சுவாச மண்டலத்தில் இணைந்து செயல்படும் உறுப்புகள்
1. மூக்கு
2. தொண்டை
3. குரல் வளை
4. சுவாசக்குழல்
5. பிராங்கையல் குழாய்கள்
6. நுரையீரல்கள்
மூக்கு
சுவாச மண்டலம் ஆரம்பமாவது மூக்கிலிருந்து தான். இத்துடன் வாயையும் சேர்த்துக் கொள்ளலாம். வெளிக்காற்று சுவாச மண்டலத்துக்குள் மூக்கின் வழியாகவும், ஓரளவு வாயின் வழியாகவும் நுழைந்து, தொண்டை, குரல் வளை வழியே பயணிக்கிறது.
வெளிக்காற்றில் பல வித தூசிகளும் கிருமிகளும் நிறைந்துள்ளன என்பதால் இவைகள் நுரையீரலுக்குள் போகாமல் நமது மூக்கு ஒரு வடிகட்டி போல செயல்படுகிறது. மூக்கினுள் சிறு உரோமங்கள் உள்ளன. அத்துடன் கோழையும் சுரக்கிறது. இந்த கோழையில் உள்ள என்ஸைமுக்கு சில கிருமிகளை கொல்லும் ஆற்றல் உள்ளது. வெளிக்காற்றிலிருந்து வரும் தூசியும் கிருமியும் இவற்றில் சிக்கிக் கொள்கின்றன. சுத்தமான காற்று நுரையீரல்களுக்கு செல்கிறது.
உள்ளிழுக்கும் காற்றை ஈரமாக்குவதும், வெது வெதுப்பாக்குவதும் மூக்கின் மற்றொரு வேலை. காற்றை உடலுக்கு இதமான வெப்ப நிலைக்கு கொண்டு வருகிறது.
மூக்கின் மற்றொரு பயன் வாசனைகளை உணர்வதாகும் இதற்கான விசேஷமான ஏற்பிகள் (Receptors) மூக்கில் உள்ளன. மூக்கின் இரு பக்கமும் மேக்சில்லா (Maxilla) எனும் எலும்புகளில் உள்ள வெற்றிடங்கள் சைனஸ் (Sinus) எனப்படும். குரல் வளை எழுப்பும் ஒலிக்கு சரியான உச்சரிப்பையும், வடிவத்தையும் தருவது மூக்கும், சைனஸ் அறைகளும் தான். மூக்கு கண்கள் கசியும் கண்ணீருக்கு வடிகால் கால்வாயாக செயல்படுகிறது.
மூக்கு அடிக்கடி நோயினால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உண்டு. அதில் முதன்மையானது ஜலதோஷம்.
தொண்டை (Pharynx)
தொண்டை 12 லிருந்து 14 செ.மீ. நீளமான குழாய். தசைகள் மற்றும் கோழை ஜவ்வு (Mucus membrane) களால் சேர்ந்தது. மூக்கு மற்றும் வாயின் பின் பகுதியில் அமைந்துள்ள தொண்டையில் நாக்கின் அடியில், உள்நாக்கின் இருபக்கம் மற்றும் மூக்கின் கீழ் என்று மூன்று டான்சில்கள் உள்ளன. மூக்கின் கீழிருக்கும் டான்சில் அடினாய்ட் டான்சில் என்றும் சொல்லப்படுகிறது. டான்சில்கள் மூக்கையையும் தொண்டையையும் கிருமிகள் தாக்குதலில் இருந்து பாதுகாக்கின்றன. தொண்டையின் அருகே உள்ள டான்சில்கள் வாய் வழியே நுழையும் கிருமிகளை கொல்ல ஒரு திரவத்தை சுரக்கின்றன. தொண்டை டான்சில்கள் சிறுவர்களுக்கு சிறிது பெரியதாகவும், வயது வந்தோர்களுக்கு சிறியதாகவும் இருக்கும். அடினாய்ட் டான்சில் வீங்கி, சதையால் மூக்கின் பாதையை அடைத்து விடும். சிறுவர்கள் வளர வளர, அடினாய்ட் சதை வளர்ச்சி தானே நின்று விடும்.
மூக்கோடு இணைந்த தொண்டை, வாயோடு இணைந்த தொண்டை, குரல்வளையோடு இணைந்த தொண்டை என்று தொண்டை மூன்று விதமாக பிரிக்கப்பட்டிருக்கிறது.
