Tuesday, February 26, 2013

வியர்வை நாற்றம் விலகிட

நறுமணம் கமழும் மலர்கள், மழை பெய்தவுடன் ஏற்படும் மண்வாசனை, காதல் மனைவியிடமிருந்து வரும் மிதமான, இதமான வாசனை இவற்றை விரும்பாதவர்கள் யார் சந்தனத்தின் சொக்க வைக்கும் மணத்தால் தான் அது விலை உயர்ந்த பொருளாகி விட்டது. அதுவும் ஆண் பெண் உறவில் இருவரும் சுத்தமான, நறுமணத்தோடு இருந்தால் அவர்களின் உறவு சிறப்பாகும். வியர்வை துர்நாற்றத்துடன் ஒருவரை ஒருவர் நெருங்கினால் வெறுப்பு தான் உண்டாகும். இதனால் தான் வாசனை திரவியங்களை தயாரிக்கும் தொழில் உலகெங்கும் பெருகிவிட்டது.
வியர்வையை சுரப்பது தோலின் அடியில் உள்ள நாளமுள்ள வியர்வை சுரப்பிகள். நாளங்கள் குழாய்கள் மூலம் வியர்வை தோலின் மேற்புறத்துக்கு னுப்பப்படுகிறது. வியர்ப்பதினால் தான் நமது உடலை குளிர்ச்சியாக வைக்கப்படுகிறது. உடலின் உஷ்ண நிலையை, கட்டுப்பாட்டில் வைக்க, உடற் சூடு வெளியேற வியர்வை உதவுகிறது. வியர்வை சுரப்பிகள் கிட்டத்தட்ட உடல் முழுவதும் இருந்தாலும், அதிகமாக, அக்குள், தொடையும் அடிவயிறும் சேரும் பகுதியிலும் இருக்கும். இந்த இடங்களிலும், முடி நிறைந்த பகுதிகளிலும் உள்ள வேர்வை சுரப்பிகள் அபோகிரின் எனப்படுகின்றன. ஆண், பெண் பருவமடைந்த பின் இந்த சுரப்பி தனது செயல்பாட்டை துவக்கும். அபோகிரினைத் தவிர உடலெங்கும் உள்ள வியர்வை சுரப்பிகள் எக்ரின் எனப்படும். இவை உள்ளங்கை, கால் பாதங்கள் அதிகமாக குவிந்திருக்கும். வியர்வை என்பது பெரும்பாலும் தண்ணீரும், உப்பு,), சில ரசாயன பொருட்கள் கலந்த திரவம்.
ஆண்களை விட பெண்களுக்குத் தான் அதிகமான எண்ணிக்கையில் வியர்வைச் சுரப்பிகள் உள்ளன. ஆனால் ஆண்கள் அதிக உடல் உழைப்பு செய்வதாலும் அதிகம் வெயிலில் சென்று வருவதாலும் ஆண்களுக்கே அதிக வியர்வை வெளியேறுகின்றது.
வியர்வை என்பது நாற்றம் எதுவும் இல்லாத ஒரு வகை திரவமேயாகும். வியர்வைக்கென்று எந்த வகை மணமும் கிடையாது. என்று சொல்லலாம். நம்புவது கடினமாகத்தான் இருக்கும். ஆனால் அது தான் உண்மை.
வியர்வை உடலை விட்டு வெளியே வந்தவுடன் உடலின் மேற்பரப்பில் உள்ள பாக்டீரியா போன்ற நுண்கிருமிகளும் சேர்ந்தும், உடலின் தூசு அழுக்கு போன்றவற்றுடனும் எண்ணெய்ப் பசையுடனும் சேர்ந்து நாற்றத்தை ஏற்படுத்துகின்றது. சிலருக்கும் அதிகமாக வியர்த்துக் கொட்டும்.
அதிகமாக வியர்க்க சில காரணங்கள்
உடல்பயிற்சி
மதுப்பழக்கம்
மன அழுத்தம்
டென்ஷன்
பதற்றம்
அதிக உடல் உழைப்பு
ரத்தத்தில் குறைவான சர்க்கரை அளவு
காப்பி குடித்தவுடன்
பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் பொழுது
அதிக வியர்வையை தடுக்க
நன்றாக சோப்பு போட்டு குளியுங்கள் குளித்தவுடன் ஒரு துணியால் நன்றாக ஒத்தி எடுங்கள். ஈரப்பசை இல்லாமல் ஒத்தி எடுத்த பின்னர் டால்கம் பவுடர் போடுங்கள். வியர்வை அதிகமாக சுரக்கும் இடங்களில் சற்று அதிகமான டால்கம் பவுடர் போடுங்கள். தேவைப்படுவோரும் வசதிபடைத்தோரும் தரமான நிறுவனங்களின் டியோடரன்ட்களையும் உபயோகிக்கலாம்.
வியர்வையைக் கட்டுப்படுத்த மற்றோர் எளிய வழி உள்ளாடைகளைத் தேர்வு செய்வது. பருத்தியாலான மெல்லிய உள்ளாடைகளைத் தேர்வு செய்தால் உடலில் ஏற்படும் வியர்வை பாக்டீரியாக்களுடன் கலந்து நாற்றத்தை உண்டாக்குவதற்கு முன்பாக உள்ளாடைகள் உறிஞ்சிக் கொள்ளும். எளிதாக உலர்ந்து விடும்.
