Tuesday, February 26, 2013

பெண் இல்லாத ஊரிலே பூமி பூ பூப்பதில்லை

மலையாள மொழியில் அற்புதமான ஒரு கவிதை உண்டு.
அது இது…
பிரம்மன்
பெண் இனத்தை
படைத்து விட்டு
குளத்தில் கை கழுவினான்…
குளம் எங்கும்
தாமரைகள் பூத்தன!
நமது முண்டாசு கவிஞன் பாரதியோ
‘பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா…
பெண்மை வெல்கவென்று கூத்திடுவோமடா…
துன்பந் தீர்வது பெண்மையினாலடா!’ என்கிறான்.
அய்யன் திருவள்ளுவரோ ஒரு படி மேலே போய்…
‘பெண்ணின் பெருதக்க யாவுள’ என்கிறார்.
உலகம் முழுவதும் உள்ள அனைத்து மொழி இலக்கியமும் பெண்களை உயர்வாகவே உச்சி முகர்கிறது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நாமும் மைக் பிடித்து பெண்களைப் பற்றி உயர்வாக பேசித் தீர்க்கிறோம்.
ஆனால்…
நடைமுறையில் இதைக் கடைப்பிடிப்பதில்லை.
சொல்வதற்கே வெட்கப்பட வேண்டியிருக்கிறது. இந்தியாவில் பெண் குழந்தை பிறந்தால் பெருஞ்சுமையாக கருதுகிறோம். கருவில் இருப்பது பெண் என்று தெரிந்தால் கருவறையையே கல்லறையாக்குவது, பெண் குழந்தை பிறந்து விட்டால் அதனை கள்ளிப்பால் கொடுத்தும், நெல் மணிகளை குழந்தையின் வாயில் போட்டும் சாகடிப்பதும் சர்வ சாதாரண நிகழ்வாகிக் கொண்டு இருக்கிறது. ஆனால் ஆண்டுதோறும் சீரும் சிறப்புமாக மகளிர் தினம் மட்டும் கொண்டாடுகிறோம். பொதுவாக ஒரு பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்து விட்டால் அதற்குக் காரணம் அந்த குழந்தையைப் பெற்றெடுத்த பெண்தான் காரணமென்று காலங்காலமாக நாம் கருதிக் கொண்டு பெண்களை இழிவாக நடத்திக் கொண்டு இருக்கிறோம். ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தால்… அவளது கணவன், அவளது கணவனது ஒட்டு மொத்த குடும்பம், இத்துடன் சமுதாயமும் சேர்ந்து கொண்டு அவளை பாடாய்படுத்துவது இன்றைக்கு நேற்றல்ல; ஆதி நாட்களிலிருந்து நடைபெற்று வருகிறது.
இனிமையான இல்லறம் வேண்டுவோர் கவனிக்க வேண்டிய நிஜங்களில் மகத்தானது இது. உங்களுக்கு பெண் குழந்தை பிறந்து விட்டால் அதனை பாரமாக கருதினீர்கள் என்றால் நீங்கள் எவ்வளவு தான் ஆதர்ஷமான தம்பதிகளாக இருந்தாலும் உங்கள் இல்லறம் இனிமையானதாக இருக்காது. மேலும் உங்களுக்கு பெண் குழந்தை பிறந்தால் அதற்கு காரணம் மனைவி தான் என்கிற கருத்து இருந்தால் அதனை முற்றிலும் மாற்றிக் கொள்ளுங்கள். ஏனெனில் இன்றைய நாட்களில் மருத்துவ உலகம் ஒருவருக்கு பிறக்கும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்று நிர்ணயிப்பது ஆண் தான் என்று அறிவியல் பூர்வமாக நிரூபித்து விட்டது.
ஒரு குழந்தையின் பாலினத்தை நிர்ணயிப்பது ஆண் தானே தவிர, பெண் அல்ல! எப்படியென்றால், குரோமோசோம்கள் என்பது கணவன் மனைவி இருவரிடத்திலும் உள்ளது. ஆனால், பிறக்கப் போகும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதை ஆண்களில் இருக்கும் குரோமோசோம்கள் தான் தீர்மானிக்கின்றன. மனித உடம்பில், ஒவ்வொருவருக்கும் 23 ஜோடிகள் குரோமோசோம்கள் இருக்கும், இதில், 22 ஜோடிகளில் குழந்தையின் நிறம், வடிவம், உயரம், குணம் போன்றவை இருக்கும். ஆனால், இதில் பாலினத்தை நிர்ணயிப்பது அதாவது… பிறக்கும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்று நிர்ணயிப்பது ஆண் குரோமோசோம் மட்டுமே. இந்த 23 வது ஜோடி குரோமோசோமுக்கு செக்ஸ் குரோமோசோம் என்று பெயராகும். பொதுவாக ஆணிடம் இருக்கும் குரோமோசோம்கள் எக்ஸ் + ஒய் என்று இருக்கும்., பெண்ணிடம் இருக்கும் குரோமோசோம்கள் எக்ஸ் + எக்ஸாக இருக்கும். ஆணின் உயிரணுக்களில் 50 சதவிகிதம் எக்ஸ் குரோமோசோம்களும் 50 சதவிகிதம் ஓய் குரோமோசோம்களும் இருக்கும். பெண்ணின் உயிரணுக்களில் அமைந்திருக்கும் குரோமோசோம்களில் எக்ஸ் மட்டுமே இருக்கும். ஆணின் எக்ஸ் குரோமோசோம் பெண்ணின் எக்ஸ் குரோமோசோமுடன் இணையும் போது பெண் குழந்தை பிறக்கும். பெண்ணில் இருக்கும் எக்ஸ் குரோமோசோமுடன் ஆணின் ஒய் குரோமோசோம் இணைந்தால் அது ஆண் குழந்தையாக பிறக்கும்.
எனவே பெண் குழந்தை பெற்றெடுத்த தாயை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதை விட்டொழியுங்கள். அப்போது தான் இல்லறம் இனிக்கும்!

No comments:

Post a Comment