Tuesday, February 26, 2013

சருமத்தைப் பற்றி

அழகான மேனிக்கு அடிப்படை ஆதாரம் ஆரோக்கியமான சருமம். உடலின் ஆரோக்கியம் தோலில் தென்படும். மாசு மருவில்லாத தேகம் மற்றவர்களை கவரும்.
சருமம் மேனிக்கு அழகை தோற்றுவிப்பது மட்டுமல்ல, வேறு பல பணிகளையும் செய்கிறது முதலில் சருமத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
• உடலில் பெரிய அவயம் தோல்.
• நம் உடலை சருமம் மூடியிருப்பதால், வெளியிலிருந்து கிருமிகள் உடலை தாக்குவதை தடுக்கிறது.
• சூரிய ஒளி உடலின் உள் அவயங்களை தாக்காமல் சருமம் பாதுகாக்கிறது.
• உடல், உஷ்ணத்தை ‘கன்ட்ரோல்’ செய்கிறது. வெய்யிலினால் ஏறும் அதிக உடல் சூட்டை, சருமம் விரிவடைந்து, வியர்த்து உஷ்ணத்தை வியர்வையாக வெளியேற்றுகிறது. குளிர் தாக்கும் போது தோல் சுருங்கி, தனது நுண்ணிய துவாரங்களை மூடி இருக்கும் உடல் சூடு வெளியேறாமல் பாதுகாக்கிறது.
• உடலின் நீர்மச்சத்துக்களை சரியான அளவில் வைக்கிறது. உடலிலிருந்து தேவையில்லாத நீரை வெளியேற்ற சிறுநீரகத்திற்கு உதவுகிறது.
• முக்கியமாக, சருமம் தொடு உணர்ச்சியை உணர வைக்கிறது. வலியையும், இன்பத்தையும் உணர வைக்கிறது. உடலில் உள்ள “வாசனை சுரப்பிகள்” பாலியல் உணர்வை தூண்டுகின்றன. இவை தோல் சார்ந்த உறுப்புகள்.
• ஒவ்வொரு மனிதனுக்கும், மங்கைக்கும் தனித்துவ புறதோற்றத்தை கொடுக்கிறது.
• ஒரு சராசரி மனித உடலில் சருமத்தின் பரப்பளவு 18 சதுர அடி.
• மனிதனின் எடையில் 10% சருமத்தின் எடையாகும்.
• மேல் தோல் செல்கள் 30 நாட்களுக்கு ஒரு முறை புதிதாக உருவாகின்றன.
• உடலில் உள்ள தோலின் தடிப்பு சராசரி 2 மி.மீட்டர்.
• உடலின் சில அவயங்களை எடுத்து மற்றவருக்கு பொருத்தலாம். உதாரணம் சிறுநீரகம், நுரையீரல் ஆனால் ஒருவரின் தோலை எடுத்து மற்றவருக்கு பொருத்த முடியாது! காயங்கள் குறிப்பாக தீப்புண்களால் சருமம் தீய்ந்து போனால் அந்த இடத்தில் பொருந்த, காயம்பட்டவரின் உடலிலிருந்தே தான் தோலை எடுத்து ஒட்ட வேண்டும்.
தோலின் அமைப்பு
சருமம் மூன்று அடுக்குகளால் ஆனது அவை.
1. மேல் தோல் (அ) புறத்தோல்
2. அடித்தோல்
3. ஹைப்போடெர்மிஸ் (அ) தோல் கீழ் அடுக்கு (ஆ) கொழுப்பு தோலடுக்கு மேல் தோல் – இதிலேயே பல சிறு அடுக்குகள் உள்ளன.
இந்த புறத்தோலை தண்ணீர் தாக்க முடியாது. இது தான் பாக்டீரியா, வைரஸ், இதர கிருமிகள் உடலுக்குள் நுழையாமல் தடுக்கிறது. உள் உறுப்புகளையும், அடி, காயங்களில் இருந்து பாதுகாக்கிறது. தட்டையான புறத்தோல் செல்கள் ‘கெராடின்’ என்ற புரதத்தால் ஆனவை. இதே கெராடின் தான் நம் முடியிலும், நகங்களிலும் உள்ளது. புறத்தோலின் செல்கள் பழையதாக நலிந்து போகும். அப்போது புதிய செல்கள் கீழிருந்து மேலே எழும்பி வந்து, பழைய செல்களை வெளியேற்றும்.
மேல் தோலின் கீழ்ப்பகுதியில் உள்ளது ‘மெலானோசைட்ஸ்’. இந்த செல்கள் தான் நமது உடலுக்கு நிறத்தை, கொடுக்கும் மெலானின் என்ற சாயப் பொருளை உற்பத்தி செய்கின்றன. நம் உடலுக்கு வர்ணம் கொடுப்பது மட்டுமன்றி, மெலானின், தீங்கு விளைவிக்கும் அல்ட்ரா – ஊதா வெப்ப கதிர் வீச்சை (இது சூரிய ஒளியிலிருந்து வரும்) தடுக்கிறது.
