சகல புவனங்களையும் நடத்தும் புவனேஸ்வரி தசமகா வித்யாவில் நான்காம் வடிவம் கொண்ட தேவதை. பரம்பொருளின் ஞான சக்தியாக திகழ்கிறாள். உதய சூரியனைப்போல் பிரகாசிப்பவள். சந்திரப்பிறை ஒளிரும் கிரீடமணிந்தவள். பாசம் ஏந்திய கரத்துடன் விளங்குகிறாள். பயம் வந்தால் போக்க அபய முத்திரையில் அறிவிக்கிறாள். எல்லா தேவர்களுக்கும் வரம் கொடுக்கும் சக்தியளித்தவள் புவனேஸ்வரி.
பாலா திரிபுர சுந்தரி
லலிதா பரமேஸ்வரியின் விளையாட்டின் ரூபமாக பண்டாசர வதத்தின்போது தோன்றியவள் பாலாதேவி. லலிதையின் அங்கத்திலிருந்து தோன்றியவள். ஒன்பது வயது தோற்றத்தோடு கூடியதால் பாலா திரிபுரசுந்தரி என்றழைக்கப்பட்டார். சகல நலன்களையும் தருபவள். எல்லாம் வல்ல இறைவியான பாலாவின் தாள் பணிந்து தடைகளைத் தகர்த்து வாழ்வில் வளம் பெறுவோம்.
தூமா தேவி
தசமஹாவத்யைகளில் ஏழாவது வித்யையாக பிரகாசிப்பவள் தூமாதேவி. கருத்த நிறம் கொண்டவள். மயானத்தில் வாசம் செய்வதில் பிரியமுள்ளவள். விதவைக் கோலத்தில் காணப்படுகிறாள். காமம், குரோதம், அகங்காரத்தை போக்கி மகிழ்ச்சியை தந்து அருள்கிறாள். வயோதிகத்திலும் பேரருளும், பேரின்பமும் உண்டு என்பதை உணர்த்துகிறாள்.
பகளாமூகி
லலிதா பரமேஸ்வரியான சேனாதிபதியான இவளுக்கு தண்ட நாதா, தண்டினி என்ற பெயர்கள் உண்டு. திருவானைக்காலில் அகிலாண்டேஸ்வரியாக அருள்பவள். ஒரு கையால் எதிரியின் நாக்கைப் பிடித்துக் கொண்டும் மற்றொரு கையால் கதாயுதமும் தரித்தவள். அசுரர்களைஅழிக்க முருகனுக்கு, பரமன் ‘ப்ரஹ்மாஸ்த்திரம்‘ என வழங்கப்படும் பகளா முகீ மந்திரத்தை அருளினார்.
திரிபுரபைரவி
தஸமகாவித்யையின் ஐந்தாம் வடிவம் திரிபுரதேவி. இவள் அருள் பெற்றால் எல்லாம் கிடைக்கும். மண்டை ஓட்டு மாலையை தரித்துள்ளதால் பக்தர்களின் மரண பயம் நீங்கும். ஜாத வேதஸே எனும் வேத மந்திரத்தினால் இவளைத் துதிக்க நிவாரணமும், தனலாபமும் கிட்டும்.
சின்ன மஸ்தா
தசமஹா வித்யைகளில் ஆறாவது தேவியாக அருட்பாலிக்கிறாள் சின்ன மஸ்தா. சூர்ய மண்டலத்தின் ஒளியைப் பழிக்கும் தேக காந்தியையுடையவள். ஆறாவதாக அருள்வதால் ஷஷ்டி தேவி எனவும் வழிபடுவர். இத்தேவி ஒரு கையில் வெட்டப்பட்ட தன் தலையையே தாங்கிய கோலத்துடன் உள்ளாள்.
தாராதேவி
பத்தாக பிரகாசிக்கும் தேவியரில் இரண்டாவதாக பொலிபவள் தாராதேவி. பக்தர்களை சம்சாரம் எனும் கடலில் மூழ்காமல் காத்து முக்தியை அருள்வாள். நரக
சதுர்த்தசி அன்று காளி, தாரா வழிபாட்டால் பல மடங்கு பலன் கிடைக்கும். வாக்கு வல்லமை, அளவற்ற செல்வம், தந்து, ஞானமும், முக்தியும் கிட்டச் செய்யும் தேவி இவள்.
கமலாத்மிகா
அகில அண்டங்களை படைத்தவள் பராசக்தி. அவளை தசமஹாவித்யாவில் கமலாத்மிகா வித்யையாக பத்தாவது வடிவில் வழிபடுகின்றனர். மண்ணிலிருந்து சீதையாகவும், தீயிலிருந்து தடாகையாகவும், தாமரையிலிருந்து பார்கவியாகவும் அவதரித்த தேவி பாற்கடலைக் கடைந்தபோது திருமகளாய் நின்றாள். லக்ஷ்மி, ஸ்ரீ கமலா, கமலாலயா, பத்மா, ரமா, நளினீ, யுக்மகரா எனும் நாமங்களால் துதிக்கப்படுகிறார்.
திதி நித்யா தேவிகள்
பராசக்தியின் லீலைகளை ஆயிரம் திருநாமங்கள் கொண்டு அற்புதமாக விளக்கியிருக்கிறார்கள். பரமேஸ்வரியை ஸ்ரீசக்ர ரூபத்தில் வழிபடும் முறை ‘ஸ்ரீவித்யை‘ எனப் போற்றப்படுகிறது. அந்த தேவியின் அம்ருத கலைகள், பதினைந்து பாகங்களாகப் பிரிந்து ஒவ்வொரு கலையும் ஒவ்வொரு தேவியாக உருவம் பெற்று பதினைந்து நித்யா தேவிகளாக தேவியைச் சுற்றி கொலுவீற்றுள்ளனர்.
No comments:
Post a Comment