Monday, December 31, 2012

மனித உரிமை காக்கும் மார்க்கம்..!


 

மனித உரிமைகள் பற்றி அதிகமாகப் பேசப்படும் காலம் இது. மாக்ன கார்ட்டா என்று புகழப்படும் மனித உரிமை அறிக்கை 1212ல்தான் உருவாக்கப் பட்டது. மனித உரிமைகளுக்கான பிரெஞ்சு சட்டம் 1789லும் மனித உரிமைகளுக்கான அமெரிக்க மசோதா, அதே 1789லும் ஜெனீவா ஒப்பந்தம் 1864 லும்தான் நடைமுறைக்கு வந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பிரகடனம் 1948ம் ஆண்டு டிசம்பர் 10ஆம் நாள்தான் அறிவிக்கப்பட்டது. அதற்குப் பிறகு உலகெங்கும் மனித உரிமை அமைப்புகளும் இயக்கங்களும் ஏராளமாகத் தோன்றி மூலைக்கு மூலை இன்று மனித உரிமை பற்றிப் பேசப்படுகிறது.

ஆனால் 1400 ஆண்டு களுக்கு முன்பு நிலைமை எப்படி இருந்திருக்கும் என்று கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். அதுவும் எந்த நாகரிக வளர்ச்சி யும் இல்லாத அரபுப் பாலைவனத்தில், ஒட்டகங்களை மேய்த்துக் கொண்டிருந்த நாடோடிக் கூட்டத்திடம் மனித உரிமைகள் மருந்துக்கும் இருந்ததில் லை.
குலங்களாகவும் கோத்திரங்களாகவும் சாதிகளாகவும் பிரிந்துகிடந்த அந்த மக்கள் கூட்டத்திடம் உயிர்களுக்கு எந்த மதிப்பும் இல்லை. போர் வெறியும் மூர்க்க குணமும் கொண்ட அவர்கள் தலைமுறை தலைமுறையாகப் பகை வளர்த்து, ஒருவரை ஒருவர் வெட்டிச் சாய்த்துக் கொண்டிருந்தார்கள். பெண் குழந்தை பிறந்தால் உயிரோடு புதைத்து விடுவார்கள். அடிமைகளான ஆண்கள் மீதும் பெண்கள் மீதும் சளைக்காமல் கொடுமைகள் புரிவர்.

வீரம், விருந்தோம்பல், நினைவாற்றல் போன்ற சில குணங்களைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் அன்றைய அரபு மக்கள் கிட்டத்தட்ட விலங்காண்டிகளாய்த் தான் வாழ்ந்து வந்தனர். இப்படிப்பட்ட மக்களுக்கிடையில்தான் இறைவனின் தூதராக நபிகள் நாயகம்(ஸல்) வருகை தந்தார். எண்ணி இருபத்து மூன்றே ஆண்டுகளில் அந்த விலங்காண்டி சமுதாயத்தை உலகமே வியக்கும் வண்ணம் மாற்றிக் காட்டினார். ஒரு காலத்தில் மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதித்த சமு தாயம் இன்று பிறரின் உரிமையைக் காக்க தன் உயிரையும் கொடுக்கத் தயாராக இருந்தது.

உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு, மனித கண்ணியப் பாதுகாப்பு, தனிமனித சுதந்திரம், கொடுங்கோன்மைக்கு எதிரான பாதுகாப்பு, கருத்துச் சுதந்திரம், பெண்ணுக்குச் சொத்துரிமை, பெண்ணுக்கு மறுமணம் புரியும் உரிமை, சமய உணர்வுகளுக்குப் பாதுகாப்பு, குழந்தைகளுக்கான உரிமை கள், வாழ்வாதார அடிப்படைகளுக்கான உரிமைகள் என்று எல்லாத் தரப்பினருக்கும் எல்லாத் துறைகளுக்கும் உரிய உரிமைகளை இஸ்லாமியத் திரு நெறி வகுத்தளித்தது.

அநியாயமாக ஓர் உயிரைக் கொல்வது மனித இனம் முழுவதையுமே கொல்வதற்குச் சமம் என்றும் ஓர் உயிரைப் பாதுகாப்பது மனித இனம் முழுவ தையும் பாதுகாத்ததற்குச் சமம் என்றும் குர்ஆன் உரிமை முழக்கம் செய்தது. ‘‘எவன் ஒருவன் நியாயமின்றி மற்றவனைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் எல்லோரையும் கொலை செய்தவன்போல் ஆவான். எவன் ஒருவன் பிறிதொரு மனிதனுக்கு வாழ்வு அளிக்கிறானோ அவன் எல்லா மனிதர்களுக்கும் வாழ்வு அளித்தவன்போல் ஆவான்.’’ (குர்ஆன் 5:32)

இறைவன் வழங்கிய இந்த மனித உரிமைகள் இஸ்லாமிய நம்பிக்கையின் பிரிக்க முடியாத கூறுகளாகும். எந்த சர்வாதிகாரிக்கும் எந்த மன்னருக்கும் எந்த ஆட்சியாளருக்கும் அவற்றை மாற்ற உரிமையில்லை. தொழுகை, நோன்பு போல மனித உரிமைகளும் மார்க்கத்தின் ஒரு பகுதியாகவே அமைந்து மனித குலத்திற்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment