Thursday, June 12, 2014

பரம(ன்) ரகசியம் – 71

ரு தடவை செய்த தவறை அலெக்ஸி திரும்பவும் செய்யத் துணியவில்லை. அந்த முதல் முறை அனுபவமே அவருக்குப் போதுமானதாக இருந்தது. கண்ணாகத் தெரிந்த சுழி இழுக்க ஆரம்பித்தவுடன் சிறிதும் தாமதம் செய்யாமல் குருஜி சொல்லித் தந்திருந்த ‘ஓம் நமசிவாயாஎன்ற மந்திரத்தைச் சொல்ல ஆரம்பித்தார்.  மௌனமாக மனதிற்குள்ளே சொன்னால் போதும் என்று அவருக்கு குருஜி சொல்லி இருந்த போதும் மௌனமாகச் சொல்வதை விடச் சத்தமாகச் சொல்வது தைரியமளிப்பதாய் இருந்தது. அவர் சொல்லச் சொல்ல அலைகளின் கண்-சுழி மறைந்தது. அதன் கூடவே அவரை இழுக்கும் சக்தியும் மறைந்தது. சமுத்திரத்தின் நடுவே சிவலிங்கம் தோன்ற ஆரம்பித்து சமுத்திரமும் மறைந்தது. சிவலிங்கம் ஒரு முறை ஒளிர்ந்து விட்டு சாதாரணமாகக் காட்சி அளிக்க ஆரம்பித்தது. அலெக்ஸியின் மனதில் ஒரு பெரிய ஆசுவாசம் ஏற்பட்டது.

ஓம் நமசிவாயமந்திரத்தைச் சொல்ல ஆரம்பிக்கும் முன் அலெக்ஸியின் உடல் விறைத்ததைப் பார்த்த போது ஜான்சனுக்கு மனம் துணுக்குற்றது. அலெக்ஸியின் மூச்சும் வேகமாகியது. அலெக்ஸி மறுபடியும் ஏதோ மனப்பிராந்தியில் மாட்டிக் கொண்டாரோ?ஆனால் மந்திரத்தைச் சொல்ல ஆரம்பித்த பிறகு அலெக்ஸியின் உடலில் தெரிந்த விறைப்பு போய் இயல்பு நிலை தெரிந்தது. அவர் மூச்சும் சீராகியது. ஜான்சன் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.

ஜான்சனின் பார்வை அலெக்ஸி மீதிருந்து தாவி குருஜி மேல் தங்கியது. குருஜி தியானம் செய்வதை எத்தனையோ முறை ஜான்சன் பார்த்து இருக்கிறார். குருஜி தியானம் செய்வதைப் பார்ப்பதே ஒரு அழகான அனுபவம். அப்படிப் பார்க்கையில் பல முறை குளத்தில் அசைவற்று நிற்கும் கொக்கின் நினைவு ஜான்சனுக்கு வந்திருக்கிறது. இந்த தியானத்தில் இருந்து வெளிவரும் போது ஏதோ ஒரு உண்மையைக் கண்டு பிடித்து விட்டிருப்பார் என்று அவர் நம்பியதுண்டு. அந்த அளவுக்கு சலனமே இல்லாமல் இருப்பார் குருஜி. ஆனால் இன்று ஏனோ அந்த அளவு அமைதியாக குருஜி இருக்கவில்லை... அவர் அனுபவம் இன்று எப்படிப்பட்டதாய் இருக்கும் என்று ஜான்சன் யூகிக்க முயன்றார். ஹரிராம் இயற்கையைப் பார்த்ததைப் போல, கியோமி புனித மலையைப் பார்த்தது போல, அலெக்ஸி சமுத்திரத்தைப் பார்த்தது போல குருஜி எதைப் பார்த்துக் கொண்டிருப்பார்?

