிக்கு மீண்டும் கேட்டார். "அந்த தீவிரவாதி பெயர் என்ன?"

ரத்தக் கறையைப் பார்த்து ஆரம்பத்தில் சந்தேகப்பட்டவன் சொன்னான். "ஒரு பெயர் இருந்தால் சொல்லலாம். அவனுக்கு ஆயிரம் பெயர். எதைச் சொல்வது? எது உண்மையான பெயர் என்று யாருக்குத் தெரியும்?"

இருவரும் கிளம்பினார்கள். போகும் போது சலிப்புடன் தன் கூட வந்தவனிடம் சொன்னான். "இனி எங்கே என்று தேடுவது? அவன் பிணத்தை ஏதாவது காட்டு விலங்கு கூட எடுத்துக் கொண்டு போயிருக்கலாம்...."

********
மஹாவீர் ஜெயின் நீட்டிய அந்த •பைலை வாங்கிய ராஜாராம் ரெட்டி அமைதியாக அதைப்படித்தார்.

ராஜாராம் ரெட்டி CBIல் மிகுந்த நன்மதிப்பைப் பெற்ற உயர் அதிகாரி. நாணயத்திற்குப் பெயர் போனவர். எத்தனையோ கேஸ்களை வெற்றிகரமாகக் கையாண்டவர். இரண்டாண்டுகளுக்கு முன் ஒரு மந்திரியின் கிரிமினல் நடவடிக்கைகள் பற்றி கண்டு பிடித்து வெளிக் கொண்டு வரக் காரணமானவர். ஆனால் அந்த வழக்கு நீதிமன்றத்தின் முன் வந்த போது வக்கீல்கள் அவர் கண்டு பிடித்த ஆதாரங்களில் இருந்த சில்லறை ஓட்டைகளைப் பெரிதாக்கி அதிசாமர்த்தியமாக வாதாடி 'போதிய ஆதாரங்கள் இல்லை' என்ற தீர்ப்பை வரவழைத்து அந்த மந்திரியை விடுதலை செய்ய வைத்து விட்டனர். அந்த மந்திரியின் ஆதரவாளர்கள் தன் முன் நீதிமன்ற வளாகத்தில் ஆடிய ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ரெட்டி நீண்ட நாட்கள் அலுவலகத்தின் பக்கமே வரவில்லை. ஜெயின் அவருடைய வீட்டுக்குப் போய் அவரை சமாதானப்படுத்தி தான் மீண்டும் அந்த சமயத்தில் அழைத்து வந்தார்.

ஆனாலும் வந்த பின் ராஜாராம் ரெட்டிக்கு வேலையில் இருந்த பழைய துடிப்பு இருக்கவில்லை. ரிடையர்மெண்டுக்கு மீதமுள்ள மூன்றாண்டுகளை பிரச்சினை இல்லாமல் கழிக்க வேண்டும் என்ற மனநிலையில் தான் வேலையை இயந்திரத்தனமாக செய்து வந்தார். ஆனாலும் அவரது கூர்மையான அறிவுக்காக அவ்வப்போது அவரிடம் ஜெயின் ஆலோசனைகள் கேட்பது வழக்கம். இப்போதும் தான் தேர்ந்தெடுத்த ஆள் பற்றி அவருடைய கருத்து என்ன என்று அறியத் தான் அந்த •பைலை அவரிடம் கொடுத்து படிக்கச் சொன்னார்.

படித்து முடித்த ரெட்டி முகத்தில் ஒருவித வருத்தம் தெரிந்தது.

"என்ன ரெட்டி?"

