Tuesday, February 26, 2013

படுக்கையறை சங்கீதம்

ஒரு குடும்பத்தின் முன்னேற்றம் அந்த வீட்டின் படுக்கை யறையிலிருந்துதான் துவங்கிறது என்பார்கள். படுக்கையறை மட்டும் இனிமையாக இல்லறம் நடத்தும் அம்சங்களுடன் அமைந்து விட்டால்… அந்த குடும்பத்தில் ஏற்படுகின்ற எந்தவொரு பிரச்சனைக்கும் படுக்கையறையிலேயே சுமூகமாக தீர்த்துக் கொள்ளலாம்.
பொதுவாக படுக்கையறை சொர்க்கமாகத் திகழ வேண்டும். படுக்கையறையில் தான் ஒரு தம்பதியின் அடுத்த நாளுக்குத் தேவையான எனர்ஜி சேமிக்கப்படுகிறது. கிட்டத் தட்ட ஒரு கணவனும் மனைவியும் தங்களின் உடலை ரீ சார்ஜ் செய்து கொள்ளும் இடமே படுக்கையறையாகும். இனிமையான செக்ஸ் லைஃபுக்கு படுக்கையறையின் பங்கு கணிசமானதாகவே இருக்கிறது.
படுக்கையறையானது வேற்று மனிதர்களின் இடைஞ்சல் இல்லாமல் இருக்க வேண்டும். இதில் தூங்குகின்ற குழந்தைகள் கூட அடங்குவார்கள். படுக்கையறையில் பயத்துக்கு எந்த வேலையும் இருக்கக் கூடாது. ஒரு கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ படுக்கையறை என்பது பயங்களின் கூடாரமாக இருந்தால் இல்லற சுகம் பெறுவதில் சிக்கல் ஏற்படும். பயம் என்றதும் படுக்கையில் பாம்பு இருக்குமோ, பூரான் இருக்குமோ என்கிற பயமல்ல; மனைவி சம்பளக் கணக்கினை கேட்டு தோண்டி துருவித் தொலைத்து எடுப்பாளோ, இதை வாங்கிக் கொடு, அதை வாங்கிக் கொடு என்று நச்சரிப்பாளோ, இன்றைக்கு யார் மீது என்ன குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப் போகிறாளோ என்று படுக்கையறைக்குள் தன்னோடு படுக்க வருகிற தன் மனைவியை நினைத்து கணவனுக்கு பயமாகக் கூட இருக்கலாம்.
கணவன் இந்த மாதம் கொடுத்த சம்பளத்துக்கு செலவு கணக்குக் கேட்டு நோண்டுவானோ? அல்லது தனது பிறந்த வீட்டாரைப் பற்றி தேவையற்ற விஷயங்களைப் பேசி தன்னை வம்புக்கு இழுப்பானோ என்கிற பயமாகக் கூட இருக்கலாம். எப்போதும் படுக்கையறையில் பூரண அமைதி நிலவ வேண்டும். படுக்கையறை தூய்மையின் இருப்பிடமாகவும், ஆரோக்கியம் ததும்புவதாகவும், மிகுந்த பாதுகாப்பு கொண்டதாகவும் அமைந்திருக்க வேண்டும். புழுக்கமும் வியர்வையும் நங்கூரம் போடும் இடமாக இருக்கக் கூடாது. காற்றுக்கு எந்த பஞ்சமும் இருக்கக் கூடாது.
கணவன் மனைவி இருவரும் இன்பம் பொங்க உற்சாகச் சாரல் தெளிக்க இணைவதற்கு… இரண்டு பேரும் ஒருவரையருவர் தாம்பத்திய உறவில் விரும்பி ஏற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு கணவன் மனைவி இருவரும் ஒருவரையருவர் விரும்பி ஏற்றுக் கொள்வதில் எந்த இடர்பாடுகளும் இருக்கக் கூடாது. சுத்தமின்மை, வழியும் வியர்வை, அதனால் ஆளை துளைக்கும் உடல் துர்நாற்றம், அருவருப்பூட்டும் தோல் நோய்கள், எரிச்சலூட்டும் வியர்க்குரு, நெருங்கவே முடியாமல் செய்யும் வாய் துர்நாற்றம் ஆகியவை இல்லற சுகத்தை பாதிக்கும். பெண்கள் கஸ்தூரி மஞ்சள், கடலை மாவு, வால்மிளகு சேர்த்து அரைத்த குளியல் பொடியை பயன்படுத்தி தங்களை சுகாதாரமாக வைத்துக் கொள்ளலாம். கணவனோ மனைவியோ தங்களுக்கு தோல் நோய்கள் இருந்தால் அதற்கு அம்மான் பச்சரிசி, மஞ்சள், வேப்பிலை, துளசி இலை போன்றவற்றை மைய அரைத்து உடம்பு பூராவும் பூசி வைத்து அரை மணி நேரம் கழித்து குளிக்கலாம்.
சிகரெட் புகைப்பவர்கள். மதுப் பழக்கம் உள்ளவர்கள் மேல் எப்போதும் ஒரு விதமான கெட்ட நாற்றம் அடிக்கும். இதனை எந்த மனைவி தான் பொறுத்துக் கொள்வாள்? இது போன்ற பழக்கம் உள்ளவர்கள் படுக்கையறைக்குள் நுழையும் போது தங்கள் மேல் நாற்றம் அடிக்காமல் இருக்க ஒரு குளியலைப் போட்டு விட்டு நுழைவது நல்லது.