ஆனால் குருஜி எதையுமே பார்க்கவில்லை என்பதே உண்மை. அவர் அதன் மீது கவனத்தைக் குவித்த பின்னும் விசேஷ மானஸ லிங்கம் சிவலிங்கமாக அப்படியே காட்சி அளித்தது. எந்த மாற்றமும் அதில் இல்லை. முதலில் கண்ட போதிருந்தது போல ஜோதி ஸ்வருபமும் இல்லை, பிறகு பார்த்த போது மின்னிய திடீர் மின்னல் இல்லை. அலெக்ஸியின் ‘ஓம் நமசிவாயகேட்ட போதும் குருஜி தன் கவனத்தை சிவலிங்கத்தில் இருந்து திருப்பவில்லை.  ஆனால் சிவலிங்கம் உனக்கெதுவும் காட்சி இல்லை என்று பிடிவாதமாக இருப்பது போல் இருந்தது.  சிவலிங்கத்திற்கென்று தனியாக ஏதாவது கொள்கையோ, விருப்பு வெறுப்பு இருக்கிறதா என்ன?...

எதிர்பாராமல் திடீர் என்று சிவலிங்கத்தில் கணபதி தெரிந்தான்.... குருஜி திகைத்தார்.... கணபதி மறைந்து ஈஸ்வர் தெரிந்தான்.... விசேஷ மானஸ லிங்கத்தின் நியமிக்கப்பட்ட இரண்டு பாதுகாவலர்களைப் பார்த்த குருஜி மூன்றாவதாக யார் தெரிகிறார்கள் என்று ஆவலாகப் பார்த்தார். மூன்றாவதாக யார் உருவமும் தெரியவில்லை... சிவலிங்கம் மட்டுமே தெரிந்தது. அப்படியானால் மூன்றாவதான ஞான மார்க்கத்திற்கு நானே தான் என்றா சிவலிங்கம் சொல்கிறது? ஒரு கணம் குருஜி மூச்சும் நின்று பின் தொடர்ந்தது. அப்படி இருக்க வாய்ப்பில்லை... மூன்றுமே மனிதர்கள் தான் என்று தான் ஓலைச்சுவடிகள் சொல்லி இருக்கின்றன.....

திடீர் என்று குருஜியை சிவலிங்கம் மிக வேகமாகத் தன்னிடம் இழுப்பது போல் இருந்தது. ஆனால் உடனடியாக குருஜி சுதாரித்துக் கொண்டார். தன் முழு மனோ பலத்தையும் பிரயோகித்து உறுதியாய் நின்றார். திட மனதுடன் முதல் சந்திப்பில் சொன்னதையே இப்போதும் சொன்னார். “நான் உன்னிடம் என்னை இழப்பதற்காக வரவில்லை விசேஷ மானஸ லிங்கமே. உன்னை என் வசப்படுத்தப்படுத்த வந்திருக்கிறேன்.

சிவலிங்கம் தன் முயற்சியை உடனே நிறுத்திக் கொண்டது போலத் தோன்றியது. லேசாக ஒரு முறை ஒளிர்ந்து விட்டு சிவலிங்கம் பழைய நிலையிலேயே அவருக்குத் தெரிய ஆரம்பித்தது. இனி எந்த மாற்றமும் ஏற்பட வாய்ப்பில்லை என்று தோன்ற குருஜி எழுந்து கொண்டார்.

ஜான்சன் முன்பு சொன்னது அவருக்கு நினைவுக்கு வந்தது. அவரவர் எதைப் புனிதமாயும், சக்தியாயும் நினைத்தார்களோ அதையே அவர்களுக்குக் காட்சியாய் விசேஷ மானஸ லிங்கம் காட்டி இருக்குன்னு நினைக்கிறேன்

அப்படியானால் கணபதியையும், ஈஸ்வரையும் புனிதமாக அடிமனதில் நினைத்திருக்கிறேன் என்று அர்த்தமா என்ன?நினைக்கவே குருஜிக்கு கசப்பாய் இருந்தது..... என்ன பைத்தியக்காரத்தனமான கோட்பாடு.

