அன்று நள்ளிரவு வரை ஈஸ்வரும் விஷாலியும் மொட்டை மாடியில் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் பேசிக் கொள்ள நிறைய இருந்தது. ஒருவரைப் பற்றி ஒருவர் தெரிந்து கொள்ள நிறைய இருந்தது. காதலிக்க ஆரம்பித்திருக்கிறோம் என்பதை எப்போது உணர்ந்து கொண்டோம் என்பதில் இருந்து ஊடலின் போது எப்படி எல்லாம் வேதனைப்பட்டோம் என்பது வரை ஒருவருக்கொருவர் ஒளிவு மறைவில்லாமல் பகிர்ந்து கொண்டார்கள். ஆனால் அப்போதும் கூட மகேஷ் சொல்லித் தான் ஈஸ்வரைத் தவறாக நினைத்தேன் என்பதை விஷாலி தெரிவிக்கவில்லை. நினைவு தெரிந்த நாளில் இருந்து அவளுக்கு நல்ல நண்பனாக இருந்தவனைக் காதலனிடம் கூடக் காட்டிக் கொடுக்க அவள் மனம் ஒப்பவில்லை. இன்னமும் மகேஷ் மீது அவளுக்கு அளவு கடந்த கோபம் இருக்கத் தான் செய்தது. ஆனாலும் அது தனியாக அவனைத் திட்டித் தீர்க்க வேண்டிய விஷயமாகத் தான் விஷாலி வைத்திருந்தாள்...
ஈஸ்வரும் விசேஷ மானஸ லிங்கம் பற்றிய நடப்பு விவரங்களை மட்டும் அவளிடம் தெரிவிக்கவில்லை. சொல்ல ஆரம்பித்தால் அதுவே நிறைய நேரத்தை எடுத்துக் கொள்ளும், மற்ற எதைப் பற்றியும் சொல்லவோ கேட்கவோ நேரம் இருக்காது என்று அவன் நினைத்தான். அவனுக்கு அவள் தங்களுக்குள் விரிசல் ஏற்படக் காரணமான மகேஷை காட்டிக் கொடுக்காதது பற்றிச் சின்ன மனத்தாங்கல் இருந்தது. ஆனால் அவள் தன் பிள்ளைப் பிராய நினைவுகளை அவனுடன் பகிர்ந்து கொண்ட போது மகேஷ் எப்படி எல்லாம் அவளுக்கு எத்தனையோ விட்டுக் கொடுத்திருக்கிறான் என்பதையும் சேர்த்து தெரிவித்தாள். ஈஸ்வருக்கு மகேஷை அவள் காட்டிக் கொடுக்காததன் காரணம் புரிந்தது.
மற்றபடி நிறைய பேசினார்கள். பேசி முடியாது என்று தோன்றிய போது பேச்சை நிறுத்தி கை கோர்த்துக் கொண்டு ஆகாயத்தின் நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டே அந்த மௌனத்தையும், வீசிக் கொண்டிருந்த சில்லென்ற காற்றையும் ரசித்தார்கள். அவர்களுடைய மனங்கள் நிறைந்திருந்த போதும் லேசாக இருப்பதாக உணர்ந்தார்கள்....
உறங்கக் கிளம்பிய போது அவள் கேட்டாள். ”நாளைக்குப் போனால் எப்ப வருவீங்க?”
“தெரியலை விஷாலி. ஆனா இது எனக்கு ஒரு முக்கியமான ஆராய்ச்சி. அதனால முடிக்காமல் வர மாட்டேன்... அந்த ஆராய்ச்சி பத்தி வந்ததுக்கப்புறம் உனக்கு விவரிச்சு சொல்றேன்...”
