முகத்தை போலவே கூந்தல்களுக்கும் தனித்தன்மை உண்டு. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான முடி அமைப்பு இருக்கும். அடிப்படையாக, முடியை மூன்று வகைகளாக சொல்லாம்.
எண்ணைப்பசை மிகுந்த கூந்தல்
வறண்ட கூந்தல்
சாதாரண கூந்தல்
எண்ணைப் பசை உள்ள கூந்தல்
எண்ணை சுரப்பியான செபாசியஸ் சுரப்பி, சேபம் எண்ணையை அதிகம் சுரப்பதால் கூந்தலின் எண்ணை அதிகமாகும். எண்ணைப்பசை அதிகமானால் மயிர்க்கால்கள் அடைத்துக் கொள்ளும். தலையில் அழுக்கு சேரும்.
இந்த வகை பெண்களுக்கு, தலையில் மட்டுமல்ல, முகத்திலும் அதிக எண்ணை இருக்கும். தலைமுடி 1 லட்சத்து 20 ஆயிரம் இருக்கும் என்று சொன்னோம். எண்ணை பசை கூந்தல் உள்ளவர்களுக்கு 1 லட்சத்து நாற்பதாயிரம் எண்ணை சுரப்பிகள் இருக்கும். எண்ணை அதிகம் சுரக்க காரணங்கள், பிறவி உடல் வாகு, ஹார்மோன்கள், சூடு, ஈரப்பதம் ஆகியவை காரணமாகலாம்.
உலர்ந்த முடி
எண்ணை சுரப்பி போதிய அளவு சுரக்காததால், கூந்தல் வறண்டு விடும். எண்ணை போஷாக்கில்லாததால் முடி பலவீனம் அடைந்து, உலர்ந்து உடையும்.
சாதாரண முடி
எண்ணை சுரப்பி சரியான அளவில் சுரந்தால், கூந்தல் ஆரோக்கியமாக வளரும். முடிப்பிரச்சனைகள் தோன்றாது.
ஆயுர்வேதத்தின் படி முடி வகைகள்
ஆயுர்வேதம் தனது அடிப்படை கோட்பாடான வாத, பித்த, கப தோஷங்களால் மனிதர்களை மூன்று பிரக்ருதிகளாக பிரிக்கிறது. அந்தந்த பிரகிருதிகளுக்கு ஏற்ப தலைமுடி இருக்கும்.
வாத பிரகிருதிகளுக்கு
உடல் முடி கறுப்பாக, அடர்த்தியாக, சுருண்டு மென்மையாக இருக்கும். உடல் முடி ஒன்று குறைவாக இருக்கும். இல்லை எதிர்மாறாக அதிகமிருக்கும்.
தலைமுடி கறுப்பாக, கரடு முரடாக, சிடுக்கோடு இருக்கும். முடி வறண்டு இருக்கும்.
பித்த பிரகிருதிகளுக்கு
உடல் முடி இலேசாக, மிருதுவாக அழகாக இருக்கும்.
தலைமுடி எண்ணை பசையுடன் இருக்கும். சீக்கிரமாக நரைத்து விடும்.
வழுக்கை சீக்கிரமாக ஏற்படலாம்.
கபப் பிரகிருதிகளுக்கு
உடல் முடி அளவோடு இருக்கும்.
தலைமுடி, எண்ணைபசை சிறிதளவே இருந்தாலும், பளபளப்பாக அலை அலையாக இருக்கும். அடர்த்தியாக கருமையாக இருக்கும்.
உங்கள் கூந்தல் எந்த டைப் என்று அறிய
ஷாம்பூ போட்டு தலைமுடியை அலசின மறுநாள், ஒரு டிஷ்யூ பேப்பரை எடுத்து தலை நடுவிலும், காதுகளின் பின்புறமும் அழுத்தி எடுக்கவும். டிஷ்யூ பேப்பரை வைத்து தேய்க்க வேண்டாம். அழுத்தி எடுக்கவும். டிஷ்யூ பேப்பரில் எண்ணெய் தெரிந்தால் உங்களின் கூந்தல் எண்ணெய்ப்பசை அதிகமுள்ள கூந்தல். தவிர உங்கள் சர்மம் ‘நார்மலாக’ இருந்தால் உங்கள் கூந்தலும் நார்மலாக இருக்கும். சர்மத்தில் குறிப்பாக முகத்தில், எண்ணெய் பசையாக இருப்பவர்களுக்கு, கூந்தலும் எண்ணெய்ப்பசை அதிகமானதாக இருக்கும். உலர்ந்த சருமம் உள்ளவர்களின் கூந்தலும் உலர்ந்திருக்கும்.
மனித இனத்திற்கேற்ப மாறுபடும் முடி
மனிதரின் இனம், வசிக்கும் பிரதேசங்கள் இவைகளால் முடி வகைகள் மாறுபடும். கறுப்பின நீக்ரோக்கள் முடி, கம்பிச்சுருள் போல சுருண்டு, சுருட்டையாக இருக்கும். ஆசிய இனத்தவர்களுக்கு முடி நீளமாக இருக்கும். மங்கோலிய இனத்தவர்க்கு முடி முரட்டுத்தனமாக இருக்கும். ஐரோப்பிய நாட்டவருக்கு முடி மிருதுவாக, பழுப்பு – வெள்ளை நிறமாக இருக்கும். இவர்களுக்கு மெலானின் குறைவாக இருப்பதால், முடி சீக்கிரம் நரைத்து விடும்.
ஆயுர்வேதமும் முடியும்
ஆயுர்வேதத்தின் படி முடி ஒரு எலும்பின் திசு. அஸ்தி – தாதுவின் மலம் கழிவுப் பொருள். எலும்பு கால்சியத்தால் ஆனதால், முடிக்கும் கால்சியம் தேவையென ஆயுர்வேத மருத்துவர்கள் கருதுகின்றனர். கால்சியம் மட்டுமல்ல, இரும்புச்சத்தும் சேர்ந்தால், முடி ஆரோக்கியமாக இருக்கும் என்பது இவர்களின் கருத்தாகும். சரகசம்ஹிதை, எலும்பு திசு குறைவினால், இளநரை, முடி உதிர்தல் இவை ஏற்படுகிறது என்கிறது.
முடி மற்றும் நகங்கள் பஞ்ச பூதங்களில் ஒன்றான ப்ருத்வியால் ஆனவை. ஜல பூதம் இன்மையால் இவை கடினமாகின்றன என்பதும் ஆயுர்வேத கருத்து.
சரகசம்ஹிதை மட்டுமல்ல, சுஸ்ருதரும் 44 வகை ரோகங்களை குறிப்பிடுகிறார். அதில் பொடுகு, முடி உதிர்தல், நரை – இவைகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
பல வித முடிப்பிரச்சனைகள் ஆயுர்வேதத்தில் அலசப்பட்டிருக்கின்றன. ஆயுர்வேதத்தை அணுகினால், முடி பாதிப்புகளுக்கு பாதுகாப்பான தீர்வுகள் கிடைக்கும்.
உங்கள் கூந்தல் எந்த வகையைச் சேர்ந்தது என்று அறிய ஆயுர்வேத மருத்துவரை அணுகவும். வரும் அத்யாயங்களில் ஆயுர்வேத சிகிச்சை முறைகள் விவரிக்கப்படும்.
No comments:
Post a Comment