இந்த முறை முதல் அனுபவத்தை விட வித்தியாசமாக இருந்த இன்னொரு அம்சமும் அவருக்கு நெருடலாக இருந்தது. முதல் சந்திப்பில் விசேஷ மானஸ லிங்கம் அவர் மனதைக் கரைப்பது போல இருந்தது. அவர் தன் எண்ணங்களை எல்லாம் இழந்து விட ஆரம்பிப்பது போல அன்று உணர்ந்தார். ஆனால் தியான மண்டபத்தில் விசேஷ மானஸ லிங்கம் வந்து சேர்ந்த பின்னரோ ஆட்களையே தன் பக்கம் இழுப்பது போன்ற அனுபவத்தைத் தான் அவர் உட்பட அனைவரும் உணர்ந்திருக்கிறார்கள். அலெக்ஸி அப்படி இழுக்கப்பட்டு இந்த சிவலிங்கத்தை நெருங்கியும் விட்டிருக்கிறார்.  விசேஷ மானஸ லிங்கத்தின் இந்த ஆபத்தான மாற்றம் அவர் எதிர்பாராதது. இன்னும் எத்தனை புதிய குணாதிசயங்கள் இந்த சிவலிங்கத்திடம் இருக்கின்றனவோ என்ற சந்தேகத்தோடு குருஜி சிவலிங்கத்தைப் பார்த்தார். விசேஷ மானஸ லிங்கம் பரமசாதுவாய் காட்சி அளித்தது!

விஷாலி வீட்டுக்கு வந்த பிறகு ஆனந்தவல்லியின் அட்டகாசம் ஈஸ்வரால் சகிக்க முடியாததாகி விட்டது. குளிர் காய்ச்சல் என்று படுத்திருந்த ஆனந்தவல்லி மீனாட்சியின் கஷாயத்தைக் குடித்த பிறகு குணமாகி விட்டதாக எழுந்து உட்கார்ந்து கொண்டாள். அதன் பின் ஈஸ்வர் இருக்கும் இடங்களில் எல்லாம் எப்படியாவது விஷாலியைத் தருவிப்பது என்ற உறுதியோடு இருந்தாள். ஈஸ்வரோ அவளை எப்படித் தவிர்ப்பது என்று மனதிற்குள் போராடிக் கொண்டிருந்தான். அவளைப் பார்க்கிற போதெல்லாம் அவன் மனம் கட்டுப்பட மறுத்தது. அவளை அது தன்னிச்சையாக ரசித்தது. அது அவன் ஈகோவைப் பெரிதும் பாதித்தது. ஆனால் ஆனந்தவல்லி அதை எல்லாம் அறியாதவள் போல் நடித்தாள். ஏதாவது செய்து ஈஸ்வரும், விஷாலியும் பேசிக் கொள்ள வேண்டிய சூழ்நிலையை உருவாக்கினாள். அவன் ஆனந்தவல்லியை முறைத்ததையோ, எரிந்து விழுந்ததையோ ஒரு பொருட்டாகவே அவள் நினைக்கவில்லை.

ஈஸ்வருடன் தனியாக இருக்கும் போது கூட ஆனந்தவல்லி விஷாலியைப் பற்றி அவனிடம் பேசினாள். “விஷாலிக்கு நல்ல குடும்பப்பாங்கான அழகு! அவளைப் பார்க்கிறப்பவே மனசு நிறைகிறது.

ஈஸ்வர் எரிச்சலுடன் கேட்டான். “நீங்க எப்ப அவளோட ரசிகையாய் மாறினீங்க

“நீ வந்ததுக்கப்புறம் தான்....னு நினைச்சுக்காதே. எனக்கு முதல்ல இருந்தே அந்தப் பொண்ணை ரொம்பப் பிடிக்கும். அழகோட சேர்ந்து, கொஞ்சம் கூட அகங்காரம் இல்லாத நல்ல குணமும் எத்தனை பொண்ணுகளுக்கு அமையும் சொல்லு பார்க்கலாம்...

ஈஸ்வர் ஆனந்தவல்லியை சந்தேகத்துடன் பார்த்தான். கிழவி என்னை வேண்டும் என்றே சீண்டுகிறாளா என்ன? அவள் சொன்னதை மறுத்தான். “எனக்கெல்லாம் அப்படித் தோணல.

“சரி உனக்கு எப்படித் தான் தோணுது?

“அவள் ரொம்ப சாதாரணமாய் இருக்கிற மாதிரி தான் தோணுது

“அது நீ அவளை சரியாவே பார்க்காததுனாலன்னு நினைக்கிறேன். நீ அவள் வர்றப்ப எல்லாம் வேற எங்கேயோ பார்க்கிறாய். அவளையே ஒரு பத்து நிமிஷம் கவனிச்சுப் பாரு. அழகும் தெரியும், குணமும் புரியும். அவளைக் கூப்பிடவா?