மறு நாள் அதிகாலையில் அவன் கிளம்பிய போது அவனுக்குள் திடீரென்று ஒரு இனம் புரியாத பயம் ஏற்பட்டது. ஒரு பெரிய ஆபத்து அவனுக்காகக் காத்திருப்பது போலத் தோன்றியது. இது நாள் வரை அப்படி அவன் எப்போதும் உணர்ந்ததில்லை. இது வெறும் ஆராய்ச்சியாக மட்டும் இருக்கப் போவதில்லை என்று அவன் உள்ளுணர்வு எச்சரித்தது.
சிறிது யோசித்து விட்டு ஆனந்தவல்லி அறைக்குப் போனான். ஆனந்தவல்லி கேட்டாள். “என்னடா?”
“பரண்ல தாத்தாவோட பழைய டிரங்குப் பெட்டில அந்த சிவலிங்கத்தோட ஃபோட்டோவை அன்னைக்குப் பார்த்தேன். அதை எடுத்துட்டுப் போறேன்”
“என்ன வேணுமோ எடுத்துக்கோ”
அவன் போய் சிவலிங்கத்தின் புகைப்படத்தை எடுத்துக் கொண்டு வந்தான். இந்தக் குடும்பத்துக்கே மூத்தவளை, பசுபதியைப் பெற்றவளை வணங்கி ஆசி வாங்கி விட்டுப் போக அவனுக்குத் தோன்றியது. ஆனந்தவல்லியின் காலைத் தொட்டுக் கும்பிட்டான்.
“என்னடா, நேத்து கழுத்தை நெறிச்சே. இன்னைக்குக் காலைப் பிடிக்கறே?” என்று வாய் சொன்ன போதும் அவள் மனம் கொள்ளுப் பேரனுக்குப் பூரணமாக ஆசிர்வதித்தது.
ஜான்சன் ஹரிராம், கியோமி, அலெக்ஸி மூவருக்கும் அன்றைய ஆராய்ச்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் விஷயத்தை விளக்கிக் கொண்டிருந்தார். அதே நேரத்தில் குருஜியும் கணபதியிடம் அதையே விளக்கிக் கொண்டிருந்தார். கணபதியை இந்த ஆராய்ச்சியில் சேர்த்துக் கொள்வது இரண்டு விதங்களில் நல்லது என்று குருஜி நினைத்தார். முதலாவதாக இந்த அளவு பெரிய ஆராய்ச்சியில் அவனும் பங்கு கொள்வது ஆராய்ச்சியின் வெற்றிக்குக் கண்டிப்பாக உதவியாக இருக்கும். இரண்டாவதாக கணபதி வேறு ஏதாவது விதங்களில் இடைஞ்சல் செய்யாமல் இருப்பான்.
சோமாலியக் கடற்கொள்ளைக்காரர்களை அழிப்பது தான் இந்த ஆராய்ச்சி என்று கேள்விப்பட்டவுடன் கணபதிக்கு வருத்தமாக இருந்தது. ”ஏன் குருஜி அவங்களைக் கூப்பிட்டுப் புத்திமதி சொன்னா திருந்த மாட்டாங்களா?”
குருஜி அவனையே பார்த்தார். பின் சொன்னார். “புத்திமதி சொல்லியே மனுஷங்களை திருத்திட முடியும்னா இந்த உலகம் இப்படி இருக்கவே இருக்காதேப்பா”. பின் அந்த கடற்கொள்ளையர்களை விட்டு வைத்தால் அவர்கள் இது போல பல கப்பல்களைக் கடத்துவார்கள், பலர் உயிரைப் பறிப்பார்கள் என்றெல்லாம் சொல்லிப் புரிய வைத்தார். குருஜி சொன்னால் சரியாகத் தான் இருக்கும் என்று கணபதி நினைத்தான். ’புராணங்களிலேயே அரக்கர்களை அப்படித் தான் பகவான் அழிச்சார்னு படிச்சிருக்கோமே’
ஆராய்ச்சி நுணுக்கங்களை அவனுக்குச் சொல்லித் தர முடியாது என்று நினைத்த குருஜி அவனிடம் அந்தக் கெட்டவர்கள் அழிய வேண்டும் என்று நினைத்து அவர்கள் அழிவதை நேரில் பார்ப்பது போலக் கற்பனை மட்டும் செய்யச் சொன்னார். கணபதி தலையசைத்தான்.
