Tuesday, February 26, 2013

ஒவ்வாமை

ஒவ்வொரு மனிதரும் தனி பிரகிருதிகள். ஒருவருக்கு ஒத்துக் கொள்ளும் விஷயங்கள் மற்றவருக்கு நோயாகும். முன்பெல்லாம் குளிர், மகரந்ததூள், சில உணவுகள் தான் ஒவ்வாமை (Allergy) யை உண்டாக்கும் என்று சொல்லலாம். இப்போது ஒவ்வாமை பல பொருட்களால் ஏற்படுகிறது. நமது உடலின் நோய் தடுப்பு சக்தி தீவிரமாக, உடனடியாக, மிகையாக செயல்படுவதும் அலர்ஜி உண்டாக காரணமாகலாம்!
நமது உடலில் நோய் தடுப்பு சக்தியை சீராக்க ஆயுர்வேதத்தால் முடியும். திப்பிலி, மஞ்சள், துளசி, வேம்பு, குடூச்சி முதலியவற்றால் நமது “இம்யூன் சிஸ்டத்தை” சீராக்க முடியும். ஆனால் முழுமையான சிகிச்சைக்கு தேர்ந்த ஆயுர்வேத வைத்தியரை அணுக வேண்டும்.
குடூச்சி (சீந்தில்) – (Tinospora cordifolia) யின் தண்டை அரைத்து எடுத்த பொடி ஒரு பாகம் எடுத்து, 10 பாகம் நீர் எடுத்து, ஒரு சுத்தமான பாத்திரத்தில் (மண்பானை சிறந்தது) பொடியையும் நீரையும் கலக்கி ஒரு இரவு மூடி வைக்கவும். மறுநாள் வடிகட்டி 2 மேஜைக்கரண்டி அளவு எடுத்து 1 தேக்கரண்டி தேனுடன் கலந்து குடிக்கவும். தினமும் 1 வேளை வீதம் 6 லிருந்து 9 மாதம் வரை குடித்து வர நோய் எதிர்ப்பு சக்தி பெருகும். இதை 3 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் தரலாம். அளவு 1 மேஜைக்கரண்டி + 1/2 தேக்கரண்டி தேன்.
Sauropus Androgynus ஐ காய்கறி போல் சமைத்து உண்ணலாம். அதே போல முருங்கை கீரையின் இலைகளை சாறெடுத்து தினமும் 2 வேளை 1 (அ) 2 தேக்கரண்டி, சிறிது பாலுடன் சேர்த்து சிறுவர்களுக்கு கொடுத்து வரலாம். 3 மாதங்கள் வரை கொடுத்து வந்தால் இம்யூனிடி பெருகும்.
ஆயுர்வேத மூலிகைகள்
நிலவேம்பு (Andrographis Paniculata) – இந்த மூலிகை ஒரு சிறந்த கிருமி நாசினி. உடலின் நோய் தடுப்பு சக்தியை அதிகரிக்கும்.
பூண்டு – இதில் உள்ள அல்லிசின் (Allicin) ஒரு இயற்கை ஆன்டி – பையாடிக். இரத்தத்தில் சீக்கிரமாக கலந்து, பிராங்கைடீஸ் மற்றும் இதர சுவாச மண்டல கோளாறுகளை குணப்படுத்தும். உடலின் நச்சுப்பொருட்களை போக்கும். இரண்டு பூண்டு “பற்களை” நசுக்கி நீரிலிட்டு காய்ச்சவும். கூடவே அரை தேக்கரண்டி மஞ்சள் பொடியையும் சேர்த்துக் கொள்ளவும். ஆற வைத்து, வடிகட்ட குடிக்கவும்.
வெங்காயம் – இது பூண்டைப் போலவே செயலாற்றும். ஜலதோஷத்தின் போது, பூண்டு மற்றும் வெங்காயத்தை உணவில் சேர்த்துக் கொண்டால் ஜலதோஷ பத்தியமாக, நிவாரணம் கிடைக்கும்.
இஞ்சி – இதிலிருக்கும் சில வேதிப்பொருட்கள், ஜலதோஷத்தை உண்டாக்கும் வைரஸ்களில் ஒன்றான Rhinovirus ஐ எதிர்க்கும் திறனுள்ளவை.
சீரகம் – ஒரு தேக்கரண்டி சீரகத்தை நீரிலிட்டு காய்ச்சவும். குளிர வைத்து வடிகட்டி குடிக்கவும்.
இலவங்கப்பட்டை, துளசி, கிராம்பு, அதிமதுரம் இவைகள் ஜலதோஷ உபாதைகளை தணிக்க வல்லவை. இவற்றை பொடித்து, ஒவ்வொன்றில் 1 லிருந்து 4 கிராம் வரை எடுத்து கொதிக்கும் நீரில் சேர்த்து கலக்கி, ஆற வைத்து குடித்தால் ஜலதோஷ கபம் நீங்கும். அதிமதுரப்பொடியை தேனில் குழைத்து சாப்பிடலாம்.
மஞ்சள் – மஞ்சள் துண்டை நல்லெண்ணையில் நனைத்து, அனலில் காட்டி, எரிய விடவும். அப்போது வரும் புகையை நுகரவும். அடைபட்ட மூக்கு திறக்கும்.
