Monday, December 31, 2012

மேஷ வாகனத்தில் சரஸ்வதி


நவராத்திரி கொலு வைத்த முதல் மூன்று நாட்கள் செவ்வரளி, செம்பருத்தி, செந்தாமரை மலர்களால் தேவியை அர்ச்சிக்க வேண்டும். அடுத்த மூன்று நாட்கள் தவனம், மருக்கொழுந்து, வில்வம் போன்றவற்றால் தேவியை அர்ச்சிக்க வேண்டும். கடைசி மூன்று நாட்கள் மல்லிகை, வெண்தாமரை, முல்லை போன்ற மலர்களால் தேவியை அர்ச்சிக்க வேண்டும்.

மகாலட்சுமியை காமகலா பீடேஸ்வரி எனும் ஒரிஸாவில் உள்ள பீடத்தில் சந்தானலட்சுமியாகவும், பீகாரில் உள்ள சித்தேஸ்வரி பீடத்தில் சித்தலட்சுமியாகவும், அஸ்ஸாம் மாநிலத்தில் ஆதிலட்சுமியாகவும், திரிபுராவில் சௌம்யலட்சுமியாகவும் உத்திரப்பிரதேசத்தில் உள்ள காசியில் அன்னபூரணியாகவும் கோல்ஹாபூரில் மகாலட்சுமியாகவும் வணங்குகின்றனர்.

பூரியில் உள்ள ஜகன்நாதர் ஆலயத்தில் நவராத்திரியை 16 நாட்கள் கொண்டாடுகின்றனர். இதன் பெயர் க்ஷோடஸபூஜை. ஒன்பதாம் நாளான ஆயுதபூஜையன்று ஜகன்நாதரின் சங்கு சக்கரங்களுக்கு சிறப்பு பூஜை நடைபெறும்.

ஐந்தாம் நாள் அச்வபஞ்சமி அன்று குதிரைகளுக்கு அபிஷேகம் செய்வர். அப்போது குதிரை கனைத்தால் அதிர்ஷ்டம் என நம்பப்படுகிறது. ஆறாம் நாள் கஜசஷ்டி. அன்று யானைகளை ஆற்று நீரில் நீராட்டுவர். அப்போது யானைகள் பிளிறும்.

கோவையில் உள்ள சிங்காநல்லூர் செல்லாண்டியம்மன் ஆலயத்தில் நவராத்திரி முதல்நாளன்று கலசம் வைத்து பொம்மைக்கொலுவைக்க அம்மனிடம் உத்தரவு கேட்கப்படுகிறது. உத்தரவு கிடைத்தால்தான் கொலு வைபவம் விநாயகர் பொம்மையை வைத்து தொடங்குகிறது. இல்லையெனில் அந்த வருடம் கொலு வைபவம் நடப்பதில்லை.

சரஸ்வதிக்கு மயில், அன்னம் போன்ற வாகனங்கள் உண்டு. வடநாட்டில் ஆட்டின் மீது அமர்ந்த சரஸ்வதி வடிவம் உண்டு. மேஷ வாகனா என அந்த சரஸ்வதி போற்றப்படுகிறாள். யாளிமீதும், சிங்கத்தின் மீதும் அமர்ந்த சரஸ்வதியை பௌத்தர்கள் வழிபடுகிறார்கள்.

No comments:

Post a Comment