நாம் உண்ணும் உணவு வாயிலிருந்து தொண்டை வழியே வயிற்றைப் போய் சேர்கிறது. இது போகும் பாதை தொண்டையிலிருந்து ஆரம்பிக்கும் உணவுக்குழாய். மூச்சுக்காற்றும் தொண்டை, மூச்சுக்குழாய் வழியே நுரையீரலுக்கு செல்கிறது. உணவுக்குழாய் எப்போதும் (உணவு உண்ணும் போது தவிர) மூடியிருக்கும். சுவாசத்தை நிறுத்த முடியாததால் மூச்சுக்குழாய் எப்போது திறந்தே இருக்கும். சரி, சாப்பிடும் உணவு எவ்வாறு மூச்சுக்குழாயில் நுழையாமல் தடுப்பது? ஒரு மூடியால் – மெல்லிய இலை வடிவான, சளி நிறைந்த குருத்தெலும்பு மூடி நாக்குக்கு அடுத்த படி அமைந்திருக்கிறது. இந்த மூடியை Epiglottis என்பார்கள். உணவை நாம் விழுங்கும் போது அது சென்று ‘மூடியை’ அழுத்துகிறது. அழுத்தத்தில் உணவுக்குழாய் திறந்து உணவை வாங்கிக் கொள்கிறது. உடனே திரும்பவும் மூடிக் கொள்கிறது. இதனால் மூச்சுக்குழாயில் உணவே செல்லாமல் பாதுகாக்கப்படுகிறது. சில சமயங்களில், உணவுப் பொருள் மூச்சுக்குழாயில் நுழைந்து விடும். இந்த உணவை எடுக்க உடல் செய்யும் முயற்சி தான் “புரையேறுவது”. சாப்பிடும் போது பேசிக் கொண்டே சாப்பிட்டால், பேச்சுக்கு தேவையான திறந்த சுவாசக்குழாய்குள் உணவு புகுந்து விடும்.
குரல் வளை (Larynx)
சுவாச மண்டலத்தின் அடுத்த அவயம் ‘குரல் வளை’. தொண்டையின் முன்பகுதியில் உள்ளது. குரல் வளையால் தான் நாம் பேசுகிறோம். தவிர காற்று செல்லும் பாதையிலிருக்கும் குரல் வளையில் இரண்டு “குரல் நாண்கள்” உள்ளன. குரல் வளை தன் வழியே செல்லும் மூச்சுக் காற்றை (மூக்கைப் போல) ஈரமாக்குகிறது. தூசி அசுத்தம் பொருட்கள் உள் செல்லாதவாறு, வடிகட்டப்படுகின்றன. பிறகு காற்று வெப்பமடைகிறது. குரல் வளையில் உருவாகிற ஒலி குறைந்த சப்தத்தில் இருக்கும். இந்த மெல்லிய குரல் சப்தத்தை பெரிதாக்குவது வாய், கன்னம், தொண்டை, டான்சில், மூக்கு, சைனஸ் அறைகள்.
சுவாசக் குழாய் (Trachea)
குரல் வளையை தொடரும் பகுதி சுவாசக்குழாய். இது தொண்டையில் தொடங்கி நுரையீரலுக்கு செல்லுகின்றன. சி வடிவம் கொண்ட 16 (அ) 20 குறுத்தெலும்புகளால் ஆனது. சுவாசக்குழாய் நீளம் 10 செ.மீ. இதன் துவக்கத்தில் உள்ள உரோமங்களும், சளிப்படலமும் தூசியை நீக்க உதவுகின்றன. சிறிய தசைகள், வெல்வெட் துணி போல மெல்லிய விரல்கள் போல், நீட்டிக் கொண்டிருக்கும். இவை Cilia எனப்படும். சுவாசக்குழாயின் சுவரில் இவை பரவி இருக்கும். தவிர ஒரு திரவமும் இருக்கும். துருத்திக் கொண்டிருக்கும் முடி போன்ற சிலியா, ஒரு நிமிடத்திற்கு 1000 முறை அசைந்து ஆடி சுவாசக்குழாய் சுவர்களில் பரவி இருக்கும் கோழையை, ஒரு நிமிடத்திற்கு 0.5 அல்லது 1 செ.மீ. நகர்த்தும். தூசி, கிருமிகள், இவைகளை எல்லாம் சளியில் மாட்டிக் கொண்டு வாய்வழியே விழுங்கப்படும்.
மூச்சுக்குழாய் மார்ப்புக்கூட்டின் 5 வது எலும்பு வரை நேராக சென்று, பிறகு இரு கிளைகளாக பிரிகின்றன. இந்த கிளைக் குழாய்கள் பிராங்கைல் குழாய்கள் (Bronchial) எனப்படும் பிரிந்த கிளைகள் வலது நுரையீரலிலும், இடது நுரையீரலிலும் தனித் தனியே நுழைகின்றன.
பிராங்கைல் குழாய்கள் (Bronchial Tubes)
வலது பிராங்கைல் குழாய் இடது பிராங்கையல் குழாயை விட அகலமாகவும் சிறிது குட்டையாகவும் இருக்கும். இதன் நீளம் சுமார் 2.5 செ.மீ. வலது பிராங்கையல் குழாய் வலது நுரையீரலில் நுழைந்தவுடன் மூன்று கிளைகளாக பிரிந்து பின்பு எண்ணற்ற கிளைகளாக பிரியும்.
