Monday, December 31, 2012

நலங்கள் அள்ளி தரும் நவராத்திரி


சிவனுக்கு உகந்தது சிவராத்திரி. அவர் தம் தேவியர்க்கு உகந் தது நவராத்திரி. ‘நவம்’ என்ற சொல்லுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. ‘நவ நவமாய் பெருகும்’ என்று ஆன்றோர்கள், சான்றோர்கள் கூறுவார்கள். நவக்கிரகங்கள், நவரத்தினங்கள், நவதானியங்கள், நவயோகங்கள், நவரசங்கள், நவபாஷாணங்கள், நவகற்பங்கள், நவமேகங்கள், நவநிதிகள் என ஒன்பதின் பெருக்கத்தை விசேஷமாக கூறுவார்கள். அந்த வகையில், நாடு முழுவதும் ஒன்பது நாட்களுக்கு விமரிசையாக கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகை சிறப்பானதாக கருதப்படுகிறது. புரட்டாசி மாதம் அமாவாசைக்கு பிறகு பூர்வ பட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி திதியில் முடியும் ஒன்பது இரவுகளே நவராத்திரி ஆகும்.

நவராத்திரி பண்டிகை முடிந்து வரும் தசமி திதியை ‘விஜயதசமி’ என்று கொண்டாடி நிறைவு செய்கிறோம். பிரதமை, அஷ்டமி, நவமி ஆகிய திதிகளை சுபகாரியங்கள் செய்ய விலக்கி வைக்கிறோம். அந்த திதிகளையும் சிறப்பிப்பதற்காகவும், எல்லா திதிகளிலும் இறைவன் அம்சம் உளளது என்பதை உணர வைப்பதற்காகவும், நவராத்திரியில் இந்த திதிகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. நவராத்திரியில் வரும் நவமி நாள் ஆயுத பூஜை என்றும் சரஸ்வதி பூஜை என்றும் கொண்டாடப்படுகிறது. மாணவர்கள் புத்தகங்கள், நோட்டு, பேனா, பென்சில் போன்றவற்றை வைத்து வணங்குவார்கள். கடைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் என்று எல்லா துறைகளில் இருப்பவர்களும் ஆயுத பூஜையை விமரிசையாக கொண்டாடுவார்கள்.

நவராத்திரியில் வரும் தசமி நாள் விஜயதசமி என கொண்டாடப்படுகிறது. இந்நாளில் தொடங்கப்படுகின்ற எந்த செயலும் வெற்றிகரமாக முடியும் என்பது ஐதீகம். இந்நாளில் ஞானம், வித்தை, கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியை வணங்குவதால் எல்லா வளமும், நலமும் வந்து சேரும். இந்நாளில் கல்வி கற்கவும், புது கணக்கு ஆரம்பிக்கவும், முக்கிய பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள் போடுவதற்கும் இயல், இசை, நாடகம், நாட்டியம் போன்ற கலைகள் விருத்தியடைய வழிபடுவது மிகவும் உகந்ததாகும். நவராத்திரி என்பது நமது பண்பாடு, கலை, கலாசாரம் போன்றவற்றை பிரதிபலிக்கும் விழாவாக தொன்று தொட்டு இருந்து வருகிறது. இது முக்கியமாக பெண்களை முன்நிறுத்தி கொண்டாடப்படும் பண்டிகையாகும்.

சக்தி தேவியான அம்பாளை பிரார்த்தித்து அவள் அருள் வேண்டி ஒன்பது ராத்திரிகள் விரதம் இருந்து வணங்குவதே இதன் சிறப்பு. இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி (இச்சை என்றால் விருப்பம், ஞானம் என்றால் அறிவு, கிரியா என்றால் செய்தல்) என்ற முப்பெரும் தேவிகளை வணங்குவதே நவராத்திரியின் சிறப்பாகும். இதற்கு சாரதா நவராத்திரி என்றும் பெயர் உண்டு. குமரி பூஜை நவராத்திரியில் மிக முக்கியமான ஒன்றாகும். 2 முதல் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பல்வேறு விதமான வேடங்கள் அணிவித்து, அந்த அம்பாளாகவே பாவித்து பூஜிக்க வேண்டும். பல்வேறு சக்தி அம்சங்கள் இருந்தாலும், மிக முக்கிய அம்சங்களான குமாரி, திருமூர்த்தி, கல்யாணி, ரோகிணி, காளி, சாண்டிகா, சாம்பவி, துர்கா, சுபத்திரா வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கட சரஸ்வதி, நீல சரஸ்வதி, கிளி சரஸ்வதி, மகேஸ்வரி, கவுமாரி, வாராகி, மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, சரஸ்வதி, நரசிம்மி சாமுண்டி என்று இந்த நாமாக்களை சொல்லி ஒவ்வொரு இரவும் பூஜிக்க வேண்டும்.