கீழ்க்கண்டவாறு வியர்த்தால் மருத்துவரை அணுக வேண்டும்
அதிக வியர்வையுடன் மார்புப் பகுதியில் வலி
தூங்கும் பொழுது அடிக்கடி வியர்த்தல்
அடிக்கடி வியர்த்து உடல் எடை குறைதல்
நீண்ட நாட்களாக எந்தக் காரணமும் இல்லாமல் வியர்த்துக் கொட்டுவது.
உள்ளங்கை உள்ளங்கால் வியர்ப்பவர்கள் அடிக்கடி கை கால்களை
குளிர்ந்த நீரில் கழுவிக் கொண்டேயிருந்தால் வியர்பதை தவிர்க்கலாம். பதட்டமில்லாமல் நிதானமாக இருப்பதனாலும் வியர்வையைத் தவிர்க்கலாம்.
வியர்வையால் ஏற்படும் வேர்க்குரு
சர்மத்தில் தேங்கி விடும் வியர்வையால், அரிக்கும் வேர்க்குரு உண்டாகிறது. வெயில் காலத்தில் ஏற்படும் சர்ம பாதிப்புகளில், வியர்க்குரு ஏற்படுவது சகஜம். வெய்யிலுடன், புழுக்கமும் சேர்ந்து விடுவதால் சர்மம் பாதிப்படைகிறது. தோலின் மேல் பாகத்தில் வியர்வையை கொண்டு சேர்க்கும் குறுகிய நாளங்கள் அடைபட்டு போனால் வேர்க்குருக்கள் உண்டாகின்றன. இந்த அடைப்புக்கு பவுடர், கிரீம்கள், அழுக்கு முதலியன காரணமாகலாம். வியர்வை உறிஞ்சும் பருத்தி ஆடைகளை அணியாமல் சிந்தடிக் உடைகளை அணிவதாலும் வியர்வை சருமத்தில் தேங்கி வேர்க்குரு ஏற்படும். சிறு குழந்தைகளையும், குண்டானவர்களையும் வேர்க்குரு வரும் வாய்ப்புகள் அதிகம்.
வேர்க்குரு உடலில் தசையும் தசையும் மோதும் இடங்களில் – மார்பகங்களுக்கு கீழே, தொடைகளில், அக்குளில் – அதிகம் இருக்கும். மிகச்சிறிய பருக்களாக, சினைப்புகளாக மணல் போல் காணப்படும். சில சமயங்களில் சர்மத்தின் சில பகுதிகளில் தோல் சிவந்திருக்கும். அரிப்பு இருக்கும். எரிச்சலும் இருக்கும். சிலருக்கு பாக்டீரியா தொற்றும் கூட வரும். கட்டிகள் சீழ் பிடித்து விடும்.
வேர்க்குருவை தவிர்க்க சர்மத்தை குளிர்ச்சியாக, சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். வேர்க்குருவிற்கென்று பிரத்யேகமான பவுடர்களையும் வியர்வையை எதிர்க்கும் மருந்துகளும், பயன்படுத்தப்படுகின்றன. கோர்டிகாஸ்டீராய்ட் கிரீம்களும், பவுடர்களும் பரிந்துரைக்கப்படுகின்றன.
ஆயுர்வேத வீட்டு வைத்தியம்
நிறைய மோர் குடிக்கவும். உடல் குளிர்ச்சியடையும்.
இளநீர் வெறும் வயிற்றில் குடித்தால் நல்லது.
திராட்சைப்பழம், அதன் பழச்சாறும் 200 மி.லி. அளவில் தினமும் உட்கொள்ளவும்.
தனியா கஷாயத்தை குளிர்வித்து 50 மி.லி. அளவில் தினம் இருவேளை குடிக்கவும்.
சந்தனாதி தைலத்தை தடவலாம்.
தினமும் குளிக்கவும்.
அதிக வியர்வையை குறைக்க உதவும் மூலிகைகள்
சேஜ்- சில இந்திய தோட்டங்களில் பயிரிடப்படும் இந்த மூலிகை வியர்வை சுரப்பிகளை சமனப்படுத்துகிறது. சாப்பிட்ட 2 மணி நேரத்தில் வியர்வை குறையும். கிட்டத்தட்ட 20 இலைகளை எடுத்து, 2 டம்ளர் தண்ணீருடன் சேர்த்து கொதிக்க விடவும். பிறகு சிறிய தீயால் 5 நிமிடம் மிதமாக கொதிக்க விடவும். வடிகட்டி தினமும் மாலையில் குடிக்கவும்.
சேஜ், குதிரை வால் மற்றும் வேலரீயன்- 25 சேஜ் இலைகள், ஒரு மேஜைக்கரண்டி குதிரைவாலும் வேலரியன் வேரையும் கலந்து ஒரு மேஜைக்கரண்டி எடுத்து கொதிக்க வைக்கவும். வடிகட்டி குடிக்கவும்.
ரோஜா (அ) ஆரஞ்சு தைலங்களை குளிக்கும் தண்ணீரில் சில சொட்டுக்கள் இட்டு குளித்தால் வியர்வை நாற்றம் போகும்.
வெறும் வயிற்றில் 50 மி.கி. கோதுமைப்புல்லை தண்ணீருடன் சாப்பிடவும்.

No comments:

Post a Comment