ஜான்சன் அந்த மூவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். ”... நீங்கள் விளைவுகளை மட்டும் நினையுங்கள். அந்த விளைவுகள் எந்த முறையில் நடக்க வேண்டும் என்றெல்லாம் நினைக்க வேண்டாம். என்ன ஆக வேண்டும் என்று மட்டும் நீங்கள் சொன்னால் போதும், விசேஷ மானஸ லிங்கம் எப்படி என்பதை அதுவாகவே தீர்மானித்து செயல்படுத்தி விடும்...”
ஜான்சன் கண்டிப்பாக வெற்றி அடையக்கூடிய ஆராய்ச்சி என்பது போல தன்னம்பிக்கையை வெளிப்படுத்திப் பேசினாரே ஒழிய அவருக்கு உள்ளே இன்னும் சந்தேகம் இருந்தது. சோமாலியக் கடற்கொள்ளையர்கள் பெரும்பாலும் செங்கடல் (Red Sea) ஏடன் வளைகுடா (Gulf of Aden) பகுதிகளில் தான் இருப்பார்கள் என்று சொல்லி அந்தப் பகுதிகளின் வரைபடத்தையும் கணபதிக்கும், அந்த மூவருக்கும் காட்டினார். அந்தக் கடற்கொள்ளையர்கள் சிலரின் புகைப்படங்களையும் காட்டினார். பிறகு அந்தக் கடற்கொள்ளையர்களின் புகைப்படங்களும், செங்கடல்-ஏடன் வளைகுடா பகுதி வரைபடமும் எல்லோரும் பார்க்க வசதியாக இருந்த சுவரில் பெரிய சைஸில் ஓட்டவைக்கப்பட்டன.
அவர்கள் ஆராய்ச்சி ஆரம்பமானது.... குருஜி உட்பட நான்கு பேரும் முதல் நாள் போலவே அமர கணபதி சிவலிங்கம் அருகே உட்கார்ந்து கொண்டான். அவனுக்கு அந்த மெஷின்களை அவர்களைப் போல மாட்டிக் கொள்ளப் பிடிக்கவில்லை. குருஜி அவனை வற்புறுத்தவில்லை. நான் சொன்னது போல நீ நினைத்தால் போதும் என்று சொல்லி விட்டார்.
ஈஸ்வர் தோட்ட வீட்டுக்குச் சென்ற போது அவனுக்காக பார்த்தசாரதி தோட்டத்தில் காத்துக் கொண்டிருந்தார். அவருக்கு ஈஸ்வர் என்ன செய்வான் என்பதை அறிய ஆவலாக இருந்தது. அந்த குறி சொல்லும் கிழவி வீட்டில் இருந்து வரும் போது அவன் சித்தர்களைப் பற்றியும், அமானுஷ்யமான விஷயங்களைப் பற்றியும் மேலும் அதிகமாக அறிவியல் ரீதியாக அவரிடம் பேசினான். தன் ஆராய்ச்சிகளைப் பற்றி விளக்கமாகச் சொன்னான். அவருக்குக் கேட்கவே பிரமிப்பாக இருந்தது.
பார்த்தசாரதிக்கு அவனிடமிருந்த நேர்மையும், எதையும் அதிகப்படுத்தியோ, குறைத்தோ சொல்லாமல், இருப்பதை இருப்பது போலச் சொல்ல முடிந்த தன்மையும் மிகவும் பிடித்திருந்தது. மற்றவர்களை வைத்து ஆராய்ச்சிகளை நடத்துபவனாக மட்டுமே தான் இருந்திருப்பதாகவும், பங்கெடுத்துக் கொண்டவனாக எப்போதும் இருந்ததில்லை என்றும் வெளிப்படையாகச் சொல்லவும், தன் முயற்சிகள் எந்த அளவு வெற்றி பெறும் என்று தெரியவில்லை என்று சொல்லவும் அவனுக்குத் தயக்கம் இருக்கவில்லை....
