Tuesday, February 26, 2013

கார் கூந்தல் பெண்ணழகு

நீண்ட கருமையான கூந்தல் பெண்களின் சாமுத்ரிகா லட்சணங்களில் ஒன்று. முக பொலிவுக்கு அழகை கூட்டுவது கூந்தல். அடர்த்தியான, சுருட்டையான, கூந்தலை அடைவதில் எல்லா பெண்களுக்கும் ஆசை.

கண்ணுக்கு மையழகு
கவிதைக்கு பொய்யழகு
கன்னத்தில் குழியழகு
கார் கூந்தல் பெண்ணழகு

பெண் என்றாலே அழகு என்று தமிழ் இலக்கியங்களிலும், காவியங்களிலும் சொல்லப்பட்டுள்ளது. இலக்கியவாதிகளானாலும், கவிஞர்கள் ஆனாலும் பெண்ணை வர்ணிக்கும் போது, “நீண்ட நெடிய கருங்கூந்தலை உடைய பெண்ணே! என்று கூறுகிறார்கள். பெண்ணின் கண்களையும், இடையினையும் வர்ணித்து கவிகளும், காவியங்களும் புனையப்பட்டிருந்தாலும் எல்லாவற்றிற்கும் மேலாக பெண்ணின் கூந்தலையே முதன்மையாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

காரணம் ஒரு பெண்ணிற்கு அழகு என்பது அவளின் கூந்தலை பொறுத்தே அமைகிறது. ஏனெனில், நீண்ட நெடுங்கரிய நிற கூந்தலைக் கொண்ட பெண்ணே, மற்ற மங்கையர்களிடத்து வேறுபட்டு நிற்கிறாள்.

பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் இளநரை, வழுக்கை இவற்றை தவிர்க்கவே விரும்புகிறார்கள். வழுக்கை வயதானதின் அறிகுறி என்று ஆண்கள் கருதுவதால் அதற்கான வழிமுறைகளை தேடுவதில் ஆர்வமாக முனைகிறார்கள். முன்பெல்லாம் தலைக்கு சாயம் அடித்துக் கொள்வதற்கு ஆண், பெண் இருவரும் வெட்கப்படுவார்கள். இப்போது சர்வ சாதரணமாக ஆகிவிட்டது.

ஆனால், நம் பெண்களிடத்தில் எத்தனை பேர்களுக்கு நீண்ட, அழகான, கருமையான கூந்தல் உள்ளது? இல்லை, அது மிக அரிதாகி விட்டது. காரணம் இன்றைய நாகரீக உலகில் கேச பராமரிப்பு பற்றிய ஒரு விழிப்புணர்ச்சி இல்லாததே ஆகும். அல்லது தவறான கூந்தல் பராமரிப்பு என்பதாகும்.

இயற்கையாகவே பல பெண்கள் நீண்ட அடர்ந்த கருங்கூந்தலை பேணி பாதுகாப்பது என்பது ஒரு அன்றாட பிரச்சனையாகவே விஸ்வரூபம் எடுத்து மனநலத்தையும் உடல் நலத்தையும் பாதிக்கின்றது. கூந்தல் பராமரிப்பிற்கு பாரம்பரிய இயற்கை மூலிகைகளையே பெரிதும் உலகெங்கும் பயன்படுத்துகின்றனர். மூலிகைகளால் பராமரிப்பதுவே சிறந்தது எனவும் பாதுகாப்பானது எனவும் பக்க விளைவுகள் இல்லாதது எனவும் பல நூற்றாண்டுகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. தற்காலத்தில் மூலிகைகளே சிறந்தவை என கருதப்படுகிறது. இவற்றை இள வயது பெண்களும் நடுவயது பெண்களும் பாதுகாப்பாக பயன்படுத்தலாம். இவைகளால் தீமையான பக்க விளைவுகள் எதுவும் ஏற்படுவதில்லை. இவற்றை ஒன்றிரண்டு முறை மட்டும் பயன்படுத்திவிட்டு பயனளிக்கவில்லை என விட்டுவிடக் கூடாது முழு நம்பிக்கையுடன் இவற்றை தினந்தோறும் பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் தெரியும் என்பதில் சிறிதளவும் சந்தேகம் தேவையில்லை.

No comments:

Post a Comment