அவளிடம் பொறுமையாய் இருப்பது மிகவும் கஷ்டமாய் தோன்றியது. அவன் பேசாமல் அங்கிருந்து போய் விட்டான்.

பரமேஸ்வரன் உள்ளே வந்து தாயைத் திட்டினார். “நீ ரொம்பவே அவனை சீண்டறே.

“எனக்கும் அவனுக்கும் இடையில ஆயிரம் இருக்கும். உனக்கென்னடா?

பரமேஸ்வரனுக்கு அதற்கு மேல் அவளிடம் பேச முடியவில்லை.
விஷாலிக்கு ஆனந்தவல்லியின் செயல்கள் எல்லாம் தர்மசங்கடத்தை ஏற்படுத்தின. அவளை ஈஸ்வர் வெறுக்கிறான் என்று புரியாமல் அடிக்கடி ஆனந்தவல்லி அவன் முன்னால் கூப்பிடுவதும், ஏதாவது பேச்சில் ஈடுபடுத்துவதும் அவளுக்குக் கஷ்டமாக இருந்தது. அவனோ அவளைப் பார்ப்பதை விட ஜடப் பொருள்களைப் பார்ப்பது உத்தமம் என்பது போல நடந்து கொண்டான்.

ஏண்டீம்மா. உனக்கு ஆள்களைப் படம் வரைய முடியுமா?ஆனந்தவல்லி விஷாலியைக் கேட்டாள்.

“ம்... வரைவேன் பாட்டி. உங்களை வரையணுமா?

“என்னை வரைய வேண்டாம். என் வீட்டுக்காரரை வரையணும்

“ஓ.. வரையலாமே. அவர் போட்டோவைக் கொடுங்க. வரைஞ்சு தர்றேன்

“போட்டோ என்னத்துக்கு. இவனைப் பார்த்தா அவரைப் பார்க்க வேண்டியதில்லை. இவனை வரைஞ்சு குடு...

விஷாலி தர்மசங்கடத்துடன் ஈஸ்வரைப் பார்த்தாள். ஈஸ்வரோ அப்படி ஒரு பேச்சே அங்கு கேட்கவில்லை என்பது போல இருந்தான். ஆனந்தவல்லி விடுவதாய் இல்லை. ஏண்டா இவள் முன்னாடி தினம் கொஞ்ச நேரம் உன்னால் போஸ் தர முடியுமா?

ஈஸ்வர் அவளைச் சுட்டேரிப்பதைப் போல் பார்த்தான்.
“இப்படி போஸ் கொடுக்கக் கூடாது.... சாந்தமா போஸ் தரணும். பேருக்கேத்த மாதிரி உன் கொள்ளுத் தாத்தா சாந்த ஸ்வரூபிஎன்றவள் விஷாலியிடம் கேட்டாள். “ஏம்மா. உனக்கு தினம் எத்தனை நேரம் போஸ் கொடுத்தா வரைய சௌகரியமாய் இருக்கும்

மனதில் நிரந்தரமாய் தங்கி விட்ட உருவத்தை வரைய போஸ் தர வேண்டியதில்லை என்று நினைத்தாள் விஷாலி. ஆனால் அவள் எதுவும் சொல்வதற்கு முன் ஈஸ்வர் இடத்தைக் காலி செய்தான். அவன் போன பிறகு ஆனந்தவல்லி கேள்விக்குப் பதிலை அவளிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.

கனகதுர்கா மறு நாள் அதிகாலை வருகிறாள் என்பதை ஈஸ்வர் அத்தை மீனாட்சியிடம் சொன்ன போது அவள் சொன்னாள். “நீ வந்த அதே ஃப்ளைட்டு தானே. காலையில் ஆறு மணிக்கு தானே. நாம ரெண்டு பேரும் அஞ்சே காலுக்கே கிளம்பினால் தான் சரியாய் இருக்கும்

பரமேஸ்வரன் சொன்னார். “என்ன ரெண்டு பேரும்னு சொல்றே. நானும் வர்றேன்”.  ஈஸ்வரும், மீனாட்சியும் திகைப்புடன் பரமேஸ்வரனைப் பார்த்தார்கள். ஈஸ்வருக்குத் தாத்தாவைக் கட்டிப்பிடித்து முத்தம் தர வேண்டும் போலத் தோன்றியது. தாத்தா எத்தனை தூரம் மாறி இருக்கிறார்!

