20 ம் நூற்றாண்டின் சிறந்த மருத்துவ சிந்தனையாளர்களில் ஒருவர் சிக்மண்ட் ஃப்ராய்ட் (Sigmund Freud). மூளை, நரம்புக் கோளாறுக்களுக்கான காரணங்களை கண்டுபிடிக்க மனத்தைப் பற்றிய Psycho Analysis எனப்படும் ஆராய்ச்சியின் ‘தந்தை’ எனப்படுகிறார் ஃப்ராய்ட். இவர் வாழ்ந்த வருடங்கள் – 1856 லிருந்து 1939 வரை. பெரிய குடும்பத்தில், ஆஸ்திரியாவில் பிறந்தவர். மருத்துவ படிப்பு படித்தவர். ஒரு மனிதனின் தனிப்பட்ட குணம் (Personality) மற்றும் பாலியல் கோளாறால் ஏற்படும் நரம்பு மண்டல வியாதிகளை பற்றிய ஃப்ராய்டின் வார்த்தைகள் – ஈடிபஸ் காம்ப்ளெக்ஸ் (Oedipus Complex), பாலியல் வேட்கை / பாலுணர்வு தூண்டுதல் (Libido), அடக்குதல் (உணர்வை), (Repression), மரண ஆசை (Death Wish) – இன்றும் பயன்படுத்தப்படுகின்றன.
மனோ ரீதியான விஷயங்களில் ஃப்ராய்டின் கருத்துக்களை விவரிக்க தனிப்புத்தகம் தேவை! இங்கு அவருடைய “செக்ஸ்” பற்றிய கருத்துக்களை மட்டும் சுருக்கமாக பார்ப்போம்.
பாலுணர்வு தான் மிக முக்கியமான “தூண்டுதல்” சக்தி என்கிறார் ஃப்ராய்ட். பருவமடைந்த மனிதர்களுக்கு மட்டுமல்ல, பிறந்த குழந்தைக்கு கூட ‘செக்ஸ்’ தான் க்ரியா ஊக்கி. செக்ஸ் என்றால் உடலுறவு, உச்சக்கட்டம் அடைதல் என்பதல்ல. தொடும் உணர்வினால் ஏற்படும் சுகமும் செக்ஸ் தான். குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதும், ஒரு செக்ஸ் உணர்வு தான் அதனால் குழந்தை கையில் கிடைப்பதெல்லாம் வாயில் போட்டுக் கொள்ளும். வளரும் குழந்தைகள் தங்கள் பிறவி உறுப்புகளை தொட்டால் பிடித்திருப்பதை அறிவார்கள். சுய இன்பம் அடைவது சகஜம். எல்லாவித நம்பிக்கையான, “பாசிடிவ்” செயல்கள், க்ரியேடிவ் (Creative) செயல்கள் இவையெல்லாமே செக்ஸ் உந்துதல் தான். பல் முளைத்த குழந்தைகள் ‘கடித்து’ விடும் என்பதால் தாய்ப்பால் கொடுப்பது நிறுத்தப்பட்டால், அந்த குழந்தைகள் வளர்ந்த பின்னும், பென்சில், ரப்பர், ஏன் பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைஸன் போல் எதிராளியுடன் காதையும் கடித்து விடுவார்கள்! இவர்கள் எதற்கெடுத்தாலும் வாதம் செய்வது, சண்டை போடும் முரட்டுத்தனம், கேலி, கிண்டல் இவற்றைப் போன்ற குணமுடையவர்களாக இருப்பார்கள். தாய்மார்கள் குழந்தைகளுக்கு ‘டாய்லெட் ட்ரெயினிங்’ (மல ஜலம் ஒழுங்கான இடத்தில் கழிப்பதற்கு) கொடுக்க. குழந்தைகளை கொஞ்சி கூத்தாடுவார்கள். இந்த குழந்தைகள், முரடாக, ஓழுங்குமுறை இல்லாமல் கவனக்குறைவாக வேலைகளை செய்வார்கள். கொடூரமாக, அழிக்கும் தன்மை உடையவர்களாக மாறலாம். சில பெற்றோர், டாய்லெட் பயிற்சிக்காக குழந்தைகள் அடித்து தண்டிப்பார்கள். மற்றவர் முன்னிலையில் அவமானப்படுத்துவார்கள். இதனால் குழந்தைக்கு மலச்சிக்கல் ஏற்படும். இவர்கள் வளர்ந்த பின், கருமியாக, ஓவர் சுத்தமாக, பிடிவாத குணம் உடையவர்களாக இருப்பார்கள்.
