பல மன பிரிவுகளுக்கு காரணம் குறட்டை. குறட்டை விடுபவர்களுக்கு தாங்கள் குறட்டை விடுகிறோம் என்பது தெரியாது. ஆனால் அருகில் படுப்பவர்கள் பாதிக்கப்படுவார்கள். குறட்டை ஒலியே, நபருக்கு நபர் மாறினாலும், விசித்திரமாக ஒலிக்கும்! மற்றவர்கள் தூங்க முடியாதபடியான ஒரு வினோத ஒலி! குறட்டை சப்தத்தால் எழுந்து, பக்கத்தில் படுத்திருப்பவர் ‘நன்றாக’ குறட்டை விடுவதை கேட்டுக் கொண்டு, ராத்திரி முழுவதும் தூங்கமுடியாமல் தவித்தால் ஏன் கோபமும், வெறுப்பும் வராது? குறட்டை விடுபவர்கள் அதை ஒப்புக் கொள்வதில்லை. ஆனால் மருத்துவ கண்ணோட்டத்தில், குறட்டை விடுபவரும் நிம்மதியாக தூங்குவதில்லை. குறட்டை விடுவது தொடர்ந்து அதிகமாகிக் கொண்டு போனால் அது ஒரு நோயாகி விடும். இதை ‘ஸ்லீப் அப்னீயா சின்ட்ரோம்’ (Sleep Apnea syndrome) என்பார்கள்.
குறட்டை எப்படி ஏற்படுகிறது?
நாம் தூங்கும் போது, நாக்கு, மேலண்ணம், தொண்டை சதை, மூக்கின் பின் பகுதி சதை இவை இறுக்கம் தளர்ந்து ஓய்வெடுத்துக் கொள்கின்றன. இந்த தளர்ச்சியால், இவை சுவாசக்குழாயை அழுத்துகின்றன. சுவாசக்குழாய் இதனால் சுருங்கி இருக்கும் போது வரும் காற்று சிறிது கஷ்டப்பட்டு தான் அதை கடக்க வேண்டி வரும். இவ்வாறு கடக்கும் போது ஏற்படும் சப்தம் தான் குறட்டை. குறட்டை ஒலியை கேட்கும் போது மார்புக்கும் மூளைக்கும் காற்று சரிவர போகாமல் தடைபடுகிறது என்பதை உணரலாம். சுவாசம் தற்காலிகமாக தடைபடுவதால் ஸ்லீப் அப்னியா ஏற்படுகிறது. இது மூன்று வகை
1. தடங்கல் ஸ்லீப் அப்னியா (Obstructive sleep apnea):- இது தான் பரவலாக காணப்படும் ஸ்லீப் அப்னியா. குண்டான, அதிகப்படி உடல் எடை உள்ளவர்களுக்கு இந்த ரக குறட்டை பிரச்சனை வரும். இவர்கள் மல்லாந்து படுத்தால் குறட்டை அதிகமாகும். புகை பிடிப்பது, மது அருந்துவது இவை குறட்டை பிரச்சனையை இன்னும் அதிகரிக்கும். நுரையீரல் பிரச்சனைகளால் ஆக்சிஜன் குறைபாடு ஏற்படும். மூளையிலும், ரத்தத்திலும் கார்பன்-டை-ஆக்ஸைட் அதிகரிக்கும். டான்சில், அடினாய்ட் மற்றும் சைனஸ் பிரச்சனைகளும், காரணங்களாகும். சிறிய தாடை, அமுங்கிய தாடை, மூக்கில் சதை, தொண்டை, குரல்வளை அடைப்பு, இவைகளும் குறட்டையை உண்டாக்கும்.
2. சென்ட்ரல் ஸ்லீப் அப்னியா இது அபூர்வமான ஸ்லீப் அப்னியா, சுவாசத்தை ‘கன்ட்ரோல்’ செய்யும் மூளையின் பகுதி பாதிக்கப்பட்டால் ஏற்படும்.
3. இரண்டும் கலந்த ஸ்லீப் அப்னியா சிலருக்கு தடங்கல் ஸ்லீப் அப்னியாவால் மூளைப் பகுதி பாதிக்கப்பட்டு சென்ட்ரல் ஸ்லீப் அப்னியாவும் ஏற்படும்.
அறிகுறிகள் (sleep Apnea)
1. முதல் அறிகுறி, குறட்டை தான். விட்டுவிட்டு வரும் குறட்டை, மூச்சுத் திணறல், இதனால் அடிக்கடி விழித்துக் கொள்வது இவை உண்டாகும். தூக்கம் கெட்டு, அப்னீயா நோயாளிகளின் பகல் நேர பணிகள் கெடும்.