மீனாட்சி முகம் மலர சொன்னாள். “சரி நாம மூணு பேரும் அஞ்சே கால் மணிக்கே இங்கே இருந்து கிளம்பிடலாம்

ஆனந்தவல்லி சொன்னாள். “என்னடி மூணு பேரு. நானும் வர்றேன். என் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து அவ வர்றா. நான் ஏர்போர்ட் வந்து வரவேற்காட்டி நல்லா இருக்காது....” ஈஸ்வர் இதை எதிர்பார்க்கவில்லை. கிழவி அப்பப்ப எரிச்சலைக் கிளப்பினாலும் மனசு நல்ல மனசு’. அவன் நினைத்து முடிவதற்குள் ஆனந்தவல்லி சொன்னாள். “விஷாலி நீயும் வாம்மா. நீயும் எங்க குடும்பத்து ஆள் தான்

குருஜியைக் கண்காணிக்க பார்த்தசாரதிக்கு மறைமுகமாக அனுமதி தந்திருந்த உயர் போலீஸ் அதிகாரி பார்வைக்கு ஒரு ரகசியத் தகவல் உளவுத்துறையில் இருந்து வந்தது. அது போன்ற தகவல்கள் அடிக்கடி உளவுத் துறையில் இருந்து வருவதுண்டு. இந்திய உளவுத் துறையால் பெறப்படும் சில சந்தேகத்திற்குரிய தகவல்கள் மாநில உயர் போலீஸ் அதிகாரிகளிடம் ரகசியமாய் பகிர்ந்து கொள்ளப்படுவதுண்டு. அது போன்ற சந்தேகத்தைக் கிளப்பும் தகவல்கள் உண்மையில் தற்செயலாக நடந்தவையாகவும், ஆபத்திற்கான முகாந்திரம் இல்லாதவையாகவும் கூட இருக்கலாம். ஆனால் அவற்றை மத்திய உளவுத் துறை, மாநிலங்களின் உயர் போலீஸ் அதிகாரிகள் கவனத்திற்குக் கொண்டு வருவதன் நோக்கம் ஏதாவது வகையில் சமூகக் குற்றங்களுக்கு சம்பந்தப்பட்டவையாக அந்தத் தகவல்கள் இருக்கவும் கூடும் என்று எச்சரிப்பதற்காகவே.

அது போன்ற தகவல்கள் ஏதாவது ஒரு மாநிலத்தில் ஒரு நடந்து கொண்டிருக்கும் குற்ற விசாரணையைத் தெளிவிப்பதில் பெரிய உதவியாக இருப்பதுண்டு. அல்லது நடக்க இருக்கும் குற்றங்களைத் தவிர்க்க எச்சரிக்க மணியை அடிப்பதும் உண்டு. அப்படி சம்பந்தப்பட்டப்பவர்களுக்குப் பெரிய உதவியாக இருக்கும் அந்தத் தகவல்கள் பெரும்பாலான மற்றவர்களுக்கு ஃபைல் செய்து வைத்துக் கொள்ளும் ஒரு காகிதமாக மாத்திரமே இருக்கும்.

அடிக்கடி வரும் அந்தத் தகவல்களில் சுமார் 98 சதவீதம் உபயோகம் இல்லாத தகவல்களாக இருப்பதாக, நடவடிக்கை எடுக்கும் அவசியம் இல்லாத தகவல்களாக இருக்கின்றன என்பது போலீஸ் அதிகாரிகளின் அனுபவம். அதனாலேயே மேலோட்டமாகப் பார்த்து விட்டு அதை ஃபைல் செய்து விடுவது உண்டு.  சில சமயங்களில் உண்மையாகவே ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் உளவுத்துறை முன்பே எச்சரிப்பதாகச் சொல்வதும், மாநில போலீஸ் அதிகாரிகள் ஏதேனும் சொல்லி சமாளிப்பதும் அடிக்கடி நிகழக் கூடிய விஷயங்கள்.