இன்று அவன் வந்த போது அவனிடம் ஒரு தெளிவும், அமைதியும் கூடுதலாக இருப்பதாக அவருக்குத் தோன்றியது. விஷாலியிடம் இருந்த பிணக்கு தீர்ந்ததே அவனுக்குப் பெரிய ஆசுவாசத்தை ஏற்படுத்தி இருந்ததால் அவருக்குத் தோன்றியபடியே தான் அவன் இருந்தான். ஏதோ ஆபத்து காத்திருக்கிறது என்று உள்ளுணர்வு எச்சரித்ததைக் கூட அங்கு போய் சேர்வதற்கு முன் அவன் அலட்சியப்படுத்தி இருந்தான்.
அந்த அதிகாலை நேரத்தில் அவனுக்கு முன் வந்து அவர் காத்திருந்தது நெகிழ்வாக இருந்தது. “குட் மார்னிங் சார். வந்து நேரமாச்சா?”
”இல்லை. அஞ்சு நிமிஷம் தான் ஆச்சு” என்றார் பார்த்தசாரதி.
”சார், நீங்க நாள் முழுசும் என்னோடேயே இருக்கணும்னு இல்லை. போரடிச்சா தாராளமா போய்க்கலாம். ஆனா இடையில எப்பவாவது வந்து பார்த்துட்டு போங்க. போதும்...” ஈஸ்வர் சொல்ல பார்த்தசாரதி சரியென்றார்.
தோட்டத்தில் இருந்து வீட்டுக்குள் நுழையும் முன் வாசலைத் தொட்டுக் கும்பிட்டு விட்டு ஈஸ்வர் உள்ளே நுழைந்தான். அந்தக் கணத்தில் இருந்தே ஒரு புதிய ஈஸ்வரை பார்த்தசாரதி பார்க்க ஆரம்பித்தார். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த ஒரு உலகப் புகழ் பெற்ற மனவியல் ஆராய்ச்சியாளனாக அவன் தெரியவில்லை. மிகுந்த பயபக்தியுடன் ஒரு புனிதமான இடத்தில் இறைவனை வரவேற்கத் தயாராக இருக்கும் பக்தன் போல இயங்கினான்.
முதல் வேலையாகக் குளித்து விட்டு வந்து சிவலிங்கம் இருந்த பூஜை அறையையும், அதற்கு வெளியே இருந்த ஹாலையும் தானே தரையைப் பெருக்கி சுத்தம் செய்தான். பூஜை அறையில் ஒரு நோட்டுப் புத்தகத்தையும் பேனாவையும் வைத்தான். மீண்டும் கைகால் கழுவிக் கொண்டு வந்து பயபக்தியுடன் விசேஷ மானஸ லிங்கத்தின் புகைப்படத்தை எடுத்து பூஜை அறையில் வைத்தான். சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி மானசீகமாகச் சொன்னான்.
“கடவுளே, எல்லாத்தையும் உதறித்தள்ளிட்டு நீயே கதின்னு இந்த இடத்துக்கு வந்து சாகற வரைக்கும் உன்னைப் பிரியாமல் இருந்த என் பெரிய தாத்தாவின் பக்திக்கோ, கடவுளை சிநேகிதன் மாதிரி நேசிக்க முடிஞ்ச கணபதியோட பக்திக்கோ நான் ஒரு நிமிஷ நேரத்துக்குக் கூட இணையாக முடியாதுன்னு எனக்குத் தெரியும். ஆனாலும் உன் நாடகத்துல எனக்கும் ஒரு பார்ட் இருக்குங்கறதால நான் அதைச் செய்ய வந்திருக்கேன்... என் குறைகளைப் பொறுத்துக்கோ. நான் என்ன செய்யணும்னு வழி காமி... ப்ளீஸ்.”