மேல் தோல் அதிக பாதுகாப்பு தேவைப்படும் இடங்களில் சற்று தடிமன் அதிகமாக கொண்டிருக்கும் – உதாரணம் உள்ளங்கை, பாதம்.
மேல் தோலில் ‘லாங்கர் ஹான்’ செல்களும் உள்ளன. இவை தோலின் நோய் தடுப்பு சக்தியின் அங்கங்களாகும். உடலில் உண்டாகும் பாதிப்புகளை “ஒவ்வாமை” யாக காட்டும்.
அடித்தோல் (அகத்தோல்) – இந்த அடுக்கில் இருப்பவை நார் போன்ற எலாஸ்டிக் புரத திசுக்கள் – இவை தோலுக்கு வளையும் தன்மையும், பலத்தையும் கொடுக்கின்றன. நரம்பு நுனிகள், வியர்வை சுரப்பிகள், எண்ணை சுரப்பிகள், முடிக்கால்கள் (துவாரங்கள்), ரத்த நாளங்கள் இவைகளும் இந்த அடுக்கில் இருப்பவை.
நரம்பு நுனிகள் தொடுதல், வலி, சூடு, குளிர், இவற்றை உணர உதவுகிறது. விரல் நுனிகள், கால் கட்டை விரல் இவற்றில் உடலின் மற்ற பாகங்களை விட அதிக நரம்பு நுனிகள் இருப்பதால், இவை தொடு உணர்ச்சியை மிக விரைவில் உணருகின்றன. இதே போல் உதடுகள், மார்பகங்கள், மார்பு நுனிகள், உடலுறுப்புகள் இவைகளுள்ள தோலின் இடங்களில் அதிக நரம்புகள் உள்ளதால், இந்த இடங்களை தொட்டால் உணர்ச்சிகள் பெருகும்! அதனால் உதடு – முத்தம் பாலுணர்வை தூண்டுகிறது!
முன்பே சொன்னபடி, வியர்வை சுரப்பிகள் உஷ்ணத்தால் சுரக்கும் வியர்வை, உடலை ‘கூல்’ ஆக ஆக்குகிறது. வியர்வையில் உள்ளது – நீர், உப்பு மற்றும் சில இராசயன பொருட்கள். அக்குளிலும் பிறப்புறுப்புகளிலும் பிரத்யேக ‘வியர்வை’ சுரப்பிகள் கெட்டியான, எண்ணை போன்ற வியர்வையை சுரக்கின்றன. இவை மனித உடலுக்கு பிரத்யேக வாடையை உண்டாக்குகின்றன. இந்த ‘வாசனை’ பாலுணர்வை தூண்டும் விஷயங்களில் ஒன்று!
எண்ணை சுரப்பிகள் உடலுக்கு எண்ணை பசையை உண்டாக்கி, சருமத்தை வழவழப்பாகவும், பளபளப்பாகவும், வைக்கின்றன. எண்ணை சுரப்பிகளால் எண்ணை சுரப்பதில்லை. இந்த சுரப்பியின் செல்களே உடைந்து கொழுப்பாக முடிக்கால்களின் வழியே மேலே வந்து விடுகின்றன. இவை தான் முகப்பரு உண்டாக காரணம்.
இந்த அடுக்கில் உள்ள இரத்த நாளங்களால் தோலுக்கு ஊட்டச்சத்து கிடைக்கிறது. தவிர முன்பு சொன்னபடி, உடலின் உஷ்ணம் சரியான அளவில் காக்கப்படுகிறது. உஷ்ணம் அதிகமானால் இரத்தக் குழாய்கள் விரிவடைந்து, அதிக உஷ்ணத்தை விடுவிக்கின்றன. குளிரின் போது இரத்தக் குழாய்கள் சுருங்கி, உடல் உஷ்ணத்தை குறைய விடாமல் காக்கின்றன.
இந்த வியர்வை, எண்ணை சுரப்பிகள், நரம்புகள், இரத்தக்குழாய்கள், மயிர்கால்கள், உடலில் இடத்திற்கு இடம், எண்ணிக்கையில் மாறுபடுகின்றன.
தோலின் கீழ் அடுக்கு – இதை கொழுப்பு அடுக்கு என்றே கூறலாம். இதனால் தான் உடல் குளிர், உஷ்ணம் இவை இரண்டின் பாதிப்புக்கு அதிகம் உட்படாமல் பாதுகாக்கப்படுகிறது. வங்கியின் ‘லாக்கர்’ கள் போல், கொழுப்புச்சத்து தோலின் இந்த அடுக்கில் சேமித்து வைக்கப்படுகிறது. கொழுப்பு அடுக்கின் பருமன் கண் இமைகளில் குறைவாகவும், அடிவயிறு, பிட்டம் இவற்றில் அதிகமாகவும் இருக்கும்.

No comments:

Post a Comment