Monday, December 31, 2012

சரஸ்வதி 20-20


மயிலாடுதுறையிலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள கூத்தனூரில் தனிக்கோயில் கொண்டருளும் சரஸ்வதி, பிறவியிலேயே பேச்சிழந்த, புருஷோத்தமன் எனும் பக்தரைப் பேச வைத்து கவிஞனாக்கியவள்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள சிருங்கேரியில் சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி வடிவில் ஜபமாலை ஏந்தி சாரதாதேவியாக அருட்கோலம் காட்டுகிறாள். மதுரை மீனாட்சி அம்மன் ஆலய தூண் ஒன்றில் இடக்காலை ஊன்றி வலக்காலை முன்வைத்த நிலையில் வீணை வாசிக்கும் தோன்றத்தில் தோளில் கிளியுடன் தரிசனம் அளிக்கிறாள், சரஸ்வதி.

கம்பர் வழிபட்ட சரஸ்வதி தேவி பத்மநாபபுரம் கோட்டையினுள் தரிசனம் தருகிறாள். நவராத்திரியின் போது இவள் திருவனந்தபுரம் எழுந்தருளி விழாக்கண்டு பின் திரும்புவது நடைமுறையில் உள்ளது.

திருமறைக்காடு எனும் வேதாரண்யத்தில் கலைகளின் வடிவாய் எழுந்தருளி வேத சரஸ்வதி எனும் பெயரில் வீணை இல்லாமல் தரிசனமளிக்கிறாள்.

சப்தஸ்தானங்களில் ஒன்றான திருநெய்த்தானத்தில் உள்ள இருதயபுரீஸ்வரரை சரஸ்வதி தேவி பூஜித்து பேறு பெற்றிருக்கிறாள். இங்குள்ள தீர்த்தம் சரஸ்வதி தீர்த்தம் எனப் போற்றப்படுகிறது.

தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தின் தென்புற வாயிலில் மேற்கு திசை நோக்கி பத்மாசனத்தில் அமர்ந்த தவக்கோல சரஸ்வதியை தரிசிக்கலாம். தேவியின் பின்னால், தோழிகள் வெண்சாமரம் வீசி பணிவிடை புரிகிறார்கள்.

கங்கை கொண்ட சோழபுரம், வடக்குக் கோயிலின் மாடத்தில் மேற்கு நோக்கி நான்கு திருக்கரங்களுடன் பத்மாசனத்தில் அருளும் ஞான சரஸ்வதியின் திருக்கோலத்தை தரிசிக்கலாம்.

வேலூர், தோட்டபாளையம் தாரகேசுவரர் ஆலயத்தில் கோஷ்ட தெய்வமான பிரம்மாவிற்கு நேர் எதிரில் சரஸ்வதி தேவி திருவருள் புரிகிறாள்.

தஞ்சை, திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் ஆலயத்தில் கருவறை கோஷ்ட தேவதையாய் ஊரு முத்திரையுடன் சரஸ்வதி அருள்கிறாள்.

திருநெல்வேலி கீழமாடவீதியில், கோமதி அம்மன் சந்நதிக்கு எதிரே சரஸ்வதிக்கென தனிக் கோயில் உள்ளது. புதன்கிழமைகளில் இவளை அர்ச்சனை செய்து
வணங்க கல்விவளம் பெருகும்.

ராமேஸ்வரம் ராமநாதர் ஆலயத்தில் பத்ரபீடத்தில் அமர்ந்த அலங்கார ரூபிணியாக கலைவாணியை தரிசிக்கலாம்.

காஞ்சிபுரத்தில் உள்ள கச்சபேஸ்வரர் ஆலயத்தில் ச்யாமளாதேவி எனும் பெயரில் சரஸ்வதியை தரிசிக்கலாம். கார்த்திகை ஞாயிறன்று நடைபெறும் நிகழ்ச்சி மண்டைவிளக்கு விழா எனப்படுகிறது.

நாகை, கடலங்குடி கிராமத்தில் உள்ள திருமேனியார் ஆலயத்தில் காண்போர் கண்களைக் கவரும் எழிலார்ந்த சரஸ்வதியின் திருவுருவை தரிசிக்கலாம்.

உத்திரமேரூர் சுந்தரவரதராஜப் பெருமாள் ஆலயத்தில் கஜலட்சுமி தோற்றத்தில் கையில் கலசம், அக்கமாலை, புத்தகம், அபயஹஸ்தம் தாங்கிய சரஸ்வதி வீற்றருள்கிறாள்.

திருவையாறு-தஞ்சாவூர் பாதையில், அட்டவீரட்டத்தலங்களுள் ஒன்றான திருக்கண்டியூரில் தன் நாயகன் பிரம்மனுடன் சரஸ்வதி தேவி அருள்புரிகிறாள்.

ஹைதராபாத், மகபூப் மாவட்டம், அலம்பூர் கோட்டைக்குள் பால, குமார, அர்க்க, வீர, விஸ்வ, தாரகா, கருட, சுவர்க்க, பத்ம எனும் ஒன்பது பிரம்மாக்களுடன் சரஸ்வதி தேவி சந்நதி கொண்டருள்கிறாள்.

ஆந்திரம், அடில்லாபாத்£வட்டத்தில் உள்ள மதோலே தாலுக்காவில் பாஸ்ரா எனும் இடத்தில் சரஸ்வதி தனிக்கோயில் கொண்டு வரப்ரசாதியாய் அருள்கிறாள்.

கேரளா மாநிலம் கோட்டயத்திலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ள பனச்சிக்காட்டில் சுயம்பு சரஸ்வதி தேவியை தரிசிக்கலாம். கல்வி வரம் தருவதில் நிகரற்ற
இந்த அன்னையை விஜயதசமி அன்று தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

மைசூர் நாகமங்கலம் தாலுக்காவில் பஸ்ராலு எனும் இடத்தில் உள்ள மல்லிகார்ஜுனேஸ்வரர் ஆலயத்தின் அழகே உருவாய் ஞான சரஸ்வதியை தரிசிக்கலாம்.

No comments:

Post a Comment