"இவ்வளவு புத்திசாலித்தனம், துடிப்பு இருக்கிற ஆளை எத்தனை நாளுக்கு இந்த உலகம் இப்படியே இருக்க விடும்னு தோணுது"

அவர் இன்னும் அந்தப் பழைய மந்திரி கேஸை மறக்க முடியாமல் கஷ்டப்படுகிறார் என்பது ஜெயினுக்குப் புரிந்தது. "சில பேர் கடைசி வரைக்கும் அப்படியே இருந்துடறாங்க ரெட்டி. நம் ஆச்சார்யா இருக்கவில்லையா"

"அவரைக் கொன்னுட்டாங்களே சார்"

ஜெயினுக்கு ஆச்சார்யாவை உதாரணம் காட்டியிருக்க வேண்டாம் என்று தோன்றியது. "ஆனந்தைத் தேர்ந்தெடுத்தது பற்றி என்ன நினைக்கிறீங்க?"

"அருமையான தேர்வு. அதில் சந்தேகமேயில்லை."

"ரெட்டி. ஆச்சார்யாவைக் கொலை செய்தவர்களைக் கண்டு பிடிப்பது CBIக்கு ஒரு கௌரவப் பிரச்சினை. அவர் வழிமுறைகள் நம்மால் ஏற்க முடியாதிருக்கலாம். ஆனால் அவர் நம் தேசத்தின் மீது வைத்திருந்த பக்தியும், அவருடைய நாணயமும் அப்பழுக்கில்லாதது. அவர் ஒரு தடவை CBIக்குள்ளேயே வெளியாட்களுக்குத் தகவல்கள் தரும் ஆட்கள் இருக்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறார். யார் என்று கேட்டதற்கு சரியாகத் தெரியவில்லை என்று சொன்னார். அதனால் தான் நான் நம் ஆபிஸ் ஆட்களை இதில் ஈடுபடுத்தாமல் ஆனந்தைத் தேர்ந்தெடுத்தேன்"

ரெட்டி ஜெயினையே ஓரிரு நிமிடங்கள் பார்த்தார். பின் வருத்தத்துடன் சொன்னார். "ஆச்சார்யா கேஸ்ல போலீசுக்கு எந்தத் துப்பும் கிடைக்கலை. அவர் உங்களுக்கு செய்த போன் காலை வச்சு நாம் தான் இப்ப அவர் கண்டுபிடிச்ச புது கேஸ் காரணமாயிருக்கும்னு சந்தேகப்படறோமே ஒழிய போலீஸ் ஏதோ அவர் கண்டுபிடிச்சு தண்டனை வாங்கிக் கொடுத்த பழைய கேஸ்கள் மேல் தான் சந்தேகப்படறாங்க. பழைய கேஸோ, புது கேஸோ அவர் வீட்டு சாமான்களை உடைச்சு அட்டூழியம் பண்ணியிருக்கறதைப் பார்த்தால் பழி வாங்கிற மாதிரி வர்ற சந்தேகம் ஆதாரமில்லாதது போல தோணலை சார். இந்தப் புது கேஸ் தான் காரணமா இருக்குன்னா அது எந்த மாதிரி கேஸா இருக்கும்னு நீங்க சந்தேகப்படறீங்க?"

"தெரியலை. ஆனா எனக்கு அப்படி சாமான்களை எல்லாம் அடிச்சு துவம்சம் செஞ்சிருக்கறது போலீசை திசை திருப்பறதுக்கா இருக்கும்னு தான் தோணுது. ஆச்சார்யா மறு நாள் ஏதோ ஆதாரங்களை என் டேபிள்ல வைக்கிறதா சொல்லியிருந்தார். அந்த ஆதாரங்களைத் தேடி அந்த சாமான்களை விசிறி எறிந்திருக்கலாம். கடைசியில் வேணும்னே அந்த சாமான்களை உடைச்சு ரௌடியிசம் மாதிரி காண்பிக்கிற முயற்சி தான் அதுன்னு நினைக்கிறேன்."

ரெட்டி யோசித்து விட்டு இருக்கலாம் என்று தலையசைத்தார். "சரி அந்த ஆதாரங்கள் அந்த கொலைகாரர்கள் கையில் கிடைச்சிருக்குமா? நீங்க என்ன நினைக்கிறீங்க"

"அது தான் தெரியலை" என்று சொன்ன ஜெயின் பெருமூச்சு விட்டார்.

(தொடரும்)

No comments:

Post a Comment