2. பாலுறவில் நாட்டம் குறையும்
3. ஆக்ஸிஜன் அளவுகள் குறைவதால் மூளை செயல்பாடுகள் பாதிக்கப்படலாம். ஞாபக மறதி, கோபம், எரிச்சல் இவை உண்டாகும்.
குறட்டைப் பிரச்சனையை கவனிக்காமல் விட்டால் பக்கவாதம், அதிக
ரத்த அழுத்தம், ஹார்ட் அட்டாக் இவை ஏற்படலாம்.
தற்போது குறட்டை வியாதியான ஸ்லீப் அப்னியாவுக்கு பலவகை சிகிச்சைகள் இருக்கின்றன. சுவாச மண்டலத்தில் ஏற்படும் காற்று அடைப்பை சரி செய்தாலே குறட்டை பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.
• முதலில் நோயாளியின் உடல் எடை இருக்க வேண்டிய அளவுக்கு குறைக்கப்பட வேண்டும்.
• புகைபிடித்தல், மது அருந்துதல் இவை நிறுத்தப்பட வேண்டும்.
• குறட்டை விடுபவர்கள் பக்கவாட்டில் படுத்தால் குறட்டை விடுவது குறையும் அல்லது நிற்கும். மல்லாந்து படுக்கமாலிருக்க, முதுகில் சிறிய பந்து அல்லது, துணி முடிச்சு, சிறு தலைகாணி, போன்றவற்றை முதுகில் கட்டிக் கொண்டு தூங்கினால் மல்லாந்து படுக்க முடியாது.
• தூக்கத்தின் போது அணிந்து கொள்ள முகமூடி (Mask) ஒன்று கொடுக்கப்படுகிறது. இதனால் அடைப்பின்றி ஆக்ஸிஜன் சுவாசிக்கப்படுகிறது.
• அறுவை சிகிச்சையால் அடினாய்ட், டான்சில், மூக்கு, தொண்டை, நாக்கு சதைகள் சரி செய்யப்படுகின்றன.
மல்லாந்து படுப்பதால் குறட்டை ஏன் அதிகமாகின்றது?
நாம் தூங்கும் போது நாக்கு, தொண்டை, மேலண்ணம் போன்ற வாய்சதைகள் இறுக்கம் குறைந்து தளர்ந்து விடுகின்றன. மல்லாந்து படுத்தால் புவி ஈர்ப்பு சக்தியால், இந்த சதைகள், டான்ஸில்ஸ் இவையெல்லாம் பின்னோக்கி ஈர்க்கப்படுகின்றன. பின்னோக்கி சரியும் போது இந்த தசைகள் சுவாசக் குழாயை அழுத்துவதால் அதில் காற்றுத்தடை உண்டாகி, குறட்டை சப்தம் எழும்புகிறது.
• தலையணைகளை உயர்த்திக் கொள்வதால் குறட்டையை குறைக்கலாம்.
• தொண்டை, நாக்குகளுக்கான பிரத்யேக பயிற்சிகள், பிராணாயாமம் போன்ற சுவாசப்பயிற்சிகள் பலன்தரும். தாடைப்பயிற்சிகளும் உதவலாம்.
• கொதிக்கும் நீரின் நீராவியை மூக்கால் இழுப்பது எளிய ஆனால் பலன்தரும் சிகிச்சை. கொதிக்கும் நீரில் மார்ஜோரம், (Origanum Majorana – mint family) போன்ற மூலிகைகளையும் போட்டு, நீராவியையும் சேர்த்து இழுத்தால் நல்ல பலன் தெரியும். மூக்கடைப்பு நீங்குவதால் சுவாசம் சரிவர இயங்கும். குறட்டையும் குறையும்.
• தொண்டை, மூக்கில் நுண் துளிகளாக தெளிக்க செய்யும் சாதனத்தால், (Aerosol spray) புதினாவிலிருந்து கிடைக்கும் பெப்பர் மின்ட் (Pepper mint) எண்ணெய்யை ‘ஸ்ப்ரே’ செய்து கொள்ளலாம்.
• சிறிதளவு சூட்டில் ‘பிரம்மி’ (Bacopa Monnieri.) நெய்யை 4-5 துளிகள், மூக்கில் விட்டுக் கொள்ளலாம். (படுக்கும்முன்)
• தேன் சேர்த்த இஞ்சி சாற்றை படுக்கும் முன் குடிக்கலாம்.
• அஜீரணத்தால், விருந்து உணவுகளாலும் சில சமயம் குறட்டை உண்டாகும். புதினா தயாரிப்புகளான பெப்பர் மினட், ஸ்பியர் பின்ட், அல்லது புதினா காப்சூல்களால் அஜீரணத்தை போக்கிக் கொண்டால், குறட்டை குறையும்.
No comments:
Post a Comment