செக்ஸ் என்றாலே சிலர் பயப்படுவதின் காரணம் – குழந்தைப் பருவத்தில் தாயால் ஒதுக்கப்பட்டு, வலுவான தந்தையால் கண்டிக்கப்படுவது. இதனால் இந்த மாதிரி வளர்க்கப்பட்ட மனிதர்களுக்கு தன்னம்பிக்கை இல்லாமல் போய்விடும். செக்ஸில் ஈடுபட பயந்து வேறு வேலைகளில் ஈடுபடுவார்கள். பெண் குழந்தைகளும் இதே நிலைக்கு ஆளாகலாம்.
இவை தவிர ஃப்ராய்ட் ஈடிபஸ் காம்ப்ளெக்ஸ், அதனால் தோன்றும் “என் ஆண் உறுப்பை” இழந்து விடுவேனா என்ற பயம் மற்றும் பெண்களுக்கு ஆணுறுப்பின் மீது பொறாமை போன்ற கருத்துக்களை சொல்லியிருக்கிறார். ஆனால் இவைகளை மனோதத்துவ நிபுணர்களில் பாதிப் பேர்கள் ஒப்புக்கொள்வதில்லை.
ஈடிபஸ் (Oedipus) காம்ப்ளெக்ஸ் (Complex)
கிரேக்க இதிகாசங்களில் ஈடிபஸ் கதையும் ஒன்று லாயிஸ் (Lais) அரசருக்கும் ஜொகாஸ்டா ராணிக்கும் பிறந்தவன் ஈடிபஸ், “அசரீரி” எனும் தேவ வாக்கை (ஜோதிடம்) ராஜாவும் ராணியும் குழந்தை பற்றி ‘குறி’ கேட்க, இந்த குழந்தை தந்தையை கொன்று, தாயை மணப்பான் என்றது அசரீரி. இதனால் அரசன், குழந்தையின் காலை துளைத்து, நிர்க்கதியாக விட்டு சென்று விடுகிறார். குழந்தையை ஆட்டிடையன் ஒருவன் எடுத்து பாலிபஸ் (Polybus) அரசரிடம் சேர்க்க, ஈடிபஸ் அங்கே வளருகிறான். பல வருடங்களுக்கு பிறகு ஈடிபஸ், பாலிபஸ் ராஜாவும், ராணியும் தனது உண்மையான பெற்றோர்களல்ல என்பதையும் தன்னைப் பற்றி ‘அசரீரி’ கூறியதையும் தெரிந்து கொள்கிறான். அசரீரியின் வாக்கை தவிர்க்க, தனது இருப்பிடமான கோரிந்தை (Corinth) விட்டு தெபெஸ் செல்கிறான். வழியில் எதிரில் ஒரு ரதத்தில் வருபவருக்கு ஈடிபஸ்ஸீக்கும், யார் வழி விடுவது என்ற சண்டை உண்டாகி, ரதத்தில் வந்தவரை ஈடிபஸ் கொன்று விடுகிறான். ரதத்தில் வந்தவர் ஈடிபஸ்ஸின் தந்தை லையிஸ் தான். தனது பயணத்தை தொடர்ந்த ஈடிபஸ் வழியில் “ஸ்பிங்ஸ்” (Sphinx) எனும் பெண்முகமும், சிங்க உடலும், இறக்கைகளும் உள்ள கொடிய இராட்சச பிராணியிடம் மாட்டிக் கொள்கிறார். அந்த பிராணி எல்லா வழிப் போக்கர்களிடம் விடுகதை ஒன்று சொல்லும். பதில் தெரியாவிட்டால் அவர்களை கொன்று தின்றுவிடும். அந்த விடுகதை “காலையில் நான்கு கால்களாலும், மத்தியானம் இரண்டு கால்களாலும், இரவில் மூன்று கால்களாலும் நடக்கும் பிராணி எது” என்பது. அதற்கு ஈடிபஸ் பதில் சொல்கிறான். விடை மனிதன் குழந்தையாக நான்கு கால்களால் (கைகளை சேர்த்து) தவழ்கிறான். வாலிபனாக இரண்டு கால்களில் நடப்பான், வயோதிகத்தில் கைத்தடியையும் சேர்த்து 3 கால்களால் நடக்கிறான். இந்த சரியான பதிலால் ஸ்பிங்ஸ் மடிய, தெபெஸ் ஜனங்கள் மகிழ்ந்து ஈடிபஸ்ஸை அரசனாக்கி, ஜகோஸ்டாவை அவனுக்கு ராணியாக திருமணமும் செய்து வைக்கின்றனர். அவர்களுக்கு 4 குழந்தைகளும் பிறக்கின்றன. பல வருடங்கள் கடந்த பின் தெபெஸ் நகரத்தில் ‘ப்ளேக்’ (Plague) நோய் தாக்குகிறது, ஈடிபஸ் அதைப்பற்றி கேட்க அசரீரியை அணுக, அரசர் லையிஸ்ஸை கொன்றவனை கண்டுபிடித்து தண்டித்தால் ‘ப்ளேக்’ நோய் மறையும் என்று தெரிவிக்கிறது. இதற்காக இன்னொரு குருட்டு தீர்க்கதரிசி திரேசியாஸை அணுக அவளால் எல்லா உண்மைகளையும் ஈடிபஸ் தெரிந்து கொள்கிறான். ஜகோஸ்டாவுக்கும் ஈடிபஸ் தனது மகன் என்று தெரிய வர, அவள் தூக்கு போட்டுக் கொள்கிறாள். அவளுடைய உடையிலிருந்து எடுத்த “ப்ரூச்சால்” (Brooch) தன் கண்களை நோண்டி எடுத்து விட்டு ஈடிபஸ் ஊர் ஊராக திரிந்து இறக்கிறான்.