இப்போது அந்த உயர் போலீஸ் அதிகாரிக்குக் கிடைத்திருக்கும் ரகசியத் தகவலில் சில தினங்களுக்கு முன் மும்பையில் ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் எட்டு உலக நாடுகளின் எட்டு செல்வாக்கு மிக்க மனிதர்கள் ஒரே நேரத்தில் இருந்தார்கள் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. எட்டு பேர்களில் நான்கு பேர் அங்கேயே தங்கி இருந்தவர்கள் என்றும் மீதி நான்கு பேர் மற்ற இடங்களில் இருந்து வந்து சென்றார்கள் என்றும், இந்தியப் பெரும் பணக்காரரான பாபுஜியும் சிறிது நேரம் தந்தையுடன் அங்கு சென்றிருந்தார் என்றும், ஜான்சன் என்ற அமெரிக்க ஆழ்மனசக்தி ஆராய்ச்சியாளரும் ஒரு மணி நேரம் அங்கு தங்கி இருந்தார் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. பாபுஜி அந்த ஓட்டலின் கான்ஃப்ரன்ஸ் ஹாலை புக் செய்திருந்தார், அங்கு அந்த செல்வாக்கு மிக்க வெளி நாட்டார் சிலரை அவர் சந்தித்துப் பேசி இருக்க வாய்ப்பிருக்கிறது என்றும் ஜான்சன் தமிழகம் செல்ல விமான நிலையம் புறப்பட்டுப் போனார் என்றும், அவர் போய் சிறிது நேரம் கழித்து நான்கு வெளிநாட்டவர்கள் வெளியேறினார்கள், அவர்கள் போய் ஒரு மணி நேரம் கழித்து பாபுஜி தந்தையுடன் வெளியேறினார் என்றும் சொல்லப்பட்டிருந்தது.

பாபுஜி அவர்களை சந்தித்துப் பேசியிருந்தாரேயானால் அது வியாபார நிமித்தமாக இருக்காது, அவர்கள் அவருடன் எந்த விதத்திலும் வியாபாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் அல்ல என்றும் கூட சொல்லப்பட்டிருந்தது.

அந்த ஐந்து நட்சத்திர ஓட்டலின் உரிமையாளர் பிரதமரின் மருமகன் என்பதால் அதன் உள்ளே சென்று வேவு பார்ப்பதில் உளவுத்துறைக்கு சில சிரமங்கள் இருந்தன. வெளியே இருந்து வேவு பார்த்ததிலும், விசாரித்ததிலும் கிடைத்த தகவல்களை வைத்து உள்ளே ஒரு சந்திப்பு நடந்திருக்கலாம் என்று சந்தேகப்பட்டு அவர்கள் அறிக்கை அனுப்பி இருந்தார்களே ஒழிய உறுதியாய் அவர்களால் சொல்ல முடியவில்லை.. அந்த சின்ன கான்ஃப்ரன்ஸ் ஹாலில் ஜான்சன் பேச்சைக் கேட்டது ஆறு வெளிநாட்டவர்கள் என்றாலும் மேலும் இரண்டு வெளி நாட்டவர்கள் அதே ஓட்டலில் தங்கி இருந்ததும், அவர்களும் செல்வாக்கில் குறைந்தவர்களாக இல்லாமல் இருந்ததும் அவர்களையும் உளவுத்துறை கணக்கில் எடுக்க காரணமாகியது.

எட்டு பேர் பெயர்களும், அவர்கள் எந்த நாட்டவர்கள் என்ற தகவல்களும், குறிப்புகளும், ஜான்சன் பற்றிய குறிப்புகளும் அந்த அறிக்கையில் இருந்தன. வெளிநாட்டவர்கள் என்ற தகவலும், ஆழ்மனசக்தி ஆராய்ச்சியாளர் ஜான்சன் என்ற தகவலும் தான் அந்த உயர் அதிகாரிக்கு பார்த்தசாரதி விசாரிக்கும் வழக்கை நினைவுபடுத்தின. முக்கியமாய் ஜான்சன் தமிழ்நாடு வந்திருப்பது சந்தேகத்தைக் கிளப்பியது.

எதற்கும் பார்த்தசாரதியிடம் தகவலைத் தெரிவிப்பது நல்லது என்று அந்த அதிகாரி நினைத்தார்.

(தொடரும்)

No comments:

Post a Comment