இடது பிராங்கைல் குழாய் வலது பிராங்கைல் குழாயை விட மெல்லியது. சுமார் 5 செ.மீ. நீளம் உடையது. இதுவும் இடது நுரையீரலில் நுழைந்ததும் இரு கிளைகளாக பிரிந்து பிறகு பல நுண்ணிய கிளைகளாக பிரிந்து நுரையீரலில் உள்ள காற்றுப் பைகளை அடைகிறது.
நுரையீரல்கள் (Lungs)
சுவாச மண்டலத்தின் முக்கிய அவயம் நுரையீரல் ஒன்றுக்கு இரண்டாக அமைந்தது. மார்புக் கூட்டின் வலது பக்கத்தில் ஒன்றும் இடது பக்கத்தில் ஒன்றுமாக நுரையீரல்கள் பத்திரமாக வைக்கப்பட்டிருக்கிறது. நுரையீரல் மீட்சி தன்மையுடைய (Elastic) கூம்பு வடிவமானது.
இடது நுரையீரல் வலது நுரையீரலை விட சிறியது. காரணம் இதயத்தின் அருகே குறைந்த இடத்தில் இடது நுரையீரல் இருக்கிறது. வலது பக்க நுரையீரல் 3 கதுப்புகளாகவும் (Lobes) இடது நுரையீரல் 2 கதுப்புகளாகவும் பிரிக்கப்பட்டிருக்கின்றன.
நுரையீரலை பாதுகாக்க ‘ப்ளூரா’ (Pleura) எனும் திரவம் அடங்கிய ஜவ்வுகளால் ஆன பை போன்ற அமைப்பு உதவுகிறது. ப்ளூரா மார்புக் கூட்டின் உட்புறத்தையும் காக்கிறது. ப்ளூரா மூடப்பட்டதால் நுரையீரல்கள் அசைய முடிகிறது.
நுரையீரலின் முக்கிய பணி – காற்றுப் பரிமாற்றம். இதற்காக நுரையீரல்கள், பிராங்கையல் குழாய்கள், காற்றுப் பாதைகள், காற்றுப் பைகள், தசைகள், இரத்த நாளங்கள், நரம்புகள், நிணநீர்க் குழாய்கள் ஆகியவற்றை தன்னகத்தே கொண்டுள்ளன.
பிராங்கையல் குழாய்கள் பல தடவை கிளைகளாக பிரிந்து பின் மிகச் சிறிய காற்றுக் குழாய்களாகின்றன. உடலிலேயே சிறிய தந்துகிகளாகின்றன. இவை 1/2 மி.மீ. அளவு தான் குறுக்களவு இருக்கும். இந்த குறுகிய தந்துகிகள் Bronchiole எனப்படுகின்றன. இவற்றின் சுவர்களில் சளிப்படலமோ, குருத்தெலும்போ கிடையாது. ஒவ்வொரு முடிவில் ஆயிரக்கணக்கான காற்றுப் பைகள் (Airsacs) இருக்கும். இவற்றை Alveoli என்கிறோம். இலட்சக்கணக்கான Alveoli களை பரப்பினால் 100 சதுர மீட்டர் பரப்பளவு இருக்கும். அல்வியோவை சுற்றி வலை போல் நுண்ணிய தந்துகிகள், (Capillaries) அடர்த்தியாக இருக்கும்.
உதர விதானம் (Diaphragm)
நுரையீரலின் எலும்பு தசையும் இல்லாததால், சுவாசம், விலா எலும்பு தசைகள், அடிவயிறு தசைகள், கழுத்து தசைகளாலும் மற்றும் உதர விதானத்தாலும் நடைபெறும். உதரவிதானம் கோவில் மணி போன்ற அமைப்பை கொண்ட தசை விரிப்பாகும். அடிவயிற்றையும், நுரையீரலையும் பிரிக்கிறது. மார்பு, விலா எலும்புக் கூடு மற்றும் முதுகெலும்பு இவற்றின் அடிபாகத்துடன் உதரவிதானம் இணைக்கப்பட்டிருக்கும். இது சுருங்கும் போது, மார்புக்கூட்டின் நீளத்தையும் குறுக்களவையும் அதிகப்படுத்துகிறது. இதனால் நுரையீரல் விரிவடையும். காற்றை வெளியேற்ற, நுரையீரலின் மீட்சித்தன்மை (Elasticity) உதவுகிறது. எனவே ஓய்விலிருக்கும் மனிதனுக்கு சுவாசத்திற்காக செய்ய வேண்டியது எதுவுமில்லை. ஆனால் உடற்பயிற்சி செய்யும் போது, பல தசைகள் காற்றை வெளியேற்ற உதவுகின்றன. அடிவயிற்றின் தசைகள் சுருங்கி, உதரவிதானத்தை அழுத்த அது தன் பங்குக்கு நுரையீரலை அழுத்த, காற்று வெளியேறுகிறது.
No comments:
Post a Comment