இந்த கதையில் அடிப்படையில் தான் ஃப்ராய்ட், ஒரு மனோவியாதிக்கு ஈடிபஸ் காம்ப்ளக்ஸ் என்று பெயரிட்டார்.
நாம் அனைவருக்கும் முதல் “காதல்” நமது தாயார் மீது தான். அன்னையின் அரவணைப்பு, ஸ்பரிசம் இவற்றை நாம் விரும்புகிறோம். இது ஒரு வகை பாலுணர்வு தான். சிறுவனுக்கு அம்மாவின் பூரண கவனம் கிடைக்க முடியாமல் தடுக்கும் வில்லன் யார்? அப்பா தான். அப்பா தான் எதிரி.
இந்த கருத்தை நாம் நடைமுறையில், பல தமிழ் சினிமாக்களில் பார்த்திருக்கிறோம். பெண் குழந்தைகளுக்கு அப்பாவையும், ஆண் குழந்தைகளுக்கு அம்மாவை பிடித்திருப்பதை கண் கூடாக பார்க்கிறோம் பல விளம்பரங்கள் “செக்ஸ்” ஸை காட்டிதான் தங்கள் பொருட்களை விளம்பரம் செய்கின்றன. கவர்ச்சி காட்சிகள் இல்லாத சினிமா அதிக நாள் ஒடுவது கடினம். நம்மைச் சுற்றி எங்கு பார்த்தாலும் “செக்ஸ்” கவர்ச்சியை தான் காண்கிறோம். ஃப்ராய்ட் சொன்னது சரிதான் என்று தோன்றுகிறது. இதனால் ஆண்களுக்கு விரைகள் எடுக்கப்பட்டு வீரியத்தை இழப்பபோமோ என்ற பயமும், பெண்களுக்கு ஆணுறுப்பு போல் நமக்கு இல்லையே என்ற கவலையும் ஏற்படும் என்கிறார் ஃப்ராய்ட். இதனால் பாலியல் செயல்பாட்டில் குறைகள் ஏற்படுகின்றன. புகைபிடிக்கும் பழக்கம், சூதாடுவது, லாகிரி வஸ்துக்களை உபயோகிப்பது போன்ற பழக்கங்கள், சுய இன்பத்திற்கு (Masturbation) மாற்று தான் என்றார் ஃப்ராய்ட்.
ஃபிராய்டின் கொள்கைகளை உலகின் பாதி மனோதத்துவ நிபுணர்கள், டாக்டர்கள் எதிர்க்கின்றனர். மீதி பாதி, ஃப்ராய்டின் கருத்துக்களை ஆமோதிக்கின்றனர். இப்போது பரவி வரும் பாலியல் குறைபாடுகளின் முக்கிய காரணம் மனோ ரீதியான கோளாறுகள் தான். உடல் ரீதியாக அல்ல. இந்த மன குறைபாடுகளை போக்க சிகிச்சைகள் தேவை. ஓரளவாவது மனோரீதியின் காரணங்களை நீங்கள் தெரிந்து கொண்டால், டாக்டரிடம் சிறு வயதிலிருந்து உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாலியல் அனுபவங்களை ஒளிக்காமல் கூற இயலும். அந்த நோக்கத்துடன் மேற்கண்ட விஷயங்கள் கூறப்பட்டன.
உங்களுக்கு சிறு வயதில் அசம்பாவிதம் நேர்ந்திருந்தால், அந்த சம்பவம், நீங்கள் அறியாமலேயே, உங்கள் மனதின் மூலையில் அடங்கி இருந்து, தீடிரென்று ஒரு பயமாகவோ வேறு விதமாகவோ வெளிவரும். இதை ஃப்ராய்ட் Repression என்றார்.
செக்ஸ் ஆசைகளை வெளிப்படாமல் அடக்கி வைக்கும் போது அது மன ஆரோக்கியத்தை பாதிக்கும். செக்ஸ் உணர்ச்சி தான் மனித வாழ்வின் ஆதார சுருதி. மனிதனின் செயல்கள் அனைத்திற்கும் பாலியல் உணர்வே காரணம் என்கிறார் ஃபிராய்ட்.
No comments:
Post a Comment