கற்பூரவல்லியின் சாறு நல்லது. இரண்டு சொட்டு மூக்கில் விட்டால் சளி அடைப்பு நீங்கும். கற்பூர வல்லி இலையை பஜ்ஜியாக செய்து சாப்பிடலாம். கற்பூரவல்லி இலைகளின் சாறை 5 லிருந்து 15 மி.லி. அளவில் தினமும் 3 வேளை குடிக்கவும்.
உணவு முறைகள்
ஜலதோஷத்தின் போது உணவு (குறிப்பாக குழந்தைகளுக்கு) பிடிக்காமல் போகலாம். அதிகமாக திரவ உணவுகளை சேர்த்துக் கொள்ளவும்.
“சிக்கன் சூப்” மிகவும் நல்லது. சளி வெளியேற உதவுகிறது. வெங்காய சூப்பும் நல்லது.
சமச்சீர் உணவை உட்கொள்ளவும்.
இனிப்புகளை தவிர்க்கவும். அவை அமிலத்தை அதிகரித்து, ஜலதோஷத்தை நீடிக்கும்.
சாக்லேட்டுகளையும் தவிர்க்கவும்.
ஜலதோஷம், அதனுடன் வரும் ஜுரத்தால் (குறிப்பாக குழந்தைகளுக்கு) உடலின் நீர்மச்சத்து குறைந்து விடும். எனவே Electrolytes போன்றவற்றை கொடுக்க நேரிடும்.
பால் சார்ந்த உணவுகளை தவிர்க்கவும். இவை சளியை கெட்டிப்படுத்தும்.
கொழுப்பு நிறைந்த உணவுகளை ஒதுக்கவும். இவற்றால் அஜீரணம் ஏற்படும். உடலில் நச்சுப்பொருட்கள் தேங்கி விடும்.
மது அருந்துவதை, புகைப்பதை நிறுத்தவும்.
சூப்புகள், மாமிச சூப்புகள், பூண்டு, வெங்காயம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை, நிறைய தண்ணீர், (சூடான (அ) வெதுவெதுப்பான) குடிக்கவும்.
தவிர்க்க வேண்டியவை – தயிர், குளிர்பானங்கள், தலைக்கு குளிப்பது, ஐஸ்கிரீம் போன்றவை.
இதர குறிப்புகள்
அடிக்கடி கைகளை கழுவவும். சாதாரண சோப்பினால் கிருமிகளை அழிக்க முடியாது. இருந்தாலும் கைகளிலிருந்து கிருமிகளை “தள்ளிவிட” சோப் உதவும்.
ஜலதோஷ தாக்குதலின் போது தேவையான அளவு ஒய்வு எடுத்துக் கொள்ளவும். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். மற்ற சிறுவர்களுக்கும் “பரப்புவது” மற்றுமன்றி, நிமோனியா போன்றவற்றை மற்றவர்களிடமிருந்து தொற்றிக் கொள்ளலாம். காரணம் ஜலதோஷத்தின் போது, குழந்தைகளின் நோய் தடுப்பு சக்தி குறைவாக இருக்கும். இதனால் சுலபமாக பல தொற்று நோய்கள் குழந்தைகளை தாக்கும்.
குளிரில் அலைய வேண்டாம். உடலை “கதகதப்பாக” வைத்துக் கொள்ளவும்.
ஜலதோஷத்துடன் இருமும் போதும், தும்மலின் போது கைகளால் முகத்தை மூடிக் கொள்ள வேண்டாம். கைகளில் படிந்த வைரஸ் மற்றவர்களுக்கு பரவும். அந்த கைகளால் நீங்கள் பல இடங்களை தொட்டால், உங்கள் ஜலதோஷம் பலருக்கு பரவும். ‘டிஷ்யூ’ காகிதத்தால் மூக்கை மூடி, தும்மின பிறகு, டிஷ்யூ பேப்பரை எறிந்து விடவும்.
ஜலதோஷ வைரஸ்கள் பல மணி நேரம், ஏன், பல நாட்கள் கூட உயிருடன் இருக்கும். எனவே தும்மின பிறகு உங்கள் கைகளால், கதவுத் தாழ்ப்பாள்கள், குழாய்கள், டெலிபோன் முதலியவற்றை தொடுவீர்கள். இவற்றை தொடும் வேறு நபர்களுக்கும் வைரஸ் கிருமிகள் பரவும்.
தீவிர ஜலதோஷத்தின் போது டாக்டரிடம் கேட்டு குளிக்கவும். ‘நீராவி’ குளியல் நல்லது. கால்களை சுடுநீரில் கழுவுவதால் ஜலதோஷம் குறையலாம். ஒரு மேஜைக்கரண்டி கடுகுப் பொடியை இரண்டு லிட்டர் சுடு தண்ணீரில் கரைக்கவும். 10 நிமிடம் இந்த நீரில் கால்களை அமிழ்த்தி வைக்கவும்.
நாஸ்யம்
இவை தவிர ஆயுர்வேதத்தில் நாசியில் மருந்துகளை விட்டு, ஜலதோஷத்தை போக்கும் ‘நாஸ்ய’ கிசிச்சையும் உண்டு.

No comments:

Post a Comment