மானசீகமாக பசுபதியையும், அக்னிநேத்ர சித்தரையும் வணங்கி விட்டு கண்களை மூடி ஈஸ்வர் அமர்ந்தான். மூச்சில் கவனம் வைக்க ஆரம்பித்தான். மூச்சு சீரானது. மூச்சு நீளமானது. மூச்சு ஆழமானது. மூச்சிலேயே ஐக்கியமானான். மெல்ல மூச்சில் இருந்து கவனத்தை எடுத்து விசேஷ மானஸ லிங்கத்தின் புகைப்படத்திற்குக் கொண்டு வந்தான். இடைப்பட்ட அரைக் கண நேரத்தில் மனக் கண்ணில் விஷாலி தெரிந்தாள். பின்னணியில் பாட்டும் ஒலித்தது.
உன் காதலில் கரைகின்றவன்
உன் பார்வையில் உறைகின்றவன்
உன் பாதையில் நிழலாகவே வருகின்றவன்
உன் பார்வையில் உறைகின்றவன்
உன் பாதையில் நிழலாகவே வருகின்றவன்
ஈஸ்வர் புன்னகையுடன் மானசீகமாகச் சொன்னான். “கடவுளே எனக்கு மிகவும் பிடித்த, நான் காதலிக்கிற உன் படைப்பைக் காட்டி இருக்கிறாய். சந்தோஷம். இனி உன்னைப் பார்க்க விரும்புகிறேன். நீ எங்கிருக்கிறாய்?”
எதிர்பார்க்காத நேரத்தில் எல்லாம் வந்து அவனைத் திகைக்க வைத்த விசேஷ மானஸ லிங்கம் அவன் அழைக்கின்ற நேரத்தில் வர மறுத்தது. மாறாக அவன் மனதில் யாராரோ வந்து நின்றார்கள். குருஜியில் இருந்து, அவனிடம் ஐம்பது டாலர் கடன் வாங்கிய விர்ஜினியா பல்கலைக்கழக நூலக உதவியாளன் வரை அனாவசியமாக நினைவுக்கு வந்தார்கள். செய்ய வேண்டிய எத்தனையோ காரியங்கள் நினைவுக்கு வந்தன. விஷாலிக்கு விசா எப்போது கிடைக்கும் என்பதில் இருந்து, திருமணத்தைப் பற்றி தென்னரசுவிடம் எப்படிப் பேச வேண்டும் என்பது வரை இந்தக் கணமே தீர்மானிக்க வேண்டிய விஷயங்கள் போல முரண்டு பிடித்து மனதில் வந்து நின்றன.
மனதின் இயல்பை மற்றெவரைக் காட்டிலும் நன்றாக அறிந்திருந்த ஈஸ்வர் சலிக்காமல் அமைதியாக மனதைத் திரும்பத் திரும்ப விசேஷ மானஸ லிங்கத்திற்குக் கொண்டு வந்தான். மனதைப் பகைத்துக் கொண்டு எந்தக் காரியத்தையும் ஒருவன் சாதித்து விட முடியாது. அதே நேரத்தில் அது சொன்னதை எல்லாம் கேட்டு நடக்க வேண்டும் என்கிற அவசியமும் இல்லை. இப்போதைக்கு எது முக்கியம் என்று தீர்மானிப்பது மனிதனின் அறிவு தான் என்பதில் அவன் உறுதியாக இருந்தான்.