அவரவர் வசதிக்கேற்ப குடும்ப வழக்கப்படி 1, 3, 5, 7, 9, 11 என்ற கணக்கில் கொலு படிகள் அமைத்து அதில் கடவுள் அவதார சிலைகள், தலைவர்கள் சிலைகள், பறவை, மிருகங்கள், காய்கறி, பழவகைகள் போன்ற பொம்மைகளை அடுக்கி வைத்து வழிபடலாம். மேல் படியின் நடுவில் ஒரு கும்பம் வைத்து அதில் அரிசி, பருப்பு போட்டு மாவிலை சொருகி, அதன் மீது தேங்காய் வைக்கலாம். அதன் முன்பு முப்பெருந்தேவியரான சக்தி, லட்சுமி, சரஸ்வதி பொம்மைகளை வைக்க வேண்டும். அடுத்தடுத்த படிகளில் சாமி சிலைகள், இறைவனின் மற்ற அவதாரங்கள், தட்சிணாமூர்த்தி போன்றவற்றையும், பின்னர் சாய்பாபா, ஆதிசங்கரர் போன்ற மகான்களின் சிலைகள், பிறகு மனிதர்கள், அதன் கீழே விலங்குகள், பூச்சிகள், அதற்கும் கீழே காய்கறி, பழ வகைகள், பாத்திரங்கள் போன்ற பொம்மைகளை வைக்கலாம். உயிரற்ற பொருட்களும் குறைந்த அறிவுள்ள பொருட்களும் கீழ் நிலையில் இருக்கின்றன. படிப்படியாக ஞானம் பெற்றால் உயர்நிலையை அடையலாம் என்பது இதன் தாத்பர்யம்.

மாலையில் கொலு படி அருகில் கோலம் போட்டு விளக்கேற்றி வைக்க வேண்டும். அவரவர் வசதிப்படி பொங்கல், சுண்டல் ஆகியவற்றை நிவேதனம் செய்யலாம். இசை என்பது பக்தியின் ஒரு வடிவம். கல் நெஞ்சையும் உருக வைக்கும் மகத்துவம் இசைக்கு உண்டு. பாடத் தெரிந்தவர்கள், இசைக் கருவிகள் இசைக்க தெரிந்தவர்கள் தினமும் மாலை நேரத்தில் பக்திப் பாடல்கள் பாடுவது சிறப்பு. ஸ்லோகங்கள் சொல்லலாம். தினமும் நடுவாசலிலும் கோலம் போட்டு, அக்கம்பக்கம் உள்ளவர்கள், உற்றார், உறவினர்கள், நண்பர்களை கொலுவுக்கு அழைத்து மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொள்ளலாம். நிவேதனம் செய்த பொங்கல், சுண்டல் போன்றவற்றுடன் ஜாக்கெட் பிட், பழங்கள், வெற்றிலை பாக்கு, பூ, மஞ்சள், தேங்காய், பரிசு பொருட்கள் கொடுத்து உபசரித்து அவர்களின் அன்பையும், ஆசியையும் பெறுவதே இந்த வழிபாட்டின் தத்துவம்.

ஆடம்பரமாகத்தான் கொலு வைக்க வேண்டும் என்றில்லை. அவரவர் வசதிப்படி ஒரு படி வைத்து நாலைந்து பொம்மைகளை வைத்தால்கூட அது கொலுதான். முப்பெருந்தேவியரை நம் வீட்டில் எழுந்தருளச் செய்து 9 நாட்களும் வழிபட வேண்டும் என்பதே முக்கியம். ஒரேயடியாக எல்லா பொம்மைகளையும் வாங்குவது என்பது பலருக்கு சிரமமாக தெரியும். ஒவ்வொரு ஆண்டும் சில பொம்மைகள் வாங்கி கொலு வைக்க தொடங்கி, ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி அடைவது போல நம் வாழ்க்கையிலும் வளம் பெருகும். 

No comments:

Post a Comment