நாம் அனைவரும் மன்னர் பரம்பரை சேர்ந்தவர்கள் அல்ல; எனவே நமது படுக்கையறையை தங்கமும் வைரமும் வைத்து இழைத்து வைத்திருக்க வாய்ப்பில்லை. நம்மால் எளிதில் வாங்கி சூடிக் கொள்ள முடிகிற பூக்களைக் கொண்டே நமது படுக்கையறையை கமகமக்க வைக்கலாமே. படுக்கையறையில் கண்களை கவரும் வகையில் இயற்கைக் காட்சிகள் நிரம்பிய ஓவியங்களைக் கொண்டு அலங்கரிக்கலாமே!
கணவன் மனைவி இருவரும் அன்பு வழியும் பாசப் பிணைப்புடன் இருப்பார்கள். ஆனால் சமயங்களில் அவர்களையும் அறியாமல்… பலவீனமாக நடந்து கொண்டு விடுவார்கள். இது அந்த நேரத்து இனிமையை தகர்த்து விடக்கூடும். எனவே தான் எந்த நேரத்தில் எப்படி எல்லாம் தம்பதிகள் நடந்து கொள்ள வேண்டும்? என்று ஆங்கிலேயர்கள் வரையறுத்தார்கள். அவர்கள் வழிமொழிந்த ஒரு விஷயம் தான் பெட்ரூம் மேனர்ஸ். படுக்கையறையில் கணவனும், மனைவியும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்வது தான் பெட்ரூம் மேனர்ஸ் ஆகும். அருமையான, அழகான பெட்ரூம் மேனர்ஸ் … ஒரு தம்பதியின் செக்ஸ§வல் லைஃபை திருப்திகரமானதாக உயர்த்தி, மெருகூட்டும்!
‘அது என்னங்க பெட்ரூம் மேனர்ஸ்?’ என்று இந்தப் புத்தகத்தை படிக்கிற நீங்கள் முணுமுணுப்பது என் காதில் விழாமல் இல்லை. படுக்கையறையில் கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் மதிப்பது தான் இதன் அடிப்படை அம்சம். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால்…
படுக்கையறையில் தம்பதிகள் நாகரிகமாக நடந்து கொள்வது என்று நாசூக்காகச் சொல்லலாம். கணவன் மனைவி என்கிற உன்னதமான உறவு முறையில் அடிப்படையில் உடலுறவை மேற்கொள்ளும் போது, அவர்களிடையே பூரணமான, நிம்மதியான சுகம் கிடைக்க இந்த பெட்ரூம் மேனர்ஸ் வாசல் அமைக்கும்.
வீட்டுக்குள் நுழையும் போதே வீட்டுக்கு வெளியே செருப்பை கழற்றி விடுவது மாதிரி… கவலைகளையும் கழற்றி வீச வேண்டும் என்பார்கள் அல்லவா? அது மாதிரி… பெட்ரூமுக்குள் நுழைகின்ற தம்பதிகள் எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் அதனை படுக்கையறைக்குள் கொண்டு போகாமல் இருப்பது நல்லது. படுக்கையறைக்குள் வந்தவுடன் தான் பல பேர் அடுத்த மாசம் வரப் போகிற ஒரு ஃப்ங்க்ஷனுக்கு என்ன மாதிரியான டிரெஸ் எடுப்பது என்பதை பேசுவார்கள். அல்லது கணவன் மனைவியிடமோ, அல்லது மனைவி கணவனிடமோ கோர்ட்டில் பிராது கொடுப்பது மாதிரி யார் மீதாவது குற்றப் பத்திரிகை வாசித்துக் கொண்டு இருப்பார்கள்.
கணவன் மனைவி இரண்டு பேரும் நன்றாக பல் துலக்கி விட்டு, முடிந்தால் ஒரு குளியலைப் போட்டு விட்டு படுக்கை அறைக்குள் நுழையாலாம்.
இல்லற சுகம் காண முயல்கிற தம்பதிகள் உறவில் ஈடுபடுவதற்கு முன்பாக மிதமான சுடுநீரில் குளித்தால் உடல் புத்துணர்ச்சியுடன் திகழும்.
தம்பதிகள் இரண்டு பேரும் உறவுக்கு நுழையும் முன்பாக, தங்களின் ஜனன உறுப்புக்களை சுத்தம் செய்து கொள்வது நல்லது. கணவன் தனது பிறப்புறுப்பின் முன் தோலைப் பின்னுக்கு தள்ளி சுத்தம் செய்துக் கொள்ள வேண்டும். மனைவியும் சுய சுத்தம் கடைபிடிப்பது அவசியமாகும். ஆயுர்வேத ஆசானான சரகர் இதைப் பற்றி சொல்வதை பின்னால் பார்க்கலாம்.
பல கணவன் மனைவி திருமணம் முடிந்த பிறகு ‘இன்னமே நமக்கு என்ன இதெல்லாம் வேண்டிக்கிடக்கு? என்கிற தொனியில் தான் ஆடை உடுத்துவார்கள், அருகில் நெருங்கி கேட்டால்… ‘ இன்னமே யார் நம்மை கவனிக்கப் போறா மச்சி’ என்று பல்லைக் காட்டுவார்கள், தங்கள் தோற்றம் குறித்து அலட்டிக் கொள்ளாதவர்கள் எதிலும் ஒழுங்கானவர்களாக இருக்க மாட்டார்கள்… என்கிறது உளவியல் குறிப்பு ஒன்று!
படுக்கை அறையில் மனைவி மரமாக, ஜடமாக இருந்தால் காரணம் படுக்கை அறையின் வெளியிலே அவள் எவ்வாறு நடத்தப்படுகிறாள் என்பதை பொருத்து, அமையும். அவள் பார்க்கும் கணவன், படுக்கை அறையில் மட்டுமல்ல, வெளியேயும் அன்பாக, ஆதரவாக இருக்கும் ஒருவனை, நாட்கள் உருண்டோடினாலும் மாறாத அன்புடன் இருக்கும் ஆடவனை.

No comments:

Post a Comment