சிறிது சிறிதாக மனமே சலித்துப் போனது. எண்ணங்களின் ஓட்டம் குறைய ஆரம்பித்து பின் மனம் விசேஷ மானஸ லிங்கத்தின் படத்தில் லயிக்க ஆரம்பித்தது. சில நிமிடங்கள் கழித்து படம் திடீர் என்று அவன் பார்வையில் இருந்து மறைந்து வெற்றிடம் தான் தெரிந்தது. ஈஸ்வர் திகைத்தாலும் அது மனதின் லயிப்பைக் கலைக்காமல் பார்த்துக் கொண்டான். அதே இடத்தில் கவனத்தைக் குவித்து வைத்திருந்தான். மெல்ல ஓம் என்ற ஓங்கார நாதம் கேட்க ஆரம்பித்தது. அது மிக மென்மையாகவும், மிகத் தெளிவாகவும் அவன் காதில் விழுந்தது. அவன் உதடுகளும் ஓங்காரத்தை அதே தாள லயத்தோடு உச்சரிக்க ஆரம்பித்தன. அவன் அந்த ஓங்கார த்வனியில் தன்னையே மறந்தான். மனதைக் குவிக்கும் முயற்சியும் கூட நின்று போனது. பேரமைதி அவனுள் குடி கொண்டது...
பார்த்தசாரதி அவன் திடீரென்று ஓம் மந்திரத்தைச் சொல்ல ஆரம்பித்ததையும் முகத்தில் தெரிந்த பேரமைதியையும் ஒருவித சிலிர்ப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார். அவன் இந்த உலகத்திலேயே இல்லை என்று அவருக்குத் தோன்றியது. ஏதோ ஒரு அழகிய உலகத்தில் தன்னை மறந்து சஞ்சரித்துக் கொண்டிருந்ததாகத் தோன்றியது.
ஈஸ்வர் உணர்ந்த பேரமைதியின் முடிவில் விசேஷ மானஸ லிங்கம் அவனுக்குக் காட்சி அளிக்க ஆரம்பித்தது. புகைப்படமாக அல்ல நிஜமாகவே அவன் நேரில் பார்ப்பது போல் இருந்தது. வெண்பட்டுத் துணியை நடுவில் செருகிக் கொண்டு தனி தேஜசுடன் சிவலிங்கம் காட்சி அளிக்க அவனுக்கு மயிர்க் கூச்செறிந்தது. அவனை அறியாமல் அவன் கண்களில் இருந்து நீர் வழிய ஆரம்பித்தது. வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஒரு ஆனந்தத்தை அவன் உணர்ந்தான்.
இதற்கு முன்னும் பல முறை அவன் மனக்கண்ணில் அந்த சிவலிங்கம் தோன்றி இருக்கிறது என்றாலும் கூட அந்த நேரங்களில் பக்தியோ, ஆனந்தமோ அவனுக்கு வந்ததில்லை. திகைப்பும் அதிர்ச்சியும் மட்டுமே அவன் அனுபவித்திருக்கிறான். இன்று அவன் அதை மானசீகமாகத் தேடி இருக்கிறான். இன்று அவன் பக்தியுடன் வணங்கிக் காத்திருந்திருக்கிறான். மனமெல்லாம் சிவனாக வேறெந்த எண்ணமும் இல்லாமல் இருந்திருக்கிறான். அதனால் தான் இந்த மெய் சிலிர்க்கும் அனுபவமோ?
மெய் மறந்து காணக் கண்ணிரண்டும் போதாது போல அவனுக்குத் தோன்றியது. அந்தக் கணத்தில் அந்த சிவலிங்கத்துடன் சேர்ந்து கணபதி தெரிந்தான். அப்போது தான் ஈஸ்வர் கண்டது எப்போதும் போல் தெரிந்த விசேஷ மானஸ லிங்கத்தின் மானசீக தரிசனம் அல்ல, கண்டது விசேஷ மானஸ லிங்கம் இருக்கும் இடத்தில், இருந்த விதத்தில் தான் என்பதை ஈஸ்வர் உணர்ந்தான். ஓம் மந்திர ஒலியும் அங்கிருந்து தான் கேட்கிறது. கணபதி சம்மணமிட்டு சிவலிங்கத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
அவன் பரபரப்புடன் பார்க்கப் பார்க்க அவன் பார்வையில் இருந்து அந்தக் காட்சி மறைந்து போனது. மறுபடி சிவலிங்கத்தின் புகைப்படம் எதிரே தெரிய ஆரம்பித்தது. ஈஸ்வருக்கு ஏமாற்றமாக இருந்தது என்றாலும் சில நொடிகளில் அந்த ஏமாற்றத்திலிருந்து மீண்டு மறுபடி அந்தப் புகைப்படத்தில் மனதைக் குவித்தான். பழைய பரவச உணர்வு விலகி விட்டிருந்தாலும் அமைதியை சீக்கிரமே அவன் மனம் உணர ஆரம்பித்தது. சில நிமிடங்கள் சென்ற பின் ஒரு ஓலைச்சுவடி சிவலிங்கப் புகைப்படத்தின் முன்னால் தெரிய ஆரம்பித்தது.
சம்பந்தமில்லாமல் திடீரென்று காண ஆரம்பித்திருக்கும் அந்த ஓலைச்சுவடியில் ஈஸ்வர் கவனத்தைக் குவித்தான். ஒன்றும் புரியவில்லை. அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த அவன் தந்தையின் உதவியால் தமிழை நன்றாகவே கற்றிருந்தாலும் கூட அச்சு எழுத்தைப் படிக்க முடிவது போல அவனால் ஓலைச்சுவடி எழுத்துக்களைப் படிக்க முடியவில்லை. ஏதோ ஒரு செய்தி அந்த ஓலைச்சுவடி மூலம் சொல்லப்படுகிறது... என்ன அது? முயற்சி செய்தும் முடியாத போது மெல்ல மனதிற்குள் சொன்னான். “நீ எதையோ சொல்ல விரும்புகிறாய் என்று தெரிகிறது விசேஷ மானஸ லிங்கமே. ஆனால் எனக்கு எதுவும் புரிய மாட்டேன்கிறது”
அவன் சொல்லி முடித்தது தான் தாமதம். ஓலைச்சுவடி மறைந்து போய் அதற்குப் பதிலாக ஒரு வெள்ளைக் காகிதத்தில் அச்சு எழுத்துக்கள் தோன்ற ஆரம்பித்தன. வெள்ளைக் காகிதம் முழுவதும் அச்சு எழுத்துக்கள் இருந்தாலும் இரண்டே இரண்டு வரிகள் தவிர மற்றதெல்லாம் மங்கித் தெரிந்தன. அவன் பிரமித்துப் போனான். என்ன ஒரு ஆச்சரியம்!. தெளிவாகத் தெரிந்த அந்த அச்சு எழுத்துக்களைப் படித்தான். ஏதோ செய்யுள் போலத் தெரிந்தது. காலத்தை வீணாக்காமல் அதே நேரத்தில் அந்த லயிப்பு நிலையைக் கலைக்கும் பரபரப்பு மனநிலைக்குச் சென்று விடாமல் வேகமாக அருகில் இருந்த நோட்டுப்புத்தகத்தில் அந்த அச்சு எழுத்துக்களைப் பார்த்து எழுத ஆரம்பித்தான்.
தூய உளமறிவு கூடித் துஞ்சாமல் நாடினால் சேர்ந்திடும் மெய்ஞானம் மூன்றும் காக்க மிஞ்சிடும் பூவுலகம் அன்றேல் நஞ்சாகும் சிவஞானம்
அதே நேரத்தில் குருஜி விசேஷ மானஸ லிங்கத்தின் அலைகளோடு லயிக்க ஆரம்பித்திருந்தார். விசேஷ மானஸ லிங்கத்தைப் பற்றி எழுதப்பட்டிருந்த ஓலைச்சுவடிகளை ஆராய்ந்து தமிழாராய்ச்சி நிபுணர் அவரிடம் எழுதித் தந்ததை ஈஸ்வர் படித்துக் கொண்டு இருப்பது போன்ற பிரமை அவருக்கு ஏற்பட்டது. குருஜி திடுக்கிட்டார்.
(தொடரும்)
No comments:
Post a Comment